Advertisement

நிலவு – 12

             கிட்டத்தட்ட இரண்டுமணிநேரத்திற்கும் மேல் வசுந்தரா விபீஷ் மனசை மாற்ற பேசி பேசி களைத்தேவிட்டார். கலங்கிய அவரின் தோற்றம் விபீஷையும், சீமாவையும் வருத்தியது.

அவரிடம் முதலில் மறுத்து பேசியவன் பின் பேசுவது பிரயோஜனமில்லை என்பதை போல செவிடனாய் அமர்ந்திருந்தான்.

“விபீஷ் நான் பேசறேன். நீ கவனிக்காதது மாதிரி இருந்தா என்னடா அர்த்தம்?…” என கோபமாய் குரலை உயர்த்த அதுவரை அமைதியாக இருந்தவன் சீமாவை பார்த்தான்.

அவளின் முகத்தில் தன பார்வையை நொடிக்கும் குறைவாக நிலைக்கவிட்டவன் பின் தாயை பார்த்து,

“எழுந்திரிங்கம்மா. கிளம்புங்க நீங்க. நான் சீமாக்கிட்ட பேசனும்…”

“எதுனாலும் என்னை வச்சி பேசுடா. தனியா நீ பேசி அவ மனசை மாத்திருவ…” விபீஷிடம் அவர் படபடக்க அவனிதழ்களில் புன்னகை.

“நீ இப்படி சிரிச்ச  முகமா குடும்பம் குழந்தைன்னு சீமாவோட வாழ பார்க்க எனக்கு எத்தனை ஆசையா இருக்கு தெரியுமா விபீஷ்…” அவனின் முகத்தை வருடி சொல்ல,

“இப்ப எனக்கு கூட ஆசையா தான்ம்மா இருக்கு. நீங்க சம்மதிச்சா முகம் நிறைய சிரிப்போட குழந்தைகளோட வாழ எனக்குமே ஆசை வந்திருச்சு. ஆனா வெண்மதி கூட. சீமா கூட இல்லை…”

இதை சொல்லி சீமாவை பார்க்க ஒரு வெறுமையான பார்வையோடு அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றாள்.

“திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லாத விபீஷ்…”

“ம்மா, வாங்க இங்க…” என்று அறையின் வாசலில் கொண்டுவந்து விட்டவன்,

“ரொம்ப பசிக்குது. ஏதாவது ரெடி செய்ங்க கீழ வரேன்…” என்றுவிட்டு கதவை அடைத்தவன் சீமாவை பார்த்தான்.

“உட்கார் சீமா…” என்றதற்கும் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

“ப்ச்…” என்றவன் அவளின் கை பிடித்து இழுத்துவந்து அமர்த்தினான். அவனும் அவளுக்கு கொஞ்சம் இடைவெளிவிட்டு அமர்ந்தான்.

எப்பொழுது அவளிடம் நெருங்கி பழகியதில்லை தான். அப்பொழுதெல்லாம் உணராத ஒரு வெற்றிடத்தை இப்பொழுது உணர்ந்தாள். கண்ணீர் வரும் போல் இருந்தது. ஆனால் அலுத்து கரையும் சமயமல்லவே.

எங்கே தான் அழுது அவன் தன்னை பேசி சரிக்கட்டி அவனின் வாழ்க்கையில் இருந்து விலக்கிவைத்துவிடுவானோ என்று பயந்தே அழுகையை மென்று விழுங்கினாள்.

புத்தி மனது இரண்டையும் ஒரு இடத்தில் கட்டிவைத்தாள். எதற்கும் வாய்ப்பு கொடுக்காது அவனை எதிர்கொள்ள தயாரானாள்.

