Advertisement

நிலவு – 23 (1)

         இரவு உணவிற்கு சரியாக எஸ்டேட் வந்து சேர்ந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு வெண்மதி கண்ணை மூடியது மட்டும் தெரியும். எப்பொழுது மாலை ஆனது என்று கூட தெரியாமல் நன்றாய் உறங்கிவிட்டாள்.

மாலை ஒரு இடத்தில் டீ குடிப்பதற்காக காரை நிறுத்தவும் தான் கண் விழிக்கவே செய்தாள். தலை வலி மண்டையை பிளக்க உடல் வேறு அசதியாய் இருந்தது.

“முரளி…” என்றழைத்தவளின் குரலில் தெரிந்த சோர்வில் அவளின் முகம் பார்த்தவன்,

“உடம்புக்கு முடியலையா வெண்ணிலா?…” என்றான்.

“ரொம்ப தலை வலிக்குதுப்பா. மெடிக்கல் ஷாப் பார்த்தா நிறுத்துங்களேன். பெய்ன் கில்லர் பில்ஸ் வாங்கிப்பேன்…” என்றதும் தேடி சென்றவன் அவளுக்கு தேவையானதை வாங்கி வந்து டீ குடிக்க நிறுத்தினான்.

“ட்ரிப்பை கேன்சல் பண்ணிடலாமா?…”

“அச்சோ அதெல்லாம் வேண்டாம். கிளம்பி இவ்வளோ தூரம் வந்துட்டோம். இன்னும் கொஞ்சம் நேரம். மாத்திரை போட்டு லேசா தூங்கினா போதும்…” என அவனை சமாதானம் செய்ய,

“ஓகே பின்னால போய் படுத்துக்கோங்க. உட்கார்ந்தே வரது கூட டயர்டா இருக்கும்…” என்று அவளை பின்னால் அனுப்பிவிட்டு காரை ஓட்டினான். மாத்திரையின் வேகத்தில் வெண்மதியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பின்னர் தான் காரின் வேகத்தை கூட்டினான்.

இரவு பத்து மணியை போல அவர்கள் வீட்டை அடைந்ததும் தான் வெண்மதி கண்விழித்தாள். சுகன்யாவும், ஆனந்தனும் வெளியே வர இருவரிடமும் நலம் விசாரித்ததும் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டே உண்டு முடித்தவர்கள் அதன் பின் உறங்க செசென்றனர்.

பரந்துவிரிந்த தேயிலை தோட்டத்திற்கு நடுவே மரத்தால் ஆனா சிறு வீடு. ஒரு ஹால், கிட்சன், இரண்டு படுக்கையறை கீழ் ஒன்றும், மாடியில் ஒன்றுமாய் இருக்க கார் நிறுத்த பரந்துவிரிந்த இடம் என்று கட்சிதமாய் இருந்தது அந்த வீடு.

குளிர் வேறு உடலை துளைத்தது. மழை வேறு மிதமாய் தூறுவதால் சுகன்யா ஏற்கனவே குளிக்க வேண்டாம் என்று சொல்லியதற்கிணங்க முகம், கைகால் மட்டும் கழுவிவிட்டு இரவு உடையில் வந்து படுத்தவளுக்கு அப்பொழுதுதான் உடலின் மாற்றமும், வலிக்கான காரணமும் புரிய சோர்வுடன் குறுகி படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

பரசுராமிற்கு அழைத்து சிறிது நேரம் பேசிய முரளி வர நான்கு நாட்கள் அஆகும் என்பதை மீண்டுமாய் நினைவுபடுத்திவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு வந்து பார்க்க வெண்மதியின் முகம் அவனுக்கு யோசனையை பிறப்பிக்க அருகில் சென்று பார்த்தான்.

“வெண்ணிலா…” என்ற அழைப்பிற்கு சிறு முனங்கல் தான் அவளிடம்.

குளிர் சேரவில்லையோ என்று நெற்றியில் கை வைத்து பார்த்தவன் காய்ச்சல் அடிக்கும் அறிகுறிகள் எதுவுமில்லாது கண்டு நிம்மதியானவன் அவளின் புருவ சுருக்கத்திலும், அடிவயிற்றை பிடித்துக்கொண்டு படுத்திருக்கும் விதத்திலும் எதுவோ புரிபட முகம் கவலையானது.

