Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

விரைவாக அந்த இடத்தை விட்டுப் போகப் போன வெற்றியை ஒரு புன்னகையோடு ரமணன் சில நொடிகள் பார்த்திருந்தவன்…….

ஏறக்குறைய ஓடிச்சென்று வெற்றியின் கையை பற்றி நிறுத்தினான்.. “என்னப்பா நீ இவ்வளவு ரோஷக்காரனா இருக்கியே”, என்று அவனிடம் சத்தமாக சொன்னவன், “எனக்கும் மிச்சமா இருப்பான் போல”, என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

“உன்னை இங்க அனுப்பணும்னா ஏதாவது காரணம் சொல்லி அனுப்பியிருக்க மாட்டானா….. என்னை இந்த வரா தான் கூட்டிட்டு வந்திருக்கா…. உன்னை போக விடாம பார்த்துக்க சொல்லி…. உன்னை விட்டேன் நான் தொலைஞ்சேன்”, என்றான்.

வெற்றியின் முகம் அப்போதும் கோபத்தை தான் காட்டியது…. “இந்த வராம்மா என்ன நினைச்சு என்கிட்டே சொல்லாம இருந்தாங்க. நான் என்ன வில்லனா? இந்த பொண்ணை என்ன செஞ்சிடுவேன்னு இப்படி பண்ணினாங்க”, என்று வெற்றி சண்டை போடுவது போல கேட்க…..

ரமணனிற்கு மனதினில் டைலாக்காக உதித்தது… “எதுவும் செய்ய மாட்டேங்கறன்றதுதான் தான் பிரச்சனையே! அது தெரியலையேடா உனக்கு!”, என்று மைன்ட் வாய்ஸ் ஓடிய போதும்….

“அது வரா கிட்ட நீயே கேளு….”,

“நான் எப்படி வராம்மா கிட்ட சண்டை போடுவேன்……”,

“நான் கூட இருக்கேன் நீ சண்டை போடு…… ஆனா இப்படி எஸ்கேப் மட்டும் ஆகிடாத….”, என்று வெற்றியிடம் சொல்லி…..

“அப்புறம் நான் தொலைஞ்சேன், இந்த பிரச்சனையை ஃபைசல் பண்ணலை, என் கூட வரா ஊருக்கு வரமாட்டா”, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே…

“வா! என்னோட அப்பாவை பார்க்கலாம்!”, என்று வெற்றியை முன்னே போக விட்டு பின்னே சென்றான்.

குனிந்து வேலை பார்த்துக் கொண்டே ராமனாதனிடம் சந்தியா பேசிக்கொண்டிருந்தது, இடம் நெருங்க நெருங்க வெற்றியின் காதிலும் ரமணனின் காதிலும் விழுந்தது.

“தாத்தா! இது என்ன உரம் போட்டாலும் வராது… வாடிடுச்சு……”,

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா, ஒரு வேளை உரம் போட்டா வந்திருக்கும்மோன்னு நாம பிற்பாடு நினைக்கக் கூடாது இல்லையா”, என்று பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்.

“அப்பா”, என்று ரமணன் அழைத்துக் கொண்டே போக…..

“ரமணா”, என்று அவர் உற்சாகமாக குரல் கொடுக்க…. விரைந்து அவரருகில் சென்றான்.

அப்போது தான் தலை தூக்கி பார்த்த சந்தியா, ரமணனை பார்த்து, “சார்”, என்று புன்னகைத்தவள், பின்னால் வந்த வெற்றியை அப்போதுதான் பார்த்தாள்.

பார்த்தது பார்த்த படி இருந்தாள். அதன் பின் அவள் வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை… வெற்றியை அங்கே எதிர்பாராத தன்மை அவள் முகத்தில் நன்கு பிரதிபலிக்க….

வெற்றி அவள் புறம் பார்வையை திருப்பவேயில்லை…..

அதற்கு எதிர் மாறாக சந்தியா பார்வையை அவனை விட்டு திருப்பவேயில்லை. தன்னை பார்ப்பானா, பார்ப்பானா என்று  விழியகற்றாமல் சந்தியாவும் பார்க்க……

அங்கே சந்தியா என்று ஒரு பிறவி இருந்ததாகவே வெற்றி காண்பித்துக் கொள்ளவில்லை.

