Advertisement

அத்தியாயம் ஐந்து :

பத்து மணி வரையிலும் அவர்கள் சொன்ன ஐயா அதாகப் பட்டது அசிஸ்டன்ட் கமிஷனர் வரவில்லை…

“என்ன சார் போயிட்டு நாளைக்கு வரலாமா?” என்றான் மருது.

“நீ போயேன் மருது, அவங்களை அனுப்ப முடியாது.. பொண்ணுங்களை அனுப்ப சொன்ன, அனுப்பிட்டேன்! இவங்களை விட முடியாது!” என்றான் சர்கிள் இன்ஸ்பெக்டர்…

மருது எதுவும் பேசவில்லை கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் போனான்.

“சார் அனுப்பிருவோம். சேனல் காரனா நம்மை கவனிப்பான், என்ன சார் நீங்க” என்று ஏட்டு குறைபட்டார்.

“நீ என்னையா? அசிஸ்டன்ட் கமிஷனர் கேட்டா என்ன சொல்ல?”

“என்ன சொல்ல? எப்படியும் அவன் கூட்டிட்டு போயிடுவான். இதுல நம்மளா விட்டா ஏதாவது தேறும் இப்படி பண்ணறீங்களே சர்” என்று சொல்லி அவர் அமர்ந்து கொள்ள..

அதற்குள் அவன் ஜீவாவை அழைத்திருந்தான்…

அவனும் பத்து நிமிடத்தில் வந்து விட..

“இவனா?” என்று தான் சர்கிள் இன்ஸ்பெக்டர் நொந்து போனார்… “இதுக்கு விட்டே இருக்கலாமே” என்று தோன்றியது.

“வணக்கம் சார், இவங்க என்னோட கிளையண்ட்ஸ், எதுக்கு உட்கார வெச்சிருக்கீங்க..” என்று ஆரம்பித்தவன்

அவரை பேசவே விடவில்லை… “முறையில்லாம நீங்க இவங்களை உட்கார வெச்சிருக்கிறதுக்கு நான் உங்க மேல கம்ப்ளயின்ட் கொடுக்கலாம்” எனவும் அந்த இன்ஸ்பெக்டர் முறைக்க…

“ஆனா பாருங்க இந்த மருதுண்ணா அப்படி எதுவும் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டார்.. இப்போ நீங்க என்ன பண்றீங்க.. எங்க வீடு பையனை காணலை. சேனல் அவனை ஏதோ பண்ணிடுச்சு.. சும்மா பணத்தை சொல்லி விஷயத்தை மறைக்க பார்க்கறாங்கன்னு எங்க கம்ப்ளையின்ட் எடுத்துகிட்டு அவங்களை இங்க வர சொல்றீங்க”

“சட்டம் தன் கடமையை செய்யணும், எங்காளு இங்க இருந்தா உங்க ஆளுங்களும் இங்க இருக்கணும்!”

“ரைட்டர் சர் கம்ப்ளைன்ட் எழுதுங்க” என்று குரல் கொடுக்க…

மருதுவை “என்ன இது?” என்பது போல பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

“நான் என்ன சார் பண்ண?” என்று அவனும் பார்த்தான்.

பின்பு அவர் சென்று அசிஸ்டன்ட் கமிஷனருடன் பேசினார், “சர் லோக்கல் ஆளுங்க பிரச்சனை பண்றாங்க, பையனை காணோம், சோ, சேனல் தான் ஏதோ பண்ணிடுச்சுன்னு சொல்றாங்க” என்று சொல்ல,   

“சரி, அவங்களை நாளைக்கு பார்த்துக்கலாம் அனுப்பிவிடு” என்று சொன்னார்.       

“சரி கிளம்புங்க, நாளைக்கு எப்போ கூப்பிட்டாலும் வரணும்” என்று சொல்லி அனுப்ப..

