Advertisement

அத்தியாயம் ஒன்று:

அந்த திருமண மண்டபம் பரபரப்பாக இருந்தது. காலையில் நிச்சயம் மாலையில் வரவேற்பு, நாளை காலைத் திருமணம் என்று வரிசையாக நிகழ்வுகள் இருந்ததால் ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருந்தனர்.

ஏனென்றால் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என்று அங்கு தனித்தனியாக எதுவும் கிடையாது…    

மாப்பிள்ளை சிபி சக்ரவர்த்தி, பெண் ராதா இருவரும் நெருங்கிய உறவு. அதாகப்பட்டது ராதாவின் தாய்மாமாவின் பையன் தான் சிபி, நெருங்கிய உறவு மட்டுமல்ல ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள் கூட…..

ஆம், சிபியின் அத்தை ராஜலக்ஷ்மி தன் கணவனை இழந்து இரு பெண் பிள்ளைகள் வனிதா மற்றும் ராதாவோடு நிராதரவாக நின்ற போது சற்றும் யோசிக்காமல் சிபியின் தந்தை நடராஜன் கூட அழைத்துக் கொண்டார்.

ராஜலக்ஷ்மிக்கு அப்போது சிறு வயது தான், கைக்குழந்தையாக ராதா, வனிதாவிற்கு மூன்று வயது. அப்போது இருந்து அண்ணன் நடராஜன் வீட்டில் தான் வாசம் ராஜலக்ஷ்மிக்கு.

நடராஜனுக்கும் தேவிக்கும் மூன்று ஆண் மகன்கள், தேவி அவரின் மனைவி. சிபி சக்கரவர்த்தி நடுவில் இருக்க, பெரியவன் அருள்மொழி, சிறியவன் மாமல்லவர்மன், நடராஜனின் தந்தை ஈஸ்வரருக்கு இலக்கியங்கள் மீது தீராக் காதல். அதனைக் கொண்டே இப்பெயர் காரணங்கள்.

இந்த வயதில் அவர் தன் மனைவி சுலோக்சனாவுடன் வரவேற்பில் நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். அவரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பின்பு பெரியவன் அருண்மொழிக்கு மகளின் மூத்த பெண் வனிதாவை திருமணம் செய்து வைத்திருந்தார். அவர்களின் திருமணம் முடிந்து ஐந்து வருடமாகிறது.

சிறு வயதில் இருந்தே அருண்மொழிக்கு வனிதா மற்றும் சிபி சக்ரவர்த்திக்கு ராதா என்று சொல்லிச் சொல்லி தான் வளர்த்தனர். அவர்களும் அப்படித்தான் வளர்ந்தனர். 

அதுவும் சிறு வயதில் இருந்தே இந்த எண்ணத்தைப் பயிரிட்டதால் அது வேரூன்றி விருட்சமாகி நின்றது சிபியின் மனதில். அவன் என்றும் ராதாவிடம் வாய் விட்டு தன் காதலை சொல்லியிருக்கவில்லை என்றாலும் அது எல்லோருக்கும் தெரியும். அவன் செயல் அவன் நடவடிக்கை எல்லாம் ராதாவின் விருப்பு வெறுப்புகளைக் கொண்டே இருக்கும்.   

சிபி செய்யாத ஒரே செயல், அவன் இஞ்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்று ராதா விருப்பப்பட, அவன் தேர்ந்தெடுத்தது விவசாயம் சார்ந்த படிப்பு. அவன் எம் எஸ் சீ அக்ரி பட்டதாரி.

அவனின் குலத் தொழில் விவசாயம். அதனைக் கொண்டும் அவன் அந்த படிப்பை தேர்ந்தெடுத்தான்……. அதுவுமன்றி அவன் விவசாயி ஆனது படித்த பிறகு அல்ல, அவனின் நினைவு தெரிந்த நாள் முதல் வாய்க்கா வரப்பும், களத்துமேடும் தான் அவனின் உற்ற நண்பர்கள், அவன் உயிர் மூச்சும் விவசாயமே…… நான் பார்க்குற லாபம் அடுத்தவனுக்கு உணவு கொடுக்குது, இதுதான் என் வேலை, இதைவிட என்ன வேண்டும் என்று விட்டான்.

