Advertisement

நிலவு – 23 (2)

“அட போங்க தம்பி, கோச்சுக்கிட்டாங்க…” என அவனின் கைகளில் காபியை கொடுத்து சென்றுவிட  அதை குடித்துக்கொண்டே வெண்மதியை தேடி சென்றான். அவனை பார்த்ததும்,

“இப்போ இங்கயும் வந்து வம்பு செய்யனுமா?…” சலிப்பாய் கேட்க அவள் டென்ஷனில் இருப்பதை உணர்ந்தவன் அவளின் பின்னால் வந்து கட்டிக்கொண்டான். அதில் இன்னும் சலித்தவள்,

“இப்போ என்ன?…” என கடுப்பாய் கேட்க,

“ஒன்னும் இல்லை. உங்களை இன்னைக்கு நான் ட்ராப் பன்றேன். நீங்க ரிலாக்ஸா கிளம்புங்க…”

“ஒன்னும் தேவை இல்லை. பேசாம போங்க. எனக்கு போக தெரியும்…” என,

“இங்க இருந்து பஸ்ல எப்டி போவீங்க? கேப் எதுவும் புக் பண்ணிருக்கீங்களா?…” என கேட்டதும் தான் தன்னுடைய ஸ்கூட்டி இன்னும் தங்கள் வீட்டில் தான் இருக்கிறது என்னும் ஞாபகம் வர தலையில் கைவைத்து அமர்ந்துகொண்டாள். அவளின் தலையில் இருந்து கையை எடுத்துவிட்டவன்,

“அவ்வளோ பெரிய கவலை எல்லாம் இல்லை. இன்னைக்கே எடுக்கனுமா என்ன? உங்க அப்பா வீட்டில இருந்து போறதை விட இங்க இருந்து போறதுக்கு கூட பதினைஞ்சு நிமிஷம் ஆகும். வீக்கெண்ட் போய் வண்டியை கொண்டுவர சொல்லலாம்…”

“அதுவரைக்கும் உங்களை நான் எதிர்பார்த்துட்டே தான் இருக்கனும்…” என்றாள் அலுப்புடன். அதற்கும் அவன் சிரிக்க,

“சும்மா சும்மா சிரிக்காதீங்க. எல்லாத்துக்கும் சிரிப்பு தானா உங்களுக்கு?…” என முறைக்க இன்னுமே விரிந்த புன்னகை முரளியின் முகத்தில்.

“இவ்வளோ டென்ஷன் ஆனா மட்டும் உங்க ஸ்கூட்டி அங்க இருந்து இங்க பறந்து வந்துடுமா என்ன? இல்லை தானே? கூல்…” என்றவன்,

“நான் போய் குளிச்சு வரேன். நீங்க வெய்ட் பண்ணுங்க…” என்றுவிட்டு வேகமாய் பாத்ரூமினுள் புகுந்துகொள்ள நேரத்தை பார்த்தாள் வெண்மதி. இன்னும் நிறைய நேரம் இருக்க ஹாலில் வந்து அமர்ந்தாள்.

“என்ன பாப்பா கல்யாணம் முடிஞ்சு மொத தடவையா ஆபீஸு போற, சேல கட்ட வேண்டி தான?. அப்ப தான பூரிப்பா இருக்கும்…” என சொல்ல,

“இப்போவா?…” அவள் யோசிக்க,

“இரு நா போயி உனக்கு பூ வாங்கிட்டு வரேன். புது பொண்ணு வெறுந்தலையோடவா வேலைக்கு போவ?…” என வெண்மதி மறுப்பதற்குள் சென்றுவிட வெண்மதிக்குமே புடவை கட்டினால் என்ன என்று தான் தோன்றியது.

முரளி இன்னும் வராமல் இருக்க அறைக்குள் நுழைந்தவள் வேகவேகமாய் புடவையை கட்ட ஆரம்பித்தாள். முரளி குளித்து முடித்து வர அதற்குள் கட்டி முடித்திருந்தாள்.

விசில் அடித்தபடி வெளியே வந்தவனின் பார்வை அவளை மையம் கொள்ள ஏதாவது சொல்லுவான என்று பார்த்தால் அவனோ வாயை திறக்கவில்லை.

