Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு:

வெற்றியின் முகத்தை பார்த்து அருகில் வந்த ஞானவேல், “என்ன வெற்றி”, என்க…..

“செத்துட்டான்டா”, என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு வெற்றி பதில் உரைக்கவும், ஞானவேல் அவனின் அண்ணனைவிட கல்லாய் சமைந்து நின்றான்.

அருகில் நின்ற அவனின் மாணவர்களை, “ரொம்ப பக்கத்துல நிக்காதீங்க இவனுங்க ஓடாம பார்த்துகோங்க……”, என்றவன் ரமணனை அழைத்தான்……

“சார்……”, என்று விவரம் சொல்லவும்….

“என்ன வெற்றி சொல்ற?”, என்று ரமணன் அதிர்ந்தான்.

“ஆமா சார், உயிர் இருக்குற மாதிரி தெரியலை”, என்றான் மெதுவான குரலில்.

“நான் தான் சொன்னனே யார் மேலயும் கைவைக்காதன்னு”, என்று சலித்த ரமணன்….

“லோக்கல் ஸ்டேஷன்க்கு சொல்லிட்டியா…..”,

“இல்லை சார்”, என்று வெற்றி சொல்லவும்….

“சொல்லாத நான் வந்ததுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்”, என்று சொல்லி வைத்தான்…..

இன்னும் ஒருவன் இறந்தது யாருக்கும் தெரியவில்லை…. யாரும் அணுக முடியாத படி வெற்றி இறுகியிருந்தான்…… ஞானவேல் செய்வதறியாது, மீனாட்சிக்கு தெரியும் போது என்ன ஆகுமோ என்று மனம் பதைக்க நின்றிருந்தான்.

சந்தியாவிற்கு அடி தடி மட்டுமல்ல ஏதோ சரியில்லை என்றும் தோன்ற…. “என்ன”, என்று புரியாமல், “எதற்கு நிற்கிறார்கள், யாருக்கு  நிற்கிறார்கள்”, என்று புரியாமல் நின்றாள்.

“என்ன வெற்றி”, என்று அக்கம் பக்கத்தினர் கேட்கவும்…..

“போலீஸ் வருதுங்க அண்ணா!”, என்று அப்படியே அருகில் இருந்த கல்லில் அமர்ந்து கொண்டான்.

“என்ன வெற்றி”, என்று மீனாட்சி அருகில் வர……

“மா! ஒன்னுமில்லை மா! நீங்க வீட்ல இருங்க!”, என்று சொன்னான்.

“என்ன விஷயம்டா?”, என்று மீனாட்சி ஒரு பக்கம் பதைத்த போதும் அண்ணனும் தம்பியும் வாய் திறக்கவில்லை.

அதற்குள் யாரோ ஒருவர் லோக்கல் ஸ்டேஷனிற்கு தகவல் கொடுத்திருக்க… அங்கிருந்து போலீசார் வரவும்….. ரமணன் வரவும் சரியாக இருந்தது.

கையில் ஆயுதத்தோடே அவன் அடியாள் இறந்து கிடக்க…… ரமணனோடு வந்த ஒரு போலிஸ் போட்டோ எடுக்க….. அப்போது தான் அவன் இறந்து கிடப்பதே எல்லோருக்கும் தெரிய இடமே அதிர்ந்தது.

மற்ற மூவரும் கைது செய்யப்பட்டு அப்படியே அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட…..

அமைதியாக வெற்றி நின்று கொண்டிருக்க….. அருகில் வந்த ரமணன், “என்ன நடந்தது?”, என்று விசாரிக்க……. வெற்றி நடந்ததை சொன்னான்……

“ஒருவகையில இத்தனை பேர் பார்த்தது சாதகம் கிடையாது….. இப்போ உன்னால தான் இவன் செத்தான்னு தெரியும்…    உன்னை அரெஸ்ட் பண்ணி தான் ஆகணும் வெற்றி…. வேறவழியில்லை…….”,

“எப்படியும் ஜாமீன் கிடைக்க ஒரு வாரம் பத்து நாள் ஆகிடும்….. அப்புறம் கேஸ் நடந்து நீ வெளில வரணும்…”,

“இவங்க எல்லோரும் பார்த்ததுல உள்ள சாதகம், நீ உன்னை காப்பாத்திக்க தான் திருப்பி தாக்கினன்னு ப்ரூவ் பண்ணலாம்…. தண்டனை கொஞ்சமா கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். எதுவும் சொல்ல முடியாது”, என்று நிலைமையை தெளிவாக வெற்றியிடம் சொன்னான்.

