Advertisement

அத்தியாயம் ஆறு :

வலது கால் வைக்க வில்லை! இடது கால் தான் வைத்தாள்!

எந்த கால் வைத்தால் என்ன? எல்லாம் அவள் கால் தானே! வீடு வந்தால் போதும் என்று தோன்றியது..

“நீ எதுக்கு வந்த?” என்று மகளின் அருகில் சென்றதும் கோபாலன் கடிந்து கொள்ள…

“அப்பா, உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி டென்ஷன் படுறீங்க எங்களையும் படுத்தறீங்க” என்று ஜெயந்தி பதிலுக்கு கடிய..  

அவளை முறைத்தபடி அவர் நிற்க.. பின் மனைவியின் முறைப்பில்,  மூவரும் சென்றனர்.

“பையனை கண்டு பிடிக்க முடியுமா தம்பி?” என்றார் எடுத்தவுடனே அவர் மருதுவை பார்த்து.

“கேட்கறேன்னு தப்பா எடுக்காதீங்க, அவர் ஏதாவது பணத்தோட போயிருக்க வாய்பிருக்கா?” என்று கேட்க..

அவ்வளவு தான் எல்லோருக்கும் முன் ஜெயந்தி “அண்ணா அப்படி எல்லாம் பண்ண மாட்டான்.. அவன் ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்ட்.. செத்தாலும் திருட்டுன்ற ஒரு விஷயத்தை பண்ண மாட்டான்” என்றாள் தீர்மானமாக.

சிறிது தயங்கிய மருது “அப்போ பணத்துக்காக உங்கண்ணனை ஏதாவது செஞ்சிருக்க வாய்பிருக்கு” என்றான் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை அறிந்தவனாக.  

அவ்வளவு தான் ஏற்கனவே மனதில் அந்த பயம் கலைச்செல்விக்கு ஓடிக் கொண்டிருக்க,

அதனை கேட்டதும் மயங்கி விட்டார்…    

சட்டென்று கோபாலனும் ஜெயந்தியும் பிடித்து விட்டனர்..

ஜீவா தண்ணீர் எடுக்க வீட்டின் கதவை வேகமாய் திறக்க, ஜானி குதித்துக் கொண்டு வெளியில் வர…… அதனை பார்த்து ஜெயந்தி கத்திய கத்தல் ஷப்பா…..

அவளுக்கு நாய் என்றால் அவ்வளவு பயம்…

அவள் கத்திய கத்தலுக்கு குதித்து வந்த ஜானியே ஒரு நொடி நின்று விட..

அதற்குள் மருது அதனை பிடித்துக் கொண்டான். அப்போதும் ஜெயந்தி கத்திக் கொண்டிருக்க…..

“கத்தாத பிடிச்சிட்டேன், வாயை மூடு” என்று மருது அதட்டினான். மருதுவின் அதட்டலில் வாயை மூடிக் கொண்டாள்.

பின்னே அவள் கத்திய கத்தலுக்கு ஜானி மட்டுமா பயந்தான், அவனுமே பயந்து விட்டான்..

ஆனால் அந்த கத்து கத்தியிருகின்றாள் ஆனால் அதற்கான லஜ்ஜை கொஞ்சமும் இல்லை… ஜானியை வீட்டின் உள் இழுத்து சென்று ஒரு ரூமின் உள் பூட்ட முற்பட..

அங்கே ஜீவா வாயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டிருந்தான்..

மருதுவை பார்த்ததும் “அண்ணா, அண்ணி செமல்ல, செம சத்தம் போ. அதுவும் உன்னோட உயிர் நண்பனை பார்த்து, ஹ, ஹ” என்று ,

“டேய், தண்ணி கொண்டு போடா. இவன் வேற நேரம் காலம் தெரியாம” என்று அதட்டிய போதும் முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது..

தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப…

அவர் விழித்ததுமே “மா அண்ணனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது, பயப்படாத” என்று ஜெயந்தி தைரியம் சொல்ல,

“இவங்க வீட்லயே இவ தான் கொஞ்சம் தெளிவு போல” என்று நினைத்துக் கொண்டான்.

“போட்டோவும் மத்த விவரமும் குடுங்க விசாரிக்க சொல்லலாம்.. உங்க ஃபோன் எல்லாம் ஆன்லயே இருக்கட்டும், எப்போ வேணா உங்க பையன் கூப்பிடலாம்” என்றும் மருது சொல்ல… 

“அண்ணா, லேட் பண்ண வேண்டாம். காலையில ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவோம்” என்று ஜீவா சொல்ல,

“காலையில பத்து மணிக்கு வாங்க” என்றவன் ஜெயந்தியை பார்த்து “நீ வராத, உங்க அப்பா அம்மா வந்தா போதும்” என்று சொன்னான்.

