Advertisement

அத்தியாயம் – 19
“அப்பா, உப்பு மூத்த தூக்கு…” வசீகரன் கை இரண்டையும் மேலே தூக்கிக் கொண்டு தந்தையை அழைக்க சிரிப்புடன் மகனை நோக்கி சென்றவன் லேசாய் குனிந்து அவனைத் தூக்கிக் கொண்டு நிமிரவும் “சுளீர்” என்றது அடிவயிற்றில். ஒரு மாதம் முன்பு உணர்ந்த அதே வலி.
முகத்தை வேதனையில் சுளித்தவன் மகனைக் கீழே இறக்கி விட, “ப்பா… தூக்குப்பா…” என்றான் குழந்தை சிணுங்கலுடன்.
மகளுக்குத் தலை சீவிக் கொண்டிருந்த யாழினி மகனின் சிணுங்கலில் திரும்பினாள்.
“மா, அவன்தான் கேட்டுட்டே இருக்கானே… நீங்க தான உப்பு மூட்ட தூக்கிப் பழக்கி விட்டீங்க… நல்லா அனுபவிங்க…. தூக்கலேன்னா விட மாட்டான்…” சொல்லிக் கொண்டே மகளின் தலையில் பூவைச் சூடிப் பின் குத்தி விட்டாள்.
தந்தையின் முகத்தையே பார்த்து நின்ற வசீகரன், “ப்பா… என்னாச்சு, வயிது வலிக்கா… ம்மா, அப்பாக்கு வயிது வலிக்கி…” கத்தினான்.
“என்னடா, இவன் ஒருத்தன்…” என்றபடி அவள் எழுந்து வரவும் இலக்கியன் வலியை சமாளித்துக் கொண்டு அவளை நோக்கி இயல்பாய் கண்ணடித்தான்.
“ஓ… அவன்ட்ட இருந்து எஸ்கேப் ஆக ஆக்டிங்கா…” என நினைத்தவள், “ஆமாடா கண்ணா… அப்பாக்கு ரொம்ப வயிறு வலிக்குதாம்… டாக்டர்ட்ட போயி ஊசி போட்டா தான் சரியாகும்… அப்பா பாவம் தான, நீ டிஸ்டர்ப் பண்ணாத…” எனவும், “ம்ம்… ரொம்ப வலிக்காப்பா…” என்றவன் தனது பிஞ்சுக் கையால் தந்தையின் வயிற்றில் நீவிக் கொடுக்க இலக்கியன் கண்கள் நனைந்தது.
“ம்ம்… வாடா கண்ணா…” மகனை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குள் நுழைந்து கொள்ள, “ஒவ்வொண்ணும் பழக்கி விட்டுட்டு இப்ப முழிக்கிறதைப் பாரு…” கணவனை எண்ணி சிரித்தபடி அடுக்களைக்குள் நுழைந்தவள் மதிய சமையலை கவனிக்கத் தொடங்கினாள்.
இலக்கியன் மட்டன் வாங்கி வந்து வைத்திருந்தான். அதை குழந்தைகளுக்குப் பிடித்த பிரியாணியும், கணவனுக்குப் பிடித்த கிரேவியும் செய்யத் தொடங்கினாள். அதென்னவோ தனக்காய் ஒரு குடும்பம் அமைந்த பின் பெண்ணின் நெஞ்சம் எப்போதும், தன் விருப்பத்தை பின்னுக்குத் தள்ளி கணவன், பிள்ளைகளின் விருப்பத்தையே முன்னிறுத்துகிறது.
“கண்ணம்மா, நானும் ஹெல்ப் பண்ணட்டுமா…” முதுகில் இழைந்த கணவனை நோக்கிப் புன்னகைத்தவள், “பசங்க என்ன பண்ணுறாங்க…” என்றாள்.
“ரெண்டு பேரும் படம் வரைஞ்சு விளையாடிட்டு இருக்காங்க… நீ தனியா செய்துட்டு இருப்பியே, ஹெல்ப் பண்ணலாம்னு நான் ஓடி வந்துட்டேன்…” சொன்னவன் அவள் தோளில் முகத்தை வைத்துக் கொண்டு பின்னிருந்து அணைத்தபடி கையிலிருந்த கத்தியை வாங்கினான்.
