Advertisement

மருது, கமலன் தன் காலில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பதறி அவனை மிரட்டியது அப்படி ஒரு சிரிப்பை கொடுத்தது..

அண்ணன் பிழைப்பானா என்ற பயம், அண்ணன் கேசில் மாட்டிக் கொள்வானா என்ற பயம், கமலன் படிப்பு கெட்டு விடுமோ என்ற பயம், எல்லாம் ஜெயந்தியின் மனதிற்கு அப்படி அழுத்தம் கொடுத்து இருந்தது.  

எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விட்டான் மருது..

அது மனதிற்கு ஒரு தெம்பை கொடுத்திருக்க, இந்த சிரிப்பு தானாக வந்தது.. 

அங்கிருந்த வேலை செய்பவர்கள், விஷால் கமலன் எல்லோரும் இவளையே பார்க்க, அவளிடம் பார்வையை திருப்பிய எல்லோரும் பார்ப்பதால் அவளின் சிரிப்பை கூட ரசிக்க முடியாமல்,   

மருது “என்ன சிரிப்பு?” என்று கேட்டே விட்டான்.   

“சிரிப்பு வந்தது, சிரிச்சேன், என்ன இப்போ?” என்று உரிமையாக தோளை குலுக்கி அவள் கேட்ட விதத்தில்,

“என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுது மருது அண்ணன் கிட்ட” என்று எல்லோரும் வாயை பிளந்து தான் பார்த்தனர்.   

“நான் இவளை பார்த்தா கதை கட்டி விட்டுடுவாங்கன்னு கவனமா இருந்தா, இவ ஏன்டா இப்படி பேசி வைக்கிறா?” என்று நினைத்தவன், அவளை பார்த்து விட்டு அவனின் கேபின் சென்று விட்டான்.

விஷாலிற்கு தான் தெரியுமே ஜெயந்தியை மருது எதுவும் சொல்ல மாட்டான் என்று…                    

“அக்கா என்ன பண்ற?” என்று கமலன் அதட்ட,

“என்ன பண்றேன்? சிரிப்பு வந்தது சிரிச்சேன். வா, ஒரு தேங்க்ஸ் சொல்லிடு” என்று அவனை அழைத்துக் கொண்டு அவனின் கேபின் சென்றாள்.

கமலன் “தேங்க்ஸ் தேங்க்ஸ் சர்” என்று பல முறை சொல்ல,

“அட விடுடா” என்று மருதுவிற்கே சலிப்பு வரும் வரை சொன்னான்.

ஜெயந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைதியாய் அவர்களை பார்த்திருந்தாள்.  

பின்பு அவர்கள் கிளம்ப.. கதவு வரை வந்தவர்கள்.. கமலனை “நீ போ, நான் வர்றேன்” என்று அனுப்பிவிட்டு மருதுவின் முன் வந்து அமர்ந்தாள்..

மருது யோசனையாய் பார்த்தான். கண்டிப்பாய் உன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொல்வாள் என்று அவனே எதிர்பார்க்கவில்லை.. அவனின் உள் மனது சொன்னது இந்த திருமணம் நடப்பது அவ்வளவு எளிதல்ல என்று.

ஆனாலும் நடத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது.

மருது அவள் பேசட்டும் என்று அமைதியாய் பார்த்திருந்தான்.

“தேங்க்ஸ்” என்றாள் உள்ளார்ந்து, அதை சொல்லும் போது என்ன முயன்றும் கண்களில் நீர் கோர்த்து விட்டது.

மருது அசையாது அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான், பார்த்துக் கொண்டிருந்தான் என்பதை விட பருகிக் கொண்டிருந்தான்.

“இப்போது தானே அப்படி சிரித்தாள், அதற்குள் எப்படி இப்படி கண்களில் நீர் வரும்” என்று பார்த்திருந்தான்.

கண்களில் நீர் இருந்த போதும் புன்னகை முகத்தோடே பேசினாள்.. “நிச்சயமா நீங்க இல்லைன்னா இந்த நேரம் நிறைய நிறைய சிக்கல்ல மாட்டியிருப்போம்”

“தேங்க்ஸ்ன்றது ஒரு சாதாரண வார்த்தை, ஆனா எனக்கு அதை தவிர வேற வார்த்தை தெரியலை.. நான் உயிரோட இருக்குற வரை உங்களை மறக்க மாட்டேன்” என்று உணர்ச்சி பெருக்கோடு பேச,

அது எதுவுமே மருதாச்சலமூர்த்தியை அசைக்கவில்லை.

அவனுக்கு வேண்டியது இந்த வார்த்தைகள் இல்லையே அமைதியாய் தான் பார்த்திருந்தான்..

அவளும் அவன் முகத்தை பார்த்து பேச அவனும் அவளின் முகத்தினையே பார்த்திருந்தான்.. கண்கள் மட்டும் “உன்னோட தேங்க்ஸ் எனக்கு தேவையில்லை” என்ற பாவனையை காட்டியது.

