Advertisement

அத்தியாயம் பதினொன்று:

கொண்ட கட்லாவின் யோசனைகள் சந்தியாவை தூக்கி விடலாமா என்று யோசிக்கும் போதே…

சந்தியா வெளியே போகப் போக…..

“நான் சொன்னது எல்லாம் செஞ்சிடுவேன்…. உன் கூட இருக்குறவன் உன்னை காப்பாத்துவான் மட்டும் நினைக்காத…… அவன் அப்புறம் உயிரோடவே இருக்க மாட்டான்”, என்று மீண்டும் டைலாக் பேச…..

“நீ ஒரு அபாயகரமான பிறவி தான்…. எல்லோரையும் இதுவரைக்கும் நீ சொன்ன மாதிரி செஞ்சிருக்கலாம்….. ஆனா எங்களை மாதிரி இதுவரைக்கும் நீ யாரையும் ஃபேஸ் பண்ணியிருக்க மாட்ட… ஒன்னும் பண்ண முடியாது உன்னால…”,

“அப்படியே ஒரு வேளை பை சேன்ஸ் நீ சொன்ன மாதிரி எல்லாம் நடந்தா உலகத்துக்கு நான் ஒரு காட்சி பொருள்.. அந்த மாதிரி ஒரு காட்சி பொருள் ஆகறதுக்கு உன்னை கொன்னு கூட காட்சி பொருள் ஆகிடுவேன்…….”,

“பொண்ணுங்க உடல் அளவுல வீக் தான் ஆனா மெண்டலி ஸ்ட்ராங்….. என்னவோ இருபது வருஷமா பொண்ணுங்களுக்கு பண்ணின கொடுமையை ஏதோ சாகசம் மாதிரி சொல்ற… திரும்பவும் சொல்றேன் எங்களை மாதிரி ஆட்களை இதுவரைக்கும் நீ பார்க்கிற சேன்ஸ் இல்லை டா…. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ…….”,என்று சொல்லி வெளியே நடந்துவிட்டாள்…..

என்ன செய்யலாம் என்று கொண்ட கட்லா யோசிக்க ஆரம்பித்தான்…. எங்கே போய் விடுவாள் இந்த பெண் என்ற அலட்சியம் இருந்தது… நிறைய இது மாதிரி பேச்சுக்களை கேட்டிருக்கிறான்… ஆனா எப்படியாவது பேசி ஒரு பயத்தை எதிராளியிடம் கொண்டு வந்து விடுவான்….. ஆனால் இந்த பெண் பயமே இல்லையே…

“விடுவதில்லை….”, என்று அவன் நினைக்க….. “அவனை இனி உயிரோடு விடுவதில்லை”, என்று ரமணனும் நினைத்து விட்டான்…. அவனிடம் இருக்கும் பெண்களின் வீடியோக்களை எப்படி கைப்பற்றுவது என்று தான் யோசனைகள்.

சந்தியா வெளியே வரவும், “என்ன? என்ன சொன்னான்?”, என்று வெற்றி அவளிடம் கேட்க…..

எப்படி இந்த கேவலத்தை சொல்வது என்று சந்தியாவின் முகம் கன்றி விட்டது.

அவளின் நிலை உணர்ந்தவனாக ரமணன்…. “நான் கேட்டேன்! உன் கைல இருந்தது மைக்ரோ போன்”, எனவும்….. பேச்சுக்களை எப்படி சொல்வது என்று இருந்த சந்தியாவிற்கு நிம்மதி என்றாலும்… இப்படி ஒருவன் தன்னிடம் பேசுவதை அடுத்தவர் கேட்கும் படி ஆகிவிட்டதே என்று மிகவும் கழிவிரக்கமாக இருந்தது. 