கமலன் தான் வந்தவன் “தேங்க்ஸ் சர்” என்றான் உள்ளார்ந்து.. சிறிய பையன் தானே.. பயந்து இருந்தான்.. அவனின் அப்பாவை பற்றி அவனுக்கு தெரியாதா என்ன.. அவரால் ஒன்றும் முடியாது என்று தெரியும்.. மருது வரவும் தான் கொஞ்சம் தைரியமாய் இருந்தது.     

“ஷப்பா, இவன் நம்மை அண்ணான்னு சொல்லாம போனான்” என்று சந்தோஷப் பட்டுக் கொண்டான் மருது..

கோபாலனும் நன்றி சொல்லி நகர போக…  

“என்னய்யா இந்த ஆளு?” என்று தான் அவனுக்கு தோன்றியது… இதுவரை அவனிடம் ஒரு விபரமும் சொல்லவில்லை.. வேறு யாராவதாய் இருந்தால் ஒரு வாங்கு வாங்கியிருப்பான்.

ஜெயந்தியின் அப்பாவாய் இருக்க அமைதியாய் இருந்தான்…

நேரத்தை பார்த்தவன் “இப்போ எனக்கு வெளில போகணும்… காலையில ஆறு மணிக்கு எல்லாம் கோவில் கிட்ட வந்துடுங்க, அப்போ யாரும் அதிகம் முழிச்சு இருக்க மாட்டாங்க. என்ன விவரம்னு பேசிக்கலாம்” என்று சொல்லி சென்றவன்…

“வாடா” என்று ஜீவாவை அழைத்து கொண்டான் இரவு உணவிற்காக.. ஜீவா அவனின் வக்கீல்… 

“சார் வர்றிங்களா ஒரு கட்டிங் போடுவீங்கலாம்” என்று சர்கிள் இன்ஸ்பெக்டரையும் அழைக்க…

“வீட்டுக்கு பத்திரமா போகணும் மருது, குடிச்சா கொஞ்சம் தடுமாறுவேன்” என்றார் அவர் நல்ல பிள்ளையாய்.

“அட உங்களை பத்திரமா வீடு சேர்க்க வேண்டியது என் பொறுப்பு” என்று சொல்லி அவரையும் அழைத்து..

“பிரியாணி கட்டிங் என்ன வேணுமோ வாங்கிக்கங்க” என்று ஸ்டேஷனில் இருந்தவர்களையும் கவனித்து…

ஜீவாவையும் சர்கிளையும் கட்டிங் போட அழைத்து சென்றாலும் அவன் அதனை செய்ய மாட்டான்.

எந்த இடத்தில பணம் கணக்கு பார்க்காமல் செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்தவன்… அதன் பொருட்டே இந்த கவனிப்பும் மரியாதையும் அவனுக்கு ஸ்டேஷனில்.

கையால் அடிக்க வேண்டிய இடத்தில கையால் அடிப்பவன், பணத்தால் அடிக்க வேண்டிய இடத்தில பணத்தால் அடிப்பான்…

மறுநாள் காலையில் சரியாக ஆறு மணிக்கு குளித்து சுத்த பத்தமாய் இவன் கோவில் முன் நிற்க… இவர்களை ஆளை காணோம்!

கடுப்பானது இவனுக்கு…

பதினைந்து நிமிடம் கழித்து அவர்களின் வீட்டு கதவு திறக்கும் சப்தம் கேட்க.. பார்த்திருந்தான்..

கோபாலனும் அவர் மனைவியும் வர… காலதாமதம் பொறுத்திராதவன் “உங்க கடிகாரத்துல இப்போ தான் ஆறு மணியா?” என்று விட்டான்.

“நாங்க உங்களை உதவ சொல்லலையே?” என கோபாலன் சொல்லிவிட்டார்.

பின்னே அவர் இரவு முழுவதும் தூங்கவேயில்லை.. பையன் இன்னும் வரவில்லை என்ற பயத்தை விட, பெண்ணுக்காக இவன் செய்கிறானோ பெண்ணை எதுவும் செய்து விடுவானோ என்ற பயம் தான்.

