Advertisement

அத்தியாயம் முப்பத்தி மூன்று :
ஷர்மிளாவின் மற்றொரு பரிமாணத்தை பார்த்தான் ரவீந்திரன். 
மிக மிக அழுத்தமான குரலில் கேள்விகள் வந்தன அவனை நோக்கி, கோபமில்லை, ஆவேசமில்லை, அழுகையில்லை, வருத்தமில்லை, எதுவுமில்லை.
உன்னுடைய பதில் எனக்கு வேண்டும் என்ற செய்கை மட்டுமே.
ஆனால் எத்தனை பரிமாணத்தை காண்பித்தாலும் ரவீந்தரனின் பரிமாணம் ஒன்றே, அவன் மாறப் போவதில்லை என்று அவளுக்கு புரியவில்லை.   
வீட்டிற்கு வரும் போதே எப்போதும் மகளோடு எதிர்கொள்ளும் ஷர்மி அன்று எதிர்கொள்ளவில்லை. இவன் வந்ததை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை. அவனின் கண்கள் வந்ததும் மனைவியை தேட, அவளோ மகளுக்கு உணவு ஊட்டி உடல் துடைத்து உடை மாற்றி கொண்டிருந்தாள்.
இவன் சென்று உடை மாற்றி வர, அப்போதும் மகளோடு தான் இருந்தாள்.
நல்ல பசி அவனிற்கு உணவு உண்ண அமர, அப்போதும் அருகில் வரவில்லை, சீதா வந்து பரிமாற, உண்ண ஆரம்பித்தான்.
அம்மா பரிமாறினாலும் இவன் உணவு உண்ணும் நேரம் மகளோடு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்வாள், இன்று அது போல எதுவும் இல்லை.
ரவியின் சித்தி தான் “நீ இன்னும் சாப்பிடலை ஷர்மி, பாப்பாவை என்கிட்டே குடுத்துட்டு நீ போ” என்றார். விஸ்வாத்திகாவை அவரிடம் கொடுத்தவள் அப்போதும் உணவெல்லாம் உண்ண வரவில்லை. அவர்களின் அறைக்கு சென்று விட்டாள்.
இவன் உணவுண்டு முடிக்கவும், “இன்னும் ஷர்மி சாப்பிடலை, பார்த்துக்கோ ரவி, நான் தூங்க போறேன்” என்று சீதா சென்று விட, அவனின் சித்தியும் குழந்தையை அவனிடம் கொடுத்து சென்று விட்டார்.
அங்கே இருந்த சசிம்மாவிடம், “நீங்க ஒரு அரை மணி நேரம் கழிச்சு வந்து எடுத்து வைங்க” என்று அனுப்பியவன், குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே போனான்.
“இன்னும் சாப்பிடலையா ஷர்மி” என்றவனிடம், “பசியில்லை” என்று முகம் பார்க்காமல் சொல்ல,
அவளின் முன் வந்து நின்றவன் “என்ன ஆச்சு ஷர்மி? உடம்புக்கு ஏதாவது செய்யுதா?” என்றான் அவளின் வித்தியாசம் புரிந்து.
அப்போதும் அவனிடம் சுணக்கம் என்று புரியவில்லை.
“நல்லாயிருக்கேன்”
“அம்மா எதுவும் சொன்னாங்களா?”
“இல்லை” என்ற தலையசைப்பு, எல்லாம் அவன் முகம் பார்க்காமல்.
அவளின் கை பிடித்து அவளை திருப்பியவன், “என்னை பாரு, என்ன பிரச்சனை?” என்றான் கட்டாயப்படுத்தும் குரலில்.
“நான் யார் உனக்கு?” என்றாள்.
“என்ன கேள்வி இது, எனக்கு புரியலை” என்றான் உண்மையில் புரியாமல்.
“நான் யார் உனக்கு, இந்த பெட்டை மட்டும் உன் கூட ஷேர் பண்ண ஒரு ஆளா?”  
“என்ன உளர்ற, எனக்கு புரியலை, தெளிவா சொல்லு” என்றான் ஏதோ சரியில்லை என்று உணர்ந்து.
மகள் சிணுங்கவும் கையை விடுத்தான், மகளை தட்டிக் கொடுத்தவள், படுக்கையில் காலை நீட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டு, மகளை நீள வாக்கில் தன் மீது படுக்க வைத்து தட்டிக் கொடுக்க, சில நிமிடங்களில் மகள் உறங்கி விட்டாள்.
