Advertisement

அத்தியாயம் இருபது: 

காலை எப்பொழுதும் போல வெற்றிக்கு விடிய, அவன் உடற்பயிற்சி வகுப்பு எடுக்க சென்றுவிட்டான்.

சந்தியா எழும்போது அவன் இல்லை….. “கடமை கண்ணாயிரம், ஒரு நாள் போகலைன்னா குறைஞ்சா போயிடும், யாரு என்ன நினைப்பாங்கன்னு அறிவே இல்லை”, என்று வாய் விட்டே முணுமுணுத்தாள். 

சந்தியாவிற்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுந்து குளித்து  முடித்து மேலே சென்று அவளுடைய துணிகளை துவைத்து காய வைத்து வீட்டின் உள் வந்த போது….

மீனாட்சி வீட்டில் குடியிருப்பவரிடம் அரட்டை அடித்துக் கொண்டு நின்றிருக்க… ஞானவேல் தான் டீ வைத்துக் கொண்டிருந்தான். சந்தியாவை பார்த்தும் அவன் தயங்க…..

“இவன் எதற்கு டீ வைக்கிறான்”, என்பது போல சந்தியா பார்க்க…..

“அம்மா டீ ரொம்ப சுமார், அதான்”, என்று ஞானவேல் தயங்கி நிற்க……

“நான் டீ வைக்கிறேன், தள்ளுங்க!”, என்றவள்…… “நீங்க போகலையா”, என்றாள் சகஜமாக.

“எங்க?”, என்றவனிடம்,

“அதான் தண்டால் பஸ்கி அதெல்லாம் எடுக்க…..”,

“நேத்து தானே உங்க கல்யாணம் நடந்தது, இன்னைக்கு வெற்றி வரமாட்டான்னு யாரும் வந்திருக்க மாட்டாங்க”, என்றான்.

“நீங்க இன்னும் வெளில போய் பார்க்கலையா”, என்று சந்தியா கேட்ட விதத்தில்…..

“வெற்றி, அங்க போயிட்டானா”, என்று ஞானவேல் வியப்பாக கேட்க…..

“அதெல்லாம் எப்பயோ ”, என்றபடி சந்தியா வேலையை பார்க்க……

ஞானவேல் பரபரப்பாக வெளியில் வந்து பார்த்தான்…..

அங்கே பயிற்சிகள் நடந்து கொண்டிருக்க….. “ஷப்பா, முப்பது வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்கையோட பாதி நாளை வேஸ்ட் பண்ணிட்டு….. இப்பவும் வந்து  இங்க நிக்கறான், இவனை…..”, என்று பல்லை கடிக்க தான் ஞானவேலால் முடிந்தது.

முன்பு போல இருந்தால் உரிமையாக பேசியிருப்பான்… “புதிதாய் வந்திருக்கும் பெண், நீ உடன் இருக்க வேண்டாமா”, என்று. இப்போது தான் வெற்றி அவனிடம் பேசுவது இல்லையே…

மனம் சற்று சுணங்க. அவனும் பயிற்சிக்கு போய் நின்று கொண்டான்.

மீனாட்சி மும்முரமாக அரட்டையில் இருக்க…. வெற்றி முன் சென்றிருக்க…. ஞானவேல் பின் தொடர்ந்து இருக்க…. வைத்த டீ ஆறிக் கொண்டிருக்க…. இரவு சரியாக சாப்பிடாதது, உறக்கமின்றி கண்கள் கண்ணீர் உகுத்தபடி இருந்தது, தலைவலி ஆரம்பித்திருக்க, சந்தியாவிற்கு டீ குடித்தால் தேவலாம் போன்று இருந்தது.

குடிக்கலாமா வேண்டாமா முதல் நாள் தானாக குடித்தால் ஏதாவது தப்பாக எண்ணுவார்களோ……

ஞானவேல் சென்றவன்…… “மாஸ்டரை அம்மா கூப்பிடறாங்கன்னு சொல்லு”, என்று ஒரு மாணவனிடம் சொல்ல…..

