Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:

திருமணம் முடிந்ததும் மதியத்திற்கு முன் மணமக்கள் வெற்றியின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

சந்தியா வீட்டினருக்கு வெற்றியுடனான சந்தியாவின் திருமணத்தில் அவ்வளவு சந்தோசம் இருப்பதாக தெரியவில்லை. நண்பர்கள் என்ற முறையில் பழகுவது வேறு…. உதவி பெற்றுக் கொள்வது வேறு…. வீட்டில் குடியிருப்பது வேறு. ஆனால் உறவு முறை ஏற்படுத்திக் கொள்வது வேறு அல்லவா…..

எல்லோரும் ஒரு இறுக்கமான சூழ்நிலையில் தான் இருந்தனர்…… சந்தியாவின் தாத்தாவும், அவளின் அம்மாவும் மட்டுமே நிம்மதியான  முகத்தோடு இருந்தனர்.

நாராயணன் வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாலும்…. அக்காவிற்கு இன்னும் நல்ல மாபிள்ளையாக அமைந்து இருக்கலாம்…. இப்படி வெல்டிங் வேலை செய்பவரா என்று மனதிற்குள் ஒரு எண்ணம் இருந்தது என்னவோ உண்மை.

வெற்றியின் தைரியம் அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று….. அதனால் அந்த எண்ணம் அவ்வளவாக தலை தூக்க வில்லை. 

கீர்த்தனாவும் அகல்யாவும் யு எஸ் ஸில் இருந்ததால் திருமணத்திற்கு வாழ்த்து மட்டுமே தொலைபேசியில் தெரிவித்து இருந்தனர்.

அவர்களின் வாழ்த்து சந்தியாவை எட்டியதா என்று கூட தெரியவில்லை.

பெரியவர்கள் முகங்களில் அவ்வளவாக கலகலப்பு இல்லாத போது…… திருமணம் முடிந்ததும் மணமக்களை அவர்கள் வீட்டிற்கு அழைக்க வெற்றிக்கு போகும் எண்ணமில்லை….

வெளியில் பார்ப்பது பழகுவது என்பது வேறு ஆனால் எப்போதும் அவர்களின் வீட்டின் உள் தன்னால் பொருந்த முடியாது என்ற எண்ணம் திண்ணமாக வெற்றியின் மனதில் இருந்தது. ஆனால் அவன் காரணம் உரைக்கும் முன்னர்……

சந்தியா, “நாளைக்கு வர்றோம் தாத்தா”, என்றுவிட்டாள், யாரிடமும் கேட்கவில்லை.

“ஏன்டாம்மா”,  என்ற தாத்தாவிற்கு புன்னகை மட்டுமே பதில்.  

“உனக்கு எங்க மேல ஏதாவது கோபமாடா”, என்று தாத்தா தணிந்த குரலில் கேட்கவும்.

“சே, சே, இல்லை தாத்தா!”, என்று விட்டாள்.

அங்கு ரமணன் வீட்டில் இருந்து கிளம்பும் போதும், சந்தியா சென்னையில் இருந்து என்ன எடுத்துச் சென்றாளோ……. அந்த பொருட்கள் மட்டும் தான் திரும்ப வந்தது, வேறு எதுவும் வரவில்லை.

ராமநாதனும் சுந்தரவள்ளியும் அவளுக்கு திருமணத்திற்கு சிலது வாங்க விளைந்த போது சந்தியா கொஞ்சமும் ஒத்துக்கொள்ளவில்லை………

“ப்ளீஸ் தாத்தா! எதுவும் நீங்க செய்யக் கூடாது…… நான் இங்க வேலைக்கு வந்தேன், அதுக்கு சம்பளம் வாங்கறேன். மீறி எதுவும் வேண்டாம்”, என்றாள்.

“நான் எல்லோருக்கும் செய்யறது தான்மா”, என்று அவர் சொன்ன போது……

“எனக்கு யார் கிட்டயும் வாங்கி பழக்கமில்லை….. நான் தப்பா எதுவும் சொல்லலை, ப்ளீஸ்! வேண்டாம்! வேண்டாம்!”, என்று அவள் சொல்லும் போது என்ன செய்ய முடியும்………….

