Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று:

சந்தியா நன்கு உறங்கியிருக்க……   அவளை சிறிது நேரம் மடி தாங்கியவன் மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது உற்சாகமாகவும் இருந்தது.

“இவளுக்கு என்னை பிடித்திருந்ததா…”, பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் அப்படியே முகம் பார்த்தான்….. “பாருடா உன்னை கூட இவ்வளவு அழகான பொண்ணுக்கு பிடிச்சிருக்கு……”, என்று ஒரு மகிழ்ச்சியோடு பார்த்திருந்தான்.

தனக்குள் சந்தியாவை பார்க்கும் பார்வையின் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.

தோழியாக பார்த்த பெண்ணை மனைவியாக பார்க்க அவன் கொஞ்சம் சிரமப்படத் தான் வேண்டியிருந்தது.

தானாக அந்த மாற்றம் நிகழும், ஆனால் உடனே அது மிகவும் அவசியம், இல்லையென்றால் இவள் அதையும் இதையும் நினைத்து உள்ளுக்குள் மருகுவாள் என்றே தோன்றியது. வெற்றி என்றுமே சந்தியாவை வேறு பார்வை பார்த்தது இல்லை.

தாலி என்ற ஒரு அடையாளத்தை கொடுத்து பெண்களுக்கு அவர்களின் திருமணத்தை எப்போதும் அவர்களின் நெஞ்சின் மீது சுமையாய் நமது சமுதாயம் இருக்க வைத்து விட்டது.

அது சுகமான சுமையா இல்லை…..  இல்லை சுமக்க முடியாத தளையா துணைகளாக வருபவர்களால் மட்டுமே நிச்சயிக்கப்படும்.    

எதுவாகினும் அவர்களின் ஞாபகங்கள் எப்போதும் நெஞ்சினில் உண்டு.

நெஞ்சினில் மட்டுமா? தலை முதல் கால் வரை திருமணத்தின் அடையாளங்கள். நெற்றி வகிட்டில் குங்குமம், காலில் மெட்டி. ஆண்களுக்கு மேலே வானம் கீழே பூமி… பெண்களுக்கு மேலே குங்குமம் கீழே மெட்டி….  

ஆண்களுக்கு அப்படி எந்த அடையாள மாற்றங்களும் இல்லையே….. அவனுக்காக வந்தால் தான் உண்டு.

முன்தினம் மாலை முதல் தான் தனக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சித்தான்….. அதுவும் சினிமாவில் இருந்து வரும்போது சரியாக வரத் தொடங்கியது தான்.

அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது என்று தெரியும் முன்பே தன்னுள் மாற்றத்தை விதைத்து விட்டான்…..

இப்போது இன்னும் சில மாற்றங்கள் அவனுள். சந்தியா அவனிடம் ஐ லவ் யூ சொல்லியிருக்கிறாளா…. முகம் புன்னகையை பூசியது.

பின்பு மெதுவாக சந்தியாவின் தலையை எடுத்து தலையணையில் வைத்தவன்…… இறங்கி கதவை திறந்து வெளியில் வந்தான்.

ஹாலில் இருந்த மீனாட்சி, “எப்படிடா இருக்கா”, என்று கேட்கவும்…..   

“பரவாயில்லை மா”, என்றவன் பிறகு வேலையை பார்க்க சென்றான். அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டான்…. உறக்கத்தில் தான் இருந்தாள்.

சிறிது நேரத்தில் சந்தியாவின் வீட்டில் இருந்து வேறு எல்லோரும் சந்தியாவை பார்க்க வந்துவிட….. சந்தியாவும் விழித்துவிட…. 

அன்றைய பொழுது ஓடியது……  இரவு அவளை மேலே விட்டு கீழே தான் உறங்கினான்… 

“நாம ஒரு நாள் மாத்தி மாத்தி தூங்கலாம்னு சொன்னோமே”, என்றாள்.

