Advertisement

அத்தியாயம் பதினைந்து:

“என்ன சொல்ற? திரும்ப சொல்லு!”, என்றான் தன் காதுகள் கேட்டதை நம்ப முடியாமல்….

நின்று அவன் முகத்தை பார்த்து நிறுத்தி நிதானமாக, “என்னை கல்யாணம் பண்ணிக்கறிங்களா”, என்றாள்.

“என்ன உளர்ற…….”, ஒரு வித அதிர்ச்சியோடு.

“என்ன உளர்றேன்…..”,

“பின்ன நீ சொன்னது உளறல் இல்லாம என்ன?”,

“என்னை கல்யாணம் பண்ணிக்கறிங்களா? இல்லையா?”,  

“மாட்டேன்!”, என்றான் ஸ்திரமாக.  

“ஆனா எனக்கு உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்!”,

“ஏன்? ஏன் இப்படி பேசற பண்ணிகறிங்களா? இல்லையான்னு? இந்த பேச்சு சரியில்லை, ஏன்?”,

“ஏன்னா?”,

“ஏன்னா திடீர்ன்னு கல்யாணம் பண்ணிக்க கேட்கறது என்னன்னு சொல்ல……”, என்று குரலுயர்த்தியவன், சுற்று புறம் உணர்ந்து… தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து….

“சும்மா விளையாட்டுக்கு கேட்கறியா…… அந்த பொண்ணை வேண்டாம்னு சொன்னதுனால காமெடி பண்றியா”, என்றான் இன்னும் சந்தியா கேட்டதை நம்ப முடியாமல்……

“கல்யாணத்துல யாராவது காமெடி பண்ணுவாங்களா?”, என்று சீரியசாக கேட்ட சந்தியா…  “எனக்கு உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்”, என்றாள் மீண்டும்.

“ஏய், என்ன உனக்கு பைய்த்தியமா, திரும்ப திரும்ப உளர்ற…… முதல்ல வீட்டுக்கு போ, நல்லா தூங்கி எழுந்திரு. எதையோ போட்டு மனசுல குழப்பிகிட்டு இப்படி பேசற நீ… இப்போ வீட்டுக்கு போ”, என்றான் ஏதோ குழந்தையிடம் பேசுவது போல.

“இல்லையில்லை நான் நிஜமா கேட்கறேன்…..”,

“அதான் ஏன் இப்படி கேட்கறேன்னு, நானும் கேட்கறேன்…..”,

“என்னால தான் நீங்க கொலை கேசுல மாட்டினீங்க…… அதனால தான் உங்களுக்கு பொண்ணு அமைய மாட்டேங்குது……. அப்படியே அமைஞ்ஜாலும் அந்த போட்டோல பார்த்த பொண்ணு மாதிரி நல்லாவே இல்லை…… அவங்களும் பொண்ணு குடுக்கலை…….”,

வெற்றிக்கு சிரிப்பு வந்தது சிரித்தான்…… “நீ தினமும் கண்ணாடி பார்க்குற எஃபெக்ட் தான் இது…… உன்னை மாதிரி எல்லா பொண்ணுங்களும் அழகா இருக்க மாட்டாங்க…… அந்த பொண்ணு குண்டு, கலர் கம்மி, எதுவும் பிரச்சனையில்லை….. முகம் லட்சணமா இல்லை……. அதான் எனக்கு பிடிக்கலை, வேற ஒன்னுமில்லை…..”,

“அதான் இப்படி பேசினியா……. நான் என்னவோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்….. இனிமே எல்லாம் எனக்கு பொண்ணு பொறக்காது ஏற்கனவே பொறந்திருக்கும்….. நீ அதையும் இதையும் நினைக்காத சரியா…….”,

“என்கிட்டே சொன்ன மாதிரி யார்கிட்டயும் சொல்லாத சரியா….. போ! வீட்டுக்கு போ!”, என்று பக்குவமாக பேசி அவளை வீட்டில் விட்டு வந்தான்.

ஆனால் அன்று இரவே வீட்டில் எல்லோரிடமும் தான் வெற்றியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சந்தியா தெரிவித்தாள்.

ராஜம், “என்ன இது?”, என்பது போல பரிதவித்து போனார்….. வீட்டில் எல்லோரும் மாற்றி மாற்றி, “இது சரிவராது”, என்று எடுத்துரைக்க…..