“சீமா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. எனக்கு வெண்மதி வேணும். ஐ லவ் ஹெர்…”

“போடா ஹேரு” என மனதில் கொந்தளித்தாள். ஆனாலும் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

“சீமா வாயை திறந்து பதில் சொல்லு. உனக்கே தெரியும் நான் எந்த விதத்திலும் உன்னை அட்ராக்ட் பண்ண ட்ரை பண்ணினதில்லை…”

“நான் தான் பண்ணேன். உங்களை கவர ட்ரை பண்ணேன். அதுக்கென்ன இப்போ? ஒத்துக்கறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை…” பளிச்சென அவள் சொல்ல,

“ஏய் ச்சீ பைத்தியமா நீ. நான் என்ன பேசறேன், நீ என்ன பதில் சொல்ற?…” என முகத்தை சுளித்தான்.

“நீங்க பேசறதுக்கு இப்படியும் அர்த்தம் எடுத்துக்கலாம் அத்தான்…”

“சீமா, சீமா, உனக்கு எப்படி புரியவைக்க? இப்ப கோட்ட பாரு என்னால உன்கூட கொஞ்சம் நேரம் கூட சுமூகமா பேச முடியலை. நம்மோட சுபாவம் அப்படி. ஆனா வெண்மதி. அவ என்னோட இருந்தா என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் சீமா…”

“அப்படி என்ன அத்தான் அவகிட்ட பார்த்தீங்க? அவ்வளவு அழகா?….” எள்ளலாய் சீமா கேட்க,

“அழகா அப்படி பார்த்தா உன் அழகுல என்னைக்கோ நான் உன்மேல காதலாகி இருக்கனும். ஆனா இப்போ வரை எனக்கு அந்த தாட் வரலை. நீ இல்லாம இருக்க முடியாதுன்ற நிலைமை வரலை…”

“இப்போ வரலைன்னு சொல்லுங்க…”

“இல்லை எப்பவும் வராது சீமா. ஆனா வெண்மதி எங்க எனக்கு இல்லாம போய்டுவாளோன்ற பயம் என்னை அரிக்க ஆரம்பிச்சுடுச்சு…”

“தப்பு அத்தான். எங்க முரளியை மேரேஜ் பண்ணிடுவாளோன்ற பயம்ன்னு சொல்லுங்க…”

“இது அதையும் தாண்டியது சீமா. என்னால அவ இருந்தா தான் சிரிக்க முடியும்…”

“அவ என்ன சர்கஸ் பொம்மையா? இல்லை காமெடி பீஸா? சிரிக்க முடியும்ன்னு சில்லி ரீசன் சொல்றீங்க?…” சீமா கிண்டல் பேசியதில் எரிச்சலானவன்,

“உனக்கு போய் எக்ஸ்ப்ளைன் பண்ணனும்னு நினைச்சேன் பாரு…” என கோபமாய் எழுந்து செல்ல முயல அவனின் கை பிடித்து இழுத்து அமர்த்த வெகு கவனமாய் இன்னும் இடைவெளி விட்டே அமர்ந்தான்.

“இதுக்கொண்ணும் குறைச்சலில்லை” என மனதில் வசைபாடியவள்,

“வெறும் சிரிப்புக்காக அந்த பொண்ணை கட்டிக்கனும்னு நினைக்கறீங்க, அந்த பொண்ணுக்கு முரளியை பிடிச்சிருந்தா?…”

“நிச்சயம் என்னால முரளியை விட அதிகமா வெண்மதியை நல்லா பார்த்துக்க முடியும் சீமா…”

“லூசா அத்தான் நீங்க? இப்பவும் வெண்மதியை நீங்க மேரேஜ் பண்ணினா உங்களை தவிர நாங்க மூணு பேரும் தான் தண்டனை அனுபவிப்போம். அது உங்களையும் சுட்டுடும் அத்தான்…”

“அவ என்னை பீல் ப்ரீயா பீல் பண்ண வைக்கறா சீமா…”

“வாழ்க்கை முழுக்க யாரும் சிரிச்சுட்டே இருக்க முடியாது அத்தான். உங்களை பார்த்துக்க என்னை தவிர வேற யாராலையும் முடியாது…”