ரமணன் இதையெல்லாம் பார்க்காதது மாதிரி பார்த்து, “அப்பா, இது வெற்றி!”, என்று வெற்றியை அறிமுகப்படுத்த….

“அடடே, வாய்யா எப்படி இருக்க….”, என்று மிகவும் தெரிந்தவர் போல  ராமநாதன் கேட்டார்.

ரமணனின் அப்பாவா இவர் என்று வெற்றி இப்போது அவரை பார்த்தான். மிகவும் வயதானவராக தெரிந்தார். ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல்.

“வணக்கம் ஐயா”, என்றான் வெற்றி ஒரு மரியாதை நிமித்த புன்னகையோடு…

“அப்புறம் நம்ம ரோஹித் பயலோட மாஸ்டர் நீயாமே… எப்படி இருக்கு உன் களறி கம்பு சுத்துறது எல்லாம்…. அவங்கப்பன் இதை விட்டுட்டு கராத்தே சேர்த்துட்டானாமே…. நம்ம தற்காப்பு கலைகளோட பெருமை இப்போ இருக்குற பயபுள்ளைகளுக்கு எங்க தெரியுது….”,

“ஆனா நான் என் மவன்ட்ட சொல்லிப்புட்டேன்…. என் பேத்திக்கு இதெல்லாம் சொல்லிக் குடுக்கணும்னு….. இல்லைன்னா நம்ம பாப்பா மாதிரி அதுவும் பயந்துகிட்டு கிடக்கும்… என் பேத்தி அவ பாட்டி மாதிரி தைரியமா இருக்கணும்…. என்ன சொல்லிக் குடுப்பல்ல…..”,

“அதுக்கென்னங்க ஐயா, வராம்மா விட்டா நான் கண்டிப்பா சொல்லிக் கொடுக்கறேன்”, என்றான்.

“ஏன்? பாப்பா விடாமா என்ன பண்ணும்…. அவங்க வள்ளிம்மா பேச்சை தட்டாது”, என்றார்.

“வள்ளிம்மா யார்”, என்று புரியாமல் வெற்றி நிற்க… “எங்கம்மா”, என்றான் ரமணன்.

வெற்றி பேசியதிலேயே அவனுக்கு வரா மேல் உள்ள கோபம் நன்கு ரமணனுக்கு புரிந்தது.

“முகம் கை கால் கழுவு வெற்றி, காஃபி குடிக்கலாம்”, என்று இடம் காட்டி  ரமணன் போகப் போக…

“இல்லைங்க சார், நான் ஊருக்கு கிளம்பறேன்”, என்றான் வெற்றி.

இத்தனை பேச்சுக்கும் சந்தியா அங்கே தான் நின்று கொண்டிருந்தாள்… வெற்றி அவளை தெரிந்தவள் போல காட்டாவிட்டால் போகிறது… ஒரு தெரியாத பார்வை கூட பார்க்கவில்லை.

“அப்பா போதும், உள்ள வாங்க! நாளைக்கு பார்க்கலாம்!”, என்று ராமநாதனிடம் பேசிக்கொண்டிருந்த ரமணன்…

வெற்றியிடம், “சும்மா ஊருக்கு போறேன்னு சொல்லக் கூடாது… எனக்கு தெரியும் உன்னை எப்போ அனுப்பணும்ன்னு…. சொன்னா கேட்கணும்! போ வெற்றி!”, என்றான்.

வெற்றி அப்போதும் மனமேயில்லாமல் தான் நகர்ந்தான்….

சந்தியா தன் கண்களில் கண்ணீர் வராமல் இருக்க மிகுந்த பிரயர்த்தனப்பட வேண்டி இருந்தது… முகத்தில் எதுவும் காட்டாமல் கீழே அமர்ந்து மண்ணை நிரப்ப தொடங்கியவள்…. “நீங்க போங்க தாத்தா! நான் வர்றேன்!”, என்றாள்.

“நீ முடிம்மா போகலாம்”, என்று ராமநாதன் சொல்ல….