“எதுக்கு இவனுக்கு என் பொண்ணு மேல இவ்வளவு அக்கறை” என்ற எண்ணம் மீண்டும் கோபாலன் மனதிற்குள் ஓடியது…

இப்படியாக பத்து மணிக்கு சென்று கம்ப்ளைன்ட் கொடுத்து வந்தனர்..

அவர்கள் விசாரணையும் கோபாலன் வரை மட்டுமே நின்று போனது… வேறு வீட்டினரை அழைக்கவில்லை.. மருது சர்கிள் இன்ஸ்பெக்டரை வெகு சிறப்பாக கவனித்து இருக்க.. அவர் மற்றவர்களை அழைக்க வில்லை.. என்ன சொல்லி அசிஸ்டன்ட் கமிஷனரை சமாளித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

மேலும் ஒரு நாள் ஓடிவிட.. வீட்டினர் அத்தனை பேருக்கும் பயம் பிடிக்க ஆரம்பித்தது, விமலனை பற்றிய தகவல் ஒன்றுமில்லை..

அன்று காலை ஜெயந்தியும் கமலனும் மருதுவை பார்க்க அவனின் கடைக்கு வந்தனர்… ஆனால் இவன் இல்லை..

இவர்களை பார்த்ததுமே விஷால்.. “வாங்க மேம்” என்றழைத்து மருதுவின் கேபின் சென்று அமர வைத்தான்.

“சர் இன்னும் வரலீங்களா?”  

“அவர் எப்போவேனா வருவார், எப்போ வேணா போவார், இருங்க கேட்கறேன்” என்று சொல்லி கைபேசியில் அழைத்தவன், “அண்ணா அன்னைக்கு என்னை திட்டுணீங்களே அந்த மேம் வந்திருக்காங்க”  

அந்த பக்கம் கேட்ட மருதுவிற்கு புன்னகை..

“வர்றேன் இருக்க சொல்லு!” என்றவன் பத்து நிமிடத்தில் வந்தும் விட,

அதற்குள் அவர்கள் மறுக்க மறுக்க காபி வரவழைத்து கொடுத்தான் விஷால்,

“என்னக்கா? நம்மை இப்படி கவனிக்கறாங்க” என்று கமலன் கேட்க..

“தெரியலையேடா?” என்றவளின் மனதிற்குள் சற்று சந்தேகம்…

மருது வந்தவன் “வாங்க” என்று சொல்லி “என்ன காலையில நீங்க காலேஜ் போறதில்லையா?” என்றான்.

“இல்லை, அண்ணா வராம எப்படிப் போக? அண்ணாவை பத்தி எதுவும் தெரிஞ்சதா? அப்பா நேத்து ஈவ்னிங் கூட ஸ்டேஷன் போய் கேட்டார். சரியா ஒன்னும் ரிப்ளை இல்லை” என்றாள் கலங்கிய குரலில்.

“நான் கேட்கறேன் இன்னைக்கு” என்று அவன் சொன்ன போதும்,

“இன்னும் ஏதாவது பண்ண முடியாதா? அண்ணா காணாமப் போய் மூணு நாள் ஆச்சு?” என்றாள்.

சொல்லும் போது அவளின் முகத்தினில் தெரிந்த பயம் பதட்டம் கவலை மருதுவை என்னவோ செய்ய.. “ஏதாவது செய்யேண்டா” என்று அவனுக்கு அவனே சொல்லி கொண்டான்.

“என்னன்னு பார்க்கறேன்?” என்றவன்…

“என்னோட ஃபோன் நம்பர்” என்று அவனின் நம்பரை சொல்லி, “பதிஞ்சு வெச்சிக்கோங்க, ஏதாவதுன்னா கூப்பிடுங்க, இந்த விஷால் கூப்பிட்டா பாதி நேரம் நான் ஃபோன் எடுக்க மாட்டேன். நீங்களே கூப்பிடுங்க” என்று சொன்னான்.

ஜெயந்தி அவளின் மொபைலில் பதிந்து எழுந்து கொள்ள…

“உங்க நம்பர்? நீங்க தான் கூப்பிடறீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?”  

