Advertisement

நிலவு – 2(2)

சிரிப்போடு அவள் முகத்தில் அசடு வழிய சொல்ல,

“அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ ஆபீஸ் கிளம்ப ஆரம்பி. அப்பத்தான் சரியான நேரத்துக்கு போகமுடியும். நித்தமும் சொல்றேன். கேட்டா தானே பூனாபூனான்னு கிளம்புவ…” சொல்லி சென்றவரை முறைக்க முயன்று உதட்டை சுழித்துக்கொண்டாள்.

ஆம், வெண்மதி எங்காவது கிளம்ப வேண்டுமென்றால் அவளிடம் அத்தனை நிதானம் இருக்கும். நிதானத்திற்கே பொறுமை போய்விடும் அளவுக்கு நிதானம்.

காலை அலுவலகம் கிளம்புவதற்கு மட்டுமல்ல வெளியில் எங்காவது செல்ல வேண்டுமென்றாலோ விசேஷங்களுக்கு செல்ல வேண்டுமென்றாலோ கூட அப்படித்தான். இரண்டு மணிநேரத்திற்கு முன்பே கிளம்ப தொடங்கினால் மட்டுமே சரியாக சென்று சேர்வாள்.

வேலை என்று வரும் பொழுதும் இதே நிதானம் அவ்வப்போது எட்டிப்பார்க்க அங்கே வாங்கிக்கட்டி கொள்ளும் பொழுது கூட இனி இப்படி செய்ய கூடாது என்று நினைக்கவே மாட்டாள்.

ஈஸ்வரி கூட கேட்பாள். “ஏன்டி இந்த திட்டி திட்டுறான். கழுவி கழுவி ஊத்தறான். எதுமேலையோ மழை பெய்ஞ்சது மாதிரியே நின்னுட்டு இருக்க?…” என்றால்,

“எருமைனே சொல்லேன். அதுக்கென்ன ரிஸ்ட்ரிக்ஷன்? அவன் திட்டுனதை நான் முழுசா கூட கேட்கலை. அதுக்குள்ளே வேகவேகமா திட்டிட்டு போய்ட்டான். டாக்…”

வெகு இலகுவாக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவாள். ஈஸ்வரிக்கு தான் மண்டை காயும்.

“உன்னால தான் ஈஸியா இதை எல்லாம் சால்வ் பண்ண முடியுதுல. அப்பறம் எதுக்கு அவன் பிபியை எகிற வச்சு கடைசி நேரத்துல அவசர அவசரமா முடிச்சு குடுக்க? முதல்லையே முடிக்கிறதுக்கு என்னவாம்? திட்டு மிச்சமாகறதோட உன்னை அப்ரிஷேட் பண்ணுவாங்கல. இப்படி எல்லார் முன்னாடியும் வாங்கிக்கட்டனுமா?…”

“ஈஸு, முதல்லையே முடிச்சு குடுத்துட்டா இதோட அருமை அந்த சொட்டைக்கு தெரியாமலே போய்டுமே. காத்திருந்து வாங்கிக்கிற சுகமே தனி இல்லையா? அது என்னன்னே தெரியாம போய்டுமே சொட்டைக்கு. திட்டுவாங்கறோமோ, கொட்டு வாங்கறோமோ நாமன்னா கொஞ்சமாச்சும் உதறல் இருக்கனும். இதனாலையே இங்க சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் நானா தானே இருக்கேன். எதையும் பாஸிட்டிவா பாரு ஈஸு…” என கண்ணடிப்பாள் வெண்மதி.

“உன் வியாக்யானத்துல தீயை வைக்க. ஆனாலும் உனக்கு இருக்கிற அழுத்தம் இருக்கு பாரு. ஆகாதுடி…”

ஈஸ்வரிக்கே திருப்பி படிக்கும் வெண்மதியை அதற்கு மேலும் திட்டமுடியாமல் முறைத்துவிட்டு செல்ல வெண்மதிக்கு அவளை மலை இறக்குவதே பெரும் வேலையாகிவிடும்.

அதை நினைத்து புன்னகைத்துக்கொண்டவள் மிக மெதுவாய் காபியை ரசித்து ரசித்து குடித்து முடித்து அதன் பின் கிளம்ப ஆரம்பித்தாள்.

