Advertisement

அத்தியாயம் பத்து:

வீட்டிற்கு வந்ததும், அம்மா என்ன விஷயம் என்று கேட்க….. மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்.

வீடே ஸ்தம்பித்து விட்டது…

யாருக்கும் என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை… பயந்து விட்டார்கள்…

பணக் கஷ்டம் என்றால் பார்த்து பார்த்து பழக்க பட்டவர்கள்…. ஆனால் திருட்டு பட்டம் அதுவும் பெண்பிள்ளை…

வீடே சோகத்தில் மூழ்கியது..

தாத்தா நேரே போய் வெற்றியின் கைகளை பிடித்துக் கொண்டு அழுதே விட்டார்…..

“ஒன்னுமில்லை பெரியவரே சரியாகிடும்…..”, என்று ஆறுதல் சொன்னவன்…..  “நம்ம கமிஷனர் எல்லாத்தையும் பார்த்துக்குவார், சந்தியாக்கு எந்த பிரச்சனையும் வராது….”,

“பயமா இருக்கு தம்பி”, என்று அவர் தழுதழுக்கவும்……

“பண விஷயம் தான் பெரியவரே, பயமே தேவையில்லை, அப்படியே ஏதாவதுன்னா பணம் குடுத்து செட்டில் பண்ணிடலாம்…    சந்தியாக்கு எந்த பிரச்சனையும் வராது, நான் பொறுப்பு போங்க….”, என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டு….

இரவு சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தால், சந்தியாவின் அம்மா ராஜம் வெற்றியை பார்த்து அவரும் நன்றி சொல்லி கண்கலங்கினார்……. அவரோடு நாராயணன், கீர்த்தனா, சந்தியாவின் சித்தப்பா, சித்தி என்று மொத்த குடும்பமும் இருந்தது…..   என்ன விவரம் என்று மீனாட்சிக்கும் தெரியவில்லை ஞானவேலுக்கும் தெரியவில்லை….

வெற்றியை, “என்ன”, என்று மீனாட்சி கேட்க வாய் திறக்கும் போதே…. “பேசாதே”, என்பது போல அம்மாவிற்கு வெற்றி சைகை செய்யவும் மீனாட்சி அமைதியாகி விட்டார்.

“திரும்ப ஏதாவது பிரச்சனை வருங்களா தம்பி”, என்று ராஜம் கவலைப்பட…

“இல்லைங்க, கமிஷனர் சார் கிட்ட சொல்லியிருக்கேன்…. எனக்கு தெரிஞ்சவர் தான், ஆனா அதுக்காக மட்டும் பார்க்க மாட்டார்….. யார் போனாலும் பார்த்து பிரச்சனையை தீர்த்து வைப்பார், பயமில்லை போங்க…..”, என்று சொல்லவும்….

சற்று பயம் தெளிந்து கிளம்பினார்…..

அப்போதும் அவர்கள் செல்லும் வரை காத்திருந்து நாராயணனின் அப்பா….. “நாங்க எங்க ஊருக்கே திரும்பி போயிடட்டுங்களா”, என்றார் பயத்தோடு…

“என்ன சார் நீங்க, ஊர் என்ன பண்ணும். எங்க இருந்தாலும் வர்ற பிரச்சனை வரும்… இங்கயாவது நாங்க இருக்கோம், அங்க யாரு இருக்கா, போங்க”, என்று அவரையும் அனுப்பினான்.

அவர்கள் சென்றதும்….. மீனாட்சியிடமும் ஞானவேலிடமும் நடந்ததை கூறினான்…..

“என்ன வெற்றி இது”, என்று ஞானவேலும் மீனாட்சியும் ஒருங்கே கேட்டனர்.

“பொண்ணுங்கன்னு இருந்தா எத்தனை ப்ரச்சனைம்மா….”,

“நான் பணம் தான் பிரச்சனைன்னு நினைச்சிட்டு இருந்தேன்…. ஆனா எம் டீ வந்தவுடனே எனக்கு தோணிச்சு இங்க பணம் ப்ரச்சனையில்லைன்னு….”,

“அவன் பார்வையே சரியில்லை….. முதல்ல எங்க ஸ்டாஃப் ன்னு நல்லவன் மாதிரி பேசினான்…. சரி இனிமே வேலைக்கு வரலைன்னு சொன்னா… அப்படியெல்லாம் விட முடியாதுன்னு மாத்தி பேசறான்…. பேசும்போது சந்தியா வேலையை விட்டு போகக் கூடாதுன்ற மாதிரி அவன் பேச்சுல ஒரு அவசரம் ஒரு பதட்டம்,  பேச்சே சரியில்லை…..”,

“ஆளும் எனக்கென்னவோ பார்த்தா டாக்டர் மாதிரியே தோணலை…”,

“அவன் பாட்டுக்கு பேசிட்டு இருந்தான், நான் சந்தியாவை கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டேன்…”,

“வெற்றி உனக்கொன்னும் பிரச்சனை வராதே”, என்று ஞானவேல் பயப்பட.

