Advertisement

அத்தியாயம் பதினான்கு:

கோபம் மனதில் கொந்தளித்தாலும் செய்யும் வகை தெரியாது அமைதி காத்தான் ஞானவேல்…..

அன்று மாலை சந்தியா டியுஷன் எடுத்து முடித்து வீடு செல்ல கிளம்பிய சமயம் வெற்றி அவளை மாடியில் சென்று பார்த்தான்.

கீர்த்தனாவிற்கு படிக்க வேண்டி இருந்ததால் அவர்கள் பேசட்டும் என்று  சென்று படியில் அமர்ந்து கொண்டாள்.

“ஏன் சந்தியா?…. உன் தங்கச்சி வீட்டுக்காரர் அவரோட வேலை பார்க்குறவரை உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கலாம்னு சொன்னா…. நீ ஏன் பார்க்கறதுக்கு முன்னாடியே வேண்டாம்னு சொல்ற….”,

“உனக்கு பிடிக்கலைன்னா ஓகே…. ஆனா பார்க்காமையே ஏன் வேண்டாம்னு சொல்ற……”,

“நான் தான் உங்க கேஸ் முடிஞ்சு உங்களுக்கு விடுதலை கிடைக்கற வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேனே….”,

“தோ பாரு! யாருக்கும் என்னோட கேஸ்க்கும் உனக்கும் சம்மந்தம் இருக்குன்னு தெரியாது….. ஏன் நீ ஹாஸ்பிடல்ல பிரச்சினையில மாட்டினது கூட தெரியாது… நீயா எல்லார்கிட்டயும் சொல்லப் போறியா இப்போ……”,

“அப்போ நான் யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்னு சொன்னதுக்கு என்ன இருக்கு…….”, என்றான் கோபமாக..

“அப்போ நீங்க பிரச்சினையில மாட்டி இருப்பீங்க, நான் பாட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு போகணுமா…..”,

“ப்ச், என்ன பேசற நீ…. நீ இப்படி பேசறது எனக்கு கஷ்டமா இருக்கு…  நான் கஷ்டத்துல இருக்கேன், என்னோட சேர்ந்து நீயும் கஷ்டப்படுன்னு சொல்றதா தோழமை….. என்ன பேச்சு இது…”,

“நீ நல்லா இருந்தா தானே நாம இந்த பிரச்சினையில இருந்து வெளில வந்ததுக்கு எனக்கு ஒரு சந்தோசம்…..”,

“என்னோட கேஸ் ஒரு மேட்டர் இல்லை…… எனக்கு இதுல இருந்து விடுதலை கிடைச்சிடும்…… இல்லைனா இருக்கு ஹை கோர்ட்….. இல்லன்னா இருக்கு சுப்ரீம் கோர்ட்….”,

“எனக்கு மனசுலயும் வலு இருக்கு, உடம்புலயும் வலு இருக்கு….. செலவு செய்ய காசும் இருக்கு…… என்னோடது ஒரு பிரச்சனையில்லை…… நீ அந்த விஷயத்தை சொல்லி யாருக்கும் தெரியாத விஷயத்தை எல்லோருக்கும் தெரியற மாதிரி நீயே செய்யாத புரிஞ்சதா”, என்றான்.

“முதல்ல அந்த பையன் போட்டோவ அனுப்ப சொல்லு… உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு, இல்லைனா வேண்டாம்னு சொல்லு, ஆனா என்னோட விஷயம் ஒரு காரணமா இருக்க கூடாது, அப்புறம் நம்ம நட்புக்கு என்ன மரியாதை இருக்கு…. என் கூட இருக்குற பசங்களுக்காக என்னவும் செய்வேன்…. நான் உன்னை என்னோட தோழியா தான் நினைக்கிறேன்…… சொல்லப் போனா என்னோட ஒரே தோழி நீதான்…. பெண்கள் எனக்கு அவ்வளவு பழக்கமே இல்லை…. என் பேச்சுக்கு மரியாதை குடுத்தா, பையனை பார்த்து நிஜமா பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லணும்”, என்று ஸ்ட்ரிக்ட்டாக சொன்னான்.

சந்தியா அமைதியாக நிற்கவும்…. கோபமாக திரும்பி நடந்தான்…..

