Advertisement

நிலவு – 3 (2)

வந்தவன் அவள் முன் அதை நீட்ட வாங்காமல் அவனை பார்த்தவள்,

“முதல்ல கீயை குடுங்க. அப்பறம் வாங்கிக்கறேன்…”

“முதல்ல இதை வாங்கி  பிரிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நான் கீயை தரேன்…”

கையில் இருந்த சாவியை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். இப்பொழுது வெண்மதிக்கு திக்கென்று இருந்தது.

இதுவரை பேசிக்கொண்டிருந்தவனின் குரலில் முற்றிலும் மாற்றம். என்னவென உணரமுடியாமல் தடுமாறி இருந்தாள். நெஞ்சம் அடித்துக்கொண்டது.

எதுவானாலும் பரவாயில்லை என தன்னை தேற்றி அவன் நீட்டிக்கொண்டிருந்த கவரை வாங்க,

“அதை ஓபன் செய்ங்க…” மீண்டும் காரில் சாய்ந்து நின்று மார்பின் குறுக்கே கைகளை கட்டி நின்றான். பார்வை மொத்தமும் அவள் முகத்திலேயே.

விருப்பமின்றி பிரித்து பார்த்தவள் குழம்பிப்போனாள். ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க,

“இதுல ஒன்னை செலெக்ட் பண்ணுங்க…”

“உங்க மேரேஜ்க்கு நான் ஏன் கார்ட் செலெக்ட் பண்ணனும்? இது உங்களுக்கே ஓவரா தெரியலை? எனக்கென்ன வேலைவெட்டி இல்லைன்னு நினைச்சுட்டீங்களா?…”கடுப்பாய் மொழிய,

“நீங்க தான் செலெக்ட் செய்யனும். செய்ங்க…” இப்பொழுது அழுத்தமாய் சொன்னது அவன் குரல்.

“முடியாது, என்னால உங்க இஷ்டத்துக்கு ஆட முடியாது. என்னைக்கு நான் உங்களை வேண்டாம்னு சொன்னேனோ அப்பவே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஆகிடுச்சு. திரும்பவும் நீங்க வந்து நின்னதும் ஒரு மரியாதைக்கு தான் பேசினேன்…”

“செலெக்ட் செய்ங்கன்னு சொன்னேன் வெண்மதி…” பொறுமையை இழந்து கொண்டிருந்தது முரளியின் குரல்.

கோபமாகிவிட்டான் என்பது தெளிவாய் புரிந்தது அவளுக்கு. ஆனாலும் தன் உணர்வுகளோடு ஏற்கனவே போராடிக்கொண்டிருப்பவளை மேலும் வறுத்தவென வந்து வம்பிளுப்பவனை அப்படியே விட்டு செல்வதா?

“நீங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுக்கறீங்க மிஸ்டர். இதுதான் இவ்வளவு உங்களுக்கு மரியாதை…”

அவளின் எரிச்சலை கோபத்தை அலட்சியம் செய்தவனின் தோற்றமும் பார்வையும் கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருக்க,

“ப்ச் சொன்னா கேட்க மாட்டீங்க…” ஸ்கூட்டியை சைட் ஸ்டாண்ட் போட்டுவிட்டு அவன் கொடுத்ததை காரிலேயே தூக்கி எறிந்தவள்,

“இந்த வண்டியையும் நீங்களே வச்சுக்கோங்க. எனக்கு ஆட்டோ பிடிச்சு போய்க்க தெரியும்…” என்றவள் தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொள்ள,

“நான் தருணை மீட் பண்ணிட்டேன் வெண்மதி. டோன்ட் ப்ளே வித் மீ…” என்றான் முரளி உணர்வுகளை துடைத்த குரலில்.

வெண்மதியின் மொத்த கோபமும் படபடப்பும் மொத்தமாய் வடிந்துவிட்டிருந்தது. இனி எதற்கும் தெம்பில்லாததை போன்ற ஒரு தோற்றம். கைகள் தொய்ய விழுந்துவிடுவோமோ என்றொரு அச்சத்தையும் தாண்டிய எதுவோ ஒன்று.

“என்னை பற்றி என்ன நினைத்திருப்பான் இவன்?…” மென்று தின்ற அந்த அவமானத்தை தாங்க முடியாமல் கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போல தோன்ற தள்ளாடினாள்.

“வெண்மதி…” பதறிய முரளி வேகமாய் அவள் பக்கம் வர கையை நீட்டி தடுத்தவள் மூச்சை ஆழ இழுத்துக்கொண்டாள். இனி எதையும் சந்தித்தே ஆகவேண்டும். தயாராகவும் ஆகிவிட்டாள்.

“சோ வாட்?…”

“நீங்க என்னை ஏமாத்தியிருக்கீங்க. என்கிட்டே பொய் சொல்லி இருக்கீங்க…”

“எனக்கு பிடிக்கலை. உங்களை வேண்டாம்னு சொல்றதுக்கு எனக்கு இதுதான் தெரிஞ்சது…” சொல்லும் பொழுது நெஞ்சம் விம்மி தணிந்தது வெண்மதிக்கு.

