Advertisement

நிலவு – 6 (2)

வெண்மதிக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அமர்ந்திருந்தாள். அதிலும் சுகன்யா பேசியது அவளின் நம்பிக்கையை தகர்த்தது.

‘இவங்க எப்படி மறுபடியும் என்னை மருமகளா எடுத்துக்க சம்மதிச்சாங்க?’ குழம்பி தவித்தவள்,

‘இவன் தான் ஏதாவது செஞ்சிருக்கனும். அதுதான் அத்தையும் வேற வழியில்லாம ஓகே சொல்லியிருப்பாங்க’ அவளாகவே முடிவுக்கு வந்தவள் கலைவாணி உள்ளே சென்றதும் மெதுவாக எழுந்து பூஜையறைக்குள் நுழைந்தாள்.

அங்கிருந்த அழைப்பிதழ்களில் ஒன்றை எடுத்தவள் வேகமாய் தன்னறைக்கு வந்து கதவை சாற்றிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தவள் விரல்கள் நடுங்க அழைப்பிதழை பிரிக்க ஆரம்பித்தாள்.

ஏற்கனவே முதன்முறை திருமண ஏற்பாட்டின் போது தான் செலெக்ட் செய்ததை போன்ற மாடலில் சிறிதே மாற்றம் செய்திருந்தான் முரளி.

மணமக்களாக இருவரின் பெயரையும் அதில் கண்டவள் கண்கள் கலங்கி கண்ணீரை உகுக்க தன் மார்போடு அதை அணைத்துக்கொண்டாள்.

விரும்பியதை வெறுக்க தோன்றும் தன் மனநிலையை அவளே அந்த நொடி அறவே வெறுத்தாள்.

“நான் என்ன செய்வேன் முரளி? என்னால ஏத்துக்கவும் முடியலை. விலக்கி வைக்கவும் முடியலை. ரொம்ப கொடுமையா இருக்கு என் நிலை. யாருமில்லாத இடத்துக்கு போய்டனும் போல தோணுது” சத்தமின்றி கதறியவள்,

“வேண்டாம்னு தோன்ற அதே நேரம் எல்லாத்தையும் ஒதுக்கிவைச்சுட்டு உங்களோட ஒரு மணிநேரமாவது வாழ்ந்து பார்த்துட்டா போதும்னு தோணுது. நடந்ததை மறந்துட்டு நான் எப்படி வாழ்வேன்?. முடியலை”

அவளின் கண்ணீர் துளிகள் அழைப்பிதலில் பட்டு எழுத்துக்கள் மின்னியது. மனமுடைந்து இருந்தவளுக்கு தேற்றுவார் யாருமில்லாமல் போனது அவளே அவளுக்கு இட்டுக்கொண்ட சாபம்.

“என் அடையாளம் அவன் தான். அவனால் மட்டுமே என் வாழ்வை முழுமைபெற செய்யமுடியும். ஆனால் எனக்கு அந்த அடையாளம் வேண்டாம். வாழ்வும் வேண்டாம்” அந்நினைப்பே உள்ளத்தில் முள் தைக்க வலிக்க வலிக்க வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

“உங்க நினைவுகளோடு வாழ விரும்பற எனக்கு இந்த நிஜம் ரொம்ப வலியை, கஷ்டத்தை, வேதனையை குடுக்குது முரளி. விட்டுடேன் என்னை” என அரற்றினாள். 

பத்திரிக்கை அடித்துவிட்ட காரணத்தால் இத்தனை நாள் வேண்டாம் வேண்டாமென்று மறுத்து இன்று மணமகளாக அவனின் மனைவியாக தன்னை மாற்ற அவள் விரும்பவில்லை.

எதையும் யோசிக்கும் மனநிலையிலும் வெண்மதி இல்லை. இருபது நாட்கள் இருக்கிறது. என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம், யோசிக்கலாம் என எண்ணினாள்.

அவள் அறைக்குள்ளேயே முடங்கி இருக்க அதற்குள் நடேசனும் வந்துவிட நடந்ததை சொல்லிய கலைவாணி தன்னிடம் சுகன்யா சற்றுமுன் பேசினார் என்றும் சொல்ல என்னவென பார்த்தார் நடேசன்.

