Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஒன்று :
ஆள் அரவமற்ற சாலையில் காரை நிறுத்து ரவியும் ஷர்மியும் ரோட்டை வெறித்து இருந்தனர். இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை.
“சாரி” என்றான் ரவி
“ப்ச், போங்க நீங்க” என்றவளின் குரலில் அப்படி ஒரு சலிப்பு.
“இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாதே” என்றான் குற்றவுணர்ச்சியோடு.
“என்ன தெரியாது… வேண்டாம்னு சொன்னேன் தானே”
“என்ன வேண்டாம்னு சொன்ன?” என்று அவனின் குரல் உயர,
“நான் சொன்னேன்” என்றாள் சன்னக் குரலில்.
“நீ எங்க சொன்ன? சொல்லியிருந்தா தவிர்த்திருப்பேன்!” என்றெல்லாம் அவன் சொல்லவில்லை, “சரி, நீ சொன்ன நான் தான் காரணம் விடு” என்றான்.
“யாராவது பார்த்து இருக்கக் கூடாதா சொன்னா எனக்கு ஷேம்மா போயிடும். அத்தை அப்போவே சொன்னாங்க, ரெண்டு குழந்தைக்கும் நடுவுல குறைஞ்ச பட்சம் மூணு வருஷமாவது கேப் வேணும்னு” 
ஆம்! ஷர்மி மீண்டும் இப்போது கர்ப்பம், முதல் குழந்தைக்கு இப்போது தான் ஒன்பது மாதம், இதில் இவள் மூன்று மாதம்.
அதற்குள் அவளின் அலைபேசி அடிக்க, சீதா தான் அழைத்திருந்தார்.
“எடுக்கவா? வேண்டாமா?” என்று இவள் யோசிக்க, ரவி எடுத்தான், “என்னம்மா?” என்றபடி.
“என்ன நொன்னம்மா? இங்க என்னால விஸ்வாவை சமாளிக்க முடியலை, சீக்கிரம் வாங்கடா. காலையில போனவங்க, இவ நினைச்சு நினைச்சு கத்தறா, உன்னை விட உன் பொண்ணு நூறு மடங்கு இருக்கா என்னை படுத்தறதுல” என்றார்.
ஆம்! விஸ்வாத்திகா அவர்களின் செல்ல மகள், வீட்டிற்கே செல்ல மகள் தான். ஆனாலும் யாரையும் செல்லம் கொஞ்ச விட மாட்டாள். அம்மா மட்டுமே வேண்டும். அப்பாவிடம் கூட பல சமயம் சென்றாலும், சில சமயம் அம்மா இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும்.
இப்போது கும்பகோணத்தில் இருந்த வீட்டை இவர்கள் அங்கே சென்றால் தங்க என்று விட்டு மொத்த குடும்பத்தையும் இங்கே சென்னைக்கு இடம் பெயர்த்து இருந்தான்.
விஸ்வாத்திகா பிறந்த சில நாட்களுக்கு எல்லாம் தாத்தாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போக, சித்தப்பாவும் வண்டியில் சென்றவர் விழுந்து வைத்து பிராச்சர் ஆனது.
அதற்கு முன்னமே சீதாவும் வாசனும் இங்கே குழந்தையை பார்க்க வந்தவர்கள், இவர்களோடே தங்கி விட்டனர். “நீ இரு அம்மா” என்று ரவியும் சொல்லவில்லை, “நான் இருக்கவா” என்று அவரும் கேட்கவில்லை.
அப்படி தனியாய் விட மனதில்லை சீதாவிற்கு. அவர்கள் என்ன வெளிநாட்டிலா இருக்கிறார்கள் போக முடியாத தூரத்தில். அதுவும் வாசனிடம் அவனின் ஆதங்கத்தை பதிவு செய்திருந்தான். “விசாலி, நல்லா பார்த்துக்குவா. அங்க போறதுக்கு என்னன்னு தான் அம்மா கேட்டாங்க. என் மருமகளை நான் பார்த்துக்குவேன்னு சொல்ல முடியலைல்ல. அப்புறம் நான் உங்களை எப்படி கூப்பிடுவேன்” என்று.
