Advertisement

அத்தியாயம் ஆறு:

வெற்றி வாரத்தில் சில நாட்கள் முக்கிய பிரமுகர்கள் சிலர் வீட்டிற்கு களரியும்  சிலம்பமும் பயிற்சி கொடுக்க போவான்…… அதே மாதிரி காவலர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் போது…. சிறப்பு வகுப்பாக சில சமயம் இந்த மாதிரி தற்காப்பு கலை வகுப்புகள் எடுக்கப்படும் போது அதற்கு எப்போதும் பயிற்சியளிப்பவன் வெற்றி.

அந்த மாதிரி தான் அவனுக்கு காவலர்களை நன்கு அறிமுகமிருந்தது பல பெரிய ஆட்களையும் தெரிந்து இருந்தது….

அந்த மாதிரி ஹோம் செகரட்ரி வீட்டிற்கும் அவரின் பெண்ணிற்கும் பையனுக்கும்  களறி, சிலம்பம் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு ஞாயிறு மாலையில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த போது….. ஹோம் செக்ரடரியும் வீட்டில் இருக்க…. அவரும் மக்களின் பயிற்சியை ரசித்துக் கொண்டிருந்தார்.

“என்ன வெற்றி? பசங்க எப்படி பண்றாங்க!”,

“ரொம்ப ஜோரா பண்றாங்க சார்!”, என்றான்…. பெரியவள் ராதா ஒன்பதாம் வகுப்பிலும் சிறியவன் ஆறாம் வகுப்பிலும் இருந்தான்….

“இதெல்லாம் ஓகே தான், ஆனா என் பொண்ணு கணக்குல ரொம்ப வீக்… அதான் என்ன பண்றதுன்னு தெரியலை”, என்றார் கவலையாக…

ஹோம் செக்ரேடரி என்றால் மட்டும் விதி விலக்கா என்ன? நேற்று தான் பேரண்ட்ஸ் மீட்டிங் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லி, அவரின் பெண்ணின் ஸ்கூலில் அவருக்கு பெரிய அட்வைஸ் கொடுத்திருந்தனர்.

“அதுக்கென்ன சார் ஏதாவது ஸ்பெஷல் டுயுஷன் ஏற்பாடு பண்ண வேண்டியது தானே….”,

“எங்கப்பா யார் வந்தாலும் எனக்கு அவங்க சொல்லிக் குடுக்கறது புரியலைன்னு சொல்றா…. என்ன பண்றதுன்னு தெரியலை……..”,

உடனே வெற்றியின் மனது இரண்டும் இரண்டும் நாலு என்று கணக்கு போடாமல்… இரண்டும் இரண்டும் இருபத்தி இரண்டு என்று கணக்கு போட்டது….

“நம்ம வீட்ல குடியிருக்குற ஒரு பொண்ணு இருக்கு, எம் எஸ் சீ மேத்ஸ் படிச்சிருக்கு டியுஷன் தான் எடுக்குது…… எனக்கு எப்படி எடுக்கும்னு எல்லாம் தெரியாது… சார் சொன்னா ஒரு நாலு நாள் வந்து எடுக்க சொல்றேன்.. பிடிச்சிருந்தா இருக்கட்டும், இல்லைன்னா வேண்டாம்னு சொல்லிடலாம், தப்பா எடுத்துக்காது!”, என்றான்.

“பொண்ணு எப்படி?”, என்றார் ஹோம் செக்ரேடரி…. பெரிய பதவியில் இருப்பதால் யாரையும் உடனே வீட்டிற்குள் விட முடியாது….

“பொண்ணுக்கு நான் கியாரண்டி”, என்றான்…..

உடனே அவரின் பெண், “ப்ரீதிக்கு நாங்க கியாரண்டி”, என்றாள் விளையாட்டாக…

“இது ப்ரீத்தி இல்லை சந்தியா”, என்று வெற்றி திருத்த…

“ஓகே மாஸ்டர்!”, என்று கத்தினாள் வேண்டுமென்றே குறும்பாக….

“குறும்பு, ஆரம்பி!”, என்று ட்ரில் எடுக்க ஆரம்பித்தான்…..