“நாளைக்கு நம்ம சொந்தங்களுக்கு அவங்களும் மாப்பிள்ளை வீட்டு சார்பா கல்யாணத்துக்கு அழைக்க வராங்களாம்…” என வெறுமையான குரலில் சொல்ல,

“என்னாச்சு கலை?…” என அவர் கேட்டதுமே கரகரவென அழ ஆரம்பித்துவிட்டார். வெண்மதி பேசியதை சொல்லவும் நடேசனின் முகம் வாடிவிட்டது.

“நான் என்ன வேணும்னா வேண்டாம்னு சொல்ல சொன்னேன். அவளோட நல்லதுக்கு தான அந்த முடிவை எடுத்தேன். அதுவும் அன்னைக்கு இருந்த சூழ்நிலை. எனக்கு நம்ம பொண்ணுதான் முக்கியமா பட்டா. நம்ம என்ன வசதியானவங்களா எல்லாத்தையும் சமாளிச்சு எதிர்த்து நிக்க?…” என்று தேம்பி தேம்பி அழ,

“ப்ச், கலை, விடு. அவசரப்பட்டு அன்னைக்கு முடிவெடுத்து இன்னைக்கு நாம கஷ்டபடறோம். நம்மோட நம்ம பொண்ணும் சேர்ந்து வாழ்க்கையை வெறுக்கறா. அவ பிடிவாதம் நாம அறியாததா? இந்தளவுக்கு மனசுவிட்டு பேசறாளேன்னு சந்தோஷப்பட்டுக்க…” என்றவர்,

“ஹ்ம்ம் சரி நடந்ததை விடு. பொண்ணுக்கிட்ட முகத்தை காமிச்சுக்காத. முகத்தை கழுவிட்டு போய் வெண்மதியை சாப்பிட கூப்பிடு…” என்றதும் வெண்மதியே இவரின் சத்தம் கேட்டு எழுந்து வந்தாள்.

“ம்மா, எடுத்து வைங்க. தூக்கம் வருது…” என்றபடி வந்தமர்ந்தவளை ஆராய்ச்சியாக பார்த்தார்.

‘அழுதிருக்கிறா’ அவளின் கலங்கி சிவந்திருந்த முகத்தை வேதனையோடு பார்த்தவர் ஒன்றும் பேசாமல் எடுத்துவைத்தார் மூவருக்குமே.

யாரும் யாரிடமும் பேசவில்லை. யார் வந்தார்கள்? என்ன நடந்தது என வெண்மதியும் கேட்டுக்கொள்ளவில்லை. என்ன முடிவெடுத்திருக்கிறாய்? என அவர்களும் வெண்மதியை கேட்கவில்லை.

இருவருக்குமே ஒருவித பயம் தான். ஏதாவது பேசப்போய் தன்னிடம் உன் முடிவென்ன என்று கேட்டால் என்ன சொல்வது என வெண்மதி மௌனம் காக்க தாங்கள் பேசி மறுத்து இத்திருமணத்தை நிறுத்துமாறு மகள் கூறிவிட்டால் என்ன செய்ய என நடேசன், கலைவாணி யோசித்து வாயை மூடிக்கொண்டனர்.

மறுநாள் கடனே என்று மெதுவாய் கிளம்ப அவள் செல்வதற்காய் காத்திருந்தார் கலைவாணி. பின்னே இன்னும் சிறிது நேரத்தில் சுகன்யாவுடன் இன்விடேஷன் கொடுக்க செல்லவேண்டுமே.

வெண்மதி கிளம்பவும் ஒரு நிம்மதி பெருமூச்சோடு தானும் பரபரவென கிளம்ப ஆரம்பித்தார். நடேசனால் அலையமுடியாது என்பதால் தான் மட்டும் சுகன்யாவோடு சென்றார்.

வேண்டாவெறுப்பாய் அலுவலகம் வந்தடைந்தவள் தன்னிருக்கையில் அமர அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரி,

“என்னாச்சு இவளுக்கு? நேத்து கூட நல்லாதான இருந்தா?…” என நினைத்து பார்க்க வெண்மதியின் டேபிளில் இருந்த டெலிபோன் சிணுங்கியது.