அதுவரையிலும் ரவி இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அவளை தான் தீவிரமாய் பார்த்து இருந்தான். அவனின் துளைக்கும் பார்வை சற்றும் ஷர்மியை பாதிக்கவில்லை. அங்கே ஒருவன் இருப்பது போலவே உணராதவள் போல இருந்தாள். ஷர்மிளாவை பார்க்க பார்க்க விஷயம் பெரிதென்று தோன்றியது. நின்றது நின்றபடி இருந்தான்.  
மகள் உறங்கி விட்டதை உணர்ந்தவன், “என்ன சொன்ன? எனக்கு புரியலை தெளிவா சொல்லு!” என்றான் மீண்டும் இயலாமையை அடக்கிய குரலில். 
அவனின் முகம் பார்த்தவள் “நான் யாரு உங்களுக்குன்னு கேட்டேன்?” 
“என்னோட மனைவி” என்றான் பொறுமையான குரலிலேயே.  
“மனைவின்னா படுக்கையை உங்களோட பகிர்ந்துக்க மட்டுமா நானு”  
ரவியின் கண்களில் கோபத்தின் தீட்சண்யம் ஏற சற்றும் அசராதவளாக அவனை பார்த்தாள்.
அப்போதும் கூட ரவி நினைத்தது ஒரு பிள்ளை பிறந்து சில மாதங்களில் அவள் மீண்டும் உண்டாகி இருக்க, அதற்கு யாரோ எதுவோ பேசிவிட்டார் அதனால் இப்படி பேசுகிறாள் என்று.
“பேபி திரும்ப சீக்கிரம் வந்துடுச்சு, அதுக்கென்ன? இப்போ யாராவது ஏதாவது சொன்னா நீ கண்டதும் பேசுவியா” என்றான் சற்று கோபமான குரலிலேயே.  
“பேபிக்கும் இதுக்கும் சமந்தமேயில்லை” என்று சொல்லிக் கொண்டே மகளை மடியில் இருந்து நகர்த்தி படுக்கையில் வசதியாய் படுக்க வைத்தவள், படுக்கையில் இருந்து இறங்கி அவனின் முன் வந்து நின்று அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
“சோ, உன்னோட ஒரு வசதியான வாழ்க்கை வாழ வந்தவ நானு, உன்னோட படுக்கையை மட்டும் பகிர்ந்துக்க வந்தவ நானு, உன்னோட சுகத்துக்கு மட்டும் நானு, கஷ்டத்துல நான் கிடையாது. ஏன் உனக்கு ஒரு கஷ்டம்னு என்கிட்டே சொன்னா நான் உன்னை கீழ பார்ப்பேனா இல்லை உன்னை விட்டு போயிடுவேனா? என்னை பத்தி இவ்வளவு உயர்ந்த எண்ணம் எல்லாம் வெச்சு இருக்குறதால என்கிட்ட எதுவும் நீ சொல்றதில்லையா?” என்றாள் சாட்டைகளாய் வார்த்தைகளை சுழற்றி.   
அவளின் வார்த்தைகளை கேட்டவனுக்கு கோபமெல்லாம் வரவில்லை. அதுவரையிலும் கோபமாய் இருந்தவன் கூட அந்த நொடியில் கோபம் உணரவில்லை. “என்ன சொல்லணும்?” என்றான் பொறுமையான குரலில்.
“ஒன்னுமே சொல்ல இல்லையா?”  
“சொல்ல ஆயிரம் இருக்கும். ஆனா நீ எதை சொல்ற?”  
பண விஷயத்தை தான் சொல்கிறாளோ என்று தோன்றிய போதும், என்ன வென்று சரியாய் தெரியாமல் பணத்தை பேச விருப்பமில்லை.
“இங்கே வீட்டில் எதுவும் பிரச்சனையோ, இல்லை முன்பு எதுவும் திருமணதிற்கு கார்னர் செய்யும் போதும் எதுவும் அதிகமாய் செய்து விட்டேனோ, நினைவில் இல்லையோ, ஆனால் அப்படி எதுவும் நான் செய்யவில்லையே” இப்படியும் எண்ணங்கள் ஓடியது. 
