Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஆறு:
“இல்லை, அவளை பயப்படுத்தக் கூடாது” என்று முடிவெடுத்தவன், “எதுக்குடி அப்படி சொன்ன, உங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு” என்று முறைப்பாய் கேட்டான்.  
“அச்சோ, தெரியாம சொல்லிட்டேன்” என்று அவள் தளர்வாய் பேச,
“இனிமே சொல்லக் கூடாது” என்று கோபத்தை காட்டி பாலை குடித்தவன்,
“இன்னும் இருபது நாள் தான் சொல்லியிருக்காங்க, அங்க இங்க நடந்திட்டே இருக்காத, எதுன்னாலும் என்னை கேளு. நானும் இந்த ஐ டி கம்பனிக்காரன் மாதிரி வீட்ல இருந்து வேலை செய்ய போறேன்” என்றான்.  
“அப்புறம் நம்ம சண்டை தூள் பறக்கும்”
“பறக்கட்டும், அப்போவும் உன்னை தனியா விட போறதில்லை” என்று சொல்லிவிட, அப்போதும் மருதுவின் மனவுளைச்சல் புரியவில்லை.
“அம்மா” என்ற வார்த்தையை சட்டை கூட செய்யாமல் இருந்தவனை, குழந்தையை பற்றி பேசிப் பேசி அவனின் அம்மாவை நினைக்க வைத்திருந்தாள்.
மருதாச்சலமூர்த்திக்கு, தன் அம்மா போல ஜெயந்திக்கும் ஆகிவிடுமோ என்று பயம் வர காரணமாகி விட்டாள். மருது தன் அதீத பயத்தை ஜெயந்திக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
என்னவோ பிரச்சனை என்பது வரை ஜெயந்திக்கு புரிந்தது. தன் பிரசவம் என்றும் அனுமானித்து விட்டாள். ஆனால் நல்ல படியாய் குழந்தை பிறக்க வேண்டும் என்ற கவலை என்று நினைத்துக் கொண்டாள்.
அவளுக்கு ஏதேனும் ஆகிடுமோ அவனின் அம்மா மாதிரி என்று கவலை கொள்கிறான் என்று நினைக்கவே இல்லை.
மருது எந்நேரமும் ஜெயந்தியின் அருகில் இருந்தான். அவள் முகம் பார்த்து நடந்தான். ஜெயந்தி சீண்டினாலும் சண்டை போடவேயில்லை.
ஜெயந்தி வீட்டில் இருந்து கலைச்செல்வியும் வந்து விடுவார் அவளை பார்க்க, அவளுக்கு வேண்டியதை சமைத்துக் கொடுக்கும் பொறுப்பு அவரதே.
கால் தரையில் பாவ விடாமல் கண்களில் வைத்து தாங்கினார்கள் ஜெயந்தியை. இதற்கு நல்ல ஆரோக்யமான பெண். வேறு உடல் உபாதைகள் கூட இல்லை.    
கலைச்செல்வி வீட்டில் இருக்கும் நேரம் ஸ்டோர்ஸ் சென்று வருவான்.
மருதுவை பற்றி தெரிந்தவர்களாக வீட்டிற்கு பிரசவத்திற்கு அனுப்புங்கள் என்றோ, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றோ ஜெயந்தியின் பிறந்த வீட்டினர் கேட்கவேயில்லை.
இந்த கூத்தெல்லாம் ஒரு வாரமே, இன்னும் பத்து நாட்கள் பிரசவத்திற்கு இருந்த போதும் முன்னெச்சரிக்கையாக ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டான் மருது.
“இப்போது எதற்கு வேண்டாம், வலி வந்த பிறகு சேர்ந்து கொள்ளலாம்”  என்று ஜெயந்தி பிடிவாதம் பிடித்த போதும், அதையும் விட பிடிவாதம் பிடித்து சேர்த்து விட்டான்.
“உங்க அலப்பறை பெரிய அலப்பறையா இருக்கு? உங்க குழந்தை வர்றதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா?” என்று ஜெயந்தி மருதுவிடம் குறை பட்டாள். ஆனால் அது அவளிற்காக என்று புரியவில்லை.