“அதான் நான் எதுவும் பண்ணலையேடா….. கமிஷனர் சார் கிட்ட சொல்லிட்டேன், அவங்க பார்த்துக்குவாங்க….. அப்போவே அவன் யாரு என்னன்னு பார்க்க ஆள் அனுப்பிட்டாங்க…. என்னை எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாங்க…. அவர் பார்த்துக்குவார்டா”, என்று வெற்றி சொன்ன போதும்…..

ஞானவேலின் மனதில் இனம் புரியாத பயம். என்ன வென்று சொல்ல தெரியவில்லை…..

“உனக்கென்ன விட்டுடு”, என்று சொல்லவும் முடியாது…. சந்தியாவிற்கும் உதவி செய்ய வேறு ஆள் இல்லை…. நல்ல பெண்…

“நல்லதே நினை”, என்று மனதை அவனுக்கு அவனே சமாதானப்படுத்திக் கொண்டான் ஞானவேல்….

எதிரி அவன் எப்படிப்பட்டவன்?

அடுத்த நாள் ஹாஸ்பிடலில் இருந்து சந்தியாவிற்கு போன், கணக்கு வழக்குகளில் ஏதோ சந்தேகம் உடனே ஹாஸ்பிடல் வருமாறு….

சந்தியா வெற்றியிடம் சொல்லவும்…. வெற்றி ரமணனிற்கு போனில் அழைப்பதா? வேண்டாமா? போனில் கேட்டால் மரியாதையா இல்லை நேரில் போவதா என்று குழம்பினான்.

பிறகு வராவிற்கு அழைத்தான்….. “அம்மா, நான் வெற்றி பேசறேன்… களறி மாஸ்டர்”, என்று சொல்லவும்…

“சொல்லுங்க மாஸ்டர், வெற்றின்னு சொன்னாலே தெரியும்…. எதுக்கு இவ்வளவு பில்ட் அப். எனக்கு அடையாளம் தெரியாதுன்னா”, என்று வெற்றியிடம் சகஜமாக பேசவும்..

விஷயத்தை சொல்லி, என்ன செய்வது என்று சாரிடம் கேட்க வேண்டும் என்று சொல்லவும்…..

“வேலைல இருக்கும் போது பொதுவா நான் போன் பண்ணினா எடுக்க மாட்டாங்க, ஆனா இப்போ எடுப்பாங்க, ஏன்னா எனக்கு வலி எடுத்து கூப்பிடறனோன்னு உடனே எடுத்துடுவாங்க… இருங்க நான் கேட்டு சொல்றேன்”, என்று சிறு பிள்ளையாக விளக்கம் சொன்னவள்……..

இரண்டே நிமிடத்தில் திரும்ப அழைத்து… “மாஸ்டர் உங்களை பேச சொன்னாங்க”, எனவும்….

வெற்றி அழைத்து விஷயத்தை சொல்லவும்……

“கூட்டிட்டு போ….. எதுன்னாலும் எந்த பிரச்சனையும் பண்ணாத, அந்த பொண்ணை தனியா விடாத…… எனக்கு கூப்பிட்டு சொல்லு”, என்றான் ரமணன்.

அங்கே சென்றால்….. அங்கிருந்த வேறு ஒரு இன்சார்ஜ்… “ஏம்மா பணத்துல கை வெச்சிட்டியா….. இந்த பணம் மட்டுமில்லாம இன்னும் வேற பணம் வேற இருக்கும் போல இருக்கே”, என்று சற்று இளக்காரமாக கேட்க…..

சந்தியாவிற்கு மறுபடியும் கண்களில் நீர் கட்டியது…

“தேவையில்லாம பேசாத! நாளைக்கு உனக்கும் இந்த நிலைமை தான்….. ஏண்டா மனுஷப் பிறவி தானேடா நீ… கூட வேலை பார்க்குறவங்களுக்கு சப்போர்ட் பண்ணாம முதலாளிகளுக்கு சப்போர்ட் பண்ற…. உன்னை மாதிரி நாலு பேர் துணை போறதுனால தான் நல்லவங்களுக்கு இவ்வளவு பிரச்சனை”, என்று வெற்றி சொல்லவும்…..

