Advertisement

நிலவு – 17

           படிப்பு முடிந்து ஒருவருடம் கடந்திருந்தது. கட்டிடத்துறையில் முதுகலைப் பட்டம் திறம்பட முடித்திருந்தவனின் திறமைகளும் கனவுகளும் வெறும் கனவாகவே போய்விடுமோ என்னும் அளவில் தான் இருந்தது அவன் சந்தித்த சவால்கள்.

ஆம், அவனுக்கு அவையெல்லாம் பெரும் சவால்களே. பணமிருப்பவர்களுக்கு மட்டுமே பட்டுக்கம்பளம் விரிக்கும் இந்த உலகம் சாதிக்கத்துடிக்கும் இவனை போன்றோரை மனம்விட்டு போகவே வழி சொல்லிக்கொண்டிருந்தது.

செல்லும் இடமெல்லாம் வேலைக்கு சேர்ந்துகொள், சொல்வதை கேள் என்னும் கட்டுப்பாடுகள் மட்டுமே தலைவிரித்தாட இவனின் தனித்தன்மை இதில் உயிரிழந்து விடுமோ என்னும் அளவில் வேலைக்கு சென்ற இடங்களில் நடந்த நிகழ்வுகள் இவனை பாதித்தன.

முரளியின் நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்த நேரத்தில் தான் சுகன்யா அவனுக்கு இந்த யோசனையை சொல்லியதே.

சிறியளவில் சொந்தமாக செய்யமுடிந்தால் வங்கியில் உதவி வாங்கி நடத்தலாம் என்று அவனை தேற்ற சிறுவயதிலிருந்தே பொறுமையும் முயற்சியும் அவனின் ரத்தத்திலேயே கலந்திருந்ததால் மீண்டும் உத்வேகத்துடன் தன் பயணத்தை தொடங்க நினைத்தான்.

அதுவும் அத்தனை சுலபமில்லை என்று நிதர்சனம் பொட்டிலறைந்தது போல உணர்த்தியது.

எத்தனையோ முறை இதை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலைக்கு சென்றுவிடலாமா என்ற எண்ணம் பலமுறை தோன்றி மறைந்தது.ஒரு நடுத்தரவர்கத்தினருக்கே உரிய உணர்வு மேலோங்க முரளி தடுமாறினான்.

“இப்போ என்ன இதுக்கு இன்வெஸ்மென்ட் தேவை அவ்வளோ தானே? நம்ம வீடும் கொஞ்சம் நிலமும் இருக்குப்பா. ப்ளட்ஜ் பண்ணலாம். விக்கலாம்னா எனக்குமே மனசுக்கு ஒரு மாதிரியா தான் இருக்கு…”

“நோ ப்பா இதை நான் ஏத்துக்க மாட்டேன். மனசு என்னவோ போல ஆகுது. செவிங்க்ஸ்ல கை வைக்க…” முரளியின் மறுப்பில் கனிவாய் அவனை பார்த்த ஆனந்தன்,

“ஏற்கனவே பாதி சேவிங்க்ஸ் என்னோட செலவுல கழிஞ்சிருச்சுன்னு நினைக்கறியாப்பா? கையிருப்புக்கு பங்கம் வந்துடும்ன்னு பார்க்கறியா?…”

“என்ன பேச்சுப்பா இதெல்லாம்? உங்களை விட எங்களுக்கு சேமிப்பு முக்கியமா? இப்ப நீங்க எங்களுக்கு முழுசா கிடைச்சிருக்கீங்க. அதுவே போதும்…” என முரளி வருந்த,

“ஏன் இதை நீ சீக்கிரமே மீட்டு குடுத்திட்ட மாட்டியா? இப்போ இதை விக்காம வைக்கிறதுக்கு மட்டும் சொல்ல இதுவும் ஒரு ரீசன்னு நினைச்சுக்கோ. உன்னால அப்பத்தான் சாதிக்க முடியும். சீக்கிரமே அதை மீட்கனும்னு உனக்கு தோணிட்டே இருக்கும். முடியும் தானே?…” என்ற ஆனந்தனை கட்டிகொண்டான் முரளிதரன்.