“சிரிச்சவாயன், எதுக்கும் வாய திறக்கமாட்டேன்றான்…” என சத்தமாகவே சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேற அவளின் செல்ல கோபத்தில் தலையை அசைத்து சிரித்தவன் தானும் கிளம்பி வெளியே வர டைனிங் டேபிளில் வெண்மதி அமர்ந்திருந்தாள்.

தளர பின்னப்பட்டிருந்த கூந்தலில் இப்பொழுது வாசமிகு மல்லிகை குடிகொண்டிருக்க முரளியின் மனதை வெகுவாய் மயங்க செய்தது. மனைவியவலை ஆட்கொண்டுவிடும் ஆவல் பிறந்தாலும் ஏனோ தள்ளி நிற்கும் விரதம் பூண்டான்.

சாப்பிடும் பொழுதும் நேரம் மௌனமாய் கரைய வெண்மதிக்கு அவனுடன் செல்லும் ஆசையே அற்றுப்போனது.

“கட்டி அம்பது வருஷம் ஆனவனாட்டம் ஆட்டம் காட்டறான். இதுல லவ் ஒன்னு தான் குறைச்சல்” என்று பொரிந்து தள்ளினாள் மனதினுள்.

எஸ்டேட்டிற்கு கிளம்பும் அன்று இருவரும் முத்தமிட்டுகொண்டது. அதன் பின்னர் சிறு சிறு அணைப்பை தாண்டி இருவரும் நெருங்கவே இல்லை.

வெண்மதியோ அவனே நெருங்கட்டும் என்றிருக்க, முரளி அவளின் உடல் நிலை சரியாகிவிட்டாலும் மனது முழுமையாய் சரியாகட்டும் என்று இருந்தான்.

“போகலாமா?…” என வாட்சை கையில் மாட்டியபடி வந்தவன்,

“கனகாக்கா, இன்னைக்கு லஞ்ச் ஏதும் செய்யவேண்டாம். நாளைக்கு நீங்க வந்தா போதும். இருக்கிற வேலையை மட்டும் முடிச்சுட்டு நீங்க கிளம்புங்க…” என கூற,

“சரிங்க தம்பி, நைட்டுக்கு சாயங்காலம் வந்து செஞ்சு வச்சுட்டு போறேன்…” என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட வெண்மதியை பார்த்தான்.

தனது பொருட்களை எடுத்துகொண்டவள் முன்னாள் நடக்க கார் சாவியுடன் அவள் நடந்துசெல்லும் அழகாய் ரசித்தபடி பின்னால் சென்றான் முரளி. காரை கிளப்பியதும்,

“நீங்க ஈவ்னிங் வர வேண்டாம். நான் கேப் புக் பண்ணி வந்திடறேன்…” என சொல்ல அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு பாதையில் பார்வையை பதிக்க,

“இப்பவே வேண்டாம்னு தான் சொன்னேன். பேச கூட பஞ்சம்னா எதுக்கு வரனும்…” கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அவள் சொல்லிய விதம் முரளிக்கு கஷ்டமாகிவிட,

“சத்தியமா சொல்றேன், உங்களை இப்படி பார்த்துட்டு, ஏதாவது பேசி நீங்க பதிலுக்கு பேசி நாம ஆபீஸ் போகமாட்டோம். இப்படியே உங்களை எங்கையாவது கூட்டிட்டு போய்டுவேன். ஏற்கனவே ரொம்ப நாள் லீவ் எடுத்துட்டீங்க. கூட்டிட்டு போனா எப்போ திரும்ப கூட்டிட்டு வருவேன்னு எனக்கே தெரியாது…”

அவனின் குரலில் என்ன இருந்ததென்றே உணரும் முன்னம் அவன் பேசி முடித்திருந்தான். அவளை அக்குரல் புரட்டி போட அவனை விடாது பார்த்தவளின் பார்வையை கண்டவன்,

“பயந்துட்டீங்களா?…” என்று சிரிக்க முகத்தை திருப்பிக்கொண்டாள் வெண்மதி வெட்கத்துடன்.