சந்தியாவிற்கு இப்போது தனிமை அவசியம் என்றுணர்ந்த ரமணன்….. “சந்தியா வருவா! நீங்க வாங்கப்பா!”, என்று கை பிடித்து அழைத்து சென்றான்.

அவர்கள் செல்லும் வரை எப்படியோ தாக்கு பிடித்தவளுக்கு, அவளையும் மீறி ஒரு கேவல் வெடித்தது….. வெற்றியின் பாராமுகம் அவளை மிகவும் பாதித்தது.

தன்னை அந்த இடத்தில் இருக்கும் செடிகள் போல கூட அவன் பார்த்து வைக்கவில்லை என்பது புரிந்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

என்ன இருந்தாலும் நன்றாக பழகியவன் அல்லவா….

“ப்ச்! உனக்கு எதுவும், யாருவும் சாசுவதமில்லை பெண்ணே… உன்னுடன் பிறந்து வளர்ந்தவர்களால் உன்னை புரிந்து கொள்ள முடியாத போது…. வெற்றி உன்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போவதற்கு நீ வருந்துவது எந்த விஷயத்திலும் நியாயமில்லை”,

மனதை தைரியப்படுத்தியவள், பின்பு வீட்டினுள் சென்றாள்.

அப்போதும் வெற்றி வீட்டின் உள் எல்லாம் செல்லவில்லை, வராண்டாவில் தான் அமர்ந்திருந்தான்.

“சந்தியா”, என்று சுந்தரவல்லி குரல் கொடுக்கவும், சந்தியா உள் செல்லவும் சரியாக இருக்க… சந்தியா உள்ளே விரைந்தாள்.

சென்றவளிடம், “யாருக்கு என்ன குடிக்க வேணும்னு பாரு, நான் என் பூஜையை முடிச்சிட்டு வந்துடறேன், இன்னும் குட்டி தூங்கறா, அப்புறம் என் பேத்தி கூடவே நான் இருக்கணும்”, என்று அவர் பூஜையறையை நோக்கி விரைந்தார்.

அந்த வீட்டின் பழக்க வழக்கங்கள் சந்தியாவிற்கு அத்துபடி…. சந்தியா அந்த வீட்டின் மேற்பார்வையாளர்… அதுதான் அவளுக்கு ராமநாதன் கொடுத்திருந்த பொறுப்பு. அந்த வீட்டின் மட்டுமல்ல, அவர்கள் பண வரவு செலவு காடு கழனி என்று எல்லாவற்றிக்கும்  மேற்பார்வை அவள் தான்.

ஒரு மாதம் தான் சுந்தரவல்லி பயிற்சி கொடுத்தார்… இப்போது எல்லாவற்றையும் பார்த்துக் கொள்பவள் அவள் தான்.

 

ராமநாதனும் போய் வராண்டாவில் அமர்ந்து கொண்டு வெற்றியிடம் பேச ஆரம்பித்தவர் தான்… வெற்றிக்கு எதிலும் மனம் செல்லாத நிலையில் அவன் அந்த இடத்தை விட்டு சென்றால் போதும் என்ற மனப்பான்மையுடன் இருக்க…..

பேசிப் பேசியே அவனை ஒரு வழியாக்கி கொண்டிருந்தார்.

அவருக்கும் வெற்றிக்கும் சந்தியா காஃபி எடுத்து சென்று….. ராமநாதனுக்கு அவர் முன் இருந்த டீபாயில் வைத்துவிட்டு வெற்றியிடம் காபியை நீட்ட….

அவன் எடுப்பேனா என்பது போல அதை கவனியாதவன் போல ராமனாதனுடன் பேச்சுக் கொடுக்க….

“காஃபி எடுப்பா….”, என்று ராமநாதன் சொல்ல வேறு வழியில்லாமல் எடுத்தான்.

அப்போதும் அவள் முகம் பார்க்கவில்லை…. “என்ன செய்தேன் நான் இவனை”, என்ற மிக மெல்லிய கோபம் சந்தியாவின் மனதில் தோன்ற ஆரம்பித்தது.

அதற்குள் ரமணனின் பெண் தளிர் நடை போட்டு ராமனாதனிடம், “தாத்தா”, என்ற படி வர…..

