Advertisement

அத்தியாயம் நான்கு :

ஜெயந்தி சென்றதுமே விஷாலை அழைத்தவன்… “உனக்கு மேனேஜர் பதவி குடுத்ததுக்கு பதிலா டேமேஜர்ன்னு குடுத்திருக்கணும்டா” என்றான் கோபமாக…

“ஏன் அண்ணா கோபப்படறீங்க?”  

“ஏன்டா அந்த பொண்ணு வாசல் தாண்டும் முன்னமே கூப்பிடச் சொன்னேன். நீ பராக்கு பார்த்துட்டு விட்டுட்ட… நீ இவ்வளவு அசால்டா இருக்கியேன்னு உன்னை திட்டுனா… அந்த பொண்ணு கிட்ட நீங்க வரலைன்னா பிரச்சனை ஆகும்னு சொல்லியிருக்க. அந்த பொண்ணு என்னை கேட்குது? உன்னை என்ன செய்யலாம்?”  

அவனுக்கு எதுவுமே காதில் ஏறவில்லை, ஏறியது எல்லாம் “என்ன அண்ணனை கேள்வி கேட்க ஒருவரா?” என்பது போல தான் அதிலேயே பரவச நிலையில் இருந்தான்.

இவன் என்னடா நித்யானந்தா சிஷ்யன் மாதிரி நிக்கறான் என்று மருது பார்க்க அது கூட அவனுக்கு தெரியவில்லை…

பின்னே எப்போதும் எதாவது செய்து மருது விடம் திட்டு வாங்குவது தான் அவனின் வேலை.. சொல்லும் வேலையை மட்டுமே செய்வான் அவனுக்காய் எதுவும் செய்ய தெரியாது.

படிப்பறிவு அவனுக்கு உண்டு தான், ஆனாலும் அனுபவ அறிவு குறைவு!

“இப்படி இருந்தா என்னைக்கும் வேலை மட்டுமே பார்த்துட்டு இருக்கணும், நீ எப்போ முதலாளி ஆகறது, ஒரு ரெண்டு வருஷம் வேலை பார்த்தமா பின்ன நாமளே கடை வெச்சமா, முன்னேறுனோமான்னு இருக்கணும்”

அதுதான் மருது! அவனுடன் இருப்பவர்கள் அவனை விட நன்றாய் வரவேண்டும் என்று தான் நினைப்பான்.  

“அண்ணா அதுக்கெல்லாம் பணம் வேணும்ண்ணா”

“நான் நீ சும்மா வைப்பேன்னா சொன்னேன். போடா, எதுக்கும் முதல்ல முயற்சி வேண்டும், போ! என் வாயை கிளராத!” என்று திட்டி அனுப்ப

அவன் வெளியே வரவும் அங்கிருந்த செக்ஷன் பெண்கள் சிரிப்பது போல தோன்ற…

“சிரிச்சீங்க நாளைக்கு அண்ணா கூப்பிடும் போது நான் எஸ் ஆகிடுவேன். அப்புறம் நீங்க தான் போகணும், பார்த்துக்கங்க” என்றான் முறைப்பாய்.

“தோடா, அண்ணா எங்களை எல்லாம் திட்ட மாட்டார்!”

“அதுதானே உங்களை தான் தண்ணி தெளிச்சு விட்டுட்டாரே” என்று வாயடித்து நிற்க… அதற்குள் ஆட்கள் வர வேலையை பார்த்தனர்.

எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க மருதுவினால் எதையும் செய்ய முடியவில்லை.

அவனுக்கு பொறுமை என்பதே கிடையாது, எல்லா வேலைகளையும் உடனுக்குடன் முடிக்க வேண்டும், எதையும் தள்ளி போட மாட்டான். அவனுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.   

ஆனால் இதில் ஒன்றும் செய்ய முடியாதே!

“நாம ஏன் படிக்காமப் போனோம். காலையில ஸ்கூலுக்கு போயிட்டு சாயங்காலம் வேலைக்கு போயிருக்கலாமோ?” என்று நினைத்தான்.

ஹ, ஹ, இப்படியாக என்னென்னவோ எண்ணங்கள்…

அடுத்த நாள் விடுமுறை தினம்..

அன்றும் ஜெயந்தியை எதிர்பார்த்து காத்திருக்க அவள் வரவில்லை.. பின்பு தான் தெரிந்தது ஏதோ விடுமுறை தினம் என்று. “இன்று பார்க்க முடியாதா?” என்று தோன்றிய போதும் குளித்து முடித்து கோவிலுக்கு சென்றான்.