எதையும் உடனே செய்யும் ரகம்…. “இப்போ சண்டே ஈவ்நிங் தானே, வர சொல்லட்டா சார்!”,  என்று அப்போதே துவங்க….

“சொல்லேன் பா! நானும் வீட்ல இருக்கேன், நான் பார்த்துக்கறேன்!”, என்றார்.

உடனே மீனாட்சிக்கு அழைத்தவன்… விவரம் சொல்லி, “அந்த நாராயணன் பையனை கூட போட்டு உடனே அனுப்பிவிடு…”, என்றான்.

சந்தியாவை பார்த்ததும்….. அந்த சிறுமிக்கு பிடித்து விட்டது…. சந்தியாவின் தோற்றம் பார்த்தவர்களை கவரும், வெற்றிக்கு தான் மெதுவாக பார்க்க பார்க்க கவர ஆரம்பித்து இருந்தது……

ஆனால் அவளின் அப்பாவும் அம்மாவும் சந்தியா எப்படி சொல்லிக்கொடுக்கிறாள் என்று உடனே பார்க்க வேண்டும் சொல்ல…..  

“உடனே கொஞ்சம் கஷ்டம்…. ஒரு ஹாஃல்ப் அன் ஹவர் அவ மேக்ஸ் புக் குடுத்தீங்கன்னா, என்னன்னு பார்த்துட்டு சொல்லிக் குடுப்பேன்..”,  என்றாள்.

வேலை தேவை என்ற போதும், உடனே நான் சொல்லிக்கொடுக்கறேன், எனக்கு தெரியும் என்று சொல்லாமல்….. பார்த்துட்டு சொல்லிக் கொடுக்கறேன் என்று அவள் உண்மை பேசியது…. அங்கிருந்தவர்களுக்கு பிடித்தது…..

சந்தியாவும் அரை மணி நேரம் படித்து…. பிறகு அந்த சிறுமிக்கு சொல்லிக் கொடுத்தாள்… சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அவள் கணக்கில் கொஞ்சம் மந்தம் என்பது புரிய….. மிகவும் பொறுமையாக சொல்லிக் கொடுத்தாள்.

அரை மணி நேர கிளாசில் அந்த சிறுமி துவள்வது தெரிய…. ஐந்து நிமிடம் வேறு பேசினாள்.. அவள் கொஞ்ஜம் சுறுசுறுப்பு ஆனவுடன் மீண்டும் கணக்கை சொல்லி கொடுத்தாள்….

ஹாலில் ஒரு இடத்தில் இவள் பாடம் சொல்லி கொடுக்க…. ராதாவின் பெற்றோர் அந்த பக்கம் இந்த பக்கம் நடந்து கவனித்தனர்… அவர்கள் பார்த்தவரை அவர்களுக்கு திருப்தி….  

“எப்படிம்மா பண்றா?”, என்று அவளின் அம்மா கேட்க….

ராதாவின் தோள் மேல் கை போட்டு, “எப்படி பண்ற நீ?”, என்று அவளிடமே கேட்டாள் சந்தியா…..

“கொஞ்சம் டல் தானே மிஸ்……”,

“எனக்கு அப்படி தெரியலையே…. இன்ட்ரெஸ்ட் கொஞ்சம் கம்மி அவ்வளவு தான்…..”, என்றவள்….

“என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன் மேடம்.. எனக்கு நம்பிக்கை இருக்கு!”, என்று சொல்ல..

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு சரியாக அவர்களின் வீட்டு கார் சந்தியாவை பிக் அப் செய்தது….. ஆறே காலிலிருந்து ஏழே கால் வரை ட்யுஷன் அதன் பிறகு பஸ் ஏறி சந்தியா வீட்டிற்கு வருவதாக ஏற்பாடு..

விடியற்காலையில் தனியாக பஸ் பிடித்து போவது அவ்வளவு பாதுகாப்பு அல்ல என்பதால் இந்த ஏற்பாடு.

