Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஏழு :
“என்னை ரூம்கு மாத்தின பிறகு போங்க” என்று சொல்லியவள், “எதுக்கு அழுதீங்க” என்று கேட்டாள்.
“எங்க அழுதேன், சும்மா சும்மா சொல்லக் கூடாது. அப்புறம் மருது இமேஜ் டேமேஜ் ஆகிடும்” என்று சொல்லும் போதே கலைசெல்வி வர,
இப்படியாக மருதுவிற்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமே!
ஆனாலும் கண்களில் நீரோடு இருந்த மருதுவின் முகம் வெகுவாக ஜெயந்தியை அசைத்து இருக்க, அவனை மட்டுமே ஜெயந்தியின் பார்வை தொடர்ந்தது.
அவளை ரூமிற்கு மாற்றியதும் மருதுவை அருகில் வர தலையசைத்தவள் அவன் வந்ததும், “மா, கொஞ்சம் நேரம் வெளில இருங்க” என்று அனுப்பி,
“எதுக்கு அழுதீங்க?” என்று மீண்டும் கேட்க,
“ஒன்னுமில்லை, குழந்தை பிறந்த சந்தோசம்” என்றவனின் பதிலில் திருப்தி அடையாமல்,  
அவனின் கை பிடித்து தன் தலையில் வைத்துக் கொண்டவள், “எதுவும் என்கிட்டே மறைக்கலையே, சொல்லுங்க” என்றாள் ஆணையாக.
“ப்ச், விட மாட்டியா” என்று சலித்தவன், “எங்கம்மா மாதிரி உனக்கும் எதுவும் ஆகிடுமோன்னு ரொம்ப பயந்துட்டேன்” என்று சொல்ல,
“என்ன?” என்று ஆச்சர்யமாய் கண் விரித்தவள், “இதுக்கா அழுதீங்க? சரியான லூசு நீங்க, என்னை பயப்படுத்திட்டீங்க, அவ்வளவு சீக்கிரம் எல்லாம் உங்களை விட்டு போகமாட்டேன்” என்று அவள் சிரிக்க அவளின் கண்களிலும் கண்ணீர்.
மருதுவின் முகத்தில் விரிந்த சிரிப்பு, பின்னே இந்த மாதமாக அவனின் பயம் அவனுக்கு தானே தெரியும்.
“நீ என்ன போகமாட்டேன்னு சொல்றது, நான் இந்த உலகத்துல இருக்குற வரை உன்னை போக விடமாட்டேன், போடி” என்று மருது பேச,  
அவனின் கைகளை பிடித்துக் கொண்டு “போடா மருது” என்று செல்லம் கொஞ்சியவள், அவனின் கைகளை எடுத்து உதட்டின் மீது வைத்துக் கொள்ள, ஒரு நெகிழ்ச்சியான தருணம்.
மருது ஒரு வாடா புன்னகையுடன் அவளை பார்த்திருந்தான்.    
“மா” என்று குரல் கொடுக்க பிறகே எல்லோரும் வந்தனர்.
விஷால் “நான் வரட்டுமாண்ணா” என்று கேட்டே வந்தான், அவர்கள் குடும்பத்து ஆட்கள், அவன் அன்னியன் தானே!
“வாடா” என்று மருது சொன்ன பிறகே வந்தவன்,
“அண்ணி, அண்ணன் என்னை அடிச்சிட்டார்” என்று ஜெயந்தியை பார்த்ததும் புகார் வாசித்தான்.
விஷாலின் கன்னத்தில் அதற்கான தடங்கள் பளிச்சென்று தெரிய, “எதுக்கு” என்று அவள் அதிர்ந்து கேட்க,
“டாக்டர் கிட்டயும் சண்டை போட்டார்” என்று பிட்டு பிட்டாய் சொல்ல,
ஜெயந்திக்கு டென்ஷன் ஏறியது “ஒழுங்கா சொல்லுங்க” என்று விஷாலை கடிந்தாள்.
