Advertisement

அத்தியாயம் மூன்று:

ஒரு பயமுமின்றி நேர்கொண்ட பார்வையோடு அந்த பெண் தன்னை பார்த்தது வெற்றியின் கோபத்தை கிளறி விட்டது.

இன்னும் அந்த பெண்ணின் பெயர் கூட தெரியாதே…..

“ஏன் செடி வைத்தால் என்ன? அதற்கு எதற்கு இவ்வளவு கோபம்”, என்பதே சந்தியாவின் எண்ணமாக இருக்க மீண்டும் விளக்கம் கொடுக்க முற்பட்டாள்……

“இல்லைங்க, உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு தான் வைக்கிறேன்… எதுவும் அழுக்காகாதுங்க”, என்று அவள் சொல்லும்போதே…….

“அம்மா கிட்ட நான் சொல்லிக்கறேன், இதை எடுக்கறியா? இல்லை தூக்கி வீசட்டா?”, என்றான் கோபமாக…..

குரலும் சற்று உயர்ந்தது…. அது வாசலுக்கு அருகில் ஈசி சேர் போட்டு அமர்ந்திருந்த…. சந்தியாவின் தாத்தாவிற்கு நன்கு கேட்க…..

“டேய், சந்தியா இங்க வாடா”, என்று குரல் கொடுத்தார்…..

“என்ன தாத்தா?”, என்று சந்தியா விரையவும்…..

“எடுத்துடுடா வாக்கு வாதம் செய்யாத!”, என்றார்….

“சரி, தாத்தா”, என்று வெளியே வந்தவள்…..

வெற்றியை நோக்கி தன்மையாகவே…. “வீட்டுக்குள்ள இப்போ இடமில்லை….. நாளைக்கு எங்கயாவது கொண்டு போய் வெச்சிடறேன்…. இப்போ தண்ணி கூட ஊத்த மாட்டேன்”, என்று வேண்டிக் கேட்க…..

“இவள் இப்படி கேட்கும் போது, நமக்கே இருந்துவிட்டு போகட்டும் என்று சொல்லுமாறு தோன்றுகிறதே….. இப்படி தான் இந்த பெண் எல்லோரையும் பேசி வசியப் படுத்துகிறாளா”, என்று தோன்றவும்….

முகத்தை இன்னும் கடுமையாக்கி, ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தான்……

“அக்கா இருக்கட்டுமா? வேண்டாமா? தெரியலையே!”, என்று கீர்த்தனா கிசுகிசுக்க….

நாராயணனை பார்த்த சந்தியா, “போய் கேளுடா”, என்று உந்தினாள்…

“நான் போகலைப்பா”, என்று அவன் நகர்ந்துவிட…

என்ன செய்வது என்று தெரியாமல் சில நொடி நின்றவள்…… “வாடி, பார்த்துக்கலாம்”, என்று கீர்த்தனாவை உள் கூப்பிட….

“அக்கா தூக்கி வீசிட்டா…..”, என்று மிகவும் கவலையாக கீர்த்தனா கேட்கவும்…..

“வீசினா கேட்ச் பிடிக்க முடியுதான்னு பார்க்கலாம்”, என்று விளையாட்டாக பேசி கீர்த்தனாவை திசை திருப்ப முயன்று, சந்தியா சிரித்துக் கொண்டே உள்ளே போக திரும்ப….

சரியாக அவள் சிரித்த நேரம் வெற்றி பார்த்து விட, “என்ன திமிர் இந்த பெண்ணிற்கு! நான் அவ்வளவு திட்டிவிட்டு வருகிறேன்! என்னிடம் அப்படி கெஞ்சுவது போல பேசிவிட்டு, இப்போது சிரிக்கிறாள்!”, என்று தோன்றவும்……

“இந்த பெண் ஆளுக்கு தகுந்த மாதிரி பேசுகிறாள்……”, என்ற அவனின் நினைப்பு ஸ்திரம் பெற்றது…

சந்தியாவும் நாராயணனும் உள்ளே சென்று விட….. கீர்த்தனா அந்த செடியையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்… அவளுக்கு சிறு வயதில் இருந்தே செடிகள் என்றால் கொள்ளை பிரியம்… அங்கே ஒட்டன் சத்திரத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாள்….. வீட்டை விற்ற பிறகு அதற்கு வழியில்லாமல் போக…. ஒரு இரண்டு மூன்று தொட்டியில் மட்டும் பூச்செடிகள் வைத்திருந்தாள்… 