“சொல்றேன்”, என்ற சந்தியாவின் குரல் காதில் விழவும் தான்…..

திரும்பி அவளை பார்த்து புன்னகைத்தவன்….. “உண்மையா சொல்லணும்!”, என்றவன்…… “வா, கீழ நிக்கறேன், உன் கூட வீடு வரைக்கும் வர்றேன்”, என்றான்…..

சந்தியாவுடனும் கீர்த்தனாவுடனும் வெற்றிவேல் நடந்து செல்லவும், பார்த்துக் கொண்டிருந்த ஞானவேலிற்கு…… கோபம் கோபமாக வந்தது.

கண்டிப்பாக சந்தியாவின் திருமணத்தை பற்றி தான் பேசியிருப்பான் என்று அனுமானித்தான்.

“என்ன பேசின?”, என்று வெற்றிவேல் வந்தவுடனே கேட்க….

“என்ன? என்ன பேசின? யார்கிட்ட?”, என்றான் புரியாமல் வெற்றி.

“சந்தியாகிட்ட என்ன பேசின?”,

“அது அவளோட கல்யாணத்தை பத்தி, காலையில அமெரிக்கால இருந்து போன் வந்ததே, அதை பத்தி பேசினேன்…..”,

“என்ன சொல்லிச்சு அந்த பொண்ணு?”, என்றான் ஞானவேல்……

ஞானவேலிற்கு சந்தியா கேஸ் முடியும்வரை திருமணம் வேண்டாம் என்று சொன்னது தெரியாது…. வெற்றி சந்தியாவின் திருமணத்தை பற்றி அகல்யாவும் அவள் கணவனும் பேச சொல்லியிருக்கிறார்கள் என்று தான் சொல்லியிருந்தான், வெற்றி தான் கட்டாயப்படுத்தி இப்போது மாப்பிள்ளையை பார்த்து பிடித்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல சொல்லியிருக்கிறான் என்றும் தெரியாது.     

 “மாப்பிள்ளையை பார்த்துட்டு பிடிச்சிருக்கா, இல்லையான்னு, சொல்றேன்னு சொல்லியிருக்கு…”, 

“என்ன சொல்லுவா? பிடிச்சிருக்குன்னு சொல்லி……. நீட்டா அமெரிக்கால போயி செட்டில் ஆகிடுவா…. அப்போ உன் நிலைமை?”, என்று வெற்றியிடம் கேட்கவேண்டும் என்று ஆத்திரமாக வந்தாலும்…

“ம்கூம்!, பேசினால் வெற்றிக்கு கோபம் வரும்”, என்று தெரிந்து அமைதியாகிவிட்டான்….. வெற்றி சாதாரணமாக நட்பு பாராட்ட மாட்டான், பாராட்டி விட்டால் இப்படி தான். அவனின் நலன் எல்லாம் பின்னுக்கு போய்விடும்……

அதைப்பற்றி ஏதாவது மீனாட்சியோ, ஞானவேலோ சொன்னால் கோபம் வந்து விடும்….

அப்போதும் கேட்காமல் இருக்க முடியவில்லை…. “அந்த பொண்ணு கல்யாணத்தை விடு! உன் கல்யாணம்?”, என்று ஞானவேல் கேட்க…..

“ஏண்டா? என்னை கட்டிக்க என்ன பொண்ணுங்க கியூலயா நிக்கறாங்க….. இல்லை பொண்ணு அமைஞ்சு நான் வேண்டாம்னு சொன்னனா… பார்க்குற பொண்ணுங்களை அம்மாக்கும் உனக்கும் பிடிக்கலை…….”,

“பொண்ணு அழகா? உனக்கு பிடிச்சிருக்கா? எல்லாம் நீ தான் பார்க்கணும்….. நானும் அம்மாவும் மெயினா பார்க்குறது படிப்பும் குடும்பமும் தான்.. அது ஒன்னும் சரியா அமையலை…”,  

“அதான் நானும் சொல்றேன், உங்களுக்கு பிடிச்சதுக்கு அப்புறம் தான் எனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு நான் பார்க்கணும்….. அதெல்லாம் அமையும் போது தானா அமையும்டா….. நீ வா”, என்று தம்பியின் தோளில் கைப்போட்டு அவனை சமாதானப்படுத்திக் கொண்டே சாப்பிட அழைத்து போனான்.

