Advertisement

அத்தியாயம் பதினாறு:

சந்தியா பார்த்த பார்வை என்னவோ அவன் தப்பு செய்வது போன்ற எண்ணத்தை கொடுத்தது…

“நான் என்ன ஆசை வார்த்தை காட்டி மோசம் செஞ்சது போல ஒரு பார்வை இந்த பொண்ணு பார்க்குது… நான் இது நல்லதுக்கும் தானே சொல்றேன்……”, என்ற எண்ணம் மனதில் எழ, அதை வெற்றியின் முகமும் பிரதிபலித்தது.

அதை சந்தியாவின் மனம் உணர்ந்ததோ என்னவோ? “சாரி, கல்யாணம் செஞ்சிக்க கேட்டு உங்களை தர்ம சங்கடதுல ஆழ்த்திட்டேன்…. நீங்க உங்க கல்யாண வேலையை சந்தோஷமா பாருங்க”, என்று ஒரு நிர்மலமான முக பாவனையோடு சொல்லிச் சென்றாள். 

“இவ சந்தோஷமா சொல்றாளா? கோவமா சொல்றாளா? தெரியலையே! என்னங்கடா இது! உதவின்னு யாருக்கும் வாழ்க்கைல பண்ணவே கூடாதுன்ற எண்ணத்தை நமக்கு கொடுத்துடுவாங்க போல…”, என்று மனதிற்குள் புலம்பியவாறே வெற்றி வேலையை பார்த்தான்.

இதற்குள் அகல்யா மறுபடியும் ஒரு வரனை கொண்டு வந்தாள்…. ஆனால் இந்த முறை சந்தியாவிற்கு அல்ல கீர்த்தனாவிற்கு……. மணமகனுக்கு இருபத்தி ஏழு வயது….. சமவயது என்பதால் அது சந்தியாவிற்கு பொருந்தவில்லை……

பொருத்தம் என்று சொன்னாலும் சந்தியா கேட்கப் போவதில்லை, அகல்யாவிற்கு அக்காவின் முடிவில் எரிச்சலாக வந்தது….. சந்தியா பிடிவாதம் பிடிப்பது தேவையில்லாததாக தோன்றியது.

பலமுறை சந்தியாவிடம் பேசியும் சந்தியா பிடிவாதமாக நிற்பது அகல்யாவிற்கு முட்டாள் தனமாக பட்டது.

திருமணமானவர்களே அந்த பந்தத்தை பெரிதாக நினைக்காமல் விவாகரத்து அது இது என்று போகின்றனர்….. காதலித்தவர்கள் எல்லாம் காதலித்தவர்களையா திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரு வார்த்தை சொல்லிவிட்டதற்கு எதற்கு இவ்வளவு பிடிவாதம் என்று புரியவேயில்லை.

ஒரு சொல் சொல்லிவிட்டால் என்ன அதற்கு…. அது போனால் போகிறது என்று தூக்கி போடாமல் அதையே பிடித்துக் தொங்கினால் என்ன அர்த்தம்.

சந்தியாவிடம் இதையெல்லாம் சொல்லி சண்டை போட்டாள் தொலைபேசியில்….. அகல்யாவிற்கு அக்காவின் வாழ்க்கை வீணாகிறதே என்ற பதைப்பு.

நல்ல வரன் அது, சந்தியாவின் பிடிவாதத்தினால் கீர்த்தனாவிற்கு அந்த வரன் ஏன் அமையாமல் போக வேண்டும் என்று வீட்டினர் எல்லாருடனும் பேசி……. மாப்பிள்ளை இப்போது ஒரு மாத லீவில் இந்தியா வருகிறான்…. அப்போது ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து விட்டால்…… பின்பு கீர்த்தனா  படிப்பை முடித்தவுடன் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்,

கீர்த்தனாவிற்கு பாஸ் போர்ட் இன்னும் எடுக்கவில்லை, அது கிடைக்க நாளாகும், விசா ப்ராசஸ் ஆக நாளாகும்…. அதனால் திருமணத்திற்கு சொல்ல…..

கீர்த்தனா அக்காவிற்கு திருமணமாகாமல் தனக்கா என்று பிடிவாதமாக மறுக்க…….

