Advertisement

நிலவு – 4
               காரை ஓரம்கட்டிய முரளி “ஹலோ சொல்லுங்க…” என்றதும் மறுமுனையில் பயங்கரமான சிரிப்பு சத்தம் கேட்க,
“ஓகேங்க, சிரிச்சு முடிச்சதும் திரும்ப கால் பண்ணுங்க…” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு.             
முரளிக்கு சிரிப்பிலிருந்தே யார் எவரேன தெரிந்துவிட இப்பொழுது சாவகாசமாக போனை எடுத்தான். 
“சிரிச்சு முடிச்சாச்சு போல?…” என்று நக்கலாக கேட்க,
“என்ன கிண்டலா? சரியில்லை முரளி…” அந்த குரல் வெறுப்பில் கொக்கரித்தது.
“இது சரியா தவறா கேட்கிற நேரமா மிஸ்டர் விபீஷ்?…” முரளியின் புத்திசாலித்தனத்தில் அவனை மேச்சிக்கொண்டவன்,
“பிரிலியன்ட், என்னோட வாய்ஸ் வச்சே கண்டுபிடிச்சாச்சு போல. இதே மாதிரி இந்த டெண்டர் விஷயத்துல இருந்தும் விலகிடு முரளி. உனக்கு தான் நல்லது…”
“ஏங்க காலையில தான் கால் பண்ணுனீங்க, இப்ப இன்னொரு நம்பர்ல இருந்து பேசறீங்க. நம்பர் வேறானாலும் வாய்ஸ் உங்களோடது தானே? அப்பறம் இப்படி ஒரு வெல்விஷர் கிடைச்சதுக்கு கடவுளுக்கு நன்றி. தேங்க் யூங்க விபீஷ், ஆனா இதுல நான் பின்வாங்கறதா இல்லை…” 
உறுதியாக சொல்லிய முரளியின் பேச்சில் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த விபீஷ் கொலைவெறி ஆனான்.
“தப்பு பன்ற முரளி. தேவை இல்லாம தலையிடாம ஒதுங்கிடு. உனக்கொரு ஆஃபர் வேணும்னா தாரேன். இந்த ப்ராஜெக்ட்டை நீ விட்டுகொடுத்தா உனக்கு சேர வேண்டியது தன்னால வந்து சேரும்…”
“வார்ரே வாஹ். டெண்டர்ல கலந்துக்கற எனக்கே இத்தனை செய்யனும்னு நினைக்கறீங்கன்னா?…” என்று முரளி இழுத்த இழுவையில்,
“எப்படியும் இந்த ப்ராஜெக்ட் எங்களுக்கு தான் கிடைக்கும். உன்னால ஜெயிக்க முடியாதேன்னு தான் பாவம் பார்த்தோம். ஏதோ சின்ன கம்பெனி ஆச்சே, பிழைக்கட்டும்னு. ஆனா நீ ஒத்துவரமாட்ட போல…”
“மீண்டும் கடவுளுக்கு நன்றிங்க விபீஷ். அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சரிப்பட்டு வரமாட்டேன்னு. வரவேமாட்டேன். பை…” என்று அழுத்தமாக ஸ்திரமான குரலில் சொல்லிய முரளி அழைப்பை துண்டித்துவிட்டு சிறிது நேரம் கண்ணை மூடி சாய்ந்துகொண்டான்.
           ————————————————————————————–
இன்னும் நடந்ததை நம்ப முடியாமல் அதிலிருந்து மீள முடியாமல் திகைத்துத்தான் இருந்தாள். எப்படி உள்ளே வந்தாள்?, வீட்டில் கேட்டவற்றிற்கு என்ன பதில் கூறினாள்? என்ன சாப்பிட்டாள்? எதுவும் ஞாபகத்தில் இல்லை.
இதோ தன் படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கிறாள்.
“இவனை யார் இங்க, இப்ப வர சொன்னது? என் உயிரை எடுக்கன்னே வந்து வாய்ச்சிருக்கான்…” சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தாள்.
“அவன் வந்தா உனக்கெங்க போச்சு அறிவு? அவன் வந்ததும் பேன்னு வாயை பொளந்துட்டு பார்த்துட்டு தான நின்ன?” மனசாட்சி உமிழ்ந்து கொட்டியது அவளிடம்.