யார் பேச்சையும் கேட்கவில்லை….. தன் பிடியில் பிடிவாதமாக நின்றாள்… தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது வெற்றியோடு மட்டுமே என்று…

அடுத்த நாள் வெற்றியிடமே பஞ்சாயத்தை சந்தியாவின் தாத்தாவும் ராஜமும் எடுத்து செல்ல……

வெற்றி தலையில் அடித்துக் கொண்டான்…. “நேத்து சொல்லிச்சுங்க பெரியவரே! நான் இதெல்லாம் சரி வராதுன்னு தெளிவா சொல்லி அனுப்பினேன்…… மறுபடியும் ஏன் பிடிவாதம் பிடிக்குதுன்னு தெரியலை….. நீங்க கவலைபடாதீங்க, நான் சம்மதிக்க மாட்டேன்!”, என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி அனுப்பினான்.

மீனாட்சியின் காதுகளுக்கு விஷயம் போக, “என்ன இது? உண்மையா!”, என்பது போல மலங்க மலங்க விழித்தார் மீனாட்சி…….. அவர்கள் இனத்தில் சந்தியாவைப் போல அழகான பெண்ணை இதுவரை அவர் பார்த்ததேயில்லை…..

சந்தியா சொல்வதற்கு சந்தோஷப்படுவதா? வெற்றி மறுப்பு சொல்வதற்கு வேதனைப் படுவதா? என்று தெரியவில்லை.

ஞானவேலுவிற்கும் இது நிஜமா என்பது போல இருந்தது….. வீட்டிலும் அந்த பெண் சொல்லிவிட்டாள், வெற்றியிடமும் சொல்லி விட்டாள் தைரியம் தான். ஆனால் இந்த வெற்றி மறுக்கிறானே என்று மனது கிடந்து தவித்தது.

அன்று மாலை டியுஷன் எடுக்க வந்த சந்தியாவிடம்….. “நான் இந்த பேச்சு பேசாத இது சரியில்லைன்னு சொல்லியும் நீ எல்லார்கிட்டயும் சொல்லியிருக்க, என்ன சொன்னாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், நான் அப்படி உன்னை பார்க்கவேயில்லை”, என்று வெற்றி ஹோதாவாக பேச…..

இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன் என்பது போல பதிலுக்கு பார்த்த சந்தியா, “நான் என்னை கல்யாணம் பண்ணிகறிங்களான்னு உங்களை கேட்டேன்….. பண்ணிக்கறதும் பண்ணிக்காததும் உங்க இஷ்டம்…..”,

“ஆனா நான் இதை எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன், இனி மாற மாட்டேன்… நீங்க பண்ணிகிட்டா தான் என் வாழ்க்கையில கல்யாணம் இல்லைன்னா இல்லை”, என்றாள் தெளிவாக.

அப்படியே அவளை அறைந்து தள்ள வேண்டும் போல ஒரு ஆத்திரம் வெற்றியிடம் தோன்றியது….. “நான் யார்கிட்டயும் சொல்லாதன்னு சொல்லியும், எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன், உங்களை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னா என்ன அர்த்தம்? என்ன பிடிவாதம் இது! இவ்வளவு பிடிவாதம் யாருக்கும் ஆகாது…..!”, என்றான்.

“நான் இப்படி தான்”, என்று சொல்லி, அவள் பாட்டிற்கு வெற்றி நிற்பதையும் பொருட்படுத்தாமல் மாடியேறினாள் சந்தியா.

“என் கல்யாணம் என் இஷ்டம், என்னை யாரும் இப்படி ப்ளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிக்க முடியாது”, என்று வேகமாக அவளை தாண்டி படியேறி அவள் முன் சென்று சொன்னான்.

“யாரும் எனக்கு பொண்ணு கிடைக்கலைன்னு பரிதாபப்பட்டு எனக்கு வாழ்க்கை குடுக்க வேண்டாம் புரிஞ்சதா….. வெற்றி எதுலயும் யாருக்கும் குறைஞ்சவனில்லை….. ஏதோ என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லியிருந்தா கூட யோசிக்கலாம். எனக்கு யாரும் பொண்ணு குடுக்கலைன்னு நீ என்னை கல்யாணம் பண்ண வேண்டிய அவசியமில்லை புரிஞ்சதா”, என்றான் வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்பி…..

அவன் நின்ற தோற்றம், முதல் நாள் சந்தியா இங்கே வந்த போது நின்ற தோற்றத்தை ஞாபகப்படுத்தியது.

அப்போதே அவனை பார்த்து சந்தியாவிற்கு பயமில்லை. இப்போதா பயப்படுவாள்.

