Advertisement

அத்தியாயம் ஏழு :

அவளிடம் மனதை சொல்லிவிட்டவனுக்கு இந்த சூழ்நிலையில் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றிய போதும் அவளின் “அண்ணா” என்ற அழைப்பு தானே சொல்ல வைத்தது.

அவள் என்னை அண்ணனாய் மனதில் வரித்து விட்டால் திருமணம் நடக்கிறதோ இல்லையோ இதை தன்னால் தாள முடியாது என்று புரிந்தது..

ஜெயந்திக்கோ “ஐயோ” என்று இருந்தது இதை கேட்டதும்… இப்போது இதை எல்லாம் நினைக்காதே முதலில் அண்ணா பிழைத்து எழட்டும்.. பின் அவனிடம் இருந்து தள்ளி இருந்து கொள்ளலாம்… நிச்சயமாக அவன் செய்த உதவிக்கு கை மாறு கிடையாது தான், ஆனால் அதற்காய் திருமணம் எல்லாம் அவளால் யோசிக்க முடியவில்லை.

இங்கு திருமணம் என்ற வார்த்தை வந்து விட்ட படியால் காதல் என்ற வார்த்தை எல்லாம் வரவேயில்லை..

அவன் ஏதோ உளறுகிறான் என்றும் நினைக்க முடியவில்லை. அவன் உளறுகிற ஆள் போல தெரியவில்லை… இதில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியவில்லை…

திருமணம் செய்தாக வேண்டும் என்று தொல்லை கொடுப்பானோ? பெரிய தாதா வேறு… கட்டாய தாலி கட்டுவானோ? இல்லை என்னை தூக்கி சென்று அடைத்து வைப்பானோ? நான் வேண்டாம் என்று சொன்னால் என் மீது ஆசிட் அடிப்பானோ? இல்லை என்னை கொன்று விடுவானோ? இல்லை என்னை அசிங்கப் படுதுவானோ?

கற்பனை குதிரை தறி கெட்டு ஓடியது…

மருதுவை பற்றி ஒன்றுமே தெரியாது “தாதா” என்ற ஒரு அடையாளம் மட்டுமே தெரியும், அவனை அறிந்தவள் இல்லை. ஆதலால் என்னென்னவோ எண்ணங்கள்.. அப்படி ஒன்றும் அவன் அவளை கவரவும் இல்லை.. அவனை கவனித்து கூட இன்னும் பார்த்ததில்லை.. அவனின் உருவம் கூட மனதில் பதியவில்லை.. 

“சே, சே, அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க. தேடி வந்து உதவி செய்யற ஒரு ஆளை நீ நல்ல விதமா நினைக்கலைன்னாலும் கெட்ட மாதிரி நினைக்காதே” என்று மனசாட்சி அதட்ட..         

விமலனின் பாரத்தோடு இதுவும் ஒரு பாரம் சேர்ந்துகொண்டது…

சோர்வாக வந்து அமர்ந்து கொண்டாள்..

இது அவளிற்கு பெரிய தாக்குதல்… வேறு சூழல் என்றால் அவள் இதனை கையாண்டு இருக்கும் விதமே வேறு.

ஆனால் இனி சூழல் சரியானாலும் மறுப்பை.. அவன் மனம் நோகாதவாறு சொல்ல வேண்டுமே!

அவன் மட்டும் இல்லை என்றால் அண்ணனை உடனே பார்த்திருப்பார்களா? அவன் அத்தனை பேரிடம் சொல்லி வைத்திருந்ததால் தான் உடனே பார்க்க முடிந்தது. அவர்களாய் தெரிந்து சென்று பார்த்திருக்கும் நேரம் அவன் உயிர் கூட பிரிந்திருக்கலாம்.

அப்படியில்லாமல் இருந்தாலும் இப்படி ஒரு ராஜ வைத்தியம் நடந்திருக்குமா? முடிந்திருக்காது…

நன்றி வண்டி வண்டியாய் இருக்கிறது. அதற்காக திருமணமா? .. திருமணம் பற்றி கூட யோசித்ததிதைல்லையே. ரௌடி என்று வேறு சொல்கிறார்கள். ஜெயில் எல்லாம் போய் வந்திருப்பானோ. நம்மை ஏன் இவனுக்கு பிடித்து தொலைத்து? நொந்து போனாள்.

இவனோடு என் வாழ்க்கையா? கற்பனையில் கூட நினைக்க முடியவில்லை. 

“கடவுளே என்னை இவனிடம் இருந்து காப்பாற்றி விடு” என்று அவசரமாய் கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.

ஆனால் மேலே இந்த விஷயத்தை பற்றி சிந்திக்க விடாதபடி எல்லாம் நடந்தது..

விமலனின் உடல் நிலை குறித்த திக் திக் நிமிடங்கள்.. அவன் உடல் நிலை சீராகவே இரண்டு நாட்கள்.. பின் அவனுக்கு விழிப்பு வர இன்னும் ஒரு நாள்.. அதன் பிறகு போலிஸ் படையெடுப்பு, காணாமல் போன பணத்தை கேட்டு…

நிஜமாய் மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் இல்லாவிட்டால் சிக்கி சின்னபின்னமாயிருப்பர்! விமலன் பிழைத்திருப்பானா என்றும் தெரியாது!

