Advertisement

நிலவு – 2(1)

தனக்கு மட்டும் கேட்ட அந்த குரலில் திசையை பார்த்தாள் வெண்மதி. பிரம்மை தான் ஆனாலும் மனம் குளிர்ந்து. கண்களுக்கு அத்தனை இதமாய் சுகமாய் இருந்தது.

இது உண்மையாக இருந்து விடகூடாதா? என்று உள்ளம் கிடந்து அடித்துக்கொள்ள சோபாவில் சென்று அமர்ந்தாள் வெண்மதி.

அவனே அருகில் இருப்பதை போன்ற ஒரு பிம்பம். கண்ணில் நீர் அருவியென பெருக்கெடுக்க அசையாமல் பார்த்திருந்தாள்.

ஒரு நொடி விழி மூடி திறக்க அவ்விடம் வெற்றிடமாக இருந்தது. வலித்தது.

இங்கே தான் அமர்ந்திருந்தான். இப்படித்தான் என்னை பார்த்தான். முதல் பார்வையிலேயே பிடித்ததா என்றால் நிச்சயம் இல்லை என்றும் சொல்லமுடியாது. கொஞ்சம் பிடித்துத்தான் இருந்தது.

ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவன் மீதான பிடித்தம் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டுதான் இருந்தது.

அவனின் சீண்டல் பார்வை முதல் கள்ளப்புன்னகை வரை ஒவ்வொன்றையும், அவனோடு தான் கழித்த ஒவ்வொரு நொடிகளையும் உயிருக்குள் பாதுகாத்து வருகிறாள் அவனுக்குமே தெரியாமல்.

அவனைவிட்டு விலகிய பின்னான நாளில் வீதியிலும் பாதையிலும் எப்படியாவது அவனை பார்த்துவிடமாட்டோமா என தேடாத நாளுமில்லை, அவனை சந்தித்திடவே கூடாதெனும் பிராத்தனைகளும் நெஞ்சில் ஓயவில்லை.

அவனை பிடிக்கும். அவனை மட்டும் தான் பிடிக்கும். ஆனால் வேண்டாம். ஜபம் போல் நித்தம் நித்தம் இதை ஒப்பித்துக்கொண்டுதான் இருக்கிறாள். புத்தி ஏற்றுகொண்டாலும் இதயமது மாட்டேன் என்று அடம் பிடித்தது.

அவளின் வறட்டு பிடிவாதம் அதையும் கடந்துதான் வந்தது. வேண்டுமென்றே அவனின் வாழ்வில் இருந்து தன்னை தொலைத்துக்கொண்டாள் அவன் தேடவேண்டாம் என.

ஆனாலும் அவனை தினம் தினம் எதிர்பார்க்கத்தான் செய்தாள் தன்னை தேடி வந்துவிடமாட்டானா என.

காதலையும் தாண்டிய ஒரு அபரிதமான நேசம். அது தனக்கும் மட்டும் தெரிந்தால் போதும்.

அவனுக்கு சொல்லி அவனையும் தன் நேசத்துக்குள் இழுத்து தன் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள கூட விரும்பவில்லை.

இந்நேசம் என்னை மட்டுமே தாலாட்ட வேண்டும். என்னை மட்டுமே சந்தோஷிக்க செய்ய வேண்டும். எனக்கு மட்டுமே சொந்தமான விருப்பம். இதுவும் ஒருவித சுகமே. வலியுடன் கூடிய சுகம். தனக்கு மட்டுமே உரித்தானது.

“எஸ்…” தனக்குள் முணுமுணுத்துக்கொள்ள அவள் வந்ததலிருந்து அங்கு வந்து அமர்ந்தது முதல் நொடிக்கு நொடி மாறிய முகபாவனைகள் என அனைத்தையும் அவதானித்துக்கொண்டிருந்த கலைவாணிக்கு உயிரை யாரோ அறுப்பதை போன்ற வேதனை உண்டானது.

வெடித்துக்கொண்டு வந்த கேவலை அடக்கியபடி வந்து நின்றார் கலைவாணி. அவரின் வருகையை உணர கூட முடியாமல் அமர்ந்திருந்தாள் வெண்மதி.