“காலாங்கத்தால இவனுங்களுக்கு வேற வேலை இல்லை…” என நொந்துகொண்டே அழைப்பை எடுக்க அவளின் டீம் லீடர் தான் அழைத்திருந்தார்.

“வெண்மதி கேபின்க்கு வாங்க…” என்று சொல்லி வைத்துவிட ஈஸ்வரி வந்து நின்றாள் அவளருகில்.

“சொட்ட லேட்டா வந்ததுக்கு மண்டகப்படி குடுக்க கூப்பிடுது. போய் வாங்கிட்டு வரேன். வழக்கம் போல நான் ரெண்டாவது லைன்ல நிப்பேன். நான் அப்சர்வ் பன்றதுக்குள்ள அது ஏழாவது லைனுக்கு போய்டும்…” அவளுக்கு சொல்லி எழுந்து சோர்வாய் செல்ல பாவமாய் போனது ஈஸ்வரிக்கு.

எத்தனை கஷ்டமான வேலைகள் இருந்தாலும் ஒருவித உற்சாகம் வெண்மதியிடம் ஒட்டிக்கொண்டே இருக்கும் எப்பொழுதும். கலகலப்பான பெண். இன்று அது சுத்தமாக அவளிடம் இல்லை என்பது ஈஸ்வரிக்கு புரிந்தது.

ஒரு பெருமூச்சோடு தன்னிருக்கையில் சென்று அமர வெண்மதி கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

“ஸார்…” என்று நிற்க,

“ப்ளீஸ்…” என்று அவளை அமர சொல்ல இதேதடா அதிசயத்திலும் அதிசயம்? நரி நல்லமூஞ்சியில முழிச்சிருக்கும் போலவே! என வியந்து புன்னகையோடு அமர்ந்தவள் பக்கத்து இருக்கையில் திரும்பி பார்க்க அங்கே முரளி அமர்ந்திருந்தான் இளநகையோடு.

முகம் இருளை கூட்ட அவனை அதிர்ந்து பார்த்தாள். அதிலும் அவளின் முகத்தை கண்டவன் கண்களை வேறு சிமிட்ட,

“ஆஹா, சைத்தான் சங்கோட சர்கஸ்க்குள்ள வந்திருச்சே. இங்க என்ன பண்ணிவைக்க போறானோ?” என்ற பீதியோடு அவனருகே அமர,

“வெண்மதி, ரொம்ப ஹேப்பி மா. உங்களுக்கு மேரேஜ்னு ஸார் சொன்னார். இதை பத்தி நீங்க சொல்லவே இல்லையே. அதிலும் எம்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் எம்டி உங்க பியான்சின்னு. எனிவே கங்க்ராட்ஸ்…”

இருவருக்கும் பொதுவாக வாழ்த்தை சொல்லியவர் மேலும் சில நிமிடங்கள் முரளியிடம் பேசிவிட்டு,

“ஓகே நீங்க எல்லோரையும் இன்வைட் பண்ணிடுங்க…” என்றதும் கையில் இருந்த இன்விடேஷனை எடுத்து வெண்மதியின் கையில் கொடுத்தவன்,

“குடுங்க…” என சொல்ல மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அவனோடு சேர்ந்தே கொடுத்தாள்.

அவரிடம் திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என சொல்லி வெளியில் வெண்மதியோடு உடன் பணிபுரிவர்களுக்கும் இன்விடேஷனை கொடுக்க மற்றவர்கள் முன்பு தன் கோபத்தை காட்டமுடியாமலும் மறுப்பை வெளிப்படுத்த இயலாமலும் இருதலைகொள்ளி எறும்பென தவித்தாள். அதிலும் ஈஸ்வரி பார்த்த பார்வை.

வெளியில் வந்தவர்கள் அடுத்த இன்விடேஷனை முதலில் ஈஸ்வரிக்கு தான் கொடுத்தனர்.

“உங்களுக்காவது எனக்கு சொல்லி அழைக்கனும்னு தோணுச்சே…” வெண்மதியை பார்த்துக்கொண்டே இடக்காய் கூற வெண்மதிக்கு அழுகையே பொங்கிவிட்டது.