இங்கே ஹாஸ்டல் வந்த பிறகு அதற்கு வழியில்லாமல் போக.. இப்போதும் பூச்செடிகள் அப்படியே தான் விட்டு வந்திருந்தனர்…. இந்த துளசியும் கற்பூரவல்லியும் அவர்களின் பாட்டி தினமும் சளி தொந்தரவு, இருமல் என்று அவதிப்படுவதால் தினமும் அந்த செடிகளின் இலைகளை சாப்பிடுவார்……  

அதனால் இந்த இரு செடிகளையும் மட்டும் எடுத்து வந்திருந்தனர்…..

இப்போது அதுவுமில்லையா…. ஏக்கத்தோடு அதை பார்த்து நின்றிருக்க….. அப்போதுதான் ஞானவேல் வீட்டிற்கு வெற்றியிடம் சாவியை வாங்கிக் கொண்டு வந்தான்…….

இந்த பெண் செடியை பார்த்துக் கொண்டு எதற்கு இப்படி நிற்கிறது என்று யோசித்துக் கொண்டே கதவை திறந்தான்…… அவன் சாவி திறக்கும் ஓசையில்… கலைந்தவள்….

ஒரு சில நொடிகள் ஞானவேல் நின்று அவளை பார்த்த அந்த க்ஷணத்தில்….. அவனிடம், “இந்த செடி இங்க இருக்கட்டுமா?”, என்றாள்….

ஞானவேலுக்கு ஒன்றும் புரியவில்லை…. அந்த பெண் தன்னிடம் தான் பேசியதா என்று சுற்றும் முற்றும் பார்க்க…..

“உங்ககிட்ட தான் கேட்கறேன், இந்த செடி இங்க இருக்கட்டுமா! உங்க அண்ணா இதை எடுக்க சொல்றாங்க? இது இங்க இருக்கட்டுமா, நீங்க உங்க அண்ணா கிட்ட சொல்றீங்களா?”, என்று கண்களில் மிகுந்த எதிர்பார்ப்போடு இவன் ஏதாவது செய்வானா கீர்த்தனா கேட்கவும்..

ஞானவேலிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது…… வெற்றி தான் பெண்களிடம் அதிகம் பழகாதவன்…. ஞானவேல் அப்படியல்லவே….. பெண்களிடம் சகஜமாக பேசிப் பழகுபவன் தான்….

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஞானவேல் தடுமாறி நிற்கவும்…..

இன்னும் கீர்த்தனா எங்கே காணோம் என்று பார்க்க வந்த சந்தியா…. அவள் ஏதோ ஞானவேலிடம் கேட்டுக் கொண்டு நிற்பதை பார்த்தவள்…..

“என்ன கீர்த்தி?”, என்றாள்…

“அந்த பெரிய அண்ணா திட்டுறாங்கல்ல, அதான் இவங்க கிட்ட செடி இருக்கட்டும்னு கேட்டேன்”, என்றாள் பாவமாக…

ஞானவேலை பார்த்து, “சாரி சார்….. அவ தெரியாம கேட்கறா, அவளுக்கு செடின்னா ரொம்ப இஷ்டம், நாளைக்கு எடுத்துடறோம்”, என்று சொல்லி கீர்த்தனாவின் கையை பிடித்து இழுத்து போக…..

ஞானவேலை பார்த்துக் கொண்டே கீர்த்தனா உள்ளே போக….. அவனுக்கு தான் ஒரு மாதிரியாகிவிட்டது.

அழகான முகம், மனதை ஏதோ செய்தது…. ஏற்கனவே வெற்றி மிகுந்த கோபத்தில் இருக்கிறான் என்று தெரியும்…. அவனிடம் எதுவும் பேச முடியாது.. அண்ணனை பற்றி நன்கு தெரிந்தவன், ஒன்றும் செய்ய இயலாதவனாக உள்ளே சென்றான்.    

மாலை மீனாட்சியம்மா வந்தவுடன் ஞானவேல், “வெற்றி ஏதோ சொல்லியிருப்பான் போலம்மா….”, என்று ஆரம்பித்து அந்த பெண் தன்னிடம் கேட்டது, அதன் அக்கா சொன்னது என்று ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லி விட்டான்.

