அவினாஷ், இந்த மூன்று மாதம் என்ன முயன்றும் அவனின் குருவை சந்திக்க முடிவில்லை.. அம்முவை விடுத்து வேறு வழி இருக்கிறதா என பார்த்தான்.. ஒன்றும் இல்லை இப்போது காமெரா பற்றி படித்துக் கொண்டிருக்கிறான். முற்றிலும் வேலை வெட்டி இல்லாமல்தான் இருக்கிறான்.
ஆதி அழைக்கவும் எடுத்தவன் “சொல்லு ப்பா” என்றான் அவினாஷ்.
ஆதி தனக்கான தேவையை சொல்லவும்… அவினாஷ் “சரி, ஈவ்னிங் போலாம்… நான் வந்து பிக்கப் செய்துக்கிறேன்…” என்றான்.
ஆதிக்கு கொண்டாட்டம் தாங்கவில்லை. தன் அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மு பெருமூச்சு விட்டு “கிளம்பு.. கிளம்பு..” என்றாள் காண்டாகி. ஆதி சிரித்துக் கொண்டான்.
நந்தன், இன்று மதியம் வீடு வந்தார். குரு டைரக்டர் படம் இந்த வாரத்தில் இறுதி ஒப்பந்தம்.. கையெழுத்தாகிறது. அதை தொடந்து இந்த மாத இறுதியில் பூஜை. எனவே அந்த வேலைகளை பார்ப்பதற்கு நந்தன் சென்னை வந்தார்.
மதியம் செண்பா அக்காவிடம் வீட்டு நடப்பை கேட்டுக் கொண்டார்.. ‘பெண் அதிகம் வெளியே செல்வதில்லை, மகன் கிரிக்கெட் கிளாஸ் கேட்கிறான்.. அம்முவின் நண்பன் அவினாஷ் வந்து கூட்டிப் போவதாக சொல்லி இருக்கிறார்’ என்பது வரை தெரிந்துக் கொண்டார் மனிதர்.
மெதுவாக உண்டு.. தன் மாமனாரை பார்த்து வந்தார். மணி பார்த்தார் ‘இன்னும் சற்று நேரத்தில் பெண் வந்துவிடுவாள், தான் இங்கேயே இருக்க வேண்டும், யார் அந்த அவினாஷ்’ என கேட்க வேண்டும் என எண்ணிக் கெண்டே மேலே சென்றவர் அசந்து உறங்கிவிட்டார்.
மாலை மணி ஐந்து. பெண்… வந்து ரெடியாகி கீழே வந்தாள். வரும் போதே “செண்பா ஆன்ட்டி, அப்பா வந்திருக்காங்களா” என்ற கேள்வியோடு வந்தாள்.
ஆதி அவள் கேட்டதை பார்த்து சற்று புருவம் உயர்த்தி “ம்…” என்றான் ஆச்சரியமாக.
செண்பா “ஆமாம் அம்மு. உங்க கூட பேசனும்ன்னு சொன்னாங்க.. நீ போய் எழுப்பு” என்றார்.
ஆதி எதோ சைகை செய்தான்.. அவளுக்கு புரியவில்லை, அம்மு “என்ன டா” என்றாள்.
ஆதி “நான் போனதுக்கு அப்புறம் எழுப்பு.. அண்ணா வந்திடுவாங்க” என்றான்.
அம்மு “என்ன பயம் உனக்கு…” என்றாள்.
ஆதி “அப்பா, என்கிட்டே ஏன் கேட்கலை கேட்பாரில்ல” என்றான் தலை நிமிராமல்.
அம்மு “நான் ‘தனா அங்கிள்’ கிட்ட சொல்லிட்டேன்.. நீ அத சொல்லு” என்றாள். இப்படியாக பேச்சு செல்ல.. அவினாஷ் வந்துவிட்டான்.
அம்முக்கு நீண்ட நாள் சென்று பார்ப்பதால்.. கொஞ்சம் எக்ஸ்சைடடாக இருந்தது. அம்மு “அவினாஷ்.. வாங்க வாங்க…” என்றாள் பூரிப்பாக, குரல் சந்தோஷத்தில் சத்தமாக கேட்டது.
செண்பா காபி கொடுத்து சென்றார்.