எல்லாம் வெற்றியின் ஏற்பாடே….   சந்தியா நேற்று ராதாவின் வீட்டிற்குள் நுழையும் போதே, “ஃபீஸ் எவ்வளவுன்னு கேட்பாங்க… ஒரு ரெண்டு நாள் கிளாஸ் எடுக்கறேன்! நீங்க பாருங்க! அப்புறம் டிசைட் பண்ணலாம்னு சொல்லு…..! நீ பாட்டுக்கு நம்ம தெரு பசங்க கிட்ட வாங்கற மாதிரி இருநூறு முன்னூறுன்னு சொல்லாத”, என்று சொல்லியிருந்தான்….

ஒரு வாரம் வரை ஃபீஸை பற்றி சந்தியா பேசவேயில்லை…… அடுத்த வாரம் அவர்களுக்கு கிளாஸ் எடுக்க சென்ற போது வெற்றி அதை முடிவு செய்து வந்தான்…   சந்தியா அவ்வளவு ஃபீஸை எதிர்ப்பார்க்கவேயில்லை…..                                                           

அன்று காலை அவளின் தாத்தா வெற்றியின் பட்டறையில் அமர்ந்திருக்கும் போது ஆட்கள் அதிகமில்லாத சமயம் அங்கே போனவள் தாத்தாவிடம் பேசுவது போல வெற்றியை அவ்வப்போது பார்க்க…..

வெற்றியும் அதை உணர்ந்தான்…. ஐந்து நிமிடம் , பத்து நிமிடம் ,  அவள் நகர்வதாக காணோம்  …….

வெற்றி அருகில் வந்து…. அவளின் தாத்தாவின் முன்னிலையில் தான் கேட்டான் “என்ன பண்ற இங்க……?”,

“எனக்கு சொல்லணும்”,

“என்ன சொல்லணும்?”,

“தேங்க்ஸ்!”,

“நீ கிளாஸ் எடுக்கற! நீ சாம்பதிக்கற! எனக்கு எதுக்கு தேங்க்ஸ்……!”,

“நிஜம்மா சொல்லணும்! இவ்வளவு ஃபீஸ் நான் எதிர்ப்பார்க்கலை, ஒரு தௌசன்ட் இல்லை அதை விட ஒரு ஃபைவ் ஹன்டரட் கூட எதிர்ப்பார்த்தேன்!”, என்றாள்……

“யப்பா……”, என்று ரஜினி ஸ்டைலில் சொன்னவன்…..  “நல்ல வேலை செஞ்சேன் நான்….. உன்னை ஃபீஸ் பேச விடலை….. ஹோம் டியுஷன்க்கு இவ்வளவு தான்! நான் ரெண்டு மூணு பேர் கிட்ட விசாரிச்சிட்டேன், சரியா… கிளம்பு!”, என்றான்.

“கிளம்பு”, என்றவுடன் பேச்சு இவ்வளவு தானா என்பது போல அவளின் பார்வை இருக்க…..

ஆண் மகன் என்றால் பேச்சை வளர்ப்பான், பெண் பிள்ளை சிநேக பாவம் இருந்தாலும் பேச்சு வளர்க்க முடியாது…….  

இருந்தாலும், “இது என்னோட ரெண்டாவது தேங்க்ஸ்!”, என்று சொல்லியபடி சந்தியா இடத்தை விட்டு கிளம்பவும்…..

“மூணாவது தேங்க்ஸ் சொல்ல வைக்கணும்!”, என்ற ஆர்வம் வெற்றிக்கு தோன்றியது….

அவளின் தாத்தா ஒரு பக்கம் வெற்றிக்கு நன்றியுரைக்க….. “பெரியவரே!  இதெல்லாம்  ஒரு விஷயமில்லை!”, என்று சொல்லி அவனும் இடத்தை விட்டு நகர்ந்தான்.

இருந்தாலும் அவளின் தேங்க்ஸ் மனதில் ஒரு சந்தோஷத்தை கொடுத்தது…

அந்த சந்தோஷம் நாள் முழுவதும் இருந்தது…..    

யாருக்கு உதவினாலும் சந்தோஷம் இருக்கும்…… ஆனால் இப்போது சற்று அதிகம் இருந்தது. 

ஒரு மெல்லிய நட்பு இருவருக்குள்ளும் துளிர் விட துவங்கியது…….

