Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று:

“நீ உனக்கு கல்யாணத்துக்கு என்ன வாங்கின”, என்ற வெற்றியின் கேள்வியையும் அவனின் குற்றம் சாட்டும் பார்வையையும் எதிர்கொண்டவள்,

“ஏன்? நான் எதுவும் கொண்டுவரலைன்னு உங்களுக்கு வருத்தமா”, என்றாள்.

வெற்றியின் பார்வையில் கோபம் ஏறுவதை பார்த்தவள், “ஒரு வேளை வசதியா பொண்ணு வேணும்னு நினைச்சீங்களோ. அதான் என்னை வேண்டாம்னு சொன்னிங்களோ…… இதுல எனக்கு அழகுன்னு திமிர் வேறயாம்”, என்று சொன்னவள் அந்த இடத்தில் நிற்காமல் வெளியே விரைந்து விட்டாள்.

 வெற்றி அவளுக்கு எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை என்ற எண்ணத்தில் தான் கேட்டான்….. ஒரு திருமணதிற்கு கூட ஏன் எதுவும் வாங்கவில்லை என்று தான் கேட்டான், அவனுக்கு புரியவேயில்லை… “நான் என்ன கேட்டேன், இவ என்ன சொல்லிட்டு போறா…”, 

கோபம் வந்தது….. வெளியே வந்து சந்தியாவை தேடினால் அவள் இல்லை.

“எங்கம்மா அவ….”, என்றான் மீனாட்சியிடம்.

“மேல துணி எடுக்க போறேன்னு சொன்னாடா…..”,

மேலே சென்றான்…. வெயில் கொளுத்த….. துணியும் எடுக்கவில்லை ஒன்றும் எடுக்கவில்லை. சற்று நிழலாக இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.

வெற்றி அந்த பேச்சை தொடரவில்லை…… அவளே மீண்டும் பேசட்டும் என்று விட்டு விட்டான்.

“உங்க பாட்டிகிட்ட எப்போ குடுக்க போற…..”, என்றான் எடுத்த எடுப்பில்.

“இல்லை, செலவுன்னு நினைச்சா குடுக்க வேண்டாம்”, என்றாள்.

“எப்போ குடுக்கப் போறேன்னு கேட்டேன், அதுக்கு மட்டும் பதில் சொல்லு”, என்றான் கடுமையான குரலில்.

“இப்போ போகலாமா”, என்றாள்.

“நான் உங்க வீட்டுக்கு வரலை”,

“ஏன் வரலை”, என்றெல்லாம் சந்தியா கேட்கவில்லை…… “முதல் தடவை போகும் போது நீங்க இல்லாம நான் போக மாட்டேன்”, என்றாள் தெளிவாக.

“அப்போ ஒரு தடவை வந்துட்டா திரும்ப கூப்பிட மாட்டியா…”,

“அது அப்போ என் மூட் பொறுத்து…..”, என்றாள் அவளும் சற்று அலட்சியமாகவே.

“ஏன் சந்தியா இப்படி பதில் சொல்ற…… நீ இப்படி எல்லாம் பேச மாட்ட, என்ன ஆச்சு…?”,

“உங்களுக்கு என்னை பத்தி அவ்வளவு நல்லா தெரியுமா”, என்றாள் கிண்டலாக…..

“ஏன் எனக்கு தெரியாதா”, என்று வெற்றியும் அவளை விடாது பார்த்து  பதிலுக்கு கேட்க…

“தெரியாது, உங்களுக்கு எதுவும் என்னை பத்தி தெரியாது, தெரிஞ்சிருந்தா  ஏன் நான் கல்யாணத்துக்கு எதுவும் வாங்கலைன்னு என்னை கேட்டிருக்க மாட்டீங்க…..”, என்று சற்று ஆவேசமாக சொன்னாள்,

“ஏன் வாங்கலை? கல்யாணம்ன்றது எவ்வளவு சந்தோஷமான நிகழ்வு அதுக்கு எதுவும் ஏன் வாங்கலை…. யாரும் எதுவும் வாங்கிக் குடுக்கலையா.. சரி, வாங்கிக் குடுக்கலைன்னா நீ உன்கிட்ட இருந்த பணத்துல வாங்கி இருக்கலாம் தானே”,

“யாரும் எனக்கு வாங்கிக் குடுக்கறதுல இஷ்டமில்லை…. எங்கப்பாம்மா தான் எனக்கு செய்யணும்….. எங்கப்பா இல்லை, எங்கம்மா கிட்ட பணமில்லை, அவ்வளவு தான்! வாங்கலை, சரியா…..”,

“எங்கப்பா அம்மாக்கு அப்புறம் எனக்கு நீங்க தான் செய்யணும், அந்த உரிமைல தான் பாட்டிக்கு கூட கேட்டேன்..”, என்றாள் குரல் கமர….