இத்தனைக்கும் பெரிதாய் எந்த மேக்கப்பும் இல்லை. ஒரு காட்டன் சுடிதார் அணிந்து முகத்தில் மெல்லிய ஒப்பனையும் உதட்டிற்கு லேசாய் லிப்ஸ்டிக்கும் பூசி போனிடெய்ல் போட்டு கிளம்ப இத்தனை நேரம்.

இதோ அதோவென ஒருவழியாய் ஒப்பனைகளை முடித்து கிளம்பினாள்.

கலைவாணி சொன்னது போல இரண்டுமணி நேரத்திற்கும் மேல் ஆக்கியவள் அறையை விட்டு வெளியே வர நடேசன் அவளுக்காக காத்திருந்தார்.

“வாம்மா சாப்பிடலாம்…” என்றதும் சிரித்துக்கொண்டே அருகில் அமர்ந்தவள்  வேகமாய் இடியாப்பத்தை எடுத்து தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“மதியத்துக்கு ரெடி பண்ணிட்டேன். மறக்காம சாப்பிடு. ப்ரெண்ட்ஸ் கூப்பிட்டாங்கன்னு நீ பாட்டுக்கு பன்னு கடைக்கும், வட்டரொட்டி கடைக்கும்  போய்டாத…”

நொட்டென லஞ்ச் பாக்ஸை அவளருகில் டேபிளில் வைத்தவர் கணவனை கவனிக்க ஆரம்பிக்க,

“அம்மா அது பர்கர், பன்னு இல்லை. ரொட்டி இல்லை பிட்ஸா…” ஊடவே வெண்மதி திருத்த,

“எனக்கு இப்படித்தான் சொல்ல வரும்…” என்றுவிட்டு தானும் ஒரு தட்டை வைத்து சாப்பிட ஆரம்பித்தார்.

உண்டு முடித்த வெண்மதி இன்னொரு டிபன் பாக்ஸில் இடியாப்பத்தையும் சொதியையும் நிரப்பியவள்,

“அம்மா எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இதோட தேங்காய் பாலும் சேர்த்து வைங்கன்னு. கேட்கறதே இல்லை. எனக்கு பிடிச்சு இங்க எதுவும் செய்யறதில்லை…”

என்றுமில்லாமல் இன்று வாய்தவறி கவனமின்றி உளறிய வெண்மதியை அதிர்ந்து பார்த்தார் கலைவாணி. நடேசனுக்கோ தொண்டையில் முள் சிக்கிய நிலை.

தான் செய்த மடத்தனைத்தை எண்ணி நொந்தவள் நொடியில் சுதாரித்து கலைவாணியின் முகம் பாராமல்,

“நான் ஈஸுக்கு இதை குடுத்துட்டு அப்படியே ஆபீஸ் கிளம்பறேன். ஈவ்னிங் லேட் ஆகும். கால் செய்யறேன்…” என சொல்லி அவர்களின் முகத்தை கூட பார்க்காமல் வெளியேற கலைவாணியின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.

மற்ற நேரமாக இருந்தால் ஈஸ்வரிக்கு எடுத்து செல்வதை கண்டிப்பாக சண்டையிட்டு வெண்மதியை திட்டி இருப்பார்.

“ஏன் அவ அம்மா ஆக்கி கொட்டமாட்டாளாமா? நீ தான் இங்க இருந்து அவளுக்கு சுமந்துட்டு போகனுமா?…” என வரிந்துகட்டியிருப்பார். இன்று வாயடைத்து போனார்.

“ப்ச் அழாதே. கலை…” நடேசன் தேற்ற,

“பாருங்க, எப்படி சொல்லிட்டு போறான்னு. குத்தி காமிச்சுட்டா…” என்று மேலும் அழ,

“பேசட்டும் கலை. இப்படி பேசினாலாவது அவளுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்னா பேசட்டும். அவ பேசாம, எதுவுமே நடக்காத மாதிரி  நம்மோட சகஜமா இருக்கறதே இன்னும் உறுத்தலா இருக்கே நமக்கு. முதல் முதலா அவ மனச வெளிப்படுத்தி இருக்கா. அதுவே போதும்…”

“என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, என்னால தாங்க முடியலை. புத்திகெட்டு போய் பேசிட்டு இன்னைக்கு இத்தனைவேதனை படறேன்…”

