Advertisement

அத்தியாயம் முப்பது :
ஷர்மிளாவிற்கு உறக்கத்தில் இருந்து விழிப்பு வந்து விட, பக்கம் படுத்திருந்த ரவீந்திரனை பார்த்தாள், நல்ல உறக்கத்தில் இருந்தான். நிறை மாத கர்ப்பிணி இப்போது அவள். சற்று வலிப்பது போல இருக்க, மெதுவாக சத்தம் செய்யாமல் எழுந்த ஷர்மிளா பாத்ரூம் சென்று அங்கிருந்த சுவிச்சை போட அந்த சத்தத்தில் விழித்துக் கொண்டான். 
அடுத்த நொடி எழுந்து அமர்ந்தவன் “என்ன ஷர்மி?” என்றான்.
ஆம்! நாட்கள் நெருங்கி விட்டதால் கோழி தன் குஞ்சை அடைகாப்பது போல ஷர்மியை பாதுகாத்தான். ரவி இருக்கும் நேரம் அவனின் முழு கவனத்தில் தான் இருப்பாள். அவன் இல்லாத போது அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் சசிம்மா இருப்பார். எப்படியும் கௌசி தினமும் சிறிது நேரம் வந்து விடுவாள்.
சீதாவை “வாங்க, வந்து இருங்க” என்று அழைத்திருந்தால் வந்திருப்பார். ஆனால் அவன் அழைக்கவில்லை. அவர் எந்த நேரம் எப்படி பேசுவார் என்று தெரியாது. அவனும் அவரும் சண்டை போட்டால் ஷர்மிளா தான் பதட்டப்படுவாள் என்பதால் அவன் அழைக்கவில்லை.
அவளுக்கு அம்மா இல்லை, அவனின் அம்மாவை அவன் அழைக்கவில்லை. அதனால் ஊரிலிருந்து வேறு யாரையும் அழைக்க ரவிக்கு மனதில்லை. இந்த விஷயம் கொண்டு, கிஞ்சித்தும் எதுவும் தப்பி விடக்கூடாது என்பதால் கூடுதல் கவனம் ஷர்மிளாவின் மீது, குழந்தை பிறப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நன்றாக நடக்க வேண்டும் என்றும்.
ஒரு வகையில் கணவன் மனைவி இருவருமே தைரியம் என்பதால் தனியாகவே நிறைமாத கர்ப்பிணியான ஷர்மிளாவின் உடல் உபாதைகளை எல்லாம் சமாளித்தனர். அது இன்னும் இன்னும் அவர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்தியது மனதளவில்.           
சிறிது நேர தனிமை கூட கிடைக்காததால் சில சமயம் “லீவ் மீ அலோன். யாராவது என்னை மானிட்டர் பண்ணிட்டே இருக்கீங்க, என்னை ஜெயில்ல வெச்சிருக்கீங்க நீங்க” என்பாள் எரிச்சல் மிகுதியில் ரவியிடம். அதை பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்பட மாட்டான்.       
இப்போதும் அந்த சிறு சத்தத்தில் விழித்தவன் “என்ன? என்ன ஷர்மி?” என்றான்.
ஒற்றை விரலை காட்டி “போறேன்” என்றாள்.
நேரம் பார்த்தான் இரவு ஒரு மணி, “இந்த டைம் நீ எழ மாட்டியே?” என்று கேட்க,
“அட, என்ன நீங்க? இன்னைக்கு ஏதோ ஒரு அர்ஜ் முழிப்பு வந்துடுச்சு” என்றவள் உள்ளே போக எழுந்து அமர்ந்து கொண்டான்.
எப்பொழுதையும் விட சிறிது நேரம் கழித்தே வர, பாத்ரூம் வாசலில் நின்றிருந்தான் “ஏன் இவ்வளவு நேரம், என்ன பண்ணுது?” என்ற கேள்வியுடன்.
“ஏதோ அசௌகரியமா இருக்கு, கொஞ்சமா வலிக்குது, நான் வலிக்குதான்னு நல்லா அப்சர்வ் பண்ணும் போது வலியில்லை” என்றாள்.