பக்கம் தானே வீடு அங்கே தென்படுகிறாளா என்று. ம்கூம்! அவளின் வீடு எந்த அரவமுமின்றி அமைதியாய் இருந்தது..

வேம்புலியம்மனிடம் அவளை எனக்கு மனைவியாய் கொடு என்று வேண்டுதல் வைத்து வந்தான்…

அவளின் தம்பி வருவானா வேலை கேட்டு என்று பார்க்க அவனும் வரவில்லை… இரண்டு பேரை எடுத்து விட்டனர்.. ஆனாலும் போர்ட் எடுக்கவில்லை.. “யார் வந்தாலும் என்னை பார்க்க சொல்லு” என்றிருந்தான். ஆனால் இரண்டு நாட்களாகியும் அவளின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.. அவளும் தொடர்ந்து சனி ஞாயிறு வந்து விட்டதால் கல்லூரி வரவில்லை.

அப்பா ஸ்திரமாய் சொல்லி விட்டார் “பணம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ எங்கேயும் போக வேண்டாம்” என்பது போல…

இதற்கு ஆள் தேவை என்ற போர்ட் இருக்கிறது என்று தான் சொன்னாள். அவள் சென்று பார்த்தால் என்று சொல்லவில்லை.. 

கமலனிற்கு சொன்ன போதும் “அவன் கிட்ட வேண்டாம், வேற இடம் இருந்தா வேணா பார்க்கலாம். வம்புக்கு போறவங்க சகவாசம் வேண்டாம்!” என்றார்.

ஜெயந்தியும் பின்பு அதனை பற்றி பேசவில்லை… இதற்குள் பணம் ஏற்பாடாகிவிட இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் சென்று விட்டாள்… அவனின் கடைக்கு ஜெயந்தி வந்த பிறகு அவனின் கண்ணிலேயே படவில்லை….

யாரிடம் தெரிந்து கொள்வது என்றும் தெரியவில்லை!

என்னவென்று தெரிந்து கொள்ள கூட முடியாத நிலையை அறவே வெறுத்தான்… யாரிடம் விசாரிப்பான்… ஏதாவது ஒரு அக்காவிடம் சொன்னால் அவளின் அம்மாவிடம் பேச்சு கொடுத்து விஷயத்தை வாங்கி விடுவர் தான். ஆனால் இவன் ஒரு பெண்ணை பற்றி கேட்பது புதிது என்பதால் ஆயிரம் கதைகள் முளைக்கக் கூடும்.

அதனால் ஜெயந்தி மீண்டும் கண்ணில் தென்படும் நாளுக்காக காத்திருந்தான்… எதிர்பார்த்திருந்தான்… 

சிறுவயதில் இருந்து கும்பிடும் வேம்புலியம்மன் அவனை கைவிடுவாரா என்ன?

ஜெயந்தி அவளின் புது உலகில் இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்! வந்த புதிதில் சென்னையை பார்த்தே வாய் பிளந்தவள் இப்போது பெங்களூர் அதை பார்த்து இன்னும் பிளந்தாள்.. காலை எட்டு மணியிலிருந்து ஆறு மணி வரை ட்ரைனிங். அதுவே ஒரு புது உலகம்.. பின்னே நண்பர்களுடன் ரோடில் பேசிக் கொண்டு அவர்களின் ஹாஸ்டலை அடைய.. அது இன்னும் ஒரு புது உலகம்!

எல்லோரும் பிடித்ததை வாங்க பிடிக்க இருக்க… இவள் வேடிக்கை பார்ப்பதுடன் சரி.. நாமும் நிறைய சம்பாதித்து நினைத்ததை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஓடும்… கையில் சிறிது பணம் அப்பா கொடுத்து அனுப்பியிருந்தாலும் அவள் வாங்கவில்லை.

ஆனாலும் இந்த வாழ்க்கையை பார்த்து மனதில் சற்று பொறாமை எழுந்தது.. தங்களிடம் ஏன் பணமில்லை என்பது போல…

“நினைத்த நேரம் பிடித்ததை வாங்கும் அளவிற்கு நான் சம்பாதிப்பேன்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே அந்த இடங்களை கடப்பாள்.

ஒரு மாதம் பத்து நாட்கள் ஓடி விட அன்று தான் மீண்டும் கல்லூரி செல்லும் நாள்.. எப்போதும் போல சீரான மித வேக நடையுடன் அவள் வர…

அவளை பார்த்ததும் எழுந்தே நின்று விட்டான் மருது…

“எங்க போன இவ்வளவு நாளா?” என்று கத்திக் கேட்கும் ஆவேசம் பிரவாகமாய் பொங்கியது.