“இப்ப பிரச்சனை அது இல்லை. எதுக்காக அவன் இப்ப வந்து குதிச்சிருக்கான்?” என யோசிக்கும் பொழுதுதான் ஹரியிடம் தான் தன்னிலை மறந்து உளறியதை உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டாள்.
“கோபம் வந்தா கூட உனக்கு இப்படியா வரனும் மதி? அதுவும் முன்னப்பின்ன தெரியாதவன்ட்ட உளறி இப்ப அவன் முரளிக்கு தெரிஞ்சவனா இருக்கான்”
தன்னையே திட்டிக்கொண்டவளுக்கு அப்பொழுதுதான் மூளையில் அக்கேள்வி பளிச்சிட்டது. அது எடுத்துக்கொடுத்த குறிப்பில் முகம் கன்ற  கோபத்தில் சிவந்தாள்.
“முரளி இப்ப மட்டும் என் கையில கிடச்ச மவனே நீ சிதறுதேங்காய் தான்…” 
வெண்மதியின் கோபத்தில் தூபம் போடுவதை  போல அவளின் மொபைல் இசைக்க புதிய எண்ணாக இருக்க அதை எடுக்க வில்லை. இரண்டு மூன்று என்று ஏழு தடவை அடித்து எட்டாவது ரிங்கில் எடுத்தவள்,
“ம்க்கும்…” என்ற ஆண் குரலின் செருமலில் எரிச்சலாகி,
“ஹலோ போன் எடுக்கலைனா பிஸியா இருப்பாங்கன்னு கூட தெரியாத கூமுட்டையா நீ? சும்மா நொய்யி நொய்யின்னு திரும்ப திரும்ப கூப்ட்டிட்டு இருக்க. மரியாதையா போனை வச்சிட்டு போய் சோலியை பாரு. இல்ல…” என சொல்லி தானே கட் செய்துவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் பரிதவித்து, 
“எவ்வளவு தைரியம் அவனுக்கு? நான் அவனை விரும்பறேன் தான். அதுக்கு அவன் என்ன செஞ்சாலும் சரின்னு போய்டுவேனா? என்னை பத்தி என்ன நினைச்சான்?” 
எத்தனை முயன்றும் கோபத்தையும் தாண்டிய கழிவிரக்கம் அவளை பாடாய் படுத்தியது. 
“நாளைக்கு வரட்டும் நான் கேட்கிற கேள்வில என்னை திரும்பி கூட பார்க்க கூடாது அவன். வெடிங் கார்ட் செலெக்ட் பண்ணனுமாம்ல…” 
மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர இன்னும் கடுப்பானவள் எடுத்து, 
“யோவ்…” சொன்ன மறுநொடி,
“வெண்ணிலா, நான் முரளி…” ஜில்லென அவனின் குரல் ஐஸ்க்ரீமாய் அவளுக்குள் இறங்கி சுகம் பரப்பத்தான் செய்தது.
“திருந்தாத ஜென்மம்” தன்னை திட்டியவள்,
“எதுக்கு கால் பண்ணினீங்க?…” கறாராய் கேட்க,
“உங்க நம்பர் எப்படி கிடைச்சதுன்னு கேட்பீங்கன்னு பார்த்தேன்…”
“நான் என்ன பன்றேன்? எங்க வீட்ல என்ன நடக்குது? என்னை யார் யார் பொண்ணு கேட்டாங்க? எத்தனை பேர் பார்த்தாங்கன்னு லிஸ்ட் போட்டு வச்சிருக்கிற உங்ககிட்ட நான் எதுக்கு அபத்தமா கேட்க போறேன். இத்தனை தெரிஞ்சிருக்கிறவருக்கு என் நம்பர் தெரியிறதென்ன கம்பசூத்திரமா?…”
இடக்காய் அவள் பேச பேச முரளியின் இதயத்திற்குள் சுருக்கென்று வலிக்கத்தான் செய்தது. ஆனாலும் பொறுமையானான்.
அவள் சொல்வதும் உண்மை தானே? வேண்டாம் என்று விலகி சிலநாட்கள் மட்டுமே அமைதி காத்தான். ஆனாலும் விடமுடியாமல் முரண்டிய மனதோடு அவள் என்ன செய்கிறாள் ஏது செய்கிறாள் என கவனித்து இருந்தான்.