ரமணனுக்கே சூழ்நிலையை பார்த்து வருத்தமாக இருந்தது….. கொண்ட கட்லாவை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க…… வெற்றி இப்படி மாட்டிக் கொண்டானே என்று…

அவனை அரெஸ்ட் செய்து ஜீப்பில் ஏற்றவும் பத்திரிக்கையாளர் வரவும் சரியாக இருக்க….. வெற்றியின் முகத்தை படம் பிடிக்க விடவில்லை ரமணன்…

“யாரோ வெற்றியை முன் விரோதம் காரணமாக தாக்க வந்தார்கள்… தற்காத்து கொள்ளும் போது இந்த அசம்பாவிதம்”, என்று ரமணனே பேட்டி கொடுத்தான்.

“என்ன முன் விரோதம்?”, என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு,

“அது தான் இன்வெஸ்டிகேஷன் பண்ண போறோம்”, என்றான்.

நடப்பதை மலங்க மலங்க பார்த்த மீனாட்சி மயங்கி சரிய ஆரம்பித்தார்…     ஞானவேலுக்கு அவரை பார்ப்பதா? வெற்றியின் பின் போவதா? தெரியவில்லை.

சந்தியா வீட்டினர், “நாங்க பார்த்துக்கறோம்”, என்று விரைந்து வர…. ஞானவேல் வெற்றியின் பின் போகப் போக…..

தடுத்த ரமணன், “இப்போ ஒரு யூசும் இல்லை… யாராவது நல்ல லாயரா காலையில பாருங்க”, எனவும்..

அருகில் வந்த சந்தியா, “யாரை பார்க்கலாம் சார்?”, என்று ரமணனிடம் கேட்க…..

ஞானவேலும், “நீங்களே சொல்லுங்க சார்!”, என்று வேண்டிக் கேட்க….

“பத்திரிக்கைக்காரங்க எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க… காலையில வீட்டுக்கு வாங்க”, என்று மெதுவாக முணுமுணுத்து விட்டு ரமணன் சென்று விட்டான்.

எல்லோரும், “ஏன் அடிக்க வந்தார்கள்? யார் அவர்கள்”, என்று பேச ஆரம்பிக்க…. சந்தியாவுக்கும் தெரியவில்லை தான் தான் காரணமோ என்று….. மனது அப்படிதான் இருக்கும் என்று சொல்ல…..

ஞானவேல் சந்தியாவை பார்த்த பார்வையில் சிநேக பாவம் எல்லாம் தொலைந்து போய், “உன்னால் தான்”, என்ற குற்றச்சாட்டு அப்பட்டமாக தெரிந்தது…… ஆனாலும் வாய் திறந்து அதை சொல்லவில்லை.

அன்று இரவு சந்தியா உறங்கவே இல்லை…… உறக்கம் அணுகவே இல்லை……

தன்னால் தான் இப்படி வெற்றிக்கு நிலைமையா என்ற எண்ணமே கொல்லாமல் கொன்றது….. அதுவும் ஞானவேலின் பார்வை அவளை குற்றம் சாட்ட….

பேசாமல் அதற்கு அந்த கொண்ட கட்லாவை தான் கொன்று ஜெயிலுக்கே போயிருக்கலாம் என்று தோன்ற வைத்தது. 

அவள் அப்படியும் இப்படியும் புரளவும், “என்ன சந்தியா?”, என்று நடு இரவில் ராஜம் கேட்கவும்,

“ஒன்னுமில்லை மா”, என்று சொல்லி விட்ட போதும் அழுகை வர…. சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தாள், தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று.

மறுநாள் காலையிலேயே தயாராகி நிற்க……. ஞானவேல் முறைத்துக் கொண்டே கிளம்பினான்.     

சந்தியாவிற்கு மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது….

“நான் செய்த தீங்கு என்ன?”, என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது…. எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

காலையில் ஏழரை மணிக்கெல்லாம் ரமணனின் வீட்டை அடைந்து விட்டனர். ஆட்டோவில் தான் சென்றனர்.