பெங்களூர் சீதோஷண நிலை இன்னுமே அவளை பளபளப்பாய் மாற்றி இருந்தது. அதுவும் அன்று ஒரு சிகப்பு சுரிதாரில் இருக்க… பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.. இடைவெளி விட்டு அவள் கல்லூரி வரும் வரையிலுமே பின் தொடர்ந்தான்..

அவளின் வீட்டினில் யாரோடும் சிநேகிதம் செய்யவும் முடியவில்லை.. எங்கே வேலை முடிந்து வந்தால் வீட்டின் உள் புகுந்து கொள்கிறார்கள் வெளியே வருவதில்லை.. அந்த சின்ன பையன் அவன் தான் எதுவென்றாலும் வெளியில் வருவான்.. அவனிடம் சிநேகிதம் பிடித்தா திருமணம் பேச முடியும் என்று நினைத்து அவளின் அப்பாவோ அண்ணனோ அகப்படுவார்களா என்று பார்த்திருந்தான்.

ம்கூம்! எதுவுமே நடக்கவில்லை.. அவளின் அப்பா வேலை செய்யும் கேராஜ் ஓனர் தெரிந்தவர் தான்… அவரிடம் பேசி இவரிடம் பேச சொல்வோமா சரி வருமா… நானாக எப்படி போய் பேச.. யாரிடமும் எதற்காகவும் பேசியதில்லையே என்று யோசித்து இருந்தான்…

இப்படியாக திட்டங்கள் பல வகுத்துக் கொண்டிருக்க…

கடவுளாய் அவனுக்கு அவர்களோடு பழக வாய்ப்பு கொடுத்தாரோ இல்லை அவர்களின் கஷ்ட காலங்கள் ஆரம்பமாக அதில் உதவிக்கு சென்றானோ?

ஒரு நாள் மாலை ஏழு மணி அவன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஸ்டாக் பார்த்துக் கொண்டிருக்க… அவனோடு சுற்றும் பையன் ஒருவன் கடைக்கு பொருட்களை வாங்க வந்தவன்… “ண்ணா, அன்னைக்கு நம்ம கிட்ட பாட்டு போடக் கூடாதுன்னு பிரச்சனை பண்ணினாங்க தானே. அவங்க வீட்ல எல்லோரையும் நம்ம ஏட்டு அண்ணன் வந்து போலிஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போறார்” என்றான்.

“என்ன?” என்று பதறி விட்டான் மருது..

“என்னண்ணா?” என்று அவனின் பதற்றம் அந்த பையனுக்கும் தொற்றிக் கொள்ள…

“அதையேண்டா இவ்வளவு மெதுவா சொல்ற” என்று அவனை கடிந்து கொண்டு அவனின் பைக்கை நோக்கி விரைந்தான்… அந்த பையனும் என்னவோ என்று அவனின் பின்னே தொற்றிக் கொள்ள..

ஐந்தே நிமிடத்தில் ஸ்டேஷனை அடைந்து விட்டனர்…

உள்ளே சென்று பார்க்க… அவளின் அம்மா, ஜெயந்தி, அப்பா, கமலன் நால்வரும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தனர்… அவளின் அண்ணன் விமலன் இல்லை…

அவர்கள் யாரும் இவனை கவனித்ததாக தெரியவில்லை… 

அவர்களை ஒரு பார்வை பார்தவறாறு அவனுக்கு தெரிந்த தலைமை காவலரிடம் “ண்ணா, எப்படி இருக்கீங்க?” என்றபடி முன் சென்று அமர்ந்தான்.

“என்ன மருது இந்த பக்கம்” என்றார் அவருமே ….

“என்னண்ணா பிரச்சனை? அவங்க ஏன் உட்கார்ந்து இருக்காங்க…” என்று கேட்க…

“தெரிஞ்சவங்களா” என்றார்.

“ம்ம் நம்ம ஏரியா தானே..” என்றான்.

“அந்த வீட்ல இருக்குற பையனை நேத்து இருந்து காணலை… நம்ம ….. டீ வீ ல வேலை செய்யறான்.. நேத்து ஏதோ பணத்தை கட்ட சொல்லி பேங்க் அனுப்பியிருப்பாங்க போல.. என்ன நடந்ததுன்னு தெரியலை பையனும் பணமும் காணலை.. என்னன்னு விசாரிக்க சொல்லி உத்தரவு அதான் இப்படி”

“சரி அவனை தானே விசாரிக்கணும், இவங்களை ஏன்?”