அவன் எவ்வளவு பணம் கட்டுகிறான் என்று கூட இவர்களுக்கு தெரியவில்லை.

எல்லாம் சமாளித்தான்… கலைச்செல்வி அவனை பயபக்தியாய் பார்த்தார்..

அவருடன் தான் அவனுக்கு இப்போது பேச்சுக்கள்.. கோபாலனுடன் பேச அவனுக்கு பிரியமில்லை.. கமலனுக்கு இன்னும் பக்குவம் வரவேண்டும்..

அவன் திருமண விஷயம் சொன்னதில் இருந்து ஜெயந்திக்கு ஒரு தயக்கம் ஒட்டிக் கொள்ள.. அவனுமே அவளிடம் எதுவும் பேசவில்லை…

பார்ப்பதோடு சரி.. அந்த பார்வையிலும் அக்கறை மட்டுமே தெரியும் வேறு தெரியாது..

பணத்தை அவனிடம் இருந்து பிடுங்கி, அவனை அடைத்து வைத்து அவன் உடனே வெளியே வராதபடி பட்டினி போட்டு.. மூச்சு பேச்சின்றி ஆகவும் சில மணி நேரங்களில் செத்து விடுவான் என்று கணித்து அவனின் ஏரியா ரயில் நிலையத்தில் விட்டெறிந்து செல்ல..

மருது எல்லோரிடமும் புகைப்படம் கொடுத்து இருந்ததால் உடனே கண்டுபிடித்து மின்னல் வேகத்தில் மருத்துவமனையில் சேர்க்க பிழைத்து கொண்டான்.

இதை செய்தது அவனை அனுப்பிய சேனலின் கார் டிரைவரும் அவனுடைய கூட்டாளிகளும் என்று அவன் கண்விழித்து நடந்ததை சொன்ன பிறகு தான் தெரியும்..

காலில் எழும்பு முறிவு வேறு இருக்க..

இப்படியாக அவன் பிழைத்து விட்டான் என்பதே அதிசயமாய் இருந்தது. இதில் அவனை எங்கே அரசு மருத்துவமைனைக்கு மாற்றுவது ராஜா வைத்தியம் தான்!

கோபாலன் கைகளில் எதுவுமில்லை, என்ன வரப் போகிறதோ என்று பயந்து இருக்க.. மருதுவின் கண்ணியமான பேச்சு நடவடிக்கை இது மட்டுமே வந்தது.

அவர் நினைத்தார் ஆர்வமாய் தன பெண்ணை பார்க்கிறானோ என்று இப்போது அப்படி எதுவும் இருக்கின்ற மாதிரி அவருக்கே தெரியவில்லை.

பத்து நாட்கள் ஆகிவிட்டது… இன்னும் மூன்று நான்கு நாட்களில் வீடு செல்லலாம்.. ஆனால் காலில் எலும்பு முறிவிற்கு அறுவை சிகிச்சை செய்திருக்க.. அந்த காலில் நடக்க வைக்க இன்னும் இரண்டு மாதம் ஆகும் என்று விட்டனர்.   

இரண்டு நாட்களாக ஜெயந்தி கூட கல்லூரி செல்ல ஆரம்பித்து இருந்தாள். அவள் போட்டிருந்த ஒற்றை பவுன் சங்கிலி தான் பணமாய் மாறி கோபாலனும் வேலைக்கு இன்னும் செல்லாததால் அன்றாட ஜீவனத்திற்கு உதவிக் கொண்டிருந்தது.

அன்று கமலனுக்கு கவுன்சிலிங்.. எங்கே போவர் பணத்திற்கு.. அதனால் போகாமல் அங்கேயே மருத்துவமனையில் இருந்தான்.. அன்று ஜெயந்தியுமே கல்லூரி செல்லவில்லை..

அன்று அவனிற்கு கவுன்சிலிங் என்று விஷாலிற்கு தெரியும்.. எப்போதும் கடைக்கு போகும் முன் காலையில் மருத்தவமனை வந்து விமலனை பார்த்து போவான்.. அவர்கள் குடும்பத்தில் எல்லோரிடமும் நன்றாக பழகியிருந்தான்.

இவனை பார்த்ததும் “என்னடா கவுன்சிலிங் போகலை?” என,

“இல்லைண்ணா” என்றான் சோர்வாக அவன்.

“போகலாம், சேர்றது சேராதது அப்புறம்னு சொன்னா வரமாடேங்கறான்” என்று ஜெயந்தியும் சொல்ல,

கமலனோ அம்மாவின் முகத்தை பார்த்தான்.

அவர் தான் என்ஜினீயரிங் எல்லாம் முடியாது… ஏதாவது டிகிரி மட்டும் படித்துக் கொள், அதுவும் கவர்மென்ட் கல்லூரியில் தான் சேர வேண்டும் என்று சொல்லி விட்டார்.