“தூக்கு! தூக்கு! என் சாமியை தூக்கு! அதுக்கு கால் வலிக்க போகுது!”, என்று ராமநாதன் போட்ட சத்தத்தில் ஓடிச் சென்று சந்தியா குழந்தையை தூக்கினாள்.

ஆனால் என் அம்மா போல உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன் என்பதாக அவரின் பேத்தி தேஜஸ்வினி அவளின் பெயர் போல தாத்தாவை நோக்கி பயமின்றி தாவினாள்.

 

அதற்குள் அவளை தேடி வந்த வரா ராமநாதன் அங்கிருப்பதை பார்த்து தயங்க…..

“போ பாப்பா! உனக்கு தான் என்னை பார்த்து பயம். என் பேத்தியை பாரு”, என்று எழுந்து நின்று தேஜுவை கையில் வாங்கி அவரும் பூஜையறையை நோக்கி விரைய…….

அங்கே வராவும் சந்தியாவும் வெற்றியும் மட்டும் தனித்து விடப்பட…. சந்தியா உள் செல்ல முயல….

“மாஸ்டர்க்கு காபி குடுத்தியா சந்தியா”, என்றாள் வீட்டினளாக வரா…..

சந்தியா கொடுத்து விட்டேன் என்பது போல தலையசைக்க….

“என்ன சொல்றார் மாஸ்டர்”, என்று வரா பேச்சை வளர்க்க…

சந்தியா பதில் சொல்லாமல் உள்ளே செல்ல…. ரமணன் வெளியில் வந்தான்.

“என்ன மாஸ்டர் சொன்னிங்க”, என்று விடாமல் வரா வம்பு வளர்க்க…….

“ஏன் வராம்மா? அந்த பொண்ணை நான் என்ன பண்ணிடுவேன்னு அந்த பொண்ணு இங்க இருக்கான்னு என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க”, என்று  வெற்றி பொங்கி எழ….

“ஆமா, அந்த பொண்ணுன்னா எந்த பொண்ணு, அந்த பொண்ணுக்கு பேர் இல்லையா”, என்றாள் வரா.

“அந்த பொண்ணு பேரைக் கூட நான் சொல்லமாட்டேன்”, என்று வீம்பாக வெற்றி சொல்ல….

இவர்களின் சண்டையை பார்க்க ரமணன் சாவகாசமாக சேரில் அமர்ந்தான்.

“ஏன் சொல்ல மாட்டீங்க….. அவ என்ன பண்ணினா உங்களை….. அப்படி  அந்த பொண்ணு பேர் கூட உங்களால சொல்ல முடியலைன்னா அவளை பத்தி நான் எதுக்கு உங்ககிட்ட சொல்லணும்”, என்றாள்.

கோபத்தில் கைகளை கட்டி நின்றான் வெற்றி.

“எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை”, என்பது போல தான் ரமணன் பார்த்திருந்தான்.

“என்னை கேள்வி கேட்க தான் இங்க ஊருக்கு கூட்டிட்டு வந்தீங்களா..”,

“ஏன்? அதை சென்னையில என்னால கேட்க முடியாதா என்ன.. ரமணனோட மனைவியாக்கும் நான்…..”, என்று சற்று திமிராகவே பதிலளித்தவள்…

“தாத்தா, சந்தியாக்கு வயசாச்சு மாப்பிள்ளை பார்க்கணும்னு சொன்னாங்க…. அந்த பொண்ணு என்னடான்னா ஊர் உலகத்துல அதுக்கு மாப்பிள்ளை கியூ கட்டி நிக்கும் போது, யார்கிட்டயோ என்னை கல்யாணம் செஞ்சுக்கறீங்களான்னு கேட்டிச்சாம், வேற யாரையும் பார்க்க மாட்டேங்குது….. இதுல கேட்டவன் கல்யாணம் பண்ணியிருந்தாளாவது அவளை நான் சமாதானப்படுத்துவேன்… கேட்டவரும் கல்யாணம் பண்ணலை போல”, என்று நீட்டி முழக்கி,

“அதான் உங்களை இங்க கூட்டிட்டு வந்தோம்…”, என்றாள் தீர்க்கமாக வெற்றியை பார்த்து..