சிபி மிகவும் பிடிவாதக்காரன், கோபக்காரன்……. அவன் சொல்லிற்கு மறுபேச்சு எப்போதும் கேட்கப் பிரியப்பட மாட்டான்.  அப்படி ஒரு பிடிவாதம், அவன் சொன்னது தான் எப்போதும் நடக்க வேண்டும்.     

வனிதாவை ஒரு டிகிரி படிக்க வைத்தனர், அவள் அதை முடித்தவுடன் அருண்மொழியுடன் திருமணம் முடித்தனர்.  ராதா படிக்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டதால், அவளை இஞ்ஜிநீயரிங் படிக்க வைத்திருந்தனர்……. இதோ இரண்டு நாட்களுக்கு முன் இறுதித் தேர்வுகள் முடிய….. அதற்கு தகுந்தார் போல திருமண நாள் குறித்து இன்று நிச்சயம், நாளைத் திருமணம்.

சிபி விண்ணில் தான் பறந்து கொண்டிருந்தான். இருபத்து நான்கு வயதில் அவனுக்கு திருமணம் அதிகம் தான். ஆனால் ராதாவிற்கு இப்போது இருபத்தி இரண்டு வயது என்பதால் ராஜலக்ஷ்மி திருமணத்திற்கு அவசரப்பட…… இதோ நாளை திருமணம்.

முகம் பரிபூரண சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க……. சிபி மணமகளை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் தான் மனைவி என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டாலும், அது நனவாகப் போகும் நாள் அல்லவா.

“எங்கடா நேரமாச்சு இன்னும் பொண்ணு வரலை, ஆரம்பிக்கவேயில்லை  நலுங்கு வைக்க…”, என்று தம்பி மாமல்லவர்மனின் காதைக் கடிக்க…

“தெரியலை சிபி….. வீட்ல மேக் அப் செஞ்சு அண்ணியை இங்கே கூட்டிகிட்டு வருவாங்க”, என்றான்.

சிறுவயதில் இருந்தே ராதாவை அண்ணி என்று அழைக்கவே பழக்கப்பட்டு இருந்தான். ராதாவை ஒத்த வயதினனே…  

“ம், சரி!”, என்று தான் சிபிக்கு வெளியில் சொல்லத் தோன்றியது. உள்ளுக்குள், “அவ மேக் அப் போட்டா மட்டும் அழகு ஆகிடுவாளா?”, என்ற நக்கல் மனதினில் உதிக்காமல் இல்லை.

ராதா பார்க்க நன்றாக தான் இருப்பாள். ஆனால் சூப்பர் அழகி, ஆஹா! ஓஹோ! பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போல எல்லாமில்லை.

நாம் பக்கத்துக்கு வீட்டில் பார்ப்பது போல இருக்கும் லட்சணமான பெண். ஆனால் சிபியின் காதல் அழகு கொண்டு இல்லை….. அது சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டதால் வந்தது…. பிறந்த குழந்தைக்கு அம்மா எப்படி இருந்தாலும் அம்மா தானே! அழகிகளா அம்மா! இல்லையே! அது போல இவள் தான் என் மனைவியாக வரப் போகிறாள் என்ற காதலோடு கூடிய உரிமை அதிகம்.

அவன் பொருள் என்ற எண்ணம்.

எண்ணங்கள் சில சமயம் வண்ணமயமாவது இல்லை.

எல்லா உறவுகளும் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சில பேர் வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்க…….

என்னவோ சரியில்லாத மாதிரி திடீரென்று சிபிக்கு ஒரு தோற்றம். மண்டபம் அவர்களின் ஊராட்சிய விட்டு சற்று தூரமாக இருந்தது. திருமணத்திற்காக இரண்டு வேன்கள் வாடகைக்கு பேசியிருக்க, அதுதான் ட்ரிப் அடித்துக் கொண்டு இருந்தது.

அப்போதுதான் அருண்மொழியும் வனிதாவும் வந்தனர். அவர்களுடன் மூன்று வயது குழந்தை மணிமேகலையும் வந்தவள், சித்தப்பாவை பார்த்தவுடன், “சித்தப்பா!”, என்று சொல்லித் தாவி வந்து ஏறினாள். 

“மேகி, இறங்கு! சித்தப்பா ஷர்ட் கசங்கும்!”, என்று அருண்மொழி அவளை வாங்க முற்ப்பட…….