இருவரும் எதுவும் செய்யவில்லை…. ரமணன் கேட்ட போது கூட, “இல்லை வேண்டாம் பா! விட்டுடு……. சந்தியா என்னவோ பிடிவாதமா வேண்டாம்னு சொல்றா… அவளோட தன்மானத்தையும் நம்ம மதிக்கணும்”, என்றுவிட்டார்.

அம்மாவிடமும், “உன்கிட்ட எதுவுமில்லை மா….. எனக்கு தெரியும்! அகல்யாவும் கீர்த்தனாவும் அனுப்பற பணத்துல எனக்கு எதுவும் வேண்டாம்…”,

இருந்தது அவளிடம் சொற்ப உடைகளே… காதில் ஒரு தோடு… கழுத்தில் மெல்லியதாய் ஒரு பவுனில் வாங்கிய சங்கிலி.

இப்போது திருமணத்திற்கு வெற்றி வீட்டினர் எடுத்த முகூர்த்த புடவை, மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலி அவ்வளவே….

தாத்தா, பாட்டி, நாராயணன், சித்தி, சித்தப்பா என்று யார் பரிசளிக்க முற்பட்டபோதும் மறுத்து விட்டாள்.

அவள் மனதில் என்ன ஓடுகின்றது என்று யாருக்கும் தெரியவில்லை.

ராஜதிற்கு தான் இப்படி பெண்ணை அனுப்புவதில் மனசே தாளவில்லை…. “உன்கிட்ட இருந்தா நான் கண்டிப்பா வேண்டாம்னு சொல்ல மாட்டேன்மா”, என்று சந்தியா சொன்ன போது…..

யு எஸ் போக வர இருந்ததில் துணி தைப்பதை நிறுத்திய தன் மடத்தனத்தை நொந்து கொள்வதை தவிர அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

நேரே மணமகன் வீட்டிற்கு வந்துவிட… வெற்றி வீட்டில் இருந்தவர்களுக்கு ஹோட்டலில் சொல்லி மதிய விருந்தை முடித்து விட..

பின்பு சந்தியா வீட்டினர் கிளம்பிவிட….. வெற்றிக்கும் சொந்தம் எல்லாம் சென்னையில் தான் என்பதால் அவர்களும் மாலை வரை இருந்து கிளம்பிவிட…..

கிடைத்த தனிமையில் சந்தியா சென்றது மீனாட்சியிடம் தான்…… “நான் சீர்ன்னு எதுவும் கொண்டுவரலைம்மா”, என்று ஒருவாறு தயக்கத்தோடு சந்தியா சொல்ல……

“என்ன கண்ணு இப்படி பேசற.. உன்னை விட எங்களுக்கு எதுவும் பெரிய சீர் இல்லைடா”, என்றார்.. மெலிதாக ஒரு புன்னகையை பதிலாக சந்தியா கொடுக்க…..

“நீ கொண்டு வந்து உன் புருஷனுக்கு நிறையணும்னு எதுவும் இல்லை… அவன் உழைப்பாளி, காசையும் சம்பாதிக்கவும் அதை பெருக்கவும் தெரிஞ்சவன்….. உன்னை நல்லா பார்த்துக்குவான்மா”, என்றார்.

அதற்கும் ஒரு புன்னகையே சந்தியாவிடமிருந்து..

“நீங்க நல்லா இருந்தா எனக்கு அது போதும்….”, என்று அவர் சமையலை பார்க்க விழைய….. அவருடனே தான் இருந்தாள் சந்தியா. இரவு வரை அவருடனே சுற்றிக் கொண்டிருந்தவளை கணவனுடன் சேர்ந்து இரவு உணவு உண்ணுமாறு மீனாட்சி பணிக்க……

கணவனுடன் அருகமர்ந்து உண்டாள்…….

வெற்றி உணவை ஒரு கட்டு கட்ட…… சந்தியாவிற்கு உணவே இறங்கவில்லை.