“நான் ஒரு செயின் வளையல் மட்டும் தான் கேட்டேன், என்கிட்டே ஏற்கனவே எண்பதாயிரம் இருந்தது. மிஞ்சி போனா ஒரு முப்பது நாப்பதாயிரம் தான் தேவையாயிருக்கும். அதான் உங்ககிட்ட கூட தைரியமா கேட்டேன், இவ்வளவு கேட்கலை”,

“என்கிட்டே இருக்குற பணம் குறைஞ்சிடும்னு தான் நான் எனக்கு கல்யாணத்துக்கு எதுவும் வாங்க கூட இல்லை. நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல நீங்க தான் வாங்கினீங்க, இப்போ கூட ஒன்னுமில்லை. ஒரு செயின் ரெண்டு வளையல் குடுத்தா போதும்”, என்றாள். 

“நீ என்கிட்டே கேட்கலாம்….. பணம் எனக்கு பெரிய விஷயமில்லை, அது இல்லாமையும் நான் இருந்திருக்கேன், இருந்தும் இருந்திருக்கேன், நீ எனக்கு எவ்வளவு வேணா செலவு வைக்கலாம், என்னைக்கும் தப்பா எடுக்க மாட்டேன்….. என்னோட கேள்வி அது இல்லை, எனக்கு தான் கொஞ்சம் தயக்கம்……. உனக்கு நம்ம கல்யாணம் சந்தோஷமான நிகழ்வு  தானே, நீதானே அதை கேட்ட”,       

“என்ன பெரிய சந்தோஷமான நிகழ்வு….. நீங்க இப்படி முகத்தை திருப்பிக்கிட்டு நிக்கும் போது எனக்கு எப்படி சந்தோஷமா இருக்கும். என்னை அவ்வளவு சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா என்ன, ஒரு வார்த்தை கூட என் கூட பேசலை, அங்க ஊர்ல கூட என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டீங்க….”, என்றாள் ஆத்திரமாக.

இப்படி கோபப்படுபவள் அல்ல சந்தியா. ஆனால் அன்று என்னவோ கோபம் கோபமாக வந்தது. யார் மேல் என்றும் தெரியவில்லை, யாரிடம் காட்டுவது என்றும் தெரியவில்லை.

அன்று வெற்றி முகத்தை திருப்பிக் கொண்டு போனது அவளை அவ்வளவு காயப்படுத்தி இருந்தது.

“இந்த பொண்ணை போய் கல்யாணம் பண்ண முடியுமான்னு சொல்ற அளவுக்கா நான் இருக்கேன், என்ன குறை என்கிட்ட வசதியில்லைன்றதை தவிர, பணம் உங்களுக்கு பிரச்சனையில்லைன்னா ஏன் என்னை அவ்வளவு பிடிவாதமா வேண்டாம்னு சொன்னீங்க, ஏன் தோழியா நினைச்சிருந்தா என்ன, என்னை மாதிரி ஒரு பொண்ணை உங்கம்மா பார்த்திருந்தா கல்யாணம் செஞ்சிகிட்டு இருக்க மாட்டீங்களா, அப்படி என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போனீங்க”,  வர துடித்த கண்ணீரை வர விடாமல் பேசிக் கொண்டு இருந்தாள்.  

“நீ என்கிட்டே சொல்லிட்டா போனா…… உன்னை காணோம்னு நான் எவ்வளவு டென்ஷன் ஆகியிருப்பேன்…. உங்கம்மா கிட்ட பத்திரமா இருக்கேன்னு உன்னால சொல்ல முடிஞ்சது, ஆனா என்கிட்டே சொல்ல முடியலை இல்லை…..”, என்றான் பதிலுக்கு வெற்றியும் கோபமாக.