“இருந்துட்டு போறா! என் பாப்பா கசக்காம யாரு கசக்குவா!”, என்று சிபி அவளை இறக்கி விட மறுத்தான். குழந்தைகள் என்றால் சிபிக்கு கொள்ளை பிரியம் எப்போதும்…. அதுவும் மணிமேகலை அழகு குழந்தை.

சித்தப்பாவின் கழுத்தை இறுக்கி கட்டிக் கொள்ள, “மேகி! அப்பா சொல்றாங்கள்ள, இறங்கு!”, என்று அம்மாவும் அதட்ட,

“அண்ணி! அவ குழந்தை! இப்படி அவ கிட்ட பேசாதீங்க! போங்க!”, என்று சிபி வனிதாவை அதட்டினான்.

“என் பொண்ணை நான் அதட்டக்கூடாதாம்! இவன் என்னை அதட்டுவானாம்!”, என்று வனிதா முறைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

சிபி அப்படித்தான் யாரையும் அதட்டுவதற்கோ பேசுவதற்கோ யோசிக்கவே மாட்டான். அவன் இருக்கும் இடத்தில் அவன் தான் ராஜா. அதைத்தான் அவன் விரும்புவான்.

சிறு வயதில் இருந்து கூட வளர்ந்த போது வனிதா இதை பார்த்து வளர்ந்தவள் தான். ஆனால் அப்போது எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. இப்போது அண்ணி என்றான பிறகு, இவன் யார் என்னை அதட்டுவதற்கு என்று அவ்வப்போது தோன்றுவது உண்டு.

ஆனால் அருண்மொழியே சிபியின் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாத போது அவள் என்ன செய்வாள். “என் தங்கச்சி வந்தாவது, இவனை அடக்குறாளா பார்ப்போம்!”, என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றாள். கூடவே அவ தான் இவனைப் பார்த்தா பேசவே தயங்குவாளே… என்றும் தோன்றியது.

ராதாவிற்கு எப்போதும் சிபியின் அதட்டல், உருட்டல், மிரட்டல்கள் பார்த்தால் பயம். ஆனால் என்ன செய்வது அது அவனின் கூடப் பிறந்தது. அதை அவன் வேண்டுமென்று செய்ய மாட்டான், சிபியின் இயல்பே அதுதான்.   

“நீ சித்தப்பா சட்டையைக் கசக்குடா செல்லம்!”, என்று மேகலையை உச்சி முகர்ந்தான் சிபி.. கூடவே, “அண்ணா! எங்கே இன்னும் ராதாவைக் கூட்டிட்டு வரலை!”, என்று கேட்கும் போதே,

“என்ன மாப்ள உனக்கு அவசரம்… காலம் காலமா வீட்ல தங்கச்சியை பார்த்து வளர்ந்துட்டு, இப்போ என்ன?”, என்றபடி தோழர்கள் வர….

மேகலை அவர்களின் குரலுக்கு பயந்து தன் அப்பாவிடம் தாவியது.

“ஏண்டா, டேய்! குழந்தையை இப்படியா பயமுறுத்துவீங்க!”, என்று சிபி அதட்டினான்.

“என்ன மாப்ள பண்றது? அதையாவது செய்வோம்! உன்னை மாதிரி இந்த வயசுல கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியுமா! எங்கப்பா முதல்ல நான் உன்னை படிக்க வைக்க செலவு பண்ணின பணத்தைச் சம்பாரிச்சு குடுடான்னு சொல்றார்”, என்று நண்பன் வாசு கவலைப்பட,

“உன் அப்பால்ல விவரமா தான் இருப்பார்! நீ எப்படியும் அதுக்கு அப்புறம் குடுக்க மாட்டேன்னு தெரியும்!”, என்று சிபி நக்கலடித்தான்.