அவளின் முகம் அதை நன்கு பிரதிபலிக்க…. அவளை புரிந்த ரமணன்…. “நல்லா தைரியமா சிச்சுவேஷன் ஹேன்டில் பண்ணின…. நான் இனிமே பார்த்துக்கறேன்… கவலை இல்லாம இரு……”,

வெற்றிக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை…

“நீ சந்தியாவை கூப்பிட்டிகிட்டு கிளம்பு வெற்றி, நீ சொன்ன மாதிரி இது பணப் பிரச்சனையில்லை….. சந்தியாவை குறி வெச்சு தான்”, என்றான்.

வெற்றியின் முகம் கோபத்தை பூச, “நாம அவன்கிட்ட பேச வேண்டாமா, விசாரிக்க வேண்டாமா”, என்று கேட்க…..

“தேவையில்லை………. இனி இது சந்தியா பிரச்சனை இல்லை, என் பிரச்சனை….. நான் சொல்ற வரைக்கும் அவளை ஜாக்கிரதையா பார்த்துக்கோ…. வீட்ல வேற பொண்ணுங்க இருந்தாலும் துணையில்லாம வெளில போக வேண்டாம்….”,

“ரொம்ப நாள் இந்த மாதிரி இருக்காது….. சீக்கிரம் பிரச்சனையை தீர்த்துடுவேன்…”, என்று சொன்ன ரமணன் முகத்தில் இருந்த தீவிரம்… சொன்னதை செய்வான் என்று காட்ட….

வெற்றி சந்தியாவை அழைத்துக் கொண்டு அமைதியாக கிளம்பினான்.

ரமணன் பெண்களை சுற்றிய விஷயங்களை கவனத்தில் கொண்டு…. சந்தியாவையும்,  அவள் வீட்டு ஆட்கள் என்று அவர்கள் பாதுகாப்பை யோசிக்க…. வெற்றியை சும்மா விடமாட்டேன் என்று அந்த கொண்ட கட்லா சொன்ன ஸ்டேட் மெண்டை கவனத்தில் அதிகமாக கொள்ளவில்லை.

ரமணன் அந்த கொண்ட கட்லாவை பார்க்க வேண்டும் என்று நினைத்தான்.

அதற்கு முன் அறிவழகன் வேலையை முடித்து விட்டானா என்று தெரிய அவனை அழைக்கவும்…..

“சொல்லுங்கண்ணா”,

“அவன் வீட்ல ஏதாவது கிடைச்சதா….. வீட்ல ஆளுங்க யார் இருக்கா”,

“வீட்ல யாரும் இல்லை.. ஒரு செக்யூரிட்டி இருந்தான், கொஞ்சம் கவனிச்சு இருக்கேன் ஒரு நாலஞ்சு மணிநேரம் கண் தொறக்க மாட்டான்…”, 

“இப்போ தான் கபோர்ட் ல கை வெச்சிருக்கேன்….”,

“சீ டீ , பெண் டிரைவ் , சிப் , மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்க் , லேப் டாப் , ஐ பேட் , டேப்,  போன் , சிஸ்டம் , மதர் போர்டு…. இந்த மாதிரி ஸ்டோர் பண்ற மாதிரி எது இருந்தாலும் தூக்கிடு…… டீ வீ , சீ டீ பிளேயர் எல்லாத்தையும் தூக்கிடு….. சமைக்கற எலெக்ட்ரானிக் கூட்ஸ் தவிர வேற எதுவும் இருக்க கூடாது……   எதையும் மிஸ் பண்ணிடாதடா…. கவனம்…”,

“நீ அங்க வேலையை முடிச்சா தான் நான் இங்க பார்க்க முடியும்…..”,      

“சரிங்கண்ணா…..”,

ரமணன் அங்கேயே அமர்ந்து கொண்டான்…. அவனை முடிக்க போவது உறுதி….. ஆனால் சாவு இதற்கு தான் என்று உலகத்திற்கு தெரிந்தால் தானே மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும்…..