“இந்த வெங்காயத்தை நான் கட் பண்ணறேன்… நீ வேற வேலையைப் பாரு…” சொன்னவன் ஸ்டைலாய் ஒரு வெங்காயத்தைத் தூக்கிப் போட்டு காட்ச் பிடிக்க, “ப்ச்… என்னங்க இது வெங்காயத்துல விளையாடிட்டு… எதுலயாச்சும் விழப் போகுது…” யாழினி சிணுங்க, “அதெல்லாம் நாங்க தோனிக்கே டப் கொடுப்பம்ல… எப்படி காட்ச், பார்த்தியா…” என்றான்.
“ஹூக்கும், இது கிட்சன், கிரிக்கெட் கிரவுண்டு கிடையாது… இதுக்குதான் உங்களை நான் ஹெல்புக்கு கூப்பிடறதில்ல…” சொன்னவளை முறைத்தவன், “ஒவ்வொரு பொண்டாட்டிங்க வீட்ல புருஷன் எந்த ஹெல்ப்பும் பண்ண மாட்டேங்கிறான்னு புலம்பிட்டு இருக்காங்க… இவ என்னடான்னா…” சொல்லிக் கொண்டே கட்டிங் போர்டில் வெங்காயத்தை வைத்து சட சடவென்று கட் பண்ணினான்.
“அது உங்களுக்கு எப்படி மா தெரியும்…” யாழினி கேட்க, “எது…” என்றான் புரியாமல்.
“இந்த பொண்டாட்டிங்க கேக்குறது…” அவள் அழுத்தமாய் கேட்கவும், “அது நம்ம கடைப்பசங்க புலம்பிட்டு இருப்பாங்க மா… அதான் சொன்னேன்…” என்றான்.
“ஹூக்கும்… சரி, கைய வெட்டிக்காம, வெங்காயத்தை வெட்டுங்க…” என்றவள் வேலையை கவனித்தாள்.
“அப்பா… எங்களை வரைய சொல்லிட்டு நீங்க இங்க வந்துட்டிங்க… இந்த வசீ நான் வரைஞ்சதுல எல்லாம் கிறுக்கி வச்சுட்டான் பாருங்க…” சிணுங்கலுடன் குற்றப் பத்திரிகை வாசித்தாள் வெண்பா.
“இல்லப்பா… நானு வரஞ்சேன்…” என்றான் வசீகரன்.
“சரிடா குட்டி, நாம வேற வரைஞ்சுக்கலாம்… நீ வரையறது பார்த்து தம்பிக்கும் ஆசை வந்துட்டு போல… அவனுக்கும் ஒரு பேப்பர் கொடுத்து வரைய சொல்லிக் கொடு…” என்றான்.
“இனி சாப்பிட்டு வரையலாம்… எல்லாம் ரெடி ஆகிருச்சு…”
யாழினி சொல்லவும், “அதான் அம்மா ஆர்டர் போட்டாச்சே, ரெண்டு பேரும் சாப்பிட வாங்க… இன்னைக்கு அப்பா ஊட்டி விடறேன்…” என்றான் இலக்கியன்.
“என்னங்க, நீங்க சாப்பிடுங்க… நான் ஊட்டறேன்…”
“நீ எப்பவும் தான பிள்ளைகளுக்கு ஊட்டற… இன்னைக்கு நான் ஊட்டறேன்…” என்றதும், “ஹே ஜாலி… அப்பாதான் நிறைய பீஸ் கொடுப்பாங்க…” மகள் குதித்தாள்.
“போடி அங்குட்டு… நான் என்னமோ இவளைப் பட்டினி போடுற போல… ஹூம்…” என்று மகளை முறைத்துவிட்டு எல்லாத்தையும் எடுத்து வைத்து தட்டில் பரிமாறினாள்.
“எல்லாரும் என்னை சுத்தி உக்காருங்க…” என்றவன் பிள்ளைகள் அமர்ந்ததும், “உனக்கு தனியா சொல்லணுமா… நீயும் வந்து உக்காருடி…” என்றான் யாழினியிடம்.
“நான் உங்களோட சாப்பிடறேன்… அவங்களுக்கு ஊட்டுங்க…”
“அதெல்லாம் முடியாது… முதல்ல என் மூத்த பிள்ளைக்கு ஊட்டிட்டு தான் அடுத்த பிள்ளைக்கு…” அடம் பிடித்தான்.