சந்தியாவிற்கு தன் மீது ஏதாவது கோபமோ என்று பயந்து ஞானவேல் வீட்டில் அதிக நேரம் இருக்காமல் வெளியில் சுற்றி கொண்டிருந்தான்.  

மணமக்களுக்கான முதல் தனிமை கிட்டிய போது…. அந்த இரவிற்கான எந்த ஆர்ப்பட்டமுமின்றி வெற்றியின் அறை எந்த மாறுதலுமின்றி இருந்தது. ஒரு ஒற்றை கட்டில் ஒரு பீரோ அவ்வளவே….. 

மீனாட்சி அவர் கையால் எந்த சாங்கியமும் செய்ய விழையவில்லை…… பால் பழம் என்ற ஏற்பாடுகள் செய்ய முயன்ற போது….

“மா, அந்த மாதிரி எல்லாம் எதுவும் வேண்டாம்”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு வெற்றி சொல்லி விரைந்து விட…….

சந்தியாவிடம் வந்த போது…… அவள் அதற்க்கு மேலே, “அம்மா”,  என்று சிணுங்கிக் கொண்டே அவளும் பேசாமல் விரைந்து விட….  

வளர்ந்த பிள்ளைகள் என்று மீனாட்சியும் விட்டுவிட்டார்.   

அவனின் அறையே அப்படி தான் இருக்க, அவனின் மனம் மட்டும் மாறியிருக்குமா என்ன? அதுவும் அப்படியே.

அதுவரையிலும் இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை.  

வெற்றி கட்டிலில் அமர்ந்து படுக்க ஆயத்தமாக…..  

சந்தியா வெற்றியிடம் அவளின் பேங்க் பாஸ் புக்கை நீட்டினாள்.

“எதுக்கு இது”, என்று அதை கை நீட்டி வாங்காமல் வெற்றி கேட்க……

“பாருங்க, ப்ளீஸ்!”, என்றாள் தணிவான குரலிலேயே.

அதை திறந்து பார்த்தால் அதில் எண்பதாயிரம் இருந்தது…..

“இவ்வளவு தான் என்னால சேமிக்க முடிஞ்சது……”, என்று சொல்லியவள் வெற்றியின் முகம் பார்க்க……

மேலே சொல் என்பது போல அவளை பார்த்தான்.

“பாட்டிக்கு, நான் அகல்யா கல்யாணத்துக்கு அவங்க கிட்டயிருந்து வாங்கின நகையை வாங்கி தர்றேன்னு சொல்லிருந்தேன். இன்னும் வாங்கி தரலை.. இந்த பணம் பத்தாது”.

“எங்க மூணு பேருக்குமே கல்யாணமாகிடுச்சு….. யாருக்கும் கஷ்டம்னு இல்லை…… நான் சொன்ன மாதிரி நகை மட்டும் வாங்கி தரலைன்னு பாட்டி நினைக்க கூடாது இல்லையா…….. எனக்கு அவங்களுக்கு வாங்கி தரணும்…… நீங்க வாங்கி தர்றீங்களா, நான் அவங்க கிட்ட கொடுத்துடுவேன்”, என்று சந்தியா கேட்க….

வெற்றிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை…..    

அவன் அமைதியாக இருக்க……  சந்தியாவும் அவனுடைய பதிலுக்காக நின்றாள்.

முன்பே இதை சந்தியா வெற்றியிடம் சொல்லியிருந்தது தான்…… இதற்காக தான் அவள் டியுஷன் போக, பகல் நேரத்தில் வெற்றியிடம் வேலை வாங்கிக் கொடுக்கவே கேட்டாள். நன்றாக ஞாபகம் இருந்தது வெற்றிக்கு.

சந்தியாவை நேரடியாக பார்த்து……

“நான் உழைக்கிறேன், நான் சாப்பிடறேன், ஆனா என்னோட தூக்கம் என்னை விட்டு போய் சரியா ஒன்பது மாசம் ஆச்சு……”,

“ஒரு பொண்ணு வீட்டை விட்டு சொல்லாம கொள்ளாம போற அளவுக்கு நாம என்னடா செஞ்சோம்னு என் மனசாட்சி என்னை குத்திட்டே இருந்தது……”,

சந்தியா ஏதோ சொல்ல வரவும்….