ஆனாலும் எங்கேயோ அவனின் தன்மானத்தை சீண்டி விட்டு விட்டோமோ என்ற பயம் தோன்ற…..

“ஏன், நீங்க கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு எனக்கு தகுதியில்லைன்னு நினைக்கிறீங்களா?”, என்று பேச்சை திசை திருப்ப முற்பட….

“தோடா, இந்த தகுதி வெங்காயம் அது இதுன்னு திரும்ப திரும்ப உளறக் கூடாது….. இந்த பேச்சு வேண்டாம்”, என்றான் கறாராக….

“உங்க வாழ்க்கை! உங்க இஷ்டம்! ஆனா என் முடிவு மாறாது!”, என்று தெளிவாக சொல்லி செல்ல….

வெற்றிக்கு மிகுந்த ஆத்திரம்…… அன்றிலிருந்து அவன் சந்தியாவிடம் பேசுவதே இல்லை…….

சொன்ன பேச்சுக்கள் இருவரிடமும் சொன்னதாகவே இருந்தது……

வெற்றி மிகுந்த கோபக்காரன்…. சந்தியாவை தோழி என்ற முறையில் பிடித்து விட்டதால்…. அவளிடம் அவனின் குணத்தை அதிகம் அதன் பிறகு வெளிப்படுத்தவில்லை.

இப்போது கண்மண் தெரியாத கோபம் சந்தியா மேல்….. “தான் இவ்வளவு சொல்லியும் எதற்கு இந்த பிடிவாதம்….. அப்படி தான் எந்த வகையில் குறைந்து போய் விட்டோம்”, என்ற ஈகோ தலை தூக்க…..

அதன் பிறகு சந்தியாவிடம் பேசுவதில்லை…… பேசுவதில்லை என்பதை விட முகம் கூட பார்ப்பதில்லை……

நேர்ப்பட்டாலும் காணாதது போல போய்விடுவான்.

சந்தியாவிற்கு தான் மிகுந்த கஷ்டமாகி விட்டது….. எல்லோரிடமும் சொல்லி விட்டாள். இனி பின் வாங்க முடியாது…. வெற்றியை கருத்தில் கொண்டு அவனின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தான் திருமணம் செய்து கொள்ளுகிறீர்களா என்று கேட்டாள்.

இனி பின் வாங்க முடியாது…. வேறு விஷயம் என்றால் பரவாயில்லை. ஒரு ஆண்மகனை, இவனை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தன் வீட்டினரிடம், அவன் வீட்டினரிடம், அவனிடம் என்று எல்லோரிடமும் சொல்லி விட்டு…..

இப்போது மாற்றி பேசுவதா….. அது அவளின் பெண்மைக்கு அழகல்லவே….

“நான் சொன்னது சொன்னது தான்…. வெற்றிக்கு இஷ்டமென்றால் திருமணம் செய்து கொள்ளட்டும். இல்லையென்றால் வேண்டாம்! அது அவனின் விருப்பம்…. எதுவாகினும் நான் மாறப் போவதில்லை”.

ஒருவனிடம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுவிட்டு…… வேறொருவரை திருமணம் செய்வதில் சந்தியாவிற்கு இஷ்டமேயில்லை.

இந்த பேச்சு மற்ற யாராவது பேசியிருந்தால் விஷயமே வேறு…… தானாக போய் சொல்லிவிட்டு மாறுவதா…… முடியவே முடியாது.

இருவருமே அவர்களின் பிடிவாதத்தில் நிற்க…. காலமும் நேரமும் யாருக்காகவும் நிற்காமல் உருண்டு ஓடியது.

சந்தியா வெற்றியை திருமணம் செய்து கொள்ள கேட்ட பிறகு….. மீனாட்சியும் ஞானவேலும் அவனுக்கு பெண் பார்ப்பதை நிறுத்தி விட்டனர்.

“ஏன்மா பொண்ணு இப்போ பார்க்கறதில்லை!”, என்று வெற்றியாக வாய்விட்டு கேட்டதற்கு…..

“இதை விட நல்லா பொண்ணா எங்களால பார்க்க முடியாது”, என்று விட்டனர்.

அது இன்னும் கோபத்தை வெற்றிக்கு குடுக்க……. “இதை விட நல்லா பொண்ணா பாருங்கன்னு நான் எப்போ சொன்னேன்?”, என்றான்.  

மீனாட்சி திகைத்து நிற்க…… ஞானவேல் இது என்ன பேச்சு என்பது போல பார்த்து நின்றான்.

