Advertisement

அத்தியாயம் எட்டு:

வெற்றிக்கு பெண் பார்க்கும் வேலையில் மீனாட்சி முழு மூச்சாக இறங்கினார்….. இரண்டே இரண்டு தான் எதிர்பார்ப்பு, பெண் படித்திருக்க வேண்டும்…… பார்க்க மிகவும் அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமாராக இருக்க வேண்டும்.

நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லை கண்டால் நாயைக் காணோம் என்பதாக  பெண் அழகாக இருந்து படித்து இருந்தால், வெற்றியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை…

வெற்றியை திருமணம் செய்துக்கொள்ள சரி என்று போட்டோவையும் ஜாதகத்தையும் கொடுக்கும் பெண்களை மீனாட்சிக்கும் ஞானவேலுக்கும் பிடிக்கவில்லை.

திருமண சந்தையில் வெற்றியின் நிலை சற்று மந்தம் தான். ஆனால் அது அவனுக்கு தெரிய வர மீனாட்சியோ ஞானவேலோ விடவில்லை.

கிட்ட தட்ட ஆறுமாதங்கள் இந்த இழுபறி நிலையிலேயே ஓடிற்று….

சந்தியா அவ்வப்போது மீனாட்சியிடம் என்ன நிலைமை என்று கேட்டுக் கொள்வாள்…… அவ்வளவே, அதற்கு மேல் என்ன செய்வாள். சொல்ல போனால் அவளுக்கு நேரமும் இல்லை.

முழு நேரமும் வேலைகள் அவளை ஆழ்த்தின…..

அங்கே அமெரிக்காவில் அகல்யாவும், “பார்ட் டைம் வேலை கிடைத்திருக்கிறது, செய்ய போகிறேன்…. அந்த பணத்தை வீட்டிற்கு தான் கொடுப்பேன்”, என்று ராஜத்திடம் சொல்ல……

அவர் அவளின் புகுந்த வீட்டில் என்ன சொல்வார்களோ என்று பயப்பட……

“நான் சம்பாதித்து தான் அனுப்ப போகிறேன், அதற்காக தான் வேலையே தேடி இருக்கிறேன், மறுக்கக் கூடாது… ஏன் அக்கா செய்யும்போது நான் செய்யக் கூடாதா…. திருமணமாகி விட்டால் உங்களின் பெண் இல்லை என்று ஆகிவிடுவேணா…..”, என்று சண்டை பிடித்ததோடு நில்லாமல்…..

மறுத்தால், “கணவனை விட்டு பிரிந்து அங்கே வந்து விடுவேன்”, என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட……..

“நீ அனுப்பு நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்”, என்று ராஜம் சொல்லிவிட்டார்.

இரண்டு மாதமாக பணம் அனுப்ப ஆரம்பித்தாள் அகல்யா…… அதனால் அவர்களின் பணப் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வந்தது. அந்த ஊர் பணத்தில் அகல்யா அனுப்புவது என்னவோ ஐநூறு ரூபாய் தான். ஆனால் இங்கே… அவர்களுக்கு யதேஷ்டம்.

பொறுப்பான தங்கையாக “அம்மா அக்காக்கு மாப்பிள்ளை பாருங்கம்மா”, என்று நச்சரிக்கவும் ஆரம்பித்தாள். ராஜமும் யோசிக்க ஆரம்பித்து இருந்தார்.          

அதுவும் சந்தியா வேலையில் மிகவும் சிறப்பாக செயல்படுவதால்…… அவள் வேலையில் சேர்ந்து ஒன்பது மாதங்களும் ஆகிவிட்டதால், ஹாஸ்பிடலில் அவளுக்கு கேஷ் ஹேன்டில் செய்யும் பொறுப்பும், அதற்குரிய அக்கௌன்ட்ஸ் பார்க்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.