“அவன் தான் காணோமே பா!”

“எவ்வளவு பணம்?”

“ஒன்பது லட்சம்”

“அம்மாடி! அவ்வளவு பணத்தை குடுக்கறவங்க கூட வேற ஆள் இல்லாம அவனை தனியா பணத்தை எடுத்துட்டு ஓடுன்னு அனுப்பியிருப்பாங்களா என்ன?” என்று அவன் கேட்க…

என்னவோ அவன் பெரிய ஜோக் சொல்லி விட்டது போல அவர் சத்தம் போட்டு சிரித்தார்.

அப்போது தான் அவர்கள் நால்வரின் கவனமும் இவர்களை நோக்கி திரும்பியது…

ஜெயந்தி இவனை பார்த்ததும் வேகமாக அருகில் வந்தவள்.. “சர், நிஜம்மா அண்ணா எங்கேன்னு எங்களுக்கு தெரியாது. அவன் அப்படி எல்லாம் பண்ணவே மாட்டான்” என்று பேசப் பேச அதுவரை தைரியமாய் இருப்பது போல காமித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர்.

கண்களில் நீரை பார்த்ததும் மனதை ஏதோ செய்தது… 

அவள் வந்ததை பார்த்ததும் அவளின் அப்பா வேறு அருகில் வந்து நின்று கொண்டார்… அவருக்கு மகள் பேசப் பேச இவனை எப்படி தெரியும் என்ற யோசனை தான்.. 

“அழாதீங்க, என்னனு பார்க்கலாம்” என்று அவளுக்கு சமாதானம் சொன்னவன்,

“ண்ணா… பொண்ணுங்களை வீட்டுக்கு அனுப்பிடலாம்… அதான் ரெண்டு ஆம்பளைங்க இருக்காங்களே என்னன்னு கேளுங்க.. சின்ன புள்ள இதை போய் உட்கார வெச்சிருகீங்க” என்றான்.

“நான் என்ன தம்பி பண்றது? குடும்பம் மொத்தமும் இங்க கூட்டிட்டு வரணும் சர்கிள் சொல்லிடாரு.. அவருக்கு மட்டும் என்ன? மேலிடத்து பிரஷர், அசிஸ்டன்ட் கமிஷனர் சொல்றார் போல..”

“பையன் வந்துட்டான்னா பிரச்சனையில்லை”  

“ண்ணா, பொண்ணுங்களை அனுப்பிடுங்க பேசிக்கலாம்” என்றான் மீண்டும்.

“ஏன் மருது?”  

“என் வீட்டு பொண்ணுங்க மாதிரிண்ணா” என்றான்.

அவனையே பார்த்தவரை, அவனும் சளைக்காமல் பார்த்தான். பலவருடங்களாக தெரியும் அவனை.. இப்படி எல்லாம் யாருக்கும் சொன்னது கிடையாது.   

“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க” என்று அவர் சொல்ல..

“போகவா” என்பது போல ஜெயந்தி அவனை பார்க்க..

“அம்மாவை கூட்டிகிட்டு கிளம்பு முதல்ல” என்றான்.

ஜெயந்தி எதோ பேச வர… “முதல்ல இங்கிருந்து கிளம்பு” என்றான் சட்டென்று மாறிய கடுமையான குரலில்..  

கோபாலன் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தார்.. அவர் அவரின் ஓனருக்கு அழைத்து ஒரு பிரச்சனை என்று சொல்லியிருக்க.. அவர் அப்போதுதான் அங்கே வந்தார்..

அதற்குள் பெண்கள் இருவரும் கிளம்பியிருந்தார்…

“சார், சார் பையன் எங்கேன்னு தெரியலை சார். அவன் அப்படி எதுவும் பண்ணியிருக்க மாட்டான் சார்” என்று பதறி அவர் சொல்ல…  

“ரெண்டு வருஷமா என் கிட்ட வேலை பார்க்கறீங்க, நல்ல மனுஷன்னு தான் நீங்க கூப்பிட்டதும் வந்தேன். எனக்கு இதெல்லாம் ஒன்னும் தெரியாது. எனக்கு இங்க யாரையும் தெரியாது. வேணா வக்கீல் ஏற்பாடு செஞ்சு தர்றேன்” என்று அவர் கோபாலனிடம் பேசிக் கொண்டே பார்வையை சுழல விட அங்கே மருது அமர்ந்திருந்தது தெரிந்தது..

“மருது எப்படி இருக்க?” என்று கேட்ட படி அவர் அருகில் போக..

“நல்லா இருக்கேண்ணா” என்று அவன் சொல்ல..