“அந்த பொண்ணு தான் ஏதோ லூசு மாதிரி உளருதுன்னா….. நீங்களுமா….. தோழமைன்றது வேற, சேர்ந்து வாழறதுன்றது வேற…… உங்களுக்கு உங்க பையன் உசத்தியா இருக்கலாம்…. அதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணடிக்கறது தப்பு…….”,

“ஒரு நல்ல மாப்பிள்ளை வந்தும் அதை வேண்டாம்னு சொல்லி அவ தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கு…… அப்போ அதை விட நல்ல மாப்பிள்ளை அமையணும் இல்லை சமமாவாவது இருக்கணும்…..”,

“எங்கயோ போய் அமெரிக்கால செட்டில் ஆக வேண்டிய பொண்ணை…. இங்க காலையில இருந்து நைட் வரைக்கும் நெருப்புல காயற என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றதா……”,

“அந்த பொண்ணு கூடப் பொறந்த தங்கச்சிங்க எல்லாம் நல்லா இருப்பாங்க…. அவங்க மாப்பிள்ளைங்க படிச்சு இருப்பாங்க….. அப்போ இந்த பொண்ணு என்னை கல்யாணம் பண்ணினா அவங்க முன்னாடி கீழ போகாது…..”,

“உதவி செஞ்ஜோம்றதுக்காக சந்தியா வாழ்க்கையை பணயமா வெக்கணுமா என்ன? ஒரு ரெண்டு மூணு இடம் சொந்தமா இருந்தா நம்ம பெரிய ஆளா…..”, 

“நம்ம ஒன்னுமேயில்லை….. நம்ம வாழ்க்கை முறை வேற, அவங்க வாழ்க்கை முறை வேற…. எனக்கு படிப்பும் கிடையாது…. நான் ஆளும் கருப்பு……. கொஞ்சமாவது நமக்கு மனசாட்சின்றது வேண்டாம்….”,

“தப்பும்மா! அந்த பொண்ணு ஏதோ நன்றியில சொல்லுது! அதை நாம உபயோகப் படுத்திக்க கூடாது”, என்றான்.

“என் பக்கத்துல அந்த பொண்ணு நின்னா எப்படி இருக்கும்…. அது எவ்வளவு அழகா இருக்கு, படிச்சிருக்கு….. தைரியமா இருக்கு, குடும்பத்துக்காக உழைக்குது….. எத்தனை கனவு அதுக்கு கல்யாணத்தை பத்தி இருந்திருக்கும்……”,

“அதை போய் கலைக்கறதா! ச்சே! ச்சே! தப்புமா!”, என்றான்.

“உனக்கு என்னடா குறைச்சல், நீயே உன்னை ஏன் தாழ்த்திக்கற”, என்று ஞானவேல் சண்டைக்கு வர……

“நான் எப்போ என்னை தாழ்த்தினேன்……. அந்த பொண்ணு எனக்கு செட்டாகாது, நானும் ஆகமாட்டேன்…. ஒழுங்கா எனக்கு வேற பொண்ணை பாருங்க, இல்லை முடியாதுன்னா சொல்லுங்க, நான் பார்த்துக்கறேன்!”, என்றான் தயவு தாட்சண்யமின்றி.

ஞானவேல் உள்ளுக்குள் நொறுங்கி போனான்….. “தன்னுடைய பேச்சுக்களால் தான் இப்போது சந்தியா வெற்றியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள்….. வேறு திருமணமும் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்”.

“இப்போது இவன் வேறு திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்ணின் கதி……. ஐயோ!”, என்றிருந்தது.

அன்று மாலை சந்தியாவிடம் பேசினான்….. “சாரி! வெற்றி ரொம்ப பிடிவாதமா இருக்கான்…. வேற பொண்ணை பார்க்க சொல்றான்….. நீங்க அந்த யு எஸ் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கங்க”, என்று ஞானவேல் சொல்லவும்…

“உங்கண்ணன் எப்படியோ, அது அவர் இஷ்டம்….. ஆனா நான் சொன்னா சொன்னது தான்! எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவரோட தான் இல்லைன்னா இல்லைங்க….. இந்த விஷயத்துல மாத்தி மாத்தி பேச முடியாது….. அது என்னை பொறுத்தவரையில கேவலமான விஷயம்….”,

“எப்படிங்க இந்த விஷயத்துல மாத்தி பேச முடியும்… நம்மள கல்யாணம் பண்ணிகறவங்களுக்கு உண்மையா இருக்க வேண்டாமா…..”,

“நான் நாளைக்கு வேற யாரையாவது கல்யாணம் செஞ்சு…. கல்யாணம் பண்ணினவர்…. ஏற்கனவே நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண சொன்னவ தானேன்னு ஏதாவது ஒரு சந்தர்ப்பதுல கேட்டுட்டா….”,

“அதுக்கப்புறம் நம்ம வாழற வாழ்க்கைக்கு என்னங்க அர்த்தம் இருக்கு”, என்றாள்.