“உங்கண்ணன் இருக்கானே!”, என்று அவனிடம் நொடிக்க தான் செய்தார் மீனாட்சியம்மா, வேறு எதுவும் செய்யவில்லை…… திரும்ப திரும்ப ஏதாவது சொன்னால் வெற்றிக்கு நிறைய கோபம் வந்துவிடும் என்று அவருக்கும் தெரியும். அதனால் அவரும் வெற்றியிடம் எதுவும் சொல்லவில்லை.

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கெல்லாம் கீர்த்தனாவும் நாராயணனும் கல்லூரி கிளம்பினர்… எப்போதும் பைக்கில் காலேஜ் போகும் தீனா இப்போது நண்பனுக்காகவும் அவனின் தங்கைக்காகவும் அவனும் பஸ்ஸில் போக… பைக்கை கொண்டு  வந்து வெற்றியின் ஷெட்டில் நிறுத்தினான்.

அவனின் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டு வெற்றி இருக்க…. அன்று ஞானவேலும் வெற்றியிடம் மாட்டி இருந்தான்….

“அண்ணா, பய்…”, என்று தீனா சொல்லி இருவரோடும் கிளம்பி விட்டான்…..

அவர்கள் இந்த புறம் கிளம்பியதும்…… சந்தியா செருப்பை போட்டுக் கொண்டு வேறு புறம் சென்றாள்….

வெற்றியின் பார்வை யாரும் அறியா வண்ணம் அந்த வீட்டை பார்வையிட்டு தான் கொண்டிருந்தது..

அவர்கள் கிளம்பியது சந்தியாவும் கிளம்ப…. “இவ எங்க போறா?”, என்று அவன் மனம் கேட்டது……

சிறிது நேரத்திற்கெல்லாம் திரும்ப வந்தாள்……            

அந்த  தொட்டியை பக்கத்தில் இருந்த வேம்புலியம்மன் கோவிலுக்கு அருகில் வைக்க அந்த பூசாரியிடம் கேட்டு வந்திருந்தாள்.

அவளுக்கு அங்கே கோவில் இருப்பதெல்லாம் தெரியவில்லை…… எங்காவது கோவில் இருந்தால் கேட்டுவிட்டு வைத்துவிடலாம் என்று நான்கைந்து தெருக்களை சுற்ற… அங்கே ஒரு கோவில் இருந்தது, பூசாரியும், “சரி”, என்றார்.

இப்போது அதை எப்படி எடுத்துப் போவது….. ஒற்றை ஆளாய் தூக்குவது என்பது சாத்தியமில்லை… பார்வையை ஒட்டியவள், தங்கபாண்டி ஏதோ வேலையாக அங்கே இங்கே போவதும் வருவதுமாக இருக்க…..

“தம்பி. இங்க கொஞ்சம் வந்து இதை பிடிக்கறியா”, என்று கேட்டாள்……

தங்கபாண்டியும் சென்று சந்தியாவும் அவனுமாக ஒரு தொட்டியை பிடித்துக் கொண்டு வெளியே வரவும் வெற்றி பார்த்துவிட….. “டேய்! இங்க வாடா!”, என்று தங்கபாண்டியை அழைத்தான்.

வெற்றி தங்கபாண்டியை அழைத்த விதத்திலேயே இனி அவனை தொட்டியை தூக்க வெற்றி அனுமதிக்க மாட்டான் என்று தெரிந்துவிட….. வேறு எப்படி கொண்டு போகலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள் சந்தியா.

ஞானவேல் இதை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்…. “ஏன் வெற்றி, தங்கபாண்டி ஹெல்ப் பண்ணினா பண்ணிட்டு போறான்… நீதானே அந்த தொட்டி அங்க இருக்க கூடாதுன்னு சொன்ன……”,

“சொன்னன்னா? அதுக்காக நாமளே தூக்கி வைக்கணுமா என்ன…..? இப்போதானே அந்த பையன் காலேஜ் போனான், அவனை வெச்சு தூக்கி வைக்க வேண்டியதுதானே, இல்லை அவங்கப்பா வீட்ல இருக்கார் தானே அவரை வெச்சு தூக்க வேண்டியது”,

“அவங்க சூழ்நிலை என்னவோ நமக்கு எப்படி தெரியும்… அந்த பொண்ணு தொட்டியை தூக்குது தானே”, என்றான். ஞானவேலின் அனுமானம் அந்த சின்ன பெண்ணிற்காக அவள் சென்றவுடன் இந்த பெண் இந்த வேலை செய்கிறாள் என்பது தான்…..