“தாத்தாக்கு பிடிச்சதுன்னா நாள் குறிக்க வேண்டியது தான்”, என்றாள் வரா தடாலடியாக.

“என்ன வராம்மா பேசறீங்க”, என்று வெற்றி கோபப்பட…..

“ஏங்க நான் தமிழ் தான பேசறேன்”, என்று வரா ரமணனிடம் கேட்க…

 

“வரா, சும்மா அவனை கடுப்படிக்காத ஒழுங்கா விஷயத்தை பேசு”, என்று ரமணன் கடிக்க….

“ஆமாம் என்ன விஷயம் பேசறது”, என்று வரா மறுபடியும் வம்பு வளர்க்க…

“எந்திரிச்சு போ உள்ள! நான் பேசிக்கறேன்!”, என்று ரமணன் மறுபடியும் கடிக்க..

“இது தானே எனக்கு தேவை”, என்பது போல ரமணனை ஒரு பார்வை பார்த்து வரா சென்றாள்.

“உட்காரு வெற்றி”, என்று ரமணன் தன்மையாக வெற்றியிடம் பேச…..

“கல்யாண விஷயம்னா நான் உட்காரலை”, என்று வெற்றி முறுக்க……..

“சொல்றதை முதல்ல கேளு, உட்காரு”, என்றான் ரமணன்.

அவனின் பேச்சை மீற முடியாமல் வெற்றி அமர்ந்தான்.

“உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்ததே! ஏன் நிறுத்தின!”, என்றான் ரமணன்.

“அதெல்லாம் சொல்ல முடியாது”, என்பது போல வெற்றி வாயை இறுக்கமாக மூடிக் கொள்ள….

“சரி! காரணம் சொல்ல மாட்ட! ஓகே! ஆனா ஏதோ ஒரு வகையில சந்தியா வீட்டை விட்டு போனது உன்னை அப்செட் பண்ணியிருக்கு, அதான நிறுத்தின”, என்றான் ரமணன்.

“அப்படி சொல்ல முடியாது! என்னவோ எனக்கு பிடிக்கலை, நிறுத்திட்டேன். அந்த பொண்ணு போனதுக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை”.

“விடு! விடு! எல்லாம் விடு! நீ எதையும் ஒத்துக்க தயாராயில்லை! அப்படியும் இருக்கலாம், இல்லை நீ சொல்ற மாதிரி இது காரணம் இல்லாமலும் இருக்கலாம். நான் பழச பேசலை. உனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்கலை”,

“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்… உங்க வீட்ல பார்த்த பொண்ணை தானே நீ சம்மதம் சொன்ன! அந்த மாதிரி ஒரு நண்பனா சந்தியாவை நான் உனக்கு பார்த்திருக்கேன்னு நினைச்சிக்கோ…..”, என்றான் மிகவும் தன்மையாக வெற்றியின் மேலும் அக்கறை கொண்டவனாக.

“உண்மையா சொல்றேன்…. இன்னும் சந்தியா கிட்ட நாங்க அதை பத்தி பேசவே இல்லை…. அவளுக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது”.

“என்கிட்டே ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்கன்னு தான் கேட்டா…… எனக்கு சந்தியா கேட்ட விதம் ரொம்ப மனசு விட்டிருந்த மாதிரி இருந்தது. அதுவுமில்லாம அவ கேட்ட போது இந்த வரா கூட இருந்துட்டா…”,

“நான் சந்தியா கிட்ட வெற்றி கிட்ட சொல்லலையான்னு கேட்டேன்…. அந்த பொண்ணு இது தான் சொல்லிச்சு…… இல்லை வெற்றி சார் ஏற்கனவே எனக்கு நிறைய ஹெல்ப் செஞ்சிட்டார்….”,

“இப்போ தான் அவருக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு….. இதுல நான் வேற அவர் கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கறிங்களான்னு லூசு மாதிரி கேட்டேன்…. அவர் முடியாதுன்னு சொல்லிட்டார்…. அவர் என்னை ஒரு தோழியா தான் பார்த்தேன்னு சொல்லிட்டார்….”,