ஆனால் இதற்கு தான் சாவு என்று தெரிந்தால்.. பத்திரிக்கைகள் இதனோடு தொடர்புடைய பெண்களை மோப்பம் பிடித்தால் அவர்களின் வாழ்க்கையே கேள்வி குறியாக்கிவிடும்…. பத்திரிக்கைகளுக்கு பெண்கள் யார் என்று தெரியாவிட்டாலும்….. விஷயம் இதுதான் என்று தெரிந்தால்….. அந்த பெண்களின் வீட்டினருக்கு விஷயம் தெரிந்தால் அதுவும் பிரச்சனை…….

என்ன செய்வது…… இவனை என்கௌன்டரில் போட முதலில் இவனை ஏதாவது குற்றத்திற்கு கைது செய்ய வேண்டும்…… ரிமாண்ட் செய்ய வேண்டும்…. பிறகு விஷயத்தை முடிக்க வேண்டும்…..

எதைக் கொண்டு கைது செய்வது…..

ஆறப்போடவும் முடியாது….. அதற்குள் சந்தியாவிற்கு பிரச்சனையை செய்து விட்டால்……. தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக விட முடியாது.

பெண்ணாசை பெரியது… எதையும் செய்ய தூண்டும் என்று ரமணன் சரியாக கணித்து உடனடியாக ஆக்ஷன் எடுக்க நினைக்க……

ரமணன் நினைத்ததற்கு சற்றும் குறைவில்லாமல்…. அந்த கொண்ட கட்லா வெற்றி இருப்பதால் தான் அந்த பெண் தைரியமாக பேசுகிறாள் முதலில் வெற்றிய ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அவனை அடிக்க ஆள் ஏற்பாடு செய்ய முனைந்தான்.

ரமணன், சென்னை சிட்டி போலிஸ் கமிஷனர்… அவனை தெரிந்தவர்கள் அனேகம் பேர்….. அப்படி ஒருவர் அவன் அமர்ந்திருக்கும் போது, “சார், நீங்க கமிஷனர் தானே!”, என்று கேட்கவும்…

இங்கே இப்போது அவன் கமிஷனர் என்று உள்ளே இருப்பவன் காதிற்கு சென்றாள் அவன் சுதாரிக்க கூடும் என்றுணர்ந்து…

ஒரு தலையசைப்போடு ரமணன் வெளியே ஒரு டீ குடிக்கும் நோக்கத்தோடு செல்ல…..

அவன் சென்ற ஐந்து நிமிடத்துகெல்லாம் கூலிப்படையை சேர்ந்த ஒருவன் கொண்ட கட்லாவை பார்க்க வந்தான்…..

கொண்ட கட்லா சந்தியாவின் பின்னணியை நன்கு தெரிந்து கொண்டான்… அவனுக்கு தெரிந்த வரை வெற்றி இருக்கும் தைரியம் தான் சந்தியாவிற்கு என்று நினைத்தான்… அதனால் அவனை அடிக்க….. முடிந்தால் தீர்க்க என்று ஆள் ஏற்பாடு செய்ய, ஆட்களை தீர்க்கும் கூலிப்படையை ஏற்பாடு செய்ய ஆளை வரச்சொல்லி இருந்தான்.

அவனுக்கு தெரியாதது ரமணன் இந்த பிரச்சனையில் இறங்கி விட்டது….. அது மட்டுமல்ல யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தியா கொண்ட கட்லாவை எந்த சூழலிலும் எதிர் கொண்டு இருப்பாள்…… பயந்து பணிந்து இருக்க மாட்டாள்… அதுவும் அவனுக்கு தெரியவில்லை.

அதை விடவும் அவனுக்கு வெற்றியையும் தெரியவில்லை…. பதினைந்து வயதில் இருந்து தற்காப்பு கலைகளில் ஊறியவன்… அவனை ஆள் வைத்து அடித்து தொலைப்பதா…..????