அது கூட வாசன் “நாள் பக்கத்துல வந்துடுச்சுன்னு சொன்னா நாங்க வந்திருப்போம் தானே. நீயே தனியா அல்லாடுனியா?” என்று அவர் கேட்டிருக்க அதற்கான பதில்.
சீதாவிற்கு அந்த பதில் உதைத்து இருந்தது. அவரின் வீட்டின் மூன்று பெண் மக்கள் பிரசவம், ஆறு குழந்தைகள், அப்படி கவனித்து கொண்டார்கள் தானே.
அவர்கள் இருவரும் வந்தவர்கள் தங்கி விட, “அவங்க மகன் அவங்க போய் இருந்துட்டாங்க. எங்களுக்கு அந்த உரிமை இல்லையே” என்று அவனின் சித்தப்பா சித்திக்கு வருத்தம். அதுவும் சித்தப்பா விபத்தில் மாட்ட, மனதளவில் எதிர்காலத்தை நினைத்து உருக்குலைந்து விட்டனர்.
அவரின் பெண்களிடம் புலம்ப, அது கௌசி மூலம் சந்தோஷிற்கு தெரிய வர, அது ஷர்மிளாவிற்கு சொல்லப் பட, அவள் ரவியிடம் சொல்லி விட்டாள்.
ஆம்! அவனிடம் பேசும் தைரியம் யாருக்கும் சீதாவை தவிர இருந்ததில்லை. 
“நான் அவங்களை வித்தியாசமா நினைச்சதில்லை, ஆனா ஏன் இப்படி நினைக்கிறாங்க புரியலை” என்று ஆதங்கத்தில் மனைவியிடம் புலம்பினான்.
“சோ சிம்பிள், அத்தையும் மாமாவும் இங்க இருக்காங்க. அப்போ அவங்களும் இங்க இருக்கப் பிரியப் படுவாங்க அண்ட் இப்போ உடம்பு சரியில்லாம இருக்காங்க. அப்போ மனசு அதையும் இதையும் நினைக்க தான் செய்யும்”
“ஆனா தாத்தா பாட்டியை எப்படி தனியா விட”
“அப்போ அவங்களையும் அழைசிக்குவோம்”
“உனக்கு இருக்க முடியுமா?” என்றான்.
ஷர்மி அமைதியாகிவிட, “எனக்கு தெரியும் உனக்கு என்னோட இருக்குறதே பலசமயம் மனசை உதைக்குதுன்னு” என்று சொல்லி விட,
“இல்லை” என்று அவளால் சொல்ல முடியவில்லை.
“நீங்க ஏன் அப்படி என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க. வேற எதுவும் ட்ரை பண்ணியிருக்கலாம் தானே. என் பின்னே சுத்தி, என் கிட்ட லவ் சொல்லி இப்படி” என்று பேச…  
“என்னை கொஞ்சமும் நீ மரியாதையா பார்த்ததில்லை. அப்போ எப்படி நான் உன் பின்னே சுத்த முடியும். எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் கோபத்துல எடுத்த முடிவு தான். ஆனா வேற எதுவும் யோசிக்கலை. பொண்ணு கேட்டேன், குடுக்கலை. எங்கம்மாவும் பொண்ணு கேட்கலை. நீ முடியவே முடியாதுன்னு நின்ன, உன்னை ஃபோர்ஸ் பண்ண உங்க வீட்டை கார்னர் பண்ணினேன். ஆனா பயந்துட்டே இருந்தேன் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு. நீ என்னோட அட்ஜஸ்ட் ஆகிட்ட” என்று சொல்ல,
அப்போதும் ஷர்மியிடம் மௌனம். அவளின் மௌனம் ரவியை காயப்படுத்தியது. சில சமயம் வாய் வார்த்தைக்கு கூட சில விஷயங்களை சொல்லலாம் எதிராளிக்கு நிம்மதி கொடுக்குமென்றால். இன்னும் அந்த பக்குவம் ஷர்மிக்கு இல்லை.