“உங்களுக்கு குழந்தை பிறக்க நீங்க வலில துடிக்கவும், ஹாஸ்பிடலை ஒரு வழி பண்ணிட்டார்” என்று புன்னகையோடு சொல்ல,
ஜெயந்தியின் முகத்தில் தாய்மையோடு கூடிய வெட்கம், 
ஆனால் யாரோ யாரை பற்றியோ பேசுவது போல எதையும் மருது காதில் வாங்காமல்  தொட்டிலின் அருகில் நின்று மகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜெயந்தி மருதாச்சலமூர்த்தியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள், பல பல பரிமாணங்களை காட்டும் இந்த மருது என்ற மனிதனை மிக மிக பிடித்திருந்தது.
“ம்ம் அப்புறம்” என்று ஜெயந்தி கதை கேட்பவள் போல ராகம் இழுக்க,
“மேம், நான் என்ன கதையா சொல்றேன்” என்று விஷால் கடுப்பாக,
“இல்லையா பின்னே” என்று சொன்ன ஜெயந்தியின் முகத்தில் விரிந்த புன்னகை, பார்வை மருதுவை தான் சீண்டியது.
அதை உணர்ந்தாலும் ம்கூம் மருது திரும்பவேயில்லை.
இவ்வளவு நேரமாய் மனைவியின் கவலையில் இருந்தவனை இப்போது அவனின் குட்டி தேவதை ஆகர்ஷித்து கொண்டிருந்தாள்.
மருதுவின் முகம் அவ்வளவு கனிந்து இருக்க விமலனும் கமலனும் அவனை தான் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோபாலனை காணவில்லை.
“எங்கேடா அப்பா?” என்று கலைச்செல்வி கேட்க, அப்போது சரியாய் உள்ளே நுழைந்தார் கோபாலன்.
நேரே மருதுவிடம் சென்றவர் “நீங்க என்ன சாப்பிடுவீங்கன்னு தெரியலை, காஃபி, டீ, ஜூஸ் மூணும் இருக்கு. எது வேணுமோ எடுத்துக்கோங்க. இன்னும் நீங்க எதுவும் குடிக்கக் கூட இல்லை” 
அந்த ஜூஸை எடுத்துக் கொண்டான் அவனுக்கு மிக தேவையாய் இருந்தது, திரும்பி ஜெயந்தியை பார்த்தான். பார்வை சொன்னது “பாருடி உங்க அப்பாவை” என்று.  
“பார்றா புள்ள பெத்து நான் படுத்துக் கிடந்தா? உங்களுக்கு கவனிப்பு!” என்ற பார்வையை ஜெயந்தி கொடுக்க,
அவளின் பார்வையை உணர்ந்தவன் “அக்கா அவளுக்கு என்ன குடுக்கணும்னு கேட்டு குடுங்க, இல்லைன்னா எனக்கு வயிறு வலிக்கும்” என்று சிரிப்போடு சொன்ன மருதுவை அத்தனை பெரும் ஆச்சரியமாய் பார்த்தனர்
இத்தனை இலகுவான மருதுவை அவர்கள் யாருமே பார்த்ததில்லை!
“தோடா” என்று முறைத்தவள் நெஞ்சம் நிரம்பிய சந்தோஷத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.   
அடித்து விரட்டிய செய்கைகள் எல்லாம் மனதில் ஏதோ ஒரு இடத்தினில் நெருஞ்சி முள்ளாய் இருந்திருக்க, எல்லாம் எங்கோ போனது.
மருது அவளின் முகத்தை தான் பார்த்திருந்தான்.
“என் உயிராடுற என்னடி மாயாவி நீ”
என்ற சிட் ஸ்ரீராமின் குரல் அவனுள் ஒலித்தது.  
ஆறு வருடங்கள் கழித்து
“டேய் என்னங்கடா இப்படி பண்றீங்க?” என்று ஜெயந்தி சலிக்க
“ஓய் லகான், யாரையடி டா போடற” என்றான் திமிராய் மருதாச்சலமூர்த்தி. 
“ஏன் உங்களை தான் இப்போ என்ன?” என்று ஜெயந்தி எகிற,
“போடு, போடு, டா போடு, இல்லை என் தலை மேல கூட எதையாவது போடு” என்று மருது தணிந்து சொல்ல, 
“இதுவாப்பா” என்று அவனின் தலையில் மண்ணை போட்டான் அவனின் புதல்வன் மூன்று வயது ஆதித்யருத்ரமூர்த்தி.
