Advertisement

நிலவு – 8

                மாலை வெண்மதி வீட்டிற்குள் நுழையும் பொழுது கலைவாணியும் வந்திருந்தார். அவரை ஒரு பார்வையுடன் கடந்து சென்றவள் முகம் கழுவி உடை மாற்றி வர கலைவாணிக்கு திக்கென்று இருந்தது.

“என்னங்க இவ இப்படி பார்த்துட்டு போறா. எனக்கு என்னவோ படபடன்னு இருக்கு. எதாச்சும் சொல்லிட்டானா அப்புறம் நான்…” என சொல்லிக்கொண்டிருக்க அவரின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

“நீயா எதாச்சும் நினைக்காத. போ அவளுக்கு காபி போடு. எனக்கு குடிக்க கொஞ்சம் சுடுதண்ணி வச்சுட்டு வா. என்னவோ போல இருக்கு…” என நெஞ்சை நீவ,

“என்னங்க என்ன செய்யுது?…” என பதறினார் கலைவாணி.

“இன்னைக்கு புளிக்குழம்புல கொஞ்சம் புளிப்பும் காரமும் அதிகம். அதான் என்னவோ நெஞ்சு எரிச்சலா இருக்கு…”

“நான் தான் அப்பவே சொன்னேன்ல வேற எதாச்சும் செய்யறேன்னு. நீங்க கேட்டீங்களா? சொனப்பா வேணும்னு சொல்லி நானும் செஞ்சு இன்னைக்கு அதிகமா சாப்பிட்டிருப்பீங்க. அதான் நெஞ்சுல நிக்குது போல…”

கலைவாணி கடிந்துகொண்டே அடுப்படிக்கு செல்ல இதை கேட்டிருந்த வெண்மதி அவரருகே வந்தாள்.

“ஏன்ப்பா ஹாஸ்பிட்டல் போவோமா? முடியலைன்னா ஏன் அதெல்லாம் சாப்பிடறீங்க? ஒரு கட்டத்துக்கு மேல வாய் ருசியை குறைச்சா தான் உடம்பு நல்லா இருக்கும். புரிஞ்சுக்கோங்க. அம்மா பதட்டமாகிட்டாங்க. இன்னும் நாலு நாளைக்கு தூங்கமாட்டாங்க…”

“அதெல்லாம் ஒண்ணுமில்லடா. சரியாகிடும். அம்மா சொன்ன மாதிரி இன்னைக்கு கொஞ்சம் அதிகமாவே சாப்பிட்டேன். அதான் செரிக்கல போல…” என்றவரின் இதயத்தை வெண்மதி தடவிவிட,

“போதும்ப்பா இனி எங்களுக்காக நீங்க சில கட்டுப்பாடுகளை வச்சுக்கோங்க. இன்னொருமுறை உங்களை ஹாஸ்பிட்டல்ல பார்க்க எங்களால முடியாதுப்பா…”  

“மதி. அப்பாவுக்கு ஏதும் ஆகிடும்னு பயமா?…”  என்றதற்கு அவள் தலையசைக்க,

“அப்பாவுக்கு ஏதும் ஆகமுன்ன உனக்கொரு நல்லது பண்ணி பார்த்திடனும்னு எங்களுக்கும் ஆசை இருக்கும்லடா. எங்க காலத்துக்கு பின்னால உனக்கொரு நல்ல வாழ்க்கை, பாதுகாப்புன்னு இருந்தா நாங்க நிம்மதியா கண்ணை மூடுவோம்…”

நடேசன் சொல்ல சொல்ல அவள் அமைதியாக இருக்க கலைவாணி கொஞ்சம் தைரியம் பெற்றவராக,

“நல்லா சொல்லுங்க இவளுக்கு. இவ எதிர்காலத்தை நினைச்சு கவலைப்படாத நாளே இல்ல. இப்ப தானா கடவுள் அனுப்பினதாட்டம் ஒரு நல்ல சம்பந்தம். இது மட்டும் நல்லவிதமா முடிஞ்சுட்டா என்னோட பிரத்தனை நிறைவேறிடும். திருப்பதிக்கு நடந்தே வரதா வேண்டியிருக்கேன்…”

கலைவாணி உணர்ச்சிவயப்பட்டவராக பேச அடங்கிய்ருந்த வெண்மதியின் சினம் உச்சம் பெற்றது.