எதுவாகினும் ஜெயந்தி சந்தோஷமாக, அமைதியாக, நிம்மதியாக இருந்தாள்.
மருத்துவமனையிலும் மருது தான் துணை. இரண்டு வி ஐ பி ரூம் எடுத்துக் கொண்டு மருது ஜெயந்தியுடன் இருக்க, இன்னொரு அறையில் கலைச்செல்வியும் கமலனும். இரவில் அவர்கள் தங்கிக் கொள்ள.
பார்ப்பவர்களுக்கு “இவன் ஓவரா தான் பண்றான்யா” என்று தோன்றும் செய்கைகள் தான். ஆனால் அவனின் பயம் அவனிற்கு.
ஜெயந்தி பேசும் போது கூட “குழந்தை நல்ல படியா பிறக்கும் பயம் வேண்டாம்” என்று தான் சொல்வாள். இருக்கும் மனவுளைச்சலிற்கு பேசாமல் குழந்தையை தத்தெடுத்து இருக்கலாமே என்ற யோசனை கூட வந்தது.
ஒரு வழியாக ஐந்தே நாட்களில் ஜெயந்திக்கு வலி வர, டாக்டரும் அவனும் போட்டுக் கொண்ட சண்டையை மருத்துவமனையே வேடிக்கை பார்த்தது.
ஆம்! கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அவள் வலியோடு பிரசவ அறையில் இருப்பதை பார்த்தவன், “டாக்டர் ஆபரேஷன் செஞ்சு குழந்தையை எடுத்துடுங்க” என்றான்.
ஜெயந்தியின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி என்று அனைவரும் “என்ன இவன் இப்படி பேசுகிறான்?” என்று பார்க்க, விஷாலும் இருந்தான், அவனும் பதறி தான் பார்த்தான். 
“ஆபரேஷன் எல்லாம் தேவையில்லை, அவங்களுக்கு நல்ல படியா குழந்தை பிறக்கும்” என்றார் அந்த புகழ் பெற்ற பெண் மருத்துவர், சற்று வயதானவரும் கூட.
“வேண்டாம், ஏற்கனவே ரொம்ப நேரமா வலில இருக்கிறா. ஏதாவது ஆகிடப் போகுது, நான் சொல்றதை செய்ங்க” என்று மருது அதிகாரமாய் பேசினான். 
நேர்மையானவர்களுக்கு இயற்கையாக வரும் கோபம் அந்த பெண் மருத்துவருக்கும் வர, “என்ன ஆகும்? வலி இல்லாமையா குழந்தை பெத்துக்க முடியும். அவங்களுக்கு அது வயிறுல பிரசவம்னா, எங்களுக்கு அது மனசுல பிரசவம். அது ஒரு உயிர், நாங்க விட்டுடுவோமா அப்படி” என்று அவரும் எகிறி பேசினார்.
இது பிரசவ அறையின் உள் இருந்த ஜெயந்திக்கு எதுவும் தெரியவில்லை.
“அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, நீங்க உயிரோட இந்த ஹாஸ்பிடலை விட்டு போக மாட்டீங்க” என்று சொல்ல,
“அப்படி ஒன்னும் எனக்கு பிரசவம் பார்க்கணும்னு இல்லை. நீங்க யாரையோ வெச்சு பார்த்துக்கோங்க” என்று அவரும் சொல்ல,
அதற்குள் மருத்துவமனையின் எம் டீ வந்திருந்தார்.
“டாக்டர் இவர் ரொம்ப பேசறார், ஐ கான்ட் அட்டென்ட் திஸ் பேஷன்ட்” என்று அவரிடம் சொல்ல,
“எப்படி நீங்க பார்க்காம வெளில போயிடறீங்கன்னு நான் பார்க்கறேன்” வேஷ்டியை மடித்துக் கட்ட,
“திஸ் இஸ் அட்ராஷியஸ்” என்று அந்த பெண் மருத்துவர் முகம் சுளிக்க, 
“அண்ணா என்ன இது பொறுமையா இருங்க” என்று விஷால் ஓடி அருகில் வர,
“நீ தூரப் போடா” என மருது பேச,
“என்ன இது ரௌடியிசம், ஐ வில் கால் த போலிஸ்” என்று மருத்துவர் கத்த, வந்த கோபத்தில் விஷாலை ஒரு அறை விட்டான்.