வெற்றி வீட்டிற்கு சென்றான்…. அங்கே அம்மா இல்லை….. அவர் தான் பக்கத்தில் அரட்டையில் இருந்தாரே…. ஹாலில் இருந்த ஜன்னல் வழியாக சந்தை பார்க்க….. படியில் அமர்ந்து மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார்.

“மா, எதுக்கு கூப்பிட்ட?”, என்று வெற்றி அங்கிருந்தே கேட்க….

“நான் கூப்பிடலை”, என்று சொல்லி அவர் அரட்டையை தொடர…..

இவன் பேச்சு சத்தம் கேட்டு ரூமினுள் இருந்து விரைந்து வந்த சந்தியா, “டீ குடிக்கறீங்களா, இப்போ தான் வெச்சேன்! கொண்டு வரட்டுமா!”, என்றாள்.

“இல்லை, வேண்டாம்!”, என்று வெற்றி சந்தியாவின் முகம் பார்க்காமல் விரையப் போக……

“நான் குடிக்கட்டுமா! தலைவலிக்குது,!” என்று சொல்லியே விட்டாள். 

திரும்பி அவளை பார்த்தான்…. முகம் சோர்ந்து தான் இருந்தது…. வேறு எந்த வித்தியாசமும் இல்லை…. அவளை எப்போதும் பார்த்திருந்த உடை… கழுத்தில் தடிமனாக இருந்த புது மஞ்சள் கயிறு….. கைகளில் இருந்த மணப்பெண் அணியும் கண்ணாடி வளவிகள் அதை தவிர ஒரு வித்தியாசமும் இல்லை.

“நீ டீ குடிக்க எதுக்கு என்கிட்டே கேட்கற……”, என்றான்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்த சந்தியா… “ப்ச்”, என்று அவளையும் மீறி ஒலி எழுப்பி சலிப்பாக திரும்பி உள்ளே சென்றாள்.

 அவள் திரும்ப சென்ற விதம் மனதை அசைக்க…… “சந்தியா”, என்று குரல் கொடுத்தான் வெற்றி……

திரும்பியவள் அவனை பார்த்து நிற்க….. வேஷ்டியை மடித்துக் கட்டி வெற்று மார்புடன்…. சந்தியா நேற்றிரவு சொன்ன மாதிரி தான் நின்றான்.

“எதுக்கு என்கிட்டே கேட்கறன்னு தான் கேட்டேன்….. உன்னை குடிக்க வேண்டாம்னா சொன்னேன். எதுக்கு இப்போ குடிக்காம போற! போ! போய் குடி!”, என்று அவள் ஏதோ தப்பு செய்தவள் போல ஒரு அதட்டல் போட….

“நீங்க யாரும் குடிக்கலை…… நீங்கல்லாம் குடிக்காம நான் எப்படி குடிப்பேன்…. இங்க என்னோட ஃபர்ஸ்ட் டே இது, அட்லீஸ்ட் நீ குடின்னு என்கிட்டயாவது சொல்லணும்….”,

“நீங்க என்னை பார்த்தாலே முகத்தை திருப்பி கிட்டு போறீங்க…. நான் என்ன பண்றது…. ஒரு நாள் சொல்லிட்டா நான் என்னன்னு பார்த்துக்குவேன்….. இப்படி எதுவும் சொல்லாம போனா என்ன செய்யறது….”,

“இதுல நீ டீ குடிக்க என்கிட்டே ஏன் கேட்கறனு கேள்வி வேற…..”,  மனதில் நினைத்ததை சொல்லி முடிக்கவும், மனதில் ஒரு பதட்டம் ஏறிக்கொள்ள,  அதன் தாக்கத்தில்  தலையில் யாரோ மத்தளம் வாசிக்க வலியில் அமர்ந்து விட்டாள்.

“தோ பாரு! யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்! எல்லாம் உன் இஷ்டம் தான்…. இங்க எங்களுக்கே எதுவும் ரூல்ஸ் கிடையாது… இதுல உன்கிட்ட போய் என்ன சொல்வோம்… எங்கம்மா உனக்கு எதுவும் சொல்ல மாட்டாங்க! நீ தான் அவங்களுக்கு சொல்லணும்….. போ, போய் டீ குடி…”, என்றான்.