“பாரு, நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு….. உன்னால எவ்வளவு பிரச்சனை”, என்று சந்தியாவை வீட்டினர்ஆளாளுக்கு சொல்லிக் காட்ட,

வளர்ந்த ஆண்மகனாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்ட நாராயணன் தான், “யாரும் அக்காவை பேசக்கூடாது”, என்று எல்லோரையும் அதட்டினான்.

 

சந்தியா தங்கையிடம் தான் வந்து நின்றாள்……. “ப்ளீஸ் கீர்த்தனா, எனக்கு இருக்குற மனக் குழப்பங்கள் போதும், நான் செய்யறது சரியா தப்பான்னு கூட தெரியலை…..”,  

“இதுல நீ என்னை காரணம் காட்டி மறுக்காத… உனக்கு கல்யாணம் வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லு, என்னை தயவு செஞ்சு சொல்லாத”, என்று மனவருத்ததோடு பேச

“என்ன அக்கா நான் பண்ணட்டும்?”, என்று கீர்த்தனா சந்தியாவிடமே கேட்க…..

“கல்யாணம் பண்ணிக்கோடா, நல்ல சாய்ஸ் தான் மாப்பிள்ளை பண்ணிக்கோ”, என்று சந்தியா சொல்ல…..

அக்காவை கஷ்டப்படுத்த விரும்பாத கீர்த்தனா, “சரி”, என்று சொல்ல…..

கீர்த்தனாவின் திருமணம் ஒரு மாதத்தில் இருக்க…… வெற்றியின் திருமணம் நான்கு மாதம் கழித்து ஒரு நாள் குறிக்கப்பட்டது. இன்னும் ஒரு மாதம் போனதும் பத்திரிகை அடிக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த மணப்பெண் வெற்றியிடம் பேச ஆர்வம் காட்ட வெற்றிக்கு முழு மனதாக பேச முடியவில்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பேசுவதை தவிர்த்துக் கொண்டிருந்தான்.   

இந்த நிலையில் கீர்த்தனாவிற்கு திருமணம் என்று தெரிந்த வெற்றி கொதித்து போனான்.

“என்ன பண்ணிட்டு இருக்கிற நீ? நீ என்ன பெரிய தியாகியா? இப்போ இன்னொரு தங்கச்சிக்கும் கல்யாணம் ஆகப் போகுது. உன் நிலைமை என்ன?”, என்று சந்தியாவிடம் நேரடியாக டியுஷன் எடுக்க வந்த போது போய் சண்டை போட….

சந்தியா எந்த பதிலும் கொடுக்கவில்லை.

அன்று பார்த்தது தான் அவன் சந்தியாவை….. அதற்கு அடுத்த நாள் இருந்து சந்தியா டியுஷன் வெற்றியின் வீட்டு மாடியில் எடுப்பதில்லை.

அங்கே வீட்டிலேயே எடுக்க ஆரம்பித்தாள். அதனால் பிள்ளைகள் குறைந்து ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்.

மீனாட்சியிடம் வந்து, “இனிமே வீட்லயே டுயுஷன் எடுத்துக்கறேன் மா. இத்தனை நாள் இடம் விட்டதற்கு நன்றி”, என்று சந்தியா சொல்லி சென்று இருந்தாள்…..

வெற்றிக்கு மிகுந்த கஷ்டமாக தான் இருந்தது…. தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்று…..

ஆனால் அவளாக விலகி செல்லும் போது இழுத்துப் பிடிக்க மனமில்லை. தன் மேல் இருக்கும் கோபம் சந்தியாவை திசை திருப்பும்…… கூடிய விரைவில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லுவாள். அவள் நன்றாக இருந்தால் சரி என்று நினைத்து வெற்றியாக பேச முயலவில்லை.

இரண்டு சகோதரிகளும் அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளும் போது எப்படியும் சந்தியாவிற்கு நல்ல வரன் அமைத்து கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் வெற்றிக்கு தெரியவில்லை, சந்தியாவிற்கு வெற்றியின் மேல் கோபம் எல்லாமில்லை…… என்னவோ ஒரு கசப்புணர்வு….. ஒரு விரக்தி….

கல்யாணம் செய்து கொள்ள ஏதோ ஒரு உந்துதலில் கேட்டு விட்டாள்…… ஆனால் வெற்றி பிடிவாதமாக மறுக்கவும்…… தான் செய்தது சரியா தவறா…. சொன்ன பேச்சு மாறுவதா….. இப்படியே ஒரு குழப்பம்.