வெற்றியை பற்றி தெரிந்தும், வெற்றியின் வாழ்க்கையை தான் கையில் எடுக்க நினைத்தது தவறோ என்ற எண்ணம் ஞானவேலை கொல்ல ஆரம்பித்தது.  

காலமும் நேரமும் வருடத்தை எட்டிப் பிடிக்க……. நாராயணன் படிப்பை முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல வேலையில் அமர்ந்தான்.

கீர்த்தனா கடைசி வருடத்தில் இருந்தாள்……. “அம்மா! கீர்த்திக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்!”, என்று சந்தியா சொல்லி கொண்டிருந்தாள்.

வெற்றி சந்தியாவோடு பேசுவதில்லை தள்ளி நிற்கிறான் என்று சந்தியா வீட்டினருக்கு தெரியும்…. சந்தியா மனம் மாறியிருப்பாள்……. என்று அவர்கள் நினைத்திருக்க, சந்தியாவின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது.

வெற்றியின் கேஸில் இருந்து அவனுக்கு விடுதலை கிடைத்து விட….. எல்லோரும் ஆசுவாச பெருமூச்சு விட்டனர்.

ரமணன் பக்காவாக ராமிடம் வெற்றியின் வழக்கை எப்படி கொண்டு போக வேண்டும் என்று சொல்லியிருந்தான்…… போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்டும் வெற்றிக்கு சாதகமாக இருந்தது. இறந்தவனின் உடலில் காயங்கள் இல்லை… இதயம் தன் இயக்கத்தை நிறுத்தியிருக்க அது ஹார்ட் அட்டாக் என்று தான் இருந்தது.

அதனால் அது கொலையல்ல…. இறந்தவனை கொலை செய்யும் நோக்கமும் வெற்றிக்கு கிடையாது…. தன்னை தற்காத்துக் கொள்ள மட்டுமே முயன்று இருக்கிறான் என்று தெளிவாக ராம் வாதாட…..

வெற்றி அந்த கேசில் இருந்து விடுவிக்கப்பட்டான்.       

எதிர்பார்த்தது தான் என்றாலும் செய்தி தெரிந்தவுடன் எல்லோருக்கும் சந்தோசம்.

இத்தனை நாட்கள் சந்தியாவிடம் பேசாமல் இருந்த வெற்றி….. “எனக்கு விடுதலை கிடைச்சிடுச்சு…… நீ இனிமே அதை நினைச்சு கவலைப்பட வேண்டாம்…… நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ”, என்று சந்தியாவிடம் சொல்ல……

“விடுதலையானதுக்கு கங்க்ராட்ஸ்”, என்று வார்த்தையை மட்டும் உதிர்த்து விட்டு சந்தியா சென்று விட்டாள்.

“இவள் சரி என்று ஒத்துக் கொண்டாளா? இல்லையா?”, என்று வெற்றி தான் குழம்பி போனான்.

இப்போது கேசில் இருந்து விடுதலையாகிவிட்டதால் ஒரு பெண் வெற்றிக்கு அமைவது போல வர……

ஃபோட்டோ, படிப்பு, குடும்பம் என்று அனைத்துமே சற்று திருப்தியாக இருக்க…..

வெற்றி பெண் பார்க்க செல்ல முடிவெடுத்து நாள் குறிக்க…..

ஞானவேல் தான் தவித்துப் போனான். தன்னால், வெற்றியின் பிடிவாதத்தால், சந்தியாவின் வாழ்க்கை பாழாவதா என்று…….

வெற்றி பெண்ணும் பார்த்து வந்துவிட…. “சரியென்று சொல்லிவிடுங்கள்”, என்றும் சொல்லவிட……

எப்போது நேர்பட்டாலும் முகத்தை திருப்பி கொண்டு போகும் வெற்றியை பார்த்து, சந்தியாவாக… “கல்யாணமாமே, வாழ்த்துக்கள்!”, என்றாள்.

“நானும் சீக்கிரம் அந்த வார்த்தையை உன்னை பார்த்து சொல்லணும் சந்தியா”, என்று உளமார வெற்றி கூற…… அவனை ஒரு பார்வை பார்த்தவள் சென்று விட்டாள்.

Advertisement