“அச்சோ, அப்பா தான் சொல்லறாங்கல்ல, சீக்கிரம் வாம்மா… இல்லேனா எங்களுக்கும் ஊட்ட மாட்டாங்க…” வெண்பா சொல்ல முறைப்புடன் அவளை இடித்தபடி அமர்ந்தாள்.
“தள்ளுடி, வந்துட்டா நாட்டாம பண்ண…” என்றவளை நோக்கி சிரித்தவன் முதல் உருளையை அவளுக்குக் கொடுக்க பிள்ளைகள் ஆர்வத்துடன் பார்த்திருந்தனர்.
“அடுத்து எனக்கு…” வெண்பா சொல்ல அவளுக்கு ஊட்டிவிட்டே வசீகரனுக்கு கொடுத்தான் இலக்கியன்.
இரண்டாவது வாய் வாங்கிக் கொண்ட யாழினி, “நீங்களும் அப்படியே சாப்பிடுங்க…” என்று கணவனுக்கு எடுத்து ஊட்ட, “நானும் அப்பாக்கு ஊட்டுவேன்…” வெண்பாவும் ஊட்ட, “நானு அப்பாக்கு…” என்ற வசீகரனும் பிஞ்சுக் கையில் எடுத்து தந்தையின் வாயில் வைக்க நெகிழ்ந்திருந்தான்.
மாலையில் யாழினி வடை சுட்டு சூடாய் கொண்டு வந்து தர தந்தையும் பிள்ளைகளும் டீவி முன்னர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“ஏன்மா, உனக்கு எப்பவும் இந்த மசால் வடை தான் செய்யத் தெரியுமா… பக்கோடா, உருளை போண்டா எல்லாம் செய்யத் தெரியாதா…” வெண்பா கேட்க மகளை முறைத்தாள்.
“அம்மா செய்யறத சாப்பிடாம இதென்ன கேள்வி குட்டிம்மா..”
“இல்லப்பா, என் பிரண்டு வீட்டுல இதெல்லாம் செய்வாங்க சொன்னா, அதான் அம்மாக்குத் தெரியுமா கேட்டேன்…”
“ம்ம்… அம்மாட்ட இது வேணும்னு அன்பா கேட்டா செய்து தருவா… இப்படில்லாம் கிண்டலா கேக்கக் கூடாது…” என்றதும் மகளின் முகம் வாடிப் போனது.
“இங்க பாரு குட்டிம்மா… நம்ம எல்லாருக்கும் சண்டே லீவு, நாம ஜாலியா டீவி பார்க்கறோம்… ஆனா அம்மா லீவே இல்லாம நமக்காக தான் இன்னைக்கும் சமைச்சுட்டு இருக்கா… இப்பக் கூட நமக்கு வேண்டி தான வடை செய்யறா… அவளும் ப்ரீயா இருக்கலாமே, ஏன் செய்யறா… நம்ம சாப்பிடட்டும்னு தானே… அதைப் பாராட்டலேன்னாலும் கிண்டல் பண்ணக் கூடாது… அம்மா மனசு கஷ்டப்படும்ல…” இதமாய் மகளின் தலையைக் கோதியபடி சொன்னான்.
“சரிப்பா, இனி நானும் லீவு நாள்ல அம்மாக்கு ஹெல்ப் பண்ணுவேன்… அம்மா எது செய்தாலும் கிண்டல் பண்ண மாட்டேன்…” என்ற மகளை அணைத்துக் கொண்டான்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த யாழினி நெகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள்.
“எனக்கு அது செய், இது செய்…” என்று பெண்களின் வருத்தம் தெரியாமல் அவளும் ஒரு மனுஷி தான் என்பதை மறந்து அடிமை போல, மிஷின் போல வேலை வாங்கும் ஆணாதிக்கம் பிடித்த ஆண்களுக்கு நடுவில் தன் கணவனை நினைத்து பெருமிதம் கொண்டாள்.
பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டு தட்டில் வடையுடன் கணவன் அருகில் அமர்ந்தாள். எதுவும் சொல்லாமல் தன் தோளில் சாய்ந்து கொண்டவளை இதமாய் அணைத்துக் கொண்டான் இலக்கியன்.