“ஒரு மேஸ்திரியோட மகன் நீ. நீ சாதிக்கனும்னு நான் அவ்வளவு ஆசைப்படறேன் முரளி. என் மகன் கட்டுற முதல் கட்டடத்தை நான் என் மேற்பார்வையில ஆள் வச்சு கட்டனும். என் ஆசையே அதுதான்…” ஆனந்தன் உணர்ச்சிப்பூர்வமாக சொல்ல சுகன்யாவே இதை எதிர்பார்க்கவில்லை.

ஆனந்தன் வருமானம் நிறைவும் இல்லாது குறைவும் இல்லாது இருக்க சுகன்யா வேறு தன் பங்கிற்கு ஐந்து தையல் மிஷின்கள் போட்டு சிறிய கடை ஓன்று  நடத்திவந்தார்.

நிறைவான குடும்பமாக இப்படி நகர்ந்திருந்த அவர்களின் வாழ்க்கையும் அடுத்தக்கட்டத்திற்கு வேறு பாதைக்கு திசைதிரும்பியது இவ்விடத்தில் தான். முரளியின் லட்சியம் அதற்கு விதை என்றால் அதற்கு உரமிட்டு வளர்த்தது அவனின் பெற்றோர்கள்.

வேறுவிதமான மனிதர்களை காண நேரிட்டது. புரிந்துகொள்ளமுடியாமல் மலைத்து நின்ற வேளைகளில் சொந்தங்களும் சுற்றங்களும் மிக இகழ்ச்சியாய் “உனக்கு உன் தகுதிக்கு இது தேவையா?” என்பதை போல பார்த்து நகர்ந்தனர்.

உதவுவதற்கு யாருமில்லை என்றாலும் தடுப்பதற்கு ஏகத்திற்கும் வந்து நின்றது தான் சுகன்யாவிற்கு அத்தனை வருத்தமும், கோபமும். இதையும் தாண்டி சறுக்கிவிடக்கூடாதே என்னும் பயமும் கொஞ்சம் இருந்ததென்னவோ உண்மை தான். ஆனாலும் அதை மகனின் முன்னேற்றத்திற்கு தடையாக்காமல் அவனை ஊக்குவித்தார்.

ஆனால் என்னதான் இருந்தாலும் சாதிப்பதும் முரளிக்கு அத்தனை சுலபமாய் இருக்கவில்லை. தான் முன்னேறுவதை விட தன்னை முன்னேறவிடாமல் தடுப்பவர்களையே அதிகம் அவன் தாண்டிவரவேண்டியதாக இருந்தது.

அப்பொழுதெல்லாம் ஆனந்தனின் நம்பிக்கையும், சுகன்யாவின் அரவணைப்பும் அவனை தாங்கிப்பிடித்து முன்னே வழி நடத்தியது.

இவை அனைத்திற்கும் மேலாய் அவனுக்கு அந்த நேரத்தில் ஆதரவாய் அவனின் திறமைக்கு கை கொடுத்தது விபீஷ் என்னும் தனிமனிதன்.

அவன் மட்டும் வாய்ப்பளிக்கவில்லை என்றால் இவ்விடம் முரளி இல்லை. தன்னுடைய வீடு ஒன்றை புதுப்பிப்பதற்கு விளம்பரம் செய்திருக்க ஏகப்பட்ட கொட்டேஷன்கள்.

அத்தனையும் சிறங்க நிறுவனங்களாய் இருக்க சிறிய நிறுவனமான முரளியும் அதற்கு விண்ணப்பித்திருந்தான். ஒதுக்கப்பட்டிருந்த அவனின் கொட்டேஷனை ஒருமுறை பார்த்தவனுக்கு அது புதுவிதமாய் வித்தியாசமாக தெரிய அழைப்பு விடுத்தவன் அடுத்த இரண்டு நாளில் நேரில் முரளியை சந்தித்தான்.

முரளிக்குமே இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். நூறு விண்ணப்பங்களுக்கு இடையில் இதை கவனித்திருக்கிறானே என வியந்துகொண்டே செல்ல விபீஷின் கேள்விகள் சந்தேகங்கள் அனைத்திற்கும் முரளி முதலில் தடுமாறினாலும் பின் சிறப்பாகவே பதிலளிக்க திருப்தியுடன் சிரித்தான் விபீஷ்.