விஷாலுக்கு கண்கள் கலங்கி விட்டது, விட்ட அறையின் தாக்கம் அப்படி.
“கூப்பிட சொல்றா, யாரை வேணா கூப்பிட சொல்றா, இந்தம்மா சும்மா பூச்சாண்டி காட்டுது. உள்ள போய் ஜெயந்தியை பார்க்காம என்கிட்டே பேசிட்டு இருக்கு. ஏதாவது ஏடாகூடமா ஆச்சு அந்தம்மா மட்டுமில்லை இந்த ஆசுபத்திரியே இருக்காதுன்னு சொல்லுடா” என்று கத்தினான்.  
விஷால் அமைதியாய் நிற்க, அதுவரை யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் தடுமாற்றமாய் நின்றிருந்த எம் டீ, “மருது ப்ளீஸ் கண்ட்ரோல், அவங்க பிரசவம் பார்ப்பாங்க, உங்க மனைவிக்கு ஒன்னும் ஆகாது. நாங்க இருக்கோம் நம்புங்க” என்று வெகுவாய் தணிவாய் பேசினார்.
“வாங்க மேம்” என்று அந்த மருத்துவரை உள்ளே அழைத்து சென்றவர், அவரையும் பிடித்தார், “அவர் பண்றது ரௌடியிசம் தான். அவருக்கு என்னவோ ப்ராப்லமோ பண்றார். நான் பார்த்துக்கறேன் நீங்க போங்க”
“என்னை கம்பல் பண்ணாதீங்க, அப்புறம் நான் வரமாட்டேன்”
“பேஷன்ட் வந்தா தான் நமக்கு வேலை, இப்போ இந்த பேஷன்ட் நீங்க பார்க்கலை, நாளைக்கு என் ஹாஸ்பிடல்க்கு எந்த பேஷன்ட்டும் வராம பண்ணிடுவார் அவர்”
“போங்க மேம், போங்க. முதல்ல இந்த டெலிவரி நல்ல படியா முடிங்க அப்புறம் பேசிக்கலாம்” என்று அனுப்பினார்.
வெளியில் வந்து பார்த்தால் மருது நின்ற இடத்தில் அப்படியே நின்றான்.
“ஒன்னும் ஆகாது, நாங்க இருக்கோம். நாங்க பார்த்துக்கறோம்” என்றார். விளம்பர பாணியில் ஆனால் அவனின் முகம் தெளியவேயில்லை.
“என்ன பயம் மருது? என்ன பிரச்சனை?” 
“எங்கம்மா இப்படி தான் பிரசவத்துல இறந்துட்டாங்க. நான் எங்கம்மா முகம் கூட பார்த்ததில்லை, பயமா இருக்கு” என்று அவன் மெல்லிய குரலில் பேசினாலும் எல்லோருக்கும் கேட்டது.
அவனின் தோளை தட்டி கொடுத்தவர் “நிச்சயம் அப்படி ஆகாது, அவங்க ஆரோக்யமா இருக்காங்க, நல்ல படியா குழந்தை பெருவாங்க, நம்புங்க” என்று தட்டி கொடுக்க, அமைதியாக வேம்புலியாம்மனை வேண்டியபடி அமர்ந்து விட்டான்.
மருதுவின் அருகில் செல்ல கூட யாருக்கு தைரியம் இல்லை.
விமலன் தான் விஷாலின் கையை பிடித்துக் கொண்டான் சமாதானமாய். இவருக்கு என்னை அடிப்பதே வேலையாய் போய் விட்டது என்ற கோபம் வந்தது கூட விஷாலிற்கு போய் விட்டது.
“அந்தக் காலம் இந்தக் காலம்னு இல்லை, எந்த காலம்னாலும் பொண்ணுங்களுக்கு பிரசவம் கஷ்டம் தான், ஆனா ஜெயந்திக்கு ஒன்னும் ஆகாது” எப்போதும் போல அசட்டு தைரியத்தில் கோபாலன் சொல்ல, அந்த நேரத்தில் என்னவோ அந்த வார்த்தைகள் தைரியத்தை கொடுக்க எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் நடந்து கொண்டே இருந்தான். எல்லோரும் “உட்காருங்கள்” என்று சொல்லியும் நடந்து கொண்டே இருந்தான். பதட்டம் பதட்டம் உச்சபட்ச பதட்டம்.