அவளின் மௌனத்தில் அவளை விட்டு தள்ளி இருப்பதற்கு பதில் இன்னும் நெருங்கினான். “குழந்தை பொறந்து ரெண்டு மாசம் தான் ஆச்சு” என்று அவள் தள்ளி தள்ளி போக, “ஒன்னும் பண்ண மாட்டேன் ஜஸ்ட் பிடிச்சிட்டு தான் தூங்குவேன்” என்றான்.
அப்படி தான் இருக்கவும் செய்தான் சில மாதங்கள். பகலில் எல்லோரும் இருந்தாலும் இரவில் ரவி மட்டுமே ஷர்மியுடன், வேறு யாரையும் அவன் அனுமதிக்கவில்லை. ஷர்மிக்குமே சீதாவுடன் அறையை பகிர்ந்து கொள்ள முடியவில்லையா இல்லை அவளால் ரவியை விட்டு இருக்க முடியவில்லையா அவளே அறியாத ஒன்று.  
சீதா ஷர்மியிடம் சொல்லியே இருந்தார், “என்னால அவன் கிட்ட பேச முடியாது. நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று.
சில சமயம் எல்லை மீறிவிட, இதோ மகளுக்கு ஒன்பது மாதம், இவள் மீண்டும் மூன்று மாதம்.
என்ன பேசியும் ஷர்மியின் முகம் தெளிவாகாமல் இருக்க, “உன்னால தான்” என்று அவளிடம் காய்ந்தான்.
“என்ன என்னால தான்?” என்று அவள் சீற.
“பின்ன, உன்னை பிடிச்சிருக்கு, நீ இல்லாம இருக்க மாட்டேன் அப்படி இப்படின்னு டைலாக் விட்டிருந்தா கட்டி பிடிச்சிட்டு பேசாம தூங்கியிருப்பேன், நீ என்னை தள்ளி தள்ளி நிறுத்தினா?”
“அப்படியே வாய் மேலேயே போட்டேன்னா பாருங்க” என்று முழு ஆத்திரத்தில் நின்றவள், “ஏன் எனக்கு உங்களை பிடிக்கும்னு உங்களுக்கு தெரியாதா? என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு தெரியாதா?” என்று அவள் கிளம்ப..
“அப்புறம் எதுக்கு கண்டதையும் மனசுல நினைச்சு என்னையும் டென்ஷன் பண்ற” என்று கத்தினான்.
“லூசு ஆகிட்டீங்க நீங்க, முதல்ல கார் எடுங்க” என்று அவள் அதட்ட,
எதுவும் பேசாமல் கார் எடுத்தவன் வீடு நோக்கி செலுத்தினான்.
புது வீடு, புத்தம் புது வீடு, ம்கூம், வீடல்ல பங்களா! அதுவும் சின்ன அல்லா பெரிய பங்களா. ஆம்! விஸ்வாத்திகா பிறந்த சில நாட்களில் இந்த பங்களா விலைக்கு வந்தது. சற்று அதிகமான விலையே. ஆனால் இப்படி அமைவது சிரமம். புது வீடு, கட்டியே வருடம் கூட இருக்காது, நகரின் முக்கிய இடத்தில், பெரிய பரப்பளவில்.
பல கோடிகள், தக்கி முக்கி வாங்கி விட்டான். அதனால் இப்போது சில கோடி கடன். இன்னும் ஒன்றோ இரண்டோ வருடத்தில் மீண்டு விடுவான். ஆனால் அதுவரை டென்ஷன் தானே. அவன் பேரிலும் ஷர்மி பேரிலும் வீடு சேர்ந்தே வீடு. கடனில்லாமல் வாங்கியிருக்க முடியும் இன்னும் சற்று சிறிதாய் வாங்கியிருந்தாள். ஆனால் அவனுக்கு இது பிடித்தது.
அதுவும் ஷர்மி வேறு அவளின் அப்பாவிடம் எனக்கு வீடு வேண்டும் என்று கேட்டிருந்தது ரவியின் நினைவுகளில் ஒரு ஓரத்தில் ஒரு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் பொருட்டு இந்த பிரமாண்டத்தை வாங்க யோசிக்கவில்லை. ஷர்மிளாவை இதன் மூலம் திருப்திபடுத்த நினைத்தானா ஏதோ ஒன்று மிக மிக அகலக் கால் வைத்து விட்டான்.    

Advertisement