Advertisement

“புரிதல் இருந்தா தான் நம்ம வாழ்க்கை பயணம் சிறக்கும்…” குறும்பாய் கூற,
“என்ன நம்ம வாழ்க்கையா? உங்களையே வேண்டாம்னு சொல்றேன்…” என்றவள்,
“இது எதுவும் எனக்கு தேவை இல்லாத விஷயம் முரளி. நான் கேட்க நினைக்கிறது ஒரே விஷயம் மட்டும் தான். எதுக்காக இத்தனை நாள் இல்லாம இப்ப திடீர்னு வந்து என்னை டிஸ்டர்ப் பன்றீங்க?…”
“என்னை விரும்பற ஒருத்தரை நான் எப்படி விட முடியும் வெண்ணிலா?…” 
“இப்ப நீங்க தான் பைத்தியம். எனக்கு கல்யாணம் பண்ணிக்கறதுலையே இஷ்டம் இல்லை. அதுதான் உங்ககிட்டயும், உங்க ப்ரெண்ட் ஹரிஹரன்கிட்டயும் பொய் சொன்னேன். நான் இன்னொருத்தரை விரும்பறதா…”
“ஆனா நான் உண்மையை தான் சொல்றேன். என்னால உங்களை விட முடியாது…”
தன்னைப்போல அவனும் பிடிவாதமாய் இருக்க செய்வதறியாமல் அழைப்பை துண்டித்து மொபைலை ஆஃப் செய்துவிட்டு படுத்துவிட்டாள்.
 வேண்டுமென்று விரும்பும் வாழ்க்கை தேடி வர அதை எட்டி உதைக்கும் அளவிற்கு தன் நிலை ஆகிவிட்டதே என மருகி அசைவற்று கிடந்தாள்.
“இனியும் இதை இப்படியே தொடரவிட கூடாது. அதுக்கு நான் முதல்ல ஸ்திரமா இருக்கனும். முரளிட்ட இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தள்ளி போய்டனும்…” முடிவெடுக்க, 
“அவன் வேண்டாம். ஆனா அவன் நினைவுகள் மட்டும் எனக்கு வேண்டும்னு  நினைக்கிறது பக்கா சுயநலம் மதி…” அவளுக்கவளே வாதிட்டு,
“சுயநலமாகவே இருந்தாலும் பரவாயில்லை. அவன் வேண்டாம்னா வேண்டாம் தான். சில நேரங்களில் சுயநலம் கூட ஒரு பாதுகாப்பு கேடயம் தான். ..” இன்னும் பிடிவாதமாய் நெஞ்சத்தில் குடியிருக்கும் முரளியை வெளிவரவிடாமல் இறுக்கமாய் கட்டிவைத்தாள்.
எத்தனை போராடி கட்டுப்பாட்டோடு இருந்தாலும் அவனின் ஒற்றை பார்வையில், சிறு புன்னகையில் அனைத்தும் தகர்ந்துவிடும் மாயம் புரியாமல் தவித்துதான் போனாள்.
தன் காதலை உள்ளுக்குள் சிறு புள்ளியாய் ஒடுக்கி தன் உயிரை சுவாசமாய் அதற்கு சேர்ப்பித்து பாதுகாத்து வைத்தாள்.
“ஹரிஹரன் சொல்லியதால் நிச்சயம் வந்திருக்கவில்லை இவன். அதற்கு முன்பே வர முடிவு செய்து தான் இருக்க வேண்டும். ஆனாலும் அன்று அத்தனை நடந்த பிறகும் எந்தவித கோபமும் இல்லாமல் தன்னிடம் எப்படி பேசுகிறான்?…”
ஏன் ஏன் ஏன் என்ற கேள்விகள் அவளை சுற்றி சுற்றி சுழற்ற விடை தெரியாமல் களைத்து உறங்க ஆரம்பித்தாள்.
அன்று சனிக்கிழமை அலுவலக விடுமுறை என்பதால் கொஞ்சம் இலகுவாகவே பரபரப்பின்றி இருந்தாள்.
அலுவலகம் இருந்தாலுமே பரபரப்பு என்பது அவளின் வாழ்க்கையில் இல்லவே இல்லை என்பது வேறு விஷயம். ஆனாலும் விடுமுறை தினம் இன்னமும் அவளை சோம்பேறி ஆக்கியது.