“நான் பையித்தியக்காரன் மாதிரி எங்க இருக்கியோ, பத்திரமா இருக்கியா இல்லையான்னு எவ்வளவு தவிச்சிருப்பேன்…… உங்க வீட்ல ஒரு வார்த்தை கூட என்கிட்டே சொல்லலை….. நானா ரெண்டு மூணு நாள் கழிச்சு கேட்கும் போது நாராயணன் சொல்றான்…. நன்றி கெட்ட மனுஷங்க…..”,

“ஏன், ஏன் தவிக்கணும்….. அதான் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க……. விட்டேன்னான்னு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணத்துக்கு நிச்சயமும் பண்ணிக்கிட்டீங்க. உங்க கிட்ட நான் ஏன் சொல்லணும்….. இதுல எனக்கு மாப்பிள்ளை பார்க்க அகல்யா கிட்ட வேற சொல்றீங்க”,

“அவ நான் திமிரெடுத்து கல்யாணம் பண்ணாம உட்கார்ந்து இருக்கேன்னு சொல்றா. நீங்க அவ கிட்ட எனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்றீங்க….”,

“என் வாழ்க்கை, என் இஷ்டம்! நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும். நீங்களோ அவளோ முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை…”,

“உங்களால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னா அதோட நிறுத்தியிருக்கணும், அதை விட்டுட்டு மாப்பிள்ளை பார்க்க சொல்றாராம்”,

“அறிவு வேண்டாம் உங்களுக்கு…..”, என்றாள் ஆக்ரோஷமாக,

“இவ என்னடா விட்டா நம்மளை அடிப்பா போல இருக்கே”, என்று தான் வெற்றிக்கு அப்போது தோன்றியது….. அவ்வளவு கோபத்தை காட்டினாள்.  

“கண்டிப்பா நமக்குள்ள இருந்தது தோழமை தான் இல்லைன்னு சொல்லலை….. ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ உங்க கிட்ட என்னை கல்யாணம் செஞ்சிக்கறீங்களான்னு நான் கேட்ட பிறகு எப்படி தோழமையோடு இருக்க முடியும்…… அது நடக்குது நடக்கலை வேற விஷயம்…… ஆனா அதுக்கப்புறம் என்னால கண்டிப்பா நட்பை தொடர முடியாது…. புரிஞ்சதா”, என்றாள் ஆவேசமாக.

இப்படியெல்லாம் சந்தியா பேசி வெற்றி கேட்டதேயில்லை. முகம் சிவந்து கண்ணீர் வர துடித்து கொண்டிருந்த அவளின் தோற்றம் வெகுவாக அசைத்தது. பேசி பேசி கோபத்தில் நிழலில் இருந்து வெயிலுக்கு வந்திருந்தாள்.

சந்தியாவின் கை பிடித்து நிழலுக்கு உள் இழுத்தான். முதன் முறையாக வெற்றியாக தொடும் தொடுகை, திருமண சடங்குகளுக்காக தொட்டிருந்தான் தான். அதன் பிறகு இப்பொது தான் அவனாக கை பிடிக்கிறான். அவள் கைகள் வேர்த்து சில்லிட்டிருந்தது.

இவனும் தயங்கி தயங்கி இழுக்க அவனின் கை வழுக்கியது. அவ்வளவு மென்மையாக இருந்தாள்.          

வெற்றி கை தொட்டு இழுத்த உணர்வு கூட சந்தியாவிற்கு இல்லை அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டு இருந்தாள். “இதுல கல்யாணத்துக்கு வாங்கலையா அது இதுன்னு…. என்ன வாங்குவேன், எதுக்கு வாங்குவேன்…… நான் எந்த அலங்காரமும் பண்ணிக்கறதே கிடையாது…. கொஞ்சம் காஸ்ட்லி டிரெஸ் கூட போடறது கிடையாது…..”,

“இதுக்கே நீங்க உனக்கு ரொம்ப அழகுன்னு திமிரான்னு கேட்கறீங்க…. இதுல நான் ஏதாவது செஞ்சிருந்தா இன்னும் என்ன கேப்பீங்க….”,

“என்ன அலங்காரம் செஞ்சு என்னை மயக்குறியான்னு கேட்பீங்க…”,

 “சந்தியா…..”, என்று அவனையும் மீறி அதட்டல் போட்டவன், “என்ன பேச்சு இது….. இப்படியெல்லாம் பேசாத”, 

“தெரியாம தான் கேட்கறேன், நான் என்ன திமிரா நடந்துக்கறேன். எல்லாரும் அதையே சொல்றீங்க…..”,