“நீ ஏண்டி பேச மாட்ட! எங்கப்பா என்னை வளர்த்த மாதிரி, நான் என் புள்ளைய வளர்க்கணுமுங்கோ அதுக்கு காசு வேணுமுங்கோ!”,

“டேய்! நீ முதல்ல குடுறா! அப்போ தான் உங்கப்பா உனக்கு கல்யாணம் பண்ணுவார்! அப்புறம் தாண்டி குழந்தையே வரும்!”, என்று சிபியும் விடாமல் நக்கலடிக்க,

சுற்றி இருந்த நண்பன் ஒருவன் சிரிக்க, “இவனைப் பாருடா சிரிக்கறான்! எனக்காவது நான் பணம் சம்பாரிச்சு குடுத்தா கல்யாணம்! டேய் மாப்பிள்ளை, உனக்கு அது கூட கிடையாதுடி. உன் ரெண்டு தங்கச்சிக்கும் பண்ணினதுக்கு அப்புறம் தான்”,

அந்த நண்பன் வாய் மேல் கை வைத்து, மூடு வாயை என்பது போல சைகை செய்து, “வந்தியா! நாலு பொண்ணுங்களை பார்த்து சைட் அடிச்சியா! போனியான்னு இல்லாம! அங்க பாருடா..”, என்று அங்கிருந்த சில பெண்களை காட்டினான்.

“ஏண்டா? எனக்கு வாழ்க்கைக்கும் கல்யாணம் ஆகக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா…… எவன் கையிலாவது சிக்கினோம், துவைசிடுவாங்க அடங்கு!”, என்று வாசு சொல்ல…

இப்படியாக நண்பர்கள் பேச்சுக் களைக்கட்டியது….. நேரம் தான் போனது…… எங்கே பெண்ணைக் காணோம் என்று நடராஜன் தேவிக்கு போன் செய்தார்.  

நிறைந்த சுமங்கலி என்பதால் அவர் தான் ராதாவை அழைத்து வரவேண்டும் என்று ராஜலக்ஷ்மி சொல்லி இருந்தார். அதனால் அவருக்கு நடராஜன் அழைக்க,

“எங்க தேவி, இன்னும் கிளம்பலையா?”,

“இல்லைங்க, அது…….”, என்று தடுமாறினார் தேவி, அவரின் தடுமாற்றம் நடராஜனுக்கு பதட்டத்தைக் கொடுத்தது.

“என்ன சொல்லு?”, என்று நடராஜன் எரிந்து விழுந்தார்…….

“ஸ்னேகிதிங்க வந்திருக்காங்க, தெரு முக்குல நிக்கறாங்க, நான் போய் கை ஆட்டினா வந்துடுவாங்கன்னு வீட்ல இருந்த என்கிட்ட சொல்லிட்டு வாசலுக்கு போச்சுங்க…… ஆனா காணோம்!”,

“நானும் தெரு முனை வரை போய் பார்த்துட்டு வந்துட்டேன், உங்களுக்கு போன் போடலாம்னு இருந்தேன்! அதுக்குள்ள நீங்க கூப்பிட்டுட்டீங்க!”, என்றார். சொல்லும் போதே அழுகை வந்தது பதட்டத்தில்.

“என்னது ராதவைக் காணோமா?”, என்று நடராஜன் பதட்டத்தில் சத்தமாகக் கேட்க…… அந்த இடமே பரபரப்பானது.

பொண்ணைக் காணோம் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அடுத்த நொடி, “படிக்கற இடத்துல ஏதாவது தொடுப்பு இருந்திருக்குமோ, இதுக்கு தான் வெளில அனுப்பி படிக்க வைக்கக் கூடாது”, என்ற மாதிரி பேச்சுக்கள் இன்னும் தீயாய் கிளம்பியது…

சிபி டென்ஷன் ஆனான், என்ன என்று ஒன்றும் புரியவில்லை. அவளை கடத்திக் கொண்டு போகும் அளவெல்லாம் அங்கே எதுவும் இல்லை என்று அறிவிற்கு புரிந்தாலும், மனது அவளுக்கு என்ன ஆபத்தோ என்று பதைத்தது. தப்பாக யாராவது பேசினால் அடித்துக் துவைக்க மனம் விழைந்தது.

அவன் வேஷ்டியை மடித்துக் கட்டி தேட கிளம்பவும், “நீ இரு! ஒருவேளை அவ இங்க வந்தா?”, என்று அருண் மொழியும், மாமல்லவர்மனும் கிளம்பினர்.

கூட நடராஜன், அவர் ஒரு பக்கம் மற்றொரு உறவினரோடு கிளம்பினார்.

சிபியின் நண்பன் வாசுவும் இன்னொரு நண்பனுடன் கிளம்பினான். ஐந்து நிமிடம் கூட இல்லை, ஆளுக்கொருவராக பறந்தனர் ஊருக்குள்.

