Advertisement

நிலவு – 6 (1)

            அவனை சந்தித்துவிட்டு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. ஆனாலும் இப்பொழுது நடந்ததை போல படபடப்போடுதான் சுற்றித்திரிய வைத்தான் முரளிதரன் அவனின் நினைப்பிலேயே.

அவனின் அருகாமை கொடுத்த அவஸ்தை. இப்பொழுது நினைத்தலும் உள்ளுக்குள் சிலிர்த்துதான் போனாள் வெண்மதி.

அவளின் முகம் பார்த்து ஈஸ்வரியிடம் தன்மீதான காதலை சொல்லியவனின் மூச்சுக்காற்று இன்னமும் தன் முகத்தில் படருவதை போன்ற ஒரு பிரம்மை.  இப்பொழுதும் அவன் அருகாமையை உணரவைக்கிறதே! என்ன ஒரு விந்தை?

விந்தை தான். அவனின் உரிமையில், அருகாமையில், காதல் சொட்டும் பேச்சில் வெகுண்டு,

“என்ன உளறல் இது முரளி?” என சீறினாலும் அவனை விட்டு தள்ளி அமர தோன்றவே இல்லையே. அவனின் நெருக்கத்தை விரும்பியதை போலவே ரசனையோடு அமர்ந்துதானே இருந்தாள்.

அன்றைக்கும் அவளின் பாதுகாப்பிற்கென அவளின் பின்னாலேயே காரை செலுத்தி வந்தவன் வீட்டிற்குள் செல்லும் வரை பார்த்துவிட்டு கிளம்பி அவளுக்கொரு நிறைவை தந்தான்.

ஈஸ்வரி வேறு முதலிலேயே தன்னிடம் சொல்லவில்லை என்று கோபம் கொண்டு இவளிடம் முறைத்து நிற்க அந்த கடுப்பும் முரளிதரன் மேலேயே பாய்ந்தது.

‘எல்லாம் இவனால வந்தது’ மனதிற்குள் வைத்து தாளித்து தள்ளினாள்.

“என்னை நீ உண்மையிலையே ப்ரெண்டா நினைச்சிருந்தா அவர் மேல உனக்கிருக்கிற விருப்பத்தை என்கிட்டே ஷேர் பண்ணியிருப்ப தானே? அப்போ என்னை நீ தள்ளித்தானே வைச்சிருக்க?…”

“இவ வேற படுத்தறாளே? நான் எங்கடி தள்ளி வச்சேன்?…” என்று வெண்மதி கெஞ்சினாலும் கண்ணை கசக்கிக்கொண்டு அலுவலகத்தில் வைத்து ஈஸ்வரி மீண்டும் மீண்டும் கேட்க பதில் சொல்லமுடியாமல் கடுப்புடன் தான் நின்றாள் வெண்மதி.

“என் ப்ரென்ட் என்கிட்டே எதையுமே மறைக்க மாட்டான்னு நான் எவ்வளோ பெருமையா நினைச்சிருப்பேன் தெரியுமா? ஆனா நீ?…”

பெரும் குற்றச்சாட்டோடு அவளை பார்த்து வைக்க ஈஸ்வரியை சமாளிக்கும் முன் வெகுவாய் சிரமப்பட்டு போனாள் வெண்மதி.

“சொல்றதை கேளு ஈஸ். நிஜமாவே இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாது. அவன் லூஸு மாதிரி உளறிட்டு போனா நான் என்ன பண்ணுவேன்? நம்புடா…” என்று கொஞ்சி,

“ஏற்கனவே இந்த ஹெச்.ஆர் டோங்கிரி தலையன் என்னை பாடா படுத்திவைக்கிறான். நீயும் இப்படி டென்ஷன் ஆக்காத. பைத்தியமே புடிச்சிடும் எனக்கு…”

தலையை தாங்கிக்கொண்டு உண்மையான வருத்ததோடு வெண்மதி சொல்ல ஈஸ்வரிக்குதான் தாங்கவில்லை. ஆனாலும்,

“ப்ச், என்கிட்டே சொல்லலைன்னு தானே கேட்டேன். அப்போ நானும் உன்னை படுத்தறேனா? இனி எதுவும் உன்கிட்ட கேட்கலை போதுமா?…” பாவமாய் கேட்டு எழுந்து செல்ல அவளின் பின்னேயே ஓடினாள் வெண்மதி.