“உங்களுக்கு?”,

“இப்ப வேண்டாம்….. அங்க கடையில டீ வாங்கிட்டு வர்ற பிளாஸ்க் இருக்கும் ஊத்தி வை”, என்றான்.

சிரித்து…. சந்தோஷமாக….. அன்யோன்யமாக….. இப்படி பேச ஆரம்பிக்காவிட்டாலும்…. இருவரும் அந்த நிமிடத்தில் இருந்து பேச ஆரம்பித்து விட்டனர்.   

அதற்குள் மீனாட்சி வந்து விட…… “ஏம்மா? காலையில போய் அரட்டைக்கு நிப்பியா… உனக்கு தான் வேலை கிடையாது. அவங்களுக்கு இருக்குமா? இருக்காதா? அடுத்தவங்களை போய் தொந்தரவு பண்ணிக்கிட்டு”, என்று அவரையும் சத்தம் போட்டு சென்றான்.

இதற்கெல்லாம் அசைபவரா மீனாட்சி… அவன் பேசியதே காதில் விழாதவர் போல……. “குளிச்சிட்டியா கண்ணு”, என்றார்.

“ம், டீ ஆருதும்மா! முதல்ல குடிங்க!”, என்றாள்.

“நீ வெச்சியா, குடு! குடு!”, என்று அவர் அங்கிருந்த சேரில் அமர…… கொண்டு வந்து கொடுத்தாள்…….

பின்பு அவரிடம் என்ன செய்வது என்று கேட்டு சமைத்தாள்…. முன்பெல்லாம் எப்போதும் வெற்றியும் ஞானவேலும் அமர்ந்து தான் காலை உணவு உண்ணுவர்….. இப்போது சிறிது நாட்களாக அந்த பழக்கம் இல்லாது இருக்க…..

இன்று வெற்றி உணவருந்த அமர்ந்தவுடன் ஞானவேலும் அமர….. வெற்றி எழுந்து போகவில்லை…… அமர்ந்து தான் இருந்தான்.

தோசை சுட சந்தியா நிற்க….. ஒரு பெரிய காமெடி தான் நடந்தது. அவள் மெல்லியதாய் தோசை ஊற்ற….. அது வெற்றியின் ஒரு வாய்க்கு தான் வந்தது.

சந்தியா சுட்டாள்….. சுட்டாள்……. சுட்டுக் கொண்டே இருந்தாள்.

இப்படி சுட்டால் தன் மக்களுக்கு கட்டுப் படி ஆகாது என்று எப்படி சொல்வது என்று மீனாட்சி தடுமாற……

“என்னமா இது? ஒரு வாய்க்கு தோசை சுட்டு விளையாண்டுட்டு இருக்கா இவ… இதுல நீ இன்னும் ஒரு வாரத்துக்கு அசைவமும் செய்யக் கூடாதுன்னுட்ட…… நான் என்ன நாள் முழுசும் சாப்ட்டுட்டே இருக்குறதா! போம்மா போய் அவளுக்கு எப்படி செய்யறதுன்னு காட்டு!”, என்று வெற்றி சொல்ல……

மீனாட்சி ஒரு சாம்பிள் காட்ட…. இட்லியை தோசைக்கல்லில் வேக வைப்பதை சந்தியா அன்று தான் பார்த்தாள். தோசை அவ்வளவு மொத்தமாக இட்லியை போல இருந்தது.

“அது காலையில நிறைய பயிற்சி செய்யறாங்கள்ள பசிக்கும்…. எத்தனை தோசை சுடறது, அதான் இப்படி சுட்டா சீக்கிரம் வேலை முடியும்”, என்று சொல்ல……

வந்த புன்னகையை சிரமப்பட்டு அடக்கினாள் சந்தியா. அவளுக்கு யாரவது இப்படி கூட சாப்பிடுவார்களா என்றிருந்தது.

