Advertisement

நிலவு – 15

             என்றைக்குமில்லாமல் சீமாவின் மௌனம் இன்று ஏனோ கொஞ்சம் கொஞ்சமாய் சுட ஆரம்பித்தது.

சீமா தான் முரளி, வெண்மதியிடம் பேசியதை கேட்டுவிட்டதை பார்த்தாலும் எந்தவொரு குற்றவுணர்வும் இன்றி திமிருடன் தான் எழுந்து சென்றான்.

ஒருவேளை சீமா சட்டையை பிடித்து சண்டை பிடித்திருந்தால் கூட இத்தனை குறுகுறுப்பாய் இல்லாமல் போயிருக்குமோ என்னவோ? அவளானாள் காதிலும் வாங்கிக்கொண்டு ஒன்றுமே நடக்காததை போல இறுகிய முகத்துடன் கிளம்பி வர விபீஷிற்கு என்னவோ போல் ஆனது.

ஹாஸ்பிட்டல் வரும் வரை இந்த மௌனம் நீடிக்க அவளின் முகத்தை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே காரை செலுத்த அதை கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை சீமா.

ஆனால் மனதினுள் ஆயிரமாயிரம் எரிமலைகள் வெடித்து சிதறின. விபீஷ் இப்படி தரமிறங்கி போவான் என என்றுமே அவள் நினைத்ததில்லை. இனி தன் எதிர்காலம் இப்படியான ஒரு போராட்டத்துடனா? என நினைத்து குமைந்துகொண்டிருந்தாள்.

“இந்தளவிற்கு பலவீனமான பெண்ணா நீ?” என அவளின் மனசாட்சி எள்ளிநகையாட சற்று மனம் குறுகினாலும் பின் அமைதியானாள்.

பார்க்கிங்கில் சென்று காரை நிறுத்தவும் இறங்க கதவை திறக்க போனவளின் கையை பிடித்துவிட்டான் விபீஷ்.

“ஹ்ம்ம் என்ன நினைச்சிட்டு இருக்க நீ? நானும் பார்த்துட்டே வரேன். பெரிய இவளாட்டம் உட்கார்ந்திருக்க? ஏன் பார்த்தேன்னு தெரியும் தானே? பேசறதுக்கென்ன?…” என்றான் கடுப்பாய்.

“என்ன பேசனும்? பேச என்ன இருக்கு?…” என்றாள் அவள் விட்டேற்றியாக.

“சீமா நான் வெண்மதி… ப்ச், உனக்கு தெரிஞ்சு தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச? இப்ப நான் பேசறதை கேட்டு என்னவோ உனக்கு துரோகம் பன்ற மாதிரி நீ என்னை நினைக்கறது சரியில்லை….” என்றான் காட்டமாய்.

“இப்ப நான் என்ன பேசனும்? நீங்க என்ன என்கிட்டே எதிர்பார்க்கறீங்க? புரியலை எனக்கு…” என்றாள் முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டு.

அவன் மீது கோபம் தான். சட்டையை கிழித்து, அடித்து துவம்சம் செய்யும் அளவிற்கு வெறி தான். ஆனாலும் அதை காட்டிவிட்டால் அத்துடன் முடிந்து விடுமே. அதை அவள் விரும்பவில்லை.

“நான் பேசினது உன்னை ஹர்ட் பண்ணலையா?…” என்றவனை இகழ்ச்சியாய் பார்த்தவள்,

“ஹர்ட் பண்ணனுமா? அப்படி நீங்க என்ன நியாயமா, உத்தமமா பேசிட்டீங்க? நான் ஹர்ட் ஆகற அளவுக்கு? பேசினது அருவருப்பான விஷயம். இதுல ச்சீன்னு கொலைவெறி வருமே தவிர வேற எந்த உணர்வும் வராது…”

“எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாதுன்னு ஆண்டவன்கிட்டே வேண்டிக்கறேன். நீங்க கழுத்துல கட்டின தாலிக்கு நான் அந்தளவுக்கு மரியாதை தரேன். ஆனா நீங்க அதை அசிங்கப்படுத்தி உங்க வளர்ப்பு, உங்க மதிப்பு கூடவே நீங்க கட்டின இந்த மாங்கல்யம் எல்லாத்துக்கும் சேர்த்து அசிங்கத்தை தான் உண்டாக்கறீங்க…”