“மறுபடியும் அவர் கிட்ட எனக்கு உதவி கேட்கறதுல விருப்பமில்லை….. வீட்லயும் என்னை சரியா யாரும் புரிஞ்சிக்கலை…… எங்கயாவது எனக்கு தூரமா வேலை வாங்கிக் குடுங்க…..”,

“இப்போதைக்கு எனக்கு ஒரு பத்திரமான இடத்துல உங்களால வேலை வாங்கி கொடுக்க முடியும்னு தோணிச்சு, அதான் வந்தேன்னு சொன்னா”,

“இப்படி கேட்கற பொண்ணுகிட்ட எப்படி உதவி செய்ய மாட்டேன்னு சொல்றது….. எப்பவுமே வரா ரொம்ப சென்சிடிவ்…. சந்தியா சொன்னதுல அவ அப்செட்….”,

“சந்தியாக்கு வேலை வாங்கிக் கொடுக்கணும்னு அடம்…. அப்புறம் நீ சந்தியாவை வேண்டாம்னு சொல்லிட்டன்னு இவளுக்கு ரொம்ப கோபம்…. அப்புறம் வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு என் அம்மா கிட்ட அனுப்பி வெச்சிட்டா….. எதுவும் உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டா….”,

“அதுதான் நீ வந்தப்போ நான் சொல்லலை….”,

“இப்போ கூட நீ நிச்சயம் பண்ணின உன் கல்யாணம் நடந்திருந்தா எதுவும் உன்கிட்ட சொல்லியிருக்க மாட்டேன்…. சந்தியாக்கு என்ன மனக்கஷ்டம் எனக்கு தெரியாது…. உனக்கு என்ன மனக்கஷ்டம் அதுவும் எனக்கு தெரியாது…. தெரியவும் வேண்டாம்”,

“ஜஸ்ட் உங்க ரெண்டு பேருக்கும் உங்களை தெரியாதுன்னு நினைச்சுகுங்க… இது ஜாதகம் பார்த்து வீட்ல ஏற்பாடு பண்ணின கல்யாணமா இருந்துட்டு போகுது”,

“உன் சம்மதமில்லாம நான் சந்தியா கிட்ட பேசலை…. பசங்க நம்ம எது வேணா தாங்கலாம், பொண்ணுங்க அப்படி கிடையாது…. எங்கப்பா சந்தியாக்கு கல்யாணம் பண்ணிவைக்கணும்னு ஒரே பிடிவாதம். அதான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்”,

“யோசிச்சு சொல்லு……..”,

“நீ சொன்னதுக்கு அப்புறம் தான் நான் சந்தியாகிட்ட, அப்பாகிட்ட எல்லாம் பேசணும்….. ஏற்கனவே உன்னை பத்தி சொல்லியிருக்கேன். ஆனா சந்தியாக்கு பார்க்க போறேன்னு சொன்னது இல்லை…..”,

 

“ஏற்கனவே அந்த பொண்ணுக்கு இருபத்தி ஏழு, உனக்கு முப்பத்தி ஒன்னு… நல்ல பதிலா சொல்லு”, என்றான்.

“நான், நான், சந்தியாக்கு பொருத்தமேயில்லை”, என்றான் அப்போதும் வெற்றி.

“பொருத்தம்னு நீ எதை சொல்றேன்னு எனக்கு புரியலை….. இருந்தாலும் சொல்றேன்… இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அந்த பொண்ணு மேல கோபம்ன்னு இருக்கும் போதும்…… நான் அந்த பொண்ணுக்கு பொருத்தம் இல்லைன்னு சொல்ற உன் மனசு ரொம்ப அழகு வெற்றி….”,

“இதுக்கு முன்னாடி வேற எந்த பொருத்தமும் தேவையில்லை”, என்றான் ரமணன்.

வெற்றி வெகுவாக யோசித்தான்….. வெற்றியை ரமணன் அவனின் வள்ளிம்மாவிடம் பேச விட……

ரமணன் போன்ற அடங்காத மகனையே ஐ பீ எஸ் ஆக்கிய பெருமை வள்ளிம்மாவுக்கு உண்டு என்ற போது வெற்றி எம்மாத்திரம்….