“ம்ம், ஆமாமில்லை” என்று தலையில் தட்டி கொண்டவள் அவளின் நம்பரை சொல்ல.. அதனை எழுதி வைத்துக் கொண்டான்… பின்னே நம்பரை பதிய அவனுக்கு அத்தனை நேரம் ஆகுமே!

இப்படியாக ஒரு வழியாக அவளின் நம்பரை வாங்கி “ஜதி” என்று சேமித்து வைத்துக் கொண்டான். அவனின் கைபேசியில், உள்ளத்தில், ஜதி தான் இட்டுக் கொண்டிருந்தாள் ஜெயந்தி… “தகிட தகதிமி தகிட தகதிமி” என்று நர்த்தனம் தான் ஆடிக் கொண்டிருந்தாள்..

வெளியில் வந்து விட்ட ஜெயந்திக்கு இதுதான் யோசனை “அவன் ஏதாவது தப்பான பார்வை பார்க்கிறானா என்று” அப்படி எதுவுமே இல்லை, ஏன் ஆர்வமாய் கூட பார்வை இல்லை.. பின் எல்லோருக்கும் இப்படி தான் உதவி செய்வானாய் இருக்கும், நல்ல மனிதன் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் கமலன் வேறு சொன்னான் “அக்கா, நான் இவரை ஏரியாக்குள்ள பார்த்திருக்கேன். எல்லோரும் பேசவே பயப்படுவாங்க. உன்கிட்ட ரொம்ப நல்ல மாதிரி சாதாரணமா பேசுறார், எப்படி?” என்று.

“தெரியலைடா! வெளில கெத்து காட்டுவாரா இருக்கும். நல்லா தான் பேசறார். அன்னைக்கு அவர் வீட்ல ஒரு நாய் இருக்கு, அதை பார்த்து கத்திட்டேன், அன்னைக்கு தான் அதட்டி பேசினார்” என்று பேசிக் கொண்டே சிறிது தூரம் தான் வந்திருப்பர்..

மருதுவின் பைக் வந்து அவர்களின் அருகில் நின்றது.. திடீரென்று வந்ததால் இருவரும் பயந்து விலக… அவனின் முகத்தினில் சற்று பதட்டம்.. “நீயேறு, உனக்கு பின்னாடி உங்க அக்கா ஏறட்டும்” என்று அவசரமாய் சொல்ல..

கமலன் யோசித்த போதும் என்னவோ இருக்கிறது என்று உணர, ஜெயந்தி “ஏறுடா” அவனை ஏற்றி பின் அவளும் ஏற.. மூவருமாய் இருந்த பைக் பறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

குரோம்பேட்டை ரயில் நிலையம் செல்ல, அங்கே தண்டவாளம் அருகினில் கூட்டம். பைக்கை நிறுத்தி மருது விரைந்து செல்ல… ஜெயந்தியும் கமலனும் கூட விரைந்தனர்..

இவனை பார்த்தும் ஓடி வந்த ஒருவன்… “ண்ணா, நீ குடுத்த போட்டோல கீறவன் மாறியே கீறான்.. அதுங்காட்டி உன்னாண்ட சொன்னேன்”

அவன் பேச பேச ஜெயந்தியும் கமலனும் ஓடினர்..

ஆட்களை தள்ளி விட்டு உள்ளே நுழைய ஆம் அங்கே இருந்தது விமலனே!

கீழே கிடந்தான்.. மோசமாய் அடிபட்டு இருந்தான் பேச்சு மூச்சில்லை..

ஜெயந்திக்கு பார்த்ததும் அழுகை பொங்க.. அருகில் போய் குனிந்து பார்க்க…

“உங்க அண்ணனா?” என்று மருது உறுதிபடுத்திக் கொள்ள கேட்க…

“ஆம்!” என்ற தலையாட்டல் வந்ததுமே மூச்சிருக்கிறதா என்று கை வைத்து பார்த்தவன் இருப்பதை உணர்ந்ததும் “டேய் தூக்குங்கடா?” என்றான்.

இவனும் கமலனும் இவனுக்கு தகவல் சொன்ன பையனும் தூக்க..

பக்கமே டாக்ஸி ஸ்டேன்ட் இருந்தது…

தூக்கி ஓடினர்.. ஜெயந்தியும் பின்னே ஓட… ஒரு டேக்ஸ்யில் கிடத்தியவன் அருகில் இருந்த புகழ் பெற்ற தனியார் மருத்துவமனை பெயரை சொல்லி அங்கே விட சொல்ல…

ஜெயந்தி முன் ஏறிக்கொள்ள.. கமலனை ஏற்றிக் கொண்டு மருது பைக்கை செலுத்த கார் தொடர்ந்தது.