சந்தியா சொன்னது முற்றிலும் உண்மை….. அவர்களை போல ஆட்களை இன்னும் கொண்ட கட்லா பார்க்கவில்லை….. அதனால் தான் இத்தனை பெண்களை சீரழித்து விட்டான்.

இங்கே வெற்றியோ, சந்தியாவோ, ரமணனோ யாரும் யாருக்கும் சலித்தவர்கள் அல்ல.. சந்தியாவோ வெற்றியோ பிரச்சனையை எதிர்கொண்டாலும் கொண்ட கட்லாவை ஒன்றும் செய்ய முடியாது……

ஆனால் ரமணன் அப்படி அல்லவே…..

கொண்ட கட்லா வெற்றியை ஒழிக்க பெரும் பணம் அந்த கூலிப் படைக்கு பேசி….. முடித்து பணமும் கை மாறிவிட….. அந்த கூலிப் படைத் தலைவன்…. விஷயத்தை இரண்டு நாட்களுக்குள் முடித்து விடுவதாக கூறி சென்று விட்டான்.

இன்னும் இரண்டு நாட்கள் பொறுக்க வேண்டுமா என்று கொண்ட கட்லா நினைத்து முடிந்தவரை அன்றே முடிக்க சொல்லி சிறிது கட்டாயப்படுத்தி அனுப்பினான்…..

அவன் விதியையே இரண்டு நாட்களில் ரமணன் முடித்து விடுவான் என்று தெரியவில்லை.

அறிவழகன் ரமணன் சொன்ன வேலையை கச்சிதமாக செய்து முடித்து…. ரமணனுக்கு தகவல் கொடுக்க……… “அந்த திங்க்ஸ் எல்லாமே என் வீட்டுக்கு கொண்டு போய்டு….. வரா கிட்ட சொல்லி என்னோட தனி ரூம் ஒன்னு இருக்கும், யாரும் போக மாட்டாங்க அங்க வைக்க சொல்லு…..”,

“வரா கிட்ட நான் சொல்றேன்….. கொண்டு போய் வெச்சிட்டு….. போன தடவை ரெயிட்ல கிடைச்ச கோக்கைன் கொஞ்சம் உன்கிட்ட கொடுத்து இருந்தனே, அதை கொண்ட கட்லா வீட்ல வெச்சிட்டு எங்க வெக்கறேன்னு தகவல் குடு…..”,

ரமணன் சொன்னதை அடுத்த ஒரு மணி நேரத்தில் அறிவழகன் செய்து முடிக்க….. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கொண்ட கட்லாவின் வீட்டிற்கு  லோக்கல் போலீஸ் ரெயிட் போய் அந்த பொருளை கை பற்றி….

போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் என்று பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்து….   பத்தாவது நிமிடத்தில் கொண்ட கட்லாவின் முன் ரமணன் நிற்க…..   அவனின் டீம் வெளியில் நின்றது…….

அவன் கொண்ட கட்லாவை கைது செய்து அழைத்து வருவதை படம் பிடிக்க….. ஒரு பத்திரிக்கையாளர் கூட்டமே வாசலில் நின்றது….

ரமணனை பார்த்த கொண்ட கட்லாவிற்கு அவனின் தோற்றமே போலீஸ் என்பதை தெரியப்படுத்த….. இன்னும் தன் மீது போதை பொருள் கடத்தல் தலைவன் என்று முத்திரை குத்தியதை அறியாத கொண்ட கட்லா…

“வெல்கம் சார்”, என்றான்….

“பொண்ணுங்களையும் வெல்கம் பண்ற, பசங்களையும் வெல்கம் பண்ற….. என்ன ஜென்மம்டா நீ”, என்றவன்…..

டேபிள் மேல் இருந்த கொண்ட கட்லாவின் போனை கைப்பற்றியவன்……. அவனுடைய டீமை உள்ளே அழைக்கவும்….