“பேசாத….. தயவு செஞ்சு எந்த காரணமும் சொல்லாத… என்னால கேட்க முடியாது….. இப்ப கூட எப்படி உன்னால எங்க வீட்ல எங்க பழக்க வழக்கத்துக்கு இருக்க முடியும் புரியலை”,

“இல்லை, நான்……”, என்று அப்போதும் சந்தியா பதில் சொல்ல முயலவும்…….

“பேசாதன்னு சொன்னேன், மீறி பேசினா நான் கதவை திறந்துகிட்டு வெளில போயிடுவேன்……”,

அவனை பார்வையால் வெறித்த சந்தியா, பிறகு எதுவும் பேசவில்லை……

வெற்றி வேறு புறம் திரும்பி படுத்து விட…….

சந்தியா கீழே படுத்துக் கொண்டாள்….   வெற்றி அவள் எப்படி தூங்குவாள் என்று யோசிக்கவேயில்லை. பல நாட்களாக அவனை அணுகாத உறக்கத்தை வரவைக்கும் முயற்சியில் இருந்தான்.

கீழே வெறும் தரையில் ஒரு தலையணை போர்வை என்று எதுவும் இல்லாமல் அப்படியே உறங்கி விட்டாள் சந்தியா.

அந்த வெறும் தரையிலும் சந்தியா உறங்கி விட…. அப்போதும் உறக்கம் வெற்றியை வந்து தழுவ மனமில்லாமல் இருக்க திரும்பி படுத்தான் வெற்றி.

அப்போது தான் சந்தியா கீழே உறங்குவதை பார்த்தவன்….. “ப்ச், இன்னாடா வெற்றி, உன்னை கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு வந்த நாள்ல கண்டியே இப்படி தூங்க வைக்கிற”, என்று அவனையே கடிந்தவனாக என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

படுக்கையில் இருந்து இறங்கி அவளை தூக்கி மேலே படுக்க வைப்போமா என்று கையை அருகில் கூட கொண்டு சென்று விட்டான். ஆனால் தூக்க ஒரே யோசனை.

எவ்வளவு நேரம் யோசனை….. சுத்தமாக இருபது நிமிஷம்….. குனிவது, நிமிர்வது, அந்த புறம் சுற்றி நிற்பது, இந்த புறம் சுற்றி நிற்பது என்று நேரம் ஓடியது.

இதற்கும் சந்தியா உறங்கியது சுரிதாரில்… அதுவும் ஃபுல் ஹேண்ட், க்ளோஸ் நெக், முகம், கை விரல்களும், பாதமும் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. 

இதில் அவன் சுற்றி சுற்றி வந்து பார்க்க ஒன்றுமில்லை…. சிறு பிள்ளைகள் கூட  அவன் செய்கையை தடுமாற்றத்தை பார்த்திருந்தால் கூட சிரித்திருப்பார்கள்.    

அவன் மேலேயே அவனுக்கு எரிச்சலாக வந்தது… “இன்னாடா உன் தெகிரியம்”, என்று மனசாட்சி குரல் எழுப்ப…. “சந்தியா”, என்று குரல் கொடுத்து அவளை எழுப்பினான்.   

ஒரு முறை கூப்பிட்டு அவள் அசையவில்லை…. “சந்தியா……”, என்று சற்று சத்தமாக கூப்பிட….. திறக்க முடியாமல் கண்களை திறந்தாள்.

வெற்றி அவள் போன நாளாக தூங்கவில்லை என்று அவள் மேல் கோபம் காட்டியது சரி….. ஆனால் திக்கற்ற எதிர்காலத்தை வைத்து சந்தியா மட்டும் உறங்கியிருப்பாளா என்று யோசிக்க மறந்திருந்தான்.

