Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு:

ஒரு வழியாக வீடு வந்து சேர்வதற்குள் சந்தியா வெற்றியை இடிக்காமல் உட்கார மிகுந்த பிரயர்தனப் பட வேண்டியிருந்தது. அதுவும் இரவு நேரம் ட்ராபிக் இல்லாததால் வேகம் வேறு எடுத்திருக்க…

“மெதுவா போங்க”, என்று சொன்னவளை….

“ஒருத்தரும் இல்லாத ரோட்ல இதுக்கு மேல மெதுவா போனோம்னு வை நாய் துரத்தும்”, என்று வெற்றி சொல்ல…..

“அய்யய்யோ, அப்போ வேகமா போங்க”, என்று சந்தியா சொல்லவும் அதுதான் சாக்கென்று வெற்றி வேகமெடுத்து இருக்க….

பைக் வீடு வந்து தான் நின்றது. இறங்கி வெற்றியை பிடித்துக் கொண்டு சற்று தன்னை சமன் செய்து கொண்டே சந்தியா கேட்டை திறந்தாள் வெற்றி அவ்வளவு வேகம்.

பைக்கை பட்டறையில் தான் நிறுத்துவான், அதனால் வீட்டு பெல் அடிக்க போக அதன் முன்னேயே கதவு திறந்தது.

ஞானவேல் வெளியில் வந்தவன், “நீ போ வெற்றி, நான் நிறுத்திட்டு வரேன்”, என்று சாவிக்கு கை நீட்ட, அதற்குள் சந்தியா உள்ளே சென்றிருந்தாள்.

“நீயேண்டா, இன்னும் தூங்காம இருக்க, வந்தா நான் பெல் அடிக்க மாட்டனா”, என்று வெற்றி சகஜமாக கேட்கவும், ஞானவேல் அப்படியே நின்று விட்டான்.

எத்தனை நாட்களுக்கு பிறகு இவ்வளவு சகஜமாக வெற்றி அவனிடம் பேசுகிறான்.

ஞானவேல் பதில் சொல்லாததால், வெற்றி அவன் புறம் திரும்ப… “உனக்கு என் மேல கோபம் போயிடுச்சா…..”,

“போடா! போடா! போ! வண்டியை நிறுத்து!”, என்று சாவியை தூக்கி போட்டு சிறு சிரிப்போடு உள்ளே போக…

ஞானவேலுக்கு மனதிற்கு மிகவும் நிறைவாய் இருந்தது.

வெற்றி உள்ளே சென்று ரூம் கதவை திறக்க  முயன்றால் முடியவில்லை.

சந்தியா உடை மாற்ற கதவை தாளிட்டு இருந்தாள். கதவை திறந்து பார்த்தவன் முடியாமல் சோபாவில் அமர…..

ஞானவேல் பைக்கை நிறுத்தி விட்டு வந்தான்.

“நீ தூங்க போகலையா”, என்று வெற்றியை பார்த்து அவன் கேட்க…..

“நீ போடா! நான் போறேன்!”, என்று அவனை உறங்க அனுப்பி விட்டு, மீனாட்சியம்மா உறங்குகிறாரா என்று எட்டி பார்க்க அவர் உறக்கத்தில் இருந்தார், அவருக்கு சென்று போர்வையை எடுத்து போர்த்தி விட்டு வந்த போது சந்தியா கதவை திறந்திருக்க உள் சென்றான்.

பைக்கில் வந்தது சந்தியாவின் உறக்கத்தை முற்றிலும் போக்கியிருக்க…. இப்போது தெளிவாக இருந்தாள்.

வெற்றி சட்டையை கழட்டிக் கொண்டே, “தூங்கலையா”, என்று கேட்க….

“நான் கீழ தூங்கறேன், நீங்க மேல தூங்குங்க”, என்றாள் சந்தியா.

“இல்லையில்லை, நீ மேல தூங்கு, நான் கீழ தூங்கறேன்”, என்று வெற்றி சொல்ல….

இருவரும் மாற்றி மாற்றி அதையே சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்போதும் சந்தியா, “நான் மேல படுக்கறேன், நீங்களும் படுங்க”, என்று சொல்லவில்லை, வெற்றியும் அதை சொல்லவில்லை.

வெற்றிக்கு இன்னும் தயக்கம்…… சந்தியா அவளாக அதை என்றும் சொல்ல மாட்டாள். 