அத்தனை போலீசாரை உள்ளே பார்த்த அந்த கட்லா மனதிற்குள் மிரண்டாலும் வெளியில் காட்டாமல், “என்ன விஷயம் ஐ நீட் டு டால்க் டு மை லாயர்”, என்றான்……

ரமணன் ஒன்றும் பேசவில்லை…. ஒரு சிறு கண்ணசைவு….. அடுத்த நிமிடம் கொண்ட கட்லாவின் கைகள் பின்புறம் கட்டப்பட்டு இரு போலிஸ் காரர் பிடித்தனர்….

ஹாஸ்பிடல் ஆட்கள் யாருக்கும் விவரம் சொல்லப்படவில்லை….. கொண்ட கட்லாவை யாரோடும் பேச விடவில்லை…..

ரமணன் அந்த கொண்ட கட்லாவின் ரூமில் இருந்த சிஸ்டம், அவனுடைய லேப், சீ டீஸ், பெண் டிரைவ் என்று அத்தனையும் அள்ளி கொண்டான்…..

“என்னோட கார்ல வைங்க”, என்று சொல்லி அவனை அரஸ்ட் செய்து வெளியே வரவும்….

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு  மிகப் பெரிய போதை பொருள் கும்பல் தலைவன் போல ரமணனே பில்ட் அப் கொடுத்தவன்……              

அந்த கொண்ட கட்லாவை யாரோடும் பேச விடாமல்….. அவனை ரமணனே ஜீப்பில் ஏற்றி அவனும் கூட அமர்ந்த கொண்டான்……

கட்லா ஒன்றும் அவ்வளவாக பதறவில்லை, எதுவாகினும் பார்த்துக் கொள்ளலாம், சட்டத்தை அதன் ஓட்டைகளை எனக்கு தெரியும் என்று இறுமாப்போடு இருக்க…..

அவனுக்கு சட்டத்தை தான் தெரியும்…. ரமணனை தெரியவில்லை….

இங்கு பெண்ணை வன்கொடுமை செய்து அவளை இந்த உலகத்தில் இல்லாமல் செய்து தூக்குதண்டனை பெற்ற கைதியிடம் கூட ஏதோ நியாயவான் போல விளக்கங்கள் கேட்க படுவதை தெரியாதவனா ரமணன்….. கொண்ட கட்லாவை  சட்டத்தின் முன் கொண்டு சென்றாலும்…. சட்டத்தின் தீர்ப்பு வரும் வரை அவனை உயிரோடு விடுவதில்லை என்று முடிவு எடுத்திருந்தான்.       

பாதி வழியில் கட்லாவை யாரிடமோ கை மாற்றி விட்டவன்….. போலிசை தாக்கி ஒரு கும்பல் அவனை விடுவித்து சென்று விட்டது என்று, என்னவோ பெரிய கும்பலே இதில் இருப்பது போல பத்திரிக்கைகளுக்கு காட்டி….. விரைவில் அவனை பிடித்து விடுவேன் என்று பேட்டி கொடுத்தான்.

மொத்தத்தில் உலகிற்கு கொண்ட கட்லா தப்பித்து போய் விட்டான்…… நிஜத்தில் காணாமல் போய் விட்டான்…..

காலையில் சந்தியா பேசிவிட்டு செல்ல மாலைக்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது….

வெற்றி சந்தியாவிடம் கொண்ட கட்லா என்ன பேசினான் என்று கேட்ட போதும் கட்லாவின் பேச்சை முழுமையாக வெற்றியிடம் அப்படியே சந்தியாவால் பகிர முடியவில்லை…

எப்படி சொல்லுவாள், “என்னை படுக்கைக்கு வா என்று அழைக்கிறான், என் அம்மா தங்கை என்று யாரையும் விட்டு வைக்கவில்லை”, என்று…. எவ்வளவு கேவலம் அது…

முயன்று, “நிறைய பொண்ணுங்களை ஸ்பாயில் பண்ணியிருப்பான் போல, என்னையும் ட்ரை பண்றான்”, என்று மட்டும் சொன்னாள்…   