“இல்லை இப்பவும் இப்படி என்னோட நீ இவ்வளோ ஆர்க்யூ பன்ற. நமக்கு கல்யாணம் ஆனா நிச்சயம் சந்தோஷமா இருக்க முடியாது…”

“இந்த ஆர்க்யூமென்ட் தான் என்னை எத்துக்கவிடாம பண்ணுதுன்னா இதே ஆர்க்யூமென்ட் தான் உங்களோட வாழவும் வைக்கும். நம்மை மாதிரி எதிர்துருவங்கள் தான் இணையனும் அத்தான். அப்போ தான் வாழ்க்கை சுவாரசியமா இருக்கும்…”

“இதை நான் சுயநலமா தான் சொல்றேன். என்னோட சுயநலம் வெண்மதியையும் காப்பாத்தும். என்னையும் வாழவைக்கும்…” என்றவளை அழுத்தமாய் பார்த்தான்.

“என்னால உங்களை விட முடியாது அத்தான். என்னை தவிர யாராலையும் உங்களை புரிஞ்சு நடந்துக்க முடியாது. நான் உங்களை தவிர வேற யாரோடும் வாழ முடியாது. இதை விட வேற எப்படி எக்ஸ்ப்ரெஸ் பன்றது அத்தான்?…”

அழக்கூடாது என இருந்தவள் கடைசி வரிகளில் கதறிவிட அவளின் கண்ணீர் அவனை சுட்டது. மெதுவாய் அவளருகே அமர்ந்து அவளின் கையை பட்டும்படாமல் பிடித்தவன் ஆறுதலாய் தட்டித்தர,

“என்னால உங்களை விட்டுக்குடுக்க முடியாது அத்தான். நான் உங்களை கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழனும்…” கண்ணீரை துடைத்துவிட்டு அவன் முகம் பார்த்து சொல்ல வேதனையில் முகம் கசங்க அவளை பார்த்தவன்,

“நீ நினைச்சது நிச்சயம் நடந்திருக்கும் சீமா, நான் வெண்மதியை பார்த்து பேசாம இருந்திருந்தா, முரளி எனக்கு குடுத்த வாக்கை நிறைவேத்தி இருந்தா, நமக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் முதலில் குறிச்சது போல நடந்திருந்தா நம்மோட மேரேஜ் நடந்திருக்கும்…”

“அத்தான்…”

“அப்பாவும் காதலா நான் சம்மதிக்கலை சீமா, உனக்கு தெரியும் தானே? வாழ்க்கையில் கல்யாணம் ஒரு அங்கம். அதுக்கு எனக்காக நிச்சயிக்கப்பட்ட பொண்ணு நீ. அது மட்டும் தான் நம்ம மேறேஜ்க்கு நான் சம்மதிச்சதுக்கான காரணம்…”

“ஆனா ஒன்னு உனக்கு புரியனும்…” என்றவனிடமிருந்து கையை வெடுக்கென பறித்து எழுந்தவள் இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டவாறு அவனை பார்க்காமல்,

“போதும் அத்தான் எனக்கு புரிஞ்சவரை போதும். ஒண்ணொண்ணா சொல்லி சொல்லி எந்த வகையிலும் நீ என்னை பாதிக்கவே இல்லைன்னு குத்தி குத்தி என்னை கொன்னுட்டு இருக்கேங்க…”

“சீமா லிசன்…”

“அதான் போதும்ன்றேன்ல, இதுவரைக்கும் என்னை வேதனை படுத்தினது பத்தாதா? ஆனா ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்றேன் உங்களுக்கு மனைவின்னா அது நான் மட்டும் தான். வெண்மதி உங்க வாழ்க்கையில் இல்லை…”