“தாங்கித்தான் ஆகனும். நாம ஒன்னு நினைச்சோம் ஆனா அது அவ பார்வைல வேற மாதிரி ஆகிடுச்சு. தப்பு நம்ம மேலையும் இருக்குல. தாங்கிப்போம். சும்மா வெளிப்பார்வைக்கு அவ இயல்பா இருக்கிறது மாதிரி வழக்கமா நடந்துக்கறா. ஆனா நமக்கு தெரியாதா நம்ம பொண்ணை பத்தி…”

அந்நிகழ்வுக்கு பின் அனைத்தும் வெறுமையாக தான் இருந்தது வெண்மதிக்கு. எதிலும் பற்றிலா தன்மை. எங்கே பைத்தியமாகிவிடுவோமோ என அவளே அஞ்சி அதை மறக்க தன் வழக்கமான வழக்கத்தில் தன்னை இன்னும் தீவிரமாக்கிக்கொண்டாள்.

தன் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இன்றி இயல்பாக இருப்பதாக காட்டிக்கொள்ள அதிக கவனமெடுக்க மற்றவர்களுக்கு அது தெரியாமல் போனாலும் நடேசனுக்கும், கலைவாணிக்கும் நன்றாகவே புலப்பட்டது அவளின் கவனம்.

வேதனையோடு அதனை ஏற்றுக்கொண்டவர்கள் அவளுக்காக தாங்களும் அப்படியே இருப்பதாக காட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.

அலுவலகம் முடித்து காபி ஷாப் செல்ல அங்கே அவளுக்கு முன் காத்திருந்தான் ஹரிஹரன்.

“வாங்க ஹரிஹரன், வந்து ரொம்ப நேரம் ஆச்சா?…” என்றபடி அவனெதிரில் அமர்ந்தவள் பேரரை அழைத்து இருவருக்குமாக காபி ஆடர் செய்துவிட்டு திரும்பினாள்.

“உங்க ஹெல்ப் நான் மறக்கவே மாட்டேன் ஹரிஹரன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்…”

அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, நிறைவு, நிம்மதி என இன்னும் இன்னும் சில உணர்வுகள் கூட.

அதை ஒரு புன்னகையோடு பார்த்திருந்தவன் இருக்கையில் பின்னால் சாய்ந்து அமர்ந்தான்.

“இதுக்கெதுக்கு தேங்க்ஸ்?. உண்மையை சொல்லனும்னா எனக்கு உங்களை பிடிச்சிருந்தது. நீங்க வந்து இந்த ப்ரபோஸல் வேண்டாம்னு சொல்லும் போது கூட அவ்வளவு கோபம் தான். மிஸ் பண்ணனுமேன்னு ஒரு எரிச்சல் கூட…”

அவன் சொல்ல வருவது என்னவென கவனித்து பார்க்க ஆரம்பித்தாள்.

“ஆனா இன்னொருத்தரை நீங்க விரும்பறப்போ நான் எப்படி உங்களை போர்ஸ் பண்ண முடியும்? என்னால உங்களை புரிஞ்சிக்க முடிஞ்சது…” என்று முடிக்க,

“தேங்க்ஸ் அகைன்…” என்றாள் வெண்மதி.

“ப்ரெண்ட்ஸ்…” அவன் கை நீட்ட ஒரு நொடி தயங்கியவளை பார்த்து,

“அட ப்ரெண்ட்ஸ்னு தானங்க சொன்னேன். இஷ்டம் இல்லைனா வேண்டாம்…” தன் கையை பின்னால் இழுத்துக்கொள்ள வெண்மதி கையை நீட்டினாள்.

“ப்ரெண்ட்ஸ்…” என.

சிரித்துக்கொண்டே அவளின் கையை கொடுத்தவன் மரியாதையோடு குலுக்கிவிட்டு,

“தேங்க்ஸ்…”என்றான் ஹரிஹரன் அவனது நட்பை ஏற்றுகொண்டதற்காய்.

என்னவென புருவம் உயர்த்தி அவனை வெண்மதி பார்த்த விதமே அத்தனை அழகாய் இருந்தது.

“உங்க வீட்ல உங்க லவ்வை சொல்லி வெட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க வெண்மதி. இன்னும் எத்தனை நாள் இப்படியே சமாளிக்கிறதா இருக்கீங்க?…” அவனின் கேள்வியில் சற்று திணறியவள்,

“ஹ்ம்ம் சொல்லனும். சொல்லிடுவேன்…” கொஞ்சம் குரல் உள்ளடங்கி இருந்தது வெண்மதிக்கு.