இரண்டு நாட்கள் சென்றிருக்கும்….. எப்போதும் காலையில் பயிற்சி முடித்து மொட்டை மாடியில் ஒரு ரூம் இருக்கும் அதிலுள்ள குளியலறையில் தான் குளிப்பதை விரும்புவான்…

ஏனென்றால் குளித்து முடித்தவுடன் வெளியே வந்து சூரியனுக்கு ஒரு வணக்கம் போடுவதை விரும்புவான்…… சூரிய நமஸ்காரம் என்று முறையாய் எதுவும் செய்யாவிட்டாலும்……. சூரியன் முன் கண்மூடியும் கண்திறந்தும் சிறிது நேரம் நிற்பான்.    

ஒரு முறை குடி வந்து சில நாட்கள் ஆன நிலையில் ஏதோ காய வைக்க மாடி ஏறிய சந்தியா இவன் கண்மூடி அங்கு நிற்பதை பார்த்து சத்தமில்லாமல் இறங்கி விட்டாள்.

அதனால் அவன் செய்கை தெரியுமாதலால் வெற்றி குளிக்க சென்ற நேரத்தை கணித்து அவன் சூரியனை வணங்கும் போது சந்தியா அவனை பார்க்க மாடிக்கு வந்தாள்.

அவளை எதிர்பாராதவன்…. யார் முன் என்றாலும் அப்படியே நின்று பேசுபவன் அவசரமாக துண்டை எடுத்து மேலே போர்த்தி என்ன என்பது போல பார்த்தான்.

சந்தியா அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை….. முதல் நாள் இருந்து வெற்றி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போது அப்படிதானே அவனை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

தயங்கி நின்றாள்…

“சொல்லு!”, என்றான்…. எரிச்சலாக, திட்டுவது மாதிரி, கோபத்தோடு, இப்படி எல்லாம் வெற்றியின் குரல் இல்லை…… ஒரு தோழமையோடு இருந்தது….

“அது, அது,”, என்றாள் தயங்கி…..

“எது, எது, சொல்லு!”, என்றான் மறுபடியும்.

அந்த குரல் எதுவாகினும் வெற்றியிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை சந்தியாவிற்கு தர…. “எனக்கு ஒரு வேலை தேடித் தர்றீங்களா, நானும் நிறைய இடத்துக்கு போறேன். அவங்க செலக்ட் பண்ணினா எனக்கு பிடிக்கலை…. இல்லைன்னா டைம் ஒத்து வரலை, இல்லை சம்பளம் ரொம்ப கம்மி, இப்படி ஏதாவது இருக்கு…….”,

“காலையில டியுஷன் எடுக்கற….. ஈவினிங் டியுஷன் எடுக்கற….. இதுல எங்க நீ வேலை செய்வ….”,

“பகல்ல ஃப்ரீயா தானே இருக்கேன்…”,

“நாள் முழுசும் வேலை செய்வியா…”,

“செய்வேன்… சரியா செய்ய மாட்டேன்னோ, இந்த பொண்ணுக்கு எப்படி வேலை தேடிக் குடுக்கறதுன்னு பயப்பட வேண்டாம்… வேலைல கரக்டா இருப்பேன்!”, என்று சந்தியா அலர்ட் ஆறுமுகமாக வாக்குறுதி கொடுத்தாள்.

சந்தியா வாக்குறுதி கொடுத்த விதத்தில் வெற்றியின் முகத்தில் புன்னகை தான் மலர்ந்தது.

“அப்படி நாள் முழுசும் வேலை பார்க்கறது கஷ்டம்!”,  

“நீங்க கூட தான் பார்க்கறீங்க”,

“நானா!”,

“ஆமாம்! காலையில ஐஞ்சு மணிக்கு எழுந்துக்கறீங்க….. அப்புறம் உங்க ஸ்டுடன்ட்ஸ்க்கு ப்ராக்டிஸ் குடுக்கறீங்க….. அப்புறம் குளிச்சு சாப்பிட்டு உடனே வெல்டிங் இடத்துக்கு போயிடறீங்க…. உங்க கிட்ட வேலை செய்யற பசங்க எல்லாம் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் நீங்க சாப்பிடவே மதியம் வர்றீங்க…. திரும்ப வேலை பார்க்கறீங்க…… ஈவினிங் வேலை இல்லைனா ப்ரைவேட்டா நிறைய கிளாஸ் எடுக்கறீங்க…..”,

“சண்டே மத்த ஹாலிடேஸ்ல ஸ்பெஷல் கிளாஸ்… இதுல உங்களுக்கு எப்போ ரெஸ்ட்”, என்றாள்.