ராஜலக்ஷ்மி அப்படியே அமர்ந்து விட்டார். வனிதாவிற்கு அம்மாவை பார்க்கவே சரியாக இருந்தது. ஈஸ்வரரும் சுலோச்சனாவும் மகளிடம் விரைந்தனர்.

“தேவி ஏதாவது தெரியாம சொல்லுவா! அங்க தான் இருப்பா! இப்ப கூட்டிட்டு வந்துடுவாங்க!”, என்று மகளைத் தேற்ற முனைந்தனர்.

எல்லோரும் ராஜலக்ஷ்மியை கவனிக்க, சிபியை கவனிக்க மறந்தனர். ஒரு ஐந்து நிமிடங்கள் பொறுத்தவன்…. என்னவோ ஏதோவென்ற பதட்டம் அதிகமாகவும், அங்கே இருக்க முடியாமல், அவனும் தேடிச் செல்ல,  அவனின் டூ வீலர் எடுத்தான். 

உறவு முறையில் அவனுக்கு சித்தப்பாவான ஒருவர், இதைப் பார்த்து, “தனியா போகாத!”, என்று அவரும் உடன் ஏறிக்கொள்ள…… வீட்டை நோக்கி வண்டியை விட்டான்.

அவன் பாதி வழி செல்லுமுன்னே…… வாசு அவனை எதிர்கொண்டவன், கை காட்டி வண்டியை நிறுத்தினான்.

“என்னடா?”, என்று சிபி நிறுத்த,

“மாப்ள, ஒரு நிமிஷம் வாடா!”, என்று அவனும் வண்டியை விட்டு இறங்கி ஒதுங்கினான்.

“என்னடா?”, என்று பதட்டமாக சிபி அவன் புறம் செல்ல.

“மாப்ள! எனக்கு இதை சொல்றது சரியா இல்லையான்னு கூட தெரியலை… நான் சில தடவ தங்கச்சியை என் பக்கத்துக்கு காடுக்காரன் ஒரு பய இஞ்ஜிநீயருக்கு படிச்சானே அவன் கூட பார்த்திருக்கேன். ஒரு தடவை அவனை கேட்கக் கூட செஞ்சேன், உனக்கு என்னடா பேச்சுன்னு, அவன் படிச்ச காலேஜ்ல ஜூனியர்ன்னு சொன்னான். சரி படிக்கற பசங்க, நம்ம பொண்ணை நம்மளே தப்பா நினைக்க கூடாதுன்னு விட்டுடேன்….”,

“இப்போ சந்தேகம் வரவும், அவங்க வீட்டுக்குப் போய் அவன் இருக்கானான்னு பார்த்தேன், அவன் இல்லை…… அவன் தங்கச்சி அண்ணன் காலையிலயே வெள்ளனே போயிடுசுங்குது….. எதுக்கும் ஒரு தரம் பார்த்துருவோமா”, என்றான், கேட்கும்போது அவன் முகத்தில் அவ்வளவு பயம், எங்கே சிபி அடித்து விடுவானோ என்று.

நிமிடத்தில் கை நீட்டக் கூடியவன் சிபி, “என்னடா சொல்ற!”, என்று சிபி வாய் விட்டுக் கேட்கவில்லை, அவன் பார்த்த பார்வை….

“நான் தப்பா சொல்லலைடா, ஒரு சதவிகிதம் அப்படி இருந்துட்டா…”, என்றான் பயத்தோடு.

வாசு அப்படி தேவையில்லாமல், சரியாகத் தெரியாமல் யாரைப் பற்றியும் பேசமாட்டான்… அவன் பேச்சிற்கு செவி சாய்த்து, “எங்கடா போய் பார்ப்போம்”, என்றான்.

“அவினாசி ரெஜிஸ்டர் ஆபீஸ்ல”, என்று வாசு சொல்லும்போதே, சிபியின் முகத்தில் ரௌத்திரம்………

“என்னடா சொல்ற?”, என்று சிபி கேட்ட விதம் வாசுவிற்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.

நேராக ரெஜிஸ்ட்ரர் ஆஃபிஸ் சென்றனர்.. அங்கே மணமக்கள் போல யாருமில்லை… அங்கிருந்த அட்டென்டரிடம், “இப்ப ஏதாவது இங்க கல்யாணம் நடந்ததா?”, என்று கேட்க…..