“மதி, அம்மாடி…” என அழைக்க,

“ஹ்ம்ம், ம்மா…”உணர்வுக்கு திரும்பியவள் என்னவென அவரை பார்த்து கேட்க,

“போய் ட்ரெஸ் மாத்திக்கோ. நான் சாப்பிட எடுத்துட்டு வரேன்…” என்ன முயன்றும் அவரின் குரலில் இருந்த கலக்கம் வெண்மதியை உலுக்கத்தான் செய்தது.

ஆனாலும் இளகிவிடவில்லை. இறுக தான் செய்தாள் இன்னமும்.

“இல்லைம்மா எனக்கு வேண்டாம். கோவில்ல பிரசாதம் குடுத்தாங்க. அதுவே ஃபுல் ஆகிடுச்சு. நான் போய் கொஞ்சம் நேரம் தூங்கறேன்…”அவரின் முகம் பாராமல் சொல்லிவிட்டு தனதறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள்.

மாப்பிள்ளை வீட்டார் ஏன் வரவில்லை? என கேட்காமல் கூட தான் சொன்னதும் உள்ளே சென்றுவிட்ட மகளை வருத்தமாய் பார்த்தபடி நின்றார் கலைவாணி.

கழுத்தில் இருந்த நகையை கழட்டி அதனிடத்தில் வைத்தவள் நைட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறை சென்று உடைமாற்றி திரும்பினாள்.

“இவ்வளவு நேரமா ப்ரெஷ் ஆகிட்டு வர?…” ஒரு விரிந்த புன்னகையோடு கேட்டான் அவன்.

அதிர்ந்து நின்றவள் ஒரு நொடியில் சுதாரித்து தலையை உலுக்கி பார்க்க இப்பொழுது அவன் நின்றிருந்த இடம் வெறுமையாய் காட்சியளித்தது.

முகத்தில் படிந்து இருந்த நீர்த்திவலைகளை கூட துடைக்க கூட தோன்றாமல் படுக்கையில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

“என்ன இது? இத்தனை மாதங்கள் சென்று அவனின் நினைவு இன்றைகென்று இப்படி ஆட்டிவைக்கிறது?…”குழப்பத்தோடு கண்களை மூடி முகத்தை கைகளுக்குள் புதைத்துக்கொண்டாள்.

“நோ, இப்படியே இருந்தா வேலைக்கே ஆகாது…”தலையை உதறிக்கொண்டவள் முகத்தை துடைத்துவிட்டு தலையில் சூட்டியிருந்த பூவை எடுத்துவிட்டு தலைமுடியை அவிழ்த்து தளர்த்தியவள் விண்டோ ஸ்க்ரீனை இழுத்துவிட்டு முகத்தை மூடி படுத்துவிட்டாள்.

ஆனால் மனதினுள் சூரியனாய் வீற்றிருப்பவனின் நினைவு வெளிச்சத்தில் உறங்க முடியாமல் தத்தளித்துக்கொண்டு இருப்பவளுக்கு எப்படி உறக்கம் வரும்?

இவ்வளவு நாட்கள் இல்லாமல் இன்று பெரும் இம்சையாய் தோன்றியது அவனது நினைவுகள். அது ஈஸ்வரியின் கேள்வியினால் தானோ? என்று குழப்பமாகவும் இருந்தது.

“ஈஸ்வரி கேட்டதால் தான் உனக்கு அவனது ஞாபகமா? இல்லை என்றால் அவனை நினைக்காமல் தான் உன்னுடைய பொழுதுகள் கழிகின்றதா?” அவளின் மனசாட்சியே எள்ளி நகையாடியது.

இப்படியும் அப்படியுமாக நினைத்து நினைத்து களைத்துப்போய் மூன்று மணியளவில் உறங்க ஆரம்பித்தவள் இரவு ஒன்பது மணி ஆகியும் எழவில்லை.

எப்பொழுதும் இரவு வெகுநேரம் விழித்திருந்து காலை விடிவதற்குள் எழுந்துவிடும் வெண்மதி வெகுநாட்கள் கழித்து இன்று இப்படி ஒரு உறக்கத்தில் ஆழ்ந்திருக்க அவளை எழுப்பவும் மனமில்லை கலைவாணிக்கு.