வெற்றி தயங்கிய, பயந்த பழக்க வழக்க வித்தியாசங்கள்.  

சந்தியா வீட்டினர் எந்நிலையில் இருந்தாலும் உணவு, பழக்கவழக்கங்கள் எல்லாம் நாகரீகத்தை கொண்டிருக்கும்.

ஆனால் வெற்றி வீட்டில் சுட்ட கஞ்சி சோறு கூட கருவாடு….. 

சாப்பிட்டு அவரவர் வேலையை பார்க்க அண்ணனும் தம்பியும் போய் விட….. எப்போதும் காலை உணவுக்கு பின் கண்ணயரும் பழக்கமுள்ள மீனாட்சி…. உணவு உண்டு, “பன்னன்டு மணிக்கு மேல சமையலை பார்த்துக்கலாம்”, என்று உறங்கி விட…..

அவர் சாப்பிட அழைத்த போது, “நான் சாப்பிடுக்கறேன்”, என்று சொல்லி விட்டிருந்தாள்.

நேற்று தான் நமக்கு திருமணம் ஆனாதா….. “இங்கே இரு வருடத்திற்கும் மேலே குடியிருந்தனே! அப்போது ஒன்றும் தெரியவில்லையே! இவர்கள் பழக்கமே வித்தியாசமாக இருக்கிறதே!”,

அங்கே என்ன நடக்கிறது என்று ஊன்றி கவனித்து இருந்தால் தானே பழக்க வழக்கங்கள் தெரியும்.  சந்தியாவிற்கு எப்போதும் அடுத்த வீட்டை பார்க்கும் பழக்கமில்லை. முதலில் அந்த வீட்டிற்கு உள்ளேயே ஒரு இரு முறை வந்திருப்பாள் அவ்வளவே. 

இதுவரை சாமி படத்தின் முன் விளக்கு என்ற ஒன்று ஏற்றவேயில்லை. அவளாக சென்று சாமி படத்தின் முன் விளக்கேற்றி உண்டு முடித்து அமர்ந்தாள்.

பின்பு வீட்டில் பார்வையை ஓட்ட, வீடு நிறைய செலவு செய்து கச்சிதமாக தேவைக்கு கட்டியிருந்தான்…. அதற்கு தகுந்த மாதிரி பொருட்களும் வாங்கி போட்டிருந்தான். ஆனால் ஒரு ஒழுங்கில்லை. 

சமையல் கட்டு அதற்கு மேல் கந்தர கோலம்.  அதையெல்லாம் சுத்தம் செய்ய கைகள் பரபரத்தது. வந்த நாளே அதையும் இதையும் மாற்றினால் மீனாட்சி ஏதாவது நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று அமைதியாக அமர்ந்திருந்தாள்.  

இன்று வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தாள்…. வெற்றி ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான்…….. நகைக்கு வேறு கேட்டாள் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.

வெற்றியிடம் அவளுக்கு தயக்கமேயில்லை…. யாரிடமும் சிறு பொருள் கூட வாங்க ப்ரியப்படாதவள் வெற்றியிடம் நகையை கேட்டுவிட்டாள்.

இப்போது கேட்டிருந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது. 

அவளின் அம்மா வேறு காலையில் இருந்து இரண்டு முறை போனில் அழைத்தார்… “வர்றேன்னு சொன்னீங்களே மா….. நான் நேர்ல வந்து கூப்பிடட்டா”, என்று கேட்க……

“அம்மா! நான் சொல்றேன்!”, என்று விட்டாள். தாத்தா வேறு தனியாக கூப்பிட்டார். 

எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு மொட்டு மொட்டென்று அமர்ந்திருந்தாள்… ஹாலில் மீனாட்சி படுத்திருந்தார்.

பதினோரு  மணியான போது வந்த வெற்றி….. “டீ வையேன்!”, என்று அமர்ந்தான். ஏதோ யோசனையில் இருப்பது மாதிரி தெரிந்தது.