“அதெல்லாம் உனக்கு உடம்பு சரியாகட்டும். அப்புறம் நீ எவ்வளவு நாள் தூங்கினியோ அவ்வளவு நாள் நான் தூங்கறேன்”, என்று டீல் பேசவும்,  

பிறகே மேலே உறங்கினாள். அப்போதும் உறங்குவதற்கு முன்பு திரும்பவும் கேட்டாள், “நான் உங்க கிட்ட ஏதாவது சொன்னேனா”,

“எப்போ, எதை பத்தி”, என்றான் ஒன்றும் தெரியாது போல…..

“அது நான்…..”, என்று திணறினாள்… “உங்க மடில படுத்திருந்த போது”, என்று சொல்ல முடியாமல் முகம் சிவந்து விட….. அப்போதும் அவளுக்கு அவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியாமல்….. “ஒன்னுமில்லை”, என்று விட்டுவிட்டாள்.   

இரண்டு நாட்கள் மிகவும் சோர்வாக இருந்தவள் பின்பு தேறிக் கொண்டாள்.

வெற்றியின் பார்வையில் நிறைய மாற்றங்கள்… எப்போதும் ஒரு ரசனையான பார்வையை அவளிடம் செலுத்த துவங்கியிருந்தான்.

ஆனால் அவள் பேசியது எதுவும் தனக்கு தெரிந்தது போல வெற்றி காட்டிக் கொள்ளவேயில்லை.

சகஜமாக பேசத் துவங்கியிருந்தான். அதிகம் பேசுவது அவன் இயல்பு அல்ல, அதனால் பேச்சுக்கள் குறைவு தான்….. ஆனால் அதுவே சந்தியாவின் காய்ச்சலை வெகுவாக குறைத்திருந்தது. முகத்தில் சற்று தெளிவும் உற்சாகமும் பிறந்தது.   

அந்த வீட்டின் சூழலுக்கு அவள் பழக முற்பட…… வெற்றி தெளிவாக அவளிடம் வார்த்தையாலேயே சொன்னான்….. “நீ உன் பழக்க வழக்கத்தை எங்களுக்காக மாத்தாத….. நீ சொல்லிகுடு, நாங்க மாறிக்கிறோம்”.

“எங்க யாருக்குமே அது ஒரு பெரிய விஷயம் கிடையாது”, என்று விட்டான்.

“சமையல் மட்டும் மாத்திடாத. எனக்கு அசைவம் இல்லாம சாப்பாடு இறங்காது… அதுவும் ஒரு வாரத்துக்கு அம்மா செய்யக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க, அதுக்கப்புறம் தான்”, என்றுவிட்டான்.

யாரையும் நம்பி செய்யாத ஒரு செயலை, ஒரு பொறுப்பை சந்தியாவிற்கு கொடுத்தான். அவனுடைய பண வரவு செலவு கணக்குகள்.

மீனாட்சியிடம் ஞானவேலிடம் கூட கொடுத்ததில்லை. பணம் அவர்கள் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பான். ஆனால் அவனிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்று அவர்களுக்கு கூட தெரியாது… சொல்லக் கூடாது என்றில்லை, ஆனால் சொல்லிப் பழக்கமில்லை. 

“இதெல்லாம் என்ன ஏதுன்னு சரி பாரு, அங்கங்க துண்டு துண்டா கிடைச்ச கேப்ல எழுதியிருப்பேன். எல்லாத்தையும் சரி பார்த்து எழுது”, என்று சந்தியாவிற்கு வேலை கொடுத்தான்.

சந்தியா திணறி தான் போனாள். வெற்றிக்கு தவறில்லாமல் எழுதுவது மிகவும் சிரமம், எல்லாம் மனக் கணக்கு தான். வெற்றிக்கு படிக்க மட்டுமே நன்றாக வரும்.

ஒன்றும் புரியவில்லை…. அந்த வேலைகளில் இருந்ததால் நேரம் போவதே தெரியவில்லை… அது சம்மந்தமாக வெற்றியோடு பேச பிடிக்க என்று நன்றாக பேசத் துவங்கியிருந்தாள்.