சிறிது நேரம் வழக்காடிக் கொண்டவர்கள், கடைசியாக மிகவும் யாராலும் யோசிக்க கூட முடியாத ஒரு புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தார்கள்.

“ஒரு நாள் நீ தூங்கு! இன்னொரு நாள் நான் தூங்கறேன்!”, என்று, நேற்று சந்தியா உறங்கியதால் இன்று வெற்றியை அவள் உறங்க சொல்ல…..

“இல்லையில்லை! இன்னைக்கு தான் நாம இந்த முடிவுக்கு வந்திருக்கோம்! நீ தான் முதல்ல தூங்கணும்!”, என்று வெற்றி சொல்லிவிட…….

சந்தியா செய்வதறியாது விழித்தாள்……

“குட் நைட்”, என்று வெறும் தரையில் வெற்றி உருளப் போக…..

“இருங்க! இருங்க!”, என்று அவசரமாக சந்தியா ஒரு போர்வையையும் தலையணையும் கொடுத்தாள்.

வெற்றி படுத்ததும் உறங்கி விட, கடமை கண்ணாயிரம் என்ற கே கே வான வெற்றியை, இப்போது கரிமேட்டுக் கருவாயன் என்ற கே கே வாக்கிய சந்தியா அவனை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்து அவளையறியாமல் உறங்கினாள்.    

நெஞ்சில் அப்போதும் எண்ணங்கள் மாமழையாய் பொழிந்து கொண்டிருந்தது.    

“தன்னை தோழியாய் ஏற்ற நாளாய் அவன் செய்த உதவிகள் எத்தனை…… என் வாழ்க்கை! என் இஷ்டம்! எவ்வளவு தைரியமாய் அவனிடம் சொன்னேன். அது போல தானே அவன் வாழ்க்கையும்… என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் என்ன….. வெற்றியை ஏன் நான் அந்த சூழலுக்கு  தள்ளி விட வேண்டும் தப்பல்லவா… அடுத்த நாளே அவனுக்கு எத்தனை பெரிய செலவு வைத்திருக்கிறேன்…..”,

“ஒன்றுமில்லாதவன் கூட மகளுக்கு சீரென்று ஒரு தட்டம், தம்ப்ளர், ஒரு பாய் தலைகானியாவது கொடுத்திருப்பான். எதையும் யாரும் செய்ய வேண்டாம் என்று சொல்லி இங்கே ஒன்றுமில்லாமல் கை வீசி வந்து, இவர்கள் கொடுத்த உடையை அணிந்து, அவனை கீழே படுக்க விட்டு நான் மேலே சௌகர்யமாக படுத்துக் கொண்டிருக்கிறேன்”,

“என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்…….. எப்போதிருந்து இவ்வளவு சுயநலவாதியாக மாறினேன்”, மீண்டும் மனம் முழுவதும் குற்ற உணர்ச்சி.

“இவன் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறேனா… ஒரு வேலை அவன் சொன்னது போல நான் அழகி என்று எனக்கு திமிராக இருக்கிறதோ. அதுதான் நான் கேட்டதும் அவன் என்னை திருமணம் செய்துக்கொண்டிருக்க வேண்டும்”, என்று நினைத்தேனோ.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை                                                                               நீருக்குள் மூழ்கிடும் தாமரை                                                                                            சட்டென்று மாறுது வானிலை                                                                           பெண்ணே உன் மேல் பிழை

சந்தியா உறங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் வெற்றி எழுந்திருந்தான். ஏனென்றால் அவள் உறங்கிய போது மணி ஐந்து……. வெற்றி ஐந்து ஐந்துகெல்லாம் எழுந்து கொண்டான்.                 

காலையில் எப்போதும் போல வெற்றி பயிற்சிக்கு போய்விட…. சந்தியா வெகு நேரம் உறங்கினாள்.

இப்படி என்றுமே உறங்குபவள் அல்ல….. வெற்றி பயிற்சி முடித்து வந்த போதும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

“என்னடா இவ? இப்படி தூங்குறா! பார்க்குறவங்க நம்மை தப்பா நினைக்க மாட்டாங்க….. இந்த அம்மா என்ன நினைக்கும்”, என்று யோசித்தவாறே அவளை எழுப்ப சென்றான்.

பக்கம் சென்று சந்தியா என்று குரல் கொடுத்தான்,  அவள் அசைய கூட இல்லை எனவும்…… தோள் தொட்டு மெதுவாக, “சந்தியா”, என்று கூப்பிட்டுக் கொண்டே அசைக்க…..