“வெல் முரளி. எனக்கு உங்க பிரசன்டேஷன் ரொம்ப பிடிச்சிருக்கு. இதை நீங்க பண்ணுங்க. எங்க ஸ்டாப்ஸ் உங்களுக்கு தேவையான ஹெல்ப் செய்வாங்க. பட் சின்ன மிஸ்டேக் ஆனாலும் நீங்க தான் பொறுப்பு. புரியுதா?…” என சாதாரணமாய் சொல்லியிருக்க,

“ஸார் நிசமா அதான் சொல்றீங்களா? என்னால என்னால நம்பவே முடியலை…”

“நம்புங்க முரளி நான் அவ்வளவு ஈஸியா உங்களுக்கு இந்த சான்ஸ் குடுக்கலை. உங்க ஏரியா பக்கம் வந்து விசாரிச்சேன். உங்கப்பா பன்ற வேலைகள்ல நீங்க நிறையவே ஐடியாஸ் குடுத்திருக்கீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. விஷயம் இருக்க ஆள் நீங்க. அதை நானும் யூஸ் பண்ணிக்கிட்டா எனக்கு நல்லதுன்னு தோணுச்சு…”

விபீஷின் இந்த சிநேகமான பேச்சும் அவனின் செயல்களும் அத்தனை பிடித்தன முரளிக்கு. முதலில் ஒரு கஸ்டமர் என்னும் விதத்தில் தான் முரளி எட்டவே நின்றான்.

ஆனால் விபீஷிற்கு அவனின் அணுகுமுறையும் அவனின் குடும்பமும் பிடித்துபோக முரளியின் முன்னேற்றத்தில் முக்கிய காரணகர்த்தாவாக மாறிப்போனான் விபீஷ்.

அவனின் மனதில் முரளியின் மீதான நம்பிக்கையின் அளவு அவனின் தங்கையை அவனுக்கு கொடுக்கும் அளவிற்கு வந்து நின்றது மூன்று வருடங்களில்.

அதில் முரளியின் சாதனைகள் ஏராளம். அவனின் வேளையில் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும், சிரத்தையான, பிசிறில்லாத தொழில் சுத்தமும் முரளிக்கான அங்கீகாரத்தை அவனின் வட்டாரத்தில் வெகுவிரைவிலேயே பெற்றுதந்திருந்தது.

தங்கள் வீட்டில் விபீஷ் இதை பற்றி பெற்றோர்களிடம் பேச வசுந்தராவிற்கு சொல்லவே தேவையில்லாத அளவில் மகிழ்ச்சி.

நாகராஜன் தான் கொஞ்சம் யோசிக்கலாமா என்றார். அவரையும் சம்மதிக்க வைத்தவன் மகனின் முடிவில் தவறிருக்காது என்னும் நம்பிக்கையுடன் முரளியை மறுக்க அவருக்கும் மனமில்லை தான்.

முரளியின் குடும்ப அந்தஸ்து இப்போது உயர்ந்திருந்தாலும் அது இப்பொழுது தானே, அதற்கு முன்பு அவர்களின் வாழ்க்கைத்தரம் இதுவல்ல என்னும் எண்ணம் அவருக்கு. அதனால தான் அந்த தயக்கமும்.

அதையும் துடைத்தெறிந்தான் முரளி தன் திறமையால். ஒவ்வொரு படிக்கட்டையும் மிக கவனமாய் கடந்தான் விபீஷின் துணையுடன். இன்னும் முரளி தொடவேண்டிய தூரம் நீண்டு இருந்தாலும் இனியும் தாமதிக்காமல் அவனிடம் பேசிவிடவேண்டும் என்ற முடிவுடன் முரளியின் அலுவலகம் வந்தான்.

ஆரம்பத்தில் தொழில் பேச்சுக்கள் என தொடங்கி வீட்டை பற்றி பேசி தனக்கு திருமணத்திற்கு பார்த்திருக்கிறார்கள் என்று தன் வருங்கால மனைவி சீமாவை பற்றியும் பேசிய விபீஷ் கரெக்ட்டாக முரளியின் திருமணத்தில் வந்து நின்றான்.