ரமணன் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

முகம் மிகவும் தீவிர பாவனையில் இருக்க… ஞானவேலிற்கு பேசவே தயக்கமாக இருந்தது…. அவர்கள் கேட்க வேண்டிய அவசியமேயில்லாமல் பேச ஆரம்பித்தான்.

“நேத்து நைட்டே நான் மத்த அடிப்பட்டவங்க கிட்ட விசாரிச்சிட்டேன்……. முதல்ல யார் செய்ய சொன்னாங்கன்னு சொல்லலை…. அப்புறம் கொஞ்சம் மிரட்டவும்…… கூட இருக்குறவன் வேற செத்து போயிட்டான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்….. நானும் தண்டனையை குறைக்க முயற்சி செய்யறேன்….. உங்க மேல சும்மா அடிதடி கேஸ் மட்டும் போடறேன்…… செத்து போனவன் தான் கொலை செய்ய வந்தான்னு சொல்றேன்…. அப்படியே நீங்களும் சொல்லுங்க, அப்ரூவரா மாறிடுங்கன்னு சொன்னதுக்கு அப்புறம்…..  விஷயத்தை சொன்னாங்க…..”,

“அந்த கொண்ட கட்லா தான் செய்ய சொல்லியிருக்கான்……. இனிமே அவன் தப்பிக்க மாட்டான்றது வேற விஷயம்….. இனிமே அவனால ஒன்னும் செய்ய முடியாதுங்கறதும் வேற விஷயம்…….”,

ரமணன் சொல்ல சொல்ல தன்னால் தான் வெற்றிக்கு இப்படியாகிவிட்டது என்பது சந்தியாவை முற்றிலும் ஒடுங்க செய்தது.

“நம்ம செய்ய வேண்டியது வெற்றியை சீக்கிரம் ஜாமீன்ல எடுக்கணும் அப்புறம் அவன் மேல தப்பில்லை….. இது தற்காப்பு முயற்சி…. அதுல அடிக்க வந்தவன் இறந்து போயிட்டான்னு ப்ரூவ் பண்ணனும்….. அப்போ தான் விடுதலை கிடைக்கும்”,  

“எந்த வக்கீல் பார்க்கட்டும்”, என்று ஞானவேல் கேட்க…..

“என் மனைவியோட அண்ணா ராம் கூட லாயர் தான்…… அவர்கிட்டயே கேஸ் குடுங்க……. அவரோடன்னா எனக்கு பேசறதுக்கு ஈசி….. என்ன செய்யணும்னு நான் சொல்றதுக்கும் வசதியா இருக்கும்”, என்றான்.

“நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யறோம் சார்….. எப்படியாவது வெற்றியை இதுல இருந்து வெளில கொண்டு வந்துடுங்க”, என்று சொல்லும்போதே ஞானவேலின் குரல் தழுதழுத்தது..

“அண்ணன் மேல் இவ்வளவு பாசமா?”, என்று ரமணனுக்கு கூட ஆச்சர்யமாக இருந்தது….. ஏனென்றால் இப்போது தகராறு அதிகம் உடன் பிறந்தவர்களுடன் தான் வருகிறது….

“காப்பாத்திடலாம்”, என்று ஞானவேலின் தோளை தட்டி கொடுத்த ரமணன்…..

சந்தியாவின் கலங்கிய முகத்தை பார்க்கவும்…. “ஒன்னுமில்லை வெற்றி வெளில வந்துடுவான்”, என்று தைரியம் சொன்னான்.

பிறகு ராமை கூப்பிட்டு விவரம் சொன்ன ரமணன்…… “இதுல கொண்ட கட்லாவை நான் கொண்டு வரலை…. சும்மா குடிச்சிட்டு வேற முன் விரோதம் காரணமா அந்த செத்து போனவன் கொலை செய்ய வந்தான்…. கூட இவனுங்க இருந்தாங்கன்னு தான் கேஸ் பைல் பண்ண சொல்லியிருக்கேன்”,

“ஏண்டா, அந்த கொண்ட கட்லாவை ஏன் கொண்டு வர வேண்டாம்?”, என்று ராம் கேட்க….  