“சீமா…” என அவன் கோபத்தில் இரைய,

“உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனா சத்தியமா சொல்றேன் இப்படி ஒரு ஆளா நீங்க மாறுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்களை நான் விரும்பி இருக்கவே மாட்டேன். நான் விரும்பின விபீஷ் வேற. இப்பருக்கறது மிருகம். உங்களுக்குள்ள சாத்தான் புகுந்திருச்சு…”

“இன்னொருத்தன் பொண்டாட்டியை தூக்குவேன்னு சொல்றீங்களே எந்தளவுக்கு வக்கிரம் இருக்கனும் உங்க மனசுல. இப்ப தெரியுது உங்களை மாதிரி தானே உங்க…”

“சீமா…” என அவளின் கழுத்தை பிடித்துவிட்டான். அவள் சொல்ல வருவதை தெளிவாக முகம் முழுவதும் மிளகாய் பூசியதை போல எரிந்தது விபீஷிற்கு. அதற்கெல்லாம் அசரவில்லை சீமா.

சற்றும் பயமில்லாமல் அலட்சியமாய் அவனின் கையை எடுத்துவிட்டவள் அவனை உறுத்து விழித்தாள்.

“கோபம் வருதா உங்களுக்கு? அப்போ முரளிக்கு எத்தனை வந்திருக்கும்? இதை சொல்லிக்குடுத்துதான் உங்கம்மா உங்களை வளர்த்தாங்களா?…”

“நீ அதிகமா பேசற சீமா. நல்லதில்லை…”

“நீங்க தானே கேட்டீங்க பேசலையேன்னு. லுக், இந்த தாலிக்கான மகத்துவம் என்ன, நம்ம உறவுக்கான மரியாதை என்னன்னு உங்களுக்கு தெரியுதோ இல்லையோ, எனக்கு நல்லாவே தெரியும்.  இப்ப அதுதான் உங்களை காப்பாத்தியிருக்கு. ஆனா எப்பவும் காப்பாத்தாது…”

“எனக்காக நான் இத்தனை நாள் எப்படி இருந்தேனோ ஆனா இந்த சமுதாயத்துல உங்களுக்கு கிடைக்கிற பேர் என்னையும் சேர்த்து தான். அது நல்லதோ? கெட்டதோ? அந்த கெட்டதுலயும் நிறைய வித்யாசம் இருக்கு. கேடுகெட்டதெல்லாம் விதியேன்னு ஏத்துக்கற பக்குவம் எனக்கு வரலை. வரவும் வராது…”

“இவ்வளோ பேசற நீ விட்டு போகவேண்டியது தானேன்னு நினைக்கலாம். நான் ஏன் போகனும்? அப்படி விடனும்? எனக்கென்ன தலையெழுத்தா? நான் உண்மையா விரும்பினேன். அதையும் தாண்டி ஒழுக்கம்…”

“எனக்கு அது சொல்லி சொல்லி வளர்த்திருக்காங்க. உங்களை விரும்பிட்டேன், மனசால புருஷனா நினைச்சுட்டேன்னு தான் போராடி உங்களுக்காக காத்திருந்து இப்ப கல்யாணமும் செஞ்சுக்கிட்டேன். இந்த மாதிரி ஒரு ஒரு ச்சீ எனக்கு சொல்லவே பிடிக்கலை…” என அவனை பார்த்து எரிந்துவிழுந்தவள்,

“அசிங்கமா இல்லையா உங்களுக்கு? உங்க பழிவெறிக்கு எந்த அளவுக்கு நீங்க தரம் இறங்கி போவீங்களோ அந்தளவுக்கு என்னை வேற மாதிரி பார்க்கவேண்டியதாகிடும் பார்த்துக்கோங்க…”

“நான் எப்பவும் இப்படியே தண்ணி தெளிச்சுவிட்டு போகமாட்டேன். கேர்ஃபுல்…” என எச்சரித்துவிட்டு அவள் இறங்கிவிட அவள் சொல்லியதில் முகவும் குறுகிப்போனான் விபீஷ்.