பின்பு மெதுவாய் “நான் கல்யாணத்தை பத்தியெல்லாம் யோசிச்சது இல்லை” என்றாள்.

அமைதியாய் தான் இருந்தான், மேலே சொல் என்பது போல ஒரு பார்வை பார்த்து.

“எனக்கு படிப்பை முடிக்கணும், பெரிய வேலைக்கு போகணும், நிறைய சம்பாரிக்கணும், இப்படி நிறைய கனவு இருக்கு.. இதுல கல்யாணத்தை பத்தி நான் யோசிக்கலை…”

“எப்படியும் ஆறு வருஷமாவது ஆகும்.. இப்போ தான் எனக்கு இருபது வயசு. அப்பா அம்மா சொன்னாலும் எப்படியும் இருபத்தி ஆறுல தான் பண்ணிக்கணும் நினைச்சு இருக்கேன், அப்போ தான் யோசிப்பேன்..”

“அதுக்குள்ளே உங்களுக்கு வயசாகிடும், நீங்க ஃலைப்ல செட்டில் ஆகணும் இல்லையா வேற யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க”

உங்களுக்கு வயசாகிடும் என்ற வார்த்தை எங்கோ அவனை காயப் படுத்தியது, என்னை என்ன வயதானவன் என்று நினைத்து இருக்கிறாளா என்றும் தோன்றியது. ஆனாலும் அமைதியை கைவிடவில்லை.   

“என்னடா இந்த பொண்ணு திமிரா பேசுதுன்னு நினைக்க வேண்டாம். எனக்கு தோணினதை சொல்லிட்டேன்” என்று பேசிக் கொண்டு இருக்கும் போது எந்த நொடியில் அவன் பொறுமை பறந்தது என்று தெரியவில்லை,   

இவன் பேசினான் … “உனக்கு பண்ண முடியாதுன்னா பண்ண முடியாது சொல்லு, நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லாதே” என்றான் கடுமையான குரலில்.

அந்த குரல் நிச்சயம் அவளை பாதித்தது. இந்த குரலில் மறுத்து அவளிடம் பேசியது இல்லை.. ஆனால் பாதி நேரம் அவனின் இயல்பான குரலே அதுதான்.    

“இருங்க, நான் இன்னும் பேசி முடிக்கலை” என்று ஆரம்பித்த போது அவளின் குரல் அதுவரை இருந்தது போல இல்லை, சுருதி குறைந்து இருந்தது.

பேசும் ஒரு ஒரு வார்த்தையும் யோசித்து பேச வேண்டும் என்று தெரிந்தவள் தான், அவனின் குரலின் கடுமை பாதித்ததோ? என்ன பேசுகிறோம் என்று உணர்ந்தும், அது அவனை காயப்படுத்துகிறது என்று தெரியாமல் பேசினாள்.    

“பெக்கர்ஸ் ஆர் நாட் சூசர்ஸ் ன்னு ஒரு பழமொழி இருக்கு, நீங்க எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க, இந்த நிமிஷம் வரை நான் இதை பேசணும்னு யோசிக்கலை, இப்போ தோணுது பேசணும்னு” என்று இடைவெளி விட..  

என்ன ஆங்கில வார்த்தைகள் அது என்ற யோசனையில் இருந்தான்.

“உங்களுக்கு கண்டிப்பா என்னை கல்யாணம் செஞ்சிக்கணும்னா செஞ்சிக்கங்க, நீங்க செஞ்ச உதவிக்கு இதை மறுக்குற நிலைமைல நாங்க இல்லை” என்றாள்.

அவள் பேசப் பேச கோபம் வர ஆரம்பித்தது.. “உதவி செஞ்சதுக்கு மறுக்குற நிலைமைல இல்லையாமா?” கோபத்தோடு, ஒரு விரக்தி சிரிப்பும் ஒட்டிக் கொண்டது.

“என்னவோ இங்கிலீஷ்ல சொன்னியே, என்ன அது?” என்றான் கோபமான குரலிலேயே,

“அது..” என்று அவள் தயங்கி, அவனின் கோபத்தை பார்த்து பயந்து,  “ஒன்னும் இல்லை” என்று சொல்லி, பேச்சு முடிந்தது என்று அவள் எழ,

“உட்காரு … உட்காரு” என்று அவன் போட்ட அதட்டலில் டக்கென்று அமர்ந்தாள்..

“உனக்காக தான் உதவி செஞ்சேன், அதை கண்டிப்பா நான் மறுக்கலை. அதுக்காக நீ என்னை கல்யாணம் செஞ்சா … ப்ச் … இத்தனை வருஷம் ஒருத்தனா நின்னு நிறைய வாழ்க்கையில போராடியிருக்கிறேன்.. சம்பாரிச்சிருக்கேன். என்னை சுத்தி நிறைய பேர், ஆனாலும் நான் தனியன் தான்.. ஓரளவுக்கு மேல யாரையும் நெருங்க விட மாட்டேன்.. என்னவோ என் மனசு உன்னை நெருக்கமா நினைச்சது”

பேச பேச அவன் கோபத்தை கட்டுப் படுத்த முயல்வது தெரிந்தது. அதீத கோபக்காரன்..  