“அவனே செத்துப் போக போறான், அவனை கொண்டு வந்து என்ன பண்ண போறீங்க…. நிறைய பொண்ணுங்க பேர் வெளில வரும்.    அதுவுமில்லாம நான் அரெஸ்ட் பண்ணினதுக்கு அப்புறமும் வெற்றியை பார்த்துட்டு தான் வந்தேன்….”,

“கொலை கேஸ்லயே மாட்டிக்கிட்டேன், இதுல எதுக்கு சந்தியா பேரை வேற இழுத்து விட்டுகிட்டு வேண்டாம்னு சொல்றான்…. நானே பொண்ணு பேரை சொல்லிடாத தேவையில்லாம பத்திரிக்கையில கண்டதும் எழுதுவாங்கன்னு சொல்லலாம்னு தான் இருந்தேன்…… அரெஸ்ட் ஆகி ஜெயில்ல இருக்கும் போதும், எனக்கு முன்னாடி அவன் சொல்றான்…… அந்த நல்ல மனசுக்காவது கண்டிப்பா நான் அவனை வெளில கொண்டு வருவேன்”, என்றான் ரமணன்.

சந்தியாவிற்கு கண்களில் நீர் நிறைந்தது…..

பிறகு ராமிடம் என்ன செய்யலாம், எப்படி அதை ராம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்தான் ரமணன்…. ஐ பீ எஸ் பாஸ் செய்திருந்தாலும் அவன் படிப்பு சட்டம் தானே…..

பேசி முடித்தவுடன்….. தொலைபேசியில் கல்பனாவிடம் எல்லோருக்கும் ரமணன் காஃபி அனுப்பி விடும்படி சொல்ல…..

காஃபியை வேலையால் தூக்கி வர…. அவனுக்கு முக்கியமானவர்கள் என்றால் தான் வீட்டின் உள் போன் செய்து ரமணன் காபி சொல்வான் என்றறிந்த வரா… யாராயிருக்கும் என்று தெரிந்து கொள்ள அலுவலக அறைக்கு வர…..

சந்தியாவை பார்த்தவள் சிநேகமாக புன்னகைத்து…… “சந்தியாவா, ஏன் என்கிட்டே சொல்லலை”, என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.    

ஞானவேல், “யார்?”, என்பது போல ஒரு பார்வையை ரமணனிடம் செலுத்தி, “மாஸ்டர் எங்கே?”, என்று சந்தியாவிடம் கேட்க…

ரமணன் வராவிடம் இன்னும் எதுவும் சொல்லியிருக்க வில்லை……

சந்தியா, “என்ன சொல்வது”, என்று தடுமாறவும்….

ரமணன் வராவை பார்த்து முறைத்தான்….. அவள் முறைக்கும் முன் இவன் முறைத்து விட்டால் திட்டு கொஞ்சம் கம்மியாகும் என்பது அவனின் எண்ணம்…..

“உன்கிட்ட எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன்…. ஆபீஸ் ரூம்ல அஃபிசியலா நாங்க பேசும் போது விவரம் கேட்க கூடாதுன்னு”, என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்ல…….

“நம்ம மாஸ்டர் எங்கன்னு தானே கேட்டேன்…. இதுல என்ன?”, என்றாள் மெதுவான குரலில் முகத்தை தூக்கி வைத்து…..

“பாப்பா, அது….”, என்று ராம் ஆரம்பிக்க……

தெரிந்தால் வரா கோபப்படுவாளே என்று, “ராம் அண்ணா, நீங்க குடுக்கற செல்லம் தான்…… விவரம் சொன்னா ஒன்னு எதிர்ல இருக்குறவங்க பயப்படற அளவுக்கு எக்ஸ்ப்ரஸன் குடுப்பா….. இல்லைன்னா உங்க கிட்ட தான வந்தாங்க, எப்படி பிரச்சனையாச்சு, நீங்க என்ன கிழிக்கறீங்கன்னு என்னை கேட்பா, அவளை அனுப்பிவிடுங்க”, என்று ரமணன் சொல்ல…

டென்ஷனான வரா, “அப்போ நீங்க சொதப்பிட்டீங்க, மாஸ்டர் பிரச்சினையில மாட்டிகிட்டாரா”, என்று குரலுயர்த்தி ரமணனிடம் வரா சண்டைக்கு கிளம்ப….

“நீ வா!”, என்று ரமணனே எழுந்து வந்து அவளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு போனான்.

