Advertisement

“உன் பேபியை நான் இன்னும் பார்க்கலை. பட் கேட்டேன், நல்லா இருக்கா சொன்னாங்க. இப்போ ரூம்க்கு மாத்திடுவாங்கலாம்” என்றான்.
“பேக் எடுத்துட்டு வாங்க?” என்று சந்தோஷிடம் சொல்ல, அவன் செல்லவும்.  
“என்ன பேக்?” என்றான் ரவி.
“ம்ம், ஏதாவது எடுத்துட்டு வந்தீங்களா அண்ணா?” என்றாள் கௌசி ரவியை பார்த்து.
“என்ன எடுத்துட்டு வரணும்?” என்றான் புரியாதவனாய்.
“என்ன எடுத்துட்டு வரணுமா, அண்ணி இந்த ஹாஸ்பிடல் பெட்ஷீட் எல்லாம் படுக்க மாட்டாங்க. என் பட்டுக்கு தொட்டில்ல போட துணி, பட்டுவை சுத்தி தூக்க துணி, பட்டுக்கு ட்ரெஸ் எல்லாம் வேணும். அப்புறம் அண்ணிக்கு ஃபிளாஸ்க் பால் வாங்க இப்படி நிறைய… அண்ணிக்கு ட்ரெஸ் கொண்டு வந்தீங்களா?”
“இல்லையே” என்று உதடு பிதுக்கினான்.
“நான் எல்லாம் வாங்கி வெச்சிட்டேன். போன வாரம் நீங்க ஹாஸ்பிடல் வந்தப்போவே. அண்ணா, நான் உன் தங்கை மட்டும் இல்லை இங்க, பட்டுக்கு தாய்மாமா சார்பு அத்தையும். சோ, இவர் என்கிட்டே கேட்டு பெரிய பர்ச்சேஸ் முடிச்சிட்டார்”
“அண்ணிக்கு போட்டுக்க நைட் ட்ரெஸ், பாப்பாக்கு ட்ரெஸ் எல்லாம் வாங்கி அதையெல்லாம் தண்ணில கூட போட்டு எடுத்து வெச்சிட்டோம்” என்று அவள் சொல்லும் போதே, இரண்டு பெரிய பைகளை சுமந்து சந்தோஷ் வர, விசாலியும் கேசவனும் வந்து விட்டனர். அவர்களும் குளித்து வந்தனர், பார்த்தாலே தெரிந்தது.
“இவங்களையுமா யார் சொன்னது?” என்று தங்கையிடம் கேட்க,
“இவர் தாண்ணா, ஆனா இவர் குளிக்கலை, கேட்டா இவர் பேபி தூக்கும் போது குளிச்சிக்குவாராம்”
விசாலி வந்ததும் கௌசி அவரின் கைகளில் குழந்தையை கொடுத்தாள். ரவியின் முகம் பார்த்து பார்த்து அவர் தடுமாறி வாங்கினார்.
“இவங்க எதுக்கு என்னை பார்க்கறாங்க?” என்று ரவி புரியாமல் பார்க்க,
“உன் அண்ணா திட்ட போறாங்க” என்றார்.
“எதுக்கு திட்டுவேன்?” என்றான் புரியாமல் சற்று கோபமாக.
ரவியின் கோபத்தை பார்த்து பயந்துவிட்டவர், பதட்டத்தில் “அது எனக்கு குழந்தை பிறக்காது இல்லையா, அதனால சட்டுன்னு என் கைல யாரும் குழந்தையை குடுக்க மாட்டாங்க” என்று விட்டார்.
“வாட் ரப்பிஷ், நீங்க பிடிங்க!” என்றான் ரவி இன்னும் கோபமாக.
அதற்கும் மேலே கௌசி “இருங்க அத்தை, நான் சீக்கிரம் ஒரு குழந்தை பெத்துக் குடுக்கறேன், நீங்க தான் வளர்க்கணும்” என்று விட,
அவருக்கு அந்த நேரத்திலும் கண்களில் கண்ணீர்.
ஒரு நெகிழ்ச்சியான தருணம்.
அவரின் தம்பி தங்கைகள் அவர் வளர்த்து கரை சேர்ந்தவர்கள் அவர்கள் வீட்டினர் கூட அவரிடம் இப்படி பிறந்த குழந்தையை நீட்டியதில்லை. அதனால் அவரும் ஒதுங்கி விடுவார்.
இப்போது இந்த பிஞ்சு முகத்தை பார்க்கையில் அப்படி ஒரு பரவசம்.
“ஷர்மிக்கு பிடிக்கலைன்னா?” என்று அப்போதும் தயங்கினார்.