“அதை நீ சொல்ல கூடாது சீமா…” மீண்டும் கடுமையாக அவளிடம் அவன் பேச,

“நான் தான் சொல்லுவேன், எனக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு. வெறும் சிரிப்புக்கும், ரிலாக்ஸ் பீல்க்கும் யாராச்சும் கல்யாணம் செய்வாங்களா? ரிலாக்ஸ் ஆகனும்னா நல்ல சைக்யாட்ரிஸ்ட் பாருங்க. மனசு விட்டு சிரிக்கனும்னா லாபிங் தெரபி பண்ணுங்க. இதென்ன ஒரு பொண்ணை தாலியை கட்டி கூட்டி வந்து சிரிக்க வைன்னுட்டு…”

சீமா அனைத்தையும் கடந்திருந்தாள். இனி அவனை அப்படியே விடக்கூடாது என்னும் முடிவுக்கு வந்துவிட்டாள்.

இதனால் தன் வாழ்க்கை பறி போவதோடு முரளி, வெண்மதி வாழ்க்கையும் பலியாகக்கூடும் என நினைத்தாள்.

“நீ நினைக்கறது நடக்காது சீமா. உன் மனசை மாத்திக்கறது தான் நல்லது…”

“நீங்க நினைக்கிறது தான் நிச்சயம் நடக்காது. வெண்மதியை விட்ருங்க…”

“அவளுக்கு முரளியை பிடிக்கலை. அவனே கட்டிக்க சொல்லி அவளை மிரட்டிருக்கான்…”

“விருப்பம் இல்லாத பொண்ணை மிரட்டி கல்யாணம் செஞ்சுக்கற ஆளா முரளி? நம்ம விஷயத்துலையே அவரை நமக்கு நல்லா தெரியுமே? அப்பா வேன்மதிக்கும் விருப்பம் இருக்க போய்த்தானே முரளி கல்யாணம் வரைக்கும் போயிருக்கார். அதோட முரளிக்கு யாரையும் ஹர்ட் பண்ணி பழக்கம் இல்லை…”

“என் முன்னால அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாத சீமா…” அவளை அடித்துவிடுவதை போல அவன் வர அசையாது நின்றாள் சீமா.

“உண்மை அப்படித்தான் இருக்கும் அத்தான். நீங்க விரும்பாட்டாலும். நான் போராடறது உங்களுக்கும் சேர்த்து தான். உங்களோட குணத்துக்கு என்னை தவிர வேற யாரும் உங்களுக்கு செட் ஆக மாட்டாங்க. இதை நீங்க அக்ஸப்ட் பண்ணி தான் ஆகனும்…”  என சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து வெளியேற தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் விபீஷ்.

“அத்தை உங்க பையனுக்கு எக்கச்சக்கமா மசாலா தூவியிருக்கேன். காரம் இங்க வரைக்கும் எரியும். பேச்சுக்குடுத்துராதீங்க. தானா வந்து பேசட்டும். நான் கிளம்பறேன்…”

“இங்கயே தங்கேன் சீமா. இன்னும் எதுக்கு ஹாஸ்டல்?…” வசுந்தரா சொல்ல,

“இல்லை அத்தை. முழு உரிமையோட நான் இந்த வீட்டுல தங்கறேன்…”

“என்னைக்கோ கிடைச்சிருக்க வேண்டியது அது…” அவர் பெருமூச்சு விட,

“அத்தை ப்ளீஸ்…”

“அட்லீஸ்ட் வீட்டுக்கு…”

“இதுக்கு மேல பேசினீங்க நான் இங்கயும் வராம போய்டுவேன்…” என மிரட்ட,

“இல்லை பேசலை…” என்று பாவமாய் வாயை மூடிக்கொள்ள அவரை அணைத்தவள்,

“வரேன் அத்தை…” என சொல்லி கிளம்பிவிட்டாள்.

