Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஐந்து :
விமலனிற்கு திருமணம் முடிந்து ரிசப்ஷன் கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது. பின்னே நடத்துவது யார் மருதாச்சலமூர்த்தி அல்லவா, ஆம்! “திருமணம் நீங்கள் செய்து கொள்ளுங்கள், ரிசப்ஷன் என் செலவு” என்று விட்டான்.
பின்னே மருது ஸ்டோர்ஸ் மேற்பார்வை விமலன், அவன் ஜெயந்தியின் அண்ணன், ஜெயந்தி இப்போது அடையாளம் காணப் பட்டது மருது ஸ்டோர்ஸின் முதலாளியாகவே. அதுவுமல்லாமல் மருதுவின் மச்சானின் திருமணம் ஏரியா மக்களை அழைக்காவிட்டால் மருதுவின் கௌரவம் என்னாவது.
அப்போது விருந்து அமர்க்களப்படாவிட்டால் மருதுவிற்கு தானே இறக்கம்.
அப்போதும் ஸ்டோர்ஸ் லீவ் எல்லாம் இல்லை ஷிஃப்ட் முறையில் மாற்றி மாற்றி வந்து கலந்து கொண்டார்கள். மதியம் பன்னிரண்டு மணி போல ஆரம்பித்த விருந்து, இப்போது மணி மூன்று, இன்னும் ஜெகஜோதியாய் நடந்து கொண்டிருந்தது. 
முதல் நாள் காலையில் அவர்களின் குலதெய்வம் கோவிலில் திருமணம் எளிமையாய் நடந்து முடிந்திருந்தது.
விருந்தை பார்த்து பெண் வீட்டினர் அசந்து விட்டனர். ஜெயந்தியின் சொந்த ஊரில் தான் பெண் எடுத்தனர். ஒரு வகையில் தூரத்து சொந்தம். பெண் அப்போது தான் படித்து முடித்திருந்தாள், வேலையில் எல்லாம் இல்லை, வசதியும் இல்லை, ஆனால் பார்க்க நன்றாய் இருந்தாள். அவர்களுக்கு ஜனக்கட்டும் அதிகம். மரியாதையும் வளமையும் தெரிந்த மக்களாய் இருந்தனர். ஜெயந்தி உடனே சரி என்று விட்டாள்.  
வசதி பெரிய விஷயமில்லை, பெண் நன்றாய் இருக்க வேண்டும், படித்து இருக்க வேண்டும் என்பது தான் ஜெயந்தியின் முடிவு. அவளின் அம்மா வீட்டினில் அவளின் பேச்சை மீறுபவர் யார்.
விமலனிற்கும் பெண்ணை பிடித்திருக்க இதோ திருமணம் முடிந்து விட்டது. மருதாச்சலமூர்த்தி இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஆனால் அவனின் கண்ணசைவில் எல்லாம் சிறப்பாய் நடந்து கொண்டிருந்தது.
“ண்ணா, வர்றண்ணா” என்று அனைவரும் வந்து அவனிடம் சொல்லி சென்றனர், கூட ஜெயந்தியிடமும் “வர்றண்ணி” என்று அவளிடம் சொல்லிச்சென்றனர். அவளையும் இருந்த இடத்தை விட்டு அசையவிடவில்லை
இதில் வயது முதிர்ந்த பெண்மணிகள் “ராசாவாட்டம் பையனை பெத்து குடு, எங்க மருது மாதிரியே” என்று வாழ்த்தி சென்றனர்.
ஆம்! இது ஒன்பதாம் மாதம், ஜெயந்திக்கு. வளைக்காப்பு பெரிதாய் செய்யவில்லை. மிகவும் எளிமையாய் வீட்டோடு முடித்து விட்டான் மருது.
அதற்குதான் இந்த விருந்தை அமர்க்களப் படுத்தினான், மச்சானின் திருமணத்தை கொண்டு மருதாச்சலமூர்த்தியின் விருந்து.