“உங்க மேரேஜ் பத்தி என்ன ஐடியால இருக்கீங்க முரளி?…” என விபீஷ் திடீரென கேட்க இதை எதிர்பாராதவன் வழக்கமான புன்னகையோடு,

“அப்படி எதுவும் இதுவரை இல்லை விபீஷ்…” என்றான்.

“லவ் இப்டி?…”

“ஹைய்யோ என்ன இதெல்லாம்?…” என முரளி லேசாய் படபடத்து சிரிக்க,

“சும்மா சொல்லுங்க. தெரிஞ்சுக்கலாமேன்னு தான்…” விபீஷிற்கு முரளியின் படபடப்பில் சுவாரஸியம் பொங்கியது.

அவனுக்கு தெரியும் முரளிக்கு அப்படி எதுவும் இல்லை என்று. ஆனாலும் வாய்வார்த்தையாக கேட்டுவிடுவது நல்லது தானே என கேட்டான்.

“அப்படி இருந்தா உங்களுக்கு தெரியாமலா? இப்போ என்ன கல்யாணத்துக்கு அவசரம்? இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்…” என பட்டும்படாமலும் சொல்ல,

“கல்யாணம் எப்டி பன்றதா?…”

“கண்டிப்பா அப்பாம்மா பார்க்கற பொண்ணுதான். லவ் பண்ண எல்லாம் டைம் இல்லை…” என்ற முரளியின் புன்னகையில் விபீஷிற்கு மகிழ்ச்சியானது.

“அப்போ நான் ஆன்ட்டிக்கிட்ட பேசிக்கறேன்…” என்றான் பூடகமாக அவனிடம். புரியாமல் முரளி பார்க்க,

“நான் கிளம்பறேன் முரளி. ஈவ்னிங் வீட்ல மீட் பண்ணுவோம் மாப்…” என பாதியில் நிறுத்தி சொல்லிவிட்டு கிளம்பிவிட ஓரளவிற்கு யூகித்துவிட்டான் முரளி.

“இது எப்படி சரிவரும்?” என விபீஷின் தங்கையை மனதில் வைத்து யோசிக்க அப்பெண்ணிடம் தான் பேசியிருக்கிறோமா என ஞாபக அடுக்களில் தேடிப்பார்க்கலானான்.

அதிகமில்லை என்றாலும் பார்க்கும் இடங்களில் ஒரு அறிமுக புன்னகை ஓரிரண்டு வார்த்தைகள் அவ்வளவே.

திருமணம் என்கிற நினைவே இன்றி இருந்தவனுக்கு இந்த திடீர் பேச்சு என்னவோ செய்தது உள்ளுக்குள். ஆனாலும் வீட்டில் பேசட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஆனால் விபீஷ் மாலை செல்லாமல் அலுவலகத்தில் இருந்தே நேராக சுகன்யாவையும், ஆனந்தனையும் சந்திக்க சென்றவன் அவர்களை சம்மதிக்கவும் வைத்துவிட்டு மாலை வீட்டிலிருந்து முறையாக இதை பேச வருவதாக சொல்லி வந்துவிட்டான்.

சுகன்யாவிற்கு இத்தனை பெரிய இடத்தில் சம்பந்தம் செய்வது தங்களுக்கு சரிவருமா என்ற யோசனையில் இருக்க ஆனந்தன் தான் உடனே சம்மதித்தார்.

மகனின் தொழில் வளர்ச்சியில் தன் நிலை உயர்ந்துவிட்டதை நினைத்து தினம் தினம் பூரித்தவருக்கு இத்தனை பெரிய இடத்து சம்பந்தம் என்றதும் தலைகால் புரியவில்லை. பெருமை வேறு.

“நீங்க அவசரப்படறீங்களோன்னு தோணுது…” என்ற மனிவியை முறைத்தவர்,

“அந்த பொண்ணுக்கு என்ன குறை? அழகா இருக்கு. படிச்ச வசதியான பொண்ணு. கர்வமில்லாம தன்மையா பேசும். இதை விட என்ன வேணும்?…”

“இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டுமேன்னு தோணுதுங்க…” இன்னமும் சுகன்யாவிற்கு மனதே இல்லை. என்னவோ ஒரு நெருடல் அவரை வாட்ட ஆனந்தனின் ஆசைக்காக சம்மதித்தார்.

