Advertisement

தொழிலில் இருந்து எடுத்து வீட்டில் போட்டு விட்டோம், சரியா தவறா  என்ற ஒரு சுணக்கம், தொழிலும் சற்று தடுமாறியது. இப்படி சில பதட்டங்களில் ஓய்வில்லாமல் உழைத்தாலும், அவன் இளைப்பாறும் இடம் ஷர்மிளாவகிப் போனாள். இரவு மட்டுமே சேர்ந்திருக்கும் நிமிடங்களில் மனது மனைவியை மிகவும் நாடியது.
அதனின் தடுமாற்றம் தான் இந்த குழந்தை மிக விரைவில்.
ஆனால் இந்த சிக்கல்கள் ஷர்மிளாவிடம் பகிரவில்லை, அவளுக்கு தெரியவும் தெரியாது. இவ்வளவு பணம் போட்டு நம்மால் வீடு வாங்க முடியுமா என்று அவள் கேட்டிருந்தாள். “முடியும், பணம் சற்று சிரமம் தான். ஆனால் இரண்டு வருடத்தில் மீண்டு விடலாம்” என்று சொல்லியிருந்தான். சற்று சிரமம் என்ற வார்த்தை, ரவி சமாளித்து விடுவான் என்று ஷர்மி நினைத்திருக்க, அது மிக சிரமம் என்று அவளுக்கு தெரியவில்லை.     
இப்போது எல்லோரும் புது பங்களாவில் தான் வாசம். கீழ் அமைப்பில் மூன்று பெட் ரூம் இருக்க, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என்று கொடுத்து விட்டான். வீட்டை பார்த்துக் கொள்ளும் ரமேஷும் சசிகலாவும் வெளியே பின் புறம் அவுட் ஹவுசில் இருந்தனர்.
ஆம், இரண்டு அவுட் ஹவுஸ்கள் இருந்தன பின்புறம், முன் புற பக்கவாட்டு தோட்டம் கூட, அதன் பொருட்டே அவ்வளவு விலை. சரி, ஒரு முறை இன்வெஸ்ட்மென்ட் யோசிக்க வேண்டாம் என்று வாங்கிவிட்டான்.
பணம் நிறைய தொழிலில் இருந்து எடுத்து போட்டிருந்தான். இதெல்லாம் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி ஒன்றும் ஷர்மிளாவிற்கு தொழிலில் பெரிய ஆர்வம் கிடையாது. அதையும் விட அங்கே அவனுடன் அலுவலகம் சென்ற சில நாட்களில் புரிந்திருந்தாள். இங்கே தான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவனுக்கு யாரும் தேவையில்லை. அவனுக்கு தேவை அவன் சொல்வதை அச்சுபிசகாமல் செய்யும் ஆட்கள் மட்டுமே.
அதை ஷர்மி செய்ய வேண்டும் என்று கிடையாதே. அவனுடன் ஒரு முறை சண்டை வந்த நாளில் இருந்தே அவள் அலுவலகம் செல்வதில்லை.
இப்போது குழந்தை பிறந்த பிறகு எத்தனை பேர் இருந்தாலும் அம்மாவாக அவள் ரொம்ப பிசி தான். ஆம்! குழந்தைக்கு உணவு கொடுப்பது பெரும்பாலும் அவள் மட்டுமே. யாரையும் விடக் கூடாது என்று இல்லை. நான்கு மாதம் வரை தாய்பால் மட்டுமே.
பின்பு வேறு திட உணவுகள் சேரும்போதும் விஸ்வாத்திகா அவளிடம் உண்ணுவது போல யாரிடமும் உண்ண மாட்டாள்.
“ஆறு பிள்ளைங்களை வளர்த்து இருக்கோம். யாரும் இவ்வளவு அழிச்சாட்டியம் இல்லை. உன் பொண்ணு அவ அம்மா ஊட்டினா தாண்டா வாயே திறக்கறா. அவ பத்து நிமிஷத்துல கொடுத்துடறா, நாங்க ஊட்டினா அரை மணி நேரம் ஆனாலும் பாதி கப் கூட காலியாகறது இல்லை” என்று சீதா சலிப்பார்.
ஆம்! நிஜமும் அதுதான்!