அன்றைக்கு கோவில் கலாட்டாவிலும் இவளை பார்த்ததும் “போங்க” என்று விட்டான்.. இன்றைக்கும் என்ன என்று கூட கேட்காத போது அவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டான்.   

தங்களுக்கு உதவ அப்படி ஒன்றும் அவர்களுக்குள் அறிமுகமில்லை அவர்களும் உதவி என்று போய் நிற்கவில்லை. ஜெயந்தி அவனிடம் பேசியதே அவருக்கு அதிர்ச்சி.  

ஜெயந்தியிடம் “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்க… அவள் வேலைக்காக மாட்டியிருந்த போர்ட் பார்த்து விசாரிக்க சென்ற போது பார்த்தது என்று சொல்ல…

அவருக்கு அப்படி ஒரு கோபம் வந்தது!

அதை திட்ட வேறு செய்ய..

“எனக்கு என்ன தெரியும் அது அவரோட கடைன்னு” என்று சொன்னவள், “இப்போ அவர் வரலைன்னா இன்னும் அங்க தான் உட்கார்ந்திருப்போம். ஏதோ அவர் வந்ததால வந்தோம். அண்ணாக்கு என்ன ஆச்சுன்னு கவலைப் படாம, என்னை எதுக்கு இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க” என்று எகிறி இருந்தாள்.

அந்த கோபமிருக்க இப்படி பேசிவிட்டார்.

சுள்ளென்று ஒரு கோபம் எழ, இருந்தால் என்னவாவது பேசி விடுவோம் பின்னே முகம் பார்க்க முடியாமல் போய்விடும் என்று தோன்ற..

மருது அவரை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பதில் பேசாமல் விடுவிடுவென்று திரும்ப நடந்து விட்டான்.. 

“போச்சா” என்றபடி தான் அவரின் மனைவி பார்த்தார்..

இந்த மனுஷனை வெச்சிகிட்டு என்று நினைக்கும் போதே கண்களில் நீர் நிறைந்தது.

பின்னே இரண்டு நாட்களாய் பையனை காணோம்….

அவன் பணம் கையாடல் செய்பவன் கிடையாது, பணத்திற்காக அவனை யாராவது ஏதாவது செய்திருந்தால்… அவ்வளவு பதைப்போடு இருந்தார்.

நேற்று மாலை வரை ஒன்றும் தெரியவில்லை.. அதிகம் அப்படி வேலையின் போது விமலன் கைபேசியில் அழைப்பவன் கிடையாது, அதனால் அவன் இரவு வீடு வரதாவரை ஒன்றும் தெரியவில்லை.

கைபேசிக்கு அழைத்தால் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. 

சில சமயம் வேலை இருந்ததால் இரவு சேனலில் தங்கி விடுவது உண்டு..அப்படி நினைத்து இருக்க.. அடுத்த நாளும் வரவில்லை.. 

கோபாலன் வேலைக்கு கிளம்பி விட்டார், ஜெயந்தி கல்லூரி, கமலன் அவன் ஏதோ நண்பனை பார்க்க என்று கிளம்பிவிட்டான்.

ஒற்றை ஆளாய் அவர் பயந்து இருந்தது அவருக்கு தானே தெரியும்!

மாலை வீடு வந்ததும் என்னவோ இன்னும் அவனை காணோமே கமலனை சேனல் சென்று பார்த்து வர சொல்லிக் கொண்டு இருக்கும் போது தான் போலிஸ் அழைப்பு.

வயதுப் பெண்ணை வைத்து மனம் பதைத்து ஸ்டேஷனில் இருக்க.. தெய்வம் போல வந்து மருது காப்பாற்றி விட்டான்.

“நன்றி” என்பது மனிதருக்கு வேண்டாமா என்று கோபாலனை பார்த்து முறைத்தவர் “தம்பி ஒரு நிமிஷம்” என்று வேகமாய் அவன் பின் போகப் போக…  இவர்  யோசித்து முடித்து போவதற்குள் அவன் சென்று இருந்தான்.