படிப்பு வெற்றியின் மிகப் பெரிய பலவீனம் என்று புரிந்தது. யாரிடமும் அதை காட்ட பிரியப்படாதவன், சந்தியாவிடம் அதைக் காட்ட அவனுக்கு எந்த தயக்கமுமில்லை. எதுவும் தன்னை பற்றி சந்தியாவிடம் அவன் மறைக்க முயலவில்லை, அது நிறைகளோ குறைகளோ.   

உண்மையில் அவன் சொன்னாலன்றி அவன் கணக்குகள் புரியவேயில்லை. 

“அம்மாக்கு வீடெல்லாம் அவ்வளவு அழகு படுத்த தெரியாது, நீ கொஞ்சம் மாத்தி வையேன்”, என்றான் சந்தியாவிடம்.

வந்த நாளாக அவள் நினைத்தது தானே! உற்சாகமாக, “சரி”, என்று தலையாட்டினாள். அந்த மாற்றத்தை செய்யவும் செய்தாள்.

மீனாட்சி கூட வெற்றியை திட்டினார், “ஏண்டா அதுவே காய்ச்சல் வந்த பொண்ணு, அதுக்கு ஏண்டா இவ்வளவு வேலை குடுக்குற”, என்று.

வெற்றி சந்தியா வேறு எதையும் யோசிக்கக் கூடாது என்பதற்காக தான் அவ்வளவு வேலை கொடுத்தான்.

மொத்தத்தில் மிகவும் பிசியாக இருந்தாள்….. எதை பற்றியும் அவளுக்கு எண்ண நேரமேயில்லை. அந்த வீட்டிற்கு அவள் திருமணமாகி வந்து ஐந்து நாட்கள் தான் ஆகின்றது என்று சொன்னால் அவளே நம்பவே மாட்டாள்.

வெற்றி காய்ச்சல் வந்த உடம்பு என்று கூட பார்க்கவில்லை, வேலை கொடுத்துக் கொண்டே இருந்தான்.

அவளை எதையும் யோசிக்க விடவில்லை……….. இதனிடையில் பிறந்த நாள் வர…. மீனாட்சி அவளுக்கு வாங்கியிருந்த அத்தனை உடைகளையும் பரிசளித்தார்.

“டிரஸ் எல்லாம் தினம் ஒன்னா போடணும்…. அப்படியே வைக்கக் கூடாது”, என்ற அன்புக் கட்டளையோடு…

கூடவே அவளுக்கு தினம் போடுவதற்கு ஏதுவாக ஒரு தங்க சங்கிலியும் பரிசளித்தார்.  டிரஸ் கொடுத்ததும் வாங்கிக் கொண்டாள். நகை என்றதும் தயங்க…… “வாங்கு சந்தியா”, என்று வெற்றி சொன்ன பிறகே வாங்கினாள்.  

ஞானவேல் கூட சந்தியாவிற்கு  இரு வளையல்களை பரிசளித்தான்… சந்தியா வெற்றியின் முகம் பார்க்க, “வாங்கிக் கொள்”, என்ற அவனின் தலையாட்டலுக்கு பிறகே வாங்கினாள்.

அவள் ஒரு மெல்லிய சங்கிலி மட்டும் கழுத்தில் போட்டிருந்ததால் மீனாட்சியும் ஞானவேலும் அவர்களுக்குள் பேசி வைத்து வாங்கி பரிசளித்தனர்.                          

வாங்கிக் கொண்டாள், ஆனால் போடவில்லை… உண்மையாக அவளுக்கு பிடிக்கவில்லை.

சந்தியாவின் முகத்தை பார்த்தே அதை அவள் எப்போதும் உபயோகிக்க பிரியப்பட மாட்டாள் என்று தெரிந்து கொண்டான்.

பணம் குறித்த தாழ்வு மனப்பான்மை சந்தியாவிடம் இருக்கிறது என்பது அவனுக்கு நிச்சயம்.