“அது எப்படிம்மா இப்ப மட்டும் இந்த கல்யாணம் உங்களுக்கு சரின்னு படுது?நீங்க வேண்டாம்னு சொல்லி நிறுத்த சொன்ன காரணம் இன்னமும் அப்படியே தான் இருக்கு. இப்ப மட்டும் உங்க மனசு அதை ஏத்துக்குதா?…” சுருக்கென்று கேட்க கலைவாணி பயந்தே போனார்.

“மதி…” என உடைந்த குரலில் கண்ணீருடன் அவாளி பார்க்க,

“இப்ப மட்டும் முரளி மேல உங்களுக்கு எப்படி நம்பிக்கை வந்துச்சு? என்னை அவர்க்கிட்ட ஒப்படைக்கனும்னு உங்க மனசு இப்ப சொல்லுதா? அப்போ திரும்ப அவர் கூட இருந்தா என் வாழ்க்கை நல்ல ஐருக்காதுன்னு உங்களுக்கு தோணும். திரும்ப என்னை அழைச்சுப்பீங்களா?…”

“மதி என்னம்மா பேசற? அம்மா அப்படி நினைக்கிறவளா?…” நடேசன் தாளமுடியாது கேட்க,

“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கே உங்களுக்கு தாங்க முடியலையே. அன்னைக்கு அவரை அத்தனை பேசினேன். அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? யோசிங்கப்பா…”

“தப்புதான்ம்மா. இப்பவும் நாம தேடி போகலை. அவங்களே விரும்பி வராங்க…” நடேசனே பேச கலைவாணி பேச்சற்று போய் வெகுநேரம் ஆனது.

“அன்னைக்கும் விரும்பி தான் வந்தாங்கப்பா. அன்னைக்கு அவங்க சம்பந்தத்தை ஏத்துக்கிட்டு கல்யாணத்தை நிறுத்தினப்போவும் நம்ம சுயநலம் தான் தெரிஞ்சது. இப்ப திரும்ப அவங்க வரப்ப ஏத்துக்கும் போதும் நம்ம சுயநலம் தான் தெரியுது…”

“விவரம் புரியாம பேசாதடா மதி…”

“இந்த உலகத்துல எல்லாருக்குள்ளையும் ஒரு சுயநலம் இருக்கும் தான். சுயநலமா இருக்கறது தப்பில்லை. ஆனா அதுக்காக மத்தவங்க எதிர்பார்ப்பை, நம்பிக்கையை பயன்படுத்திக்கறதும் உடைக்கிறதும் ரொம்ப தப்புப்பா…”

“அம்மாடி உன் வார்த்தை ரொம்பவே காயப்படுத்துது…” நடேசனின் குரல் கலங்கி போய் வர,

“எனக்கு வேற என்ன பண்ணன்னு தெரியலைப்பா. வேணாம்னா ஒதுங்கிடனும். நமக்கு வேண்டாம்னு நினைக்கிறப்ப தூக்கி எரியறதும், வேணும்ன்றப்போ ஏத்துக்கறதும் எனக்கு அசிங்கமா இருக்குப்பா…”

“இத்தனை நாள் அமைதியா இருந்துட்டு இப்ப இதனை பேசிட்டியேடா. இதையெல்லாம் மனசுல வச்சுட்டு தான் நடமாடிட்டு இருந்தியாம்மா?…”

“அப்பா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. இப்பவும் நானா பேசலை. நீங்க நடந்துக்கிட்டது தான் பேச வைக்குது. இப்ப இந்த கல்யாணம் நடந்து நாளைக்கு நாம பண்ணினதை சொல்லிகாண்பிச்சா அங்க என்னால எப்படிப்பா வாழ முடியும்?…”