செல்லும் அவளையே பார்த்தவர் மகன் வருவானா என பார்த்து பார்த்துவிட்டு பெயருக்கு உண்டுவிட்டு இருந்துகொண்டார்.

சாப்பிட மனமில்லைதான். ஆனாலும் உண்டாகவேண்டுமே. ஏற்கனவே கணவருக்கு உடல்நிலை சரியில்லை. இங்கே தானும் சரியாக உண்ணாமல் இருந்து உடம்புக்கு வந்துவிட்டால்?

மகனையும், கணவரையும் யார் பார்ப்பது? அதிலும் அவனின் எதிர்காலம். சீமாவுடன் அவன் வாழ்க்கையை சீராக ஆரம்பித்துவிட்டால் அதன் பின் என்னவானாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் அளவில் தெளிவாய் இருந்தார்.

இப்பொழுது அனைத்திற்கும் சிகரமாய் வேறு பெண்ணை அதுவும் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டு திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று வந்து நிற்கிறானே?

இவனையே நினைத்து நினைத்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சீமாவின் எதிர்காலம் என கவலை அவரை புற்றீசலாய் அரித்தது. கணவரிடம் நடந்ததை சொல்ல சுருக்கென்றது அவருக்கு.

யோசனையுடன் இரவுணவை முடித்து அவர் படுக்க சென்றுவிட வசுந்தரா மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார்.

விபீஷ் வருவான் என பார்த்தால் இரவு உணவு நேரத்தை கடந்தும் அவன் வரவே இல்லை. அவனின் அறை வாசலில் அவனுக்கான உணவை வைத்துவிட்டு அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு வந்து படுத்துவிட்டார்.

எத்தனை நாள் இப்படி பார்த்துவிட்டார், இது என்ன புதிதா? ஒருவித சலிப்புடன் உறங்க சென்றார்.

——————————————————

நாட்கள் சென்ற வேகம் தெரியாது திருமணத்தின் முதல் நாளில் வந்து நின்றது. திருமணத்திற்கு முதல்நாள் காலை.

வெண்மதியும் ஈஸ்வரியும் அவளின் அறையில் கைகளுக்கு மருதாணி இட்டுக்கொண்டிருந்தனர்.  கலைவாணி இருவருக்குமான நொறுக்குத்தீனிகளை வைத்துவிட்டு சென்றார்.

“இப்ப தாண்டி களவாணி என்னை முறைச்சுக்காம இருக்குது. ஆனாலும் அந்த வில்லி லுக் மாறவே இல்ல…” ரகசியம் போல வெண்மதியின் காதில் சொல்லி ஈஸ்வரி கேலி பேச,

“இன்னும் கொஞ்சம் சத்தமாவே சொல்லு, அம்மாவுக்கு கேட்டுடும்…”

“என் நிலை கெட்டுடும். நே தான் உண்மையான வில்லிடி…” என அவளை இடிக்க,

“இப்ப மருதாணி வச்சு எப்ப காய?…” என சொல்லியபடி தன் கனத்த சரீரத்துடன் உள்ளே வந்தார் கலைவாணியின் அக்கா மரகதம். அவரை பார்த்ததுமே முகம் சுருங்க எரிச்சலாய் அவரை பார்த்தாள் வெண்மதி.

“உனக்கு கல்யாணம் கூடி வரும்ன்னு நான் நினைச்சே பாத்ததில்லை. ஆனா பாரு உன் அம்மா சம்பந்தம் முடிச்சுட்டதை ரொம்ப லேட்டா தான் சொல்றா. கொஞ்சமாவது அக்கான்னு மதிச்சு கூப்பிட்டாளா என்னை?…”

“கூப்பிடாமலா வந்தீங்க? அதான் வந்துட்டீங்கல்ல…” பட்டென்று வெண்மதி பேச,

“அக்கா இங்க என்ன பன்றீங்க? வந்து மண்டபத்துக்கு கிளம்ப எடுத்துவைக்க எனக்கு சொல்லுங்க. நான் மறந்துடுவேன்…” என வேகமாய் வந்த கலைவாணி அவரை அங்கிருந்து நகர்த்த பார்க்க,