இப்போதெல்லாம் வெற்றி அவளை அறியத் துவங்கி இருந்தான். அதனாலேயே மாலை அவளை நகை கடைக்கு அழைத்துச் சென்றவன்…   

“நீ குடுத்த பணம்”, என்று அவளிடம் என்பதாயிரத்தை நீட்டியவன்…… “நகை வாங்கிக்கோ”, என்றான்.

“இல்லை, அது பாட்டிக்கு குடுத்துட்டேன்…..”, என்றாள்.

“உங்க பாட்டிக்கு நாம குடுத்ததை அவங்க இருக்குற வரைக்கும் உபயோகப்படுத்திட்டு அதுக்கப்புறம் உனக்கு தான் குடுப்பாங்க. உங்க தாத்தா என்கிட்டே தெளிவா சொல்லிட்டார்…. அது நமக்கு திரும்ப வரப்போறது, அதை இதுல நீ கொண்டு வராத….”, என்றான்.

வெற்றிக்கு செலவு வைத்து விட்டோமே என்று மருகிக் கொண்டிருந்தவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது….

வெற்றியைப் பார்த்து புன்னகைத்தாள், “தேங்க்ஸ்”, என்று சொல்லி…..

“அய்யய்யோ, தேங்க்ஸா….. நான் உனக்கு சொல்லவேயில்லையே”, என்றான் சீரியசாக……  

“எதுக்கு”, என்று புரியாமல் சந்தியா கேட்கவும்….

 “நீ காலையில டீ குடுத்ததுக்கு தேங்க்ஸ், அப்புறம் டிஃபன் செஞ்சு குடுத்ததுக்கு தேங்க்ஸ், அப்புறம்… நான் சொல்றது இன்னைக்கு மட்டும் பழசும் சொல்வேன்……”, என்று அவன் வரிசையாக அடுக்கப் போக….. 

“அதுக்கெல்லாம் யாராவது தேங்க்ஸ சொல்வாங்களா? அதெல்லாம் ஒரு மனைவியோட கடமை……”, என்று சந்தியா முறைக்க….

“அப்படிங்களா டீச்சரம்மா! அப்போ செலவு செய்யறது கணவனோட கடமை!”, என்றான்.   

“நான் எதுவும் பேச மாட்டேன்”, என்பது போல சந்தியா வாயில் கைவைத்துக் காட்ட……

“அது! இனிமே தேங்க்ஸ் சொல்லிப் பாரு…..  டேப்ல என் குரலை தேங்க்ஸ் தேங்க்ஸ்ன்னு ரிகார்ட் பண்ணி, உன் காதுக்குள்ள சுத்த விடறேன்…”,

“அம்மா! இது பெரிய பனிஷ்மென்ட்……. இப்போலயிருந்து நான் உங்க கூட இருக்கும் போது வாயே திறக்கமாட்டேன்..”,     

‘அந்த பயம் இருக்கணும்….”, என்றவன்….. “இந்த பணத்துல நீ வாங்கிக்கோ”, என்றான்.

அப்போதும், “இல்லை, இருக்கட்டும், அவங்க குடுத்ததுக்கு அப்புறம் வாங்கலாம்”, என்று அவள் சொல்ல…

“அப்போ உன் பாட்டி இருக்குறவரைக்கும் நகை போட மாட்டியா”, என்றான்.

சந்தியாவின் முகத்தில் மிகவும் அதிகப்படியான குழப்பங்கள்,

“ரொம்ப யோசிக்காத! நமக்கு கல்யாணமாகிடுச்சு! நீ என் மனைவி! அதை ஞாபகம் வெச்சிக்கோ… யார் குடுக்கறதும் வாங்க உனக்கு பிடிக்கறதில்லை… அதான் இந்த பணத்தை கொடுத்தேன்…”,

“அம்மாவும் ஞானவேலும் குடுத்திருக்காங்க, போடலைன்னா அவங்க மனசு வருத்தப்படும்….. தினம் நீ அதை உபயோகிக்க இஷ்டப்பட மாட்ட”,

“நீ அதை தனியா போட வேண்டாம்! அதான் இதுல நகை வாங்கி போட்டுக்கோ! அப்புறம் அதை எப்போவாவது போட்டு கழட்டி வச்சிடலாம்”,  என்று நீள விளக்கம் கொடுக்க……

“நீங்க வாங்கிக் குடுத்தா நான் போடமாட்டேன்னு எப்போ சொன்னேன்”, என்றாள்.