எழுந்துவிடுவாளா என்று பார்த்துக்கொண்டு தான் இருந்தார். ஆனாலும் எழுப்பாமல் தானே உறக்கம் கலைந்து வரட்டும் என்று.

“ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் நல்லா தூங்கியிருக்கா. ஆனா சாப்பிடாம வெறும் வயித்தோட உறங்கிட்டு இருக்காளேன்னு தான் ரொம்ப கவலையாருக்குங்க…”

நடேசனிடம் குறைபட்டுக்கொண்டிருந்தவரை கவலையோடு பார்த்த நடேசன்,

“தூங்கட்டும் விடு. எழுப்ப வேண்டாம். அவளா வரட்டும். அதுவரை தொந்தரவு செய்யாதே அவளை…”

அடுத்து என்றைக்கு தன் மகள் இப்படி உறங்குவாளோ என்னும் கவலை அவருக்கு. மெதுவாய் அவளறைக்கு சென்று உறங்குவதை சிறிது நேரம் பார்த்திருந்தவர் தானும் படுக்க செல்ல,

“நீங்களும் வெறும் வயித்தோட படுக்க போறீங்களா? மாத்திரை போட வேண்டாமா?…” கலைவாணி கேட்க,

“எனக்கு பசியே இல்லையே கலை…” என்னை விட்டேன் என்பதை போல இறைஞ்சியது அவரின் முகம்.

“நீங்க சாப்பிடாம மாத்திரை போடாம படுத்தேங்கன்னு உங்க பொண்ணுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். நான் போய் அவளை எழுப்பறேன். அப்பதான் நீங்க சரிப்பட்டு வருவீங்க…”

வெண்மதியின் அறையை நோக்கி செல்ல,

“இரு கலை, நீ எடுத்து வை…” என சொல்லி மேஜையில் சென்று மனமே இல்லாமல் அமர்ந்துகொண்டார்.

இது அவரின் மகளுக்காக என்று கலைவாணிக்கு நன்கு தெரியுமே. கலங்கிய கண்களை துடைத்துகொண்டு அவருக்கு உணவை பரிமாற்ற ஆரம்பித்தார்.

“நீயும் எடுத்து வச்சு சாப்பிடு…” என்று அவரையும் அமர்த்திக்கொள்ள மௌனமாய் இருவரும் உண்டு முடித்து நடேசனுக்கு தேவையான மாத்திரைகளை கொடுத்தார் கலைவாணி.

இரண்டு வருடங்கள் முன்பு வரை ஒரு ப்ரைவேட் கம்பெனியில் அக்கவுன்ட் பிரிவில் நல்ல சம்பளத்தில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தவர் ஒரு விபத்தில் அவருடைய ஒரு கால் செயலிழக்க வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆப்பரேஷன் மூலம் ஓரளவிற்கு காலை சரி செய்ய முயன்றாலும் இயல்பாக நடக்க முடியாமல் இழுத்து இழுத்துதான் நடப்பார் அவர்.

பெண்கள் இருவரும் பரிதவித்து நின்ற போதெல்லாம் இந்தளவிற்காவது ஆண்டவன் என்னை படுக்கையில் கிடத்தாமல் நடமாட வைத்திருக்கிறானே சந்தோஷப்பட்டு போவியா என தேற்றத்தான் செய்வார்.

ஆனாலும் வேலையில்லாத தன் நிலையை நினைத்து உள்ளுக்குள் மருகிதான் இருந்தார் நடேசன்.

இத்தனைக்கும் அவரின் பெயரில் கணிசமான தொகை இருப்பில் இருந்துகொண்டு தான் இருந்தது. இரண்டு படுக்கை அறை, ஹால், கிட்சன், மாடியில் ஒரு அறை என சிறிய வீடாக இருந்தாலும் சொந்தவீடு. மனைவி, மகளுக்கு சொல்லிக்கொள்ளும்படி கொஞ்சம் நகைகள்.