“ரொம்ப வலிக்குதாம்மா…” என்றான் மென்மையாய் அவளின் தலை கோதி. அவன் கேட்டது காதில் விழ இல்லை என்ற தலையசைப்பை கொடுத்தாலும் முகம் காட்டிக்கொடுத்தனவே.

கீழே இறங்கி சென்றவன் அதற்கு என்ன கொடுப்பதென்று தெரியாமல் இங்குமங்கும் நடந்து பின் மொபைலில் அதற்கான வழியை தேட அவனின் நடமாட்டத்தை உணர்ந்தவராய் சுகன்யா வெளியே வந்தார்.

“என்ன முரளி தூங்கலை?…” என்று திடீரென தாயின் குரல் கேட்டதும் திரும்பி பார்த்தவன்,

“வந்தும்மா, கபி குடிக்கனும் போல இருந்தது அதான்…” என சமாளிக்க,

“நீயா? இப்போ குடிக்க மாட்டியே?…” என்றவர்,

“வெண்மதிக்கா? ஏன் முடியலையா? நினைச்சேன், வரப்பவே அவ முகமே டல்லா இருந்தது. சரியா சாப்பிட கூட இல்லை…” என அவராகவே பேசி வேகமாய் பாலை எடுத்து காய்ச்ச,

“ம்மா, ம்மா…” என்றவன் சங்கடமாய் நெளிந்து பின்,

“ம்மா, வெண்மதிக்கு ஸ்டமக் பெய்ன். ரொம்ப வலிக்குது போல. என்ன குடுக்கனும்னு தெரியலை…” என ஒருவழியாய் சொல்லிவிட அவனின் தடுமாற்றத்தில் மெலிதாய் புன்னகைத்தவர்,

“பொண்டாட்டியோட வலியை புரிஞ்சுக்கற புருஷன் கிடைக்க மதி குடுத்து வச்சிருக்கனும். அந்த விதத்துல உன்னை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு முரளி. அதே மாதிரி எனக்கு என் மகனும் குடுத்து வைச்சிருக்கனும்னு நான் சொல்லனும். அது உன் பொண்டாட்டி கைல தான் இருக்கு…”

“ம்மா, இப்ப இது பேசற நேரமா?…” என்றான் அவஸ்தையாக.

“சரி சரி. மாத்திரை எதுவும் போட்டாளா…”

“என்கிட்ட சொல்லவே இல்லை. வந்து படுத்துட்டாங்க. நானா தான் கெஸ் பண்ணேன். வேற டேப்லெட் எதுவும்…” என்றதற்கும் புன்னகைத்தவர்,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஒரு நாளைக்கு எத்தனை பெய்ன் கில்லர் போடறது? இந்தா இந்த பாலை குடிக்க வை. தூங்கட்டும் ட்ராவல் பண்ணது வேற இன்னும் கஷ்டமா இருக்கும்…” என்றவர் இதமான சூட்டில் பனைவெல்லம் கலந்து ஆற்றி இருவருக்குமாய் கொடுக்க,

“எனக்கு வேண்டாம்மா…”

“அதெல்லாம் குடிக்கலாம். போ உன் அப்பா வேற எழுந்திடாம. பின்ன நான் தூங்கின பின்னால ரகசியம் பேசறீங்க அம்மாவும், பிள்ளையும்னு முறுக்க ஆரம்பிச்சுடுவாரு…” என்று சிரிக்கவும் முரளியும் சிரித்தபடி சென்றான்.

அறைக்கு சென்றதும் வெண்மதியை அமரவைத்து பாலை கொடுக்க வாங்கி குடித்தவள் மீண்டும் அப்படியே படுத்துக்கொள்ள அவள் நன்றாய் தூங்கியதியா உறுதிப்படுத்திய பின்பே முரளியும் உறங்க ஆரம்பித்தான்.

இது போன்ற சமயங்களில் விடிவதற்குள்  எழுந்து குளித்துவிடும் பழக்கம் வெண்மதிக்கு எப்பொழுதுமே உண்டென்பதால் குளித்துவிட்டு வந்து மீண்டும் படுத்துக்கொள்ள அவள் எழுந்ததும் தெரியாது, படுத்ததும் தெரியாது முரளி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

கார் ஓட்டிவந்த களைப்பு அவனை அடித்துபோட்டதை போல உறங்க வைத்திருக்க எட்டு மணி போல மீண்டும் எழுந்தவள் கீழே வந்தாள்.