அவ்வப்போது எம் டீ யே வந்து ஜெயந்தியின் நலத்தை சொன்னார். 
ஒரு வழியாக அதன் பிறகு கிட்ட தட்ட மூன்று மணி நேரம் கழித்து ஜெயந்தி பிரசவித்து விட்டாள், ஒரு பெண் மகவை!
“பொண்ணு பொறந்திருக்கு” என்று சிஸ்டர் வந்து சொல்லவும், “ஜெயந்தி எப்படி இருக்கா?” என்றான் உடனே.
“நல்லா இருக்காங்க, கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க, அவ்வளவு தான். டாக்டர் அம்மா உங்க கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க” என்றும் சொல்லி சென்றார்.
அரை மணிநேரம் கழித்து குழந்தையை வெளியே கொண்டு வந்த அந்த டாக்டர் “யார் வாங்கறீங்க?” என்றார் முத்தை இறுக்கமாய் வைத்து,
அப்போது சரியாய் எம் டீ வந்து விட, “மருது கிட்ட குடுங்க” என்றவர், “வாங்கிக்கங்க” என்றார்.
கையில் வாங்கும் போதும் “ஜெயந்திக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சா?” என்றான்.
கேட்டுக் கொண்டே தான் மகளின் பூ முகத்தை பார்த்தான்.
“வாங்க நான் கூட்டிட்டு போறேன்” என்று அவர் மருதுவையும் குழந்தையயும் உள்ளே கூட்டிச் செல்ல,
அப்போது தான் பிரசவ அறையில் இருந்து அவளை ஸ்ட்ரெச்சரில் வெளியே தள்ளிக் கொண்டு வர, மயக்க நிலை தான் ஜெயந்திக்கு.
அங்கே இருந்த அறையில் மயக்கம் தெளியும் வரை இருக்கட்டும் என்று விட்டனர். ட்ரிப்ஸ் ஒன்றும் போட்டு விட்டனர். அருகில் சென்றவன் வேகமாய் மனைவியை ஆராய்ந்தான்.
“ஒரு பிரச்சனையுமில்லை, நல்லா இருக்காங்க, ஜஸ்ட் ஒரு மயக்கம். ரொம்ப சிலருக்கு அயர்ச்சில இருக்கும். இன்னும் கொஞ்சம் நேரத்துல தெளிவாகிடுவாங்க, ரூம்க்கு ஷிஃப்ட் பண்ணிடலாம்” என்று அவர் சொல்ல
“ம்ம்” என்றவன், “நான் இங்கேயே இருக்கட்டுமா?” என்றான்.
“இருங்க” என்றவர், “சிஸ்டர் குழந்தையை வாங்கிக்கங்க, அசிஸ்ட் ஹிம், எதுன்னாலும் என்னை கூப்பிடுங்க” என்றவர் விட்டு செல்ல,
இன்னும் மற்ற யாரும் குழந்தையை பார்க்க கூட இல்லை, அவர்கள் எல்லோரும் ஆர்வமாய் வெளியில் தான் நின்றனர்.
மருது ஜெயந்தியை விட்டு அசையவில்லை, அங்கேயே ஒரு இருக்கையை ஜெயந்தியின் பக்கம் நகர்த்தி குழந்தையை வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டான்.  
மருதுவின் கையில் இருந்த குழந்தையை வாங்கி அங்கே இருந்த ஒரு தொட்டிலில் படுக்க வைத்த செவிலி, “நான் இங்க தான் இருக்கேன், இவங்க கண் முழிச்சதும் கூப்பிடுங்க, இல்லை குழந்தை முழிச்சாலும் கூப்பிடுங்க” என்று சொல்லி தடுப்பிற்கு அந்த புறம் செல்ல, 
மனைவியையும் மகளையும் பார்த்து பார்த்து அமர்ந்திருந்தான். செவிலி சென்றதை உறுதிப் படுத்திக் கொண்டு, மெதுவாக ஜெயந்தியின் கைகளை தொட, என்னவோ கண்ணீர் வந்தது.