இப்போது ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்டும் புதியது…… வெற்றி சேர்த்து விட்ட போது இருந்த டாக்டர் ஓனர் இல்லை… அவர் வயதாகி விட்டதால் பிள்ளைகள் இருவரும் வெளிநாடுகளில் இருப்பதால் நிர்வகிக்க முடியாமல் விற்றிருந்தார்.

பெரும் பணம் கொடுத்து ஹாஸ்பிடல் கை மாறி இருந்தது……. புதிய ஆட்கள்… எம் டீ என்று ஒரு நடுத்தர வயதினன் ஒரு முறை வந்து அறிமுகப் படுத்திக் கொண்டான். அதன் பிறகு அவனை அதிகம் பார்த்ததேயில்லை……   

அங்கே இருக்கும் கன்சல்டன்ட்கள் இருந்தாலும்…. புதிதாகவும் வெளியூர்களில் இருந்து சில பேர் அவ்வப்போது வந்து சர்ஜெரி மட்டும் செய்து விட்டு செல்வர்.

நம்ம ஹாஸ்பிடல்லயே இவ்வளவு நல்ல டாக்டர்ஸ் இருக்கும் போது எதுக்கு இவங்க எல்லாம் என்று சந்தியாவிற்கு கூட சில சமயம் தோன்றும்……. ஆனால் நிறைய புது ஆட்கள்…. மைசூரில் ஒரு ஹாஸ்பிடலில் இருந்தவர்கள் அப்படியே நிறைய பேர் வந்திருந்தனர்.    

அவள் கணக்கு வழக்குகளை அவளின் சீனியர் மேனேஜரிடம் ஒப்புவிப்பால் அவ்வளவே.  அந்த சீனியர் மேனேஜரும் இப்போது மேனேஜ்மென்ட் மாறிய பிறகு வந்தவன் தான்.     

அதனால்  வேலையில் கூடுதல் கவனம் தேவைப்பட்டது. கூடுதல் கவனம் செலுத்தியதால் அங்கு நடந்த சில பண குளறுபடிகளையும் கண்டுபிடித்தாள்.

நிர்வாகத்திற்கு எப்படி தெரியப் படுத்துவது…… யார் செய்தார்கள் என்றும் தெரியவில்லை.

யோசனையில் இருந்தவள் அவளுக்கும் மேலே இருக்கும் சீனியரிடம் தெரிவித்தாள். சொல்லிவிட்டாள் தான் இருந்தாலும் சொல்லியது சரியா இல்லையா ஒரே யோசனை.

மனதும் சரியில்லை…

அன்று மாலை டுயுஷனில் இருக்கும் போது இந்த விஷயத்தை வெற்றியிடம் சொல்ல விரும்பினாள். டுயுஷன் முடியும் வரை கூட பொறுமையில்லாமல் பட்டறையில் வந்து பார்க்க வெற்றி அங்கேயில்லை.

“அண்ணா எங்கயோ வெளில போனாருக்கா”, என்று தங்கபாண்டி சொல்ல…..

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தாள் அப்போதும் அவன் வந்திருக்கவில்லை….

வெற்றியின் போன் நம்பர் அவளிடம் இருந்தது தான் ஆனால் இதுவரை அழைத்ததில்லை…. டுயுஷன் முடிந்த பின்னும் வெற்றியை பார்த்தால் அவன் வந்திருக்கவில்லை.

வெற்றிக்கு போனில் அழைத்தாள்……. வெகு நேரம் கழித்தே எடுத்தான் வெற்றி…..

“என்ன விஷயம் சந்தியா?”, என்றான் சற்று பரபரப்பாக….. வெற்றி அவளின் எண்ணை தொலைபேசியில் பதிந்து இருந்தாலும் இதுவரை சந்தியா அழைத்தது இல்லை. அதனால் என்னவோ ஏதோவென்று பரபரப்பாக வினவினான்.

வெற்றியின் பரபரப்பை உணர்ந்து, “உங்களை பட்டறையில் காணோமேன்னு சும்மா தான் கூப்பிடேன்”, என்றாள்.