“சில முக்கியமான வேலைகள் இருக்கு வெண்ணிலா. இன்னும் ஒரு டென் டேய்ஸ் டைம் குடுங்க. முடிச்சுடறேன். அதுக்கப்றம் நீங்க போதும் போதுமன்ற வரைக்கும் விடாம நிறுத்தாம பேசுவேன்…”

“எப்டி இந்த நீங்க வாங்க போங்கன்னு தானே? போதும் சாமி, பேசவே வேண்டாம்…” என்று அவள் கையெடுத்து கும்பிட அட்டகாசமாய் சிரித்தவன்,

“இடைவெளி குறைஞ்சுட்டா எல்லாமே குறைஞ்சு போகும். காட் இட்…” என்று கண்சிமிட்டி வேற சிரிக்க,

“ஆஹா கவர் பன்றானே, நான் தான் இவனை பார்த்து தடுமாறுறேன். அவன் நல்லா ஸ்டெடி தான்” என்ற பார்வையுடன் வெளியே பார்க்க சிறிது நேரத்தில் அலுவலக வளாகத்தில் நுழைய முரளியுடன் வெண்மதியை சேர்த்து பார்த்தவர்கள் அவர்களை சூழ்ந்துகொண்டனர்.

ஈஸ்வரி மட்டும் அங்கே இல்லை. அவள் டெலிவரிக்கான லீவில் இருந்தாள்.

“நீ ரிஸைன் பண்ணிடுவேன்னு நினைச்சோம் மதி. பரவாயில்லை வந்துட்ட…” என்ற பேச்சுக்களும், வாழ்த்துக்களும் சொல்லி புதுமண தம்பதியை திண்டாட வைக்க,

“உங்க மேரேஜ்க்கு ட்ரீட் கண்டிப்பா குடுக்கனும். எங்க எப்போன்னு சொல்லுங்க…” என சிலரும் பேச ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லும் முன்னர் திணறிப்போயினர்.

“கண்டிப்பா பார்ட்டி உண்டு. எப்போ எங்கன்னு நீங்களே சொல்லுங்க. நாங்க ப்ரீ பண்ணிக்கறோம்…” என முரளி சொல்லவும் அங்கே சந்தோஷ கூச்சல்கள்.

“ஓகே நான் கிளம்பறேன்…” என பொதுவாய் சொன்னவன் மனைவியை பார்க்க அனைவரும் அவனிடம் விடைபெற்று கலைந்துவிட வெண்மதியை பார்த்தவன்,

“வரவா…” என கேட்க அவளும் புன்னகையுடன் தலையசைத்தாள்.

“இனிமே சேரி கட்டாதீங்க. வேற எங்கயும் கான்சன்ட்ரெட் பண்ண முடியலை. என் மைண்ட் என் பேச்சையும், நினைப்பையும், என்னையும் மைண்ட் பண்ண மாட்டேங்குது. உங்களை மட்டுமே பார்க்க வைக்குது…”

என சொல்லி மின்னல் வேகத்தில் காரை கிளப்பிக்கொண்டு செல்ல வெண்மதியின் முகத்தை வெட்க பூசல் தன் வர்ணத்தால் நிறைத்தது.

மாலை வரவேண்டாம் என்று சொன்னாலும் அவனின் வருகைக்காய் காத்திருந்தாள் சொல்லியபடி அவனும் வந்து அழைத்துக்கொண்டான்.

அந்த வார இறுதியில் வெண்மதியின் அலுவலக நண்பர்கள் கேட்டபடி பார்ட்டி ஏற்பாடு செய்துவிட்டான் முரளி.

அதற்கடுத்த நாட்கள் அனைத்தும் இருவரின் பணி சுமை கூடி இருக்க வேலையில் ஆழ்ந்துபோயினர். இதற்கிடையில் விபீஷ் என்னும் ஒருவனை வெண்மதி மறந்தே போயிருந்தாள்.

முரளியின் வாழ்க்கையில் எந்தவித கோபத்தையும் காண்பிக்காத விபீஷின் தலையீடு முரளியின் தொழிலில் பிரதிபலிக்கத்தான் செய்தது. அதுவும் முன்பை விட பலமாய். அடிபட்டு தோற்ற உணர்வு விபீஷை இன்னும் வீறுகொண்டு ஏல செய்திருந்தது.

இதை எதிர்பார்த்திருந்ததால் முரளி முன்பை விட இன்னும் பலமடங்கு கவனமாய் இருக்கவேண்டிய சூழ்நிலை. அவனுக்கு பக்கபலமாய் பரசுராம்.

என்னதான் விபீஷ் ஆயிரம் குடைச்சல் கொடுத்தாலும் முரளி அதனை வீட்டில், வெண்மதியிடத்தில் காண்பித்துக்கொள்ள மாட்டான்.