என்ன வாகினும் ஞானவேலின் மனம் மட்டும் சமாதானமாகவில்லை.

அடுத்த நாள் சந்தியா மாலை டுயுஷன் எடுப்பதற்காக வந்தவள் வெற்றியை பட்டறையில் தேட…. அவன் அங்கே இல்லை என்றதும் வீட்டினுள் தேட…. அங்கே ஞானவேல் மட்டுமே இருந்தான்.

வெற்றி மீனாட்சியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றிருந்தான்.

சந்தியா, வெற்றியை கேட்கவும்….

“எதுக்கு கேட்கறீங்க?”, என்றான் கோபமாக.

அவன் கோபமாக கேட்கவும், சந்தியா எதற்கு கோபம் என்று புரியாமல் நிற்க…..

“என்ன? அந்த அமெரிக்க மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்ல போறீங்களா! அது தான் தெரிஞ்ச விஷயமாச்சே!”, என்றான் நக்கலாக சந்தியாவை பேச விடாமல்…. 

ஞானவேல் என்னவோ தான் செய்யக் கூடாத வேலையை செய்வது போல நக்கல் அடிக்க, சுள்ளென்று ஒரு கோபம் சந்தியாவுக்குள் பொங்கியது…… 

“இது மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா? இல்லை வேற ஏதாவது கூட தெரியுமா?”, என்று அந்த நக்கலுக்கு சிறிதும் குறையாமல் பதில் கொடுத்த சந்தியா……. “ஏன் சொல்றேன்னா? எனக்கு என்னை பத்தி தெரியாதது எல்லாம் உங்களுக்கு தெரியுதே…”, என்றாள் அந்த நக்கலுக்கு சிறிதும் குறையாமல்.

“ரொம்ப தைரியமாயிடுச்சு, உங்களுக்கு நிலைமை மாறிடிச்சு இல்லையா!”,

“என்னோட தைரியத்துக்கு என்ன வந்துச்சு…… அது எப்பவும் என்கூட தான் இருக்கும்……”,

“உங்ககூட தைரியம் எப்பவும் இருக்கும்னா பிரச்சனைகளை நீங்களே பார்த்திருக்க வேண்டியது தானே…. எங்கண்ணனை எதுக்கு இழுத்து விட்டீங்க….”,

“நான் ஒன்னும் இழுத்து விடலை, உங்க அண்ணனா தான் எனக்கு உதவி செய்யறேன்னு வந்தாங்க…..”,

“நீங்க சொல்லி வந்தானோ இல்லை அவனா வந்தானோ, நஷ்டம் இப்போ அவனுக்கு தானே…. அவன் தானே கொலை கேசுல மாட்டியிருக்கான்……”,

“அந்த கேசுல இருந்து அவன் விடுதலையாகணும்….. அது எப்ப நடக்குமோ தெரியலை…… அதுக்கப்புறம் அவனுக்கு நல்ல பொண்ணா கிடைக்கணும்… கொலை கேசுல மாட்டுன ஒருத்தனுக்கு யாரு நம்பி பொண்ணை குடுப்பா……”,

“சும்மாவே அவன் வெல்டிங் பட்டறை வெச்சிருக்கான்னு யாரும் பொண்ணு குடுக்கலை! இப்போ கொலை கேசு வேற, யாரு பொண்ணு குடுப்பா?”,

“இந்த சிக்கல் யாரால உங்களால தானே… நீங்க அமெரிக்கா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் நல்லா செட்டில் ஆகிடுவீங்க… எங்கண்ணன்….. உங்களுக்கு உதவ போய் அவன் வாழ்க்கை சிக்கலாகிடுச்சே….. அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?”, என்றான் ஆவேசமாக…

“இதுல என்னோட தப்பு என்னங்க இருக்கு, நான் எதுவுமே செய்யலை….. உங்கண்ணனோட வாழ்க்கை நல்லா இருக்கணும் நான் தினமும் கடவுளை வேண்டிக்கறேன்…….”,

“வேண்டுதலை வெச்சிகிட்டு என்ன பண்றது…. நீங்க மட்டுமா வேண்டறீங்க! எங்கண்ணன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நானும் எங்கம்மாவும் கூட தான் வேண்டறோம்…….. அதுவா பேச்சு…..”,

“வேற என்னங்க என்னால செய்ய முடியும்? என்னால ஒன்னும் செய்ய முடியாது…..! பொண்ணு கிடைக்கலைன்றதுக்காக நானா கல்யாணம் பண்ணிக்க முடியும்”, என்று சந்தியா வார்த்தைகளை விட….

“ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாதா?”, என்றான் ஞானவேல்.

“இவ்வளவு பேசற உங்களுக்கு தெரியாதா? நானே கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாலும் உங்க அண்ணன் ஒத்துக்க மாட்டாங்க…..”,

“நீங்க சொல்லாம அவன் ஒத்துக்க மாட்டான்னு ஏன் சொல்றீங்க?”, என்று ஞானவேல் சொல்லவும் தான்…. ஞானவேல் தன்னை வெற்றியை திருமணம் செய்துக் கொள்ள சீரியசாக சொல்கிறான் என்று புரிந்தது.

சில நொடிகள் என்ன பேச்சு இது என்றே புரியவில்லை… தானே தேவையில்லாமல் வாயை விட்டு விட்டோமா என்று நொந்து கொண்டாள்.

வெற்றியை ஒரு நொடி அவள் அப்படி நினைத்தது இல்லை…. வெற்றியும் அவளை அந்த மாதிரி ஒரு பார்வை கூட பார்த்தது இல்லை….. அதையும் விட இருவரின் வாழ்க்கை முறையும் வேறு…. பழக்க வழக்கங்களும் வேறு… என்ன இது? தான் வெற்றியை திருமணம் செய்து கொள்வதா? 

பிடித்திருந்தால் எல்லாம் பின்னுக்கு போய்விடும். ஆனால் அந்த மாதிரி பிடித்தம் இருவருக்குள்ளும் இல்லையே.  

“அப்போ உங்களுக்கு உதவி செஞ்சு எங்கண்ணன்  வாழ்க்கை நல்லா இல்லாம போகணுமா… யாரும் அவனுக்கு பொண்ணு குடுக்க மாட்டேங்கறாங்க…… எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கற எங்கண்ணனுக்கு ஏதாவது ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா…..”,

“எங்கண்ணன் மேல தப்பில்லைன்னு தெரிஞ்ச நீங்களே கல்யாணம்னு சொன்னவுடனே அதை ஒத்துக்க முடியாம நிக்கறீங்க….. வேற யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்க”, என்றான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு…..

அதன் பிறகு சந்தியாவிடம் சண்டையிடவில்லை, கோபப்படவில்லை, நக்கலாக பேசவில்லை….. அமைதியாக வெளியில் படியில் சென்று அமர்ந்து கொண்டான்.

சந்தியா என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை….. மூளை குழம்பி பையித்தியம் பிடித்து விடும் போல இருந்தது……

அப்படியே நின்றது நின்றபடியே இருந்தாள்……. டியுஷன் வந்த பிள்ளைகள் சத்தம் போட்டுக் கொண்டு மாடிப் படி ஏறவும் தானாக கலைந்தவள்……

வேகமாக வந்து, “சத்தம் போடாம போங்க”, என்று சொன்னாள்…. தானும் மாடிப்படி ஏறப் போனவள் ஞானவேலை பார்க்க……. அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்……

என்ன இதற்கு தீர்வு என்று அவளுக்கு தெரியவில்லை…. எதுவாகினும் அவளின் தவறு என்பது எங்கேயும் கிடையாது….. வெற்றிக்கு நல்ல பெண் அமைய வேண்டும் என்பது அவளுக்கு கூட ஆசை தான்… ஆனால் தனக்கு அவனுடன் திருமணமா ஒரு க்ஷணம் கூட அதை நினைக்க முடியவில்லை.

வெற்றியே அதை விரும்ப மாட்டான் என்பது திண்ணம்…..