“நான் செங்கல்பட்டு பக்கத்துல இருக்கேன். ஒரு பெரிய ஸ்டேஜ் போடற வேலை…. நிறைய வெல்டிங் வொர்க் இருக்கு…. ரொம்ப உயரம் ஏறி வேலை செய்யணும்…… பசங்கள விட முடியாது அதான் நானே வந்தேன், லேட் ஆகுது…. இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகிடும்”, என்றான்.

“சரி, நான் வைக்கட்டுமா……”,

“ஒன்னும் விஷயமில்லையே”,

“இல்லையில்லை”, என்று வைத்து விட்டாள்.

அப்போதும் ஞானவேலை அழைத்த வெற்றிவேல்….. “சந்தியா போன் பண்ணினா எனக்கு போன் எல்லாம் பண்ண மாட்டா…… என்னன்னு தெரியலை, எதுக்கும் எல்லாம் சரியா இருக்கான்னு பாரு”, என்றான்.

ஞானவேல் வெளியே வந்து பார்த்த போது சந்தியா அப்போதுதான் வீட்டினுள் நுழையப் போக….

“சந்தியா”, என்று அழைத்தவன்…. “என்ன?”, என்றான்.

“என்ன?”, என்றாள் பதிலுக்கு.

“வெற்றி போன் பண்ணியிருந்தான், என்னன்னு கேட்க சொன்னான்……..”,

சட்டென்று சந்தியாவின் சஞ்சலங்கள் அகன்றது… வெற்றி உடன் இருக்கிறான் என்பது தைரியத்தை தர….. “சும்மா தான் காணோம்னு கூப்பிடேன்”, என்று விட்டாள்.

“வேற ஒன்னுமில்லையே”,

“ஒன்னுமில்லை”, என்று தெளிவாக சொல்லவும் ஞானவேல் சென்றுவிட்டான்.

காலையில் சந்தியா கிளம்பும் போது வெற்றியை பார்க்க நேரிட்டாலும், அவன் அவனின் மாணவன் ஒருவனோடு ஏதோ மும்முரமாக பேசிக்கொண்டிருந்தான்.

அப்போதும் சந்தியாவை பார்த்ததும், “என்ன?”, என்று கேட்டுக் கொண்டே வர…

“ஒன்னுமில்லை, நேரமாச்சு ஈவினிங் பேசலாம்”, என்று பஸ்ஸிற்கு விரைந்து விட்டாள்.

சொல்லியிருந்தால் அவள் எதிர்கொள்ள வேண்டியிருந்த பிரச்சனைகளின் தாக்கம் குறைந்திருக்குமோ என்னவோ…

எதையும் அறியாத சந்தியா எப்பொழுதும் போல ஹாஸ்பிடல் வந்து வேலையை ஆரம்பித்தாள்.

பத்தரை மணி போல ஒரு பேஷன்ட் இரண்டு கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக பேக்கேஜ் ஆக பணம் மூன்றரை லட்சத்தை கொண்டு வந்து கட்டினர்.

அதை எண்ணி கேஷ் டிராவில் வைத்து பூட்டிவிட்டு, அவர்களுக்கு பில் போட்டுக் கொண்டிருந்தாள்…….    

அவர்களுக்கு பில் போட்டுக் கொடுத்தவுடன்… அவள் நேற்று பண குளறுபடி பற்றி சொன்ன சீனியர் கூப்பிட…..

அங்கு சென்றாள்…… அவன் அந்த பண விவகாரத்தை கேட்கவும், அதற்குரிய பதிலை கொடுத்து, திரும்ப வந்து பார்த்த போது டிராவில் இருந்த பணம் காணாமல் போயிருந்தது.    

ஒரு நிமிடம் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை…

பா வடிவில் இருக்கும் பில்லிங் ஒரு புறம் இவள் மறுபுறம் இன்னொரு பெண் இருப்பாள்..

அவள் அந்த புறம் திரும்பியிருக்க, சந்தியா அதற்கு எதிர்புறம் திரும்பி நிற்பாள்.