“நல்லா சொன்னீங்க சார்”, என்று அங்கிருந்த ஓரிருவர் சந்தியாவிற்கு சப்போர்ட் பண்ணவும்….

அப்போது அட்டெண்டர் வந்து, “சந்தியா மேடம் கிட்ட விசாரிக்கணுமாம், எம் டீ வர சொன்னாங்க….”,

“வா! சந்தியா!”, என்று வெற்றி அவளோடு செல்ல முற்பட…..

“வெளியாளுங்க எல்லாம் இதுல வேண்டாமாம் ஹாஸ்பிடல் விஷயம் ஸ்டாஃப் மட்டும் தான் வரணுமாம். எம் டீ சொன்னாங்க”, என்று அட்டெண்டர் சொல்ல…

“தனியா எல்லாம் அனுப்ப முடியாது”, என்று சொல்லி வெற்றி திரும்ப…

“அனுப்பு வெற்றி”, என்று சாதாரண உடையில் ரமணன் வந்து நின்றான். அறிவழகன் அவனோடு தொலைபேசியில் சில விவரங்களை சில நிமிடத்திற்கு முன் பகிர்ந்திருந்தான்…… அதன் பிறகே ரமணன் விரைவாக அவனே செயலில் இறங்கினான். 

அறிவழகன் சொன்னது சந்தியா விஷயத்திலுமா என்று தெரிய வேண்டி இருந்தது.

சந்தியாவிடமும், “நீ போம்மா”, என்றான்…

சந்தியா எம் டீ யின் ரூமினுள் சென்றாள்…..   செல்லுமுன் ரமணன் அவளிடம் அருகில் வந்து ஏதோ பேசுவது போல எதிரில் நின்றவன்…… சிசி டீ வீ கேமராவே எதிரில் இருந்தாலும் தெரியாதவாறு…..

“இதை கைல மாட்டிக்கோ”, என்று வளையல் போல இருந்த ஒரு மைக்ரோ போனை  கையில் திணிக்க…. என்னவென்று தெரியாத போதும் அதை கையில் மாட்டிக் கொண்டாள்.

என்னவோ பயமாக இருக்க….. சந்தியாவின் பயம் புரிந்தவன்….. “போம்மா, ஒன்னும் பயமில்லை….”, என்று தைரியம் சொல்லி ரமணன் அனுப்பினான்.

இயற்கையிலேயே தைரியமான பெண் என்பதால் மனதை தைரியப்படுத்தி சென்றாள்…..

அவள் உள்ளே செல்லவும்…… அங்கே சேரில் அமர்ந்தபடி அவளுக்காக காத்திருந்தான் அந்த எம் டீ கொண்ட கட்லா…… அது அவனின் பெயர்… ஆந்திரா வாலா…… ஆனால் தமிழ் மொழி தண்ணீர் பட்ட பாடு….. பெயரை கொண்டு மட்டுமே அவனை வேறு மாநிலத்தவன் என்று இனம் காண முடியும்.

“வெல்கம், வெல்கம் சந்தியா!”, என்றவன்…. “கூட ஆளுங்களை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்க போல…. ஆனா பாரு எவனும் என்னை ஒன்னும் பண்ண முடியாது”, என்றான் மிதப்பாக.

அவனின் முன் அனுபவங்கள் அப்படி…. இப்படி உதவிக்கு வருபவர்களை ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறான். 

அவன் பேசுவது துல்லியமாக ரமணன் காதில் இருந்த ஸ்பீக்கரில் ஒளிபரப்பாக…. ரமணனுக்கு நன்கு கேட்டது.

முக மாற்றமின்றி ரமணன் அந்த பேச்சை கிரகிக்க ஆரம்பித்தான். வெற்றிக்கும் தெரியவில்லை, சந்தியாவிடம் ரமணன் மைக்ரோ போன் கொடுத்தது. ஆனால் ரமணனின் சீரியஸ் முக பாவனை பார்த்த வெற்றி எதுவும் அவனிடம் பேச  விழையவில்லை.