“ஹாஸ்பிடல் போவோமா?” என்றான்.
“போனவாரம் கூட இப்படி தானே போனோம். அப்புறம் இது டெலிவரி பெயின் இல்லைன்னு அனுப்பிட்டாங்களே, இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு சொன்னாங்களே” என்றாள்.
“பரவாயில்லை ஒரு வாரம் தானே இருக்கு. திரும்ப போலாம், அதனால என்ன, ரிஸ்க் எடுக்க வேண்டாம்” என்றவன், உடனே உடை மாற்றினான். அந்த சில நிமிடங்களுக்குளாகவே வலி உணர ஆரம்பித்தாள்.
“இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம்” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அந்த நேரத்திலும் பூஜை அறை சென்று வணங்கி அவளுக்கு திருநீறு பூசி அழைத்துக் கொண்டான்.
அங்கிருந்த ஒரு அறையில் தான் வீட்டை பார்த்துக் கொள்ளும் ரமேஷும் சசிகலாவும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவன் எழுப்பவில்லை. காரை எடுத்து முன்னிருந்த செக்யுரிடியிடம் மட்டும் “காலையில அவங்க எழுந்து கேட்டா ஹாஸ்பிடல் போயிருக்கோம்னு சொல்லிடுங்க” என்று விட்டான்.
அதற்குள் நன்றாகவே வலி வந்திருக்க “சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம்” என்று ஷர்மி சொல்ல, “போயிடலாம்” என்று சொன்னவனின் கைகளில் கார் பறந்தது. சில நிமிடங்களில் ஹாஸ்பிடல் வந்து விட வலியில் சீட்டில் இருந்து இறங்க கூட முடியவில்லை. வேகமாய் வீல் சேர் வரவழைத்து, அதில் அவளை அமரவைத்து அனுப்பி, இவன் வேகமாய் காரை பார்க் செய்து உள்ளே போக, அதற்குள் அவளை பிரசவ வார்டின் உள் கொண்டு சென்றிருந்தனர்.
யாருக்கும் அழைத்து சொல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அத்தனை உறவுகள் இருக்க ஒற்றையாய் தான் அமர்ந்திருந்தான்.  அவனின் சிவனை வணங்கி அமைதியாய் அமர்ந்திருந்தான்.  
இதோ கௌசல்யாவின் திருமணம் சந்தோஷுடன் வெகு சிறப்பாக முடிந்து ஒரு மாதமாகியிருந்தது. 
அவளும் சந்தோஷின் வீட்டில் நன்கு பொருந்திபோயிருந்தாள். விசாலியோடு வித்தியாசம் பாராட்டவில்லை. நேற்று இரவு கூட சந்தோஷும் கௌசியும் வந்து ஷர்மியை பார்த்து தான் சென்றிருந்தனர்.   
இதற்கு “நான் இங்க இருக்கவாண்ணா?” என்று கௌசி வேறு கேட்டிருந்தாள். சந்தோஷிற்கு சற்று சளி இருமல் இருக்க, பார்க்கவே அசந்து தெரிந்தான்.
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை, நான் பார்த்துக்குவேன், நீ சந்தோஷை பாரு” என்று சொல்லி அனுப்பியிருந்தான்.
வெளியில் ஒரு சிஸ்டர் வந்தவர், “லேபர் பெயின் தான், டாக்டர்க்கு சொல்லிட்டோம், வந்துட்டு இருக்காங்க, டியூட்டி டாக்டர் உள்ள இருக்காங்க” என்றவர், “லேடீஸ் யாரும் இல்லையா?” என்றார்.
“இல்லைங்க” என்றவன், “எதுக்கு?” என்றான் உடனேயே.
“அவங்க நகை எல்லாம் கழட்டிக்கங்க உள்ள வந்து, அவங்களுக்கு லேபர் டிரஸ் மாத்திட்டோம், அவங்க ட்ரெஸ் வாங்கிக்காங்க” 
அவர்கள் கொடுத்த மேல் அங்கி போன்ற உடையை போட்டு அங்கிருந்த ஸ்லிப்பர் போட்டு உள்ளே செல்ல, பதட்டமாய் இருந்தது.