வெற்றி விடுதலையாகட்டும் என்று பொறுத்திருக்க…. அவன் விடுதலையான சந்தோஷத்தை அனுபவித்து முடிக்கும் முன்னரே ஒரு பெண்ணை பார்த்து வெற்றி சம்மதம் கொடுத்திருக்க….

 

ஒரு ஏமாற்றம் இப்போது…….. அப்படி என்ன எந்த வகையில் நான் குறைந்து போய் விட்டேன் என்று….. நான் வேண்டாம் என்று வெற்றிக்கு எதற்கு இவ்வளவு பிடிவாதம்.

வெற்றி அவளின் நல்லதிற்கு தான் சொல்லுவான் என்று ஒரு பக்கம் புரிந்தாலும்…..

என் நல்லது கெட்டது எனக்கு தெரியாதா? அப்படி என்ன அவசரமாக ஒரு பெண்ணை பார்த்து திருமணத்திற்கு சம்மதம் சொல்வது….. என்னை போல ஒரு பெண் அவனுக்கு வரனாக அவனின் குடும்பத்தாரால் பார்க்கப்பட்டு இருந்தால் வேண்டாம் என்று சொல்லியிருப்பானா……. நானாக போய் கேட்டதால் குறைந்து போய் விட்டேனா?

இப்படி குழப்பங்கள் ஒரு புறம்.

அகல்யாவின் பேச்சு ஒரு புறம்….. ஒஹ், இவள் திருமணம் செய்து கொண்டால், இவள் பெரிய ஆளா, நான் என்ன முட்டாளா…. அவரவர்க்கு அவரவர்களின் வாழ்க்கை கோட்பாடுகள்….. என்னை எதற்கு குற்றம் சொல்லுகிறாள்…. இவள் வரன் கொண்டு வருவதாளா, இல்லை இவள் வாங்கிய வீட்டில் நான் இருப்பதாளா……. இல்லை இவள் பணம் அனுப்புவதாளா……

இனி அதை உபயோகிப்பதில்லை…. என்ற எண்ணம் திண்ணமாக நெஞ்சில் அமர…. 

எனக்கு நான் தானே சம்பாரித்து கொள்கிறேன், அதையா உபயோகப்படுத்துகிறேன்…… யோசிக்க யோசிக்க கண்களில் நீர் வழிந்தது…….

என்னவோ திடீரென்று எதுவுமே பிடிக்காமல் போனது………

இப்படி ஒரு மனநிலையில் சந்தியா இருக்க….. அது புரியாமல் பாட்டியும் தாத்தாவும் வேறு சந்தியாவை கூப்பிட்டு அவள் செய்வது சரியல்ல என்பது மாதிரி பேச……

“எங்கப்பா உங்களை விட்டுட்டு செத்தப்போ, நான் எடுத்த முடிவெல்லாம் சரி…. இப்போ மட்டும் தப்பா?”, என்று கேட்க வாய் வரை வந்த வார்த்தைகளை வெளியே வர விடாமல் தடுத்து விட்டாள்.

கீர்த்தனாவின் பதிவு திருமண நாள் நெருங்க…. அமெரிக்காவில் இருந்து வந்திருந்த மணமகன் கீர்த்தனாவிற்கு பரிசு பொருட்களாக வாங்கி குவித்திருந்தான்….

வீட்டில் மிகவும் எளிமையாக ஒரு நிச்சயத்தை வைத்திருந்தனர். அதற்கு மாப்பிள்ளை வீட்டினரின் முக்கிய உறவுகள்…. சந்தியா வீட்டினரின் முக்கிய உறவுகள் அகல்யாவின் மாமனார் மாமியார் மற்றும் அவளின் முக்கிய உறவுகள் கலந்து கொண்டனர்.

வெற்றி வீட்டினரையும் சந்தியா வீட்டினர் அழைத்திருக்க….. வெற்றி வரவில்லை, ஞானவேலும் மீனாட்சியும் வந்திருந்தனர்…..

சந்தியா கண்ணில் பட்டே நிறைய நாட்கள் ஆகிவிட்டதால் அவள் எப்படியிருக்கிறாள் என்று பார்க்கவே ஞானவேல் மீனாட்சியுடன் வந்திருந்தான்.