அதை வேறு சொல்லிவைத்தால், “எப்போ இருந்து நீ பொண்ணுங்களை கவனிக்க ஆரம்பிச்ச”, என்று நிச்சயம் வெற்றி கோபப்படுவான்.

ஆனால் சந்தியா அதை பற்றி எல்லாம் கோபப்பட்டதாக தெரியவில்லை….. அந்த பக்கம் சென்ற ஒரு ஆட்டோவை கை காட்டி நிறுத்தியவள்……. “அண்ணா, இதை கொஞ்சம் பிடிக்கறீங்களா”, என்று அவரிடம் உதவி கேட்டு அதை ஆட்டோவில் ஏற்றி கொண்டு போனாள்…..

இது அவளுக்கு அனாவசிய செலவு தான் வேறு வழி……. அந்த ஆட்டோ காரர் ஐம்பது ரூபாய் கேட்க…. அதை கொடுத்து விட்டு வந்தாள்.  ஒவ்வொரு  பைசாவும் எண்ணி எண்ணி செலவு செய்யும் நிலைமை தான்…..

இந்த பணம் இருந்தால் இரண்டு நாள் பால் செலவிற்கு ஆகும், இப்படி தான் போகும் அவளின் எண்ணம்…

அந்த வீட்டின் வரவு செலவு கணக்குகளை பார்ப்பவள் அவள் தான், ஏனென்றால் இப்போதைக்கு அந்த வீட்டில் சம்பாரிப்பவள் அவள் தான்.

அத்தனை பெரிய குடும்பத்தின் வயிற்று பாடு அவளின் கையில்….. குருவி தலையில் பனங்காயை தூக்கி வைத்த கதை தான்……..

அவளின் அப்பாவும் நாராயணனின் அப்பாவும் அண்ணன் தம்பிகள்….. இருவரும் சேர்ந்து தொழில் செய்து வந்தார்கள்…. குடும்பமும் ஒன்றாக தான் இருந்தது. சந்தியாவின் அப்பாவிற்கு சந்தியாவை சேர்ந்து மொத்தம் மூன்று பெண்கள்…. சந்தியா தான் மூத்தவள்…. அதற்கு பின் அகல்யா…. அதற்கு பின் கீர்த்தனா……

நாராயணன் அவளின் சித்தப்பாவிற்கு ஒற்றை மகன் தான்…….

ஆகா ஓகோ என்று வசதியான குடும்பம் கிடையாது…. நடுத்தர குடும்பம்….. இருக்க சொந்த வீடு….. கைக்கும், வாய்க்கும், குழந்தைகளின் படிப்பிற்கும் சரியாக இருக்கும் வருமானம்.  

இதில் தொழிலில் திடீரென்று நஷ்டம் ஏற்பட்டு விட…. சந்தியாவின் அப்பா அதை சமாளிக்க கடன் வாங்கி…… அந்த கடனின் வட்டியை கட்ட மீண்டும் கடன் வாங்கி…. வட்டியை கட்ட வாங்கிய கடனின் வட்டியைகூட கட்ட முடியாமல்……

கடன் கொடுத்தவர்கள் அசலையும் வட்டியையும் கேட்டு தொந்தரவு செய்ய… கடனை கட்ட முடியாமல், ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கேட்க முடியாமல்…… மூன்று பெண்களை எப்படி கரை சேர்ப்பது என்ற வகை தெரியாமல்….. மிகுந்த மனவுளைச்சளுக்கு ஆளாகி, ஒரு கட்டத்திற்கு மேல் குடும்பத்தின் அன்றாடத்தையும் பார்க்க முடியாமல், இந்த கடன் பாரத்தையும் தாங்க முடியாமல்…….

சந்தியாவின் அப்பா தற்கொலை செய்து கொண்டார்……      

அண்ணன் நிழலியே வாழ்ந்துவிட்டவர்…. நாராயணனின் அப்பா…. அண்ணன் இறக்கவும்….. அந்த அதிர்ச்சி ஒரு புறம்… கடன்காரர்களின் தொல்லை அவரை நோக்கி திரும்ப…… அவருக்கு மிகவும் சிவியரான ஒரு ஹார்ட் அட்டாக்…..

ஆபரேஷன் செய்ய பணமில்லை என்பது ஒரு புறம் இருக்க….. ஆபரேஷன் செய்யும் நிலையில் அவரின் உடல் நிலை இல்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர்…..