சந்தியாவிற்கு மேலே அவன் பேச்சுக்களை சொல்ல கூச்சமாக இருந்தது…… சந்தியா தடுமாறவும் சொல்ல முடியாத வார்த்தைகள் என்று வெற்றிக்கு புரிய……

வெற்றி துருவி கேட்கவில்லை…… “ஒன்னும் பயமில்லை….. யாரும் எதுவும் செய்ய முடியாது, பயம் வேண்டாம், நான் இருக்கேன்”, என்று தேற்றினான். 

ஆனால் அந்த கட்லாவை நினைத்து ரத்தம் கொதித்தது… இருந்தாலும் ரமணன் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்ததால்…… “மறந்துடு சந்தியா! கமிஷனர் சார் பார்த்துக்குவார்….”, என்று தைரியம் சொன்னான்……

சந்தியா மனதளவில் மிகுந்த சஞ்சலத்தோடு இருந்தாலும்…. வீட்டில் யாரிடம் தான் தான் நோக்கம் என்று சொல்லவில்லை…… பண விஷயமாகவே சொன்னாள்….. அம்மாவிடம் மட்டும் அப்போதும் மறைக்க முடியவில்லை….. சந்தியா சொல்லவும்… ராஜம் சந்தியாவிட கலங்கி போனார்.     

மாலை டீ வீ யில் கட்லா கைது படலம் ஒளிபரப்பாக…. அதை பார்த்த சந்தியாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை….. அம்மாவை தூக்கி சுற்றி விட்டாள்….. ராஜம் வந்த ஆபத்து விலகி விட்டது என்று உணர்ந்து கடவுள் முன் சென்று அமர்ந்து கொண்டார்.

இதை அறியாத வெற்றி வெல்டிங் வேலை செய்து கொண்டிருக்க…… விரைந்து அவன் முன் நின்றாள்.

கஸ்டமர்கள் இருப்பதையும் பொருட்படுத்தவில்லை….. வெற்றி தான் அவளை பார்த்ததும், “வா”, என்று வீட்டிற்கு அழைத்து வந்து, “என்ன”, என்று கேட்க…

அவன் வீட்டில் இருந்த டீ வீ யை ஆன் செய்தாள்….. மீனாட்சி , ஞானவேல் இருந்தாலும் யாரும் சந்தியாவின் கண்களில் படவில்லை…

“என்ன”, என்று மறுபடியும் கேட்டவனை… டீ வீ போட்டு நியூஸ் காட்டியவள்…… கண்களில் நீரோடு சந்தோஷமாக சிரித்தாள்…..

“நான் சொன்னேன் இல்லையா, நம்ம கமிஷனர் சூப்பர்”,  என்று வெற்றியையும் சந்தோஷம் தொற்றியது…

மறுபடியும் வீடே வந்து மாற்றி மாற்றி நன்றி சொல்லவும்….. “விடுங்க ஒன்னுமில்லை”, என்று சொன்னான். 

ராஜம் விட்டால் அவன் கால்களிலேயே விழுந்திருப்பார்… அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை…..  அவ்வளவு நெகிழ்ந்து இருந்தார்.

மீனாட்சியும் ஞானவேலும் கூட நிம்மதி பெருமூச்சு விட்டனர்….   

இரவு வரை மட்டுமே அந்த சந்தோஷம் நீடித்தது…..இரவு கடை பையன்களை அனுப்பி விட்டு பூட்டிக் கொண்டிருந்தவனை…… நான்கு பேர் சூழ…..

ரோடில் அதிகம் யாருமில்லை….. ஒன்றிரண்டு பேர் இருந்தனர்….. யாராவது இருந்தாலும் கவலை இல்லை என்பது போல தான் அந்த கூலிப் படையினர் இருந்தனர்…..   இருவர் கையில் கத்திக்கும் சேராமல் அரிவாளுக்கும் சேராமல் நடுவில் ஒரு கூர்மையான ஆயுதம்…..