வெற்றிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை….. ஒரு நிமிடம் அப்படியே நின்று பிறகு பெரிதாக புன்னகைத்தான், “அப்போ நான் வாங்கிக் குடுக்கட்டுமா…..”,

“அப்போ இன்னும் கூட வாங்கிக் குடுக்கற ஐடியா இல்லையா உங்களுக்கு….”, என்று சந்தியாவும் புன்னகைக்க…..

மலர்ச்சியோடு சிரித்தவன், “சொல்லிட்டல்ல, இப்போ பாரு!”, என்றவன், “என்ன என்ன வேணும் லிஸ்ட் குடு”,

“இப்போதைக்கு செயின் வளையல் போதும். அப்புறம் வாங்கலாம். எனக்கு அப்புறம் ரொம்ப செலவு வைக்கறனோன்னு தோணும், ப்ளீஸ்”.

சந்தியாவை யோசனையாக பார்த்தவன், பிறகு “உன்னிஷ்டம்”, என்றான் பெருமூச்சோடு……

விரைவாக செலக்ட் செய்து வெளியே வந்தனர்…. “சும்மா ஒரு ரைட் போகலாமா பைக்ல”, என்றான் வெற்றி, அவளிடம் சில விஷயங்கள் பேசவேண்டி.  

“அஹான், வேண்டாம்! வேண்டாம்…..!”, என்றாள் அவசரமாக.

“ஏன்?”.

“திரும்ப காய்ச்சல் வந்துடுச்சுன்னா, கொஞ்ச நாள் போகட்டும்”,

வெற்றி அதை மறந்திருந்தான்…… “ப்ச்! சாரி மறந்துட்டேன்!”, என்றான்.

பக்கத்துல, “பீச் போகலாம்”, என்று அவளை அழைத்துக் கொண்டு அங்கு அமர்ந்தான்……     

“இந்த பீச்ல ஆளுங்களையே காணோம்!”,

“அதோ அங்க இருக்காங்க!”,

“எங்க?”, என்று அவள் பார்க்க, எங்கோ தூரமாக ஒன்றிரண்டு பேர் இருந்தனர். அவர்களும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

சந்தியா எங்கெங்கு ஆட்கள் என்று வேடிக்கை பார்க்க துவங்க….

“கடலை பார்ப்பியா! அதை விட்டுட்டு வேற என்ன வேடிக்கை?”,

“ஏன்? பார்த்தா என்ன?”,

“என்னவா……. அவனவன் ஜல்சா பண்ணிகினு, அஜால் குஜாலா  இருப்பான், நீ அதை போய் கண்டுக்குவியா”, என்றான் வேண்டுமென்றே….. சொல்லப் போனால் அங்கே யாருமற்ற தனிமை தான்.

தூரத் தள்ளி இருந்தவள், பயத்தோடு சற்று அருகில் வந்து அமர்ந்து, அவன் பேச்சிற்கு முகத்தை சுளித்தாள்.

“சொன்னா புரிஞ்சிக்கணும்! அதை விட்டிட்டு முகத்தை சுளிச்சா?”,

வெற்றியை முறைத்தாள்…..

“கொஞ்ச நாளா உன் லுக் எல்லாம் சூப்பரா இருக்கு….. இப்படி நீ பார்த்தா அழகா இருக்குன்னு நான் எப்பவாவது சொன்னனா என்ன?”,

“ஷ்! பா! முடியலை!”, என்றவள்….. “நாம போகலாம்!”, என்று சட்டென்று எழ….

“இரு! உட்காரு!”, என்று கை பிடித்து வெற்றி இழுக்க…. அவன் மேலேயே பூக்குவியலாய் விழுந்தாள்.