அவனுக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும் வெண்மதி சொல்வது அப்பட்டமான பொய் என்பது. ஆனாலும் அவளை பேசவிட்டு பார்த்தான் முரளி.

“இது ஒரு குற்றமா? இதுக்கு துரத்தி வந்து கேட்பீங்களா? நடந்து முடிஞ்சு ஒரு வருஷம் ஆகிப்போச்சு. இப்போ என்ன உங்களுக்கு?…”

“ஓகே லீவ் இட். இப்போ இது ப்ராப்ளம் இல்லை…” என்றவன்,

“கார்ட் என்னைக்கு, எப்போ செலெக்ட் பன்றீங்க? எப்போ ப்ரீன்னு சொல்லுங்க. சேர்ந்தே செலெக்ட் பண்ணலாம்…”

“யோவ், ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாது. நீ கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் குட்டின்னு வாழ நான் உனக்கு கார்ட் எடுத்து தரனுமா? என்னை என்னன்னு நினைச்ச?…” ஏகவசனத்தில் வெடித்தவளை கண்டு இப்பொழுது சிரிப்பு பீறிட்டது முரளிக்கு.

“இப்படி எல்லாம் கூட உங்களுக்கு பேச வருமா?…” நிதானமாக கேட்டவனை கண்டு கண்மண் தெரியாத ஆத்திரம் கிளம்பியது வெண்மதிக்கு.

“என்னை பார்த்தா லூஸு மாதிரி தெரியுதா?…”

“சத்தியமா இல்லைங்க. கார்ட் மட்டும் செலெக்ட் பண்ணுங்க…”

அவனை கடுப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆட்டோ வருகிறதா என பார்க்க ஆரம்பித்தாள்.

“ஆட்டோ எடுத்துட்டு நீங்க வீட்டுக்கு போனா கண்டிப்பா உங்க வீட்டுக்கே வருவேன்…”

“என்ன விளையாடறீங்களா? சும்மா வம்பு பண்ணிட்டு இருக்கீங்க. நான் மட்டும் ஹெல்ப்னு கூப்பிட்டா…” சத்தமாய் பேசிவிட அங்கு சென்றுகொண்டிருந்த ஒருசிலர் கூட திரும்பி பார்த்து சென்றனர்.

“தாராளமா கூப்பிடுங்க. சத்தமா பேசி எல்லோரையும் கூப்பிடுங்க. நான் உங்க கையை பிடிச்சு இழுத்தேன்னு சொல்லுங்க…” அசராது அவன் பேச தலையே வெடித்தது இவளுக்கு.

“இப்போ ஏன் என்னை டிஸ்ட்ரப் பன்றீங்க?…” இறங்கிய குரலில் கேட்க,

“நம்ம கல்யாணத்துக்கு இன்விடேஷன் உங்க கையால செலெக்ட் பண்ணனும்னு விரும்பறேன். இதுல என்ன தவறு இருக்கு?…” மின்னாமல் முழங்காமல் இடியொன்றை அவளின் தலையில் இறக்கினான்.

“வாட்? நம்ம கல்யாணமா? என்ன உளறல்?…” அதிர்ச்சியில் எகிறிகுதிக்க துடித்த இதயத்தை இழுத்து நிறுத்தியவளின் கண்கள் தவிப்பாய் அலைபாய்ந்தது.

“ஆமாம். நம்ம கல்யாணமே தான்…” அழுத்தம் திருத்தமாய் அவன் கூற தலைசுற்றி நின்றாள்.

இது எப்படி சாத்தியமாகும்? குழம்பியவளுக்கு தெரியவில்லை. சாத்தியப்படுத்த தான் அவன் இருக்கிறானே? அவளின் ஒற்றை பார்வைக்காய் தவம் இருப்பவன் அவளுக்காய் எதையும் சாத்தியப்பட வைப்பான் என்பதை அறியாமல் போனாள்.

“என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிச்சிருக்கா வெண்ணிலா?…” அவனின் ஆழ்ந்த குரலில் உருகி இளகித்தான் போனாள்.

பதில் இன்றி திகைத்துபார்த்தாள். வேண்டாம் வேண்டாம் என மூளை  அடித்துக்கொண்டாலும் வேண்டும் வேண்டும் என இதயம் துடித்தது.

இவனின் நேசம் வேண்டும், வாழ்நாள் முழுவதும் தன்னை உரிமையுடன் தொடரும் இவனின் பார்வை வேண்டும், காதலுடன் சீண்டலும் ஊடலுடன் தீண்டலுமாய் மொத்தமாய் அவன் வேண்டும் என பேராசை கொண்டது காதல் கொண்ட நெஞ்சம்.