மதியம் வரை குளிக்காமல் அங்கும் இங்கும் உலாத்தியவாறு மொபைலில் ஒன்றி கிடந்தவளை பார்க்க கலைவாணிக்கு கோபமாய் வந்தது.
“வீட்லையும் மனுஷங்க இருக்காங்கன்னு நினைப்பிருக்கனும் மதி. எப்பவும் அந்த பொட்டிக்குள்ளையே அடங்கி கிடைக்கனும்னு என்ன?…” என்று சத்தமிட,
“ப்ச் ம்மா, நானே இன்னைக்கு லீவ்ன்னு மொபைல் பார்த்துட்டு இருக்கேன். சும்மா என்னை வறுக்காதீங்க. ஈஸ் வேற புருஷன் வீட்டுக்கு கிளம்பிட்டா போரடிக்குதுல…”
“அதுக்குன்னு இப்படி வெட்டுவெட்டுன்னு உட்கார்ந்திருப்பாங்களா?…”
“இப்ப என்ன செய்யனும்?…” மொபைலை வைத்துவிட்டு வேகமாய் கலைவாணியின் பின்னால் வந்தவள்,
“சொல்லுங்க இப்ப என்ன செய்யனும்?…” வம்படியாய் கேட்க,
“ஒன்னும் செய்ய வேண்டாம். போ…” கோபிப்பதை கலைவாணி போல திரும்பிக்கொள்ள, 
“ம்ஹூம், சொன்னா தான் விடுவேன்…” 
அடுப்பில் தாளிக்க என்னை ஊற்றிக்கொண்டிருந்தவரை பிடித்து இழுக்க தாளிப்பு பாத்திரம் தலைகீழாக விழுந்து எண்ணை மொத்தமும் கொட்டியது.
அதை பார்த்த கலைவாணி வெண்மதியை முறைக்க முதலில் திருதிருவென  முழித்தவள்,
“நான் பேசாம என் ரூம்ல இருந்தேன். நீங்க தானே கூப்பிட்டீங்க…” அவருக்கே திருப்ப,
“ஏன் சொல்ல மாட்ட? தெரியாம கூப்பிட்டுட்டேன். நீ இடத்தை காலி செய். நான் நிம்மதியா வேலை பார்ப்பேன்…”
“இதை முதல்லையே செஞ்சிருக்கலாம் நீங்க…” என்று சொல்லி வெளியேற,
“மதி…” கலைவாணி அழைக்க,
“இப்ப என்ன?…” இடுப்பில் கைவைத்து திரும்ப,
“போய் குளி. அப்பத்தான் சாப்பாடு…” அவரின் அரட்டலை கண்டுகொள்ளாமல் உள்ளே செல்ல,
“இல்லைனா உங்கப்பாவும் லேட்டா தான் சாப்பிடுவார்…” என்றதும் வேகமாய் திரும்பி வந்தவள்,
“இதெல்லாம் ப்ளாக்மெய்ல். இப்ப குளிக்க சொன்னா நான் குளிச்சு வர எவ்வளவு நேரமாகும்னு தெரியும்ல. இப்பவே பசிக்க ஆரம்பிச்சிடுச்சு…” 
“அது உன் கவலை. அவ்வளவு பசினா சீக்கிரம் குளிச்சு, சீக்கிரம் வரவேண்டியதானே?…” 
அவளின் முகத்தை கூட பாராமல் கலைவாணி கூற இது வேலைக்காகாது என்பதை போல முறைத்துவிட்டு சென்றாள் வெண்மதி.
“ஏன் கலை, இன்னைக்கு லீவ் தானே? விடேன். சாப்பிட்டு மெதுவா தான் குளிக்கட்டுமே?…” நடேசன் பரிந்து வர,
“யாரு உங்க பொண்ணா? அதுக்கும் தலைப்பாட அடிச்சுக்கனும் நான். சாயங்கால நேரம் தலைக்கு ஊத்திட்டு சொட்ட சொட்ட வந்து நிப்பா. அதுவும் வெந்நீர் குளிக்கமாட்டா. அம்புட்டு குளிருலையும் பச்சைத்தண்ணீ. ஒருமணி நேரம் தண்ணிக்குள்ள இருப்பா. உடம்புக்கு வந்தா அதுக்கு வேற போட்டு படுத்துவா. என்னால மல்லுக்கட்ட முடியாது…”
மதிய உணவை டேபிளில் எடுத்துவைக்க திரும்பிவிட்டார் கலைவாணி. அவர் சொல்வதை போலத்தான் செய்தும் வைப்பாள் வெண்மதி. 