“ஷர்மிக்கு உங்க வாழ்க்கையை அவ அப்பாவோட அக்சப்ட் பண்ண முடியலை ஆரம்பத்துல. இப்போ பெருசா ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லை. அவளுக்கு ஒட்ட முடியாது அவ்வளவு தான். உங்ககிட்டன்னு இல்லை அவ குணமே அப்படி தான் சட்டுன்னு யாரோடவும் ஒட்ட மாட்டா.    அதுவும் உங்க வீட்டு ஆளுங்க உரிமையா பேசி எதுவும் கிளப்புவாங்க. அது அவளுக்கு பிடிக்காது. எல்லோரும் அவங்க அவங்க எல்லைக்குள்ள நிக்கணும் நினைப்பா”  
“மத்தபடி அவ ஒன்னும் கெட்ட பொண்ணு எல்லாம் கிடையாது இப்படி ஒரு சிந்தனையோட இருக்க, அவளோட எண்ணங்கள் எப்போவும் நேர்மறையானது” என்று அவன் சொல்லும் போதே…
ஷர்மியை ரூமிற்கு மாற்ற இருப்பதாக சொல்ல, “குடுங்க” என்று கைகளில் வாங்கிக் கொண்டான். “நான் தான் அவகிட்ட குடுப்பேன்” என்றான் சந்தோஷமாக. அவனுக்கு தானே மனைவியிடம் குழந்தையை காண்பிக்க வேண்டும் என்ற ஆசை.
அந்த நேரம் தான் ஷர்மிளாவை ஸ்ட்ரெட்சரில் வைத்து தள்ளி வந்தனர்.    
சந்தோஷ் ரூமின் உள் கூட வரவில்லை ஏசி ரூம் என்பதால் அவனின் சளி இருமல் குழந்தைக்கு வந்து விடுமோ என்று.
விசாலியும் கௌசியும் தான் வேகமாய் சென்று அவளுக்கு படுக்கை எல்லாம் சரி செய்து கொடுக்க… “அப்படியே இறங்கி இதுல படுத்துக்கங்க” என்று அந்த சிஸ்டர் சொல்ல, அவள் எழ முற்படும் போதே, குழந்தையை கௌசி கைகளில் கொடுத்தவன், அவளை அப்படியே தூக்கி இந்த படுக்கையில் படுக்க வைக்க, அந்த சிஸ்டர் “ஆங்” என்று பார்த்திருந்தார்.
“உட்கார வைங்க” என்று ஷர்மிளா சொல்ல… பின்பு படுக்கையை சாய்ந்து அமர்ந்து கொள்ள வாகாக வைத்தான்.        
சாய்ந்து அமர்ந்து கொண்டவளின் முகம் குழந்தையை எதிர்நோக்க, கௌசி ரவியிடம் குழந்தையை கொடுத்தாள். அவளின் அருகில் ரவி குழந்தையோடு செல்ல, “அண்ணா எதுவும்னா கூப்பிடு, நாங்க வெளில இருக்கோம்” என்று சொல்லி கௌசி போக, அவளின் பின்னே விசாலமும் சென்றார். “அவங்களுக்கு குடிக்க எதுவும் குடுங்க” என்று சொல்லி சிஸ்டரும் சென்றார்.
வெளியில் வந்த கௌசி பால் பிளாஸ்க் எடுக்க, “குடு கௌசி, நீ இங்க இரு, எதுக்கும் கூப்பிட்டா போ” என்று விசாலி வாங்கிக் கொண்டு கேசவனோடு கேண்டீன் நோக்கி சென்றார்.  
ரவி ஷர்மிளாவின் அருகில் சென்று அவளின் கைகளில் குழந்தையை குடுக்க, அப்படி ஒரு பரவசத்தோடு வாங்கினாள். “எப்படி இருக்கா நம்ம பேபி?” என்ற ரவியின் கேள்விக்கு எந்த பதிலும் இல்லை அப்படியே குழந்தையை பார்த்திருந்தாள். மிகவுமே பயந்து இருந்தாள், பிரசவம் எப்படி இருக்குமோ என்று. எப்படி பிறந்தால் அவளின் செல்லக் குட்டி என்று அவளுக்கே தெரியவில்லை. கடவுளுக்கு நன்றி கூறியபடி மகளை பார்த்திருக்க,    
அவளின் மிக சோர்ந்த முகத்தை பார்த்ததும் பதில் சொல்லாமல் இருந்த பாவனையும் ரவியை பதட்டம் கொள்ள வைக்க, “ஷர்மி நீ ஓகே தானே எங்கேயும் வலிக்குதா?” என்றான் கவலையாக.
“ஐ அம் ஓகே” என்றவளின் கண்களில் நீர் படலம்.
“அப்புறம் என்ன ஏன் இப்படி கண்ணு எல்லாம் கலங்குது” என்று அவன் பதறிவிட,
“நான் அம்மா ஆகிட்டேன்” என்றவளின் கண்களில் இருந்து கரகரவென்று நீர் இறங்கியது.
“ப்ச், என்னை பயப்படுத்தக் கூடாது” என்றவனுக்கும் மனது ஏதோ செய்ய, அவளை தோளோடு அணைத்து மகளை நன்கு பார்த்தவன், நானும் தான் அப்பா ஆகிட்டேன்” என்றான்.