அவன் பேசி முடித்த பின்புதான் தான் செய்த மடத்தனம் புரிந்தது. ஆனால் சீமாவின் உயிரற்ற பார்வை அவனை அதற்கு மேல் யோசிக்கவிடாமல் செய்ய இப்பொழுது அவளின் வாய்வார்த்தையாக கேட்டது இன்னமும் அவனை கீழாக என்ன வைத்தது.

அவனின் இந்த நிலைக்கு முதல் காரணம் முரளி. அதையும் தாண்டி இப்பொழுது வெண்மதியின் மீதான தன் காதல் தன்னை எந்த இடத்தில் கொண்ட நிறுத்தியிருக்கிறது என நினைத்து வெட்கினான்.

ஆசைப்பட்டேன் தான். அதற்காக அப்படியெல்லாம் செய்பவனா நான்? என எண்ணினாலும் சற்று முன் நீ பேசியதே உன் நடத்தையை காண்பித்து கொடுத்துவிட்டதே என மனசாட்சியே உமிழ்ந்தது.

காரைவிட்டு இறங்காமல் சாய்ந்து அமர்ந்திருக்க சீமாவிடமிருந்து அழைப்பு வந்தது. மொபைலை எடுத்து அட்டன் செய்தவன் பேசாமல் இருக்க,

“அங்கிள் பார்க்கனுமாம். வரீங்களா?…” என்றாள் உரிமையற்ற குரலில்.

சீமாவின் மீது மனைவியென்ற எண்ணமோ, உரிமையோ தனக்குள் வரவில்லை தான். ஆனால் அவள் தன்னை ஒதுக்கிவைத்து பேசுவதை ஏற்கவும் முடியவில்லை. ஒரு பெண்ணின் மதிப்பை இழந்துவிட்டேனே என நினைத்தவன் முகத்தை துடைத்துக்கொண்டு காரை விட்டு இறங்கி நடந்தான்.

தந்தையின் கடைசி ஆசையென அவர் இவனை நெருக்க சத்தியமாய் இப்படி ஒரு சூழலை அவன் எதிர்பார்க்கவே இல்லை. தான் சீமாவை அழைத்து அவளின் பெற்றோரை வர சொல்லியதில் இருந்து அடுத்தடுத்த நிகழ்வுகள் மிகவும் பரபரப்பாய் நகர்ந்தது.

சீமாவின் தாயும் தந்தையும் அடுத்த ஒருமணி நேரத்தில் வந்து சேர்ந்தனர். கையில் தாலியும் வீட்டில் இருந்த கொஞ்சம் பூவும், அட்சதையும், குங்குமமும் என வந்திருக்க கடைசி நிமிடத்திலாவது தந்தையின் மனம் மாறிவிடாதா என்ற பிரயாசையுடன் அவரை பார்த்தான்.

“முதல்ல ரெண்டு பேரும் போய் முகத்தை கழுவிட்டு வாங்க. சீமா தலையை சீவிக்கோ…” என வசுந்தரா சொல்ல,

“இல்லை அத்தை. எனக்கு இதுவே போதும்…” என்றுவிட்டாள் அவள். மனம் விண்டுபோய் இருந்தது.

“இப்படி ஒரு திருமணம் உனக்கு தேவையா?” என மனது இடித்துரைத்தது. கடைசி நிமிடம் கூட வெண்மதியின் நினைவுகளுடன் மாங்கல்யத்தை வாங்கி அதனையே வெறித்திருந்தவன் தன் முகத்தை ஏறிட்டும் பாராமல் மூன்று முடிச்சிட்டு குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்ததோடு தள்ளி நின்றுகொண்டான்.