அவருக்கு எந்த சிரமும் கொடுக்காமல் இருந்தால் மாத்திரை மருந்துகளாலேயே இன்னும் சில வருடங்கள் உயிரோடு இருக்கலாம் என்று சொன்னர்.

இதெல்லாம் நடந்த போது சந்தியா….. அவளுடைய பட்ட மேற்படிப்பின் கடைசி வருடத்தில் இருந்தாள்……. மொத்த குடும்பமும் இந்த நிகழ்வுகளால் நிலை குலைந்து போக…..                    

அப்போது முதலில் தேறி அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தியவள் சந்தியா தான்…. அவர்களிடத்தில் பணம் என்பது இல்லாமல் இருக்க….. இருந்த ஒரே சொத்து தாத்தாவின் பெயரில் இருந்த வீடு…… 

இருக்கும் வீட்டை எப்படி விற்பது, அன்றாட செலவுகளுக்கு என்ன செய்வது, போன மகனை விட்டாலும் உயிரோடு இருக்கும் மகனை எப்படி காப்பாற்றுவது….. என்று வயதான காலத்தில் தாத்தா திணறிய போது ……

“நான் இருக்கிறேன்”, என்று மகனுக்கு மகளாக தைரியம் கொடுத்து…. வீட்டை விற்று…… கடன் கொடுக்க வேண்டியிருந்தவர்களுக்கு…. எல்லா தொகையும் கொடுக்காமல்…. வட்டி இல்லாமல் அசலை மட்டும் கொடுத்து செட்டில் செய்து…. மீதி தொகையை தாத்தா பெயரில் பேங்க்கில் போட்டு… அதில் வரும் வட்டிய வைத்து…. மாலை வேலைகளில் அவள் டியுஷன் எடுத்து…….

தையல் கலை தெரிந்த அவளின் அம்மாவிற்கு ஊக்கமும் தைரியமும் கொடுத்து…. வெளியில் இருந்து துணி வாங்கி அதை தைத்துக் கொடுத்து வருமானம் பார்த்த போது……

தெரிந்த குடும்பம் ஒன்று அவளின் தைரியத்தையும் அழகையும் பார்த்து வியந்து பெண் கேட்டு வர… இவள் எம் எஸ் சி மேத்ஸ் முடித்த அந்த சமையத்தில் அகல்யா பீ எஸ் சி மேத்ஸ் முடித்திருக்க….

நல்ல வரன், நல்ல வேலையில் இருந்தான்….. வீடு வாசல் என்று இருக்க……

எப்படியோ பேசி தன் தாத்தாவை சரி கட்டி, அவரை விட்டு பேசி, அந்த வரனை அகல்யாவிற்கு பார்த்து பேச வைத்தாள்…..

அகல்யாவும் நல்ல அழகி என்பதால் அந்த மாப்பிள்ளை பையனுக்கு பிடித்து விட வேலை சுலபமாக முடிந்தது……

அக்கா இருக்கும் போது தங்கைக்கு திருமணமா என்று சந்தியாவின் மொத்த குடும்பமும் வருத்தப்பட…… அகல்யா முடியவே முடியாது என்று மறுக்க….. அவர்களை எல்லாம் சமாளித்து ஒத்துக் கொள்ள வைத்து….. அகல்யாவுடன் அதிகமாக போராடி அவளை சம்மதிக்க வைத்து….   

ஒரு தந்தையை போல நல்ல வரன் தங்கைக்கு தகைந்ததற்கு சந்தோஷப்பட்டு… 

வீட்டில் பாட்டி போட்டுக் கொண்டிருந்த நகைகளை வாங்கி…. “நான் உனக்கு செஞ்சு தர்றேன் பாட்டி”, என்று சந்தியா சொல்லி அந்த  நகைகளை வைத்து அகல்யாவை திருமணம் செய்து கொடுத்தனர்.

எத்தனை கஷ்டங்கள் வந்த போதும் நாராயணனின் படிப்பை நிறுத்தவில்லை.. அடுத்து கீர்த்தனாவும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தொழிற் கல்வி படிக்க விருப்பப்பட…..

அப்பா இல்லை என்ற குறை கீர்த்தனாவுக்கும் வைக்காமல்…. அவள் விரும்பிய படிப்பில் சேர்த்து விட்டாள்.