சந்தியா வைக்கவும் அருந்தியவன்….. “உள்ள வா!”, என்றழைத்து போனான்.

கதவை மெதுவாக சத்தம் செய்யாமல் மூடித் தாளிடவும்….. விழிவிரித்து அவன் செய்கையை பார்த்தாள் என்ன இது என்பது போல…….

வெற்றி எதையும் கவனிக்கவில்லை….. அதையும் விட மெதுவாக பீரோவை திறந்தான்…..

“அய்யே! இதுக்கு தான் இந்த பில்ட் அப் போல!”, என்று மனதிற்குள் நினைத்த சந்தியா.. “மச்சான பத்தி தெரிஞ்சும், நீ ஒரு நிமிஷம் என்னவோன்னு நினைச்சிட்டியேடி…..”, என்று மனதிற்குள் தலையில் அடித்துக் கொண்டவள்….

சாது போல அவன் முகம் பார்க்க……

“இங்க வா!”, என்று வெற்றி பக்கத்தில் அழைக்க……… அவன் ஒன்றும் செய்ய போவதில்லை என்று தெரிந்தும் என்னவோ என்று அருகில் செல்ல……

ஒரு பெட்டியை உள் லாக்கரில் இருந்து எடுத்தான்.. ஒரு பிளாஸ்டிக் டப்பா, “திற”, என்று சொல்ல…..

திறந்தால் எல்லாம் நகைகள்….. புதிது அல்ல பழையது…..

“என்ன இது?”, என்றாள்.

“பணம் வாங்குனவங்க பணத்தை திரும்ப தர முடியாம அப்படியே விட்டுட்டது”, 

வட்டிக்கு பணம் வாங்கியவர்கள், வட்டியையும், அசலையும் கட்ட முடியாமல்….. அதற்கு ஈடாக கொடுத்தது.

“இதை ஏன் இவ்வளவு ரகசியமா எடுக்கறீங்க…..”,

“எங்கம்மாக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்…. அவங்க நகையெல்லாம் நமக்கு வேண்டாம் வித்து காசை குடுக்க சொல்லுன்னு சொல்லுவாங்க! அதனால அவங்களுக்கு தெரியாம வெச்சிருக்கேன்!”.

“அவங்க சொல்றது சரி தானே…..”,

“என்ன சரி?……. குடுத்தோம்னா பாதி பணம் தான் வரும்… மீதி கேட்டா என்னவோ பணத்துக்கு கறார் பண்ற மாதிரி வரும்…. அதுக்காக நம்ம கூட போய் விக்க முடியாது… இதுல நிறைய விஷயம் இருக்கு…..”,

“எல்லா நகையும் அந்த மாதிரி கிடையாது, சில சமயம் பேங்க்ல ஏலத்துக்கு வரும்போது என்கிட்டே பணம் வாங்கி அதை கட்டி திருப்பி…… திரும்ப என்கிட்டே வித்துட்டு மீதி பணம் வாங்கிக்குவாங்க…..”,   

“உன் பாட்டிக்கு நீ எத்தனை பவுன நகை வாங்கி குடுக்கணும்”, என்று அவன் கேட்ட போது……

நெகிழ்ந்து விட்டாள், அவன் மறக்கவில்லை என்று……

“கைக்கு ரெண்டு வளையல், கழுத்துக்கு ஒரு செயின்”, என்றாள்.

அவள் பதில் சொன்ன விதத்தில், “நீ அவ்வளவு தான் வாங்குனியா……”, என்றான் சந்தேகமாக.  

“அது போதும்……..”,

“நீ எவ்வளவு வாங்கின”, என்றான் திரும்பவும் அதட்டலாக.

தயங்கி, தயங்கி, “நிறைய வாங்கினேன்…. எல்லாம் கொடுக்க முடியாது…..”,

“எவ்வளவு வாங்கின அத மட்டும் சொல்லு….”, என்றான் திரும்ப…..

“கிட்ட தட்ட இருபது பவுன்”, என்று அவள் மிகவும் தயங்கி கூற….