அதற்கடுத்து மளமளவென வேலைகள் நடந்தது. அன்று மாலையே விபீஷின் வீட்டில் இருந்து வந்து தட்டு மாற்ற முரளிக்கு நடப்பவற்றை நம்பவே முடியவில்லை.

இதில் விபீஷ், முரளி இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் என அப்போதே முடிவாகிவிட இத்தனை வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தடுமாறி நின்ற முரளி விபீஷிடம் தனியாக பேசினான்.

“என்ன முரளி?…” என்ற விபீஷ் பின் சிரிப்புடன்,

“சொல்லுங்க மாப்பிள்ளை…” என்றான் உரிமையாக. அந்த உரிமையில் கவரப்பட்டவனாக புன்னகைத்த முரளி,

“இதுல உங்க தங்கச்சிக்கு சம்மதமா? அவங்க என்னை மேரேஜ் பண்ணிக்க சரின்னு சொல்லிட்டாங்களா?…” எனவும் விபீஷ் தனது மொபைலில் தங்கைக்கு அழைத்தவன்,

“வினிக்குட்டி மாப்பிள்ளை உன்கிட்ட பேசனும்னு சொல்றார். உன் சம்மதத்தை நீயே சொல்லிடுடா…” என முரளியிடம் போனை நீட்ட அதை வாங்கியவன்,

“ஹலோ வினதா எப்படி இருக்கீங்க?…” என சாதாரணமாக ஆரம்பித்தான் முரளி.

“இவன் தேறமாட்டான்” என்னும் பார்வை பார்த்தபடி அங்கிருந்து சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட,

“வினயா உங்களுக்கு இந்த ப்ரபோசல்ல சம்மதமா?…” என சட்டென விஷயத்துக்கு வந்தான்.

தான் முதலில் கேட்டதற்கே அந்த பக்கம் இருந்து பதில் வராமல் இருக்க இதை கேட்டுவிட்டான். இப்பொழுதும் மௌனமாக இருக்க,

“உங்க அண்ணன் இங்க இல்லை. பக்கத்தில யாருமில்லை. நீங்க தாராளமா உங்க விருப்பத்தை சொல்லலாம்…” என யோசனையோடு சொல்ல,

“இல்லை அப்படியெல்லாம் இல்லை. என்கிட்டே கேட்டுட்டு தான் அங்கே வந்தாங்க. எனக்கு ஓகே தான்…” என சொல்லி அவன் தொடர்பை துண்டித்துவிட அவளின் அவசரத்தையும் படபடப்பையும் வெட்கம் என தவறுதலாக புரிந்துகொண்டான் முரளி.

வினயா பெயரில் மட்டுமல்ல அமைதியாக இருந்தாலும் மிகவும் மனதில் வினயமானவளே. தான் தன் விருப்பம் என்றிருப்பவள். அதனால அவளை பற்றி யாராலும் இப்படித்தான் என கணிக்க இயலாது.

அதன் பின் முரளிக்குமான திருமண வேலைகள் அனைத்தையும் விபீஷே செய்தான். முரளியை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாமல் விபீஷும் நாகராசுமே இழுத்துப்போட்டு அனைத்து வேலைகளையும் செய்தனர்.

ஆனந்தனுக்கு ஒரே பூரிப்பு. இத்தனை பெரிய இடம் தன் மகனிற்காக தவமிருக்கிறார்கள் என சுகன்யாவிடம் சொல்லி சொல்லி மாய்ந்துபோனார். அவர்கள் முன்னிலையில் கர்வமான பார்வையுடன் வலம் வர சுகன்யாவிற்கு தான் எரிச்சலானது.

வசுந்தராவும் சுகன்யாவும் சேர்ந்து உறவுகளுக்கு பத்திரிக்கைகள் வைக்க ஆனந்தன் முரளியுடன் விபீஷுடன் சேர்ந்து அவர்களின் தொழில்வட்டத்தில் அழைப்பு விடுக்க சென்றார். அதில் அத்தனை மகிழ்ச்சி.

இத்தனை பரபரப்பில் வினயா முரளியுடன் பேச முயலவில்லை என்பதை எவருமே உணரவில்லை. முரளியின் வேலை அவனுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இருக்க அவனும் இதை சந்தேகிக்கவில்லை.