“எல்லாரும் ஆளாளுக்கு எங்க வீட்ல அட்வைஸ்…. இப்ப அட்வைஸ் பண்றவங்க…. அப்ப எங்கப்பா இறந்து நாங்க ஒன்னுமே இல்லாம நின்ன போது தைரியமா இருந்திருக்கணும்…. அவங்கல்லாம் தைரியமா இருந்திருந்தா நான் என் வாழ்க்கையை பார்த்திருப்பேன்..”,

“அப்போ எல்லோருக்கும் என் சப்போர்ட் தேவையா இருந்திச்சு…… அப்போ என் முடிவெல்லாம் திமிர் இல்லை… இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னா திமிர்…. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னா உங்களுக்கும் உளறல் அவங்களுக்கும் உளறல்”, 

“இப்போ கூட நீங்க எனக்காக இதை செஞ்சிருப்பீங்கன்னு என்னால நம்ப முடியலை… ஒன்னு ரமணன் சார் வரா மேடம் சொன்னதுனால செஞ்சிருக்கணும் இல்லை…… அதை விட்டு ஒரு காரணம் இருக்கணும்னா உங்க தம்பி…..”,  

“உங்க தம்பி,  அவர் தான் என்கிட்டே உங்களை கல்யாணம் செஞ்சிக்க சொன்னேன்னு சொல்லியிருக்கணும்.. உங்க தம்பி தான் பிரச்சனைக்கு காரணம்னு நினைச்சு….. அதனால நீங்க என்னை கல்யாணம் செஞ்சிருக்கணும்”,    

“உங்க தம்பி உங்களை கல்யாணம் செஞ்சிக்க சொல்லலை….. நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுவீங்க, எங்கண்ணன் பொண்ணு கிடைக்காம கஷ்டப்படணுமான்னு தான் சொன்னாங்க……”,

“அவர் ஒன்னும் கல்யாணத்துக்கு சொல்லை…… நான் தான் பொண்ணு கிடைக்கலைன்னு நான் உங்களை கல்யாணமா செஞ்சிக்க முடியும்னு கேட்டேன்”,

“வேற யாரா இருந்தாலும் கேட்டிருக்க மாட்டேன்…. எந்த பிரச்சனைன்னாலும் எனக்கு பயம் இருந்திருந்தாலும் துணிஞ்சு நின்னிருப்பேன்…..   எங்கப்பா மாதிரி எப்பவும் இருந்திருக்க மாட்டேன்”, என்றாள்.

அவளின் அப்பாவின் முடிவு அவளுக்கு நிறைய வலிகளையும் வருத்தத்தையும் கொடுத்திருந்தது அவனுக்கு புரிந்தது.    

“நான் எப்பவும் யாரையும் தப்பு சொல்றது கிடையாது…. எல்லாமே என் முடிவு தான்..”,  

“இப்படி நடந்துக்கறது பேர் திமிர்னா…… நான் இப்படி தான், நான் இப்படி தான் இருப்பேன்…..”, என்று அவனிடம் பொறிந்து விட்டு கீழே இறங்கிவிட…..

வெற்றி அசந்து நின்று விட்டான்……. இப்படி ஒரு மனக் குமுறலை சந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

அதையும் விட சந்தியாவின் புத்திசாலித்தனத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. வெற்றியை சரியாக கணித்திருந்தாள்.

அவள் சொன்னது போல ஞானவேல் தான் தேவையில்லாமல் பேசி அவளின் மனதை கலைத்து விட்டுவிட்டானோ என்ற எண்ணம் அவன் மனதில் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியாத அந்த எட்டு மாதத்தில் அதிகமாக இருந்ததால் தான் ரமணன் பேசிய உடன் ஒத்துக் கொண்டான்.

யோசனைகள் ஓட அவன் கீழே இறங்கி ஹாலுக்கு வந்த போது    மீனாட்சி மறுபடியும் உறங்க ஆயத்தமாகி கொண்டிருந்தார்…. பார்த்த வெற்றி கடுப்பனாவன், “அம்மா இப்போ தானே தூங்கி எழுந்த, திரும்பவும் தூங்குவியா சாப்பிட்டவுடனே தூங்காத…. உட்கார்ந்திரு”, என்று அவரிடம் சொன்னவன் சந்தியாவை தேட….

அவள் மீனாட்சி சாப்பிட்டு முடித்ததை ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள்.