அவளை கூப்பிட்டு, “இங்கே யார் வந்தார்கள்?”, என்று கேட்க……

“தெரியலை சந்தியா! நான் இங்க பில்லிங்ல பிஸியா இருந்தேன், பார்க்கலை!”, என்றாள்.

“பா, பணத்தை காணோம், கொஞ்சம் யோசிச்சு சொல்லு!”, என்று சந்தியா பதட்டத்தோடு சீரியசாக வினவவும் அந்த இடமே சீரியசானது.

அந்த சீனியர் மேனேஜர், “எங்க பணம்?”, என்று சந்தியாவை தான் கேள்வி கேட்டான்.

“சார், நான் உங்களை பார்க்க வந்த போது தான் காணாம போயிருக்கு…. கீ என்கிட்டே தான் இருக்கு…… யாரோ டுப்ளிகெட் கீ போட்டு தான் டிரா திறந்திருக்கணும்”, என்று சொன்னாலும் கேட்கவில்லை.

“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது… பணம் உனக்கு தெரியாம போயிருக்க வாய்ப்பில்லை”, என்று அவள் மேலேயே குற்றசாட்டு திருப்பப்பட, செய்வதறியாது நின்றாள்.

ஒரு ரூபாயா, இரண்டு ரூபாயா, மூன்றரை லட்ச ரூபாய்….. ஐயோ எங்கே போவாள்? உயிர் குலையே நடுங்கியது.

“இல்லையில்லை, எனக்கு தெரியாது”, என்று அவள் மறுக்கவும்……

உடனிருந்தவர்களும், “சந்தியா, நல்ல பெண்! அப்படி எல்லாம் எடுக்க மாட்டாள்”, என்று சப்போர்டிற்கு வர…..

“நீங்களும் இதுக்கு கூட்டா?”, என்று மேனேஜர் அவர்களையும் இதில் இழுத்து விட…. எல்லோரும் ஒதுங்கி கொண்டனர்.  

அங்கிருந்த செவிலிப்பெண் ஒருவரை அழைத்து…. “இந்த பொண்ணோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க”, என்று சொல்ல…….

அவர் சென்று பணியாளர்களின் உடமைகள் வைக்கப்பட்டு இருந்த ரூமில் சந்தியாவின் ஹேண்ட் பேகை எடுத்து வந்தனர்.

அதை பரிசோதித்தால் அதில் ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது…..

“எப்படி இது….? யாரோ வேண்டுமென்றே தன்னை சிக்க வைக்கிறார்கள்”, என்று சந்தியாவிற்கு புரிந்தது.

“என்ன  இது?”, என்று அந்த மேனேஜர் கேட்கவும்……

“எனக்கு இது எப்படி வந்ததுன்னு தெரியாது”,

“உன் பேக், உனக்கு தெரியாம எப்படி வரும்”,

“என் பேக் தான்……… ஆனா நானா எடுத்துட்டு வந்தேன், யாரோ எடுத்துட்டு வர்றாங்க, அந்த மாதிரி யாராவது பணத்தை வெச்சிருப்பாங்க”, என்றாள்.     

“பணத்தை ஒழுங்கா குடுத்துடு, இல்லை போலிஸ்க்கு போவோம்…..”,

“நீங்க யார்கிட்ட போனாலும் என்கிட்டே பணம் கிடையாது, இருந்தா தானே குடுப்பேன்”,

“என்ன திமிர் உனக்கு….. கொஞ்சம் கூட ஒரு பயமே இல்லை…….”,

“நான் எடுத்திருந்தா தானே பயப்படுவேன், நான் எடுக்கவே இல்லை….. போலிஸ் கூப்பிடறதுன்னா கூப்பிடுங்க! அவங்க வந்து கண்டுபிடிக்கட்டும்”, என்றாள்….