ஆனால் ஞானவேல் சொல்வது போல வெற்றிக்கு நல்ல பெண் அமையா விட்டாள்….. அப்படியும் அதற்கு நான் பொறுப்பு கிடையாதே…

“என்னவோ? எனக்கு திருமணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்…! முதலில் வெற்றி விடுதலையாகட்டும். அவன் திருமணம் நடக்கட்டும். பின்பு எதுவாகினும் பார்த்துக் கொள்ளலாம்”, முடிவெடுத்து விட்டாள்.

வீட்டில் தீவிரமாக தனக்கு இப்போது  மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று விட்டாள்….

“இருபத்தாறு பொறந்திடிச்சு சந்தியா”, என்று ராஜம் ஏகத்துக்கும் கவலைப்படவும்…. சந்தியா பிடியே குடுக்கவில்லை……

“உன்னால என்னை வீட்ல வெச்சிருக்க முடியலைன்னா சொல்லும்மா….. அங்க ஊர் பக்கம் பொண்ணுங்களுக்கு இருக்குற ரெசிடென்சியல் ஸ்கூல்ல ஹாஸ்டல் வார்டன் அங்கயே தங்கியிருக்குற மாதிரி கேட்டாங்க, நான் போயிடறேன்”, என்று சொல்லவும்….

இப்படி ஒரு பதிலை சந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்காத ராஜம் அதிர்ந்தார்….. கேட்ட வீடும் அதிர்ந்தது.

சந்தியாவின் குரலில் இருந்த தீவிரம்… இப்போதைக்கு எதுவும் சந்தியாவிடம் பேச வேண்டாம் என்று அனைவருக்கும் அறிவுறுத்த…

எல்லோரும் அமைதியாகிவிட்டனர்….. “விடு ராஜம், கொஞ்ச நாள் போகட்டும்!”, என்று அவளின் தாத்தாவும் சொல்ல…..

அகல்யாவிடம் கூட ராஜம், “கொஞ்ச நாள் போகட்டும்மா, இப்போதைக்கு எதுவும் பார்க்க வேண்டாம்…. ஒரு நாலஞ்சு மாசம் போகட்டும்”, என்றார்.

“இப்போ இந்த மாப்பிள்ளைக்கிட்ட என்னம்மா சொல்றது….. நாங்க வேற ரொம்ப நம்பிக்கை குடுத்து பேசிட்டோம்…..”,

“சந்தியா கல்யாணத்துக்கு ஒத்துக்கலை…. என்னை வெச்சிருக்க உனக்கு இஷ்டமில்லைன்னா நான் வெளில எங்கயாவது வேலைக்கு போறேன்னு சொல்றா! ஒன்னும் பண்ண முடியலை!”, என்று அந்த தாய் அழ….

யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து வெற்றியாக சந்தியாவிடம், “என்ன முடிவு பண்ணியிருக்க சந்தியா? மாப்பிள்ளையை பிடிச்சதா?”, என்று ஆர்வமாக கேட்க….

“இல்லை! எனக்கு பிடிக்கலை!”, என்றாள் மிகவும் சாதாரணமாக…

“உன் தங்கச்சியும், அவர் வீடுக்காரரும் பார்த்திருக்காங்க, கண்டிப்பா உனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தான் பார்த்திருப்பாங்க….. என்ன உனக்கு பிடிக்கலை…?”,

“பிடிக்கலை! அவ்வளவு தான்!”, என்று சொல்லி மாடி படியேற….

“இரு, என்ன நீ இப்படி பேசற? இப்படியெல்லாம் பேச மாட்டியே? என்ன பிரச்சனை உனக்கு….?”,

“அதெல்லாம் ஒன்னுமில்லை…. நீங்க முதல்ல விடுதலையாகுங்க….. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கங்க, அப்புறம் தான் நான் பண்ணிக்குவேன்…”,

“என்ன முட்டாள்தனம் இது! பசங்களும் பொண்ணுங்களும் ஒன்னா…… எனக்கு இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆனா கூட தப்பில்லை.. ஆனா உன்னை அப்படியா விட முடியும், உனக்கு வயசாகலை……”,

“அதெல்லாம் எனக்கு தெரியாது! உங்க கல்யாணம் ஆன பிறகு தான் என் கல்யாணம்….. உங்க மேல கொலைப்பழி வர நான் காரணமாகிட்டேன்…. அதனால உங்களுக்கு நல்ல பொண்ணா அமையலைன்னா….. அந்த குற்ற உணர்ச்சி என்னை சந்தோஷமா இருக்க விடாது…..”,