எல்லோருக்கும் இத்தனை வருடம் இருந்த கும்பகோணத்தை விட்டு வர சிறிது சுணக்கம் தான். ஆனாலும் முதுமையில் தனிமையை விட புலம்பெயர்வது சுலபமாகப் பட, மொத்த குடும்பத்தையும் அவன் அழைத்த போது வந்து விட்டனர்.
ஊரில் இருந்து பெண்மக்கள் யாராவது ஒருவர் மாற்றி மாற்றி வர, தினம் ஒருவேளை உணவே வேலையாட்கள் எல்லாம் சேர்த்து குறைந்த பட்சம் இருபது பேருக்கு என்றாகிவிட்டது. வீட்டின் செலவுகளும் அதிகரித்தன.      
இப்படி வீடு கோலாகலமாக இருக்க, அப்பாவையும் சித்தப்பாவையும் பாக்டரி மேற்பார்வைக்கு வைத்து விட்டான். அவர்கள் சோம்பி இருக்க முடியாது, சோம்பி இருக்கும் வயதும் அல்ல. கடினமான வேலைகள் இல்லாததால் அவர்களை பாக்டரிக்கு தினமும் வர போக செய்து விட்டான்.
இப்படியாக எல்லாம் செய்து விட்டாலும், எப்போதும் தனியாய் இருந்து பழக்கப்பட்டவள் ஷர்மிளா. திருமணதிற்கு பின்பு மட்டுமல்ல முன்பும் கூட. இப்படி எல்லோருடனும் இருப்பாளா இல்லை எதுவும் சொல்வாளா என்று அந்த பதட்டமும் ஒரு ஓரத்தில்.
அப்படி எதுவும் ஷர்மி சொல்லவில்லை. ஓரளவு அவனின் குடும்பம் அவனோடு இருக்கும் என்ற நிதர்சனத்தை ஏற்று இருந்தாள். எல்லாம் விட அவளின் ப்ரைவசியில் பெரியவர்கள் யாரும் தலையிடவில்லை. ஒரு எல்லைக்குள் நிற்க பெரிதாய் பிரச்சனையில்லை
ஆனால் எப்போதும் போல அம்மாவுக்கும் மகனுக்கும் அவ்வப்போது முட்டியது, என்ன மிகப் பெரிதாய் எதுவும் இல்லை. சின்ன சின்ன உரசல்கள் அவ்வளவே.
வீட்டிற்கு வர, வாசலில் நின்று தோட்டத்தை வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார் சீதா. அழுது அழுது விஸ்வாத்திகாவின் முகம் சிவந்து இருக்க, இவளை பார்த்ததும் தாவி இவளிடம் வந்து மீண்டும் ஏங்கி ஏங்கி குழந்தை அழுதாள்.
பார்த்துக் கொண்டே வந்த ரவி அவனின் அம்மாவிடம் காய்ந்தான். “பேச்சு தான் பெரிய பேச்சு அத்தனை குழந்தைங்களை வளர்தேன்னு. இப்படி அழ விட்டு இருக்கீங்க” என்று மகளை பார்த்தான்.
“சொல்லுவடா, சொல்லுவ, ஏன் சொல்ல மாட்ட? உன் மக உன்னை மாதிரியே பிடிவாதம். இவ்வளவு பேசறவன் நீ வெச்சிரு பார்ப்போம் ஒரு நாள் அவ அம்மா இல்லாம” என்று சலித்து சவால் விடுவது போல பேச..   
அதை கவனியாதவன் போல, “இப்போவே இப்படின்னா, இன்னொரு குழந்தை வந்தா நீங்க எப்படி பார்த்துக்குவீங்க?” என்று அவன் சொல்ல,
“வரும் போது பார்த்துக்கலாம்டா” என்று அசால்டாய் சொல்லியவர், பின்பு சட்டென்று பேச்சை நிறுத்தி மகனின் முகம் பார்க்க, அவன் அவரின் பார்வையை தவிர்த்து மகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஷர்மி தான் சங்கடமாய் சீதாவை பார்க்க, “அப்படியா?” என்றார்.
ஆம்! என்பது போல அவள் தலையாட்ட, அவரின் முகம் மலர்ந்து விட்டது. பின்பு உடனேயே உள்ளே பார்த்தவர் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி படுத்தி “எத்தனை மாசம்?” என்று ரகசியம் பேசினார்.