அந்த பேதையும் அன்று தான் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல….. வெற்றி எழுப்பவும் கண்ணை திறக்க முடியாமல் திறந்தவள்…. வெற்றியை பார்த்ததும் மெதுவாக, “என்ன?”, என்று கண்களை தேய்த்து விட்டுக் கொண்டு, கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

“புது இடம்னு கொஞ்சம் கூட ஒரு உணர்வே இல்லாம எப்படி தூங்கறா! இதுல எவ்வளவு அசால்டா எழுந்து உட்கார்றா”,

இதை மட்டும் அவன் வாய்திறந்து சொல்லியிருந்தால் நிச்சயம் சந்தியா, “பின்ன உங்களுக்கு சல்யூட் அடிப்பனா”, என்று கேட்டிருப்பாள்.

இப்போது, “என்ன?”, என்று கேட்டுவிட்டு அவனை பார்க்க….

“எழுந்து மேல தூங்கு”, என்றான்.

வெகு நாட்களுக்கு பிறகு நல்ல தூக்கம்…. அதை களைத்த வெற்றியை ஒரு கோபமான பார்வை பார்த்தவள்…..

“நீங்க டெய்லி எக்சசைஸ் பண்றீங்கன்னு வெளில சொல்லாதீங்க…”,

இங்கு வந்த முதல் நாள், வெற்றி நின்ற தோரணை சந்தியாவின் ஞாபகத்தில் எப்போதும் அழியா சித்திரமாய் இருக்க…. அதைக் கொண்டு……

“சும்மா பயில்வான் மாதிரி சட்டையை கழட்டிட்டு நின்னா ஆகாது”, என்றாள்.

“ஏய், என்ன”, என்று வெற்றி பதிலுக்கு முறைக்கவும்……

“நான் தான் நல்லா தூங்கறனே……. மேல படுக்கணும்னா தூக்கி படுக்க வைக்கறது. இப்படியா என்னை எழுப்புவீங்க…… என்னால எல்லாம் எந்திரிக்கவே முடியாது, நான் தூங்கறேன்”, என்று அப்படியே மறுபடியும் படுத்துக் கொண்டாள்.

வெற்றி கைகளை கட்டி அவளை என்ன செய்வது என்பது போல முறைக்க…… அதை அவள் பார்த்திருந்தால் தானே, கண்களை மூடி நித்திரையை தொடர்ந்து இருந்தாள்.

எப்போதும் எந்த விஷயத்தையும் மிகவும் ஈசியாக சந்தியா கையாள்வாள்….. எந்த விஷயத்தையும் பிடித்துக் கொண்டு முகத்தை தூக்கி வைத்து சுற்றும் பழக்கமில்லை. அதனை கொண்டே வெற்றியிடம் பேசிவிட்டு தூங்கிவிட…. 

இப்போது வெற்றி அவனை பார்த்து அவனே திட்டிகொள்ள  தான் முடிந்தது….. “சே, கேவலம்டா! இதுக்கா இவளை பார்த்து நீ இருவது நிமிஷம் முறைச்சு நின்ன… பாரு உன்னை பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டா……”,

“ஒரு கையாள தூக்கி படுக்க வைக்கலாமா”, என்று யோசித்து….

பிறகு, “முழிச்சிகிட்டா இன்னும் ஏதாவது கேட்டு வைக்க போறா! ஒழுங்கா ரெண்டு கையாள தூக்கி படுக்க வை”, என்று மனதிற்கு சொல்லி திடப்படுத்தி அருகில் சென்ற போதும்…… அவளை தொட்டு தூக்குவதற்கு கைகள் வரவேயில்லை.

தோழியாக மனதில் வரித்து எப்போதும் கண்ணியமான பார்வை மட்டுமே பார்த்திருந்த பெண்…..

பெண்களை தொட்டுப் பழகும் பழக்கம் எப்போதும் வெற்றிக்கு பிடித்தமில்லை. நண்பர்கள் என்ற பெயரில் மனதில் எந்த கல்மிஷமுமில்லாமல் தொட்டு பேசுகின்றனர், அடித்து கொள்கிறார்கள், பிடித்துக் கொள்கிறார்கள், போடா, போடி சாதாரணமாக வருகிறது.