அங்கே ஆனந்தன் மட்டுமே இருக்க அவரை பார்த்தும் கடந்துபோக முடியாமல் அவளாகவே சென்று,

“குட்மார்னிங் மாமா…” என அவளை நிமிர்ந்து பாராமல் கடிகாரத்தை மட்டும் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொள்ள,

“பதிலுக்கு குட்மார்னிங் கூட சொல்ல முடியலை…” என்ற முனங்கலுடன் வெண்மதி நகர,

“இந்தா பொண்ணு, உன்கிட்ட நான் ஏன் குட்மார்னிங் சொல்லனும்? நான் கேட்டேனா நீ சொல்லுன்னு?…” என கோபத்துடன் கேட்க,

“என்னங்க என்ன இது?…” என வேகமாய் சுகன்யா வர,

“குட்மார்னிங் அத்தை…” என்றாள் வெண்மதி வேண்டுமென்றே.

“ஆஹ் குட்மார்னிங் மதி…” என்றவர் கணவரின் கோபப்பார்வையை பார்த்துவிட்டு,

“இதெல்லாம் ஒரு மரியாதை தான?…” என்றார் மீண்டும் கவனமின்றி.

“அப்பா மாமியாரும், மருமகளும் எனக்கு மரியாதை தெரியலைன்னு சொல்றீங்களா?…” என எகிற ஆரம்பிக்க,

“குட்மார்னிங் அப்பா…” என்று வந்தான் முரளி இதை எதையுமே தெரியாமல். அவனையும் முறைத்தவர் மூவரையும் கடுப்பாய் பார்க்க சுகன்யாவும், வெண்மதியும் நமுட்டு சிரிப்பு சிரிக்க,

“குட்மார்னிங் ஆனந்தா…” என்று வந்தார் ஆனந்தனின் பால்ய சிநேகிதர். அவருக்கு சொல்வதா வேண்டாமா என்ற யோசனையில் ஆனந்தன் நிற்க,

“ஏன்டா விஷ் பண்ணினா திரும்ப பண்ண கூடவாடா உனக்கு சொல்லித்தரனும்? வயசானா இது கூட மறந்துடுச்சு உனக்கு. நீ இங்க வரப்ப நா என் மாகன் வீட்டுக்கு போயிருந்தேன். நேத்து தான் வந்தேன். இப்ப உன்னை பாக்க கிளம்பி வந்தா உன்கிட்ட ஒரு குட்மார்னிங்க்கு பஞ்சமா போச்சு…” என்று சொல்ல,

“இப்ப இது ரொம்ப முக்கியமா?…” என சொல்லியவர் மனைவியை பார்க்க அங்கே மற்ற மூவரும் சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு இவரை பார்த்தனர்.

“காபி…” என பல்லை கடித்துக்கொண்டு சொல்ல சுகன்யாவும் வெண்மதியும் காபி போட செல்ல முரளி அவர்களுடன் சேர்ந்து அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் காபி வரவும் அனைவரும் சேர்ந்து பேசிக்கொண்டே காபியை குடிக்க வெகு வருடங்களுக்கு பின்னான ஒரு நிறைவு தாய், தந்தை, மகன் மூவரின் மனதையும் நிறைத்தது என்றால் மிகையாகாது.

காலை உணவை முடித்துக்கொண்டு ஆனந்தன் தன் நண்பருடன் வெளியே செல்ல வெண்மதியுடன் சுகன்யா மதிய உணவுக்கு என்ன செய்யலாம் என்ற பேச்சு வார்த்தையில் இறங்க அந்த பேச்சுக்கள் முடிந்து அதற்கு மறுநாள் சுகன்யா ஆனந்தன் இருவரின் திருமண நாளை எப்படி கொண்டாடுவது என பேசிக்கொண்டனர்.

வெண்மதிக்கு அடுத்த மூன்று நாட்களும் எப்படி சென்றது என்றே தெரியாத வகையில் இனிமையான நினைவுகளை அள்ள அள்ள குறையாது தந்தனர் அந்த குடும்பத்தினர்.

அதிலும் சுகன்யா முன்பிருந்த மனச்சுணுக்கங்கள் மறைந்தவராக அவளை தாங்க இருவருக்குமான அன்பு அதிகரித்தது.