“ப்ச்… குழந்தைங்க பார்க்கப் போறாங்க…” சிணுங்கியவளை நேசத்துடன் நோக்கியவன், “பார்க்கட்டும்… கணவன் மனைவி உறவுன்னா இப்படி தான் அன்னியோன்யமா இருக்கும்னு அவங்களும் தெரிஞ்சு வளர்றது நல்லது தான்…” என்றவன் அவளைத் தோளில் கையிட்டு அருகே இழுத்தான்.
சுகமான மாலை, சூடான தேநீர், கழுத்தில் கணவனின் நேசக் கரம்… கையில் ருசிக்கும் மசால் வடை என இனிமையாய் கழிந்த பொழுதை இலக்கியனின் அலைபேசி சிணுங்கி கலைத்து விட்டது.
போனை எடுத்தவன் அதில் கவிதாவின் எண் ஒளிரவும் யோசனையாய் நெற்றியை சுருக்கினான்.
“அண்ணி எதுக்கு கூப்பிடறாங்க…” சொல்லிக் கொண்டே காதுக்குக் கொடுக்க எதிர்ப்புறத்தில் கவிதாவின் பதட்டமான குரல் கேட்டது.
“தம்பி… சீக்கிரம் வீட்டுக்கு வரீங்களா… உங்க அண்ணா நெஞ்சைப் பிடிச்சிட்டு விழுந்துட்டார்… ரொம்ப பயமாருக்கு…” பதறியபடி சொல்லவும் அவனுக்கும் பதறியது.
“எ..என்ன சொல்லறீங்க அண்ணி… இதோ நான் வரேன்… அம்மாட்ட சொல்லிட்டீங்களா…” கேட்டுக் கொண்டே சட்டையை எடுக்க ஓட அவன் பேசியதை அரைகுறையாய் கேட்ட யாழினிக்கும் பயமானது.
“அத்தைக்கு இன்னும் கூப்பிடல தம்பி… நீங்க முதல்ல வாங்க…” என்றவள் அழத் தொடங்கினாள்.
“அம்மாக்கு சொல்ல வேண்டாம், பயந்துருவாங்க… நான் தம்பியை கூப்பிட்டு சொல்லிடறேன்… நீங்க அண்ணனை எழுப்ப முடியுமான்னு பாருங்க…” என்றவன், “என்னங்க, பெரியவருக்கு என்னாச்சு…” என்றவளிடம், “கண்ணம்மா, பதறாத… அண்ணாக்கு முடியல, நெஞ்சைப் பிடிச்சுட்டு விழுந்துட்டாராம்… நான் ஹாஸ்பிடல் கூட்டிப் போயிட்டு வரேன்… அம்மாக்கு விஷயம் தெரியாது… எதுக்கும் நீ அங்க போயி இரு…” என்றதும் அதிர்ந்து நிற்க, அவள் கையை ஆறுதலாய் பற்றியவன், “அண்ணனுக்கு ஒண்ணும் ஆகாதுடி… பயப்படாத…” என்றபடி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வேகமாய் சென்றான்.
பிள்ளைகள் ஏதும் தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை அழைத்துக் கொண்டு பர்வதத்திடம் சென்றாள்.
இலக்கியன் செல்லும்போது கவிதாவும் பிள்ளைகளும் கலங்கி அழுது கொண்டிருக்க போனில் அழைத்த டாக்சி உடனே வந்துவிடவும் அண்ணனை அதில் ஏற்றிக் கொள்ள தம்பிக்கு அழைத்து சொல்லி இருந்ததால் அவனும் அன்னைக்குத் தெரியாமல் வெளியே காத்திருக்க அவனையும் ஏற்றிக் கொண்டு ஆசுபத்திரிக்கு விரைந்தனர்.
இலக்கியனின் தந்தையும் மாரடைப்பால் மரணமடைந்தவர். எனவே மூத்த மகனுக்கும் இப்படி என்றால் பர்வதம் நிச்சயம் பயந்து விடுவார் என்றுதான் இலக்கியன் சொல்ல வேண்டாம் என்று கூறி இருந்தான்.