ஆனால் வெற்றி! ம்கூம், அதை அடுத்தவர்கள் செய்யும் போதே வரவேற்க மாட்டான். இதில் அவன் எங்கே…..    

தொட கைகள் முன்வரவில்லை. மனதை ஒரு நிலைப்படுத்தி, “இனிமே இவ உன் பொண்டாட்டிடா”, என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு…. கண்களை மூடி ஏதோ பளு தூக்குவது போல தூக்க……

இப்போது தான் அவனுடன் பேசி உறங்க ஆரம்பித்த சந்தியாவிற்கு உறக்கம் களைய, கண்திறந்து பார்த்தவளுக்கு வெற்றியின் மூடிய கண்கள் தெரிய…..

சிரிப்பு பொங்கியது…..

அவளை வெற்றி படுக்கையில் விட்டு கண்களை திறக்க….. படுக்காமல் எழுந்து அமர்ந்தவள், பொங்கி பொங்கி சிரிக்க…..

சந்தியா சிரித்தது, அவனை கிண்டல் செய்வது போல வெற்றிக்கு தோன்ற, “எதுக்கு சிரிக்கற”, என்று அட்டென்ஷன் பொசிஷனில் நின்று கேட்க….

“என்னையே இப்படி கண்ணை மூடிட்டு தூக்கி படுக்க வைச்சா, உங்களுக்கு பார்த்த சூப்பர் ஃபிகரை எல்லாம் என்ன பண்ணியிருப்பீங்க?”, என்று சிரிப்போடு கேட்க…

வெற்றி அவளை பார்த்து முறைக்கவும்….

டென்ஷன் ஆகிவிட்டான் என்றுணர்ந்து, “நமக்கு கல்யாணமாகிடிச்சி, உங்களுக்கு பிடிசிருந்தாலும் பிடிக்கலைன்னாலும் இனி ஒன்னும் பண்ண முடியாது…”, என்று சொல்லிக் கண்மூடி படுத்துக் கொண்டாள். 

“நீ ரொம்ப அழகுன்னு உனக்கு திமிரா?”, என்று வெற்றி கேட்க……

கண்களை திறக்காமலேயே, “ஓஹ்! நான் அழகுன்னு கூட உங்களுக்கு தெரியுமா”, என்றாள். குரலில் என்ன இருந்தது வெற்றியினால் அனுமானிக்க முடியவில்லை.  

வெற்றி நிஜமாகவே டென்ஷனாக தான் இருந்தான். தன்னை வைத்து இவள் காமெடி செய்கிறாளா… எப்படியோ அவள் நினைத்தது தானே நடந்தது. பதிலே சொல்லவில்லை சந்தியாவிற்கு.

அவன் கீழே படுத்துக் கொண்டான்.

 எந்த சத்தமும் கேட்காததால் கண்களை மெதுவாக திறந்து சந்தியா பார்க்க வெற்றி கீழே படுத்திருந்தது தான் தெரிந்தது.

அந்த, “திமிர்”, என்ற வார்த்தை மனதை மிகவும் பாதித்தது. “நான் எப்போது யாரிடம் திமிராக நடந்து கொண்டேன்”, என்று அவளை அவளே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

திமிர் என்பது சாதரணமாக சொல்லப்படும் வார்த்தை…. ஆனால் மனவருத்தத்தில் இருப்பவர்களை இன்னும் வருத்தப்படுத்தும், அப்படி தான் சந்தியா இருந்தாள்.

“நான் அழகுன்ற மாதிரி என்ன பண்ணினேன், ஒன்னும் பண்ணலையே…. நான் என்னை அழகுபடுத்திக் கொள்றது கூட இல்லையே. வருஷத்துக்கு ரெண்டோ மூணோ டிரஸ் எடுக்கறேன்….. அதுவும் டூ ஹன்ட்ரட் ருபீஸ்ல மெட்டீரியல் எடுத்து, ஜஸ்ட் சிக்ஸ்டி ருபீஸ்க்கு ஸ்டிச் பண்றேன்….”,   

“புடவை எடுக்கறதே இல்லை. அதுக்கு ப்ளௌஸ், இன்ஸ்கர்ட் அப்படி இன்னும் செலவாகும்னு…. நான் இப்படி தானே இருக்கேன். நான் எந்த வகையில அழகுன்னு திமிர் செஞ்சேன்…..”, வெற்றியை பார்த்தபடி தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“நான் யாரும் எதுவும் வாங்கிக் குடுத்தா கூட வாங்கிக்கறது இல்லையே”.