“ஓகே, நான் செய்ததை தானே சொல்றாங்க. நோ ப்ராப்ளம். என்னை கோபப்படுத்தி தப்பிச்சிடலாம்னு நினைக்கிறாங்க போல…” புன்னகைத்துக்கொண்டான்.
“வெல், நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க. அதுக்காக தான் நாம கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னேன். இப்ப சொல்லுங்க எப்போ கார்ட் செலெக்ட் பண்ணலாம்?…” அவளை சீண்ட,
“ஏன் ஸார், உங்களை பிடிக்கவே பிடிக்காதுன்னு சொன்ன பின்னால திரும்பவும் வந்து நிக்கிறேங்களே? உங்களுக்கு…”
“ஆமா, நிச்சயம் புத்தி இல்லை தான். இருந்தா ஏன் உங்களை கல்யாணம் செய்துக்க டிசைட் பண்ணிருப்பேன்?…” அவளின் கோபம் புரியாமல் வார்த்தையாட,
“புத்தி இல்லாத யாருக்கும் நான் வாழ்க்கை குடுக்கனும்னு அவசியமில்லை. அப்படி எந்த தியாகி பட்டமும் எனக்கு வேண்டாம்…” வெட்டுவதை போல பேச பேச்சுக்கள் வலுத்துவிடுமோ என எண்ணி,
“வெண்ணிலா…” முரளி மீண்டும் அழுத்தமாக அழைக்க, 
“என்னை அப்படி கூப்பிடாதீங்க. எத்தனை தடவை சொல்றது உங்களுக்கு?…” எங்கே கோபத்தில் கத்திவிடுவோமோ என்று அஞ்சி அடக்கப்பட்ட கோவத்தில் சீற,
“நானும் எத்தனை முறை உங்ககிட்ட அப்படித்தான் கூப்பிட தோணுதுன்னு சொல்றது?. ஏன்னா?…” என்று ஆரம்பிக்க,
“போதும், உங்க ஆன்னா, ஆவன்னா விளக்கத்தை கேட்க எனக்கு பொறுமை இல்லை…” 
“அப்போ என்னையும் அப்படி கூப்பிட கூடாதுன்னு நீங்களும் சொல்ல கூடாது…”
பிடிவாதமாய் அவனும் கூற, கொஞ்சமும் இறங்கிவராத தன்னை மாற்றிக்கொள்ளாத அவனின் திமிரில் அயர்ந்து போனாள் வெண்மதி.
“இவன எப்படி ஹேண்டில் பன்றதுன்னே எனக்கு தெரியலையே சாமி” உள்ளுக்குள் புலம்பியவள்,
“இப்ப எதுக்கு கால் பண்ணுனீங்க? நிம்மதியா தூங்க கூட விடமாட்டீங்களா?…”
இதுவரை என்னவோ படுத்ததும் உறங்கிவிடுபவளை போல அவனிடம் மிளகாயாய்  காய அதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை இவன். அவளின் நினைவுகளில் இருந்து தொலையாமல் தன்னை அவளுள் தொலைத்துக்கொள்ள காத்திருந்தான்.
“நானும் தான் தூங்கலை. என்னையே சுத்தி சுத்தி வரும் உங்களை பார்த்துட்டே இருக்கேன். என்னால தூங்க முடியலை வெண்ணிலா…” அவனின் ஆழ்ந்து கிறங்கிய குரலில் உருகிவிட துடித்த தன் இதயத்தை இழுத்து நிறுத்தியவள்,
“என்ன உளறல் இது? யார், நான் உங்களை சுத்தி வரேனா? என்னையே பார்த்திட்டு இருக்கீங்களா?…” 
படபடத்த அவளின் குரலை கேட்டவன் வாய் விட்டு சிரிக்க பயந்துதான் போனாள். எங்கே வீட்டிற்கு வந்துவிட்டானோ? ஜன்னலின் வழியே வெளியே எங்கும் நிற்கிறானா? என சடுதியில் தேடி அலைபாய்ந்தது வெண்மதியின் விழிகள்.