பயந்து அடிபணிவாள்….. “ஐயோ, எனக்கு தெரியாது”, என்று பதறுவாள்….. “எப்படியாவது காப்பாத்துங்க சார்”, என்று கெஞ்சுவாள் என்று அந்த மேனேஜர் எதிர்பார்த்தால் அப்படி எதுவும் சந்தியா செய்யவேயில்லை.

“இரு, உன்னை என்ன பண்ணறதுன்னு சார் கிட்ட கேட்கறேன்….. நீயெல்லாம் போலிஸ் வந்தா தான் அடங்குவ”, என்று சந்தியாவை மிரட்ட முற்பட்டு,

“அந்த பொண்ணு பேக், போன் எல்லாம் குடுங்க”, என்று சந்தியாவின் உடமைகளை கைப்பற்றி…….  அந்த மேனேஜர் தனியாக போய் ஹாஸ்பிடலின் புது ஓனரை அழைத்தான்.

“சார், பார்ட்டி அசர மாட்டேங்குது…… போலிஸ்க்கு போவேன்னு மிரட்டினா…. போன்னு சொல்லுது….. மடியும்ன்னு தோணலை சார்!”, என்றான்.

“என்னடா நீ……. எத்தனை பொண்ணுங்களை மடக்கியிருக்கோம்! இதென்ன உனக்கு ஒரு வேலையா…..”,

“இல்லை சார்! கொஞ்சம் கூட பயமே இல்லை…. பணிஞ்சே வரலை.. பணிஞ்சு வந்தா தானே நான் உங்ககிட்ட கூட்டிட்டு வர முடியும்… நீங்க அப்படியே அந்த பணத்தை தள்ளி விடற மாதிரி அந்த பொண்ணை……”, என்றாஅவன் இழுக்க……

“டேய், பார்த்ததுல இருந்து ஆள அசரடிக்குதுடா அவ அழகு….. பெருசா பேக் கிரௌண்ட் இல்லைன்னு நீதானே டா சொன்ன…”, 

“விசாரிச்ச வரைக்கும் அப்படிதான் தெரிஞ்சது, சொன்னேன்…. ஆனா எதிர்த்து நிக்குது”,

“ஏதாவது பண்ணுடா…”,   

“என்ன பண்ண முடியும்? ஏதாவது ஏமாளிப் பொண்ணா இருந்தா சிக்கும்! இது எதிர்த்து நிக்குது….”,

“டேய், சும்மாவா! அந்த மூன்றரை லட்சம் உனக்கு தானே….”,

“அது மட்டும் தானா! அதுக்கு மேல இன்னும் பண குளறுபடி பண்ணியிருக்கேனே, அதுவும் எனக்கு தான்….. விஷயம் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சு…. அதனால தானேடா நீ ரொம்ப நாளா சொல்லிடிருந்த அந்த பொண்ணை இப்போ அவசரமா சிக்க வெச்சிருக்கேன்”, என்று மனதிற்குள் நினைத்தான் மேனேஜர்…

இருந்தாலும் சந்தியா தைரியமாக எதிர்த்து நிற்பது ஒரு எச்சரிக்கை மணியடிக்க, “என்னங்க சார், நீங்க பணத்தை செலவு பண்ணினா எத்தனையோ பொண்ணுங்க…. ஒவ்வொரு தடவையும் இந்த மாதிரி அப்பாவிப் பொண்ணுங்களை சிக்க வெச்சு எதுக்கு ரிஸ்க் எடுத்துகிட்டு……”,

“டேய்! இந்த மாதிரி வராதுடா… எனக்கு அந்த பொண்ணு தான் வேணும்”,

“ரிஸ்க் வேண்டாம்னு தோணுது…. சொல்லிட்டேன்…….  நான் உங்ககிட்ட கூட்டிட்டு வர்றேன், அப்புறம் உங்க திறமை….”, 

“சீக்கிரம் கூட்டிட்டு வாடா……, கேமரா செட் பண்ணி வேலையை முடிச்சிட்டேன்னா அப்புறம் இந்த குடும்ப பொண்ணுங்க வாயை தொறக்காதுங்க”, என்றான் அந்த எம் டீ. ஏற்கனவே அந்த மாதிரி இரண்டு பெண்களை மடக்கிய அனுபவம் இருப்பதால்.