வெற்றி பெரிதாக சிரிக்க….  அவனை விட்டு அவசரமாக விலகியவள், “வண்டில இருந்து தள்ள நினைச்சு முடியாம, இப்போ உங்க மேல தள்ளி விட்டுக்கிட்டீங்க”, என்று மீண்டும் முறைக்கவும்…..

“அப்படியா, என் மேல விழுந்த தான, எங்க அடிபட்டிருக்குன்னு பார்க்கலாம்”,

சந்தியா அவசரமாக அவளை பார்த்துக் கொள்ள… “நான் உனக்கு சொல்லலை, எனக்கு சொன்னேன்”, என்று வெற்றி சொல்லவும்….

“இது ரொம்ப ஓவர்”, என்று முறைக்க முயன்று முடியாமல், புன்னகையுடன் சொல்லவும்….

“என்ன ஓவர்? மேல விழுந்தும் எந்த பார்ட்சும் டச் ஆகலை….. என்னவோ தலைகானிக்கு உறை மாட்டுன மாதிரி…. கழுத்துல இருந்து கால் வரைக்கும் இந்த சுரிதார் போட்டு ஃபுல்லா கவர் பண்ணிக்கோ….”, என்று குறைபடுவது போல அவளை நக்கல் அடித்தான்.

முகம் சிவந்தாலும், “பின்ன என்ன போடுவாங்க……”,

“ம்ம்….. இந்த புடவைன்னு ஒன்னு இருக்கே ,அதை கட்டணும்! அது தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப அழகு”,  என்றான் பார்வையில் அவளின் அழகு முகத்தை மிகவும் ரசித்தபடி….

இந்த வெற்றியின் பார்வை சந்தியாவிற்கு புதிது, அமைதியாக அமர்ந்து கொண்டாள்.   

சில மணித்துளிகள் பேச்சில்லா மௌனம்…… கடல் அலைகளின் சத்தம் மட்டுமே……

மனதினில் இனிமையான பாடல் வரிகள்…….

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

நீ என்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்

நீதந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணே என்றென்றும்

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

சந்தியாவிற்கு சில விஷயங்களை புரிய வைக்க நினைத்த வெற்றி, 

“ஆமா! எதுக்கு உனக்கு காய்ச்சல் வந்தது…. ஏதாவது டென்ஷனா இருக்கியா? ஏதாவது மனசுல சஞ்சலமா?”,

“எனக்கா? இல்லையே, காய்ச்சல் இதெல்லாம் இருந்தா வரும்….. உடம்பு சரியில்லைன்னா தான் வரும்…. எங்கம்மாவும் அப்படித்தான் கேட்டாங்க, நீங்களும் அப்படித்தானே கேட்கறீங்க…..”, என்று அவள் செல்லமாய் குறைபட்டாள்.

சந்தியாவின் குரல் அவளையும் மீறி செல்லம் கொஞ்சியது. அந்த குரலே சந்தியாவின் காதலை நன்கு காட்டியது. 

அதை அனுபவித்தபடி… “மனசு சரியில்லாம சில சமயம் வரும், அந்த மாதிரி எதுக்கும் குழம்ப வேண்டாம் சரியா”, என்றான் வெற்றி சிறு குழந்தைக்கு சொல்வது போல….

“நான் நிறைய கஷ்டப்பட்டேன் சந்தியா ஆரம்பத்துல…. இப்போ கஷ்டம்னு ஏதும் கிடையாது, ஆனாலும் நான் கடுமையா உழைக்கிறேன்…. அப்போ என்னோட மனைவி நீ……. சந்தோஷமா இருக்க வேண்டாமா. வாழ்க்கையை அனுபவிச்சு வாழணும்….. அப்போ தான் நான் இந்த மாதிரி உழைக்கறதுக்கு எனக்கு ஒரு சந்தோசம் இருக்கும்…..”,

“நீ சந்தோஷமா இல்லாத போது, நான் எதுக்கு இப்படி உழைக்கணும் யாருக்காகன்னு தோணும் இல்லையா…..”,   