ஆசுபத்திரியில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை ஆக்சிஜன் கொடுத்து ஏதேதோ பரிசோதனைகள், ஸ்கேன் எல்லாம் எடுத்து அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று உறுதி செய்தனர். அதற்கான சிகிச்சை முடிந்து செல்லலாம் எனவும் பர்வதத்திடம் மெதுவாய் விஷயத்தை சொல்ல அவர் பதறித் துடித்தார்.
“பெத்தவ நான் இருக்கும்போது என் பிள்ளைகளை ஒண்ணும் பண்ணிடாத கடவுளே…” எனப் பிரார்த்தித்துக் கொண்டு மகனைக் காணக் கண்ணீருடன் வந்தார். ஆனால் “சரியான நேரத்தில் கொண்டு வந்ததால் பயப்படத் தேவையில்லை… மீண்டும் இப்படி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்…” என்று சாப்பாடு, வேலை என எல்லாவற்றிலும் பல நிபந்தனைகள் சொல்லி ஒரு வாரத்தில் அனுப்பி வைத்தனர்.
அண்ணனிடம் சிறிது நாள் ஓய்வில் இருக்கும்படி கூறிய இலக்கியன் தம்பியுடன் சேர்ந்து கடையைப் பார்த்துக் கொண்டான். பெரியவரின் வேலையும் சேர்ந்து கொள்ள நிற்கக் கூட நேரமில்லாமல் போனது.
மீண்டும் அவர் கடைக்கு வந்தபோதும் கடையிலேயே இருந்து வேலையைப் பார்த்துக் கொள்ள சொன்னவன் வெளி வேலை முழுவதையும் தம்பியுடன் பார்த்துக் கொண்டான்.
வசீகரனும் அக்காவுடன் பள்ளி செல்லத் தொடங்கினான்.
மகனுக்கு இப்படி ஆனதை எண்ணி பர்வதம் பயந்து போயிருந்தார். கணவனுக்கு வந்தது போல் மகனுக்கும் எதுவும் ஆகி விடுமோ என்ற பயம் அவரை உருக்கத் தொடங்க அடிக்கடி உடம்பு முடியாமல் போனது.
“தம்பி, நம்ம குடும்பத்துல எல்லாருக்கும் இன்சூரன்ஸ் போட்டு வைக்கணும் பா…” பெரியவர் சொல்ல அடுத்த நாளே இன்சூரன்ஸ் ஏஜண்டுடன் வந்தான்.
இலக்கியனும் அதைப் பற்றி முன்னமே யோசித்திருந்தான். எல்லாருக்கும் ஹெல்த் பாலிசியுடன் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியும் பெரிய தொகைக்கு எடுத்தனர்.
முன்பு அடிவயிற்றில் எப்போதாதாவது வந்த வலி இப்போது சற்று அதிகமாகி இருக்க டாக்டர் புகழேந்தியை யாருக்கும் தெரியாமல் சென்று பார்த்தான் இலக்கியன்.
அவர் பரிசோதித்து விட்டு உடனே வந்து பார்க்காமல் இருந்ததற்கு திட்டினார். சில ஸ்கேன் எடுத்துப் பார்த்து குடல் புண் இருப்பதாக சொல்லி மருந்து கொடுத்தார். சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கும்படியும் கூறினார்.
வீட்டுக்கு வந்து யாழினியிடம் மெதுவாய் இப்போது தான் வலி வந்தது போல் சொல்லி டாக்டரை சந்தித்ததைக் கூற அவள் பதறிப் போனாள்.
“நிஜமா அல்சர் தானே… வேற ஒண்ணும் இல்லையே… என்னை ஏன் டாக்டர்ட்ட போனப்ப கூட்டிப் போகல… என்ன, ஏதுன்னு விவரமா கேட்டிருப்பேன்ல… இனி நேரம் காலத்துக்கு சாப்பிடாம ஒடுங்க… பிடிச்சு கட்டிப் போடறேன்…” என்றவள் பக்குவமாய் அவனுக்கு சமைத்துக் கொடுத்து கவனமாய் பார்த்துக் கொண்டாள்.
கணவனுக்காய் வாரா வாரம் அவனை அழைத்துக் கொண்டு யோக நரசிம்மர் கோவிலுக்கு சென்று பூஜை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அவளது திருப்திக்கு செய்பவளை இலக்கியனும் தடுக்கவில்லை.