இன்னும் மலர்ந்த புன்னகையோடு, “நானும் நீயும் ஒன்னா!”, என்றான்.

“ஏன் நீங்க செய்யும் போது நான் செய்ய முடியாதா…”,

“முடியாது!”, என்றான்……

“ஏன்? ஏன் முடியாது?”,

“உன் ஆர்ம்ஸ் பாரு! என் ஆர்ம்ஸ் பாரு!”, என்று மசில்ஸ் காட்டவா முடியும்…

“வேகமா காத்தடிச்சாலே நீ பறந்து போயிடுவ…… நாள் முழுசும் வேலை செய்ய உடல் பலம் வேண்டாமா….”,

“நம்முடைய தேவைகள் நம்முடைய உடல் பலத்தை நிர்ணயிக்கும்….. எனக்கு வேலை நிச்சயம் தேவை…. என்னால செய்ய முடியும்”, என்றாள். ஏழ்மையை சொல்லாமல் தேவையை சொல்லும் நம்பிக்கையான வார்த்தைகள்.  

இப்படி சொல்லும் பெண்ணிடம் என்ன சொல்வது…..

“சரி பார்க்கறேன்….”, என்றான்.

“ரொம்ப தொந்தரவு பண்றனா?”,

“ரொம்ப இல்லை, ஆனா கொஞ்சம்!”, என்று வெற்றி கூறவும் சந்தியாவின் முகம் சுருங்கிற்று..

“பரவாயில்லை என் பசங்க என்னை தொந்தரவு பண்ணினா, நான் செய்வேன், அது மாதிரி தான் நீயும்!”,

சந்தியாவிற்கு புரியவில்லை…. “பசங்கன்னா….”,

“என்னாண்ட இருக்குறவனுங்க… என்ட்ட வேலை பார்க்கறவனுங்க…… அப்புறம் என் ஃபிரண்ட்ஸ்”, என்று வெற்றி நீட்டி முழக்கவும் சந்தியாவின் முகம் மலர்ந்தது…

“தேங்க்யூ!”, என்றாள்..     

ஒரு மெல்லிய நட்பு சற்று பலப்பட்டது..

சந்தியாவிடம் சொல்லி வந்த பிறகு வெற்றிக்கு ஒரே யோசனை…. என்ன வேலை எப்படி இவளுக்கு தேடி கொடுப்பது என்று……

சந்தியாவின் தாத்தா வெற்றியின் பட்டறையில் வந்து அமரவும், “பெரியவரே! உங்க பேத்திக்கு கம்ப்யூட்டர் எல்லாம் தெரியுமா?”, என்றான்…..

“தெரியும்பா அதெல்லாம் ஆபரேட் பண்ணுவா!”, என்றார்.

“அப்போ சரி!”, என்றான்….. ஏதாவது மார்னிங் ஷிப்ட் மட்டும் இருக்கும் பில் போடும் வேலைகள் சரியாக வரும் என்று அனுமானித்தவன் அதற்கான முயற்சியில் இறங்கினான்.

பத்து நாட்கள் அலசி ஆராய்ந்து…. அவன் களறி சொல்லிக்கொடுக்கும் ஒரு ஹாஸ்பிடல் ஓனரின் மூலமாக காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை ஹாஸ்பிடல் பில்லிங் செக்ஷனில் வேலை வாங்கி கொடுத்தான்…  

எட்டாயிரம் தான் சம்பளம்….. அது என்னவோ வெற்றிக்கு கம்மியாக தான் தோன்றியது……

“நல்ல வேலை கிடைக்கற வரைக்கும் போறேன், இது ஓகே!”, என்றாள் சந்தியா…

ஒரு வாராக வெற்றியின் மூலமாக சந்தியா வேலையில் அமர்ந்தாள்…..