“இல்லைடா, நான் அப்படி சொல்லலை. நீயும் என்னை புரிஞ்சிக்கலைன்னு பீல் பண்ணினேன். அதான்…” என சொல்லி ஏதேதோ பேசி ஒரு வழியாக மலையிறங்க வைத்தாள்.

அதற்கடுத்த நாட்கள் முழுவதும் ஒருவித தவிப்போடும் இறுக்கத்தோடுமே கழிய வியாழன் அன்று விரைவிலேயே வீடு திரும்பியவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வந்ததிலிருந்து கலைவாணி, நடேசனின் முகம் பேயறைந்ததை போலவே இருக்க யோசனையோடு தன்னறைக்கு சென்று முகம் கழுவி உடை மாற்றி திரும்பியவளுக்கு காபி கொடுக்கும் பொழுதும் கலைவாணி பயந்து தான் பார்த்தார்.

“ம்மா, என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?…” காபியை வாங்கி பருகிக்கொண்டே கேட்க அவள் குடித்து முடிக்கும் வரை பார்த்திருந்தவர் வெண்மதி முடித்ததும் பூஜையறைக்கு அவளை அழைத்து சென்றார்.

“ம்மா, இன்னும் குளிக்கலை. நீங்களே விளக்கேத்திருங்க. ரொம்ப டயர்ட்…” என சொல்லி திரும்ப,

“மதி, இதை பாரு…”

அவள் கைபிடித்து நிறுத்தி அவர் காண்பித்ததை பார்த்ததும் மின்சாரம் பாய்ந்ததை போல நின்றாள்.

அங்கே தாம்பாள தட்டுகளில் பட்டுப்புடவை, நகைகள், பூ பழங்கள் சகிதமாக திருமண அழைப்பிதழ்களும் வைக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் புரிந்தது இது முரளியின் வேலை என்று.

கோபம் உட்சபட்ச நிலையை எட்ட கலைவாணியை முறைத்துவிட்டு,

“அப்பா எங்க?…” என்றாள். அவர் வெண்மதி வந்ததுமே வெளியே போய்வருகிறேன் என சொல்லி கிளம்பிவிட்டது அவள் அறியாதது.

“சுப்பிரமணி அண்ணன் கூட வெளில போய்ருக்காரு…” என்று சொல்லி என்ன செய்வாளோ? என பதறி பதறி பார்த்தார் கலைவாணி.

தன்னுடைய மொபைலை எடுத்து முரளிக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்தவன்,

“சொல்லுங்க வெண்ணிலா, இன்விடேஷன் பிடிச்சிருக்கா?. சேரி கூட என்னோட செலெக்ஷன் தான். நீங்க தான் வரலைன்னு சொல்லிட்டீங்க. அதான் நானே போய் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்…”

“முரளி…” பொறுமை இழந்து வெண்மதி கத்த,

“ஓகே, கல்யாண வேலை நிறைய இருக்கு. வேலையை பார்க்கபோறேன். கல்யாணத்துக்கப்பறம் நிதானமா பேசிக்கலாம். பை..”

அவளின் பதிலை எதிர்பாராமல் வைத்துவிட ஏகத்துக்கும் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது வெண்மதிக்கு. மீண்டும் அவனுக்கு அழைக்க எடுத்தவன்,

“ப்ச், வெண்ணிலா, பிஸின்னு சொல்றேன்ல. பிஸினா பிஸி தான். இப்போ கடலை போட நேரமில்லை. பை…”

வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றி வைத்துவிட அவ்வளவுதான் எரிமைலையாய் வெடித்து சிதறியவள் அக்கினி குழம்பை அவன் மீது பாய்ச்ச மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.