அந்த திருமணத்தை எண்ணி மகிழவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இருந்த சீமாவின் நிலை தான் மிகவும் மோசம். கண்கள் கலங்க அவள் தன் நெஞ்சில் தவழ்ந்த மஞ்சள் கயிற்றை எடுத்துப்பார்க்க,

“இதுக்காகத்தான இத்தனை நாள் காத்திருந்த? சந்தோஷப்படவேண்டியது தானடா…” வசுந்தரா அவளின் கன்னம் வழித்து திருஷ்டி எடுக்க அவரின் காலில் விழுந்து ஆசி வாங்கினாள். அதற்கு கூட விபீஷ் வரவில்லை.

அறையில் வெளியே சென்று அமர்ந்துகொண்டான். சீமாவின் பெற்றோர்களும் சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட அந்த அதிகாலையில் நாகராஜனுக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டு வெற்றிகரமாய் காப்பாற்றியிருந்தனர்.

“ஆப்பரேஷன் சக்சஸ். இனி எந்த பிரச்சனையும் இல்லை…”

 அவன் அதை நினைத்து வருத்தமாய் இருக்கிறான் என்று சீமா வந்து சொல்ல அப்பொழுதுதான் தன்னிலை தெளிந்தவன் தன் கையை பார்க்க கடிகாரம் எதுவுமில்லாமல் இருக்க சீமாவின் கையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான்.

“இப்போ வெண்மதிக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கும் தானே? எல்லாம் போச்சு. என்னோட வாழ்க்கையும். இப்ப சந்தோஷமா எல்லாருக்கும்…” என்று அவளிடம் கத்திவிட்டு சென்றவன் சென்றவன் தான். மாலை வரை அவனை பார்க்கமுடியவில்லை.

சீமாவிற்கு திக்கென்று இருந்தது. அவனின் குரலும் முகமும் அவளை பயம்கொள்ள செய்ய எதிர்காலம் இருளாய் தெரிந்தது. ஒருவித வெறுமையும், கோபமும் ஆட்கொள்ள அவனை மீண்டும் பார்க்க நினைக்கவே இல்லை.

இப்பொழுதென்றால் சீமாவின் முழு கோபத்திற்கும் ஆளாகி மரியாதை இழந்து நிற்கும் தன்னிலை அதை விட மோசம். மனதில் பலவித நினைவுகள் அலைமோத தந்தை இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

விபீஷை பார்த்ததும் நாகராஜின் முகம் ஒளிர்ந்தது. அவனின் கையை பற்ற அவரின் கரம் துடிப்பதை பார்த்துவிட்டு வசுந்தரா தான் அவரிடம் விபீஷின் கையை பிடித்து கொடுத்தார்.

அதை இருக்கமாய் பற்றிக்கொள்ள நாகராஜின் கை நடுக்கத்தை உணர்ந்துகொண்டவன் இப்பொழுது கொஞ்சம் மனம் இளகி ஆறுதலாய் தட்டிக்கொடுத்தான்.

“உங்களுக்கு ஒண்ணுமில்லைப்பா. சரியாகிட்டீங்க. சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம்…” என அவர்க்கு சொல்ல சீமாவை பார்வையால் அழைத்தவர் இருவரையும் சேர்த்து பார்த்துவிட்டு சைகையில் எதுவோ சொல்ல அனைவருக்குமே புரிந்தாலும் ஒருவரும் எதையும் பேசவில்லை.

“அப்பா ரெஸ்ட் எடுங்க…” என பல்லிடுக்கில் வார்த்தைகளை துப்பியவன் எழுந்து கீழே கார்டனுக்கு சென்று அமர்ந்துகொண்டான்.

அவனின் கோபமும், வேகமும் மற்றவர்கள் முகத்தையும், மனதையும் சுருக்கென்று தைக்க வசுந்தரா தான் சங்கடமாய் பார்த்தார் சீமாவை.

அவள் இதில் தனக்கொன்றும் பாதிப்பில்லை என்னும் விதமாய் தோளை குலுக்கிவிட்டு நகர,

“இப்ப வந்திடறேன் சீமா…” என்ற வசுந்தரா மகனை தேடிச்சென்றார்.

கீழே அவனை பார்த்ததும் வேகமாய் சென்றவர் மகனின் முகத்தில் படிந்திருந்த துயரில் கோபமெல்லாம் வற்றிப்போனவராக ஆயாசத்துடன் அருகே அமர்ந்தார்.