அதற்காக சந்தியாவின் குடும்பத்தில் தனித்தனியாக வெற்றி அகப்படும் போதெல்லாம் ஒவ்வொருவராக நன்றி கூறினர்.

அவர்கள் மட்டுமன்றி மீனாட்சியும்  ஞானவேலும் கூட நன்றி கூற, “இன்னாடா நடக்குது”, என்று காண்டானவன்…

சந்தியா டியுஷன் முடிக்கும் சமயம் அவளை மொட்டை மாடியில் பார்த்து, “ஊர் பூராவும் நான் வேலை வாங்கிக் குடுத்தேன்னு போஸ்டர் ஒட்டுவியா நீ!”, என்று சீரியசாக கேட்டான்.

“ஓஹ்! அப்படி கூட செய்யலாம் இல்லை!”, என்று சந்தியாவும் சீரியசாக பதிலுக்கு கேட்கவும்…..

இருவருமே சிரித்து விட்டனர்….  

“பாக்கும் போதெல்லாம் உங்க வீட்டு ஆளுங்க தேங்க்ஸ் சொன்னா நான் என்ன பண்ணுவேன்…. அதுக்கும் மேல எங்கம்மாவும் தம்பியும்….. இதுல மேல் வீட்ல இருக்குற பையன் வேற இப்ப வந்து அண்ணா எனக்கும் ஒரு வேலை வாங்கி குடுங்கன்னு நிக்கறான்”, என்று சொல்ல…..

“நான் இன்னும் தேங்க்ஸ் சொல்லவேயில்லை”, என்று கீர்த்தனா இன்னும் சீரியசாக வந்து, “தேங்க்ஸ் அண்ணா!”, என்று வெற்றியை பார்த்து சொல்ல…  

சந்தியாவுக்கும் சிரிப்பு, வெற்றிக்கும் சிரிப்பு……

“வந்தப்போ எவ்வளவு டெர்ரர்ரா இருந்த என்னை இப்படியாக்கிட்டீங்க, எதுவா இருந்தாலும் உன்னோட வெச்சிக்கோ எல்லார்கிட்டயும் சொல்லாத”, என்று சிரிப்போடு சொல்லிக்கொண்டே கீழே இறங்கினான். 

சந்தியா நாள் முழுதும் ஓய்வின்றி வேலை பார்த்தாள்…….

காலையில் மேத்ஸ் டுயுஷன் பின்பு ஹாஸ்பிடலில் வேலை….. பின்பு மாலையில் வீட்டில் பிள்ளைகளுக்கு டுயுஷன்….. இப்போது டியுஷனிலும் கிட்டத்தட்ட இருபது பேர் இருந்தனர்…. எல்லாம் ஆறிலிருந்து பத்து வகுப்பில் இருக்கும் மாணவர்கள்…..   

அவளின் முகத்தில் அப்போதும் களைப்பு என்பது தெரியவேயில்லை…. சந்தியா மட்டுமன்றி அவளின் அம்மா, சித்தி, நாராயணன் எல்லோரும் உழைத்தனர்.

சந்தியா மிக மிக அதிகம்…… வெற்றிக்கு ஆச்சர்யம் தான்…. எப்படி இப்படி  இந்த பெண்ணால் சிறிதும் முக சுணக்கமின்றி ஓடி ஓடி வேலை செய்ய முடிகிறது….

அதுவும் பஸ்ஸிற்கு அவள் வேகமாக போகும் போது பாவமாக தான் இருக்கும்… ஆண் நண்பன் என்றால், “வாடா, நான் டிராப் பண்றேன்!”, என்று போகலாம் பெண் பிள்ளை அதற்கு வழியில்லை…..

எதுவாகினும் சந்தியாவின் இந்த ஓய்வற்ற உழைப்பு அவளின் மேல் மிகுந்த மரியாதையை வெற்றிக்கு கொடுத்தது.    

சந்தியாவிற்கு வெற்றியின் உதவிகள், அவனின் செயல்கள் அவளுக்கு ஒரு நல்ல தோழமையை வெற்றியிடம் உணர வைத்தது.

 

Advertisement