“ஏன்னு இப்போ வரைக்கும் எனக்கு தெரியலை, பிடிச்சதை தான் உன் கிட்ட சொல்லிட்டேன்”

“பிடிக்லைன்னா பிடிக்கலை சொல்லு, நான் உன்கிட்ட கேட்டனா நான் உதவி செய்யறேன், அதுக்காக என்னை நீ கல்யாணம் பண்ணனும்னு”

அதை சொல்லும் போது அவனின் கோபம் கட்டுப்படுத்த முடியாமல் பொங்க,

“ஆனாலும் உனக்கு திமிர் தான், என்னவோ இங்கிலீஷ்ல சொன்னியே அதை சொல்லாம இந்த இடத்தை விட்டு அசைய முடியாது, சொல்லு!” என்று அடிக்குரலில் சீறினான்.

“அது பிச்சை காரங்களுக்கு தேர்ந்தெடுக்கற உரிமை கிடையாதுன்னு சொன்னேன்” என்று கம்மிய குரலில் சொல்ல,

அவனின் ஆத்திரம் எல்லை மீறியது..

“ஓஹ், அதுதான் நீ எனக்கு வாழ்க்கை பிச்சை போடறியா. உனக்கு தெரியுமா, எங்க பாட்டி மட்டும் தான் எனக்கு.. பத்து வயசு இருக்கும் போது இறந்துட்டாங்க. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு எனக்கு வழி கிடையாது. ஆனா அப்போ கூட நான் பிச்சை எடுக்கலை, ஏன் உதவின்னு கூட யார் கிட்டயும் நிக்கலை”  

“பாட்டியோட பசங்களும் பொண்ணுங்களும் வந்து காரியம் பண்ணிட்டு போய்ட்டாங்க, நான் அன்னைக்கு நாள் முழுசும் சாப்பிடக் கூட இல்லை, என் பாட்டி என் வயிறு வாட விட்டதேயில்லை. பசின்னா பசி அப்படி ஒரு பசி”    

“பக்கத்துல இருந்த டீக்கடைக்கு போய் அண்ணா ஏதாவது வேலை குடுங்கன்னான்னு தான் கேட்டேன்” என்று அவன் சொல்ல சொல்ல, இவளின் கண்களில் நீர் நிறைந்தது. ஆனால் அதெல்லாம் உணரும் நிலையில் அவன் இல்லை,    

“ஆனா நீ இப்போ எனக்கு பிச்சை போடற, சாப்பாடுக்கு கூட பிச்சை எடுக்காதவனுக்கு வாழ்க்கை பிச்சை போடற, அப்படி தான். இந்தா நீ செஞ்ச உதவிக்கு என்னை எடுத்துக்கோன்ற மாதிரி” என்று ஆத்திரமாய் கத்தினான்.

“அச்சோ இல்லை, இல்லை” என்று கண்களில் நீரோடு பதறினாள்.

“நீ சொல்றது எனக்கு அப்படி தான் தோணுது, நீ முதல்ல கிளம்பு” என்றான்.

“இல்லை அது” என்று ஜெயந்தி மீண்டும் பேச,

“வெளில போன்னு சொன்னேன்!” என்று கர்ஜித்தான். பயத்தில் எழுந்து விட்டாள்.

இயல்பிலேயே மிகவும் கோபக்காரன்.. எப்போது கோபம் வரும் என்று அவனுக்கே தெரியாது.

ஏனோ அவள் பேசுவதை சாதரணமாய் அவனால் எடுக்க முடியவில்லை.. “நீ உதவி செஞ்சிட்ட, என்னால மறுக்க முடியாது, கல்யாணம் பண்ணிக்கவான்னு என்னை பார்த்து பேசறா” நினைக்க நினைக்க ஆத்திரம் பெருகியது..

அவள் நின்று கொண்டேயிருக்க “போ” என்பது போல கை காண்பித்தான்.   

“சாரி” என்று ஒற்றை வார்த்தை சொன்னவள், முகத்தை துடைத்துக் கொண்டு வெளியேற..

அவள் சற்று தூரம் செல்லும் வரை பொறுத்தவன், ஆத்திரம் அடங்காது.. அவன் டேபிளில் இருந்த டேபிள் வெயிட் எடுத்து வீச அந்த கண்ணாடி கதவு சில்லு சில்லாய் சிதறியது..

எல்லோரும் என்னவோ ஏதோவென்று உள்ளே போக..

அழுகை பொங்க ஜெயந்தி வெளியே வேகமாய் நடந்து விட்டாள்.

 

Advertisement