“என்ன பண்ணனும்னு நினைக்கற விபீஷ்? அப்பா கேட்டதுக்காக அவர் ஆறுதலுக்காக கூடவா உன்னால சரின்னு சொல்ல முடியலை?…” துக்கத்துடன் பேசியவரை கண்கள் சிவக்க பார்த்தவன்,

“குழந்தைன்றது சாதாரண விஷயமா? அவ்வளோ ஈசியாகிடுச்சுல என் வாழ்க்கை. உங்களுக்காக கல்யாணம், கடைசி ஆசை நிறைவேற பேரன் பேத்தி. அப்போ எங்களுக்கான வாழ்க்கையை நாங்க வாழவே முடியாதுல. இன்னும் எத்தனை வருஷம் தான் இதையே செய்வீங்க?…” என எரிந்து விழுந்தான் வசுந்தராவிடம்.

“விபீஷ்…”

“எனக்குன்னு நான் என்ன ஆசைப்பட்டேன் சொல்லுங்க? சீமாவை நீங்க தான் எனக்கு முடிவு பண்ணுனீங்க. அப்போ சம்மதிக்க எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. காதல் அப்டின்ற ஒன்னை நான் பீல் பண்ணவே இல்லை…”

“ஆனா இப்போ? இத்தனை வருஷம் நான் உங்களுக்காக உங்க ஆசைக்காகன்னு தானே வளர்ந்தேன், படிச்சேன், வாழ்ந்தேன். இப்பவும் உங்களுக்காக இந்த கல்யாணத்தையும் பண்ணிவச்சாச்சு. இதுக்கு மேல நீங்க அத்துமீறாதீங்க. நல்லா இருக்காது சொல்லிட்டேன்…”

“விபீஷ் நாங்க உன் நல்லதுக்கு தான்…” என்றவரை கையெடுத்து கும்பிட்டவன்,

“என் நல்லதுக்கு செஞ்சு இப்ப என்னை எந்த இடத்துல கொண்டுவந்து நிறுத்தீருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாதும்மா. அதை நீங்க தெரிஞ்சுக்கவும் வேண்டாம். இது என்னோடையே போகட்டும். ஆனா இதுக்கு மேல என்னை நெருக்கினா? ப்ச், நல்லா இல்லை. அவ்வளோ தான்…”

மகனின் பேச்சில் அதிர்ந்து பார்த்தவர் பதில் பேசமுடியாது அப்படியே திகைத்துபோய் அமர்ந்திருக்க தாங்கவியலாமல் அவரை தோளோடு அணைத்தவன்,

“இனிமேயாச்சும் என்னை புரிஞ்சுக்க பாருங்கம்மா…” என கெஞ்ச உருகிப்போனார் தாய்.

“கலை மாப்பிள்ளையை கொஞ்சம் நேரம் தூங்க சொல்லேன். சாப்பிட்டதும் ரெஸ்ட் எடுக்கட்டும்…” நடேசன் மனைவியை ஏவ,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா.எ இந்நேரம் தூக்கம் வராது. நான் முழிச்சே இருக்கேன்…” என்ற முரளி வெண்மதியை தேட அவள் தன் துணிமணிகளை எடுத்துவைத்துக்கொண்டிருந்தாள்.

“அங்க தேவையானதை மட்டும் நீ எடுத்துக்கோ மதி. மிச்சத்தை நாங்க நாளைக்கு அனுப்பறோம். நீ பேக்கிங் மட்டும் பண்ணி வை…”

“பேக் பண்ண எனக்கு கொண்டுபோக தெரியாதா? அதான் அத்தனை பெரிய கார் கொண்டுவந்திருக்கார்ல. கொண்டுபோகட்டும். என்னவோ அவர் தலையில தூக்கிவிட்டு இங்க இருந்தே நடக்கவிடப்போற மாதிரி என்ன கரிசனம் மருமகன் மேல?…”

வெண்மதி படபடக்க கலைவாணிக்கு கோபமும் சிரிப்பும் ஒருங்கே வந்தது. அதையும் தாண்டி மனதில் சில கலக்கங்களும், சஞ்சலமும், குற்றவுணர்வும்.