உழைப்பு அதிகமாக இருந்தாலும் ஒட்டன் சத்திரத்தில் வருமானம் அதிகமாக இல்லை…… ஹாஸ்டல் ஃபீசும் கட்ட முடியவில்லை….. படிப்பிற்கு எப்படியோ இருவருக்கும் லோன் கிடைத்திருக்க…..

குடும்பத்தை சென்னைக்கு இடம் பெயர்த்து வந்தாள் சந்தியா….. தற்போது சந்தியா எம் எஸ் சீ மேத்ஸ் பட்டதாரி….. படிப்பை முடித்து ஒரு வருடம் ஆகிறது….                            

ஒற்றை பெண்ணாய் எவ்வளவு பார்த்து விட்டாள்…… இதில் பூந்தொட்டிக்கு வெற்றி போடும் சண்டைக்கு அசருவாளா….? இல்லை உதவிக்கு அவள் கூப்பிட்ட வெற்றியிடம் வேலை செய்யும் பையனை அவன் திரும்ப அழைத்துக் கொண்டான் என்பதற்காக …. வருத்தப்படுவாளா? எதுவுமில்லை……..

அவளின் வருத்தம் எல்லாம் ஆட்டோவிற்கு ஐம்பது ரூபாய் செலவு ஆகிவிட்டதே என்பது தான்.

வெற்றிக்கு அந்த பெண் சிறிதும் கவலைப்படாமல்… அடுத்து என்ன என்று பார்த்து போய் கொண்டே இருக்க…. அவளின் மேல் ஒரு துவேஷமே பிறந்தது.

அந்த பையனை அனுப்புங்க என்று அவனிடம் வந்து கேட்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தானா அவனுக்கே தெரியவில்லை…. இல்லை கோபமாக தன்னை பார்த்து முறைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தானா தெரியவில்லை…..

அந்த பெண் தன்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று தோன்றியது…..

அதற்கு தகுந்த மாதிரி ஞானவேலும்… “நம்ம ஆள் அனுப்பலைன்னு இப்போ என்ன செய்யாமையா போச்சு அந்த பொண்ணு, நம்மளே ஆள் குடுத்து இருக்கலாமா?”, என்று சொல்லிவிட்டு செல்ல….  கடுப்பின் உச்சிக்கு போனான்.   

நேற்று காலையில் தான் வந்தாள், இதற்கு அதிகம் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை, யாரோடும் பேசவில்லை…. என்னவோ அந்த பெண்ணிற்காக எல்லோரும் பரிந்து பேசுவது வெற்றிக்கு கோபத்தை கொடுத்தது.

காலையில் உணவு உண்ண சென்ற போது….. மெதுவாக மீனாட்சியம்மா ஆரம்பித்தார்….. “வெற்றி, அந்த சந்தியா பொண்ணு…..”, என்று அவர் சொல்லவும்…..

“யாரு சந்தியா?”,

“அதான்பா நம்ம வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காங்க இல்லை அந்த வீட்ல இருக்குற பெரிய பொண்ணு….”,

“அதுக்கு என்ன….?”,

“ஒண்ணுமில்ல, நம்ம வீட்டு மொட்டை மாடில டியுஷன் எடுக்கட்டுமான்னு கேட்டாங்க”, என்று அம்மா சொன்னது தான் போதும்…….

டேன்ஸ் ஆடி விட்டான் வெற்றி…. “ஏம்மா? ஏம்மா? எனக்கு தான் அவங்களை பிடிக்கலைன்னு தெரியுது….. சரி முதல்லயே தெரியாம சொல்லிட்டோம், வாடகைக்கு விட்டுட்டோம்….. இப்போ இதெல்லாம் வேற என்ன புதுசா?”, என்று கத்த….

நேற்று ராஜம் வந்து மீனாட்சியம்மாவை பார்த்த போதே ஒன்றுவிடாமல், ஏன் தன் கணவர் தற்கொலை செய்து கொண்டதைக் கூட கூறி விட்டிருந்தார்…. அவருடைய மகனுக்கு பிடிக்காமல்…..மீனட்சியம்மாவின் கட்டாயத்திற்கு மகன் வீடு விட்டதை புரிந்து கொண்டவர்……

உள்ளதை உள்ள படி அவரிடம் கூறி விட்டார்…… ராஜம் குடும்ப சூழ்நிலையை சொல்ல…… மீனாட்சியம்மாவிற்கு சந்தியாவை அவ்வளவு பிடித்து விட்டது…..