அதனாலையே நடேசன் மகளுக்கு ஏந்துகொண்டு வந்தாலும் அதை காதில் வாங்காமல் வெண்மதியை அரட்டுவார். 
அவர் சொல்லியதை போல ஒருமணிநேரத்திற்கும் மேலாகவே ஆனது அவள் குளித்து வர. தலைக்கு ஊற்றி சரியாக துவட்டாமல் தண்ணீர் சொட்ட வந்து அமர்ந்தவள்,
“அப்பா, சாப்பிடலாம். வாங்க…” என அவரை அழைக்க,
“ஒழுங்கா தலையை துவட்டி வரதுக்குள்ள அப்படி என்ன உனக்கு அவசரம்? எப்பவும் இதே வேலை. சளிப்புடிச்சா அதுக்கும் படுத்தி வைப்ப நீ. நான் தான் கிடந்து அல்லாடனும்…”
கலைவாணியின் திட்டுகளை கண்டுகொள்ளாமல் தனக்கு தேவையானதை போட்டு மடமடவென சாப்பிட,
“மெதுவா தான் சாப்பிடேன். அப்படி எந்த ரயிலை புடிச்சு கிளம்ப போற?…”
அதற்கும் பதில் சொல்லாமல் இருக்க நடேசன் தான் கலைவாணியை முறைத்தார். அடுத்து வாயே திறக்கவில்லை அவர்.
“நா தூங்க போறேன். சும்மா கூப்பிட்டுட்டு இருக்காதீங்க. நானே எழுந்து வருவேன்…” என்று சொல்லிய நொடி தன் அறைக்கதவை மூடியிருந்தாள்.
“இவ தூங்குவாளாக்கும்? நம்மட்டையே பொய் சொல்றா. ஒன்னு எதாச்சும் படிச்சிட்டு இருப்பா. இல்லையா விட்டத்தை பாத்துட்டு உட்கார்ந்திருப்பா. ஹ்ம்ம்…” அவரின் பெருமூச்சு நடேசனையும் சுட்டது.
“அவ விருப்பம் என்னவோ அப்படியே செய்யட்டும் விடு கலை…” இருவரும் அமைதியாக உண்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க கலைவாணி சொன்னதை போல வெண்மதி விட்டத்தை பார்த்துதான் படுத்திருந்தாள்.
எண்ணம் மொத்தமும் முரளி முரளி முரளியே.
நேற்றைய நிகழ்வுகள் அவளை அலைகழிக்க அதை கூட்டுவதை போல அவனின் அழைப்பு வெண்மதியின் மொபைலில். எடுத்து பார்த்தவள், 
“திங் ஆஃப் தி டெவில்…” திட்டி பக்கத்தில் வைத்துவிட்டு எடுக்காமல் போக அழைப்பு நின்று குறுஞ்செய்தி வந்ததற்கான சப்தம் கேட்டதும் எடுத்து பார்த்தாள்.
“கால் அட்டென் பண்ணுங்க. இல்லை உங்கப்பா நம்பருக்கு கூப்பிட்டு உங்கள்ட்ட கொடுக்க சொல்லுவேன்…” என்ற செய்தி இருக்க தூக்கிவாரி போட்டது.
“கிராதகன் செஞ்சாலும் செய்வான்…” மீண்டும் அழைப்பு வர எடுத்தவள்,
“இந்த மிரட்டுற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். வேற யார்க்கிட்டையாச்சும் வச்சுக்கோங்க. என்னை பத்தி உங்களுக்கு தெரியாது…” என,
“என்னை பத்தி மட்டும் உங்களுக்கு தெரியுமா? நான் இப்படி வேலையெல்லாம் பார்ப்பேன்னு நல்லா தெரிஞ்சதை போல நேத்து பேசினீங்க?…” 
“ப்ச், சண்டை போடத்தான் போன் எடுக்க சொல்லி அப்படி மிரட்டுனீங்களா?…” பேச்சை மாற்ற முயல அதை புரிந்து புன்னகைத்துக்கொண்டவன்,
“இல்லை, நம்மக்கிட்ட புரிதல் இல்லாததால தான் நமக்கு சண்டையே வருது. சோ புரிஞ்சுக்கலாம். ஒருத்தரை ஒருத்தர்…” சிரித்துக்கொண்டே சொல்ல,
“மண்ணாங்கட்டி, புரிஞ்ச வரைக்கும் போதும்…” பல்லைக்கடித்துக்கொண்டு பேச, 
“அப்பறம் என்ன? புரிஞ்சவரைக்கும் போதும்னு நீங்களே சொல்லியாச்சு. அடுத்து கல்யாணம் தான்…” கூலாக அவன் சொல்ல திடுக்கிட்டு போனாள்.