ரமணன் அங்கிருந்த வெயிட்டிங் சேரில் அமர…… மரியாதை நிமித்தம் வெற்றி நிற்க…. “உட்காரு”, என்பது மாதிரி ஒரு சைகை ரமணன் செய்ய….. அந்த சைகையும் கட்டளை போலவே வர வெற்றி அமர்ந்தான்.

உள்ளே சந்தியாவிடம்… “உனக்கு சப்போர்ட்க்கு எதுக்கு ஆளுங்க சந்தியா…. பாஸ்ன்னு வந்து என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் உன்னை ரிலீவ் பண்ணியிருப்பேனே”,

“இவ்வளவு அழகான பொண்ணுக்காக அது கூட செய்ய மாட்டேனா”, என்று சிரித்தவன்……. “உனக்காக நான் எதுவும் செய்வேன்”, என்றான்.

சந்தியாவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி இப்போது….. பணம் விஷயம் என்று அவள் நினைத்திருக்க விஷயம் வேறு என்று இப்போது தெளிவாகியது…… மனதிற்குள் கொண்ட கட்லாவின் பேச்சில் ஒரு நடுக்கம் பிறந்தாலும் வெளியில் சற்றும் காட்டவில்லை.

அசையாமல் நின்றாள்…  “சாரி பேபி, உன்னை நிக்க வெச்சி பேசறேன் பாரு…. எனக்கு உன்னை என் மடில உட்கார வைக்கணும்னு தான் ஆசை….. இப்போதைக்கு சேர்ல உட்காரு… ஆனா கண்டிப்பா என் ஆசை நிறைவேறும்”, என்று அவன் டைலாக் பேச…..

“பயப்பட்டு நிற்கும் சமயம் அல்ல இது…. வெளியில் இரண்டு பேர் நிற்கிறார்கள் இவனுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும்”, என்று எண்ணம் உதிக்க… கொண்ட கட்லாவை தைரியமாக எதிர் கொள்ள முடிவெடுத்து அவனை பார்த்தவாறு அசையாமல் நின்றாள்.

“அய்யோ என்ன லுக் பேபி இது…. உன்னால என்னை ஒன்னும் செய்ய முடியாதுன்னு கண்ணால பேசி நிற்கர… ஆனா பாரு உனக்கு இந்த மாதிரி சூழ்நிலை புதுசு….. எனக்கு ரொம்ப பழசு….. என்னோட இருபதாவது வயசுல இருந்து பொண்ணுங்களை பார்க்கிறேன், எனக்கு இப்போ நாற்பது வயசு…”,

கொண்ட கட்லாவின் பேச்சை கேட்டு சந்தியா பயமில்லாமல் நிற்கவும்….. அவளை பயப்படுத்தும் பொருட்டு உளற ஆரம்பித்தான்.  நடந்த எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான்.

“இந்த இருபது வருஷத்துல கணக்கே இல்லாம பொண்ணுங்களை பார்த்துட்டேன்”, என்று ஆரம்பித்து….. மிகவும் கொச்சையான வார்த்தைகளில் பெண்களை பற்றி பேச ஆரம்பித்தவன்…. அவனின் கெட்ட நேரமாக சந்தியாவின் நல்ல நேரமாக…..

அவன் பெண்களை எப்படி வீழ்த்துவான்….. அவர்களை எப்படி ப்ளாக் மெயில் செய்வான்….. படம் எடுத்து எப்படி பயம் கொள்ள செய்வான்…. ஒரு முறை வந்துவிட்டால் பின்பு அவனிடம் இருந்து அவனுக்காக சலிக்கும் வரை அவர்கள் தப்ப முடியாது….. அவனுக்கு மட்டுமல்ல அவன் சொல்லும் ஆட்களிடமும் செல்ல வேண்டும்…… “இது என்னோட ஹாபி….”, என்று மிதப்பாக பெண்களுக்கு இழைத்த கொடுமைகளை சொல்லி கொண்டே போக…….

ரமணனுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது……

சந்தியா இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டதே இல்லை….. உடம்பே கூசிப் போயிற்று…

சந்தியா இப்படியும் ஒரு மனிதனா? இவனை கொன்றால் என்ன என்பது போல பார்த்து நின்றாள். சந்தியாவின் பார்வை அதை அப்பட்டமாக பிரதிபலிக்க… 

“என்ன பேபி என்னை கொல்லனும் போல தோணுதா…. உன்னை மாதிரி ஒருத்தியை அனுபவிக்க செத்து கூட போகலாம்”, என்று கொண்ட கட்லா பேச பேச……

“உனக்கு அதுதாண்டா தண்டனை”, என்று ரமணன் நொடியில் முடிவெடுத்து விட்டான்….. கொண்ட கட்லாவின் பேச்சிலிருந்து நிறைய குடும்ப பெண்கள் அவனிடம் வீடியோ மூலமாக சிக்கியிருப்பது தெரிய….