“என்ன விஷயம்னு சொல்லாம சும்மா வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது. என்னன்னு சொல்லு நானா எதுவும் கெஸ் பண்ண விரும்பலை” என்றான் பொறுமையாகவே.
“ஒரு கஷ்டம் வீடு விக்கற அளவுக்கு போயிருக்கீங்க. அதுவும் ஒரு சின்ன அமௌன்ட் ஜஸ்ட் சிக்ஸ்டி செவேன்ட்டி லேக்ஸ்க்கு. ஆனா என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை ஏன்?” என்றாள் அவனை நேர் பார்வை பார்த்தபடி.
“இதை மட்டும் நீ என்னை பார்த்து கேட்டு இருக்கலாமே? அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பேசின? என்றான் அமைதியாகவே.
“அப்படி தான் பேசுவேன். உனக்கு கோபம் வந்தா பேசற தானே. உன்னை கல்யாணம் பண்ணிக்க மாப்பிள்ளைங்க கியூல நிக்கறாங்களான்னு அப்போ அப்படி தான் பேசுவேன்” என்றாள் நிறுத்தி நிதானமாய்.
“எதுக்கு இந்த கல்யாணம்? எனக்கு இப்போவரை புரியவேயில்லை. நான் ஏதோ சொல்லிட்டேன்னு எனக்கு மாப்பிள்ளை அமைய விடாம என்னை கார்னர் செஞ்சு, என்னை கல்யாணம் செஞ்சு, ஒரு குழந்தை கையில, ஒரு குழந்தை வயித்துல… ஆனா உனக்கு ஒரு கஷ்டம் என்கிட்டே சொல்ல முடியலை. அப்போ நாம வாழற வாழ்க்கைக்கு என்ன பேர்? என்ன அர்த்தம்? எனக்கு தெரியணும்!” என்றாள் சிறிதும் கோபம் காண்பிக்காமல்.
பரீட்சையில் ஏதோ கண்டிப்பான ஆசிரியர் மாணவனை கேள்வி கேட்பது போல கேட்டிருந்தாள்.
ரவி அவளை பார்த்தது பார்த்தபடி நின்றிருக்க, “படுக்கறதுக்கு மட்டும் நானான்னு கேட்டா பெரிய வார்த்தையா? எனக்கு அப்படி தோணலை. அது மட்டும் தான் நமக்குள்ள திவய்மா நடக்குது. வேற எதுவும் இல்லை. ஏன் இப்போல்லாம் சண்டை கூட போடறதில்லை. அதனால அந்த வார்த்தையை வெச்சு, நான் இப்படி பேசிட்டேன்னு எமோஷனல் ஃபூல் பண்ண ட்ரை பண்ண வேண்டாம். ஏன் அது என்ன கணவன் மனைவிக்குள்ள பேசக் கூடாத வார்த்தையா? நீங்க பேசினதுக்கு இது ஒன்னும் கிடையாது!” என்றாள் அலட்சியமாக.
ரவிக்கு நிஜமாய் என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. அவன் இப்படி எல்லாம் யோசித்ததில்லை. அவன் யோசிக்கும் கோணம் வேறு. அவன் எந்த பாவனையும் காண்பிக்காமல் அசையாமல் நின்றிருக்க,    
அது ஷர்மியின் கட்டுப்பாட்டை இழக்க வைத்தது. “சரியான திமிர்டா உனக்கு, நான் தான், எனக்கு தான் எல்லாம் தெரியும், எதுனாலும் நானே பார்த்துக்குவேன்ன்னு அகம்பாவம். ஒரு பிரச்சன்னைன்னா என்கிட்டே சொல்ல மாட்டியா நீ, அவ்ளோ பெரிய இவனா நீ…” என்று அதுவரை இருந்த நிதானத்தை கைவிட்டு சற்று டென்ஷன் ஏற ஏகத்திற்கும் பேசினாள்.
இப்போது ரவியிடம் இன்னும் ஒரு நிதானம் வந்திருந்தது. அவளின் பேச்சுக்கள் அத்தனையும் ஒதுக்கியவன் “சாப்பிட்டியா” என்றான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?”  
“நானும் எங்கேயும் போகப் போறது இல்லை, உன்னையும் விடப் போறது இல்லை. வேண்டிய மட்டும் பேசலாம் சாப்பிட்டு வா” என்றான்.