“எவண்டா அவன்”, என்று வெற்றி  திரும்பவும்……… அவன் திரும்பிய வேகத்திற்கு கூலிப் படையை சேர்ந்தவர்கள் சில நொடிகள் தயங்கி அவனை தாக்க துவங்க….

தற்காப்பு கலைகளில் தேர்ந்த வெற்றி அனாயாசமாக சமாளிக்க துவங்கினான்….

சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் எட்டி பார்க்க…. ஞானவேல் பார்த்துவிட்டு அண்ணனுக்கு உதவ வர……..

“வராத”, என்று அவனை நோக்கி கத்திய வெற்றி… எதிரில் இருந்தவர்களை தாக்க முற்படாமல் தன்னை தற்காத்துக் கொள்ள மட்டுமே விழைந்தான்.

வெற்றியின் வீட்டில் குடியிருந்த அத்தனை குடித்தனக்காரர்கள், அக்கம் பக்கத்தினர் சந்தியா வீட்டினர் என்று எல்லோரும் வெளியே வந்து இதை வேடிக்கை பார்த்தனர்….

தன்னால் தான் வெற்றிக்கு இந்த ஆபத்து என்று சந்தியாவின் மனம் அவளுக்கே சொல்ல……. சந்தியாவின் முகம் பதட்டத்தையும் பயத்தையும் பூசியது…..   

கூலிப் படையினரும் இதில் சற்று கை தேர்ந்தவர்களாக இருந்தனர்…. சிறிது நேரம் வரை தற்காப்பு மட்டுமே செய்து வந்தவன்…. இவர்கள் விட மாட்டார்கள் என்று புரிந்தவனாக அவனும் தாக்க துவங்கினான்….

ஞானவேல் அண்ணனின் உதவிக்கு அப்போதும் வந்து ஒருவனை சமாளிக்க துவங்க….

வெற்றியின் மாணவர்கள் சிலர் அருகில் இருக்க அவர்களும் உதவிக்கு வர….. ஏற்கனவே இரண்டு பேரை அடித்து வீழ்த்தி இருந்தான் வெற்றி… மாணவர்கள் ஓடி வந்து ஒருவனை கவனிக்க….

ஆயுதம் வைத்திருந்த ஒருவன்.. ஞானவேலை அதை கொண்டு சொருகப் போக….. அதுவரை மிகவும் கண்ட்ரோலாக எதிராளியை தாக்கி கொண்டிருந்த வெற்றி…..

ஞானவேலை காப்பற்ற முற்றிலும் நிதானம் இழந்தான்…… அந்த தாக்க வந்தவனை இழுத்து ஆயுதம் வைத்திருந்த ஒரு கையை பற்றி…… அடுத்த கையால் அவனின் நெஞ்சை நோக்கி ஒரு குத்து விட…..

அந்த அடியின் பலம்…..

அந்த ஆயுதம் வைத்திருந்தவனின் இதயத் துடிப்பை உடனே நிறுத்தியது…….

அவன் வேரறுந்த மரம் போல கீழே சாய்ந்தான்….

அடிப்பட்டு எல்லோரும் எழுந்து ஓட முடியாமல் எல்லோரும் கீழே விழுந்திருக்க…. அவர்களை வீதியினர் சுற்றி வளைத்திருந்தனர்……. எல்லோரும் முனக…. வெற்றி நெஞ்சில் தாக்கியவன் அப்படியே கிடக்க…. மயக்கமாகி விட்டானோ என்று வெற்றி ஆராய்ந்தான்.

ஆராய்ந்த வெற்றியின் மனதிற்கு உரைத்தது அவன் இறந்து விட்டான்…

புரிந்த வெற்றி ஸ்தம்பித்து, உறைந்து நின்றான்.   

Advertisement