“ஏன்? என் கல்யாணத்துக்கு கூட நான் யாரும் எதுவும் செய்ய வேண்டாம்னு தானே சொன்னேன்”.

சந்தியாவை பொருத்தவரை பரிசு என்பது சமமானவர்கள் கொடுத்துக் கொள்வது….. கீழீருப்பவர்கள் வாங்கினால் பரிசுப் பொருட்கள் கூட சில சமயங்களில் தானமாகி விடும்.

எந்த நிலை வந்தாலும், அந்த நிலை அவளுக்கு வரவே வேண்டாம் என்று தான் வாழ்க்கை முறையை மிகவும் சிக்கனமாக யோசித்தே செலவு செய்வாள். எந்த சீரும் யாரும் செய்ய அனுமதிக்கவில்லை.

தாய், தந்தை மட்டுமே சீர் செய்ய கடமைப்பட்டவர்கள்….. தந்தை இல்லாத போது தாயால் முடியாத போது…… அதுதான் ஸ்திரமாக யாரிடமும் வாங்காமல் மறுத்துவிட்டாள். 

இப்படி ஏதேதோ சிந்தனைகள் உறக்கம் வரவில்லை. பார்வை வெற்றியின் மேலேயே அப்போதும் இருந்தது. அவன் கண்மூடியிருந்தான். உறங்கி விட்டானா, இல்லையா, தெரியவில்லை. 

“என்ன செய்தேன் நான்! எதற்கு என்மேல் இவ்வளவு கோபம்!”, என்று சந்தியா அவனையே பார்த்திருந்தாள். “மேலே வந்து படுங்க”, என்று சொல்லவும் சங்கோஜமாக இருந்தது…..

வெற்றிக்கு தன்னை பெண்ணாய் உணர்த்தும் சாகசங்கள் எதுவும் அவளால் செய்ய முடியாது. கணவன் தான், கணவன் மனைவிக்குள் எதுவும் தப்பில்லை தான். ஆனால் அவளின் பெண்மைக்கு அல்லவா கேவலம்.

பிரம்மச்சர்யம் என்பது ஆண்களுக்கு மட்டும் தானா? அழகுன்னு திமிரா என்ற கேட்ட பிறகு சாதாரணமாக கூட நெருங்கினால்…. அது தவறான வார்த்தையாக வெற்றியின் வாயினில் இருந்து வந்துவிட்டால், அவளால் நிச்சயம் தாங்க முடியாது.

இருவருக்குமே வாழ்க்கை என்பது கோட்பாடுகளும் நெறிமுறைகளும் என்றிருக்க…..

கணவன் மனைவி உறவு என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.    

அது வெற்றிக்கோ சந்தியாவிற்க்கோ இன்னும் புரியவில்லை, பிடிபடவில்லை. திருமணம் என்ற பந்தத்தில் நுழையவே மாதங்கள் வருடங்கள் என்று ஓட்டி விட்டுருக்க….. 

எண்ணங்கள் சந்தியாவினுள் சுழன்று அடித்தன…..    

“எதுவாகினும் உனக்கு இவனோடு தான் வாழ்க்கை தூங்கு….”, என்று அவளுக்கு அவளே சமாதானப் படுத்திக்கொண்டாள்.

மாமழையாய் எண்ணங்கள்

நெஞ்சுக்குள் பொழிய,

மழைத்துளிகள் நெஞ்சை தாக்க,

கணம் தாங்காது விழிகள் மூட,

மழைநீர் மூடிய இமைகளில்,

விழிநீராய் வழிந்தது.   

 

Advertisement