அங்கே அவனை தவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பின் போலிஸ் ஸ்டேஷனுக்கு அவனே அழைத்து சொல்லி விட்டான்..

மருத்துவமனையில் அவர்கள் முன்பணமாய் ஐம்பதாயிரம் கட்ட சொல்ல, உடனே ஏ டி எம் மில் எடுத்து சென்று கட்டி வந்தான்.

யாராயிருந்தாலும் உதவுவான் தான், இந்தளவிற்கு பதட்டமும் பரபரப்பும் இருக்குமா தெரியாது. எல்லாம் எல்லாம் ஜெயந்திக்காக மட்டுமே!

எல்லாம் முடித்து வந்த போது கமலனும் ஜெயந்தியும் தீவிர சிகிச்சை பிரிவு முன் அமர்ந்திருந்தனர்..

கத்தி சத்தம் போட்டு எல்லாம் அழவில்லை ஜெயந்தி, ஆனால் கண்களில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.. கமலன் ஆண்பிள்ளை அவன் தான் அப்படி அழுது கொண்டிருந்தான்.

“அழாத, சரியாகிடுவாங்க” என்று கமலனை தேற்றிய போதும் பார்வை முழுவதும் ஜெயந்தியின் மீது தான்!

வார்த்தைகள் கமலனை பார்த்து சொன்னாலும் அது ஜெயந்திக்காக அவன் சொன்ன வார்த்தைகள்!

“உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டீங்களா?” என்றான் இப்போது ஜெயந்தியை பார்த்து..

அவளின் மொபைல் எடுத்துப் பார்க்க அதில் நிறைய மிஸ்ட் கால்கள்.. அது ஒரு அரத பழதான் மொபைல், அதில் சத்தமே அவ்வளவாய் வராது.. இதில் இருந்த பதட்டத்தில் சத்தத்தை உணரவில்லை.

அழைத்து பேசியவள் “அம்மா அண்ணாக்கு அடிபட்டிருக்கு, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கோம் வாங்க” என்று பெயர் சொல்லி வைத்து விட்டாள்..

அவனின் நிலைமை கவலைக்கிடம் என்று தான் சொல்லியிருந்தார்கள்…

“ஹார்ட் பீட், ஆக்சிஜன் சேச்சுரேஷன் எல்லாம் குறைவா இருக்கு” என்று அட்மிட் ஆனதும் சொல்லி விட்டார்கள்…..

அவனின் அம்மா அப்பா வந்த போது போலீசாரும் வந்து விட்டனர்.

“ரயிவே ட்ராக்ல கிடந்தான் பார்த்துட்டு நம்ம பசங்க சொன்னங்க தூக்கிட்டு வந்து அட்மிட் பண்ணிட்டோம் வேற ஒன்னும் தெரியாது” என்றான் மருது.

அவனின் அம்மா அழுது கொண்டே இருக்க…

“மா, இங்க இப்படி சத்தமா அழக் கூடாது போங்க, போய் வெளில அழுங்க, எத்தனை பேஷன்ட் இருக்காங்க, அழுதா அவங்களுக்கு பயம் குடுக்காதா, போங்க!” என்று ஒரு நர்ஸ் அதட்ட..

“மா வாங்க” என்று ஜெயந்தி அவரை அழைத்துச் செல்ல, கமலனும் பின்னே சென்றான்.

கோபாலன் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார், மகன் பிழைக்க வேண்டும் என்ற கவலை, கூடவே இவ்வளவு பெரிய மருத்துவமனை, பணம் கட்ட எங்கே போவது என்ற கவலை…

அவன் இருக்கும் போதே மீண்டும் ஐம்பதாயிரம் வந்து கட்ட சொல்ல.. கோபாலன் முழித்தார் அவரிடம் பணம் கிடையாதே..

விஷாலை அதற்குள் பணம் எடுத்து வர சொல்லியிருந்தான் வங்கியிலிருந்து.. அவசரத்திற்கு ஸ்டோரில் அவனின் கையொப்பமிட்ட காசோலை இருக்கும்.. அதில் இரண்டு லட்சம் தொகை எழுதி எடுத்து வர சொல்லியிருந்தான்.

அவனும் அந்த நேரம் வந்து விட…

ஐம்பதாயிரம் கட்டி வரச் சொன்ன போது கலைச்செல்வி ஜெயந்தி கமலன் மூவரும் உள் வந்து விட்டனர்..