சந்தியாவிடம் வந்தவன், “பாஸ், உன்னை பார்க்கணும்னு சொல்றாங்க…. வா…..”,

“எங்க போகணும்…..?”,

“இங்க பக்கத்துல தான்”,

சந்தியாவிற்கு தன்னை எதிலோ சிக்க வைக்கிறார்கள் என்ற எச்சரிக்கை மணியடிக்க…….. “சார், இங்க வரும்போது நான் பார்க்கிறேன்….. நான் எங்கயும் வரமாட்டேன்….”,

“என்னமா உன்னோட ரோதனை… ஒன்னு பணத்தை எடுத்து வை, இல்லை பாசை பார்க்க வா!”,

“எதுவும் முடியாது”,

“வரலை, செக்யூரிட்டி விட்டு தூக்கிட்டு போவேன்…..”,

“மேல கை வெச்சிடுவாங்களா”, என்று சந்தியா கோபமாக கேட்கவும்….

ஒதுங்கியிருந்த மற்ற வேலை பார்ப்பவர்களும்….. “சார்! போலீஸ் கூப்பிடுங்க, இது என்ன இப்படி பேசிக்கிட்டு?”, என்று சந்தியாவிற்கு பரிந்து வரவும்…..  

“அப்போ போலிஸ் கூப்பிடுவேன்”,

“கூப்பிடுங்க”,  என்றாள்…….

மறுபடியும் அந்த மேனேஜர், “சார், ஒன்னும் வேலைக்கு ஆகலை…”, என்று எம் டீயிடம் தொலைபேசியில் தெரிவிக்க…..   

“தெரிஞ்ச போலிஸ் யாராவது இருந்தா கொஞ்சம் உதார் காட்டுங்கடா…. இதெல்லாம் கூடவா சொல்லணும்…..”, 

அந்த மேனேஜர் மிகவும் நல்லவன் போல, லோக்கல் ஸ்டேஷனை அழைத்து….. “பணம் காணாம போயிடுச்சு”, என்று கம்ப்ளைன்ட் கொடுக்க……

அவர்களும் சிறிது நேரத்தில் வந்தனர்…. ஒரு சப் இன்ஸ்பெக்டரும், ஒரு லேடி கான்ஸ்டபிளும், ஒரு ஆண் கான்ஸ்டபிளும் வந்தனர்…

அந்த லேடி கான்ஸ்டபிளிடம், தனியாக சப் இன்ஸ்பெக்டரும், மற்ற கான்ஸ்டபிளும் அறியாமல் சில நிமிடங்கள் மேனஜர் பேசினான்.

பின்னர் பொதுவாக அவர்களிடம் மூன்றரை லட்சம் பணம் காணோம்… இந்த பெண்ணின் ஹேண்ட் பேகில் இருந்து அம்பாதாயிரம் எடுத்தோம் என்று சந்தியாவை காட்டிக் கொடுத்தான்.

“இல்லைங்க, நான் எடுக்கலைங்க”, என்று சந்தியா சொல்லும் போதே……

அந்த லேடி கான்ஸ்டபிள்….. “ஏய், ஒழுங்கு மரியாதையா குடுதற்ரீ”, எனவும்…

அந்த லேடி சொன்ன விதத்தில் சந்தியாவின் மனதில் கிலி பரவியது…… “இல்லைங்க, நான் எடுக்கலை”, என்று மீண்டும் சொல்லும்போதே  பளீரென்று சந்தியாவின் கன்னத்தில் அந்த லேடி கான்ஸ்டபிள் ஒரு அரை வைத்தார்.

திடீரென்று விழுந்த அடியில் நிலை தடுமாறி நின்றாள் சந்தியா. வாங்கிய அடியை விட அடுத்தவர்கள் முன் வாங்கியது மிகவும் அவமானமாக இருந்தது…. சந்தியாவின் தைரியம் ஒடுங்கியது.  