மெதுவாக இமை திறந்தாள், கண்கள் எல்லாம் காய்ச்சல் வந்தது போல சிறுத்து காணப்பட,

வெற்றி அவளின் நெற்றியில் கைவைக்க அது அனலாக கொதித்தது.

“அச்சோ, என்ன இவ்வளவு காய்ச்சல்”, என்று வெற்றி கேட்டது கூட அவளின் காதில் விழவில்லை…

“ம்”, என்றவள் திரும்ப கண்களை  மூடிக் கொள்ள பயந்து விட்டான். மீனாட்சியை அழைத்து விவரம் கூற…..

“ராத்திரி வெளில போயிட்டு வந்தது, அவளுக்கு ஒத்துக்கலையோ என்னவோ…..”,

“எதுக்கும் டாக்டர் கிட்ட காட்டிடு வெற்றி”, என்று அவர் சொல்ல…..

அப்போது தான் அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த ஞானவேல்…. “டாக்டர் வர எப்படியும் பத்து மணிக்கு மேல ஆகும்மா…. இரு, நான் என் ஃபிரண்ட் கார் கொண்டு வர்றேன்”, என்று அவசரமாக சென்று கார் கொண்டு வந்து நிறுத்தி சென்றான்……  

வெற்றி சந்தியாவை அவனாக எழுப்பி உட்கார வைத்தது கூட அவளுக்கு தெரியவில்லை.

“மா, என்னமா?”, என்றான் கவலையாக.

“ஒன்னுமில்லைடா, புது இடம்….. ஒத்துக்கலையோ என்னவோ”, என்றார்.

“என்னமா நீ….. நைட்ல போனது ஒத்துக்கலைன்ற, புது இடம் ஒதுக்கலைன்ற”, என்று அவரிடம் எரிந்து விழவும்,

“நீ என்னடா? முந்தா நேத்து கல்யாணமாகி இன்னைக்கு இந்த பொண்ணுக்கு இவ்வளவு காய்ச்சலா இருக்கேன்னு நானே பயந்து கிடக்கறேன் நீ வேற, எதுக்கும் அவங்கம்மா கிட்ட சொல்லிடுவோம். ஆசுபத்திரிக்கு அவங்க கூட வரட்டும்”, என்று சொல்ல…….

ராஜதிடம் சொல்லி அவர் வந்து சந்தியாவை ஹாஸ்பிடல் அழைத்து சென்றனர்… அங்கே இருந்த ஒரு வயதான லேடி டாக்டரிடம், சந்தியாவை காட்டினர்.

“அவர் என்ன இவ்வளவு பீவர் இருக்கு…. என்ன ஆச்சு?”, என்று சந்தியாவின் அம்மாவிடம் கேட்க.

நேற்று முன்தினம் தான் திருமணம் ஆகிற்று. கணவன் வீட்டில் இருந்ததாக கூறினார்.

சந்தியாவிற்கு இன்ஜெக்ஷன் செய்து மருந்து மாத்திரைகள் கொடுத்தார்.   

இந்த வெற்றி, “ஏன் கண் கூட முழிக்கலை”, என்று திரும்ப திரும்ப அந்த மருத்துவரிடம் கேட்க….  

சந்தியா அவ்வளவு அழகாக இருக்க…. வெற்றி அவளின் நிறத்திற்கு பொருத்தமில்லாமல் ஒரு முரட்டு தோற்றத்துடன் இருக்க… ஒரு வேளை இந்த பெண்ணிற்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லையோ? அதுதான் காய்ச்சலோ! இவன் ஏதாவது செய்து விட்டானோ? அதுதான் திரும்ப திரும்ப கேட்கிறானோ?”, என்று நினைத்த அந்த டாக்டர்…..

“என்ன நடந்தது”, என்றார்.  

“தூங்கினப்போ, நல்லா தான் தூங்கினா! காலையில எழுந்துக்கவேயில்லை! நல்ல காய்ச்சல்!”, என்று வெற்றி சொல்லவும்….