கோபாலன் அவர்களிடம் விவரம் சொல்ல… “ஏற்கனவே ஐம்பதாயிரம் கட்டி இருக்காங்க” என்று சொல்ல.. “இப்போ அம்பதாயிரம் ஒரு லட்சம் ஆகிடுச்சு” என்றும் சொன்னார்.

மருது விஷாலின் கையில் இருந்த ஒன்றரை லட்சத்தை கலைச்செல்வியின் கையில் கொடுத்து “கேட்கும் போது கட்டிடுங்க, பணம் கேட்டுட்டு தான் இருப்பாங்க” என்று சொல்ல…

கலைச்செல்வி அப்படியே அவன் காலில் விழுந்து விட்டார் “உதவிக்கு ரொம்ப நன்றி தம்பி, எப்படியாவது என் பையனை காப்பாத்தி குடுத்துடுங்க” என்று.

மருது பதறி விலகி “எழுந்துருங்க” என,

அவர் அசையாமல் இருக்க..

எல்லோரும் ஒரு வகை அதிர்ச்சியாய் பார்த்து இருந்தனர். யாருமே இதை எதிர்பார்கவில்லை…

“தூக்கு ஜெயந்தி” என்று அதட்டினான்.

“மா எழுந்திரும்மா” என்று ஜெயந்தி தூக்கி விட,

“அவன் கண் முழிச்சு கொஞ்சம் சரியாகிட்டா அப்புறம் கவர்மென்ட் ஆசுபத்திரி கூட மாதிக்கறோம் தம்பி.. உங்க பணமும் திரும்ப எப்படியாவது திரும்ப குடுத்துடுவோம். அந்த கேஸ்ல இருந்தும் அவனை காப்பாத்தி விட்டுடுங்க தம்பி” என்றார் கண்கள் கலங்க..

என்ன பேசுவது என்று கூட அவனிற்கு தெரியவில்லை.. “விஷால் பார்த்துக்கோ” என்றவன், “சாயந்தரம் வர்றேங்க” என்று பொதுவாய் சொல்லி “நான் வர்றவரை இருடா, ஏதாவதுன்னா எனக்கு கூப்பிடுடா” என்று சொல்லி நடந்து விட்டான்.

வேகமாய் அவனின் பின்னோடு போன ஜெயந்தி அவன் வெளி வாசலை அடைந்த நேரம் அவனை பிடித்து இருந்தவள் “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று அவளின் பங்கிற்கு சொன்னாள். நிச்சயம் அண்ணனாய் நினைத்து எல்லாம் சொல்லவில்லை. எல்லோரும் அவனை அண்ணனிட்டு அழைத்ததினால் அதனை பின் பற்றினாள். சற்று உரிமையாகப் பழகுவோம் என நினைத்து..  

நொடி நேரம் கூட யோசிக்கவில்லை… “அண்ணான்னு எல்லாம் என்னை கூப்பிட வேண்டாம்ங்க” என்று விட்டான்.

குழப்பமான முகத்தோடு ஜெயந்தி பார்க்க..

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ங்க.. உங்களை கல்யாணம் செஞ்சிக்க இஷ்டப்பறேன். இந்த ஐஞ்சு மாசமா உங்களை பார்த்துட்டு வர்றேன். எப்படி உங்களை பொண்ணு கேட்க, யாரை விட்டு கேட்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன்… உங்களை கவனிச்சிட்டு இருந்ததால தான் நீங்க போலிஸ் ஸ்டேசன் போனது தெரிஞ்சது… உடனே வந்தேன்… உங்களுக்காக மட்டும் தான் இந்த உதவி எல்லாம்..”

“எப்போவாவது என்னை பத்தி தெரிஞ்சிக்கணும்னு தோணினா சொல்லுங்க என்னை பத்தி சொல்றேன்”

“நாம கல்யாணம் பண்றோமோ இல்லையோ, ஆனா தயவு செஞ்சு என்னை அண்ணான்னு எல்லாம் கூப்பிட்டுடாதீங்க, அப்புறம் நானே உங்களுக்கு உதவி செய்ய நினைச்சாக் கூட என் மனசு உதவ விடாது” என்று சொல்லி வேகமாய் நடந்து விட்டான்.

அப்படியே ஸ்தம்பித்து கல்லாய் சமைந்து விட்டாள் ஜெயந்தி…

      

 

      

         

 

          

                            

  

         

 

Advertisement