ரவி உள்ளே சென்ற போது ஷர்மிளா படுத்து தான் இருந்தாள். அந்த நேரம் வலியில்லை. இவனை பார்த்ததும் மெலிதாய் புன்னகைக்க, அந்த புன்னகையில், அவ்வளவு பயம்.
அவளின் அருகில் சென்றவன், “பயப்படக் கூடாது தைரியமா இருக்கணும்” என்று சொல்ல
“அது எனக்கு சொல்றீங்களா இல்லை உங்களுக்கு சொல்லிக்கறீங்களா” என்றாள் சோபையுடன். பக்கம் நின்றிருந்த சிஸ்டர் சிரித்து விட்டார்.
பின் “சர் நகை கழட்டிக்கங்க” என, அவளின் வளையல், மோதிரம், தோடு என்று அவனே கழட்டினான், தாலி சரடு மட்டுமே இருந்தது.
“இதுவும் கூட சிலர் கழட்டிக்குவாங்க” என்று சிஸ்டர் சொல்ல, “இல்லை இருக்கட்டும்” என்று விட்டான்.
அதற்குள் வலி வர, டாக்டரும் வந்து விட, பின் இவன் வெளியே வந்த பத்து நிமிடத்தில் “குழந்தை பிறந்துடுச்சுங்க, டைம் நோட் பண்ணிக்கங்க” என்று சிஸ்டர் சொல்லி செல்ல,
“சிஸ்டர் என் வைஃப் எப்படி இருக்காங்க? என்ன குழந்தை?” என்று கேட்கவும் தான்,
“சாரி, டைம் சொல்ற அவசரத்துல மறந்துட்டேன், பெண் குழந்தை, அம்மாவும் பொண்ணும் நல்லா இருக்காங்க” என்று சொல்ல…
அதன் பிறகே ஊருக்கு வாசனுக்கு அழைத்தவன் தகவல் சொல்லி வீட்டினரிடம் சொல்லச் சொல்லியவன், பின் “அம்மா, பக்கத்துல இருக்காங்களா?” என, உறங்கும் சீதாவை எழுப்பி கையில் கொடுக்க, அவருக்கு யார் என்ன என்றே தெரியவில்லை, வாங்கி காதில் வைக்கவும், “மா, உங்களுக்கு பேத்தி பிறந்திருக்கா?” என்று சொல்லி வைத்து விட்டான்.       
பின் இங்கே கேசவனுக்கு அழைத்து சொல்லிவிட்டு, பின் கௌசிக்கு அழைத்து சொன்னான்.
மனம் முழுவதும் ஒரு நிறைவு!
“இன்னும் லேடீஸ் யாரும் வரலையா?” என்று மீண்டும் சிஸ்டர் வந்து கேட்க,
“எதுக்குங்க?” என்றான் பொறுமையாகவே.
“குழந்தையை கொடுக்கணும், டாக்டர் மேம் இப்போ எடுத்துட்டு வருவாங்க?” என்றார்.
என் குழந்தைங்க, நான் வாங்கிக்குவேன்” என்றான்.
மூன்று தங்கைகளுக்கும் குழந்தைகள் இருந்த போதும் கை குழந்தையை எல்லாம் தூக்கியதில்லை. ஆறு மாதத்திற்கு மேலான பிறகு தான் குழந்தைகளை தூக்கி இருக்கிறான். தாய் மாமன் என்று எல்லா சீரும் செய்திருந்தாலும் மடியில் அமர்த்தி மொட்டை அடித்திருந்தாலும் அப்படி ஒன்றும் குழந்தைகளுடன் ஒட்டுதல் இல்லை. குழந்தைகளாய் அருகில் வந்தால் பெயரை சொல்லி இரண்டு வார்த்தை பேசுவான். அவனை விட்டு ஷர்மியிடம் கூட அதிக ஒட்டுதலோடு தான் இருந்தன குழந்தைகள்.