தேவிக்கு இரண்டு முறை உண்டாகி, கரு கலைந்து போக மனதளவில் மிகவும் தளர்ந்து போனாள். யாருடனும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தன் வேலையுண்டு என்று ஒதுங்கி இருந்தவளைக் கண்டு யாழினிக்கே பாவமாய் இருந்தது.
“தேவி… வரியா, யோக நரசிம்மர் கோவிலுக்குப் போயிட்டு வருவோம்…” சின்ன மருமகளிடம் கேட்ட யாழினியை பர்வதம் வியப்புடன் நோக்கினார்.
“நீ எப்பவும் என் பிள்ளையோட தான போயிட்டு வருவ… இன்னைக்கு அவன் வரலியா, நான் வேணும்னா வரட்டுமா…”
“இல்ல அத்தை… எல்லா சனிக்கிழமையும் நரசிம்மருக்கு  நெய்விளக்குப் போட்டு வேண்டிகிட்டா குழந்தை வரம் கிடைக்கும்னு அங்குள்ள ஒரு அம்மா சொன்னாங்க…  அதான் தேவியும் வந்து வேண்டிக்கிட்டா நல்லது நடக்குமேன்னு கூப்பிட்டேன்…” அவள் சொல்லவும்,
“ஓ நல்லதுமா…” என்றவர் தேவியைப் பார்க்க, ஒருவித குற்றவுணர்வுடன் அவள் குனிந்து கொண்டாள்.
“நானும் வரேன்க்கா…” என்றவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள் யாழினி. தேவியும் மனதார வேண்டிக் கொண்டு நெய்விளக்குப் போட்டு வந்தாள்.
நாட்கள் உருண்டோட மூன்றாம் முறையாய் கருவுற்ற தேவி மிகவும் மகிழ்ந்தாள். யாழினியிடமும், பெருமாளிடமும் மனமார நன்றி கூறியவள் விடாமல் விளக்குப் போட்டாள்.
மிகவும் கஷ்டப்பட்டு சிசேரியனில் அவள் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்க குடும்பத்தில் அனைவரும் மிக மகிழ்ந்தனர். மீண்டும் அவள் கருவுற்றால் ஆபத்து, ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று டாக்டர் கூறினர்.
ஒரே பிரசவத்தில் இரட்டைப் பெண்களைக் கிடைத்ததால் அவர்களுக்கும் மீண்டும் குழந்தை வேண்டுமென்ற எண்ணமும் இல்லை.
நாட்கள் உருண்டோட வெண்பா ஐந்தாம் வகுப்பிலும், வசீகரன் முதல் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தனர்.
அந்தக் குடும்பத்தில் ஒரு வழக்கம் இருந்தது. பெண் பிள்ளைகளுக்கு பத்து வயது ஆனதும் இருபது பவன் நகைக்கான தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுவர். மூத்தவரின் மூன்று பெண்களுக்கும் இப்படி வாங்கி முடித்து இப்போது வெண்பாவுக்கு பத்து வயது ஆவதால் அவளுக்கான தங்கத்தை வாங்குவதைப் பற்றி பெரியவர் எல்லாரும் இருக்கும்போது சொல்லிக் கொண்டிருந்தார். 
“ஏன் மாமா, உங்களுக்கு மூணு பொண்ணுங்க, எனக்கு ரெண்டு பொண்ணுங்க தான்… அப்ப உங்களுக்கு மூணு பங்கு, எங்களுக்கு ரெண்டு பங்கு தானா…” அவர்கள் வழக்கத்தைத் தெரிந்து கொண்டிருந்த தேவி அங்கலாப்புடன் கேட்க பெரியவர் திகைத்து என்ன சொல்லுவதென்று புரியாமல் அமைதியானார்.
“ஏண்டி, அப்படிப் பார்த்தா ஒரு புள்ள வச்சிருக்க யாழினி அமைதியா இருக்கா… நீ வேணும்னா இன்னும் ஒண்ணோ ரெண்டோ பெத்துக்க வேண்டியது தான… இப்படி கணக்கு கேக்கற…” கவிதா சொல்ல தேவி கோபத்துடன் முறைத்தாள்.
உயிர் கொண்ட
சொத்தென முத்துப்
பிள்ளைகள் இருக்க
உயிரற்ற காகித செல்வம்
தேடியே மனிதனின்
அத்தனை ஓட்டமும்…

Advertisement