“என்னம்மா வாயடைச்சுப்போய்ட்டீங்க? இதுக்குத்தான் என்கிட்டே ஒன்னு சொல்லுமுன்ன யோசிக்கனும்…” என வெண்மதி அவரை பார்க்காமலே பேசிக்கொண்டிருக்க கலைவாணி அமைதியாக இருந்தார் மகளை பார்த்துக்கொண்டே.

“இன்னைக்கு நானே எழுந்து நானே குளிச்சு சீக்கிரமா ரெடியானேன். தெரியுமா?…” என பெருமையாக சொல்ல,

“அதான் இங்க உனக்கு  நான் இருந்தேனே தினத்துக்கும் சொல்ல. அங்க யாருமில்லைன்னு இருந்திருக்க. இந்தமட்டும் போதுமாத்தா. புண்ணியமா போகும்…” என கலைவாணியும் மகளை கேலி பேச,

“அதான பாராட்டிட கூடாது…” என முணுமுணுத்துக்கொண்டே ஒரு பேக்கை முடித்து பூட்டி கீழே வைத்தவள்,

“வீட்டையே காலி பண்ணி போற மாதிரி இருக்கு. என்னவோ மாதிரி. ப்ச், ம்மா கொஞ்சம் ட்ரெஸ் இங்க இருக்கட்டும். வந்தா போட்டுப்பேன்…” வெண்மதி சொல்லும் பொழுதே கலைவாணி உடைந்துவிட்டார்.

“நீ அங்க நல்லா இருக்கனும் மதி. அடிக்கடி இங்க…”

“இனி இந்தப்பக்கம் தலைவச்சு படுத்தேனா என்னன்னு கேளுங்க…” தாயின் கலங்கிய குரலில் பேச்சை திசைதிருப்பியவளுக்கும் தொண்டை அடைத்தது.

இதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த முரளி கலைவாணியின் முகத்தை பார்த்ததும் அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

“அவங்களே நீங்க கிளம்பற வருத்தத்துல இருக்காங்க. நீங்களும் ஏன் பீல் பண்ண வைக்கறீங்க வெண்மதி?…” என்று மாமியாருக்கு ஆதரவாய் கரம் நீட்ட அவனை முறைத்தாள் மனைவி.

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு முறைக்கறீங்க?…”

“இங்க இருக்கற என் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட சொல்றாங்க. எதையும் மறந்துட்டு போய்டகூடாதாம்…” என விட்டேற்றியாக அவள் சொல்ல,

“இப்போ என்ன இங்க இருந்து கிளம்பற வரைக்கும் அவங்க சொல்றதை கேட்கறதால என்னாகிடுமாம்? அவங்களுக்கும் சந்தோஷாமா இருக்குமே?…” என்றவன் தனது மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு பாத்ரூமிற்குள் செல்லப்போக,

“ஆமா சந்தோஷமா இருப்பாங்க. சொல்றதை எல்லாம் கேட்க தான செஞ்சேன். கல்யாணத்தை நிறுத்துன்னாங்க நிறுத்தினேன். இப்ப நடத்தனும்னாங்க தலையாட்டினேன். நன்றிக்கடன்ற பேர்ல எல்லாத்துக்கும் சரி சொல்லி சொல்லி தான் இப்படி…” என உளறியவள் சட்டென பேச்சை நிறுத்திவிட்டு முரளியின் முகம் பார்க்க,

“என்ன சொன்னீங்க? திரும்ப சொல்லுங்க வெண்மதி…” என அவளின் முன்னே வந்து நிற்க இல்லை என்பதை போல அவள் தலையசைக்க,

“இப்ப சொன்னதை அப்படியே சொல்லுங்க…” என கேட்டதும் முகம் திருப்பியவள்,

“அது ஏதோ பேச்சுவாக்கில…”

“வெண்மதி…” என்றான் கோபமாய்.

“மதி…” என்றபடி கதவை தட்டினார் கலைவாணியின் அக்கா மங்களம். அவரின் குரல் கேட்டதும் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு முரளி பாத்ரூம் செல்ல வெண்மதி பேக்கிங்கை பார்த்தாள்.