அவன் எடுக்கும் வரை மீண்டும் மீண்டும் அழைக்க முரளி அதை ஏற்கவே இல்லை.

அது இன்னமும் ஆத்திரத்தை தூண்டியது. அறிவிழக்க செய்தது. இன்று அவனை உண்டில்லை என செய்யும் ஆவேசம் கிளர்ந்தது. அவளின் முகத்தில் கொட்டிக்கிடந்த ரவுத்திரத்தை கண்ட கலைவாணி,

“மதி, எதுவா இருந்தாலும் கொஞ்சம் நிதானமா பேசு. இவ்வளவு கோபம் ஆகாது…” என,

“உங்களை யார் இதையெல்லாம் வாங்கி வைக்க சொன்னது. வீட்டுக்கு வந்தா வாசலோட அனுப்பறதை விட்டுட்டு. உங்க நினைப்பெல்லாம் நடக்காது. என்ன நீங்களும் உடந்தையா? கொஞ்சமாவது பழசை நினைச்சு பார்க்கனும். வேண்டாம்னு முடிவு பண்ணுனீங்கள்ள அப்படியே இருங்க…” பட்டென்று அவள் சொல்லிவிட கலைவாணி விக்கித்து போனார்.

“மதி?…” கண்ணீர் கோர்க்க அவளை பார்க்க அதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் வெண்மதி இல்லை. அடக்கிவைத்திருந்த ஆதங்கம் வார்த்தைகளாய் வந்தேவிட்டது.

“இருங்க அவனை தோரணம் கட்டி தொங்கவிட்டுட்டு வரேன்…”

அவரிடம் பொரிந்தவள் கைகள் அவனுக்கு விடாமல் அழைத்துக்கொண்டே இருக்க அழைப்பு எடுக்கப்பட்ட நிமிடம் படபடவென வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தாள்.

“டேய் தீவட்டி தலையா? தடியா, என்னை என்னன்னு நினைச்சிட்டு இருக்க? நீ இன்விடேஷன் அடிச்சு கொண்டு வந்து குடுத்துட்டா உடனே வெக்கப்பட்டு சந்தோஷப்பட்டு உன்னை கல்யாணம் செஞ்சுப்பேன்னு நினைச்சியா? உனக்கு இருக்குடா…”

“என்கிட்டே இதையெல்லாம் வச்சுக்காதன்னு சொன்னேன்ல. நானும் போனா போகுதுன்னு பொறுமையா இருப்போம்னு பார்த்தா ஓவரா தான் பன்ற. உன் வீட்டுக்கு வந்து நீ பன்றதை எல்லாம உங்கம்மாட்ட சொல்லி உன் ஆட்டத்துக்கு முடிவுகட்றேன்…”

“அப்படி நான் வரக்கூடாதுன்னு நீ நினைச்சா இப்பவே வந்து மரியாதையா நீ குடுத்ததை எடுத்திட்டு போய்டு…”  அப்பட்டமான மிரட்டல் குரலில் சொல்ல மறுபுறம் அப்படி ஒரு அமைதி.

“முரளி, நான் பேசறது கேட்குதா இல்லையா? முரளி, முரளி…” என கத்த,

“வெண்மதி…” என்ற சுகன்யாவின் அழைப்பில் சர்வாங்கமும் ஒடுங்க திகைத்து,

“அத்தை…” என்றது அவளின் அதரங்கள் அவளனுமதி இன்றியே.

அவளின் உரிமையான அழைப்பில் முரளியை இத்தனை தூரம் பேசியவளின் மீதிருந்த கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது சுகன்யாவிற்கு. வெண்மதியின் மனதில் தான் இன்னும் அந்த உறவில் இருப்பதை எண்ணி கொஞ்சம் சமாதானம் கூட ஆனது.