அதிலிருந்து சில நகைகளை எடுத்தவன், தன் பேன்ட் பேக்கெட்டில் போட்டுக் கொண்டான், “என்ன, என்ன, நகை……”, என்ற கேள்வியோடு.

“கைல மூணு மூணு வளையல், அப்புறம் ஒரு ரெட்டை வட சங்கிலி”,

“சரி கிளம்பு, வெளில போறோம்னு அம்மா கிட்ட சொல்லிட்டு, வாங்கிட்டு வந்துடலாம்”,          

“அம்மா கிட்ட நகை வாங்கறதை சொல்ல வேண்டாமா”,

“வேண்டாம்…… சொன்னா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா தெரியணும்னு அவசியமில்லை”.

அவன் கிளம்ப, “இப்படியேவா”, என்று அவனின் மெக்கானிக் உடையை காட்ட….

“நீ போ! நான் மாத்திட்டு வர்றேன்!”,

ப்ளூ ஜீன்சும், லைட் பிஸ்கட் கலர் ஷர்டுமாக அவன் வந்து நின்றபோது அவனின் முரட்டு தோற்றத்திற்கு நன்கு பொருந்தியது.

“அம்மாவை எழுப்பட்டுமா”, என்று அவள் கேட்க…..

“நீ டிரஸ் மாத்திட்டு எழுப்பு…….”,

“நானா? நான் இதுலயே வர்றேன்!”, என்றாள் அவசரமாக….

எல்லாம் இது போல தான் அவளிடம் இருக்கும் விலை குறைவாக…… ஆனால் அதை சொல்ல முடியாதே.   

தீர்க்கமாய்  அவளை பார்த்தான்….

“என்ன?”, என்ற அவளின் கேள்விக்கு ஏதோ கேட்க வந்தவன், பிறகு விட்டுவிட்டான். மீனாட்சியை எழுப்பி சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.

“நான் தோசை ஊத்திக்குவேன், வெளில சாப்பிட்டிட்டு வந்துடுங்க! இனிமே சமைக்க முடியாது, நேரமாயிடுச்சு!”, என்று சொல்ல…

அவன் தப்பாக எடுத்துக் கொள்வானோ என்று சந்தியா அவசரமாக, “நீங்க சொல்லியிருந்தா நான் செஞ்சிருப்பேன்…… இப்போ கூட ஒன்னுமில்லை அரிசி மட்டும் ஊறப் போடுங்கம்மா, நான் வந்து சமைக்கறேன்!”, என்று சொல்ல…

“இன்னா கண்ணு நீ, புருஷனோட போவியா! வந்து சமைக்கறேன்னு சொல்லிக்கிட்டு…. போ, போ”, என்றார்.

“நீ ஒன்னும் தோசை ஊத்தாதம்மா, நான் உனக்கு வாங்கிட்டு வர்றேன்!”, என்று வெற்றி மீனாட்சியிடம் கூறி தான் கிளம்பினான்.

எத்தனை சிநேகிதம் என்றாலும் இது வரை வெற்றியின் பைக்கில் அவள் அமர்ந்தது இல்லை…. 

அந்த பின் சீட் வேறு உயரமாக இருந்தது.. ஏறி உட்கார்ந்தாள்….. ஒரு சின்ன பிரேக் போட்டால் கூட அவன் மேல் சென்று தான் மோத வேண்டும்.

சீட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டு அலெர்டாக உட்கார.. அதற்கெல்லாம் அவசியமேயில்லாமல் வெற்றி, சென்னை ட்ராபிக்கிலும் அலுங்கல் குலுங்கல் அதிகமில்லாமல்…. மேலே மோத சந்தர்ப்பமே கொடுக்காமல் ஓட்டினான்.

கிட்ட தட்ட அரை மணிநேர பிரயாணம், ஒரு புகழ் பெற்ற நகைக் கடையின் முன் வண்டியை நிறுத்த…..

இறங்கிய சந்தியாவின் முகத்தில் ஒரு மெல்லிய குறும்பான புன்னகை…. வண்டியை பார்க் செய்து வெற்றி அவளை பார்க்க… சந்தியா அதே புன்னகையோடு நின்றிருந்தாள்.