“என்னடி பெட்டியக்கட்டிட்ட போல?…” என வந்து சட்டமாய் கட்டிலில் அமர அவரை பார்த்துக்கொண்டே பதில் பேசாமல் தன் வேலையில் கவனமாக,

“உன் புருஷன எங்க?…” என்றார். உள்ளே இருக்கிறான் என்றால் நிச்சயம் பேசிவிட்டு தான் செல்வேன் என அமர்ந்துவிடுவார் என்பதால்,

“வெளில போயிருக்காங்க…”

“பெரியம்மான்னா முத்தா உதிந்துரும். ஆனாலும் ரொம்ப மண்டக்கனம்டி உனக்கு…” என்னும் பொழுதே வெண்மதிக்கு சுர்ரென வந்தது.

“இத சொல்லத்தான் வந்தீங்களா?…” என்றாள்.

“நீ என்னவேணா பேசிக்க. உனக்கு புத்தி சொல்ல வேண்டியது என்னோட கடமை. அத நான் சொல்லத்தான் செய்வேன். உன் திமிரெல்லாம் என் தங்கச்சிக்கிட்ட காட்டு. என்கிட்டே வேண்டாம்…” என மங்களமும் சொல்ல எரிச்சலான முகத்துடன் அவரை பார்த்தவள்,

“வேண்டாம்னு நான் சொன்னா மட்டும் விட்டுடுவீங்களா? எங்கம்மாக்கிட்ட நான் என்னவேனா செய்வேன். நீங்க சொல்ல தேவையில்லை…” என்று வேறு சொல்லி அவளுக்கு முரளி உள்ளே இருக்கிறான் என்கிற ஞாபகமின்றி வார்த்தையை விட மங்களம் இகழ்ச்சியாய் சிரித்தார்.

“என்னமோ அவ வயித்துல பொறந்தவளாட்டம் உரிமையா பேசற?…” என்று சொல்லியதுமே உடைந்துபோனாள் வெண்மதி. கண்கள் கலங்கும் போல இருக்க,

“நீ என்ன வேணா பேசிக்க. என்னவோ நின்ன கல்யாணத்த போராடி முடிச்சுட்டா என் தங்கச்சி. போற இடத்துல அவளோட வளர்ப்புக்கு பங்கம் வராம புத்தியோட பொழச்சுக்க. இனியும் அவளுக்கு நீ பாரமா இல்லாம அவளையும் அவ புருஷனையும் பார்த்துக்கற வழியை பாரு…”

“உன்னை எடுத்து படிக்கவச்சு வளர்த்ததுக்கு கடைசி காலத்துல நன்றியுள்ளவளா கஞ்சி ஊத்து. அந்த மனுஷன் சம்பாத்தியம் அத்தனையையும் தான் முழுங்கிட்டியே. இனி நீ பார்த்துக்க. உனக்கு புண்ணியம் கிடைக்கும். புரியுதா?…” என சொல்லி செல்ல கையில் வைத்திருந்த துணியை அப்படியே பிடித்தபடி உதடு துடிக்க மங்களம் செல்வதையே பார்த்தவள் அவர் சென்றதும் பார்வையை திருப்ப அங்கே முரளி சுவற்றில் சாய்ந்தவண்ணம் நின்றிருந்தான்.

“முரளி…” என உதடுகள் முணுமுணுக்க அவனின் வாவென்னும் தலையசைப்பிலும், கையசைவிலும் ஓடிச்சென்று அவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டவளின் கண்கள் கண்ணீரை சிந்தின.

“இதுக்காக தான் நான் கூப்பிட்டப்போ வரமாட்டேன்னு சொன்னீங்களா வெண்ணிலா?…” என்றான் கரகரப்பான குரலில்.

“நான் அனாதையில்லை முரளி. அம்மா இருக்காங்க. அப்பா இருக்காங்க. இப்ப நீங்களும்….” அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வேறொன்றை அவனுக்கு உணர்த்த உருகிப்போனான் அவளின் கதறலில்.

Advertisement