மீண்டும் எந்த பேச்சையும் வெற்றி தொடரவில்லை….. சந்தியா என்ன செய்கிறாள் என்று பார்த்துவிட்டு போக திரும்ப , சந்தியாவின் மொபைல் ரூமில் இருந்தது ஒலித்தது….. அவன் தான் அதை சென்று எடுத்து வந்து கொடுத்தான்.

அவள் ஆன் செய்து, “சொல்லுமா”, என்று சொல்லும் போதே அது அவளின் அம்மா என்று புரிந்தது…. அந்த புறம் ஏதோ கேட்கப்பட “வரோம்மா”, என்று இவள் சொல்லிக் கொண்டு இருப்பது புரிந்தது.

“நீ வராத, நான் வர்றேன்”, என்று சொல்லிக் கொண்டே தனியாக பேச சென்றாள்.

வெற்றி பட்டறைக்கு போய் சிறிது வேலைகளை பார்த்து வந்தவன்…. “உங்க வீட்டுக்கு போயிட்டு வரலாமா”, என்று கேட்கவும், “சரி”, என்று கிளம்பினாள்.

அங்கே சென்று அவளை விட்டு மரியாதை நிமித்தம் டீ அருந்தி கிளம்பிவிட்டான். நாராயணனும் வீட்டில் தான் இருந்தான்.

“இருங்க மாமா”, என்று வீட்டினனாக அவன் சொல்ல…. நாராயணனின் புதிதான மாமா என்ற அழைப்பு வெற்றிக்கு தான் ஒரு மாதிரி இருந்தது. வெற்றியால் அவர்களின் வீட்டு சூழலுடன் ஒன்ற முடியவில்லை.

“கொஞ்சம் வேலை இருக்கு கிளம்பறேன்”, என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

முன்பே சந்தியா சொல்லியிருந்தாள், “என்னை விட்டுட்டு நீங்க கிளம்பிடுங்க, நான் அதை பாட்டிகிட்ட கொடுத்துட்டு வரேன்”, என்று.

அதனால் வெற்றி கிளம்பிவிட….. அதை பாட்டியிடம் கொடுத்தாள்….. யாரும் எதிர்பார்க்கவில்லை.

ராஜமும், அவள் தாத்தாவும் தான் பதறினர்……. “என்ன சந்தியா நீ, நாம உன் கல்யாணத்துக்கு எந்த செலவும் செய்யலை….. இதுல நீ அங்க இருந்து அடுத்த நாளே கிட்ட தட்ட அஞ்சு லட்ச ரூபா நகை கொண்டு வந்திருக்க”, என்று…..

“என்னைக்கு இருந்தாலும் நான் பாட்டிக்கு செய்ய வேண்டியது தானே தாத்தா. அதை அடுத்த நாள் செஞ்சா என்ன? இல்லை அடுத்த வருஷம் செஞ்சா என்ன?”,

“இப்போ இதை செய்யணும்னு என்ன அவசியம் சந்தியா….. நான் என் பேத்திங்களுக்கு செய்ய கூடாதா”, என்று பாட்டி கேட்க….

“கண்டிப்பா செய்யலாம் பாட்டி, ஆனா நான் சொன்ன மாதிரி செய்யணும் தானே”,    

“என்ன சந்தியா நீ, அது அகல்யாக்கு நம்ம செஞ்சது, அதை உன் வீட்டுக்காரர் குடுக்கணும்னு என்ன அவசியம் அது தப்பும்மா, அகல்யா கூட இதை செய்யணும்னு இல்லை. பாரு, இப்போ அவ வீடு வாங்கி இருக்குறதனால தான் நாங்க நிம்மதியா ஒரு இடத்துல இருக்கோம், இந்த வயசுல உங்க பாட்டி நகை போட்டு என்ன பண்ண போறா”, என்றார் தாத்தா.

“அது அப்படியில்லை தாத்தா, அது நான் சொன்ன வார்த்தை நான் பாட்டிக்கு செஞ்சி தர்றேன்னு…… அதுல இருந்து நான் மாறக் கூடாது தாத்தா”, என்று சமாதானம் சொன்னாள்.

“வேண்டாம்மா, திருப்பிக் குடுத்துடலாம்”, என்றனர் தாத்தாவும் பாட்டியும், சந்தியா கேட்கவேயில்லை.

பிறகு இரவு சந்தியா கிளம்ப….. “இரு, தம்பி வந்து கூட்டிட்டு போவாங்க”, என்றார் அவளின் அம்மா.