“இந்த மாதிரி ஒரு மனநிலையில நான் இருக்கும் போது என்னை கல்யாணம் பண்ணிக்கிறவர் எப்படி சந்தோஷமா இருப்பார்…. அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு…..”,

“நீ பேசறதே எனக்கு புரியலை..?”, என்றான் குழப்பமாக… 

“நீங்க கல்யாணம் பண்ணிக்கங்க, அப்புறம் தான் நான் பண்ணிக்குவேன்..”, என்று தீர்மானமாக சொல்லி படியேறி விட்டாள்.

“இவ கல்யாணத்துக்கும் என் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்? இந்த பொண்ணு இப்படி ஏன் உளருது…..”, என்று சலித்தவன்..

எதற்கும் மீனாட்சியிடம் சொல்லி பெண் பார்க்க சொல்லலாம், அப்படியே சந்தியாவிடமும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டான்.

மீனாட்சியிடம் வெற்றி பெண் பார்க்க சொல்ல…. “நாம் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கிறோம், இப்போது எதற்கு புதிதாக சொல்கிறான் இவன்”, என்று வெற்றியிடமே மீனாட்சி கேட்க…..

“அந்த சந்தியா பொண்ணு லூசு மாதிரி உளருது மா….. என்னவோ என் கல்யாணத்துக்கு அப்புறம் தான் அது கல்யாணம் பண்ணிக்குமாம்…”,

“ஏன்?”, என்ற மீனாட்சியின் ஆச்சர்யமான கேள்விக்கு….

“அதுக்கு நான் உதவி பண்ணியிருக்கேனாம், அதனால….”, என்று மட்டும் தான் சொன்னான். அப்போதும், “சந்தியா, அவனால  என் மேல கொலைப்பழி விழுந்திடுச்சுன்னு நினைக்கிறா”, என்று சொல்லவில்லை….

அங்கிருந்த ஞானவேலுக்கு தோன்றியது ஒன்றுதான், “அப்போதும் இந்த சந்தியா தன் அண்ணனை திருமணம் செய்ய கேட்கவில்லையே”, என்று.

வாரம் ஒன்று இப்படியே செல்ல… வெற்றி சந்தியாவிடம் இரண்டு மூன்று முறை பேச முயன்றபோது…. ஏதோ வேலை இருப்பது போல தவிர்த்து விட்டாள்.

அன்று மாலை வெற்றியை, தன்னுடைய அண்ணன் மகளுக்கு பார்க்க, முதலில் மாப்பிள்ளையை நேரில் பார்க்க வேண்டும் என்று ஒருவர் வர…

மீனாட்சி பரபரப்பாக அவரை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து வெற்றியையும் ஞானவேலையும் அழைத்து விட்டார்.

வெற்றியிடம் பேச்சுக் கொடுத்து…… அவருக்கு திருப்தியான பின் கையோடு கொண்டு வந்திருந்த பெண்ணின் போட்டோவை கொடுத்தார்.

பெண் சற்று குண்டாக இருந்தது, மாநிறமாக இருந்தது…. அதெல்லாம் கூட பரவாயில்லை…… அதிகம் படிக்கவில்லை, பிளஸ் டூ தான் படித்திருந்ததது.. அதுவும் பரவாயில்லை…  அந்த முகம் வெற்றியை கவரவில்லை, முக லட்சணம் மிகவும் சுமார் என்பது தான் உண்மை…..

பார்த்தவுடன், “ஐயோ”, என்றிருந்தது வெற்றிக்கு….. “பிடிக்கவில்லை”, என்று எப்படி சொல்வது… என்று வெற்றி யோசித்துக் கொண்டிருக்க….

அந்த பெண்ணின் சித்தப்பா, அடுத்து அவனின் சொத்துக்களை விசாரிக்க ஆரம்பித்தார்…….

மீனாட்சி சொத்துக்களை பற்றி பெருமை பேசப் போக….. அவரை கண்களால் அடக்கிய வெற்றி….. “எதிர்ல இருக்குற பட்டறை மட்டும் தாங்க என் சொத்து”, என்றான்.