இப்படி அவனின் வரலாறு இருக்க, குழந்தையை தூக்கி வந்த மருத்துவர்,  “பிடிச்சிக்குவீங்களா?” என்று சந்தேகமாய் கேட்க, “சொல்லிக் குடுங்க பிடிச்சிக்குவேன்” என்று அவர் எப்படி பிடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்க அப்படியே வாகாய் பிடித்தான்.
அப்படி ஒரு பரவசம், “தேங்க்ஸ் டாக்டர்” என்றான்.
“ரூம் அலாட் பண்ணிடுவாங்க கொஞ்சம் நேரத்துல, நீங்க அங்க போய் இருங்க. உங்க வைஃப்பையும் அங்கே ஷிஃப்ட் பண்ணிடுவோம், அப்புறம் நான் வர்றேன். இப்போ ஒரு குழந்தைங்க டாக்டர் வருவாங்க, குழந்தையை ஒரு தடவை செக் பண்ணிடட்டும்” என்றார்.
மனது முழுவதும் பரவசத்தோடு குழந்தையை கையில் வைத்து அமர்ந்து கொண்டான்.       
ரூம் அலாட் செய்த பிறகும் குழந்தை உறக்கத்தில் இருக்க, ஷர்மியை இன்னும் வெளியே கொண்டு வராமல் இருக்க, அங்கேயே அமர்ந்திருந்தான். குழந்தையும் சமர்த்தாய் அப்பாவின் கையில் அழாமல் இருந்தாள்.
குழந்தையின் முகத்தில் இருந்து பார்வையை விலக்காமல் அமர்ந்திருந்தான். அந்த ரோஸ் நிற குட்டி முகம் அப்படியே நெஞ்சோடு அணைக்கும் உந்துதலை கொடுக்க, சிறிதும் அசைவு கொடுக்காமல் அமர்ந்திருந்தான்.
இப்படி அவன் குழந்தையை பார்த்து அமர்ந்திருக்க, “பாப்புக் குட்டி, அத்தையும் மாமாவும் வந்துட்டோம்” என்று வேகமாய் கௌசி வந்தாள். சந்தோஷ் உடன் வந்தவன் தூரமாய் நின்று முறைத்து நின்றான்.
“அண்ணா குடு” என்று கை நீட்டினாள் கௌசி, பார்த்தாலே தெரிந்தது குளித்து வந்திருந்தாள் என்று.
“எதுக்கு இந்த டைம் குளிச்ச?” என்றான்.
“குட்டியை நான் தானே பார்த்துக்கணும். அதுதான் குளிச்சிட்டு வந்தேன். அழுக்கா யாரும் பாப்புவை தூக்கக் கூடாதாம் என் வீட்டுக்காரர் ஆர்டர்” என்று கை நீட்ட, மனமேயில்லாமல் கொடுத்தான்.
கை மாறியதும் குழந்தை சிணுங்க, “ஹே பாரு அழறா, என்கிட்டே குடு” என்று சொல்ல,
“போ, அண்ணா நீ” என்று அவள் தட்டி கொடுக்க, குழந்தை சிணுங்களை நிறுத்தினாள்.
சந்தோஷ் அப்போதும் முறைத்து தூரமாய் தான் நின்றிருந்தான்.
“ஏன் உன் வீட்டுக்காரன் என்னை முறைச்சிட்டு நிக்கறான்?”
“அவருக்கு கோபம் நீங்க ஏன் ஹாஸ்பிடல் வரும் போதே சொல்லலைன்னு?”
“அப்போ தோணலை, அவளுக்கு வலிக்குது அப்போ சொல்லிட்டு இருப்பேனா? முதல்ல வந்து குழந்தையை பாரு சந்தோஷ்!” என்றான்.
“ம்ம், எனக்கு இருமல் இருக்கு. உங்க பேபியை அப்படியே காமிங்க, என் பேபி எப்படி இருக்கா?” என்று பேசிக் கொண்டே குழந்தையை பார்த்தான்.  

Advertisement