“பழசுல நீ சிரமப்பட்டது எல்லாம் மறந்துடு… உன்னோட சந்தோஷமான நாட்களை நினைச்சிக்கோ…. உன்னை என்னோட தோழியா பார்த்த போதே எனக்கு நீ காலையில இருந்து ராத்திரி வரைக்கும் இடைவிடாம வேலை செஞ்ச போது மனசுக்கு கஷ்டமா இருக்கும்”,

“இப்போ நீ என் மனைவி….. எந்த வகையிலும் எதுக்காகவும் நீ கஷ்டப்படறதை நான் விரும்ப மாட்டேன்….. நீ உன் இஷ்டம் போல இருக்கலாம், செலவு செய்யலாம்…..”,

“பணக் கணக்கு பார்க்காத…… செலவு வெக்கறனோன்ற எண்ணத்தை மனசுக்குள்ள கொண்டு வராத…… பணத்தை எப்பவும் நமக்குள்ள கொண்டு வராத…..”,

“நான் என்ன வேணும்னாலும் கேட்கறேன் தானே! பாட்டிக்கு கூட உங்ககிட்ட தானே கேட்டேன்….”, என்றாள் உரிமையாக,

“கேட்ட……. ஆனா கேட்டதுக்கு அப்புறம் காய்ச்சல் வர்ற அளவுக்கு மனசை சரியா தப்பான்னு போட்டு குழப்பிக்கிறியே”,

“எனக்கு அதுக்கு ஒன்னும் காய்ச்சல் வரலை!”, என்றாள் முகத்தை தூக்கி வைத்து… 

“பின்ன எதுக்கு வந்தது….”,

“அது எனக்கு தெரியாது”, என்றாள் இன்னும் முறுக்கியபடி, முகத்தை வேறு புறம் திருப்பியபடி…..

“என்னை பாரு!”, என்று வெற்றி அதட்டல் போடவும்,

“என்ன?”, என்றபடி திரும்பினாள்,

“என்னவா வேணா இருந்துட்டு போகுது! நீ செலவு செய்யாத போது நான் சம்பாரிக்கறதுக்கு அர்த்தமே இல்லை……  புரிஞ்சதா! சந்தோஷமா இரு! வாழ்க்கையை அனுபவிச்சு வாழு!”, என்றான்.

“ஓகே! கே கே! இன்னைக்கு இது போதும்! நாளைக்கு கொஞ்சம் மிச்சம் வைங்க!”, என்றாள்.

“என்ன கே கே?”, என்று அவன் புன்னகையோடு கேட்கவும்…..

“வேண்டாம்!  மனசு வருத்தப்படுவீங்க! ஏன்னா கே கே ல நிறைய பிரமோஷன்ஸ் வாங்கறது நீங்க தான்!”, என்றாள் கிண்டலாக.

“இன்னும் நாங்கள்லாம் வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர் தான்! அது என்ன கே கே? சொல்லு! சொல்லு!”, என்று ஆர்வமாக வெற்றி கேட்க….

“அதெல்லாம் சொல்ல முடியாது…..”,

“சொல்லாம நான் விட மாட்டேன்”,

“நான் சொல்ல மாட்டேன்”,

“நான் விட மாட்டேன்”

“ஐ! இது நல்லா இருக்கே! என்ன பண்ணுவீங்க?”, என்று வெற்றி அனுமானிக்காத போது விரைவாக எழுந்து தூர நின்று கொள்ள….

“இரு, உன்னை…….”, என்று வெற்றி அவளை பிடிக்க வர சந்தியா ஓட ஆரம்பித்தாள்.

வெற்றி சில நொடிகளில் அவளை பிடித்து விட்டான்….. அவள் விடுபட திமிரவும், அப்படியே அவளின் இடுப்பை வளைத்து பிடித்து தூக்கிக் கொள்ள…..

“விடுங்க”, என்று திமிரவும்,

“சொல்லாம விட மாட்டேன்…..”,  

“விடுங்க! யாரவது பார்க்க போறாங்க”,  

“அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க”, என்று அவளை தூக்கியபடியே நின்றான்.