“அவசரப்படக் கூடாது முதலில் அதை எல்லாம் கைப்பற்றி பிறகு இவனை பற்றி முடிவெடுக்க வேண்டும், அது எல்லாம் வேறு யார் கைகளில் சிக்கினாலும் அந்த பெண்கள் பாவம்”, என்று புரிந்த ரமணன் நடப்பதை மீண்டும் கேட்க ஆரம்பித்தான்.

இத்தனை வார்த்தைகளிலும் சந்தியா ஒரு வார்த்தை கூட பதில் பேசாதது ஆச்சர்யமாக இருந்தது….. மனதிடமுள்ள பெண் என்று புரிந்தது….. “என் அம்மா சுந்தரவள்ளியை போல”, என்று நினைக்க தோன்றியது.

அசையாமல் சந்தியா பார்த்து நிற்க…. “என்ன பேபி கூட ஆளுங்க நிக்கறதால தப்பிச்சிடலாம்னு பாக்குறியா…. எவன் வந்தாலும் அது மட்டும் முடியாது……”,

“மூணு லட்சம் மோசடியா உன் மேல இருந்த கம்ப்ளைன்ட் இப்போ இன்னும் கூட கூட சேர்ந்துடுச்சு…… நீ என்கிட்டே வர லேட் பண்ற வரைக்கும்….. அது இன்னும் கூடிட்டே போகும்”, என்றான்.

“உன்னால அது முடியவே முடியாது….”, என்றாள் வாய் திறந்து முதல் முறையாக……

“எப்படி முடியாதுன்னு நான் பார்க்கிறேன்… நான் உன்னை மட்டும் தான் நினைச்சிருக்கேன்….. நீ போனசா உன் தங்கச்சியும் கூட சேர்த்துக்க சொல்லுவ போலவே”, என்றான்.

சந்தியாவின் முகம் அதிர்ச்சியை காட்டவும்……

“என்ன அந்த மெக்கானிக் ஆளு காப்பாத்துவான்னு நினைக்கிறியா. நான் பேச பேச நேத்து அவன் இழுத்துட்டு போனான், உன்னை என்னவோ என்கிட்டே இருந்து காப்பாத்துற மாதிரி….. அவனையும் நான் விட போறது இல்லை…”,

“நேத்து வரைக்கும் உன் மேல ஒரு ஆசை ஒரு ஆர்வம் மட்டும் தான். ஆனா இப்போ உன் மேல ஒரு வெறியே இருக்கு…. உன் மொத்த குடும்ப விவரமும் இப்போ என்கிட்டே…. நேத்து இருந்து எல்லாம் கலக்ட் பண்ணிட்டேன்….. உங்கப்பா தற்கொலை பண்ணிக்கிடாறாமே……”,

“அவ்வளவு ஏன் உங்கம்மா கூட அழகாமே….”, என்றான்.

சந்தியாவின் முகம் கோபத்தை பூச ஆரம்பித்தது……

“உன் அம்மாவோட முகம் ஒரு போட்டோ கிடைச்சா கூட போதும்…. இன்டர்நெட் ஃபுல்லா சுத்த விட்டுட மாட்டேன்….. யோசி என்ன பண்ண போற…… யாராலையும் உன்னை என்கிட்டே இருந்து காப்பாத்த முடியாது……”,

“ஒரே வழி நீங்க குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கறது தான்…. ஆனா அதுக்கப்புறம் கூட உன்னோட போட்டோ ஹாஸ்பிடல் ஃப்ரொபைல்ல இருக்கும் இல்லை… அதை வெச்சு என்ன வேணா பண்ணுவேன்”,

“நான் ஏன் தற்கொலை பண்ணுவேன்…… அதுக்கு உன்னை கொலை கூட பண்ணுவேன்….. என்ன எங்கம்மா என் தங்கச்சி பத்தி எல்லாம் பேசினா பயந்துடுவனா….. போலிஸ்க்கு போவேன்…..”,