“எங்க வீட்ல என்ன சொன்னாங்க?, எதுவும் கேட்கலையான்னு என்னை கேட்க மாட்டீங்களா?…” அவனே மீண்டும் கேட்க,

“வந்து, நீங்களே சொல்லிடுங்க…” சுவாரஸியம் இன்றி பேசியவளின் மனதில் நமைச்சல் மண்டியது.

தன்னுடைய திருமணம் பற்றி அவன் பேசியதுமே அங்கிருந்து எப்போதடா கிளம்புவோம் என்று ஆனது வெண்மதிக்கு.

“ஒண்ணுமில்லை, நீங்க சொன்ன பொய்யை தான். அதை தான் நானும் சொல்லிருக்கேன்…” என்றதும் தூக்கிவாரி போட்டது வெண்மதிக்கு.

“என்ன என்ன பொய்? யார்க்கிட்ட சொன்னேன்? நான் என்ன பொய் சொன்னேன்?…” படபடப்பானது.

“ரிலாக்ஸ் வெண்மதி. எதுக்கு இவ்வளோ டென்ஷன்? ஐ மீன் நீங்க சொன்னதை நான் பொய்யா சொல்லிட்டேன். அதாவது நான் வேற ஒரு பொண்ணை விரும்பறதா. அந்த பொண்ணுக்கு சில கடமைகள் இருக்கு. முடியவும் மேரேஜ் பண்ணிக்கறதா. அதத்தான் மீன் பண்ணினேன்…”

ஹரிஹரனின் பேச்சில் கொஞ்சம் ஆசுவாசமானவள் அங்கிருந்த தண்ணீரை எடுத்து வேகவேகமாய் பருகினாள். அவளையே பார்த்திருந்தவன்,

“இப்போ க்ளீனா இருக்கா? ஏன் சடனா ஜெர்க் ஆகிட்டீங்க? நீங்க என்ன என்கிட்டே பொய்யா சொல்லிட்டீங்க?…” என்றதும் அவனை முறைத்தவள்,

“உங்ககிட்ட நான் ஏன் பொய் சொல்லனும்? நான் ஒருத்தரை விரும்பறேன். மனப்பூர்வமா உயிருக்குயிரா விரும்பறேன். எனக்கு மேரேஜ்னு ஒன்னு நடந்தா அவரோட தான். அவரோட மட்டும் தான். முரளியை தான் நான் விரும்பறேன்…”

கொழுந்து விட்டெரிந்த கோபத்தில் பொங்கியவள் அவனிடம் பொரிந்து தள்ளினாள்.

“அப்போ அவரை இன்ட்ரோ பண்ணிவிடுங்க. நாம தான் இப்போ ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே?…” கொஞ்சமும் அலட்டலின்றி கூலாக அவன் கேட்க அவ்வளவுதான். எங்கிருந்த வந்ததோ அவ்வளவு ஆவேசமும்.

“மண்ணாங்கட்டி, நீயும் உன் ப்ரண்ட்ஷிப்பும்…” என்று மரியாதையை தள்ளிவைத்து திட்டி எழுந்துகொள்ள,

“காபி…” என்றான் விடாமல்.

இத்தனை பேசியும், திட்டியும் அவனின் முகத்தில் தெரிந்த சிரிப்பில் வெகுண்டவள்,

“அதை உன் தலையில கொட்டிக்கோ. வந்துட்டான்…” என்று சொல்லி செல்ல ஹரிஹரனின் புன்னகை குறையவே இல்லை.

“யப்பா, சரியான காரம்…” என சிரித்துக்கொண்டான்.

வேகமாய் அங்கிருந்து கிளம்பிய வெண்மதிக்கு கோபம் கட்டுகடங்காமல் பெருகியது. தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வந்தவள் ஆள் அரவமற்ற இடத்தில் நிறுத்தி அதன் மீதே கவிழ்ந்து படுத்தாள்.

முதல் நாளில் இருந்து மன உளைச்சலில் இருந்தவள் அன்றைய உச்சகட்ட அலைப்புறுதலில் வெகுவாய் துவண்டு போனாள்.

கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

Advertisement