“என்ன விளையாடறீங்களா?…”
“நோ, நோ..” என்றவன்,
“இதை மெதுவா பேசிப்போம். ஈவ்னிங் 5.30 க்கு நீங்க கிளம்பி காபி ஷாப் வந்திருங்க. நான் லொகேஷன் ஷேர் பண்ணிடறேன்…”
“இருங்க இருங்க, என்ன உங்க இஷ்டத்துக்கு வான்னு சொல்றீங்க. அதெல்லாம் முடியாது. வர மாட்டேன்…”
“வரனும்…” முரளியும் சொல்ல,
“வரமுடியாது. உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க…” என்ன செய்துவிடுவான் என்ற தைரியத்தில் வெண்மதி சொல்லிவிட,
“ஓகே, அப்போ உங்க வீட்லையே மீட் பண்ணலாம். வாணி அத்தை காபியை விட பெட்டரா காபி ஷாப்ல கிடைச்சுடுமா என்ன?…” என்று சொல்லி கட் செய்துவிட அதிர்ந்து போனாள்.
“வீட்டுக்கா? போச்சு அல்வாத்துண்டு மாதிரி நானே இவனுக்கு ஐடியாவை அள்ளி குடுக்கறேனே?” என்று அலறிக்கொண்டு ஹலோ ஹலோ என்று கத்த அவன் லைனில் இருந்தால் தானே?
மீண்டும் அவனுக்கு தொடர்பு கொள்ள நான்கு முறை அழைத்த பின்னர் தான் அழைப்பை ஏற்றான் முரளி.
“பழி வாங்கறானே?…” கடுகடுத்தவாறு இருந்தவள் எடுக்கப்பட்ட அழைப்பு சத்தமில்லாமல் இருக்க,
“லைன்ல இருக்கீங்களா? முரளி…” 
“என்ன விஷயம்? நான் தான் வீட்ல பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்ல. திரும்ப ஏன் கால் பண்ணுனீங்க?…” என்ற அவனின் பேச்சில் கொதித்தவள்,
“யூ… யூ…” 
“ஓகே, நான் கால் கட் பன்றேன். வேலை இருக்கு…” முரளி சொல்லவும்,
“அய்யோ வச்சுடாதீங்க. காபி ஷாப்க்கே வந்து தொலையிறேன்…” என்று சொல்லி வெண்மதி வைக்க, முரளிக்கோ சிரிப்பு தாளவில்லை. 
பொங்கி பொங்கி சிரிக்க அவனின் அட்டகாசமான சிரிப்பு சத்தத்தை கேட்டு உள்ளே வந்த அவனின் தாய் சுகன்யாவிற்கும் அவனின் புன்னகை ஒட்டிக்கொண்டது.
“முரளி, முகமெல்லாம் ரொம்ப சிரிப்பா இருக்கே. யார் போன்ல?…” என கேட்கவும்,
“வெண்மதி…” அவன் சொல்லியதும் சில நொடிகள் யோசனையோடு அவனை பார்த்து,
“இது சரியா வருமாப்பா?…” 
“அம்மா, இது மட்டும் தான் சரியா வரும். நான் பார்த்துப்பேன். நீங்க கவலைபடவேண்டாம்…” அவரின் கன்னம் தட்டி சொல்லியவன் உள்ளே சென்றுவிட அவனையே பார்த்து நின்றார்.
இத்தனை அவமானத்திற்கு பின்னும் வெண்மதியா? என்று அவரின் மனசாட்சி அவரை கேள்வி எழுப்ப குழம்பி போனார்.

Advertisement