காத்திருந்து முடிந்த திருமணம் என்பதால் சேர்ந்திருக்கும் மகிழ்ச்சி என்னவென்பதை வெண்மதிக்கு உணர்த்திக்கொண்டே இருந்தான். வாழ்க்கையை அனுபவிக்க கற்றுகொடுத்தான்.

உடலை தாண்டிய உன்னத காதலை வாழ்ந்து பார்க்க வைத்தான். இருவருக்கும் மட்டுமேயான ஒரு உலகத்தில் எந்தவித சஞ்சலத்தையும் அவன் அண்டவிடவில்லை.

அன்று ஈஸ்வரிக்கு தலைபிரசவம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவளை பார்க்கவென அலுவலகத்தில் இருந்து மதியமே கிளம்பிவிட்டவள் அங்கே செல்வதற்குள் குழந்தை பிறந்துவிட்டது. குழந்தையை கையில் வாங்கியவளுக்கு திரும்ப கொடுக்க மனமே இல்லை.

“ஈஸ் அப்டியே உன்னையே உரிச்சு வச்சு பிறந்திருக்கு…” என்று சொல்லி சொல்லி சில்லாகிக்க,

“இம்புட்டு கொஞ்சற நீயும் பெத்துக்க வேண்டியது தான மதி?…” என ஈஸ்வரியின் தாய் சொல்ல வெட்கத்துடன் தலை கவிழ்ந்தவள் பார்வை குழந்தையிடமே இருக்க,

“மதி, எதுவும் விசேசமாடி? ஜொலிக்குது உன் முகம்?…” என கேட்டு இன்னமும் அவளை சிவக்கவைத்தார் அவர்.

“போங்க மாமி…” என்றவள் முரளியை பார்க்க வேண்டும் போல தோன்ற அவனுக்கு அழைத்து அங்கே வந்திருப்பதை சொல்வதற்கு பார்த்தால் அழைப்பு எட்டவே இல்லை அவனை. சலித்தவள் ஈஸ்வரியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

“மழை அடிச்சு ஊத்துது மதி. இருந்து கொஞ்சம் நேரம் கழிச்சு போயேன்…” என அவளை அமர வைத்துவிட மழை கால் மணி நேரத்தில் வெறித்தது.

“நான் கிளம்பறேன் ஈஸ். நாளைக்கு கண்டிப்பா அவரோட வரேன். அம்மாவும் நாளைக்கு வரனும்னு சொன்னாங்க…” என்றவள் குழந்தையையும் கொஞ்சிவிட்டு கிளம்பினாள்.

வெளியில் வந்து ஸ்கூட்டியை உயிர்ப்பித்தவள் வண்டி பாதி வழியிலேயே மக்கர் செய்ய ஆரம்பித்தது.

“போச்சு இது காலை வார போகுது. போற வழியில மெக்கானிக் ஷாப் இருந்தா நிப்பாட்டிட்டு ஆட்டோ புடிச்சாச்சும் போகலாம்…” என புலம்பிக்கொண்டே செல்ல சரியாய் ஆள் அரவமற்ற இடத்தில் வண்டி சுத்தமாய் நின்றுவிட மீண்டும் தூறல் வலுக்க ஆரம்பித்தது.

“மழையுமா? போன் கூட வெளில எடுக்க முடியாதே. சத்திய சோதனை…” என புலம்பியபடி ஸ்கூட்டியை ஓரம்கட்டியவள் ஆட்டோ எதுவும் வருகிறதா என பார்த்தாள்.

மாலை நேரம் தான்.வெளிச்சம் நன்றாய் இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையோடு தான் இருந்தாள் வெண்மதி. ஒரு ஆட்டோவும் நிற்காமல் போக அரைமணி மணி நேரம் கழித்து ஒரு கார் அவளை உரசியபடி வந்து நிற்க யாரென்று பார்த்தாள்.

வந்திருந்தது விபீஷ். அடுத்த சில நிமிடங்களில் விபீஷின் காரில் வெண்மதி சென்னைக்கு வெளியே செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்தாள்.

விபீஷின் இதழ்களில் வெற்றி புன்னகை. அதனை துட்சமாய் பார்த்தபடி வெண்மதி.

Advertisement