சற்று யோசனையாக பார்த்த டாக்டர், “நீங்க ஏதாவது அந்த பொண்ணுகிட்ட ஹார்ஷா பிஃஹேவ் பண்ணுனிங்களா! அதனால ஒரு வேலை காய்ச்சலோ”, என்று கேட்க……

வெற்றி அந்த ஆங்கில வார்த்தை சொல்லும் அர்த்தம் புரியாமல் பார்க்கவும்……

அவர் தெளிவாக, “உடல் ரீதியா ஏதாவது துன்பம் கொடுத்தீங்களா”, எனவும்,

வெற்றி, “என்னடா இது”, என்று அயர்ந்து பார்த்தான்.  சில நொடிகள் சில நொடிகளே, “என்ன டாக்டர் பேசறீங்க”, என்று கோபப்பட…..

அவனின் கோபம், அந்த மாதிரி அவன் நடக்க வாய்ப்பில்லை என்று மிகவும் மக்களை பார்த்து அனுபவம் வாய்ந்த அந்த மருத்துவருக்கு உணர்த்த……..

“கோவப்படாதப்பா… புது பொண்ணு இவ்வளவு காய்ச்சல்னா பலதும் நம்ம யோசிக்கணும்…. அந்த பொண்ணு கண்ணே திறக்கலை பாரு”, என்று அவர் சொல்ல….

“இல்லை, அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை….. புது இடம் அவளுக்கு பழகட்டும்ன்னு நான் தள்ளி தான் இருக்கேன்…..”, என்று வெற்றி முகம் இறுகி விளக்கம் கொடுக்க……

“நல்ல விஷயம், ஆனா இது அந்த பொண்ணுக்கு தெரியுமா?”,

வயதானவர் என்றாலும் எப்படி ஒரு பெண்மணியிடம் இதை பேசுவது என்று வெற்றி தயங்க….

“கேட்டா பதில் சொல்லணும்”, என்று அவர் சொல்ல…..

“இல்லை, நாங்க அதெல்லாம் பேசிக்கலை”, என்றான்.

“ஒன்னு வைரல் பீவரா இருக்கணும்….. ஏன்னா சளி இருமல்ன்னு எதுவும் இல்லைன்னு சொன்ன…. புதுசா கல்யாணமானதுனால புது இடம் ஒரு ஷாக் இருக்கணும்… இல்லை உடல் ரீதியா நீ ஹார்ஷா நடந்திருக்கணும்… இல்லை நீ அந்த பொண்ணு கிட்ட சரியா நடக்காம இருக்கணும்….. அந்த பயத்துல……”, என்று காரணங்களை அடுக்க…..

“டாக்டரம்மா, அவ கண்முழிச்சதும் நான் கூட்டிட்டு வரேன், நீங்களே கேட்டு சொல்லுங்க”, என்று வெளியில் கிளம்பி விட்டான்…..    

“அட இருப்பா, கொஞ்ச நேரம் அவ அப்செர்வேஷன்ல இருக்கட்டும், கண் முழிச்சதும் கூட்டிட்டு போ”,

“ஏதாவது ரத்தம் டெஸ்ட் எடுக்கலாமா”,  

“வேற டெஸ்ட் எதுவும் பண்ணினாலும், உடனே தெரியாது”, என்று சொல்லி,

“சிஸ்டர் இந்த பொண்ணை காசுவாலிட்டில படுக்க வைங்க”, என்று அவர் சொல்ல…..

“இல்லை, ஒரு ரூம் குடுங்க, செலவு ஒன்னும் பிரச்சனையில்லை”, என்று வெற்றி சொல்லிவிட…..

யாருக்கும் எந்த வேலையும் ஓடவில்லை, மீனாட்சியும் ராஜமும் அவளுடன் ரூமின் உள் இருக்க….

வெற்றி வெளியில் அமர்ந்திருந்தான். அந்த டாக்டர் கேட்ட கேள்விகள் அவனை மிகவும் வருத்தப்படுத்தி இருந்தன.

சந்தியா விழிக்க அமர்ந்திருந்தனர்…… காய்ச்சல் குறையவில்லை. ஆனால் மதியம் போல அவள் கண் திறக்க… அவளை பரிசோதித்த மருத்துவர், “வீட்டுக்கு கூட்டிட்டு போங்க”, என்று சொல்லி சென்றார்.

இப்போது சற்று தெளிவான சந்தியா, “நம்ம எப்போ ஹாஸ்பிடல் வந்தோம்மா”, என்று அம்மாவிடம் கேட்க.