திருமணத்தின் முந்தைய நிகழ்வுகள் தாங்கள் எப்படி இருந்தோம், எங்கே, என்ன வெளிய, முரளியின் முன்னேற்றம், விபீஷின் உதவி, அதன் பின்னான கஷ்டங்கள் என்று அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்துகொண்டார்.

அங்கிருந்து மனமே இல்லாமல் கிளம்பியவளை புன்னகையுடன் பார்த்தான் முரளி. அவனுக்குமே அவளின் வருத்தம் புரிந்தாலும் வேறு வழி இல்லையே.

“இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு திரும்ப வருவோம் வெண்ணிலா…” என்னும் உத்தரவாதத்துடன் அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான் அவன்.

சுகன்யாவும், ஆனந்தனும் இன்னும் சிறிது நாட்கள் கழித்து வருவதாக சொல்லி விட சென்னையில் மீண்டும் அவர்களின் இயல்புவாழ்க்கை ஆரம்பித்தது.

ஊரிலிருந்து வந்த அன்று வெண்மதியே சமைக்க வழக்கம் போல அது உப்மாவாக இருக்க மறுக்காமல் உண்டான் முரளி. வந்த அலுப்பு தீர நன்றாய் உறங்க அன்று அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் வெண்மதி அலாரம் வைத்து எழுந்துகொண்டாள்.

“இப்ப கிளம்ப ஆரம்பிச்சா தான் கரெக்ட் டைம்க்கு ஆபீஸ் போல முடியும். இல்லை அந்த பல்ப் என்னை எரிச்சிடும். இத்தனை நாள் லீவ் வேற…” என புலம்பியபடி குளிக்க உடமைகளையும், அலுவலகம் செல்ல தேவையானவற்றையும் எடுத்து வைத்தாள்.

காபி போடலாம் என கிட்சனுக்குள் நுழையவிருக்க வாசலில் அழைப்பு சத்தம் கேட்ட கதவை திறந்தாள் கனகா நின்றுகொண்டிருந்தார்.

“ஹப்பாடா கனகாக்கா…” என்றவள் அவருக்கு வழிவிட்டு சென்று விட கிட்சனுக்குள் நுழைந்த கனகாவிற்கோ தலைசுற்றி தான் போனது.

“இந்தம்மா சமைச்சாங்களா இல்லை சண்டை போட்டாங்களா? ஒரு உப்மாவுக்கா இந்த பாடு. தம்பி பாவம்…” என்றெண்ணி கொண்டே முதலில் காபியை தயாரிக்க ஆரம்பித்தார்.

இன்னைக்கு என் காபி கொடுமையிலிருந்து நானே தப்பிச்சேன் என்ற நிம்மதி வெண்மதிக்கு. காபியை குடித்துவிட்டே குளிக்க செல்லலாம் என முகம் கழுவி கடமைகளை முடித்துவிட்டு வர,

“ஆபீஸ் கிளம்பிட்டீங்களா பாப்பா. மதியத்துக்கும் கொண்டு போக செய்யனுமா?…” என்ற கனகாவிடம்,

“இன்னைக்கு லஞ்ச் வேண்டாம். லேட் ஆகிடும். நீங்க இப்போ சமையலை பாருங்க…” என்று அனுப்பிவிட்டு காபியை ரசித்து குடிக்க ஆரம்பித்தாள்.

கிட்சனை சுத்தம் செய்து காலை டிபன் தயாராவதற்குள் வெண்மதி குளித்து வந்துவிட அப்பொழுதுதான் முரளி எழுந்து வந்தவன் கனகாவை கண்டதும்,

“என்னக்கா, கிட்சன் போராட்டம் முடிஞ்சதா?…” என்று கிண்டலாய் கேட்க அவன் என்ன கேட்கவருகிறான் என்று புரிந்த கனகா,

“ஐயோ தம்பி சும்மா இருங்க. பாப்பா காதுல விழ போகுது…” என பதற வெண்மதி அவனுக்கு பின்னே வந்து நின்றாள்.

“அக்காவுக்கு இப்போ இவ்வளோ கவலைபடறவருக்கு நேத்தே தெரிஞ்சிருக்கனும். இப்ப வந்து ஐயோ பாவம்னா நீங்களே எழுந்து செஞ்சிருக்க வேண்டியதானே?…” என முறைத்துக்கொண்டே தலையை உலர்த்த சென்றுவிட வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

Advertisement