“தோ! நோட்டிஸ் போர்ட்ல இருக்கா பாருங்க!”, என்றான்.

இருந்தது, ஸ்பஷ்டமாக இருந்தது……. கண்ணன் என்று மணமகனின் பெயர் இருக்க, ராதா என்று மணமகளின் பெயர் இருந்தது. விலாசம் அவர்களின் வீட்டு விலாசமே.

இங்கே இருந்தால், அது உடனடித் திருமணம் அல்ல…… கண்டிப்பாகக் ஒரு மாதத்தில் இருந்து, பதினைந்து நாட்களுக்கு முன்னமே அங்கே அந்த அறிவிப்பு போட்டிருப்பர்.

சிபியின் கோபம், அவனின் சிவந்த கண்களைப் பார்த்தாலே யாருக்கு தெரியும்.

வாசுவின் சட்டையைப் பிடித்து, “என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாம விட்டுட்டியேடா!”, என்று கேட்டு அவனை பிடித்திருந்த பிடியை விட….. அவன் பிடித்த வேகத்திற்கும், விட்ட வேகத்திற்கும் வாசு தூர விழுந்தான்.

அப்போதும் விரைவாக எழுந்த வாசு, “மாப்ள கோவப்படாத… சொன்னா கேளு…. முதல்ல வீட்ல சொல்லுவோம்!”, என்றான்.

“வீட்ல என்னடா சொல்றது! எங்கிருந்தாலும் தேடித் பிடிச்சு அவங்களை என்ன பண்றேன்னு பாரு……”,

“டேய், அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிச்சு, இனி நீ என்ன பண்ண முடியும்! உன் வீட்டுப் பொண்ணு, பொறுமையா இரு! வீட்ல சொல்லலாம்! அவங்க எதுனாலும் செய்யட்டும்…”,

“என்னடா அவங்க செய்யறது, பொண்டாட்டி, பொண்டாட்டின்னு சொல்லித் தாண்டா என்னை வளர்த்தாங்க! என் பொண்டாட்டி அடுத்தவனோட போறதா, எவ்வளவு அசிங்கம் எனக்கு, அவங்க வீடு எங்கடா?”, என்று சிபி கேட்க,

வாசு இவனைப் பேசி சமாளிக்க முடியாது என்று புரிந்தவனாக, வண்டியை எடுத்துக் கொண்டு சிபியை விட்டுப் பறந்தான். முதலில் சிபியின் அப்பாவிடம் சொல்ல….

வாசு மறந்தது, அந்த நோட்டிஸ் ஒட்டியிருந்ததில் கண்ணனின் விலாசம் இருக்கும் என்பதை…..

சிபி அவனின் வண்டியை எடுத்துக் கொண்டு, அங்கே போட்டிருந்த விலாசத்தை நோக்கி வண்டியை விரட்டினான்.

அதற்குள்   அவனுடன் வந்த சித்தப்பா நடராஜனுக்கு தொலைபேசியில் அழைத்து விவரத்தை சொல்லவும்…. எல்லோரும் கண்ணனின் வீட்டை நோக்கி படையெடுத்தனர்….

அதற்குள் மணமக்கள் காவல் நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளரை  அணுகி பாதுக்காப்புக் கேட்டிருந்தனர்.

மணமக்கள் காவல் நிலையத்தில் இருப்பது தெரிந்து…. எல்லோரும் காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் இருவரும் அங்கே நிற்பதை பார்த்து கண்மண் தெரியாத கோபம் சிபிக்குள் பொங்கியது…..

அதுவும் சிபியைப் பார்த்ததும் பயத்தில், ராதா கண்ணன் பின் மறைந்தாள்…. அது இன்னும் ஒரு ஆக்ரோஷ்தைக் சிபிக்குள் கொடுக்க…..

காவல் நிலையம் என்றும் பார்க்காமல். க்ஷண நேரத்தில் அவர்கள் அருகில் விரைந்து, கண்ணனும் ராதாவும் விலகும் முன்,  கண்ணனை ஒரு உதை விட,  அவன் அங்கேயே தூரமாக விழுந்தான்.   இரு போலீசார் வந்து அவசரமாக சிபியை பிடித்து மேலும் அடிக்க விடாமல் தடுத்தனர்.

Advertisement