திருமண நாள் நெருங்கி விடிந்தால் திருமணம் என இருக்க ஒரு போன் பேசவென மாடிக்கு வர அங்கே இன்னொருவனை நெருக்கமாக அணைத்துகொண்டு முத்தச்சங்கமத்தில் ஆழ்ந்துபோயிருந்தவளை அதிர்ச்சியுடன் பார்த்த முரளி,

“வினயா…” என கத்த பதறி விலகுவது போல விலகி நின்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். விலகுவதுபோல தான் விலகினாள். முரளி வருவதை கவனித்து தான் இந்த திட்டமே செயல்படுத்தினாள். நினைத்தபடி கச்சிதமாக நிறைவேறியது.

“என்ன பண்றீங்க வினயா?…” என்றான் ஆத்திரமும் இயலாமையுமாக.

பார்த்ததை அவனால் நம்ப இயலவில்லை. தனக்கு சம்மதம் சொல்லி இன்னொருவனுடன் இப்படி ஒரு விதத்தில் காட்சியளிப்பாள் என கனவிலும் எண்ணாதவனின் மனது நடுங்கியது.

“ப்ளீஸ் முரளி எங்களை நீங்க தான் காப்பாத்தனும். என்னால உங்களை கல்யாணம் செஞ்சுக்க முடியாது. நான் செத்துடுவேன். இப்ப இன்னும் கொஞ்சம் நேரம் தள்ளி நீங்க வந்திருந்தா நாங்க இங்க இருந்து குதிச்சிருப்போம்…” என மீண்டும் அழ,

“ப்ச், அழுகையை முதல்ல நிறுத்துங்க. யாராவது வந்திடபோறாங்க…” என சமாதானம் செய்ய அதற்குள் யாரோ வரும் அரவம் கேட்க மறைந்து நின்றுகொண்டனர் அவர்கள்.

“அண்ணனுக்கு தெரிஞ்சா கொன்னே போடும்…” என விசும்பிக்கொண்டே முரளியின் கரம் பிடிக்க நாசூக்காய் விலகி நின்றுகொண்டான். யாரும் இல்லை என்றதும்,

“அந்த பையனை அனுப்பிட்டு என் கூட வாங்க. இங்க நின்னா யாராச்சும் பார்ப்பாங்க. பிரச்சனை ஆகிடும்…” என சொல்லிவிட்டு தனது அறைக்கு செல்ல அவன் சொல்லியபடி தன் காதலனை அனுப்பிவிட்டு முரளியோடு அவனறைக்குள் சென்றாள்.

எப்படியாவது அவனை சரிக்கட்டி இந்த திருமணத்தை அவனே நிறுத்த செய்ய வேண்டும் என அவள் திட்டமிட்டிருக்க இதை அறியாத முரளியோ அவளுக்காக யோசித்தான்.

ஆனால இனி எந்த சூழ்நிலையிலும் வினயாவை தன்னால் திருமணம் செய்ய இயலாது என்ற ஸ்திரமான முடிவில் இருந்தான்.

“சொல்லுங்க, நான் கேட்டப்போ ஏன் சம்மதம்னு சொன்னீங்க?…” என கடுமையாக கேட்க,

“வீட்ல இதை என்னால சொல்ல முடியாது. சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க. அதான் கல்யாணத்துக்கு முதல்நாள் ஓடிப்போகனும் இல்லைனா செத்தாவது போகனும்னு நினைச்சேன்…”

“செத்து போகற அளவுக்கு துணிச்சல் இருக்கறவங்க ஏன் உங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கியிருக்க கூடாது?…”

“அதை செய்ய முடியாம தானே இப்படி?…”

“இப்போ என்ன செய்யலாம்னு இருக்கீங்க?…”

“எப்படியாவது நீங்க தான் இந்த கல்யாணத்தை நிறுத்தனும் முரளி. ப்ளீஸ்…” என கையெடுத்து கும்பிட,

“நான் எப்படி? ஓகே உங்க லவ் மேட்டரை சொல்லி நிப்பாட்டிடவா?…” என்றவனை அதிர்ந்து பார்த்தவன் மனது வேகமாய் கணக்கிட அவனின் காலை பிடித்த வினயா,