“டேய் என்னடா பண்ற?” என்று ஜெயந்தி பதற,
“மா என் வீடு எப்படி இருக்கு” என்றாள் அவர்களின் மகள் பிரகதீஸ்வரி இது எதையும் கவனியாமல்.
ஆம்! அவர்கள் இருந்தது, ஒரு ப்ரைவேட் பீச் ரிசார்ட்டில், அது ஒரு பொன் மாலை பொழுது. 
மருதுவும் ஆதித்யனும் அப்படி ஒரு ஆட்டம் கடல் நீரில்.  
“டேய் அப்பா, தலையில மண்ணு போடக் கூடாது” என்று ஜெயந்தி கடிய
“சரி வா, உன் தலையில போடறேன்” 
“டேய், ஸ்டுபிட் ஃபெல்லோஸ் போங்கடா” என்று அவள் அமர்ந்து கொள்ள,
“அம்மா டென்ஷன் ஆகிட்டாங்க, விளையாட வேண்டாம்” என்று மகனுக்கு சொல்ல,
“சரி” என்று இருவரும் அமைதியாய் அமர்ந்து கொண்டனர்.
பின்னே தண்ணீரை வாரி இறைத்து விளையாடினால் பரவாயில்லை, இவர்கள் ஈர மணலில் உருண்டு புரள, இப்போது மணலை தலையில்  இறைக்க என்ன செய்வாள் அவளும்.
சில நொடி கூட அமர முடியாதவன் அக்காவுடன் மணல்வீடு கட்ட சென்று விட, மருது எழுந்தவன் ஜெயந்தியின் பக்கம் வந்து அமர்ந்தான்.
“தூர போங்க” என்று எரிந்து விழுந்தாள்.
“எதுக்கு கோபம்?”
“பின்ன மண்ணை தூக்கி தலையில போடறது எல்லாம் விளையாட்டா? இனி இப்படி பார்த்தேன் அடி அவனுக்கு இல்லை, உங்களுக்கு தான். சில விஷயம் செய்யக் கூடாதுன்னா செய்யக் கூடாது” என்று பேச ஆரம்பிக்க,
“சின்ன குழந்தைடி அவன்”
“இருந்துட்டு போறான், அதுக்குன்னு உங்க தலையில மண்ணை போடுவானா?” என்று மகனை அடிக்க எழுந்தாள். ஆம், மருதுவிற்கு சின்னதாய் எதுவென்றாலும் இப்படி தான் ஜெயந்தி டென்ஷன் ஆகிவிடுவாள். 
“விடு, விடு, இனி இப்படி பண்ண மாட்டான். ஆதி” என்று அழைத்தவன், மகன் அருகில் வரவும் “மண்ணு தலையில போட்டு விளையாடக் கூடாது, தப்பு” என்று பாடம் படிக்க,
“சரிப்பா” என்று மகனும் சொல்ல,
ஆசையாய் அவனை அணைத்து மணலில் சரிய, மகனும் அப்பாவின் மேல் படுத்துக் கொண்டான்.
“பிரகதி, இட்ஸ் டைம், போகலாம் இருட்ட ஆரம்பிச்சிடுச்சு” 
“மா, டூ மின்ஸ் முடிச்சிடுவேன்” என்று அவள் சொல்ல, பின் மகளோடு சென்று நின்று கொண்டாள்.
வீட்டை அவ்வளவு கலைநயத்தோடு வடிவமைத்து இருக்க, இதற்கு ஆறு வயது, முதல் வகுப்பு தான் படிக்கின்றாள்.
“ப்ரில்லியன்ட் பேபி” என்று மகளை புகழ்ந்தவள், வித விதமாய் படமெடுத்து, பின் அப்பாவையும் மகனையும் அழைக்க, இருவரும் ஊதக் காற்றில் உறங்கி இருந்தனர்.
வேகமாய் அருகில் வந்தவள் உடை ஈரமாயிருக்கிறதா என்று அப்பாவிற்கும் மகனிற்கும் தொட்டு பார்க்க, இல்லை, கடலில் இருந்து தள்ளி வந்து போட்ட ஆட்டத்தில் எல்லாம் உலர்ந்து விட்டது.
பின் உறங்கட்டும் என்று விட்டு விட்டு அருகில் அமர்ந்து மகளையும் அருகமர்த்திக் கொண்டாள்.