அப்படியே கோவில் முன் அமர்ந்து விட்டார் ..

மருதுவை பார்க்கப் போகிறார்கள் என்று தெரியும்… “என்ன நடக்கிறது?” என்று ஜெயந்தி எட்டி பார்க்க….

அங்கு கோவில் முன் தளர்ந்து அமர்ந்திருந்த அம்மா மட்டுமே கண்களுக்கு தெரிந்தார்.

ஏறக்குறைய ரோடில் அமர்ந்திருந்தது போல தான். பதறி அவள் வேகமாய் வந்து “அம்மா எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கீங்க”   

“இன்னும் அந்த சர் வரலையா?”  

“வந்தாருடி நாம லேட்டா வந்தோம், அவர் காத்துட்டு இருந்திருப்பார் போல, அதுக்கு இப்போ தான் உங்க வீட்ல ஆறு மணியான்னு கேட்டார். உங்கப்பா உங்களை யாரு எங்களுக்கு உதவ சொன்னாங்கன்னு சொன்னார். அவ்வளவு தான் அந்த தம்பி நிக்கவேயில்லை, போயிடுச்சு. என் பையன் வேற என்ன ஆனான்னு தெரியலை, இந்த மனுஷனால ஒரு வேலையும் ஆகாது, உதவி செய்ய வந்தவங்களையும் விரட்டி விட்டுட்டார்” என்று அழ..

“மா, முதல்ல வீட்டுக்கு வாங்க! இன்னும் வீட்டுக்காரம்மாக்கு விஷயம் தெரியாது.. எதுன்னாலும் வாங்க.. அந்த சர் கிட்ட நான் பேசறேன்”  

“நீயா, நீ எதுக்கு பேசணும்?” என்று அப்பா கேட்க,  

“அப்போ நீங்க பேசுங்க, அண்ணா காணோம், அந்த கவலை கொஞ்சம் கூட இல்லையா உங்களுக்கு” என்று ஜெயந்தி முறைத்து பார்த்தாள்.

“முதல்ல வீட்டுக்கு வாங்க” என்று அம்மாவை அழைத்து சென்று விட்டாள்.

அவனை எங்கே பார்ப்பது என்று தெரியாமல் முழித்து நின்றார்…இவர்கள் சொல்வது போல சென்னையில் அவரின் ஓனரை விட்டால் வேறு யாரையும் தெரியாது…

அவரே மருதுவை தான் கை காட்டி சென்றார்…

மகனை காணோம்… அவனை தேடி தானே ஆகவேண்டும்… இதில் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து அழைத்தால்… நேற்றிலிருந்தே கமலனிற்கு வேறு காய்ச்சல், பிள்ளை பயந்து விட்டான்.

ஜெயந்தியின் தைரியம் அவனிடம் கிடையாது!

“எங்கே போய் அவனை பார்ப்பது?” என்று நின்றார்..     

அப்போது ஒரு பையன் அங்கே வர “மருது வீடு எங்க தம்பி?” எனக் கேட்டார்.

“என்ன மருதா? நீதான் எங்கண்ணனுக்கு பேர் வெச்சியா? அப்படியே ஒரு எத்து விட்டேன்னு வெச்சிக்கோ!” என்று ஒரு காட்டு காட்ட ஆடிப் போய்விட்டார்.

“மருதண்ணன் வீடு எங்க தம்பி?” என்றார் மிகவும் பணிவாக.  

“ம்ம், அது! இப்படியே போய் லெப்டுகா திரும்பி ரைட்டுகா போ!” என்று சொல்ல,

அவன் சொல்லிய வழியை கிரகித்து அவர் நடக்க… வழி சொன்னவன் அங்கே கோவில் வாசலில் அமர்ந்தான்.

ஆம்! ஜெயந்தியின் வீட்டை பார்ப்பதற்காக மருது தான் அந்த பையனை அனுப்பியிருந்தான்.. மிகுந்த ரோஷக்காரன் ஒரு சொல் பொறுக்க மாட்டான்.