குறைவில்லை தான். ஆனாலும் நிறைவும் இல்லை அவருக்கு. ஏதோ கவலை அரித்துக்கொண்டே இருந்தாலும் இப்பொழுது அனைத்திற்கும் சிகரமாக வெண்மதியின் எதிர்காலம் அவரையும் கலைவாணியையும் தின்றுகொண்டு தான் இருந்தது.

இருவரும் சென்று படுத்துவிட்டாலும் ஏனோ உறக்கம் அவர்களை அண்டவே இல்லை. பக்கத்து வீட்டு பெண்கள் கலைவாணியிடம் வேண்டுமென்றே மாப்பிள்ளை வீட்டினர் வராததை பற்றி கேட்க ஏதேதோ சொல்லிவைத்தார் அவர்.

வழக்கம் போல அதிகாலை உறக்கம் கலைய எழுந்தமர்ந்தாள் வெண்மதி. தலைவலிக்க சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள்,

“நைட் ஆகிடுச்சா?…” என்றபடி வெளியே வந்து பார்க்க வீடே இருண்டு கிடந்தது.

“அதுக்குள்ளையுமா அம்மா தூங்கிட்டாங்க?…” யோசனையாக பார்க்க நடேசனின் அறை திறந்தே இருக்க இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க சத்தமில்லாமல் அறையை சாற்றி விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

“பசி தாங்கமுடியலை. எழுப்பிருக்கலாம்ல இவங்க…”

சிணுங்கலோடு அறையில் தனக்கு உணவு எதுவும் எடுத்துவைத்திருக்கிறார்களா என தேட எதுவும் கிடைக்கவில்லை.

வெண்மதிக்கு தெரியாதல்லவா இரவு பதினொருமணிவரை கலைவாணி உறங்காமல் வந்து வந்து அவளை பார்த்து சென்றது.

ப்ரிட்ஜில் முந்தின இரவு வைத்திருந்த தக்காளி சட்னியை எடுத்து வெளியே வைத்தவள் தோசை வார்க்க ஆரம்பித்தாள்.

அடுப்பை குறைக்காமல் அப்படியே விட்டுவிட்டு அதற்குள் முகத்தை கழுவி வர அறைக்குள் நுழைந்தவள் சைலண்டில் கிடந்த தன் மொபைலை எடுத்து பார்க்க அதுவோ அதிகாலை நான்கு என காட்டியது.

“என்ன இது இப்படி தூங்கியிருக்கேன்?…” அலுப்புடன் இடுப்பில் கைவைத்து நின்றவள் தோசை கருகும் வாசம் வர வேகமாய் ஓடிச்சென்று அடுப்பை அணைத்தாள்.

“நேரமே சரியில்லை இன்னைக்கு…” என்றபடி அதை சுத்தம் செய்து மீண்டும் தோசை வார்த்து நான்கு தோசைகளை சாப்பிட்ட பின்புதான் பசி அடங்கியது.

மணியை பார்க்க அது ஐந்து என காட்ட நேரத்தை நெட்டித்தள்ளியபடி ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.

ஆறரை மணிக்கு எழுந்து வந்த கலைவாணி கிட்சனில் வெண்மதி தோசை வார்த்து உண்டது தெரிய நிம்மதியோடு அதை சுத்தம் செய்து காபி கலக்க ஆரம்பித்தார்.

“ஹ்ம்ம் ஒரு தோசை ஊத்த இத்தனை பாடு. மாவை இங்கயும் அங்கயும் சிந்திவச்சு இம்புட்டு அலப்பறை. அடுப்படிய இத்தனை கலவரமாக்கி வச்சிருக்காளே?…” கவலையோடு நினைத்துக்கொண்டார்.

சத்துமாவு கஞ்சியை நடேசனுக்கு கொடுத்துவிட்டு காபியை எடுத்துக்கொண்டு வெண்மைதியிடம் சென்றார். அவரை பார்த்தவள்,

“என்னம்மா நீங்க? என்னை நைட்ல எழுப்பியிருக்கலாம்ல. நானும் அசந்துட்டேன். காலைல செம பசி. அதான் நானே தோசை ஊத்திட்டேன். கொஞ்சம் கச்சாமுச்சான்னு இருக்கு கிட்சன். கொஞ்சம் பார்த்து செய்ங்க…”

Advertisement