ஆனாலும் முழு கோபமும் அவருக்கு குறையவில்லை. அதிலும் அவள் கொடுத்த அவமானம் அதை இன்றளவும் மறக்கமுடியாமல் தான் இருக்கிறார்.

“என்ன சொல்லனும்மா, என்கிட்டே சொல்லு. எதுக்கு இவ்வளவு கோபம்? போன்ல யார் இருக்காங்கன்னு கூட தெரிஞ்சுக்காம பேசற கண்மண் தெரியாத கோபம்?…”

“அது வந்து…. முரளி, இன்விடேஷன்…” என்று இழுக்க,

“ஆமா, நானும் அவனும் தான் உங்க வீட்டுக்கு வந்து அதை எல்லாம் குடுத்திட்டு வந்தோம். உங்கம்மா சொல்லலையா? ஓகே. இன்னும் ட்வென்டி டேய்ஸ்ல மேரேஜ். உன்னோட ப்ரெண்ட்ஸ், ஆபீஸ் கலீக்ஸ் எல்லோருக்கும் குடுத்திடு. ரிலேட்டிவ்ஸ் எல்லோருக்கும் நாங்க பார்த்துக்கறோம்…” என்றவர்,

“நடந்ததை எதையும் மாத்த முடியாது. நடக்கபோறதாவது நல்லதா நடக்கனும்னா நீ தான் உன் மனசை மாத்திக்கனும். உன்கிட்ட சொல்ல இதை தவிர ஒண்ணுமில்லை…” என சொல்லி போனை வைத்துவிட செய்வதறியாமல் மொபைலை பார்த்தபடி சமைந்து நின்றாள்.

வெண்மதியிடம் பேசிவிட்டு திரும்பியவருக்கு பின்னால் முரளிதரன் நின்றுகொண்டிருந்தான்.

“ம்மா, ரொம்ப பேசிட்டாங்களோ?…” என தயங்கி கேட்க அவனின் பார்வையில் இருந்த இறைஞ்சுதலில் புன்னகைத்தவர்,

“உனக்கு ஏத்த பொண்ணுதான். ரொம்ப படுத்தற போல. இதுக்குதான் நான் சொன்னேன். அவளோட முழு சம்மதத்தோட மேரேஜ் பிக்ஸ் பண்ணலாம்னு. நீ கேட்கலை…” குறை பாடுவதைபோல சொன்னாலும்,

“ஓகே, அதை பத்தி இனி பேச வேண்டாம். நம்ம சைட் முக்கியமான ஆட்கள்க்கு இன்விடேஷன் வச்சாச்சு. அவங்களோட க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ் எல்லோருக்கும் நாம போய் வைக்கனும். அதுதான் முறை. உன் மாமியார்ட்ட பேசனும்…”

என சொல்லி அவனின் மொபைலை தந்துவிட்டு தன்னுடையதை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார். அவரை பார்த்துக்கொண்டே தன்னறைக்கு வந்தவன் மொபைலில் பதிவாகியிருந்த ரெக்காடரை கேட்க ஆரம்பித்தான்.

ஆட்டோமேட்டிக் கால்ஸ் ரெக்காடர் அவளின் மொத்த கோபத்தினையும் உள்வாங்கி அதே சூட்டோடு கொஞ்சமும் பிசக்காமல் அவனிடம் சேர்ப்பித்தது.

‘தீவட்டி தலையனா?’ வேகமாய் கண்ணாடி முன் நின்றவன் முகம் புன்னகையில் விகசிக்க ஆரம்பித்தது.

‘ரொம்பத்தான் திட்டறீங்க நீங்க, எல்லாத்துக்கும் சேர்த்து குடுப்பேன் உங்களுக்கு மை டியர் வெண்ணிலா’ என நினைத்துக்கொண்டே தன்னுடைய கார் கீயை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பினான்.

Advertisement