ரமணன் அவரிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை……. வெற்றியை அவர் பேசிப் பேசிப் கரைத்து…. அவர்கள் பேசியது சரி போல தோன்றியதால் திருமணத்திற்கு சரி என்று சொன்னானோ இல்லை இவர்கள் பேசுவதை கேட்பதற்கு திருமணம் செய்து கொள்வதே மேல் என்று நினைத்தானோ ஏதோ ஒன்று, “சரி”, என்ற வார்த்தையை வெற்றி உச்சரித்து விட…..

“சரி, நீ ஊருக்கு கிளம்பு! நான் உங்க வீட்லயும் சந்தியா வீட்லயும் பேசிட்டு சொல்றேன்”, என்று அப்படியே அவனை அனுப்பினான். சந்தியாவை பார்க்க பேச கேட்கவில்லை.

 

 

திரும்ப கோபத்தில், “முடியாது”, என்று முறுக்கிக் கொண்டால்…….

எப்படியோ சரி என்று சொல்லிவிட்டான், எப்படி என்று தெரியாத போது மீண்டும் திரும்பி விட்டால். தாங்கள் சொன்னது மட்டுமே காரணமாக வைத்து வெற்றி ஒத்துக் கொண்டிருப்பான் என்று ரமணனால் இன்னும் நம்ப முடியவில்லை.

ஒரு மாதம், ஒரே மாதம் மிக நெருங்கிய உறவுகளுடன் வடபழனி கோவிலில் சந்தியாவிற்கு தாலி கட்டி அங்கே பக்கத்தில் இருந்த ஹோட்டலில் காலை விருந்து மட்டுமே கொடுத்து, தன்னுடைய திருமணத்தை மிகவும் எளிமையாக முடித்துக் கொண்டான் வெற்றி.

அதுவரையிலும் மணப்பெண்ணோ மணமகனோ ஒரு வார்த்தை கூட அடுத்தவரிடம் பேசவில்லை, பேசவும் முயலவில்லை.

ஞானவேல் தான் வெற்றியின் வாழ்வு சந்தியாவோடு அமைந்ததில் மகிழ்ச்சி கொண்டான்….. மனதில் இருந்த அவனின் பாரமெல்லாம் இறங்கியது.

“தேங்க்ஸ் சார்!”, என்று ரமணனின் கை பிடித்துக் கண்கலங்கி நன்றி கூற…..

“அச்சோ! இவர் ஏன் இவ்வளவு அப்செட்…. இவருக்கு என்ன பிரச்சனை”, என்று வரா கேட்க…..

“அடுத்ததை ஆரம்பிக்காதடி, என்னால முடியாது…. என்னை விடு… எத்தனை கொலைக் கேஸ் கண்டுபிடிக்க சொன்னா கூட கண்டுபிடிச்சிடுவேன், ஆனா இந்த வேலை என்னால முடியாது”, என்று சொல்லவும்,

எப்போதும் போல தொலைபேசியை எடுத்து, “வள்ளிம்மா, இவங்க……”, என்று ரமணனை பற்றி குற்ற பத்திரிகை வாசிக்க ஆரம்பிக்க…..

 

“முதல்ல கல்யாணம் எப்படி நடந்தது, அதை சொல்லு, இங்க அப்பா கேட்டுக்கிட்டே இருக்காங்க”, என்று வள்ளிம்மா அதட்டவும்……

“தோ, போட்டோ அனுப்பறேன்”, என்று எல்லாவற்றையும் மறந்து மணமக்களை புகைப்படம் எடுக்க…..

இருவர் முகமும் சிரிப்பேனா என்றது. சுற்றியிருந்தவர்கள் அதற்கு மேல் இருக்க……

வரா கவலையாக ரமணனை பார்க்க…

“இப்படி இருக்குறவங்க தான் எதிர்காலத்துல made for each other ரா இருப்பாங்க. நீ போட்டோவை மட்டும் எடு”, என்று காதில் ரகசியம் ஓத….

ரமணனின் வாக்கு, வராவிற்கு வேத வாக்கு……. வரா போட்டோவாக எடுத்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

 

Advertisement