சப்-இன்ஸ்பெக்டரே, “என்ன இப்படி பண்றீங்க? கை வைக்காதீங்க”, என்று அந்த லேடியிடம் சொன்னார்……

“சார், பொண்ணு ஒரு மாதிரியாம்… இப்படி கேட்டா தான் பதில் கிடைக்கும்”, என்று சொல்ல……..

இப்போது திருட்டோடு இன்னும் புதிதாக முளைத்த குற்றச்சாட்டில் சந்தியா முற்றிலும் ஒடுங்கியே விட்டாள்…… “திருட்டு பட்டம், அதோடு பொண்ணு ஒரு மாதிரியா…”,  கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

character assassination காலம் காலமாக பெண்கள் மேல் மிகவும் அனாவசியமாக பாயும் ஒரு விஷயம்…. எவ்வளவு தைரியமான பெண்களையும் மனதளவில் ஒடுக்கி விடும். 

அப்போதுதான் சந்தியாவை கூட வந்த கான்ஸ்டபிள் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே இந்த பொண்ணை என்று நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.

“நீ எங்கயாவது என்னை பார்த்திருக்கியா?”, என்று சந்தியாவிடமிம் கேட்க….

சந்தியாவிற்கு மூளை எங்கே வேலை செய்தது… நின்றது நின்றபடி இருந்தாள்…..

“என்ன? வேற ஏதாவது கேஸ்க்கு ஸ்டேஷன்க்கு இந்த பொண்ணு வந்திருக்கா”, என்று அந்த சப் இன்ஸ்பெக்டர் விசாரிக்க ஆரம்பிக்க……

சட்டென்று ஞாபகம் வர பெற்ற கான்ஸ்டபிள், “ஏம்மா? நீ வெற்றிக்கு தெரிஞ்ச பொண்ணில்ல”, என்றார்.

வெற்றி என்ற பெயர் கேட்டதும் சுய உணர்வு வர பெற்றவள்…. “ஆமாம்”, என்று அவசரமாக தலையாட்ட……

“ஏம்மா அவனுக்கு ஒரு போன் பண்ண மாட்டா நீ”,

“போன் வாங்கி வெச்சிட்டாங்க”, என்றாள் தேம்பியபடி……

“யாராவது பொண்ணு சரியில்லைன்னு சொன்னா கையை வெச்சிடுவியா நீ…. நம்ம பயலுக்கு தெரிஞ்ச பொண்ணு…… இரு, உன் வூட்டு மேல கல்லு தான் போ”, என்றார் அந்த லேடி கான்ஸ்டபிளை பார்த்து.      

“சார், நமக்கு தெரிஞ்சவங்க….. அதான் சார் நம்ம வெல்டிங் பட்டறை வெற்றி. அவங்க வீட்ல குடியிருக்கு…… செஞ்சிருக்க வாய்ப்பேயில்லை….. ரொம்ப வேண்டியவங்கன்னு என்கிட்டயே சொல்லியிருக்கான்”,

“யாரு, நம்ம போலிஸ் ட்ரைனிங்க்கு களறி சிலம்பம் சொல்லிக் குடுப்பானே அந்த பையனா”, என்றார் சப் இன்ஸ்பெக்டர்…..

“அவன் தான் சார்…….”,

“உங்களுக்கு வேற யார் மேலாயாவது சந்தேகம் இருக்கா”, என்று அந்த மேனேஜரிடம் சப் இன்ஸ்பெக்டர் கேட்க…

“இல்லை சார்”, என்றான் தெளிவாக அவன்…..

“அப்போ வேற யாரையும் நாங்க விசாரிக்க வேண்டாமா”,

“வேண்டாம் சார், வீணா ஹாஸ்பிடல் பேரு கெடும்”, என்று அந்த மேனேஜர் சொல்ல…..