“இந்த வீடு, பக்கத்துல இருக்குற வீடு எல்லாம் உங்களுதுன்னாங்க”,

“இல்லை, அதெல்லாம் அம்மா பேர்லையும் தம்பி பேர்லையும் இருக்கு…..”,

“நீங்க தான் வாங்கினதா சொன்னாங்க…..”,

“அது எங்கம்மா தம்பியோட சொத்துன்னா முடிஞ்சு போச்சு”, என்றான் கரார் குரலில்……

அவர் யோசிக்க ஆரம்பிக்கவும்…. “என் மேல ஒரு கேஸ் கூட இருக்குதுங்க”, என்று அந்த உண்மையையும் சொல்ல….

வந்தவர் மேலே கேட்கவேயில்லை…… “எங்களுக்கு இந்த இடம் சரி படாதுங்க”, என்று முகத்திற்கு நேரேயே சொல்லி விரைந்து விட்டார்….. அந்த பெண்ணின் போட்டோவை கூட எடுக்கவில்லை.

வெற்றிக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது….  “எஸ்சாயிட்டேன்”, என்று மிரசலாயிடேன் ஸ்டைலில் பாடினான். 

மீனாட்சி கவலையாக வெற்றியை பார்க்க….. “எஸ்சாட்யிடேன்”, என்று அம்மாவை தூக்கி சுற்றியபடி பாட….  

அப்போது பார்த்து ஏதோ வேலையாக சந்தியா வெற்றியின் வீட்டிற்கு வர…. மீனாட்சியை புன்னகை முகத்தோடு இறக்கி விட்டான்.

சந்தியா எதற்கு இவ்வளவு சந்தோசம் என்பது போல பார்க்க….. 

ஞானவேல் வேண்டுமென்றே, “இந்த பொண்ணை எங்க அண்ணனுக்கு பார்த்தோம்”, என்று போட்டோவை எடுத்து சந்தியா கையில் கொடுத்தான்.

சந்தியாவிற்கு பெண்ணை பார்த்ததும் பிடிக்கவில்லை…. “இந்த பெண்ணா வெற்றியின் மனைவி…..”, என்று யோசித்துக் கொண்டே….

“ஃபிக்ஸ் ஆகிடுச்சா”, என்று தயங்கி தயங்கி கேட்க….

“பொண்ணு பிளஸ் டூ தான் பிடிச்சிருக்கு…. குடும்பமும் ரொம்ப சாதாரணம் தான்…..”, என்றான் ஞானவேல்.

சந்தியா, “இந்த பெண்ணா”, என்று கவலையாக பார்க்கவும்…..

“ஆனா பாருங்க! வெற்றி மேல கொலைக் கேஸ் இருக்குன்னு இவங்க கூட வெற்றியை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க”, என்று சொல்ல….

ஞானவேலின் குரல் எல்லாம் உன்னால் தான் என்று மறைமுகமாக சந்தியாவை குற்றம் சாட்டியது.

சந்தியா வெற்றியை பார்க்க….. “நானே அந்த பொண்ணை பிடிக்கலைன்னு எப்படிடா சொல்றதுன்னு இருந்தேன். அவங்களே வேண்டாம்னு சொல்லிட்டாங்க… அப்பா…..”, என்று சந்தோஷமாக மூச்சு விட….

சந்தியா ஒன்றும் பேசாமல் திரும்ப சென்று விட்டாள்.

மீனாட்சி, “எதுக்குமா வந்த?”, என்று கேட்டதற்கு…

“சும்மா தான்மா வநதேன்”, என்று சொல்லிச் சென்றாள் ….

கீர்த்தனாவை தங்கபாண்டியுடன் ஏதோ வேலையிருப்பது போல முன்னால் அனுப்பிவிட்டு, சிறிது நேரம் கழித்து….. “என்னை கொண்டு போய் விடறீங்களா?”, என்று வெற்றியிடம் பட்டறையில் வந்து கேட்க….

“வா”, என்று அவளுடன் நடக்க ஆரம்பித்த வெற்றியிடம்…. “என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களா?”, என்றாள்.

வெற்றி அதிர்ந்து நின்று அவளை பார்த்தான்.

Advertisement