“நம்மக்கிட்ட வேலை பார்க்கறவர், நல்ல குடும்பம், பையன் காணோம், பணம் வேற காணோம்” என்று சொல்ல..

“அதுக்கு தாண்ணா வந்தேன், நம்ம ஏரியான்னு வந்தேன்” என்றான் கூடவே அவர் கேட்காத தகவளாக.

“யோவ் கோபால், மருது பார்த்துக்கறேன்னு சொல்றான். நீ என்னய்யா என்கிட்டே உதவி கேட்கற? பெரிய இடமே உதவி செய்யுது. அவன் பார்த்துக்குவான்” என்று தைரியம் கொடுத்து அவர் சென்று விட்டார்..

தலை போகிற பிரச்சனை தான். ஆனால் இவன் ஏன் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரின் மண்டைக்குள் ஓடியது…

அதற்குள் சர்கிள் இன்ஸ்பெக்டர் வந்திருக்க “சார்” என்று எழுந்து நின்றான் மரியாதையாக.

“அட மருது, என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே அவர் இருக்கையில் அமர்ந்தார்.

“நம்ம ஏரியா, கூட்டிட்டு வரச் சொல்லிட்டீங்க. என்னன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றான் பவ்யமாக.

“அந்த பணம் காணாம போன விஷயமா?” என்றான்.

“ம்ம்” என்று தலையாட்டினான்.

“கேட்டா சொல்ல மாட்டேங்கறாங்களே?”  

“தெரிஞ்சா தானே சொல்வாங்க சார்” என்றான்.

“யோவ் ஏட்டு, எங்கய்யா அந்த பொண்ணும் அவங்கம்மாவும்”

“வீட்டுக்கு அனுப்பிட்டேங்க சார்” என்று அவர் தலையை சொரிய..

“நீ என்னைய்யா என்கிட்டே கேட்காம இந்த வேலையை செய்யற? இப்போ ஐயா வர்றேன்னு சொல்லியிருக்கார்”  

“அவங்களுக்கு பதிலா தான் நான் இருக்கேன் சார்” என்றான்.

“பிரச்சனை பெருசு மருது, சேனல்ல இருந்து ரொம்ப ப்ரெஷர் போல”

“கேட்டா அவங்க ரெண்டு பேரும் ஊர்ல இல்லை சொல்லுங்க சார்”  

“அது இன்னும் பிரச்சனையாகும் மருது.. அப்போ பணத்தோட அம்மாவையும் தங்கையும் கூட்டிட்டு எஸ்கேப் ஆகிட்டான்னு சொல்லிடுவாங்க”

“அப்போ இப்படி சொல்லுங்க, போலிஸ் ஸ்டேஷன் வந்தவுடனே அந்தம்மா பயத்துல மயக்கம் போட்டுடுச்சு, பொண்ணும் அவங்களும் ஹாஸ்பிடல்லன்னு”  

எல்லாம் தூரமாய் இருந்ததினால் கோபாலனுக்கு தெரியவில்லை… ஆனாலும் இவன் ஏன் உதவி செய்கிறான் என்று பயந்து பார்த்திருந்தார்.                              

 “ஓய், என்ன மருது நீ ஐடியாவா எடுத்து விடற”

“நமக்கு ரொம்ப வேண்டியவங்க… பொண்ணுங்க இங்க வேண்டாம் பதிலுக்கு நான் உட்கார்ந்திருக்கேன்” என்றான் அசால்டாக.

“விளையாடாத மருது” என்று அவர் சிரித்தபடி சொல்ல…

“இல்லை சர், சீரியஸா சொல்றேன். ஒன்பது லட்சம் பணம் அவங்களை விட எனக்கு பெரிய விஷயம் கிடையாது” என்றான் தீவிரமான குரலில்..

தேவையென்றால் அதையும் என்னால் கொடுக்க முடியும் என்ற செய்தி இருக்க…

“அதெல்லாம் வேண்டாம், என்னன்னு பார்க்கலாம், சுமூகமா முடிஞ்சிட்டா எங்களை என்ன கவனிக்கணுமோ கவனிச்சிடு”  

“அதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம் சார்…” என்றான் புன்னகையுடன்..

கோபாலனுக்கு மகனின் கவலை எல்லாம் ஓடி விட்டது.. இவன் ஏன் நமக்கு வந்து உதவுகிறான்… பெண்ணை பெற்றவராய் நாளும் நாளும் எட்டு என்று கணக்கு போட்டார்.. 

அவரின் பெண்ணுக்காய் அவன் எதுவும் செய்வான்!

 

Advertisement