“மதி…”

“அத்தனை பேசிட்டேன்ப்பா. கூசாம அப்படி ஒரு பொய்யை சொல்லிருக்கேன். எனக்கே என்னை நினைச்சா கோவம் கோவமா வருது. என்னால அன்னைக்கு முரளியை விலக்கி வைக்க வேற எதையும் சொல்ல முடியாது. அதான் இன்னொருத்தனை விரும்பறதா சொன்னேன்…”

“ஏன் நீங்க கூட நான் சொன்னதுக்கு கோவப்படலையே. எப்படியோ விட்டது தொல்லைன்னு தானே சந்தோஷப்பட்டீங்க…”

“போதும்மா, போதும். இதுக்கும் மேல பேசி பேசி என்னை சாவடிச்சிடாத. அன்னைக்கு நாங்க பண்ணினதும் தப்பு தான். இப்ப நாங்க இப்படியே உன்னை விட்டாலும் தப்பு தான். ஒரு வெளிய இப்ப கூட வேற மாப்பிள்ளையை கல்யானம செய்ய சரின்னு சொல்லு. இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்…” கலைவாணி சொல்ல,

“இத தான் சுயநலம்ன்றேன். நான் சம்மதிச்சுட்ட திரும்பவும் முரளியை அப்படியே கழட்டி விட்டுடலாம் இல்லையாம்மா?…”

“வாய மூடுடி, என்ன பேச்சு இது? கழட்டி விட்டுட்டோம்னு. நானும் பார்த்துட்டே இருக்கேன் திரும்ப திரும்ப பேசற. ஆமா அன்னைக்கு என் பொண்ணு தான் எனக்கு முக்கியமா தெரிஞ்சா நிறுத்துன்னு சொன்னேன். இப்பவும் என் பொண்ணுக்காக தான் இதை நடத்தனும்னு சொல்றேன். நீ என்ன வேணாலும் பேசிக்க…”

கலைவாணி பொரிந்துவிட்டு வாசலில் சென்று அமர்ந்துகொள்ள கோபத்துடன் அடுப்படிக்குள் வந்த வெண்மதி அவர் போட்டுவைத்திருந்த காபியை ஊற்றிக்கொண்டு கோபத்துடன் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

“கலை…” என்று மகள் சென்றதும் மனைவியை அழைத்தவர் அவர் உள்ளே வந்ததும்,

“அம்மாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை வந்தா என்னை மறந்துடறீங்க….” என சொல்லவும் தான் வெந்நீர் வைத்த நியாபகமே வர,

“இருங்க ஆத்தி வச்சுட்டேன். எடுத்துட்டு வரேன்…” என உள்ளே சென்று எடுத்துவந்து கொடுக்க,

“உன் பொண்ணுக்கு பசிக்குது போல, காபியை ஊத்திட்டு வேகமா போறா…” என்றதும்,

“கிடக்கட்டும், அந்தளவுக்கு வாயாகிடுச்சு. என்னென்ன வார்த்தை எல்லாம் பேசிட்டு போய்ட்டா பார்த்தீங்கள்ள. அசிங்கமா இருக்காம். பரவாயில்ல. நானே அந்த அசிங்கத்த ஏத்துக்கறேன். அவ நல்லா இருப்பால…”

கலைவாணி பேசிக்கொண்டே இருந்தாலும் கை பரபரவென கை வேலை பார்த்துக்கொண்டிருந்தது. கண்களில் வழியும் கண்ணீரும் நிற்கவில்லை.