“என்னடி உன் பொண்ணு என்னன்னா வந்தவளை வான்னு கூட கூப்பிடாம எடுத்தெறிஞ்சு பேசறா. நீ என்னன்னா இங்க நிக்காதன்ற மாதிரி விரட்டற. இதுக்குத்தான் என்னை கூப்பிட்டியோ? கொஞ்சமாவது…”

“அக்கா…” என குரலுயர்த்திய கலைவாணியின் கண்களில் கெஞ்சலும் கண்ணீரும் நிறைய,

“இதுக்கு நான் வராமலே இருந்திருக்கலாம்…” என வெண்மதியை பார்த்துக்கொண்டே குத்தலாய் சொல்ல அவள் பதில் சொல்லாமல் வேடிக்கை பார்த்தாள்.

“மதி மாப்பிள்ளை போன் பண்ணிருந்தாரு. உன் போன் ஹால்ல சார்ஜ்ல இருந்துச்சு. இந்தா பேசிடு…” என கொடுத்தவர் தன் அக்காவை இழுத்துக்கொண்டு வெளியே நடந்தார்.

“நான் ஹெல்ப் செய்யவா மதி?…” ஈஸ்வரி குறும்பாய் கேட்க அவளை முறைத்தவள்,

“என் ஹெட் போனை எடுத்துட்டு வந்து அட்டாச் பண்ணு. போதும்…” என்றவள் கால் செய்ய முதல் ரிங் போனதுமே எடுத்துவிட்டான் முரளி.

“வெண்ணிலா…”

“வெண்மதி…” என்றவள்,

“புராணத்தை ஆரம்பிக்காம சொல்லுங்க…” என மிரட்ட வேறு செய்ய,

“ஹ்ம்ம், இப்பவே வொய்ப் ஆகிட்டீங்க. பர்பெக்ட்…” என சில்லாகித்தான் மறுமுனையில்.

“ஏன்? எதுக்கு சொல்றீங்க?…” அவனின் வார்த்தையில் சிலிர்த்தது இவளுக்கு. ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை.

“மிரட்டறீங்களே. அதான்…”

“அடடா இதுவரைக்கும் நான் மிரட்டினதில்லை. நீங்களும் கேட்டதில்லை…” அவனை பரிகாசம் பண்ண அவனின் புறம் ஆழ்ந்த அமைதி.

“முரளி…”

“ஹ்ம்ம்…” ஹஸ்கி வாய்ஸ் தான் இவனிடத்தில்.

“என்னாச்சு சட்டுன்னு சைலன்ட்…”

“நாளைக்கு இந்நேரம் நீங்க என்னுடைய முழு மனைவி…” அவனின் குரல் தித்திப்பாய் உள்ளிறங்க அதற்கு மேல் பேசமுடியாது,

“இப்ப முக்கால் மனைவியா? வைங்க போனை…” என்று கட் செய்துவிட ஈஸ்வரி வாய்க்குள் சிரிக்க,

“அய்ய போதும்…” என அவளை அடக்கினாலும் என்னவோ படபடப்பாய் இருந்தது.

என்ன முயன்றும் பழைய நினைவுகள் படமெடுக்கத்தான் செய்தது. அதிலும் மரகதத்தின் வருகை ஆறிய புண்ணை கிளறியதை போலானது.

ஈஸ்வரி அவளின் நிலை அறிந்து கைகளை இருக்கமாய் பற்றிகொண்டாள்.

“இது சரிவருமான்னு இப்பவும் படபடப்பா இருக்கு ஈஸ்…” மனதை மறையாமல் வெண்மதி சொல்ல ஈஸ்வரிக்கு தான் திக்கென இருந்தது.

Advertisement