அவளின் கைகளை வருடிக் கொடுத்த படி அமர்ந்திருந்தான்.  
சில நிமிடங்களில் கண்விழித்த ஜெயந்தி பார்த்தது கண்களில் நீரோடு இருந்த மருதாச்சலமூர்த்தியை தான்.  
அவன் ஆசையாய் மனைவியை பார்த்திருக்க, அவனின் கண்ணீரில் பதறி விட்டாள் ஜெயந்தி. “என்ன? என்ன ஆச்சு குழந்தைக்கு?” என்று பதறி எழப் போக அவளால் சட்டென்று முடியவில்லை.
“படு, படு” என்று அவளை அதட்டி எழ விடாமல் தோளை பிடித்தான்.
“ஏன் அழறீங்க, என்ன ஆச்சு?” என்றாள் அதீத பதட்டத்தில்.   
“அழறேனா இல்லையே” என்றவன் கண்களை தொட, அது ஈரமாய் தான் இருந்தது.
“ம்ம், என்னை உன் பின்ன சுத்த விட்டு அழவும் வெச்சிட்ட” என்று சிரிப்போடு கூறிக் கொண்டே, அந்த நகரும் தொட்டிலை அருகில் நகர்த்தி “பார் என்னோட ராஜாத்தியை” என்று காண்பிக்க,
குழந்தையை பார்த்தவள் “நல்லா பார்க்க முடியலை, தூக்கி காண்பிங்க” என,
அவனுக்கு கைகளில் தூக்க பயம், “சிஸ்டர்” என்று குரல் கொடுத்தான்.
அந்த செவிலி வேகமாய் வரவும், “குழந்தையை காண்பிங்க” என்றான்.
“குழந்தை நல்லா இருக்கா தானே” என்று செவிலியிடமும் கேட்க,
“நல்லா இருக்காங்க மேம்” என்று அவரும் சொல்ல,
“இங்கே கிட்ட வாங்க” என்பது போல மருதுவை கை காண்பித்தால் ஜெயந்தி.
மருது அவளை நோக்கி குனியவும், அவனின் தோளில் சராமாரியாய் அடித்தாள், அதொன்றும் அவனுக்கு வலிக்காது.
செவிலி இவர்களை சுவாரசியமாய் பார்த்திருந்தார்.  
“ஓய் லகான், எதுக்கு என்னை அடிக்கிற?”
“பின்ன உங்களை யாரு அழுது என்னை பயப்படுத்த சொன்னா, பயந்துட்டேன்” என்றவளின் கண்களிலும் கண்ணீர் வந்தது.  
அவளின் கண்ணீரை மென்மையாய் துடைத்தவன் “சரி, அடிக்கறதை நிறுத்து, உனக்கு தான் கைவலிக்கும். உனக்கு எந்த தொந்தரவும் இல்லையே” என்றான்.  
“அப்போ ரொம்ப வலிச்சது, இப்போ கொஞ்சமா..” என்று சொல்லவுமே அவன் முகம் கவலையை காண்பிக்கவும் உடனே மாற்றி  “இப்போ வலி இல்லையே” என்று சிறு பிள்ளையாய் செல்லம் கொஞ்சினாள்.
மெதுவாக அவளின் தலையை வருடிக் கொடுத்தவன், “நிஜம்மா” என,
“நிஜம்மா” என்றாள் அவனிற்காக.
உண்மையில் எங்கே என்றே தெரியாமல் ஒரு சிறு வலி, அதீத அயர்ச்சி இருந்தது.
“உங்க அம்மாவை வரச் சொல்றேன். நான் கோவில் வரை போயிட்டு வந்துடறேன்” என்று கிளம்பினான்.
“போகக் கூடாது நாம தீட்டு” என்று அவள் சொல்ல,
“முன்ன நின்னு பார்த்துட்டு வந்துடறேன்” என்று சொல்லி, “இவங்கம்மாவை கூப்பிடுங்க” என்று சொல்லவும், சிஸ்டர் வெளியே சென்றார்.

Advertisement