“என்ன?”, என்று வெற்றி கேட்க……

“நல்லா வண்டி ஓட்டறீங்க”, என்று காம்ப்ளிமென்ட் கொடுத்தாள்….

“இது எதற்கு?”, என்பது போல வெற்றி ஒரு பார்வை பார்க்க…

“சீட் ரொம்ப உயரமா இருந்திச்சா…… பிரேக் போடும்போது மேல மேல மோத வேண்டி வருமோன்னு நினைச்சேன்… ஆனா ஒரு தடவை கூட அப்படி ஆகலை, நல்லா ஓட்டறீங்க”, என்றாள்.

இவள் நிஜமாகவே வண்டி ஓட்டுவதை புகழ்கிறாளா, இல்லை அந்த சாக்கில் தன்னை ஓட்டுகிராளா என்று புரியாமல் விழித்தான் வெற்றி.

அதுவுமில்லாமல் அவள் ஒரு பக்கமாக தான் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். இரு பக்கம் எல்லாம் போட்டு அமரவில்லை. அவன் பார்வையை பார்த்து, “இவர் ஏன் இப்படி பார்க்கிறாரு, நாம நம்ம தோள் மோதும்னு தானே சொன்னோம்,  இவர் ஏதாவது தப்பா நினைச்சிட்டாரோ’, என்று இப்போது சந்தியாவும் விழித்தாள்.

வெற்றி பேசாமல் கடையின் உள் போக…. அவனை பின் தொடர்ந்தாள்.  

“என்னன்னு பார்த்து எடு”, என்று அவன் வளையல்கள் வைத்திருந்த    பகுதியில் அமர்ந்தான்.

அவள் அளவு பார்த்து பாட்டி முன்பு போட்டிருந்தது போலவே இரண்டு வளையல்களை எடுக்க….

“இந்த மாதிரி இன்னும் நாலு வேணும்”, என்று வெற்றி அந்த  வளையல்   காட்டிக் கொண்டிருந்த இளைஞனிடம் கூற…..

“சார், டெய்லி யூஸ்க்கு இந்த டிசைன் ஓகே, ஆனா இன்னும் நாலு வளையல் ஏன் இப்படி எடுக்கறீங்க…..   இன்னும் புது டிசைன்ஸ் பார்க்கலாம்! மேடம் கைக்கு நல்லா இருக்கும்….”,

புதிதாக மணமானது அவளின் கழுத்தில் இருந்த தாலிச்சரடும் மணப்பெண் கண்ணாடி வளையல்களும் அந்த இளைஞனுக்கு உணர்த்த……

“மேடம்க்கு உங்க மேரேஜ் கிஃப்ட் நல்லா இன்னும் புது டிசைன்ள குடுங்க சார்!”, என்றான் புன்னகையோடு, வளையல்கள் சந்தியாவிற்கு என்று நினைத்து.

அவன் கேட்டவுடன் வெற்றிக்கு தான் சங்கடமாக போயிற்று….  வெற்றி பதில் சொல்லுமுன்னே, “இது வேற பெரியவங்களுக்கு”, என்று சந்தியா சொல்லிவிட….

“ஓஹ் சாரி! நான் மேடம்க்குன்னு நினைச்சேன்”, என்று சொல்லிவிட்டு வெற்றி கேட்டதை காட்ட……

பின்பு ரெட்டை வட சங்கிலியும் எடுத்து விட….. பழையதை கொடுத்து கணக்கு பார்த்து கிளம்பினர்.  

இப்போது வெற்றியின் பார்வை முழுவதும் சந்தியா மேல் தான். நிறைய கோபம் அவனுக்கு சந்தியா மேல். இல்லை என்று மறுப்பதற்கில்லை…. அதற்காக அவள் மேல் இருக்கும் அக்கறை அன்று வரை வெற்றிக்கு குறைந்ததே கிடையாது.