“காலையில சந்தியா, நீ கண்ணு தொறக்கவேயில்லை! என்னம்மா ஏதாவது பிரச்சனையா, நேத்து சாயந்திரம் கூட வீட்டுக்கு வந்தியே நல்லா இருந்தியே”, என்று மெதுவாக கேட்ட போதும் அது மீனாட்சியின் காதிலும் வெற்றியின் காதிலும் நன்கு விழுந்தது.

“அம்மா! காய்ச்சல் உடம்பு சரியில்லைன்னா வரும்! பிரச்சனைன்னா வராது! என்ன கேட்கற நீ?”, என்று சோர்வாக இருந்த அந்த நிலையிலும் ராஜமை அதட்டினாள்.

“அவர் இருக்கும் போது எனக்கு எந்த பிரச்சனையும் வராது….. இப்படி கேட்காத……. அவங்க கேட்டா மனசு சங்கடப்படும்”, என்று சொல்லி அம்மாவின் கை பிடித்து மெதுவாக நடந்து வந்தாள்.

அதுவுமே வெற்றி மற்றும் மீனாட்சியின் காதில் தெளிவாக விழுத்தது. இருவரும் சந்தியாவிற்கு இப்படி கண்ணை கூட திறக்க முடியாத அளவிற்கு காய்ச்சல் என்றதும் சற்று பயந்து தான் போனர், என்னவோ ஏதோவென்று…. அதுவும் அந்த டாக்டரின் பேச்சு வேறு வெற்றியை மிகவும் வருத்தப்படுத்தி இருந்தது….

இப்போது தான் வெற்றியும் மீனாட்சியும் சற்று ஆசுவாசப்பட்டனர்.

“நீ சந்தோஷமா இருந்தா நான் ஏன் இப்படி கேட்க போறேன்! என்னவோ நீயும் அந்த தம்பியும் முகத்தை தூக்கி வெச்சிக்கிட்டே சுத்தற மாதிரி எனக்குத் தோணுது….. உன் தங்கச்சிங்க ரெண்டு பேர கூட நான் கல்யாணம் பண்ணிக் குடுத்திருக்கேன்…. அவங்க முகத்துல இருந்த பூரிப்பு உன் முகத்துல இல்லையேடா”, என்று அன்னையாக ராஜம் பேச…

“அம்மா ப்ளீஸ்! எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க…..”, என்று மட்டும் சொல்லி அமைதியாக நடந்து வந்தாள்.

அவள் சொல்லாமல் விட்டது, “அவங்க இருபத்தி ஒன்னு, இருபத்தி ரெண்டு வயசுல கல்யாணம் பண்ணிகிட்டாங்க! அந்த சந்தோஷத்தை இருபத்தி ஏழு வயசுல நான் காட்ட முடியுமா”, என்று….

மனது நிறைய சந்தோஷங்களை இழந்து விட்டதாக தோன்றியது. என்ன ஏது தெரியவில்லை…. வெற்றி பாராமுகம் காட்டினாலும் அவனோட ஒன்ற வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் இருந்தாலும், சில சமயம் சகஜமாக இருந்தாலும், ஒரு தயக்கம்.

சென்ற நாட்கள் வாரா…… இருக்கும் நாட்கள் அதை அனுபவித்து வாழ வேண்டும் என்ற எண்ணம் திருமணம் நடக்கும் போதே இருந்தது.

அதுதான் அப்போதைக்கு அவள் செய்யாமல் விட்ட வேலையாக இருந்த அவளின் பாட்டியின் நகையை கூட வெற்றியிடம் சொல்லி வாங்கிக் கொடுத்தாள்.

இருந்தாலும் மனதிற்குள் ஒரு நினைப்பு, தன்னிஷ்டத்திற்கு வெற்றியை ஆட்டி வைக்க நினைப்பது தவறு என்று….. அவனுக்கு என்ன கனவுகளோ கற்பனைகளோ….   

இறங்கியிருந்த காய்ச்சல் மீண்டும் ஏற…..      

அதற்குள் கார் வந்துவிட….. சோர்வாக அமர்ந்து கொள்ள, அதன் பிறகு அங்கே யாருமே பேசவில்லை.

வெற்றி அவர்களை வீட்டினில் விட்டு…. அவன் செய்ய வேண்டிய வேலைகள் சிலது இருந்ததால் பட்டறைக்கு அவன் போய் விட……

மீனாட்சி சமையலை கவனிக்க நிற்க……

“இனிமே எப்போ அண்ணி சமைக்கறது…… நாராயணனுக்கு நைட் டுயுட்டி தான்…. அவங்கம்மா சமைச்சு அவன் கிட்ட இப்போ குடுத்து விட்டுட்டா! எனக்கு இப்போ தான் போன் செஞ்சா!”, என்று சொல்ல…..