“போலிஸ் என்னை கண்டுபிடிச்சு, எனக்கு தண்டனை குடுக்கறது அப்புறம்….. அதுக்குள்ள உங்க பேர் நாறிடும்…. கால் கேர்ள்ஸ்னு ஒப்பனா உன் போட்டோவை போட்டு அட்ரெஸ் குடுப்பேன்……. என்கிட்டே வர்றது தவிர உனக்கு வேற வழியே இல்லை….”,

“போலிஸ் என்னை கண்டுபிடுச்சு என் குற்றம் நிரூபிச்சு.. எனக்கு தண்டனை கிடைக்கறதுகுள்ள என் வாழ்க்கை யோட மீதி காலமே கழிஞ்சிடும்….  என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது….”,

“நீயா தான் என்கிட்டே வந்தன்னு சொல்லுவேன்…. நம்ம சட்டத்துல விபச்சார வழக்குல கைதானா பொண்ணுங்களுக்கு தான் தண்டனை, பசங்களுக்கு இல்லை. மிஞ்சி போனா ஃபைன் அவ்வளவுதான்! ஏற்கனவே என்மேல கம்ப்ளைன்ட் கொடுத்த ஒரு பொண்ணை இப்படி தான் பண்ணினேன்!”, என்றான் குரூரமாக… 

“என்கிட்டே எந்த வீர தீர வசனமும் செல்லாது….. அதுவும் உன்னை எப்படி விடறது…. என்னோட இந்த பேச்சுக்கு எல்லாரும் பயந்து பணிஞ்சு போவாங்க…. நீ எதிர்த்து நிக்கற…. அதுவும் உன் குடும்ப ஆளுங்களை சொன்னாலும் நிக்கிற…. தைரியம்…. இந்த தைரியம் எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு……. இந்த மாதிரி பொண்ணை நான் அனுபவிச்சு பார்க்கணும்”, என்றான் கண்களில் ஆசையும் வெறியும் மின்ன….

ரமணன் எல்லாவற்றையும் முகம் இறுக கேட்டுக் கொண்டிருக்க….

வெற்றிக்கு முழுவதும் பதட்டம்…… ரமணனின் முகத்தை பார்த்தால் வெற்றிக்கே பயமாய் இருந்தது….. ரமணன் முகம் கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்தது…

பெண்களுக்கு எதிராக எப்படி இப்படி வன்கொடுமைகள்…. ரமணனின் ஒவ்வொரு அணுவும் அவனுக்கு சாவை கொடுத்து விடாதே…. அந்த பெண்கள் அனுபவித்த கொடுமைக்கெல்லாம் அவன் சாகக் கூடாது…. சித்திரவதை அனுபவிக்க வேண்டும் மரணத்தை எனக்கு கொடு என்று யாசிக்க வைக்க வேண்டும் என்ற வெறி முழுவதும் வியாபித்தது.

எதுவும் அறியாத வெற்றி, “எங்கே உள்ளே சென்றவள் இன்னும் காணோம் என்னவாயிற்றோ ஏதாயிற்றோ”, என்று மனம் முழுக்க பதைத்து காத்திருந்தான்.

“சாதகமான முடிவை எடு…. எதுவும் நடக்கலைன்னா இருக்கவே இருக்கு ஆசிட்….. உன் முகத்தை பொசிக்கிடுவேன்”, என்று அந்த வகையில் சந்தியாவை கொண்ட கட்லா பயமுறுத்தவும்…..

“ஏன் ஆசிட் பொண்ணுங்க முகத்தை தான் பொசுக்குமா….. ஆண்களை எதுவும் பண்ணாதா?”, என்று சந்தியா கொண்ட கட்லாவை நோக்கி அசராமல் கேட்கவும்.. 

கேட்ட விதம்…. ரமணனை மனதிற்குள் சபாஷ் போட வைக்க….. 

எந்த வகையில் இந்த பெண்ணை பயமுறுத்துவது….. இன்டர்நெட் சொல்லியாகிவிட்டது, தங்கை அம்மா சொல்லியாகிவிட்டது, விபசாரம் சொல்லியாகிவிட்டது, ஆசிட் சொல்லியாகிவிட்டது……. 

பெண்களை இதற்கு மேல் எப்படி பயமுறுத்துவது என்று தெரியாமல்……   

இவள் எதற்கும் மடியமாட்டாள் போலவே….. இப்படியே இன்னொரு கதவு வழியாக இவளை தூக்கி விடலாமா, மயக்க மருந்து ஸ்ப்ரேவை எடுக்கலாமா என்று யோசித்தான்….      

 

 

Advertisement