ஆப்பத்திற்கு என ஆட்டிவைத்திருந்த மாவை எடுத்து வெங்காயம், மிளகாய் மலி இலையை அரிந்து போட்டு கொஞ்சம் மிளகாய் தூள் சேர்ந்து காரப்பணியாரம் ஊற்றியவர் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியை வைத்து காலையில் வைத்திருந்த சாம்பாரை சுடவைத்து ஒரு தட்டில் வைத்து கிண்ணங்களில் ஊற்றிக்கொண்டு அவள் அறைக்குள் செல்ல காபியை குடித்துமுடித்துவிட்டு அறையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

“இந்தா இத சாப்பிட்டு தெம்பா திட்டு…” அழுகை குரலில் சொல்லிவிட்டு அவர் செல்ல,

“இன்னொரு காபி இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா…” அவளும் அழுதிருக்கிறாள் என அவள் குரலே சொல்ல மேலும் பேச்சை வளர்க்காமல் சென்றுவிட்டார்.

“என்னவாம்?…” நடேசன் கேட்க,

“இன்னொரு காபி வேணுமாம்…” கலைவாணி சொல்ல அவரின் புன்னகையை போலவே கண்ணீரும் மின்னியது.

“விடு நம்ம பொண்ணு தானே?…”

“அதெல்லாம் விட முடியாது. பேசட்டும் அதுக்கும் அளவிருக்கு. இப்படியே இவளை பேசாவிட்டா கடைசியில என்னையே இந்த கல்யாணத்தை திரும்பவும் நிப்பாட்ட வச்சிடுவா. போன முறை நான் தப்பு பண்ணினேன். அந்த தப்பை இவளை செய்ய விடமாட்டேன்…”

“என்னவோ கலை, நல்லது நடந்தா சரி…”

“அவளை விடுங்க. இருங்க உங்களுக்கு வெங்காயம் சேர்க்காம காரமில்லாம பணியாரம் கொண்டு வரேன். சாம்பாரை மட்டும் தொட்டு சாப்பிடுங்க…” என்றதும் தலையாட்டிவிட்டு மெதுவாய் சோபாவில் சென்று அமர்ந்தார்.

————————————————————-

“முரளி எழுந்துக்கோ…” சுகன்யாவின் குரல் எங்கோ கிணற்றுக்குள் இருந்து கேட்பதை போல இருக்க அசைந்துகொடுத்தவன் புரண்டு படுக்க,

“முரளி…” குரல் இன்னமும் அழுத்தமாக அவனின் அருகே ஒலிக்கவும் கண்களை திறக்கமுடியாமல் திறந்து பார்த்தான்.

“எவ்வளோ நேரம் தூங்குவ? எழுந்து வா நீ…”

“ம்மா, நான் அப்பாட்ட சொல்லிட்டு தானே வந்தேன். நானா எழுந்துக்க வரைக்கும் எழுப்ப வேண்டாம்னு…”

“அது ஈவ்னிங். இப்ப நைட் ஒன்பது மதி ஆகிடுச்சு. இப்ப வரை எழும்பலைன்னா எழுப்பாம என்ன பண்ண?…”

“ஓஹ் அவ்வளோ நேரம் தூங்கிட்டேனா? ம்மா, ஈவ்னிங் எழுப்பியிருக்கலாமே?…” என எழுந்தமர்ந்து முகத்தை கைகளால் துடைத்தான்.

“எழுப்பினேனே, நீ ரொம்ப அசந்து தூங்கிட்ட. எழுந்துக்கவே இல்லை. இப்பவும் பசிக்குமேன்னு தான் எழுப்பினேன். சாப்பிட்டு படு…” என்றவரை தாண்டிக்கொண்டு சென்றவன் முகம் கழுவி கீழே வர அவர்களை பார்த்ததும் ஆனந்தன் எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார்.

“எப்ப பாரு சின்னபிள்ளை மாதிரி பிகேவ் பன்றதே உன் அப்பாவுக்கு வேலையா போச்சு…” சுகன்யா அலுத்துக்கொண்டாலும் அதில் வருத்தம் மிகுந்திருந்தது.