அவர்களோடு பேச்சு சரிவராது என்று தோன்றிவிட்டது.. “தானாய் போய் உதவி செய்தால் அவ்வளவு இளக்காரமா, என்னை பார்த்து கேள்வி கேட்பானா இவன்?” என்று ஜெயந்தியின் அப்பா மீது அப்படி கோபம் பொங்கியது.

ஆனாலும் ஜெயந்தியை எப்படி விட முடியும்!

அதனால் போலிஸ்காரர்கள் தொந்தரவு கொடுத்தால் என்ன செய்வது என்று தோன்ற, “போடா, அங்க இருடா, போலிஸ் எதுவும் வந்தா, எனக்கு சொல்லு!” என்று அவன் வீடு சென்ற அடுத்த நொடி ஆள் அனுப்பியிருந்தான்..

வீடு கண்டுபிடிப்பதில் சிரமமிருக்கவில்லை. அவனின் வீடு செல்ல.. பெரிய வீடு… காம்பவுண்ட் சுவர் சிறியதாய் தான் இருந்தது… அதற்கு தக்கார் போல கேட்.. வீடு சற்று உள் தள்ளி இருக்க.. முன் சற்று இடம் இருந்தது…

இங்கிருந்து பார்த்தாலே அவன் வராண்டாவில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.. பக்கத்தில் அம்மா என்ன இது என்று அவர் கண்கள் விரிந்தது.. அவன் கையில் பிஸ்கட் வைத்து அதனை தூக்கி போக்கு காண்பிக்க..

அதனை அவன் கைகளில் இருந்து லவுட்டுவதற்காக நாய் ஒன்று எம்பிக் கொண்டிருந்தது..

அவனின் உயரத்திற்கு எம்பியது.. கரு கரு வென.. அம்மாடி .. அதனை பார்த்து பயந்து அவர் இப்படியே திரும்பப் போய்விடலாமா என்று நினைத்தார்…

அதற்குள் அவரை மருது பார்த்து விட்டான்.. ஆனாலும் அவனாய் வரவில்லை “வாங்க” என்றும் கூப்பிடவில்லை..

அப்படி ஒரு கோபம் அவனுக்கு.. “இவன் பொண்ணுக்காக உதவி பண்ண போனா என்ன தெனாவெட்டு இவனுக்கு?” என்று மனதினில் ஓடியது. மரியாதை எல்லாம் பறந்து விட்டது.  

பின்பு அவனே நினைத்துக் கொண்டான் “டேய், என்ன இருந்தாலும் வருங்கால மாமனார் போனாப் போறான் உள்ள கூப்பிடு” என்று நினைத்தவன்,

“ஜானி உள்ள போ” என, அது வேகமாக வீட்டினுள் ஓடிவிட.. முன்புறம் அது வெளியில் வராத படி தாளிட்டவன்..

“உள்ள வாங்க” என்று குரல் கொடுத்தான்.

அவர் வரவும்.. “ம்ம், சொல்லுங்க” என,

“அது, அது, பேச வரச் சொன்னீங்க” என்று அவர் தயங்க..

“உங்களை யார் உதவி பண்ண சொன்னா கேட்டீங்க. அப்புறம் எதுக்கு வந்தீங்க” என்றான் நேரடியாக.

“ஏதோ புத்தி கெட்டுப் போச்சு” என்று அவர் சொல்ல..

“எனக்கு பிடிச்ச பொண்ணை பெத்ததால நீ எஸ்ஸு டா” என்று மனதினில் வறுத்தவன்…

“உட்காருங்க” என்றவன் கைபேசி எடுத்து “டேய் ஜீவா, வீட்டுக்கு வா” என்றான்.