ஷர்மிக்குமே பசித்தது, “நீங்க சொல்றதுனால போகலை. எனக்கு பசிக்குது அது தான் போறேன்” என்று அவள் சொல்லிச் செல்ல…
இவளை எப்படி சமாளிக்க என்று தோன்றிய போதும், முகத்தில் ஒரு புன்னகை வந்து அமர்ந்தது.
மகள் உறங்கியிராவிட்டால் பின்னேயே சென்றிருப்பான், இப்போது தான் மகள் உறங்க ஆரம்பித்தால் அங்கேயே இருந்தான்.
சிறிது நேரத்தில் ஷர்மி வந்து விட, “அதுக்குள்ள சாப்பிட்டியா நீ?” என்றான்.
“பேச்சை மாத்தாதீங்க, எனக்கு பதில் வேணும்!”  
“பதில் தானே சொல்லிட்டா போச்சு” என்று சொல்லி, வெளியே சென்று  அவர்கள் இருவருக்கும் பால் எடுத்து சரியாய் உண்ணவில்லை என அவளுக்கு பழமும் எடுத்து உள்ளே வந்தவன், அதனை ஒரு மேஜை மேல் வைத்து, கதவை தாளிட்டு வந்தான்.
எல்லாம் ஒரு வேகம், “சாப்பிட்டு வான்னு சொன்னா ஒரு தோசை சாப்பிட்டு சண்டை போட வந்திருக்க” என்று அவளிடம் எகிற,
ஷர்மி முறைத்து நிற்கவும்… அவளை நோக்கி வேகமாய் வந்தான்.      
ரவி அருகில் வந்த வேகத்திற்கு ஒரு வேளை அடிக்க போகிறானோ என்று தோன்ற, “அடிக்க போறீங்களா?” என்றாள்.
“என்னது அடிக்க போறேனா? ஆமாம்!” என்று சுவரின் பக்கம் நின்றிருந்த அவளை சுவரோடு சாய்த்து, “ஆமாம் என் உதடால உன் உதடை அடிக்கலாம்னு இருக்கேன் இல்லை உனக்கு இஷ்டமில்லைன்னா நீ கூட என்னை உன் உதடால அடிச்சிக்கோ, கடிச்சிக்கோ, என்ன வேணா செஞ்சிக்கோக்கோ, எங்கே வேணா” என்று பெரியமனது கொண்டு சொல்பவன் பாவனையில் சொல்ல…  
“ரவி” என்று எரிச்சல் மிகுதியில் கத்தியவள், “உனக்கு சூடு சொரணையே கிடையாதா?” என்றாள் கோபம் தலைகேற.
“நீதானே சொன்ன நமக்குள்ள இதை தவிர ஒன்னுமில்லைன்னு அப்படி தான் ப்ரூவ் பண்றேன்” என்றான் ஒரு மந்தகாச புன்னகையோடு.
“ஐ வில் கில் யு இடியட் லீவ் மீ” என்று பதிலுக்கு ஷர்மி அடிக்குரலில் வார்த்தைகளை துப்பினாள்.
“அப்போ நீ சொன்னதை வாபஸ் வாங்கு” என்றான் அதே உல்லாச பாவனையோடு பார்வையோடு.   
“முடியாது” என்ற பாவனையில் அவள் நிற்க..
“உன்னோட டேஸ்ட் ஏன் இவ்வளவு மட்டமா இருக்குன்னு ஒரு பொண்ணு கிட்ட அவ என்னை சைட் அடிச்சதை பார்த்து சொன்ன, அதையும் விட இவனை கல்யாணம் பண்ணறதுக்கு நான் வாழ்க்கை முழுசும் கல்யாணம் பண்ணாமயே இருப்பேன்னு எனக்கு ஒரு காம்ப்ளிமென்ட் குடுத்த, இப்போ அதை விட மோசமா என் மேல ஒரு குற்றச்சாட்டு வெச்சிருக்க… நான் உனக்கு யாருன்னு நீ என்கிட்டே கேட்கற, அதே நான் உன்கிட்ட கேட்கறேன் நான் உனக்கு யாரு” என்றான் குரலில் இன்னதென்று உணர முடியாத பாவனையோடு.  
    

Advertisement