“விடுங்கம்மா சரியாகிடும்…”

“இப்படி சொல்லித்தான் என்னை உன் வழிக்கு கொண்டுவந்த. இப்பவே இப்படி, இதுல வெண்மதி வரவும் அவகிட்டையும் முகம் காட்டினா?…” அப்பட்டமான கவலையோடு அவர் மகனை பார்க்க,

“அது மாமனாருக்கும், மருமகளுக்குமான விஷயம். நாம தலையிட கூடாது…” என்று சிரிக்க,

“ரொம்ப தெளிவு தான் நீ…” என்றபடி மகனுக்கும் தனக்கும் தட்டை வைக்க அது வழக்கமான ஓன்று என்பதால் புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

மூவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டால் சுகன்யா தப்பித்தார். இல்லையென்றால் மகனுடன் கொஞ்சமும், கணவருடன் கொஞ்சமும் என தனி தனியாக இருவருக்கும் கம்பனி கொடுக்கவேண்டும்.

முரளி கூட பரவாயில்லி என்று புரிந்துகொள்வான். ஆனால் ஆனந்தன் முறுக்கிக்கொண்டு திரிவார். “அதுவே உனக்கு உன் மகன்தான் முக்கியமாக போய்விட்டானா? நான் வேண்டாமா?” என்னும் பாவனையே மிதமிஞ்சி இருக்கும்.

முகம் அத்தனை பாவமாக இருக்க சுகன்யா இதை பின்பற்ற ஆரம்பிக்க ஆனந்தனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனாலும் காட்டிகொள்ளமாட்டார்.

“இன்னைக்கு என்ன இத்தனை தூக்கம்?…” என்ற சுகன்யாவிடம் வெண்மதி அலுவலகம் சென்றதை பற்றி மட்டும் சொன்னவன் வேறெதையும் பகிரவில்லை.

விபீஷ் பற்றி தெரிந்தால் வீட்டிற்கே சென்று ஒரு பிடி பிடித்துவிடுவார் சுகன்யா. தன்னை போல பாவம் பார்த்து எல்லாம் விட்டுவிடமாட்டார்.

அதிலும் தங்கள் மேல் தவறே இல்லையெனும் பொழுது சுகன்யாவின் கோபம் எல்லை மீறிவிடும். வெண்மதி விஷயத்திலேயே அவரை சமாளித்து சம்மதிக்கவைக்க படாதபாடு பட்டது முரளிதரன் மட்டுமே அறிந்த ஒன்று.

“இன்னைக்கு எனக்கே தெரியலைம்மா. நானா இப்படி தூங்கினேன்? என்னவோ தெரியலை டயர்டா இருந்தது…” என்ற மகனை பார்த்தவரின் மனம் பாகாய் உருகியது.

“எப்ப நீ பிஸ்னஸ்னு அந்த பக்கம் கால் எடுத்து வச்சியோ உன்னோட லைஃபே வேற ஒரு பாதைக்கு போய்டுச்சு முரளி. உன் தூக்கமும் ரொம்ப அரிதாகிடுச்சு. அதுதான் என்னோட கவலையே. நம்மோட நிம்மதியான வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருதோன்னு பயமா இருக்கு முரளி…”

“ம்மா, என்ன இது? அப்பாவை சின்னபிள்ளைன்னு சொல்லிட்டு இப்ப நீங்க தான் குழந்தை மாதிரி நடந்துக்கறீங்க…”

“உனக்கு புரியும் முரளி. ஆனாலும் என்னை நீ சமாதானம் செய்யற…” என்றவர் அதற்கு மேல் அவனின் மனதை வருத்தாமல்,

“ஓகே சாப்பிடு. எனக்கும் டயர்டா இருக்கு. இன்னைக்கு ஓரளவுக்கு இன்விடேஷன் வச்சுட்டோம். நாளைக்கும் வைக்கனும்…”