ஆதி “கிளம்பலாம் கிளம்பலாம்” என்பதிலேயே நின்றான்.
அம்மு “இரு டா… ப்ளீஸ்” என சொல்லி பேசிக் கொண்டே இருந்தாள் அவினாஷிடம்.
இருபது நிமிடம் முடிந்தது இதற்கு மேல் ஆதி பொறுக்கமாட்டான் என எண்ணி அம்மு அமைதியாக இருக்க.. அவினாஷ் “சாரி, அம்ருதா. டைம் ஆச்சு. படி, எக்ஸாம் முடி, பார்க்கலாம்.. கால் பண்றேன்” என்ற படி எழுந்துக் கொண்டான்.
அப்போது நந்தன் “அம்மு… யாரு உன் ப்ரெண்டா..” என்றபடி இறங்கி வந்தார் நந்தன்.
இறங்கி வந்துவிட்டார் நந்தன். அவினாஷ்க்கு சொல்ல முடியாத நிமிடங்கள் இது. இவரை காணத்தான் இதுநாள் வரை.. பொறுத்திருந்தான்.. இப்போது அவரே நேரில் வரவும்.. அத்தனை ஆச்சிரியத்தையும் மறைத்து நிமிர்ந்து நின்றான் கனாகாரன்.
அம்மு “பேரு அவினாஷ், அசிஸ்டன்ட் டிரெக்டர்…” என்றாள் பெருமையாக, உண்மையில் அவளின் முகம் மினுமினுத்தது.. இதை அவினாஷ் கவனித்தானோ இல்லையோ, தந்தை நந்தன் கவனித்தார்.
திரும்பி அவினாஷைப் பார்க்க.. அவரின் பார்வைக்கு திருப்தியாக இருந்தான் பையன். ஒரு குழைவோ.. நெளிவோ இல்லை. தேஜஸான முகம்.. தீட்ஷன்யமான பார்வையாக அவரையே பார்த்திருந்தான் அவன். நந்தனுக்கு தந்தையாக, அதுவரை நிம்மதி.
நந்தன் “ஹாய்… அவினாஷ்” என முகமன் கூறி அமர்ந்தார்.
பையனும் தைரியமாக “எப்படி இருக்கீங்க சர்…” என பேச தொடங்கினான். பேச்சு, ஆதியை பற்றி ஆரம்பித்தது.. அப்படியே அம்முவை புது வருடத்தில் பார்த்தது பற்றி கூறினான்.
அப்போதுதான் நந்தன் கேட்டார் “எங்க உங்க நேட்டிவ்” என. மீண்டும் அவன் தந்தை பெயரைத்தான் சொல்ல வேண்டி இருந்தது. வேண்டாம் வேண்டாம் என்றாலும் பெற்றோரின் அடையாளம் இவனை விடவில்லை.
நந்தன், நான்கு முறை கேட்டார்.. “தயானந்தா… குட்வில் டிஸ்டிப்யூட்டர்சா.. ஆனந்தா…” என அழுத்தி அழுத்தி கேட்டார்.
பின் “எப்படி ப்பா.. இந்த லைன்… எப்படி விட்டார் உங்க அப்பா…” என்றார் ஆச்சரியமாக. பின் தானே “ம்.. இப்போ எல்லாம் பிள்ளைகள் எங்க பேச்சை கேட்பதே இல்லை..” என தனக்குள் சொல்லிக் கொண்டார்.
கொஞ்சம் நேராகி “சொல்லு யார் கிட்ட வேலை பார்க்கிற” என்றார் அவரே.
தான் வேலை செய்த இரண்டு இயக்குனர் பற்றி சொன்னான்.. ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். பின் “சர், குரு டிரெக்டர் படம் நீங்கதான் எடுக்கிரீங்கலாம்.. எனக்கு அவர்கிட்ட ஒரு இன்ட்ரோ கொடுங்களேன்.. என்னோட கனவு அவர்தான் சர்” என்றான் மணனம் செய்தவன் போல. ம்.. வாய்ப்பு எப்போதாவது தானே வரும்.. தயங்கினால் வாழ்க்கையே போய்விடுமே.. எனவே சட்டென கேட்டுவிட்டான்.