“இப்போ என்ன சொல்லணும்?”,

“கே கே ன்னா என்ன?”, என்றபடி அவளின் இடுப்பை பற்றியிருந்த பிடி இறுக….

அவனின் கைகளை பற்றி இழுத்து, இறுக்கத்தை குறைக்க பார்த்து முடியாமல், “கடமை கண்ணாயிரம்”, என்றாள் சிணுங்கியபடி……   

“ஹா,  ஹா”,  என்று வாய்விட்டு சிரித்தவன், “அப்புறம் சொல்லு!”,

“கரிமேட்டுக் கருவாயன்…..”,

“ஏய், இரு இரு, இந்த கருவாயன் என்ன செய்வான்னு காட்டுறேன்”, என்று இன்னும் பெரிதாக சிரித்தவன்…..  “அப்புறம்”, என்றான்

“இப்போ, கருத்து கந்தசாமி…….”, எனவும் அவன் சிரிக்க…

சந்தியா திமிற….. வெற்றி பெரும் சிரிப்பில் இருந்ததால் பேலன்ஸ் தவறி  இருவரும் மணலில் அப்படியே அமர்ந்த வாக்கில் விழுந்து….. உருண்டார்கள். அப்போதும் அவன் சந்தியாவின் மீது இருந்த பிடியை தளர்த்தாததால்…..  

இருவரும் இருந்த நிலை….  நிலவு வெட்கப்பட்டு மேகத்தின் பின் மறைய…… 

“விடுங்க”, என்று பதட்டமாக சந்தியா அதிகமாக திமிரவும்….. பிடியை தளர்த்தினான்.

சந்தியா விரைவாக எழுந்து அமர….  வெற்றி அப்போதும் படுத்தப் படியே.. “எதுக்கு இவ்வளவு திமிறல், உன்னையா பிடிச்சேன், உன் டிரெஸ்ஸை தான் பிடிச்சேன்”, என்றான்.

இருவருக்குமே காரணமில்லாமல் ஒரு சிரிப்பு…..

மனம் முழுவதும் சந்தோஷத்தோடு சந்தியா கால்களை கட்டியபடி ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தப்படி அமர்ந்திருக்க…. அவளைப் பார்த்துப் படுத்தபடி வெற்றி.

 

 

 

தென்றல் வந்து என்னை தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு இரவே பாய் கொடு

நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு

 

தூரல் போடும் இந்நேரம்

தோளில் சாய்ந்தால் போதும்

சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு

நனைந்த பிறகு நாணம் எதற்கு                                                                     மார்பில் சாயும் நேரம்
 

அதற்குள் சந்தியாவிற்கு, அவளின் அம்மா போன், “சந்தியா வீட்டுக்கு வந்துட்டியா”, என்று…..

“வந்துட்டே இருக்கோம்மா”, என்று அவள் சொல்லும் போதே,

வெற்றிக்கு மீனாட்சியின் போன், “டேய்! காய்ச்சல் வந்த உடம்பு அவளுக்கு, எங்கடா இருக்கீங்க, ரொம்ப நேரமா காணோம்”, என்று,

“கிளம்பிட்டோம் மா!”, என்று வெற்றி எழுந்து சந்தியாவிற்கு கை கொடுக்க அதைப் பற்றியபடி எழுந்தாள்.

பற்றிய கைகளை இருவரும் பைக் வரும்வரை விடவில்லை.

பைக்கில் இருபுறமும் கால் போட்டு அவளாக வெற்றியின் தோள் பற்றி அமர்ந்துக் கொள்ள…. பைக் வேகமெடுத்தது.

 

தேகமெங்கும் மின்சாரம்

பாய்ந்ததேனோ அன்பே

மோகம் வந்து என் மார்பில்

வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்

இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்

சாரம் ஊரும் நேரம்

 

தென்றல் வந்து என்னை தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

 

              

Advertisement