“ம்மா, வைக்க போன இடத்துல யாரும்…” தயக்கமாய் முரளி கேட்க,

“பேசாம இருப்பாங்களா? பேசினாங்க தான். அதுவும் வெண்மதி அம்மா முன்னாடியே. என்னை விட அவங்களுக்கு ரொம்ப சங்கடம் தன்னால் தானேன்னு. சிலர் ரொம்ப இளக்காரமா, சிலர் பரிதாபமா, சில இன்னும். ப்ச், அதை விடு. பேசறவங்களும் பேசாம இருக்கமாட்டாங்க. அதுக்கெல்லாம் வருத்தபட்டா ஆகுமா?…”

“ம்மா, நீங்க…” முரளிக்கு அத்தனை கவலையாக இருந்தது.

“இப்ப தான சொன்னேன்? இனி இதுல வருத்தப்பட எதுவுமே இல்லை. அவங்க பேசறதுக்கு நீ முக்கியத்துவம் குடுத்தா இப்ப நீ எடுத்திருக்கும் இந்த முடுவுக்கு நீ நியாயம் செய்யலைன்னு அர்த்தம் முரளி…” சுகன்யாவின் கண்டிப்பில் தெளிந்தவன்,

“உங்களை யாரும் பேசிட்டாங்களோன்னு…”

“என்னை பேசிட முடியுமா என்ன? என் முன்னால பேசற திரியம் யாருக்கு இருக்கு முரளி? அப்படியே பேசிட்டா அதுக்கு பதில் நானே சொல்லிடுவேன்….”  என்றவர் உண்டு முடித்தவற்றை எடுத்துவைக்க முரளியும் உதவினான்.

உண்மை தான். சுகன்யாவை யாரும் எதுவும் அத்தனை சுலபமாக சொல்லிவிட முடியாது. கஷ்டகாலத்திலேயே அத்தனை சுயமரியாதையுடன் இருப்பவர். இப்பொழுது சொல்லவும் வேண்டுமா?

உறவுகளின் ஏச்சுக்கள் எகத்தாளங்கள் எல்லாம் அவரின் முதுகிற்கு பின் தான். முகத்திற்கு நேரே பேசி ஒரு அடி எடுத்துவைத்துவிட முடியாது. சுள்ளென உரைக்கும் விதமாய் பேசிய பின் தான் விடுவார் அவர்.

அனைத்தயும் சுத்தம் செய்த பின்னர் திரும்பி பார்க்க முரளி சுவற்றில் சாய்ந்துகொண்டு மொபைலில் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.

“என்ன முரளி தூங்க போகலை?…” கையை துடைத்தபடி அவர் கேட்க,

“ராம் மெசேஜ் அனுப்பிருந்தான். அதான் செக் பண்ணிட்டிருக்கேன்…”

“ஓஹ், ஈவ்னிங் எனக்கு கால் பண்ணிருந்தான். இன்னைக்கு வொர்க் எல்லாமே அவன் மேனேஜ் பண்ணிட்டதா சொன்னான். உன்னை டிஸ்டர்ப் செய்யவேண்டாம்னு…”

“அதான் இப்போ தான் எனக்கு மெசேஜ் அனுப்பறான். நான் ஆன்லைன் வரவும்…”

“நல்ல பசங்க. ஓகே நான் போய் தூங்கறேன் முரளி. இப்ப தூங்கிட்டேன்னு ரோபா நேரம் முழிச்சிருக்காத…”  

“ஓகே ம்மா…” என அவன் புன்னகைத்ததும் முகத்தி தெரிந்த அசதியை தாண்டிய ஒரு புன்னகை சுகன்யாவையும் தொற்ற சிரித்தபடி உள்ளே சென்றார்.

அங்கே அசையாமல் ஆனந்தன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். இருவருக்குமிடையேயான பேச்சுக்கள் என்றோ குறைந்துவிட்டிருந்தது.  

என்று முரளி வெண்மதியின் திருமண பேச்சு முதல்முறை எடுக்கப்பட்டதோ அன்று முறைக்க ஆரம்பித்தவர் திருமணம் நின்று மீண்டும் தொடங்க இன்றளவும் அதனை பிடித்துக்கொண்டு நின்றார்.