“வேண்டாம் வெறுப்பேத்தாதீங்க. செம்ம காண்டுல இருக்கேன் உங்க மேல…” அவனை எச்சரிக்க,
“இருந்துக்கோங்க. உங்களை தவிர வேற யாருக்கும் அந்த உரிமை இல்லை…” அவனும் சம்மதமாய் சொல்ல வாயடைத்து போனாள்.
“வெண்ணிலா…” அவனின் குரலில் மயிலிறகின் வருடலை உணர்ந்தவள் அந்த அழைப்பில் விழிகள் கசிந்துவிட்டாள்.
“உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன் தெரியுமா? ஏன் இப்படி செஞ்சீங்க?…” உடைந்துபோன குரலில் கேட்க,
“நான் என்ன பண்ணேன்?…”
“என்ன பண்ணலை? இப்படியா ஒருத்தனை அனுப்பி என்னை பெண் கேட்டு வரதை போல செஞ்சு அவன்கிட்ட என்னைப்பத்தி. என் உணர்வுகளோட விளையாடாதீங்க ப்ளீஸ்…” என தழுதழுத்த குரலில் படபடவென பேச,
“ஹேய் ஸ்டாப், ஸ்டாப். ஆர் யூ மேட்?…” என்றதும், இறங்கிய குரலில் ஸ்ருதியை கூட்டினாள் வெண்மதி.
“கேட்பய்யா கேட்ப. என்னை பார்த்தா உனக்கு பைத்தியமா தான தெரியும். ஏன் கேட்கமாட்ட? உனக்கே அசிங்கமா இல்லையா?…” மரியாதை எல்லாம் பறந்தே விட்டது அவனின் கேள்வியில்.
“பின்ன நீங்க பேசறதுக்கு வேற என்ன கேட்பாங்களாம்? கொஞ்சமும் யோசிக்க மாட்டீங்களா? நீங்களா ஒன்னை நினைச்சு ஒரு டிசிஷன் எடுத்துட்டு அதுக்கு மத்தவங்களை…” என்றவனை பேசவிடாமல்,
“என்னோட லைப், நான் மட்டும் தான் முடிவு பண்ணுவேன். உங்களுக்கென்ன வந்தது?…” வெண்மதி அவனை பேசவிடாமல் முந்திக்கொண்டு கத்த,
“டோன்ட் ஷவுட். இப்போ என்ன? ஹரியை நான் தான் வேணும்னே அனுப்பினேன்னு சொல்ல வரீங்க. அப்படித்தானே?…”  வெண்மதி பேசும் பொழுதே ஓரளவிற்கு யூகித்தது தான். 
“ஆமா, நான் ஏன் இல்லன்னா சொல்ல போறேன்?…” திமிராய் பேச,
“சூப்பர், நல்லாவே ஜட்ஜ் பண்ணியிருக்கீங்க. அந்தளவுக்கு நான் தரம் இறங்கி இருப்பேன்னு நினைச்சிருக்கீங்க. அப்படித்தானே?…” 
சட்டென ஆமாம் என சொல்லமுடியாத அளவுக்கு அடிபட்ட குரலில் முரளி கேட்க வெண்மதி பேச்சற்று போனாள்.
“என்னை ரொம்ப பலவீனமாக்குது அவன் வாய்ஸ்” அந்த உண்மைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவள் மௌனமாக இருக்க,
“பேசுங்க வெண்மதி…” என்றவனின் இறுகிய குரலில் அவள் மௌனத்தை கலைக்கவே இல்லை. அவளின் அமைதியில் கடுப்பானவன்,
“இப்போ பேசுங்க…” பதில் சொல்லாமல் விடப்போவதில்ல என்பதை போல பாவம் தெரிய,
“ஸாரி…” என்று தன்னையறியாமல் அவள் இதழ்கள் மொழிந்தேவிட்டது.
அவளின் மன்னிப்பு வேண்டலில் நிதானமானவன் மூச்சை இழுத்து நிறுத்தியவன்,
“நீங்க ஸாரி கேட்கனும்னு நான் விரும்பலை. முதல்ல அதை புரிஞ்சுக்கங்க…” என,
“நான் ஏன் உங்களை புரிஞ்சுக்கனும்? அவசியமில்லை…” வேதாளம் பயங்கரமாக வெகு வேகமாக முருங்கை மரம் ஏறியது.

Advertisement