“நாம ரெண்டு பேரும் சேர்ந்து அம்மா அப்பா ஆவோம்னு நினைச்சதே இல்லை. கனவு மாறி இருக்கு” என்று ஷர்மி சொல்ல,
வெளியே சந்தோஷ் அதை தான் கௌசியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு இவங்க கல்யாணம் முடிவாகறவரை நான் ஒரு நொடி கூட நினைச்சதில்லை.  ரெண்டு பேருக்கும் கொஞ்சமும் ஒத்துப் போகாது. ஷர்மி எப்போவும் நீ எங்க வீட்ல வேலை செய்யறவன்னு ஆட்டிடியுட் காமிப்பா. அது கூட பரவாயில்லை ஏன்னா மாமா வேலை தான் செஞ்சாங்க, ஆனா உங்க அண்ணா ஷர்மியை கொஞ்சமும் மதிக்க கூட மாட்டாங்க. நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளான்னு பார்ப்பாங்க”
“அதனால தான் உங்க அண்ணா எங்க வீட்ல இருந்தப்போ வயசுப் பொண்ணு இருக்குற இடம் அவர் இருக்கக் கூடாதுன்னு எல்லாம் தோணினது இல்லை”
“இப்போ கூட பிடிவாதமா உங்க அண்ணா பொண்ணு கேட்டப்போ ஷர்மி அவரோட பொருந்தவே மாட்டான்னு பயந்தேன். ஆனா எல்லாம் மாறிப் போச்சு. பாரேன் டெலிவரிக்கு கூட யாரையும் எதிர்பார்க்காம கூட்டிட்டு வந்துட்டார்”
“இப்போ குழந்தையும் நான் தான் காட்டுவேன்னு சொல்றார். அவளுமே வேற யாரையுமே எதுக்குமே எதிர்பார்க்கலை. வேற யாரையும் கல்யாணம் செஞ்சிருந்தா இப்படி இருந்திருப்பாளா தெரியாது” என்று சந்தோஷ் சொல்ல,
பால் வாங்கி வந்துவிட்ட கேசவனும் விசாலியும் கேட்டுக் கொண்டு தான் அமர்ந்து இருந்தனர்.  
“அண்ணா மட்டும் என்ன? அண்ணா இப்படி இருப்பாங்கன்னு எங்க யாருக்கும் தெரியவே தெரியாது. அண்ணி கிட்ட இருக்குற மாதிரி அவர் யார் கிட்டயும் கிடையாது. அது மனைவின்னு புருஷனுக்கு வர்றது மட்டும் கிடையாது. பொதுவுல நிறைய ஹஸ்பன்ட் அண்ட் வைப் க்ளோஸ் தான். இவங்களதுல வேற ஏதோ ஒன்னு இருக்கு. நான் எங்க அக்கா மூணு பேரையும் பார்த்திருக்கேன். அவங்க ஜஸ்ட் பார்த்தாலே போதும் எங்க மாமாங்க நில்லுன்னா நிற்பாங்க, உட்காருன்னா உட்காருவாங்கன்ற மாதிரி தான். அதே மாதிரி தான் மாமாங்க என்ன சொன்னாலும் அக்காங்க உடனே செய்வாங்க. அவங்களை பார்த்து பார்த்து கவனிப்பாங்க”
“ஆனா இங்க நான் பார்த்த வரைக்கும் அண்ணா கிட்ட அண்ணி இது பண்ணுங்கன்னு சொல்றதில்லை. அண்ணாவும் அப்படி தான். ரெண்டு பேருமே அவங்க அவங்களா தான் இருக்காங்க. அப்படியிருந்தும் ஒருத்தருக்கு ஒருத்தர் என்னன்னு தெரிஞ்சு இருக்காங்க”
“எஸ், தே ஷேர் அ ஸ்பெஷல் பாண்டிங்” என்று ஆமோதித்த சந்தோஷ், ஆனா எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தான். அதுக்கு முன்ன கொஞ்சமும் இல்லை ஷர்மிக்கு, உங்க அண்ணாக்கு எப்படியோ எனக்கு தெரியாது. பயந்துட்டே இருந்தேன் எப்படி அவரோட ஷர்மி இருப்பான்னு, ஐ அம் சோ ஹேப்பி இன்னைக்கு” என்றான்.
குழந்தையை கையில் வைத்திருந்த ஷர்மிளாவும் பார்வையை ரவீந்திரன் மேல் வைத்திருக்க அவளின் எண்ணமும் இது தான், “கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டான், இவனை எனக்கு பிடிக்காமல் போயிருந்தால்” என்ற எண்ணம், கூடவே “இவனே கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டான். இவனை எப்படி எனக்கு இவ்வளவு பிடிக்கிறது” என்ற எண்ணம்.
“என்னடி ஓடுது மைன்ட் குள்ள” என்றான் சிறு அதட்டலாக ரவி. என்னவோ ஏடாகூடமாய் நினைக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.
“என்னவோ நினைக்கிறேன், எல்லாம் உங்க கிட்ட சொல்லணுமா என்ன?” என்று அவளும் முறுக்க,
“அடேய், அம்மா அப்பா லுக் அட் மீ, நான் தான் இங்க, இப்போ” என்று அவர்களின் செல்ல மகள் சிணுங்கி அவர்களிடம் தன் இருப்பை தெரிவித்தாள்.      
                  
                 
           
       

Advertisement