ஐந்து நிமிடத்தில் வந்த ஜீவா “அண்ணா, இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். நைட் சரக்கெல்லாம் வாங்கி குடுத்து, இவ்வளவு காலையில எழுப்பி விட்டா, என்னால எப்படி எழுந்துக்க முடியும். அதுவும் இப்போ தான் கீர்த்தி சுரேஷ் கூட கனவுல ஒரு டான்ஸ் போட்டுட்டு இருந்தேன். அது உங்களுக்கு பொறுக்கலையா?” என்று பேசிக் கொண்டே வந்தான்.

மருதுவிடம் அதற்கான பிரதிபலிப்பு எதுவும் இல்லை என்று புரிந்ததும் கோபமாக இருக்கிறான் என்று உணர்ந்து கொண்டவன் அமைதியாக அருகில் வந்தான்.

“என்னனு கேளு”  

அவன் பொறுப்பான வக்கீலாய் மாறி விவரங்கள் சேகரிக்க..

“என்ன பண்ணலாம்? சும்மா இவங்களை போலிஸ் ஸ்டேஷன்ல கூப்பிட்டு தொந்தரவு பண்ணக் கூடாது”  

“அண்ணா பையனை காணோம், அவனை கண்டு பிடிச்சு குடுங்கன்னு கம்ப்ளையின்ட் குடுப்போம். சேனல் தான் ஏதோ பண்ணிடுச்சு, அதனால பழியை போடுதுன்னு எக்ஸ்ட்ரா சேர்த்துப்போம்.. அப்போ இவங்களை தொந்தரவு பண்றது குறையும். ஆனாலும் சுத்தமா நிறுத்த மாட்டாங்க, வர்றதை பார்ப்போம்!” என்றான்.

அதற்குள் உதவி செய்வதற்கு மருதுவை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது புரிந்தவராக கலைச்செல்வி ஜெயந்தியை அழைத்துக் கொண்டு வீடு தேடி வந்து விட்டார். அவளுக்கு அவனை முன்னமே தெரியும் என்பதால் கூட அழைத்து வந்து விட்டார்.

அவர்கள் கேட் அருகில் நிற்க மருது அவர்களை கவனிக்கவில்லை. 

“அண்ணா கீர்த்தி சுரேஷ் விட ஒரு சூப்பர் பிகர் வாசல்ல நிக்குது, கூட இன்னொருத்தங்களும் இருக்காங்க” என்று சொல்ல…

மருது திரும்பும் போதே கோபாலனும் திரும்பினார்.

அங்கே கேட் அருகில் இருவரும் நிற்க…

“சூப்பர் பிகர்” என்று சொன்ன ஜீவாவை முறைத்து பார்த்தவன் .. கோபாலனை காட்டி “இவர் பொண்ணு , அது அவங்க அம்மா” என்றான்.

“அதற்கென்ன?” என்ற அலட்சிய பார்வை தான் ஜீவாவிடம்.

“போங்க, போய் கூட்டிட்டு வாங்க” என்று அவரை அனுப்ப..

அவர் நகர்ந்ததுமே “டேய், பார்த்து பேசு, அவங்க தான் உனக்கு அண்ணி” என்று சொல்லிவிட்டான். இதற்கு ஜீவாவும் அவனை விட பெரியவன். எல்லோரும் இவனை அண்ணா என்றழைக்க, இவன் எல்லோரையும் பேர் இல்லை வாடா போடா தான்.     

“என்ன?” என்று வாயை பிளந்து எழுந்து விட்டான் ஜீவா.

“பின்ன எதுக்குடா நான் இவங்களுக்கு உதவி பண்ணனும்?”  

“சாரிண்ணா, சாரிண்ணா” என்றான் திரும்ப திரும்ப..

“ஒரு பிரச்னையும் அவங்களுக்கு வரக் கூடாது பார்த்துக்கோ” என்றவனின் பார்வை எல்லாம் வாயிலில் நின்ற ஜெயந்தி மேல் தான். என்ன கால் வைத்து உள்ளே வருகிறாள் என்று தீவிரமாய் பார்த்திருந்தான்..    

 

     

                 

 

 

  

   

                   

   

   

 

Advertisement