“இல்லைம்மா, நான் வர்றேன்னு சொல்லிட்டேன்”,

“நான் இப்போ அவர்கிட்ட போன் செஞ்சு சொன்னேன், வருவாங்க!”, என்றார் ராஜம். அவளிடம் சொல்வதில் பிரயோஜனமில்லை என்று வெற்றியிடம் இரவு உணவிற்கு வருந்தி அழைத்திருந்தார்.

அவர் அப்படி கேட்கும் போது, “முடியாது”, என்று எப்படி சொல்வது என்று வெற்றியும் ஒத்துக் கொண்டிருந்தான்.

வெற்றிக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது……. அவன் வரவும் சந்தியா வீட்டினர் விழுந்து விழுந்து தான் கவனித்தனர்.

உணவு உண்டு முடித்து அவன் கிளம்பும் நேரம்….. சந்தியாவின் தாத்தா வந்தவர்….. “சந்தியா, ஏதோ தெரியாம கேட்டுட்டா. நீங்க இந்த நகையை வாங்கிக்கங்க”, என்று அவர் வேண்டிக் கேட்டுக்கொள்ள……

“இல்லைங்க பெரியவரே…. இது எங்களுக்கு ஒரு பெரிய விஷயமில்லை…. சந்தியா சொன்ன வார்த்தை எனக்கும் முக்கியம் தான், இது இருக்கட்டும்…. நீங்க குடுத்தாலும் நான் அதை வாங்க மாட்டேன்”, என்று விட்டான் முடிவாக. 

சந்தியாவும் வெற்றியும்  வீட்டிற்கு திரும்பின பிறகு அவன் பட்டறையை பூட்டி வர செல்ல…. சந்தியா உறங்க செல்ல…..

ஞானவேல் அவன் லேப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க, “டீ வீ பார்க்கலையா கண்ணு”, என்றார் மீனாட்சி.

“இல்லம்மா, நான் அதிகம் பார்க்க மாட்டேன்”, என்று சந்தியா சொல்லி முடித்த நேரம்….

வெற்றி வந்தவன்…… மீனாட்சியிடம், “இந்த தங்கபாண்டி பாரும்மா எனக்கும் சந்தியாக்கும் சினிமா டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கான்”,

“நான் போகலை நீங்க போயிட்டு வாங்கடான்னாலும் கேட்க மாட்டேங்கறான்…., ஏன் நான் வாங்கிட்டு வந்தா நீங்க போக மாட்டீங்களான்னு வருத்தப்படறான்”,

“மணி எட்டரை தானே ஆகுது, கிளம்புங்கடா”, என்றார் மீனாட்சியும்,

ஞானவேலும், “நீ போ வெற்றி, நான் பட்டறையை பூட்டிடறேன்”, என்றவன் பட்டறையை பார்க்க சென்று விட்டான்.

வெற்றி சந்தியாவிடம், “போகலாமா”, என்று கேட்கும் முன்னரே…… “போ கண்ணு, போய் சீக்கிரம் ரெடியாகு கண்ணு”, என்று மீனாட்சி  சந்தியாவை விரட்ட…..

சந்தியா போய் முகம் மட்டும் கழுவி வர…..

“ஏன் கண்ணு, துணி மாத்தலையா”, என்று மீனாட்சி கேட்டார்…..

அவள் பதில் சொல்லும் முன்னரே வெற்றி…… “நேரமாகிடும் மா, கிளம்பறோம்”,  என்று கிளம்ப முயன்றான், அவளிடம் நல்ல உடைகள் இல்லையே என்று.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது, இரு”, என்று மீனாட்சி அவரின் பீரோவை திறந்தவர்….. “இதுல ஒன்னு எடு வா”, என்று சந்தியாவைக் கூப்பிட…

அருகில் போய் பார்த்தால் அங்கே நிறைய சுடிதார்கள், சேலைகள் இருந்தன. சந்தியா, “என்ன இது”, என்பது போல பார்க்க….. 

“உனக்கு தான் கண்ணு, இந்த ஒரு மாசமா எனக்கு என்ன வேலை, நான் தான் எடுத்தேன். நீ எப்பவும் லைட் கலரா போடுறியா, அது உன் நிறத்துக்கு எடுப்பா இருக்கறதே இல்லை. அதான் நான் எடுத்தேன், உனக்கு இந்த கலரு எல்லாம் பிடிச்சிருக்கா எனக்கு தெரியலை”. என்றார்.