“சீ சீ டீ வீ கேமெரா இருக்குமே…. அது காட்டுங்க”,

“அது ரிப்பேர் சார்”, என்றான்.

“எப்போயிருந்து”,

“காலையிலிருந்து தான்”, என்றான். அவன் தான் அதை ஆஃப் செய்திருந்தானே.

கான்ஸ்டபிளிடம்….. “நான் போறேன்…..! வெற்றிய வர சொல்லி பைசல் பண்ண முடியுதான்னு பாருங்க…… முடியலைன்னா இந்த மேனேஜரை போலிஸ் ஸ்டேஷன் வந்து கம்பளைன்ட் குடுக்க சொல்லு, என்ன ஏதுன்னு பார்த்துக்கலாம்”, என்று சொல்லி சப் இன்ஸ்பெக்டர் சென்று விட்டார்.

தேம்பி நின்ற சந்தியாவிடம், “வெற்றிக்கு போன் பண்ணும்மா”, என்றார் அந்த கான்ஸ்டபிள்….

சந்தியாவிற்கு மிகவும் கழிவிரக்கமாக இருந்தது….. திருட்டு குற்றத்தோடு வெற்றிக்கு அழைக்கிறோமே என்று…… என்ன நினைப்பான் தன்னை பற்றி?….. வெளியிலும் வீட்டிற்கும் தெரிந்தால் எவ்வளவு அசிங்கம். 

அந்த மேனேஜரிடம், “பொண்ணு போன் குடுங்க!”, என்று கான்ஸ்டபிள் சொல்லவும்… வேறு வழியில்லாமல் போனை கொடுத்தான் மேனேஜர்.

ஆழம் தெரியாமல் எவனோ அனுபவிக்க நாம் காலை விட்டு விட்டோமோ என்று அந்த மேனஜேருக்கு சற்று பயம் வந்தது.   

முயன்று தேம்பலை அடக்கியபடி வெற்றிக்கு அழைத்த சந்தியா, “இங்க ஹாஸ்பிடல்ல ஒரு பிரச்சனை, வர்றீங்களா”, என்றாள்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் வெற்றி அங்கிருந்தான்…..

அந்த மேனேஜரின் ரூமில் தான், சந்தியாவும், இரண்டு போலிசும், அந்த மேனேஜரும் இருந்தனர்.

அதற்குள் கான்ஸ்டபிள் வளைத்து வளைத்து மேனேஜரை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்…… “உங்க எம் டீ யை வர சொல்லுங்க”, என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

உள்ளே வந்த வெற்றியின் கண்களில் முதலில் பட்டது, சந்தியாவின் அழுத தோற்றமும் அவளின் கன்னங்களில் இருந்த கை தடங்கள் தான்……

“ஏய், யாரு அடிச்சா உன்னை”, என்று பதறி அவளருகில் போக…..

வெற்றி கேட்டதும் சந்தியாவின் அழுகை அதிகமாகியது……. மீண்டும் தேம்பத் துவங்கினாள்.

“என்ன சார்?”, என்று திரும்பி கான்ஸ்டபிளிடம் கேட்கவும்….

“நம்ம ஆளு தான், தெரியாம கை வெச்சிருச்சு, விட்டுரு”, என்று லேடி கான்ஸ்டபிளை காட்டி பஞ்சாயத்து பேசவும்……

வெற்றி பார்த்த பார்வையில் பயந்த அந்த லேடி கான்ஸ்டபிள்….. “இந்தாளு தான் அந்த பொண்ணு ஒரு மாதிரிப் பொண்ணுன்னு சொன்னான்”, என்று பயத்தில் அந்த மேனேஜரை கை காட்ட….

காட்டிய கையை அந்த லேடி திரும்ப எடுக்க கூட இல்லை….. வெற்றி விட்ட உதையில் அந்த மேனேஜர்…… சுவரில் மோதி அந்த லேடி கான்ஸ்டபிள் மேலேயே வந்து விழுந்தான்.                         

 

       

Advertisement