மீனாட்சி மறுத்து பேச வர…..

“இருக்கட்டும்மா விடுங்க!”, என்று சந்தியா சொல்லிவிட, அவள் பேச்சை மறுப்பாரா மீனாட்சி…….

சந்தியா படுத்துக் கொள்ள, சாப்பாடு வந்தவுடன் சாதம் பிசைந்து அதில் கொஞ்சமாக ரசம் விட்டு அவளின் அம்மா கொடுக்க…… சாப்பிட்டு மாத்திரைகள் சாப்பிட்டு, ஜுர வேகத்தில் அவள் மீண்டும் உறக்கத்திற்கு செல்ல….

“நான் வீட்டுக்கு போயிட்டு சாயங்காலம் வரேன்”, என்று ராஜமும் சொல்லிப் போக….

இருந்த அலுப்பில் மீனாட்சியும் உணவருந்தி உறங்கி விட….. வெற்றி தான் உணவுக்கு வரவேயில்லை.

மாலை நான்கு மணி போல எழுந்த சந்தியா, மெதுவாக வெளியில் வந்து பார்க்க….. வெற்றி வந்ததற்கான அரவமில்லை.

அவனை தொலைபேசியில் அழைக்க….. இவளின் அழைப்பை பார்த்ததும் நேரிலேயே வந்தான்.

“நீங்க சாப்பிட்டீங்களா இல்லையா”,

“ம், சாப்பிட்டுட்டேன், உனக்கு எப்படி இருக்கு?”,

“எப்போ சாப்பிட்டீங்க? நேத்து ராத்திரியா?”, என்றாள்.

நிஜமாகவே வெற்றி நேற்று இரவு உண்டது தான், அதன் பின் உண்ணவேயில்லை…. பதினோரு மணி போல ஹாஸ்பிடலில் ஒரு டீ குடித்ததுடன் சரி….

 

“எப்படி இருக்கு உனக்கு”, என்று அவன் கேட்கும் போதே…

“பரவாயில்லை”, என்று வாய் உரைத்துக் கொண்டு இருக்கும் போதே நிற்க முடியாமல் சோபாவில் அமர்ந்தாள்.

“தண்ணி வேணும்”, என்று அவள் சொல்ல….. தண்ணீரை கொதிக்க வைத்து ஆற்றி கொண்டு வந்தான்.

“சாப்பிடுங்க”, என்று சொல்லி அவள் பிடிவாதமாக அமர்ந்திருக்க…..

என்ன உணவு ஏதென்று கூட பார்க்காமல், இருந்ததை அவசரமாக ஐந்து நிமிடத்தில் வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டான்.

“நீ போ! போய் ரெஸ்ட் எடு!”, என்று வெற்றி சொல்ல, அவனுக்காக கையை நீட்டினாள்.

அவன் கையை கொடுக்கவும், அதை பிடித்து எழுந்து ரூமில் சென்று படுத்துக் கொண்டவள்…. பற்றியிருந்த அவனின் கையை விடாமல், “சாரி”, என்றாள்.

“எதுக்கு சாரி! ஏதாவது பேசாத தூங்கு!”, என்றவனிடம்.

“இல்லையில்லை, நான் மாடில உங்களை ரொம்ப பேசினேன்! வேணும்னு பேசலை! வந்துடுச்சு! சாரி!……”, என்று மனம்வருந்தி சொன்னாள்.

“ரெண்டு நாள்ளயே இந்த மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம்னு தோணுதா..”,  

“நான் உங்களுக்கு ரொம்ப தொந்தரவு குடுக்கறனா? என்னை பார்த்தா எரிச்சலா இருக்கா? என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உயிரை எடுக்கறான்னு தோணுதா……? ஒன்னுமே கொண்டு வராம இங்க இருக்கறதை எல்லாம் அனுபவிக்கறான்னு தோணுதா?”, என்று அவள் ஜுரத்தொடு பிதற்ற ஆரம்பித்து இருந்தாள்……

“நான் உங்களை தொந்தரவு செய்யக் கூடாதுன்னு தான் காணாம போனேன்! ஆனா வந்துட்டேன்! முடியலை! சாரி!”, என்றாள்.