“உனக்கு இந்த ஞாயுத்துக்கிழமை பொறந்த நாள் தானே. உன் ஜாதகத்துல பார்த்தேன். அன்னைக்கு குடுக்கலாம்னு இருந்தேன், இதுல ஒன்னு இப்போ எடுத்து போட்டுக்கோ”, என்றார்.

வெற்றிக்கு கூட இந்த விஷயம் தெரியாது…. சந்தியாவிற்கு வார்த்தைகளே வரவில்லை…. கைக்கு கிடைத்த ஒன்றை எடுத்து உடை மாற்ற போக….

“நீ சூப்பர் மா”, என்றான் வெற்றி. 

அந்த புதிய சுரிதாரில் சந்தியா வந்த போது வெற்றியும் மீனாட்சியும் அசந்து தான் நின்றுவிட்டனர். உடை ஒருவரின் தோற்றத்தை எப்படி எடுத்துக் கொடுக்கிறது என்று பிரமித்து பார்த்தனர்.

சந்தியா அந்த உடையில் மிகவும் அழகாக இருந்தாள். ரெட் கலர் டாப்ஸ், கிரீன் கலர் பேன்ட் , அதிலும் அந்த காட்டன் டாப்சில் அழகிய வேலைப்பாடுகள்.

“நல்லாயிருக்கு கண்ணு உனக்கு!”, என்று மீனாட்சி கூற,

“எப்படிம்மா எனக்கு அளவு சரியா எடுத்தீங்க….”, என்றாள் சந்தியா வியந்து. அவளுக்கு அந்த உடை கச்சிதமாக பொருந்தியது.   

“அது கடையில ஒரு பொண்ணு உன் உயரத்துக்கு, அளவுக்கு இருந்துச்சு. அதை காட்டி எடுத்தேன்”, என்றார். 

“எவ்வளவு அழகாக இருக்கிறாள் இவள்”, என்று வியந்து கொண்டே  பைக்கை எடுத்தான் வெற்றி.              

மறுபடியும் சற்று தூர பயணம் வெற்றியோடு….. இப்போதும் அலெர்டாக சந்தியா அமர….. முன்பு அலுங்காமல் குலுங்காமல் வண்டியை ஒட்டிய வெற்றி, இப்போது ஆளில்லா இடங்களில் கூட ப்ரேக் போட…..

சந்தியாவின் தோள் வெற்றியின் முதுகில் அடிக்கடி மோதியது….. சற்று நேரம் பொருத்தவள்… “,இந்த சீட்டே உயரமா இருக்கு. நானே ஒரு பக்கமா கால் போட்டு இருக்குறதால, விழுந்துடுவன்னோன்னு பயந்துட்டு உட்கார்ந்து இருக்கேன்….. இதுல நீங்க இப்படி ப்ரேக் போட்டா எப்படி”,

“ரோட்ல நிறைய பள்ளம், நான் என்ன பண்ணுவேன்”, என்றான் வெற்றி. அப்போது தான் சந்தியாவும் கவனித்தால், நிஜமாகவே நிறைய பள்ளங்கள்….

“நீ விழுந்துட்டா என்ன பண்றதுன்னு தான் ப்ரேக் போட்டேன்”, என்று விளக்கம் கொடுக்க……

“அதான பார்த்தேன்”, என்று மனதிற்குள் நொடித்தாள் சந்தியா.

பிறகு சினிமாவிற்கு போக….. அங்கே சீட் தேடி அமர்ந்தவன்….. அவளையும் அமர வைத்தான்….. அவ்வளவு தான், இண்டர்வல் விடும் வரை வெற்றி படத்தில் ஆழ்ந்து போக…… இண்டர்வல் விட்டதும் பார்த்தால் சந்தியா உறங்கியிருந்தாள்.

கைகளை கன்னத்தில் முட்டுக் கொடுத்து உறக்கத்தில் இருந்தாள். ஓவியப் பாவையாக இருந்தாள்.

வெற்றி தியேட்டருக்குள் வரும் போதே கவனித்து இருந்தான்…. சந்தியாவை யார் பார்த்தாலும் மறுமுறை திரும்பி பார்த்தே சென்றனர். ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் கூட….