அவர்கள் சென்றதும் ராம், ஞானவேலையும் சந்தியாவையும் நோக்கி….. “ஒரு நாலஞ்சு நாள் வெற்றியை ஜாமீன்ல எடுத்துடலாம்……. அதுக்கப்புறம் கேஸ் நடக்கும்….. பொதுவா இந்த மாதிரி கேஸ் வருஷக்கணக்கா நடக்கும்….”,

“ஆனா இங்க ரமணன் கூட இருக்கான்…. அந்த குற்றவாளிகளும் அப்ரூவரா மாறிட்டாங்கன்னா…. அரசாங்க வக்கீல் அதிகமா நாள் இழுக்க மாட்டார்….. தொண்ணூறு சதவிகிதம் வெற்றிக்கு தண்டனை கிடைக்காது…. பயப்படாம போங்க”, என்று ராம் சொல்ல…..

ஞானவேல் ராமிடம், “சார், ஃபீஸ்!”, என்று கேட்க…….

“பார்த்த இல்லை, எங்க பாப்பா உங்க கமிஷனர்கிட்டயே ஏன் பிரச்சனையாக விட்டீங்கன்னு சண்டை போடறா? இதுல நான் ஃபீஸ் சொன்னா அதை கமிஷனர் தான் குடுக்கணும்னு சொல்லுவா”,

“இதெல்லாம் உங்க நல்ல மனசுங்க சார்….. நீங்க ஃபீஸ் சொல்லுங்க”, என்று ஞானவேல் மீண்டும் வற்புறுத்திக் கேட்க… 

“உங்கண்ணன் வெளில வரட்டும், பேசிக்கலாம்!  இப்ப போங்க!”, என்று ராம் சொல்ல….

வெளியே அவர்கள் கிளம்பி செல்லும் போது அங்கே காரிடரில் ரமணனுடன் இருந்தாள் வரா….. அவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்…. “உங்களை நம்பி தான இங்க வந்தாங்க! நீங்க என்ன பண்ணி வெச்சிருக்கீங்க? சும்மா அடி தடின்னா பரவாயில்லை கொலை கேஸ்”, என்று கோபமாக பேசிக்கொண்டிருக்க….

“நான் வெற்றியை யார் மேலயும் கை வைக்காதன்னு சொன்னேன் பாப்பா!”, என்று பரிதாபமாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தான் ரமணன்.

இவர்களை பார்த்ததும் இருவரும் பேச்சை நிறுத்தினர்….. 

வரா அருகில் வந்து…… “பயப்படாதீங்க, மாஸ்டர் இந்த கேஸ்ல இருந்து வெளில வந்துடுவார்….. நான் பொறுப்பு, பயமில்லாம போங்க”, என்று  நம்பிக்கை கொடுக்கவும்…….

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்”, என்று சந்தியாவும் ஞானவேலும் சொல்லி கிளம்பினர்.  

அவர்கள் கிளம்பிய பிறகு…. “பாருங்க, நீங்க சட்டத்தை யூஸ் பண்ணுவீங்களோ இல்லை அவுட் ஆஃப் தட் பண்ணுவீங்களோ, என்னவோ பண்ணுங்க, ஆனா மாஸ்டர் எந்த பிரச்சனையுமில்லாம வரணும், உங்களை நம்பி வந்தும் ஒருத்தர் பிரச்சனையில மாட்டிக்கிட்டாங்கன்னு எப்பவுமே இருக்கக் கூடாது”, என்று ரமணனுக்கு வரா ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தாள்.

“வரா, விடுடி நான் பார்த்துக்கறேன்”, என்று ரமணன் இழுக்க……

“மாஸ்டர் அடிக்கவேயில்லை, அவனே ஹார்ட் அட்டாக்ல செத்து போயிட்டான்னு சொல்லுங்க, இல்லை வேற யாரையாவது சரண்டர் ஆக சொல்லி மாஸ்டரை ரீலிவ் பண்ணுங்க”, என்று பெரிய வயிறை தூக்கி கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஐடியா கொடுக்க…

“நீ கத்தி பேசாதடி, போலிஸ்காரன் பொண்டாட்டி ஆகிட்ட போல…. உன் ஐடியா எல்லாம் நீயே வெச்சிக்கோ! நீ இப்போதைக்கு என் குழந்தையை நல்ல படியா பெத்துக் குடுக்கறதை மட்டும் பாரு, இதையெல்லாம் நான் பார்த்துக்கறேன், போ!”, என்று வீட்டிற்குள் மெதுவாக இழுத்துக் கொண்டு போனான்.    