இந்த பெண் மனதில் கண்டதையும் நினைத்து மருகுகிறாள். அதுதான் காய்ச்சல் போல என்று வெற்றிக்கு தோன்ற ஆரம்பித்தது.

படுத்திருந்த போதும், பிடித்திருந்த வெற்றியின் கைகளை சந்தியா விடவில்லை.

மிகுந்த மிகுந்த தயக்கம் தான் வெற்றிக்கு, இருந்தாலும் கையை விடுவித்து, அவன் அணிந்திருந்த உடையை வேகமாக மாற்றி, கை கால் கழுவி  அவளருகில் கட்டிலில் அமர்ந்தான்…. அதுவரை சந்தியாவின் பார்வை என்ன செய்கிறான் என்பது போல வெற்றியை தான் தொடர்ந்தது.    

கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து, அவளின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, “தூங்கு”, என்று சொல்ல…….   

சந்தியாவிடமும் வெற்றி தலையை தூக்கி அவன் மடியில் வைத்துக் கொண்டதில் சிறு தயக்கம்….. ஆனால் அது சில நொடிகளே, வெற்றியால் அதை உணர முடிந்தது…. பிறகு வாகாக அவன் மடியில் தலை வைத்து அவன் கால்களை அணைத்து பிடித்துவாறு உறக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தாள்.

அந்த சில நொடி தயக்கம், பின்பு அந்த அணைப்பு, வெற்றிக்கு எதையோ உணர்த்த….. அமைதியாக அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

அவளிடம் சற்று அசைவு தெரியவும், “உனக்கு என்னை பிடிக்குமா சந்தியா”, என்று அவன் வாய் தானாக ஒரு கேள்வியை உதிர்க்க….

“ம்ம்! ரொம்ப பிடிக்கும்!, ஐ லவ் யூ ஸோ மச்!”, என்று சொல்லிக் கொண்டே ஆழ்ந்த உறக்கத்திற்கு போக ஆரம்பித்து இருந்தாள்.

“எப்போலயிருந்து”, என்று வெற்றி அடுத்த கேள்வியை கேட்க…..

சட்டென்று தெளிந்தவள், தலையை தூக்கி, “என்ன? என்ன கேட்டீங்க? நான் என்ன சொன்னேன்”, என்று கேட்க…..

“நான் ஒன்னும் கேட்கலையே, நீயும் ஒன்னும் சொல்லலையே”, என்று வெற்றி சொல்ல,

“இல்லை! ஏதோ கேட்ட மாதிரி இருந்துச்சு”, என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் மடியை விட்டு இறங்கி உறங்க முற்பட.    

வெற்றி அவளை அசைய விடாமல் பிடித்து, “தூங்கு”, என்று அதட்ட, அப்படியே உறங்க ஆரம்பித்தாள்.   

வெற்றிக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. எப்போதிலிருந்து என்று அவனுக்கு தெரியாவிட்டாலும், சந்தியாவிற்கு தன்னை மிகவும் பிடித்திருக்கிறது என்று….

மிகவும் பிடித்த தன்னோடே இவ்வளவு போராட்டங்கள்….. இதில் தான் வேறு திருமணம் செய்திருந்தால் என்றுமே அவள் தனக்கு ஒரு திருமண வாழ்க்கை அமைத்துக் கொண்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது.

தன்னை விடவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல், இந்த சில மாதங்கள் அவளுக்கு மிகுந்த போராட்டத்தை மனதிற்குள் கொடுத்திருக்கும் போல என்று தோன்ற ஆரம்பித்தது….. 

“உன்னை எனக்கு பிடித்திருக்கிறது”, என்று அவள் என்றுமே சொன்னதில்லை. இதற்கு முன்பே வெற்றி, சந்தியா திருமணத்திற்கு கேட்ட போது கூட சொல்லியிருந்தான், “உனக்கு என்னை பிடிச்சிருந்தா கூட பரவாயில்லை, எனக்கு பொண்ணு கிடைக்கலைன்னு நீ என்னை கல்யாணம் பண்ண வேண்டாம்”, என்று.

எப்போதிருந்து இவளுக்கு என்னை பிடித்திருக்கும்.. மனதிற்கு சற்று சந்தோஷமாக இருந்தது….     

நில்லாமல் வீசிடும் பேரலை                                                                             நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை                                                                                    பொன்வண்ணம் சூடிய காரிகை                                                                              பெண்ணே நீ காஞ்சனை!

Advertisement