சந்தியாவிற்கு இது பழக்கமான விஷயம் என்பதால் அவள் வழக்கம் போல இருக்க….. பார்ப்பவர்கள் கண்களில் தெரிந்த ஆர்வத்தில், இவ்வளவு அழகான பெண்ணா என்ற பார்வையில்….. முதல் முதலாக தன் மனைவி அழகி என்பதில் வெற்றிக்கு சற்று பெருமையாக கூட இருந்தது.

தான் அவளுக்கு குறைவோ என்று வெற்றி தன்னை ஆராய்ந்து கூட பார்த்தான். கரிய நிறத்தவன் என்பதை தவிர அவன் தோற்றத்தில் குறைவு எதுவும் கிடையாது.   

இப்போதும் தனது தோற்றத்தை யோசித்து பார்த்துகொண்டே சந்தியாவையும் கண்களால் அளவெடுத்து கொண்டான். இந்த சாதாரண உடைகளில்லேயே தேவதையாய் இருப்பவள் இந்த புதிய உடையில் இன்னும் தேவதைகளிலும் தேவதையாய் தெரிந்தாள்.   

ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அவன் சந்தியாவை பார்த்த போதும் அவள் உறக்கம் கலையவில்லை.       

“ஐயோ, என்ன இவ இப்படி தூங்கறா! இவளை விட்டுட்டு எப்படி எழுந்து போகறது! எழுப்பி பேசாம வீட்டுக்கு போயிடலாமா!”, என்று அவன் நினைக்கும் போதே….

குழந்தை ஒன்று அதன் அண்ணனோடு சண்டையிட்டு கத்த, உறக்கம் கலைந்தவள் வெற்றி தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, “படம் முடிஞ்சிடுச்சா, வீட்டுக்கு போகலாமா”, என்று எழ போக…

“இது இண்டர்வல்”, என்றவன், “ரொம்ப தூக்கமா இருந்தா வீட்டுக்கு போகலாம்”, என்றான்.

“வேண்டாம், நீங்க ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா பாக்குறீங்க. நான் இருக்கேன், குடிக்க மட்டும் ஏதாவது வாங்கிட்டு வாங்க”, என்று சொல்ல….

ஒரு கோக்கை வாங்கி வந்தான்….

“உங்களுக்கு”, என்றவளிடம்,

“எதுவும் வேண்டாம்”, என்று சொல்ல…

பாதி குடித்தவள், “எனக்கு போதும், நீங்க குடிங்க!”, என்று சொல்லி அவனிடம் கொடுத்து, இண்டர்வல் முடிந்து ஆரம்பித்த படத்தை பார்க்க முற்பட்டாள்.

அவளின் செய்கைகள் மிகவும் இயல்பாக இருந்தன…  ஆனால் வெற்றி தான் சற்று தடுமாற ஆரம்பித்தான். அவனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா இன்னும் அவனால் நம்ப முடியவில்லை.

திரும்ப வண்டி எடுக்கும் போது, “ஏற்கனவே தூங்கி வழியற, ஒரு பக்கமா உட்கார்ந்து விழுந்துடாத, ரெண்டு பக்கமா கால் போட்டு உட்காரு”, என்று வெற்றி சொல்ல……. சற்று தயங்கிய போதும் அமர்ந்தாள்…….

அது ஹய் ஸ்பீட் இன்ஜின் பைக், வெற்றி ஏதோ யோசனையில் சற்று வேகமாக பைக்கை கிளப்ப, வண்டி எடுத்த வேகத்திற்கு அவன் மேல் மோதி அவனின் தோளை இறுக்கமாக பிடித்து பின்பு, “ஷப்பா”, என்று விலகினாள்.

வெற்றிக்கு இது ஒரு புதிய அனுபவம்…… இருந்தாலும் வாய் தானாக, “சாரி”, என்றது. சந்தியா இருந்தாலும் பயத்தில் வெற்றியின் தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். 

“இதுவரை இல்லாத உணர்விது……”, என்று வெற்றிக்கு பாட தோன்ற…

“அய்யே, என்ன வண்டி இது! முதல்ல சீட் உயரமா இல்லாம வண்டி எடுங்க…. சடனா பிரேக் போட்டீங்க, வழுக்கிட்டு வந்து உங்க மேல தான் விழுவேன்”, என்று சலித்தவாரே சந்தியா சொல்ல, அது அவனின் காதில் விழுந்தால் தானே.  விழுந்திருந்தாலும் இனி அவனாவது வண்டியை மாற்றுவதாவது…….

Advertisement