ஞானவேல் சந்தியாவிடம் திரும்ப வரும்போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. சந்தியா மேல் தப்பில்லை என்று அவனின் அறிவிற்கு புரிந்தாலும் மனதிற்கு இந்த பெண்ணால் வெற்றி கொலை கேசில் மாட்டிக் கொண்டான் என்பதை தாங்க முடியவில்லை.

வெற்றி இவர்களை இங்கே குடி வைக்க வேண்டாம் என்று சொன்ன போதே தாங்கள் கேட்டிருக்க வேண்டுமோ என்ற எண்ணமே வெகுவாக இருந்தது.

மீனாட்சி இவர்களுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தார்……

“நாலஞ்சு நாள்ல வெளில கொண்டு வந்துடுவாங்கம்மா, அப்படி தான் சொன்னாங்க….. கமிஷனர் அவங்க சம்சாரம் எல்லோரும் வெற்றிக்காக ரொம்ப பார்க்கறாங்க, வெளில எடுத்துடுவாங்கம்மா”, என்றான்.

“எதுக்குடா என் பையனை அடிக்க வந்தாங்க”, என்று மீனாட்சி கேட்க…..

“தெரியலைம்மா வெற்றி வந்தா தான் தெரியும்”, என்று ஞானவேல் முடித்துக் கொண்டான்.

வெற்றி கமிஷனரிடமே சந்தியாவின் பெயர் வெளியில் வர வேண்டாம் என்று சொல்லியிருக்க….. தனக்கே சந்தியா மேல் கோபம் இருக்க….. மீனாட்சிக்கும் அவர்கள் மேல் கோபம் வந்து யாரிடமாவது பேசி வைத்து விட்டால்……. அதனால் சொல்லவில்லை.

ஞானவேலுக்கும் சற்று குற்ற உணர்ச்சி இருந்தது….. வெற்றி தன்னை சண்டைக்கு நடுவில் வர வேண்டாம் என்று சொல்லியும் தான் போய், அந்த ஆள் தன்னை கத்தியால் குத்த வந்ததால் தான் வெற்றி பதட்டமாகி அவனை பலமாக தாக்கி விட்டான் என்று தெரியும்….

அதனால் சந்தியாவின் மேல் பழி போடாமல் அமைதியாகி விட்டான்.    

சந்தியா அவளின் அம்மாவிடம் மட்டும் நடந்ததுக்கு தான் தான் காரணம் என்று சொன்னாள்…. வேறு யாரிடமும் சொல்லவில்லை… ராஜமும் யாரிடமும் சொல்லவில்லை……

ஆனால் சீக்கிரம் சந்தியாவிற்கு திருமணம் செய்து விட வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டார்.

முடிவெடுத்தவுடன் அமெரிக்காவில் இருக்கும் அகல்யாவிடம் பேசினார்…. “உங்க மாமனார் மாமியார்கிட்ட சொல்லி யாராவது நல்ல பையனா, படிச்சவரா, நல்ல வேலைல இருக்குறவரா பாரும்மா…. பொண்ணு படிச்சிருக்கா….. பார்க்க லட்சணமா இருக்கா…. மத்தபடி சீர்ன்னு எதுவும் செய்ய முடியாது”, என்று ராஜம் சொல்ல…….

“அம்மா! சீர் எல்லாம் நான் பார்த்துக்றேன், நான் சம்பாதிக்கறேன் மா…..”, என்று நம்பிக்கை கொடுத்து….. “அக்காக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்க வேண்டியது என் பொறுப்பு”, என்று சொல்லிய அகல்யா…….

“ஆனா அக்கா ஒத்துக்கணுமேம்மா….. நாராயணன் படிப்பை முடிக்கற வரைக்கும் ஒத்துக்குவாளா?”, என்று சந்தேகம் கேட்க….

“அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்கணும் அகல்யா”, என்று நடந்த பிரச்சனைகளை யாரிடம் பகிர வேண்டாம் என்று சொல்லி சொன்னார். நிலைமையின் தீவிரம் புரிந்தால் அகல்யா இன்னும் சற்று கருத்தாக மாப்பிள்ளை பார்ப்பதை கவனிப்பாள் என்று தான் சொன்னார்.   

சந்தியாவை பற்றி அம்மாவிற்கு இருந்த பதட்டம் தங்கையையும் சற்றும் குறையாமல் பற்றிக் கொண்டது.

வெற்றியின் மேல் கேஸ் பதிவு செய்யப்பட்டாலும், விஷயங்கள் அவனுக்கு சாதகமாக இருக்குமாறு ரமணன் பார்த்துக்கொள்ளவும், அரசு தரப்பு அதிகமாக வெற்றிக்கு எதிராக ஆவணங்களோ சாட்சிகளோ தாக்கல் செய்யாததால், ஜாமீனுக்கு எதிர்ப்பும் தெரிவிக்காததால்,  வெற்றிக்கு ஐந்து நாட்களில் ஜாமீன் கிடைத்தது….   

வீட்டிற்கு வந்துவிட்டவனிடம் அவன் மட்டும் தனியாக இருக்கும் சமயம் பார்த்து சந்தியா, “சாரி என்னால தான இப்படியாகிடுச்சு”, என்ற வார்த்தைகளோடு போய் முன் நிற்க…..

அவளை முறைத்து பார்த்த வெற்றி, “இந்த மன்னிப்பு கேட்டு, நன்றி சொல்லி என்னை அன்னியப்படுத்தினா, அப்புறம் நான் இந்த மாதிரி ஜெயில் போயிட்டு வந்ததுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்”, என்று கறாராக சொல்ல……

“இல்லையில்லை, நான் சொல்லலை”, என்றாள் குரல் கமர அவசரமாக….

“என்ன டீச்சரம்மா, தைரியமா பேசறீங்கன்னு கமிஷனர் சாரே சொல்றாரு, இப்படி கலங்கறீங்க….. நடக்கற எதுக்கும் யாரும் பொறுப்பு கிடையாது… நடக்கணும்னு விதியிருந்தா கண்டிப்பா நடக்கும்”,

“என்னால தானோன்னு நீ நினைச்சின்னா, உன்னை அங்க வேலைக்கு சேர்த்து விட்டது நான் தானே! அப்போ என்னால தான் உனக்கு இந்த மாதிரி ஒரு சங்கடம் வந்ததுன்னு நான் சொல்லலாம் தானே!”,

“நான் கேட்டதுனால தானே நீங்க வாங்கி குடுத்தீங்க…..”,

“ப்ச்”, என்று சலித்தவன்…… “இப்படி மாத்தி மாத்தி ஆளுக்கொன்னா சொல்லிக்கிட்டே போகலாம்….. எனக்கு இந்த மாதிரி நடக்கணும்னு இருக்கு…. உன் ப்ரச்சனையில்லையின்னா வேற பிரச்சனைல மாட்டியிருப்பேன், அவ்வளவு தான்! எல்லாத்தையும் தூக்கி போடு! போ!”, என்றான்.

“தேங்க்ஸ்”, என்று வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள்….. சொன்னால் திட்டுவான் என்று பயந்து……

சந்தியா திரும்பி போகப் போகவும்… “யார்கிட்டயும் எதுவும் சொல்லலையே…..”,

“இல்லை! ஆனா எங்கம்மாக்கு தெரியும், உங்க தம்பிக்கு தெரியும்!”, என்றாள்…..

“சரி விடு, ஆனா இனிமே இதெல்லாம் யார்கிட்டயும் சொல்லாத….. இந்த விஷயத்தையே மறந்துடு”, என்றான்.

 

“ம்”, என்று தலையாட்டி சஞ்சலத்தோடு சோர்ந்து, சந்தியா செல்ல……

“எப்போது இவர்களின் கஷ்டங்கள் தீருவது இவள் திருமணம் செய்து கொள்வது, இவளின் அம்மாவிடம் சொல்லி விரைவில் மாப்பிள்ளை பார்க்க சொல்ல வேண்டும். நல்ல மாப்பிள்ளையாக அமைய வேண்டும். இந்த பெண்ணின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்”, என்று உளமார நினைத்தான் வெற்றி.  

Advertisement