“இதுக்கு என்னை கொன்னுடுங்க. அப்படி சொன்னா நிச்சயம் இந்த கல்யாணத்துக்கு என்னை சம்மதிக்க வச்சிடுவாங்க…”

“முதல்ல எழுந்திருங்க வினயா. இங்க பாருங்க என்னை விரும்பாத வேற ஒருத்தனை மனசில வச்சிருக்கற ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கற அளவுக்கு நான் தாராள மனசு இல்லைங்க…” என்று அவன் சொன்னதும் சந்தோஷமாய் அவள் பார்க்க,

“அதுக்காக பொய் சொல்லி இதை நிறுத்த என்னால முடியாது. இன்னொன்னு விபீஷ் எனக்கு எதிர்காலத்தை அமைச்சுக்குடுத்தவர். அவருக்காக வேணும்னா ஒன்னு பன்றேன். நீங்களே கல்யாணத்தை நிறுத்த நான் ஒரு சந்தர்ப்பம் தரேன்…”

“நானா?…”

“ஆமா, நான் சொல்ற மாதிரி செய்ங்க. தன்னால கல்யாணம் நின்னு உங்க அண்ணனே என்னை வேண்டாம்னு சொல்லிடுவார். அவருக்காக தான் இதை நான் செய்யறேன். இதை நன்றிக்கடனா செய்யறேன். நீங்க சந்தோஷமா இருங்க. தப்பு என்னோடதாவே இருந்துட்டு போகட்டும்…” என்றவன் வினயா செய்யவேண்டியதை அவன் விளக்க சந்தோஷத்தில் விழிகள் விரிய அனைத்தையும் கேட்டுகொண்டாள் வினயா.

மறுநாள் விடிந்து  உறவினர்கள் எல்லாம் வந்துவிட மாப்பிள்ளை பெண்ணுக்கு உடை மாற்றி வந்து மேடையில் அமர சரியாக நாகராஜனின் கையில் அந்த பேப்பர்கள்.

பார்த்தவருக்கு படபடத்து போக நேராக மகனிடம் சென்றவர் அவனின் காதில் சொல்லி முரளியை பார்க்க முரளி சலனமின்றி விபீஷை எதிர்கொண்டான். விபீஷ் நம்பமுடியாமல் எழுந்து முரளியின் அருகே வர அவனும் இவனை பார்த்தபடியே அமர்ந்திருக்க அந்த பேப்பர்களை நீட்டியவன்,

“இது நிஜமா முரளி?…” என்றான் அவனிடம்.

“ஆமா, இது எப்படி உங்கள்ட்ட?…”  என சாதாரணமாக சொல்ல,

“அடப்பாவி நம்பவச்சு கழுத்தறுத்திட்டியே…” என நாகராஜன் வந்து முரளியின் சட்டையை பிடிக்க,

“என்ன அங்கிள் இது? எங்கப்பாவுக்கு கிட்னி பெயிலியர். என்னோட கிட்னில ஒன்னை குடுத்தேன். நான் செய்யாம யார் செய்வா?…” என இன்னுமே சாதாரண முகத்துடன் கேட்க இப்பொழுது விபீஷின் கோபம் தலைக்கேறியது.

“இது எப்படி சாதாணர விஷயம் ஆகும் முரளி? இதை நீங்க ஏன் சொல்லவே இல்லை?…” என கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே வினயா கூச்சல் போட்டு ஏமாற்றி திருமணம் செய்ய பார்த்தார்கள் என அழுது ஆர்ப்பாட்டம் செய்ய தங்கையின் அழுகை வேறு விபீஷை முரடனாக்க,

“கெட் அவுட் முரளி…” என அவனின் கன்னத்தில் அறைந்தான் விபீஷ்.

முரளியின் ஒற்றை பார்வையில் அவனின் தாயும், தந்தையும் மௌனமாக நிற்க குனிந்த தலையுடன் அவர்கள் அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

நின்றது முரளி வினயா திருமணம் மட்டுமல்ல, விபீஷ், சீமா திருமணமும் கூட.

ஆயிரம் கனவுகளுடன் விபீஷின் மனைவியாக வந்தவளை வெறும் கழுத்துடன் அனுப்பினான் விபீஷ்.

Advertisement