மனதில் தன்னால் தான் சந்தியா இப்போது இப்படி நிற்கிறாள் இல்லையென்றால் யாரைவது திருமணம் செய்திருப்பாள் என்ற  குற்ற உணர்ச்சி ஞானவேலுக்கு.   

நிச்சயம் முடிந்த உடன் மணமகன் கீர்த்தனாவிற்கு எல்லா பரிசுப் பொருட்களையும் கொடுக்க….. ஒவ்வொன்றாக பிரித்து….

சந்தியாவிடம் கீர்த்தனா காட்டிக் கொண்டிருந்தாள்….. மனதில் எத்தனை வருத்தங்கள் இருந்தாலும் அதை வெளியில் கட்டாமல் தங்கையின் சந்தோஷத்தில் சந்தியா பங்கெடுத்துக் கொண்டிருக்க…….

 

கீர்த்தனாவை தனியாக சமயம் பார்த்து அழைத்த கீர்த்தனாவின் மாமியாராக போகும் பெண்மணி…. “என்ன கீர்த்தனா நீ, இப்படி உனக்கு கிடைச்ச கிஃப்ட்ஸ் எல்லாம் உங்க அக்கா கிட்ட காட்டுவியா…. எல்லாம் ரொம்ப காஸ்ட்லி……”,

“உங்க அக்காக்கு இன்னும் வரன் அமையலை…… நாளைக்கு யாராவது வசதியில்லாத மாப்பிள்ளை அமையும் போது…. உன் வாழ்கையை பார்த்து பொறாமை வராது, நீ இப்படி எல்லாம் காட்டாத”, என்று மேடை ரகசியம் பேச…….

கீர்த்தனா அந்த பெண்மணிக்கு என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறி….. அப்போதும், “எங்க அக்கா அப்படி எல்லாமில்லை, எங்களுக்கு அவ அப்பா மாதிரி”, என்றாள்.

“நீ சின்ன பொண்ணு, ஒன்னும் தெரியாது. முதல்ல எல்லாம் எடுத்து வை, அப்புறம் பாரு”, என்று அதட்டலாக சொல்ல….

மாமியாராக போகிறவரின் பேச்சை மீற முடியாமல், கீர்த்தனா ஏதோ வேலையிருப்பது போல சந்தியாவிடம் சொல்லி, “அப்புறம் பார்க்கலாம் அக்கா”, என்று சொல்லவும்.

“ஹப்பா! என்னை விட்டாடா இவ!”, என்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டு சந்தியா வந்திருப்பவர்களை கவனிக்க சென்று விட……

இதை பார்த்துக் கொண்டிருந்த ஞானவேலுக்கும் மீனாட்சிக்கும்….. வெற்றியின் வாதம் புரிந்தது….. வாழ்க்கை நிலையின் மாற்றங்களும் புரிந்தது.

இந்த மாதிரி பரிசுப் பொருட்கள் வெற்றியினாலும் வாங்க முடியும். ஆனால் படிப்பு, வாழ்க்கை முறை வித்தியாசங்கள் சந்தியாவை தள்ளி நிறுத்தும் என்று வெற்றி சொன்னது எவ்வளவு உண்மை என்று ஞானவேலுக்கு புரிந்தது.

 

ஆனால் இப்போது என்ன செய்ய முடியும். சந்தியா இப்படி நிற்பதற்கு தான் தான் காரணம் என்ற நினைப்பு ஞானவேலை கொன்றது.

எதையும் முகத்தில் காட்டாமல் சந்தியா இன் முகத்துடன் வளைய வர….. அது இன்னும் ஞானவேலை உறுத்தியது. இப்படி கீர்த்தனாவின் மாமியார் போன்ற பெண்மணிகளின் பேச்சு சந்தியாவிற்கு தெரிந்தால் எவ்வளவு மன வருத்தத்திற்கு ஆளாவாள்…..

தன்னுடைய தவறை எப்படி சரியாக்குவது என்று புரியாமல் ஞானவேல் தடுமாறினான்.

வீட்டிற்கு வந்ததும்…… நடந்தது…. தாங்கள் கேட்டது என்ற அத்தனையும் மீனாட்சி வெற்றியிடம் ஒலிபரப்ப……. சந்தியாவின் வாழ்க்கையை குறித்த கவலை வெற்றியையும் தொற்றியது.