விஷால் கேட்கவும்.. “இல்லை விஷால் வேண்டாம்” என்று விட்டார்.

உடனே அவன் மருதுவிற்கு அழைத்து “அண்ணா, கமலன் அம்மா அவனை கவுன்சிலிங் போக விட மாட்டேங்கறாங்க. இப்போவே நேரம் ஆகிடுச்சு, அவன் போகணும்!” என்று போட்டு கொடுக்க,

அவன் அங்கே பத்து நிமிடத்தில் ஆஜர்..

“ஏன் வேண்டாம் சொல்றீங்க?” என்று.

“இல்லை தம்பி, இனி விமலன் வேலைக்கு போக நாள் ஆகும்.. அங்கே போகலை சொல்லிட்டான். அவங்களும் சேர்த்துக்குவாங்களா தெரியாது”

“அவன் உடம்பு தேறி வர நாளாகும், புதுசா வேலை தேடணும்… இதுல எங்க ஜீவனமே கஷ்டம்.. இவனை காலேஜ் படிக்க வைக்கறதே பெரிய விஷயம், இதுல எஞ்சினியரிங் எல்லாம் ஆகாதுங்க” என்றார் தெளிவாக.

“அது லோன் போட்டுக்கலாம்” என்று எடுத்துக் கொடுத்தான் விஷால்.

“அதெல்லாம் கொடுக்க மாட்டாங்க”

“அதெல்லாம் கொடுப்பாங்க” என்று விஷால் சொல்ல, இப்படி அவர்கள் தான் பேசினர்.

மருது ஒரு பார்வை பார்த்தவன்..

“கூட்டிட்டு கிளம்பு, நான் அக்கா கிட்ட பேசிக்கறேன்” என்றான்.

ஆம்! கலைசெல்வியை “அக்கா” என்று தான் அழைத்தான் அவர் தம்பி என்பதால்,

“அது தம்பி” என்று அவர் தயங்க..

“நான் பார்த்துக்கறேன்.. பணம் எப்பவும் நான் வேண்டாம் சொல்ல மாட்டேன், உங்களுக்கு எப்ப முடியுமோ திருப்பிக் கொடுத்துக்கலாம்” என்றான் அவர் குற்ற உணர்ச்சி போக்குவதற்காக.

“இவன் என்னடா சம்பாதிக்கறதே, எங்களுக்கு செலவு செய்ய தான்ற மாதிரி செஞ்சிட்டு இருக்கான்” என்ற எண்ணம் தான் ஜெயந்திக்கு.

அதையும் விட இவனா திருமணதிற்கு பேசினான் என்ற எண்ணம் கூட.

“ஒருவேளை அது என் கற்பனையோ” என்ற சிந்தனை கூட ஓடியது. பின்னே அதன் பிறகு அதனை பற்றி பேசவில்லை, அட அவளின் புறம் பார்வையை கூட திருப்பவில்லை. அப்படியே திருப்பினாலும் அதில் அவளிடம் இந்த மாதிரி ஒரு விஷயத்தை பேசியிருக்கிறான் என்ற பாவனை கூட இருக்காது..

என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ஒரு ஆர்வப் பார்வையோ ஒரு ரசனையான பார்வையோ எதுவும் இருக்காது.

“நீங்களா கேட்டீங்க?” என்று அவனிடமே கேட்க மனது சில சமயம் நினைக்கும்.

“அடியேய், அவனே பேசாம இருக்கான் உனக்கென்ன” என்று அடக்கி விடுவாள்..

அவன் எப்போதும் போல காலையில் டீக்கடையில் அமர்ந்து பார்த்துக் கொண்டு தான் இருப்பான்.. இரண்டு நாட்களாக தானே கல்லூரி செல்கிறாள்.

அங்கே “பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க, காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க” என்று பார்த்து இருப்பது அவனுக்கு தானே தெரியும்.

வேறு யார் முன்னிலையிலும் ஏன் அவளின் முன்னிலையிலுமே பார்வை வித்தியாசம் வராது.. அவள் அவனின் நனவு கனாக் காலம்!    

இப்படியாக கமலன் விஷாலுடனும் ஜெயந்தியுடனும் கவுன்சிலிங் சென்று கணினி பொறியியல் தேர்ந்தெடுத்து, அதனை சொல்ல நேரே கடைக்கு வந்தான்.

சென்னையிலே ஒரு கல்லூரி! ஆனால் ஜெயந்தியினது போல பக்கம் இல்லை, ஒரு மணிநேரப் பயணம் இருந்தது..

அவனை பார்த்ததும் சார் என்று காலில் விழப் போக..

அதனை உணர்ந்த மருது “டேய் பக்கத்துல வந்த பிச்சிடுவேன், அங்கயே நில்லு!” என்று அதட்டினான்.

பார்த்திருந்த ஜெயந்திக்கு சிரிப்பு வந்துவிட.. சத்தமாய் சிரித்து விட்டாள்.. அதுவும் பொங்கி பொங்கி சிரிப்பு..

Advertisement