அதுவும் தனக்கு வந்த நல்ல வசதியான வரனை…… தங்கைக்கு மணமுடித்து…. இந்த குடும்ப பாரத்தை சுமப்பது…… அவளின் மேல் அப்படி ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தது மீனாட்ச்சிக்கு…

இப்போது வெற்றி கத்தவும்…. “ஏண்டா? உனக்கு சிநேகித பசங்க யாராவது கேட்ட நீ உதவி செய்ய மாட்டியா? அப்படி தான் தீனா செய்யறான், நான் செய்யறேன்!”, என்றார்.

“அவனுக்கு சிநேகிதம், உனக்கு என்ன?”,

“எனக்கும் சிநேகிதம் தான்!”,

“உனக்கு யாரு சிநேகிதம்?”, என்று வெற்றி நக்கலாக கேட்க…..

“அந்த சந்தியா பொண்ணு தான்….. சினிமா ஸ்டாரு கணக்கா எம்புட்டு அழகா இருக்கு!”, என்று மறுபடியும் ஆரம்பிக்க…..

“அந்த பொண்ணு உனக்கு சிநேகிதமா!”,

“ஆமாம் டா! என்னோட ஃபிரண்டு தான்! அதுக்கு என்ன உதவின்னாலும் நான் செய்வேன்…. எனக்காக நீ எதையும் கண்டுக்க கூடாது…… எனக்காக நீ இதை கூட செய்ய மாட்டியா!”, என்று அதட்டாமல் உருக்கமாக பேச…..

அம்மாவின் நடிப்பை பார்த்து ஞானவேலுக்கு அப்படி சிரிப்பு…..

வெற்றி அந்த புறம் நகர்ந்ததும், “ஆத்தா! நீ பாசாயிட்ட!”, என்றான் கிண்டலாக ஞானவேல்.

“உஷ்! சத்தம் போடாதடா! திரும்ப வந்துடப்போறான்!”, என்றார் சீரியசாக.

“ஆமா! உனக்கு ஏன் அந்த பொண்ணு மேல இவ்வளவு கரிசனம்!”, என்று ஞானவேல் கேட்க….

நேற்று அந்த பெண்ணை பற்றி கேள்விப்பட்டதில் இருந்து அவள் மேல் ஒரு பிரமிப்பில் இருந்தவர்…… சின்ன மகனிடம் அந்த குடும்பத்தை பற்றி எல்லாவற்றையும் கூறினார்….                                   

 “தைரியமான பொண்ணு, குடும்பத்துக்காக உழைக்குது…. கஷ்டத்தை கஷ்டமா பார்க்காம எப்படி சிரிச்ச முகத்தோட இருக்குது….. நம்ம என்ன பண்றோம், ஒரு உதவி தானே!”, என்றார்.

ஞானவேலுக்குமே சந்தியா மேல் மரியாதை தோன்ற, “நிஜம் தான்மா…. இந்த மாதிரி எனக்கென்னன்னு வசதியான மாப்பிள்ளை வந்தவுடனே கல்யாணம் பண்ணிக்கிட்டு போகமா……… குடும்பத்தை பார்த்துக்குது, தம்பி தங்கச்சியை படிக்க வைக்குது…. என்னை விட சின்ன பொண்ணா தான் இருக்கும், பெரிய வேலை செய்யுது… நம்மாள ஆனா உதவியை செயய்யணுமா”, என்றான்.

நினைத்தபடியே மீனாட்சியம்மாவும் ஞானவேலும் வெற்றிக்கு தெரியாமல் அவனுடைய கவனத்தை கவராமல்….. உதவிகள் செய்ய முற்பட்டனர்…..

இங்கு பெண்களுக்கு துணி தைத்து கொடுக்கப்படும் என்று ஒரு போர்டும்…. இங்கு டியுஷன் எடுக்கப்படும் என்ற போர்டும்……. சந்தியா மாட்டும் போது……

தன் முதுகை ஏதோ துளைப்பது போல தோன்ற…… திரும்பி பார்த்தால் எதிரில் இருந்த வெல்டிங் பட்டறையில் இருந்து வெற்றி முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்…..

எல்லாவற்றையும் மிகவும் ஈசியாக எடுத்துக் கொள்ளும், பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளும் சந்தியாவிற்கு கூட அந்த பார்வையில் குளிர் பிறந்தது.

Advertisement