அவன் பக்கம் தறிகெட்டு பாய்ந்து அவன் நெஞ்சத்தில் தஞ்சம் புக நினைத்த தன் மனதை இழுத்துப்பிடித்து நிறுத்தி அவனை பார்த்தாள்.

“சொல்லுங்க, என்னை இவ்வளவு பிடிச்சதால தானே நீங்க ஹரியை வேண்டாம்னு சொன்னீங்க…” இன்னும் அதிர்ந்தாள் அவன் கேள்வியில்.

“ஹரிஹரன் என்னோட ப்ரென்ட்…” அவளின் பார்வைக்கு விடையாய் பதில் சொல்ல முறைக்க கூட தோன்றவில்லை அவளுக்கு.

“ஆக, இவன் தன்னை கவனித்துக்கொண்டு தான் இருந்திருக்கிறான்…” நினைக்கும் பொழுதே பனிசாரல் மழையென நெஞ்சம் நனைத்தது.

ஆனாலும் பிடிவாதத்தை பிடித்துக்கொண்டு பிடிவாதமாய் நின்றாள். முகம் அத்தனை கலங்கி சிவந்திருந்தது.

அதற்கு மேலும் அவளை வற்புறுத்தாமல் சாவியை நீட்ட கலக்கமாய் முரளியை ஏறிட்டாள்.

“கிளம்புங்க…” அதே புன்னகை அவனின் முகத்தில் கொஞ்சமும் வாடவில்லை.

இதுவரை தோன்றியிராத குற்றவுணர்ச்சி அவளை பிய்த்து திங்க சாவியை வாங்கி வண்டியை கிளப்பியவள் அவனை நிமிர்ந்து பார்க்க,

“இப்போ கிளம்புங்கன்னு சொன்னேன். ஆனா என்னோட லைப்ல நீங்களும் உங்க லைப்ல நானும் தான். இது கண்டிப்பா நடக்கும்…” அவனின் முடிவில் முகம் கருத்தவள்,

“இது சரிவராது முரளி. விட்டுடுங்க. அதுதான் நம்ம எல்லோருக்குமே நல்லது…” சொல்லியவள் ஸ்கூட்டியை செலுத்தி தன் பாதையில் கவனமானாள்.

மனம் முழுவதும் அவனின் பேச்சு காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

நினைவுகளை தாண்டிய கவனத்தோடு வீட்டை அடைந்தவள் கேட்டை திறந்து வண்டியை உள்ளே வைத்து கேட்டை பூட்டும் பொழுதுதான் கவனித்தாள் அதை. முரளியின் கார் அவளை பின் தொடர்ந்து வந்து நின்றதை.

வெண்மதியின் பார்வையை சந்தித்ததும் கிளம்புவதாக அவன் தலையசைக்க தன்னையறியாமல் வெண்மதியும் தலையை அசைத்து அவனுக்கு விடையளிக்க முரளியின் இதழ்கள் மந்தகாச புன்னகையை சிந்தியது.

முகம் கொள்ளா சிரிப்போடு காரை கிளப்பிசென்றவன் செல்லும் திசையையே பார்த்து நின்றவளுக்கு தான் போட்டுக்கொண்டிருந்த இரும்பு வேலி கொஞ்சம் கொஞ்சமாய் தகர்வதை போன்ற ஒரு தோற்றம் கண்முன்னே விரிந்தது.

“பிடிச்சிருக்கா?…” அவன் கேட்டது இப்பொழுதும் கேட்டுகொண்டே இருக்க இறுக்கமாய் விழிகளை மூடியவள்,

“ஆமா, பிடிச்சிருக்கு. இன்னும் பிடிக்கும். உன்னை மட்டும் தான் முரளி பிடிக்கும்…” விழி நீர் கசிய மனதினுள் அரற்றினாள் வெண்மதி.

————————————————————

முரளி வரும் வழியெல்லாம் வெண்மதியின் நினைவு தான். இனி எதற்கும் வளைந்துகொடுக்க போவதில்லை என்னும் எண்ணம் தான் அவனின் மனம் முழுவதும்.

அத்தனை எளிதில் அவளை சம்மதிக்கவைக்க முடியாது. ஆனால் அப்படியே விட்டுவிடவும் முடியாதல்லவா.

நினைவுகளுடன் தன்னுடைய கடமைகளும் ஞாபகம் வர அவனின் மொபைலும் அழைத்தது சரியாக. யாரென எடுத்து பார்த்தவனுக்கு புருவங்கள் முடிச்சிட்டன.

பிரச்சனைக்குரிய அழைப்பு தான். ஆனாலும் அதை அலட்சியப்படுத்தவோ, ஐயோவென பதறவோ முடியாது.

சிரிப்புடன் அழைப்பை ஏற்றான்.  புன்னகை அவனின் உடன்பிறந்த சொத்து. எந்த இடத்திலும் நிதானம் இழக்காதவன்.

அவனின் நிதானம் தவறிப்போனது வெண்மதியிடம்  மட்டுமே.

column][/vc_row]

Advertisement