தன் முழங்காலில் கையூன்றி பேசிக் கொண்டிருந்தவர்.. ஆச்சிரியமாக பார்த்தான் இளையவனை.. என்ன பார்வை அது ‘ஏன், உன் அப்பாவிடம் கேட்கலாமே’ என்ற கேள்வி இருந்ததோ அந்த பார்வையில். ம்.. அப்படிதான் உணர்ந்தான் அவினாஷ்.
சட்டென நந்தன் சுதாரித்தார்.. பார்த்தவுடன் பிடித்திருந்தது அவினாஷை.. அத்தோடு அந்த கண்களில் எந்த கபடமும் இல்லை.. எனவே ஏதும் மறுத்து பேசாமல் “ம்.. நான் எந்த க்கியரண்டியும் கொடுக்கமாட்டேன்.. ஜஸ்ட் இன்ட்ரோ கொடுப்பேன்.. அப்புறம் உன் சமத்து…” என்றார் கறாராக.
அவினாஷ்க்கு அந்த வார்த்தையில் உடலெல்லாம் புல்லரித்தது… சட்டென எழுந்து கொண்டான்.. நந்தன் அமர்ந்திருப்பதால்.. அவரின் கீழ் அமர்ந்து அவரின் கைகளை பிடித்துக் கொண்டான் “தேங்க்ஸ் சர்… இந்த இன்ரஸ்டி வந்து ஐந்து வருஷம் ஆகுது.. இன்னும் ஒரு பேரும் எடுக்கலை.. நா… நான் நினைக்கவே இல்லை… இப்படி நடக்கும்ன்னு… நீங்க.. நீங்க… ரொம்ப பெரிய மனுஷன் சர்…. தேங்க்ஸ்…” என்றான் கரகரப்பாக.
நந்தன், அவினாஷின் தோளை பற்றினார்.. “ஹார்ட் வொர்க்.. என்றைக்கும் வீண் போகாது அவினாஷ்… ஆல் தி பெஸ்ட்…” என்றபடி எழுந்தார். அவினாஷும் எழுந்து கொண்டான்.
இதை எல்லாம் சற்று தூரத்தில் நின்று வாய் திறந்து பார்த்திருந்தனர் அக்கா தம்பி இருவரும். பேசுவது எல்லாம் காதில் கேட்டாலும் அருகில் வரவில்லை. அப்படியே நின்றனர் இருவரும்.
அவினாஷ் விடை பெரும் விதமாக “சரி சர், வரேன்.. வா.. ஆதி” என்றான்.
நந்தன் “ஹேய்… அவினாஷ்.. இடம் எங்க இருக்குன்னு சொல்லு.. நீ வேலை இருந்தா பாரு.. பசங்களை தனா பார்த்துப்பான்.. “ என்றார்.
ஆதியின் முகம் வாடியது.
அவினாஷ் “ஹய்யோ சர், எந்த வேலையும் இல்லை.. நீங்க கொடுத்தான் வேலை. ஆதி முதலிலேயே எங்கிட்ட சொல்லுவான்.. உங்க கூட விளையாடனும்.. அப்படின்னு.. எனக்கு எந்த கஷ்ட்டமும் இல்லை, நான் மேனேஜ் பண்ணுவேன் சர்..” என்றான் திடமாக.
அவினாஷின் கண்கள் எல்லையில்லா சந்தோஷத்துடன்.. தன்னவளை பார்த்தது அனிச்சையாய்.. எப்படி இதை அவளிடம் பகிர்வது, கட்டிக் கொண்டா.. காதல் சொல்லியா.. இல்லை அமைதியாகவா என யோசிக்க தொடங்கிவிட்டான் அவினாஷ். அதை அப்படியே கண்கள் சொன்னது போல.. உரிமையாக ஒரு தலையசப்புடன் “பை.. சீனி” என்றான் வாசல் வந்த அம்முவிடம்.
அம்மு புருவம் உயர்த்தி ‘என்ன என்ன சொன்னாங்க’ என கேட்க நினைப்பதற்குள்.. கார் நகர்ந்திருந்தது.
“ஸுகர்.. எஸ் ப்ளீஸ்…” அவனின் காரில் அதிர்ந்து கொண்டிருந்தது.