கொஞ்சமும் தாமதிக்காமல் அகல்யாவின் கணவனை போனில் அழைத்தான் வெற்றிவேல். வீடு வாங்கி கொடுத்த போது இருவரும் அதிகம் பேசியிருக்க அகல்யாவின் கணவனின் தொலைபேசி எண் இருக்க….. அவனிடம் பேசினான் வெற்றி.

“கீர்த்தனா, கல்யாணம் முடிஞ்சவுடனே சந்தியாவுக்கும் அங்கயே அமெரிக்கால இருக்குற மாதிரி நல்ல மாப்பிள்ளை பாருங்க. எப்படியாவது ஒத்துக்க வைக்கலாம்”, என்று பேசிய பிறகு தான் வெற்றிக்கு நிம்மதியாகியது. 

இப்படி பதிவு திருமணம் முடியும் வரை நிகழ்ந்த சில நிகழ்வுகள் சந்தியாவிற்கு புரிய தொடங்கி மனதை மிகவும் வருத்த ஆரம்பித்தது.

இதில் அகல்யா கர்ப்பமாக, தனக்கு மிகவும் முடியவில்லை என்று அம்மாவை அமெரிக்காவிற்கு வருமாறு அழைத்தாள்…..

 

கீர்த்தனாவிற்கு இன்னும் சில தினங்களில் பதிவு திருமணம் முடிந்து விடுவதால்….. திருமணத்திற்கு இன்னும் மாதங்கள் இருப்பதால் அம்மாவை அங்கே வரும்படி அகல்யா வற்புறுத்த……

“இல்லைடாம்மா! சந்தியாவை அப்படியே விட்டுட்டு எப்படி வர்றது! அவளுக்கு கல்யாணம் அமையாம நான் எங்கயும் வர முடியாது”, என்று அம்மாவாக ராஜம் சொல்ல……

அகல்யா அதற்கு கோபப்பட்டு, “அக்கா திமிரெடுத்து கல்யாணம் பண்ணிக்காம உட்கார்ந்து இருந்தா, என்னை பார்க்க மாட்டியா நீ?”, என்று கோபப்பட…..

ஆன்லைனில் ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்த இந்த வார்த்தைகள் சந்தியாவின் காதுகளை ஸ்பஷ்டமாக அடைய…..

“சந்தியா, பக்கத்துல இருக்கா, இப்படி பேசாத”, என்று ராஜம் சொல்ல சொல்ல….

“இருந்தா நல்லா காதுல விழட்டும், அவளால நாங்க கஷ்டப்படணுமா…… அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு போகாம வீட்டுல உட்கார்ந்து இருந்தா, நீ எங்களை எப்போ பார்ப்ப”, என்ற மசக்கை தந்த தள்ளாமையில் எரிச்சலில் அகல்யா பேசப் பேச……

திருமண வயது அடைந்துவிட்டால் பிறந்த வீடு கூட இல்லாமல் போய்விடுமா? அம்மா கூட இல்லை என்று ஆகிவிடுவாரா? நான் இந்த வீட்டிற்கு அதிகப்படியா…..

மனது சந்தியாவிற்கு உடைந்து தான் போய்விட்டது……

கண்ணீர் கண்களை முட்டிய போதும், பேசாமல் எழுந்து போய் விட்டாள்…. 

 

எல்லாரோடும் பேச்சுக்களையும் குறைத்துக் கொண்டாள்…. அவளுண்டு அவள் வேலையுண்டு என்றிருந்தாள்….. என்னவோ அக்காவிடம் சரியில்லை என்றுணர்ந்த கீர்த்தனாவும் நாராயணனும் முடிந்த வரை அக்காவிடம் பேச்சுக் கொடுத்து அவளை இயல்பிற்கு கொண்டு வர முற்பட்டனர்…

ஆனால் முடியத்தானில்லை…..

கீர்த்தனாவின் பதிவுத் திருமணம் முடிந்து…. அன்று அவளை மாப்பிள்ளை வீட்டினர் வீட்டிற்கு சம்ப்ரதாயமாக அழைத்துக் கொண்டு போனார்.

அன்று மதியம் மாப்பிள்ளை வீட்டில் விருந்து இருக்க….. சந்தியா, “எனக்கு வயிறு சரியில்லைம்மா, நான் வீட்ல இருக்கேன், வரலை, நீங்க போயிட்டு வாங்க”, என்றனுப்பினாள்.