ஈஸ்வரியை அடிபட்ட பார்வையோடு நிமிர்ந்து பார்க்க அவளோ முரளியோடு பேசிக்கொண்டிருந்தாள். தன் தோழியின் வாழ்வில் ஒரு வெளிச்சம் வந்துவிட்ட திருப்தியும், சந்தோஷமும் அப்பட்டமாய் தெரிந்தது வெண்மதிக்கு.

அனைவரையும் அழைத்துவிட்டு வெண்மதியை அழைத்துக்கொண்டு கட்டிடத்தின் வெளியே வர பதில் பேசாமல் அவனோடு நடந்தாள். வந்தவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் அளவிட்டுக்கொண்டிருக்க அவன் பேசுவான் என பார்த்தவள்,

“ரொம்ப சந்தோஷம் போல?….” எள்ளலாய் அவனிடம் கேட்டேவிட்டாள்.

“நிச்சயமா இல்லை வெண்ணிலா. எனக்கு இதுல சந்தோஷம் இல்லவே இல்லை…” அமைதியாக முரளி சொல்ல,

“என்னை எதுவும் செய்யமுடியாத சூழல்ல சிக்க வச்சுட்டீங்கல…” உதடு துடிக்க உணர்ச்சி பொங்க வெண்மதி கேட்க,

“என்னை இப்படி செய்யற நிலைக்கு நீங்கதான் என்னை ஆளாக்கிட்டீங்க வெண்மதி…” என்றதும்,

‘இவன் ஒருத்தன் வெண்ணிலா, வெண்மதின்னு என்னையே குழப்புவான்’ என்று அவனையே முறைத்து பார்க்க,

“எனிவே, ரொம்ப தேங்க்ஸ், எனக்கு நீங்க வச்ச பேர்க்கு. நான்… தடியன். ம்ம்ம்…”

“அப்போதைக்கு வேற நல்ல பேர் கிடைக்கலை. அதான். இல்லைனா இன்னுமே வச்சுருப்பேன்…” படபடவென வெண்மதி பேச ரசனையுடன் சிரித்தான்.

“சிரிக்காதீங்க. கடுப்பாகுது. உங்களை…” என்று கழுத்தை நெறிப்பதை போல கைகளை நீட்ட,

“ஹ்ம்ம், டச் மீ…” என்றதும் திகைப்புடன் பின்வாங்கி நின்றாள்.

உதடு மடித்து அவளையே குறுகுறுவென பார்க்க வெண்மதிக்கு சட்டென தென்பட்ட அவனின் பார்வை மாறுதலில் விதிர்விதிர்த்து போனாள்.

“நா போறேன்…” என்று அங்கிருந்து தப்பித்து ஓட பார்க்க அவளின் கை பிடித்து நிறுத்தினான் முரளி.

சட்டென்ற தொடுகை. அவனின் முதல் ஸ்பரிசம் ஆயிரமாயிரம் உணர்வுகள் ஓங்கி ஆர்ப்பரித்து அவளை நிலைகுலைய செய்தது. அவளின் மாற்றத்தை புரிந்துகொண்டவன் விரிந்த புன்னகையோடு,

“டேக் கேர் வெண்ணிலா…” என்று சொல்லி கிளம்பிவிட அவன் சென்ற திசையையே பார்த்து நின்றாள் வெண்மதி.

“வச்சி செய்யறேன்டா உன்னை…” என்று முனுமுனுப்புடன் பார்த்தாள்.

அவளுக்கு நேர்மாறான மனநிலையுடன் இருந்த முரளி ராமிடம் இருந்து அழைப்பு வரவும் எடுத்து காதில் வைத்தான்.

“ப்ரோ எங்க இருக்கீங்க?…” என்றதும்,

“இன்விடேஷன் குடுக்க வெண்மதி ஆபீஸ் வந்திருந்தேன். கிளம்பிட்டேன். எனித்திங்?…” எனதரு அவன் முடிக்கும் முன்னர்,

“கொஞ்சம் நம்ம சைட் வரைக்கும் வந்துட்டு போங்க…” என தீவிரமான குரலில் ராம் சொல்லவும் முரளி கிளம்பி சென்றான்.

Advertisement