ஆனால் சந்தியா மேல் இருந்த கோபத்தில், திருமணத்திற்கு முன், “அம்மா அவங்க மாப்பிள்ளைக்கு துணி எடுக்க, இல்லை வேற எதுக்கு கேட்டாலும் நாங்க பொண்ணு வீட்ல இருந்து எதுவும் வாங்க மாட்டோம். நமக்கு பழக்கமில்லைன்னு சொல்லிடு”, என்று சொல்லியிருந்தான்.

சந்தியா வீட்டினர் கேட்டதற்கு மீனாட்சியும் அப்படியே சொல்லி விட….. அவர்களுக்கு பெண்ணை அனுப்புவது மட்டுமே வேலை. வேறு ஒரு பைசா செலவு இல்லை என்பது தான் உண்மை. திருமணத்திற்கு அவர்களின் நெருங்கிய சொந்தங்களை அழைக்க போய் வந்த செலவு இருந்திருக்கும் அவ்வளவே.     

இப்போது சந்தியாவின் தோற்றத்தை, அவளின் உடைகளை அவளின் அணி மணிகளை எல்லாம் ஆராய்ச்சியோடு சந்தியா பாராமல் பார்த்திருந்தான்.   

 வெற்றி பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றான். அவளை கேட்டு உணவு வகைகளை ஆர்டர் செய்து இருவரும் உண்டு முடிக்கும் போதே மணி இரண்டை நெருங்கி விட…… அம்மாவிற்கும் வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

வீடு வந்ததும் அம்மாவிடம் கொடுத்து விட்டு அவனின் ரூமினுள் அவன் செல்ல…. சந்தியா மீனாட்சிக்கு உணவு பார்சல்களை பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

வெற்றி சந்தியாவின் பேக் அங்கே ரூமில் வைத்திருந்தை தான் ஆராய்ந்தான். இரண்டு பேக்கில் அதில் உடைகள் மட்டுமே… அதுவும் எல்லாம் மிகவும் சாதரணமாக தான் இருந்தது.

பிறகு அவளின் சர்டிஃபிகேட்கள் அவ்வளவவே, வேறு எதுவுமில்லை.   

உள்ளிருந்து, “சந்தியா!”, என்று குரல் கொடுக்க…

“போம்மா போய் பாரு”, என்று மீனாட்சி அவளை அனுப்ப…….

உள் வந்தவளிடம், “இதெல்லாம் உள்ள வை”, என்று பீரோ சாவியை அவளிடம் கொடுத்தான்.

அவள் அதை வாங்கி, நகைகளை உள் வைத்து திரும்ப….

கட்டிலில் அமர்ந்திருந்தவன்…… “உங்க வீட்ல இருந்து ஏதாவது நீ இன்னும் எடுத்துட்டு வரவேண்டியிருக்கா……”, என்று கேட்டான்.

“இல்லை, எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்…..”.  

அவளை யோசனையாக பார்த்தவன், “கல்யாணத்துக்கு என்ன வாங்கின?”, என்றான்.

அவன் சந்தியா அவளின் திருமணத்திற்கு என்ன வாங்கினாள் என்று கேட்க…… வெற்றி தான் அகல்யாவின் திருமணத்திற்கு வாங்கின பாட்டி நகையை கேட்கிறான் என்று நினைத்து, “பாட்டி நகை, அதை தான் இப்போ வாங்கினோம்”, என்றாள்.

“நான் அதை கேட்கலை, நம்ம கல்யாணம் முடிவாகி ஒரு மாசம் ஆச்சு,  உன் கல்யாணத்துக்கு உனக்கு என்ன வாங்கின”, என்றான் தீர்க்கமாக அவளை பார்த்து.

அவள் என்ன கேள்வி இது என்று புரியாமல் நிற்க……

“நான் எனக்கு என்ன வாங்கினன்னு கேட்கலை, உனக்கு என்ன வாங்கின”, என்றான் திரும்பவும் சற்று கோபமாக…..  

அந்த பார்வை நிச்சயம் சந்தியாவை குற்றம் சாட்டியது.             

Advertisement