பார்வை நிமிடத்திற்கு ஒரு முறை மருதுவை தொட்டு மீண்டது. ஓடிக் கொண்டே இருக்கிறான். கடுமையான உழைப்பாளி! ஆம், மருது ஸ்டோர்ஸ் இப்போது தமிழ்நாட்டின் நான்கு பெரும் நகரங்களில் இருக்க, சென்னையில் மருது பார்த்துக் கொள்ள, மற்ற நகரங்களில் விஷால் ஒன்றும், விமலன் ஒன்றும், கமலன் ஒன்றும், பார்த்துக் கொள்ள, எல்லா கணக்கு வழக்கு மேற்பார்வையும் ஜெயந்தி. 
எஸ்! ஜெயந்தி தான் மருது ஸ்டோர்ஸின் சி ஏ ஓ, அதாகப்பட்டது சீஃப் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர்.  அவளின் படிப்பான ஆட்டோமொபைல் எஞ்சினியரின் இப்போதைக்கு கார் ஓட்ட, மற்றும் அவளின் காரை அவளே சரி பார்க்க இப்படி மட்டுமே பயன் பட்டது.
மருது கூட “கார் ஷோ ரூம் ஆரம்பிப்போம், நீ அதனை பார்த்துக் கொள்” என்று சொல்ல, “வேண்டாம்” என்று விட்டாள். வேலை பார்ப்பது பணம் சம்பாதிக்க, அது இங்கேயே ஏகமாய் வர, இதனையே இன்னும் இன்னும் ஸ்திரப்படுத்த முடிவெடுத்து விட்டு விட்டாள்.
இப்போதைக்கு தமிழகத்தின் பெரு நகரங்கள் யாவும் இலக்கு!
இப்படியாக மருது ஸ்டோர்ஸ் வளர்ந்தது! ஜெயந்தியை பார்த்த பிறகு ஜெயந்திக்காக தான் வாழ்வு நிலையை உயர்ந்திக் கொள்ள மருதாச்சலமூர்த்தி எடுத்த முயற்சி, இப்போது விஸ்வரூப வெற்றியாய் அவனின் வாழ்வில்.    
கலைச்செல்வியும் கோபாலனும் இவர்களுக்கு பக்கமாய் வீடு பார்த்து வைத்து விட்டான். பின்னே மக்களை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டுமே!  
மருதாச்சலமூர்த்தி எனும் மனிதனின் கடந்த காலம் இருவகையாய் பிரிக்கப்பட்டு கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்கு பின் என்று வகைப் படுத்தப் பட்டு இருக்க,
திருமணதிற்கு அவனின் முந்தையை வாழ்க்கை அவனுக்கு நினைவிலேயே இல்லை. அவனின் கடல் கடந்த வாணிபம் அவனின் முன் ஜென்ம ஞாபகமோ என்று அவனிற்கே தோன்றும்.  திருமணதிற்கு பிறகு நடந்த கூடல் ஊடல் என்று அத்தனையும் ஞாபகம் இருக்க,
இப்போது அவனின் நினைவில் அவனின் மனைவி மக்கள் மட்டுமே!
“மா, அப்பாவை எழுப்புங்க” என்ற மகளிடம்.
“கொஞ்சம் நேரம் தூங்கட்டும், நாம அப்புறம் எழுப்பலாம்” என்று சொல்லி மகளோடு அமர்ந்து கதை பேசத் துவங்கினாள் ஜெயந்தி. 
மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் உறங்கும் போதும் வாடா புன்னகை அவனின் முகத்தில்!
எத்தனையோ மனக் கசப்புகள் இருவருக்குள்ளும் வந்த போதும் எல்லாம் போயே போச்சு தான் இப்போது!
பிரகதி பேசிக் கொண்டிருக்க, மருதாச்சலமூர்த்தியை பார்த்துக் கொண்டிருந்த ஜெயந்தியின் கவனம் மகளின் பேச்சில் இருந்து தப்பி கணவன் மேல் பாய்ந்தது. கணவன் மேல் படுத்துக் கொண்டிருந்த மகனை எழுப்பி அவள் சென்று படுத்துக் கொள்ள பேராவல் எழுந்தது. 
மருதுவை காதலாய் பார்த்திருந்தாள்.
உன்னை காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே! 
( நிறைவுற்றது )

Advertisement