“மூணு மாசம்” என்று ஷர்மி சொன்னதும்,
“இவ்வளவு நாள் கவனிக்காம என்ன பண்ணின? இவளை முழு நேரமும் இடுப்புல வெச்சிட்டு சுத்தின, நேத்து கூட மாடிப் படியில வேகமா இறங்கின?” என்று அவளை அதட்டினார்.   
“ஸ்கேன் கூட பார்த்துட்டாங்க குழந்தை நல்லா இருக்கு” என்று ஷர்மி சொல்ல, 
“சரி, இனிமே கவனமா இருக்கணும்” என்று சொல்லியவர், “யாருக்கும் இப்போ சொல்ல வேண்டாம்” என்று சொல்ல,
கணவன் மனைவி இருவர் முகமும் சுருங்கி விட்டது.
“ப்ச், எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சிக்கணும், இப்போ தான் உன் கல்யாணம், அப்புறம் கௌசி கல்யாணம், குழந்தை பிறப்பு, பெரிய வீடு வாங்கியிருக்க, திருஷ்டி முழுக்க நம்ம மேல தான்”
“அதனால் ஒரு ரெண்டு மாசம் போகட்டும் சொல்லிக்கலாம், யார் கிட்டயும் சொல்லக் கூடாது நம்ம வீட்டு ஆளுங்க கிட்ட கூட. வாமிட் இல்லை உனக்கு இந்த தடவை அதனால தானா காமிச்சு குடுக்காது. நீயே கவனமா இருக்கணும்” என்று விட்டார்.
ரவி உள்ளே சென்று விட்டான்.
“கவனமா இருக்கணும்” என்ற வார்த்தை வருத்த “அது கவனமா தான் இருந்தேன். எப்படி ஆனதுன்னு தெரியலை?” என்று ஷர்மி தயங்கி தயங்கி சொல்ல,
அவளை கனிவாய் பார்த்தவர், “சில சமயம் தப்பி போறது தான், ஃபீல்லாம் பண்ண வேண்டாம். என்ன அடுத்தடுத்து குழந்தையானா உன் ஆரோக்கியம் கெடும்னு தான் சொல்றது. குழந்தை பார்த்துக்கறது பிரச்சனையில்லை. நான் இருக்கேன்ல, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்ல,
இவ்வளவு நேரம் இருந்த சஞ்சலம் மறைந்து ஷர்மியின் முகம் இப்போது தான் தெளிந்தது. அம்மாவிடம் வந்திருந்த விஸ்வாதிக்கா எந்த தொந்தரவும் செய்யாமல் ஷர்மி மீது சாய்ந்திருக்க “பட்டுக்குட்டி அம்மாவை தேடினீங்களா?” என்று மகளை கொஞ்சிக் கொண்டே உள்ளே சென்றாள். 
ரவியை பார்த்தால் பாக்டரிக்கு செல்ல வேண்டி அவன் உணவுண்டு கொண்டிருந்தான். அங்கே அவனின் அருகில் சென்று மகளை டேபிள் மேல் அமர்த்திக் கொண்டு ஷர்மியும் அமர,
அதுவரையில் பாட்டியும் சித்தியும் அங்கே ஹாலில் இருந்தாலும் எதுவும் பேசவில்லை. ஷர்மியை பார்த்ததும் “எங்கே போனீங்க? ஏன் இவ்வளவு நேரம்? விஸ்வாவை சமாளிக்க முடியலை” என்று கேட்டு விட்டு,
“வீட்ல இருந்தாலும் அதிக நேரம் எங்க கிட்ட விடு, நீயே வெச்சிருக்காதே, அப்புறம் நாளைக்கு தம்பியோ தங்கையோ வரும் போது ஏங்கி போயிடுவா? எல்லோர் கிட்டயும் விட்டு பழக்கு” என்றார் பெரியவராக பாட்டி.
ஷர்மி சீதாவின் முகம் பார்த்தால் “சொல்லிவிடலாமா” என்று. அவரோ கண்களால் மிரட்டினார் “வாய் திறக்கக் கூடாது” என்று.
ரவியின் கவனம் முழுக்க அந்த நேரம் தொழிலில் எப்படி சமாளிக்க போகிறோம் என்பதே! அந்த கவலையை ஷர்மி இன்னும் இனம் காணவில்லை.                                                                                              
            

Advertisement