அந்த படுக்கையில் மறுமுனை படுத்தவர்க்கு அப்பொழுதான் ஞாபகம் வந்தது. அந்த வார இறுதி குலதெய்வ கோவிலுக்கு பூஜைக்கு செல்லவேண்டும் என்று. மறுநாள் முரளியிடமும் வெண்மதி குடும்பத்திற்கும் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டே உறங்கி போனார்.

இன்னும் இருபதே நாட்கள் எப்படி இதை கடக்க? என நினைக்கும் பொழுதே விபீஷின் நினைவு முரளியுனுள் எச்சரிக்கை மணியை அடித்தது.

முதல் முறை ஏற்பாடான திருமணமும் நிச்சயதார்த்தமும் அதை தொடர்ந்த நினைவுகளும் கொஞ்சமிருந்த தூக்கத்தையும் விரட்டியது. யோசனையுடன் பால்கனிக்கு வந்து அமர்ந்துகொண்டான்.

மார்கழி குளிர் அவனின் உடலை துளைக்க சிறிது நேரம் இருந்தவன் மீண்டும் உள்ளே வந்து அமர்ந்தவன் வலுக்கட்டாயமாக உறங்க முற்பட்டான்.  தூக்கம் தான் வந்தப்பாடில்லை.

சுகன்யா சொன்னது காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. பணம் சேர சேர நிம்மதி குறைகிறதோ என்று?

கண்ணை மூடியவுடன் வரும் ஆழ்ந்த சுகமான உறக்கம் எங்கே என்ற அவனின் தேடல்கள் இன்றளவும் முற்றுபெறாமலே இருக்கிறது.

அதையும் தாண்டி தந்தை சொல்லிய வேதம் அவனின் மூளைக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது.

“வாய்ப்பு கிடைச்சாதான் முரளி எதுவுமே சாத்தியம். சாதிக்கிறது கூட. அதிர்ஷ்டம் வரதை விட அந்த அதிர்ஷ்டத்தை வரவேற்கும் அளவுக்கு நம்மக்கிட்ட வாய்ப்பும் இருக்கனும். வருமானமும் இருக்கனும். இல்லைனா எதுவுமே நாய்க்கிட்ட மாட்டின முழு தேங்காய் தான். உபயோகமில்லாமல் போய்டும்….”

வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்துக்கொள்ளும் வருமானம் அப்பொழுது அவனுக்கு இல்லாமல் போனது தான் அவன் சந்தித்த அனுபவத்தின் முதல் படி.

தந்தையால் முடியாததை அவரின் காலத்தில் தான் நிறைவேற்றி அவரை பார்க்கவைக்கும் முன் அவன் தாண்டிவந்த வலி நிறைந்த வழிகள் ஏராளம்.

இதோ அனைத்தையும் தானடி சாதித்து நின்றவனின் சொந்த வாழ்வு? இதில் தான் எத்தனை எத்தனை ரணங்கள். சம்பந்தபடாத ஒன்றில் சம்பந்தப்பட்டு நல்லது என்று ஒன்றை நினைத்து இன்று அதற்கு பழி சுமந்து நிற்பவனை பலி கேட்கும் குடும்பம்.

வெண்மதி. அவளை நினைத்தமாத்திரம் இவன் முகத்தில் குறுநகை.

அவள் ஒன்றே அவனின் சரணாகதி என்றளவுக்கு இவன் மீதான அவளின் காதல் இவனை கட்டிவைத்திருந்தது. அந்த காதலை பரிபூரணமாக இவனடைய இன்னும் எத்தனை நாள் உறக்கங்களை இழக்க வருமோ?

இவனை போலே உறக்கமிழந்து தன் அறைக்குள் இவர்கள் திருமணத்தை எப்படி நிறுத்தவென யோசனையுடன் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான் விபீஷ்.

Advertisement