நிச்சயம் தான் நெருங்கிய உறவுகளை அழைத்து செய்தனர்…. பதிவு திருமணம் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டினர் மட்டும் தான். திருமணத்தை விமரிசையாக செய்து கொள்ளலாம் என்று யாரையும் அழைக்கவில்லை.

அதனால் சந்தியா வீட்டினர் எல்லோரும் மாப்பிள்ளையின் சென்னை வீட்டிற்கு விருந்திற்கு சென்றனர்.

அப்போதும் நாராயணன் பொறுப்பான தம்பியாக, “நான் உங்க கூட இருக்கேன் அக்கா”, என்று சொல்லி வீட்டில் இருக்க முற்பட்டான்.

“ஹேய்! நானா, நான் என்ன சின்ன பொண்ணா, போடா, நான் இருந்துக்குவேன்”, என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தாள் சந்தியா.

என்னவோ சரியில்லாதது போல தோன்ற அப்போதும் மனமேயில்லாமல் தான் நாராயணன் கிளம்பினான்.

அவர்கள் விருந்து முடிந்து திரும்ப வந்த போது சந்தியா வீட்டில் இல்லை…… ஏன் சென்னையிலேயே இல்லை…. சென்னையை விட்டு வெகு தூரம் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள்.

“நான் பத்திரமாக இருக்கிறேன், என்னை தேட வேண்டாம்….. சிறிது நாட்கள் கழித்து உங்களை பார்க்க வேண்டும் போல தோன்றினால் நிச்சயம் வருவேன்….. இப்போதைக்கு என்னை தேட வேண்டாம்…. சுயமாக தான் செல்கிறேன்……… எந்த நிர்பந்தமும் இல்லை…..”,

“வெளியூருக்கு வேலைக்கு செல்கிறேன்….. பத்திரமாக சென்று சேர்ந்தவுடன் பத்திரத்தை கட்டாயம் தெரியப் படுத்துவேன்…… யார் கேட்டாலும் வேலையின் பொருட்டு ஏதாவது ஒரு ஊரின் பெயரை ஒரே மாதிரியாக சொல்லுங்கள்….. நான் காணாமல் போய் விட்டேன் என்று சொல்லி ஓடிப் போய்விட்டேன் என்ற பெயரை எனக்கு தேடிக் கொடுத்து விடாதீர்கள்”, என்று எழுதப்பட்ட கடிதம் மட்டுமே இருந்தது.

“ஐயோ, சந்தியாவை இப்படி கவனிக்காமல் விட்டு விட்டேனா எங்கிருக்கிறாளோ….”, ராஜம் மடங்கி தரையில் அமர்ந்து விட்டார்.

கணவரின் தற்கொலைக்கு பிறகு அவரை தாங்கியவள் சந்தியா தான்… மூன்று பெண்களுக்காக உயிரோடு இருக்க வேண்டுமே, எப்படி வாழ போகிறோம் என்றவரை…… வாழ கற்றுக் கொடுத்தவள் அவள் தான்.

அதுமட்டுமின்றி பெண்கள் மட்டும் உன் வாழ்க்கை இல்லை, உனக்கும் வாழ்க்கை இருக்கிறது அம்மா… தைரியமாக இருக்க வேண்டும் என்று தாயுமானவளாக தன்னை தாங்கியவள் சென்று விட்டாளா?

மடங்கி அமர்ந்தவர் எதிரில் இருந்த சுவரை வெறித்து அழக் கூட திராணியின்றி அமர்ந்திருந்தார்.

நாராயணன் என்ன செய்வது என்று தெரியாமல் வெற்றியிடம் தான் விரைந்தான்.

வீட்டில் தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்ட நாராயணனுக்கு வெற்றியை பார்த்ததும் கண்கள் கலங்கியது.

“இன்னாடா?”, என்று பதறி கேட்ட வெற்றியை, வெற்றியின் வீட்டிற்கு அழைத்து அந்த லெட்டரை காட்ட…..

“எங்கு தவறினோம்? சந்தியாவின் நல்லதிற்கு தானே பார்த்தோம்”, என்று வெற்றியே ஒன்றும் புரியாமல் நின்றான்….

வீட்டை விட்டு சென்றுவிட்டாளா? நெஞ்சம் முழுவதும் ஒரு வேதனை பரவ….. “ஐயோ, சந்தியா எங்க இருக்க”, என்று நெஞ்சம் பதற துவங்கியது.               

                              

Advertisement