என்னவோ அவனின் மனைவியின் அழகு கூடுவதாக தெரிய, அவர்களின் தொழில் வளர்ச்சியும் அமோகமாய் இருக்க, அதையும் விட அவர்களின் வாழ்க்கை அத்தனை மகிழ்வாய் இருக்க, வளைகாப்பை சத்தமின்றி முடித்துக் கொண்டான்.
கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது அல்லவா? 
மகிழ்ச்சி என்னும் மந்திரக் கோலை இருவருமே சுழற்றினார். ஆம்! மருது எகிறினால் ஜெயந்தி அடங்கிடுவாள். ஜெயந்தி எகிறினால் மருது அடங்கிடுவான், மொத்தத்தில் அடங்கி தான் போனரே, தவிர விட்டுக் கொடுக்கவில்லை. 
இருவருமே இயல்பாய் தான் இருந்தனர். சண்டைகள் சச்சரவுகள் கொஞ்சல்கள் மிஞ்சல்கள் என்று செழிப்பாய் தான் சென்றது.
உண்மையான வாழ்க்கையின் வெற்றி விட்டுக் கொடுத்தலை விட, பல சமயம் இயல்பு நிலையில் தானே இருக்கிறது.
கலைசெல்வி இவர்களை கவனிக்க வந்த போது “நான் விருந்தினர்னா என்னை கவனிங்க, இல்லைன்னா தேவையில்லை” என்று மருது சொல்ல,
கலைசெல்விக்கு சுத்தமாய் புரியவில்லை “என்ன குறையோ?” என்று பதறினார்.
“மா, அவர் விருந்தாளி இல்லையாம். இந்த வீட்டு ஆளாம், அதை தான் அந்த லட்சணத்துல சொல்றாரு, போங்க போய் பொண்ணு வீட்டுக்காரங்களை கவனிக்க சொல்றாரு” என்றாள்.
அதன் பிறகே கலைசெல்வியின் முகம் தெளிந்தது ஆனாலும் மருதுவின் முகம் பார்த்து நின்றார்.
“போங்க அக்கா, போய் பொண்ணு வீட்டுக்காரங்களை கவனிங்க” என்று சொன்ன பிறகே சென்றார்.
“உங்களுக்கு ரொம்ப ஏத்தம் ஆகிப் போச்சு, போய் எனக்கு ஒரு ஜூஸ் கொண்டு வாங்க, யார் கிட்டயும் சொல்லக் கூடாது, நீங்க போங்க!” என்று அவனை ஏறினாள்.
“நேரம்டி” என்று சொன்ன போதும் உடனே எழுந்து சென்றான்.
அவன் சென்றதும் அடுத்த நிமிடம் வந்த கோபாலன் “ரொம்ப களைப்பா இருக்கா ஜெயந்தி, நான் குடிக்க எதுவும் கொண்டு வரட்டுமா?” என்று மகளிடம் விசாரிக்க,
“பா, எனக்கு ஜூஸ் கொண்டு வர தான் அவர் போயிருக்கார்” என்று ஜெயந்தி சொல்ல,
“ஓஹ்” என்ற கோபாலனின் முகம் சுருங்கி விட்டது.
என்ன செய்ய முடியும் ஜெயந்தியால், அவளின் அருமை அப்பா தான். ஆனால் சரியோ தவறோ இப்போது அவள் மருது பக்கம் தான். கோபாலனுடன் கலைசெல்வி, விமலன், கமலன் என்று எல்லோரும் இருக்க மருதுவுடன் இவள் மட்டும் தானே!
மருதுவின் முன் அளவாய் தான் பேசுவாள்.
“நீங்க ஏன் இன்னும் சாப்பிடலை?” என்று அவர் கேட்க,
“பா, நம்ம விருந்து, நாம முன்ன சாப்பிட முடியுமா? அவர் என்னை சாப்பிட தான் சொல்றார். ஆனா அவரை விட்டு நான் மட்டும் எப்படி சாப்பிட நம்ம கல்யாணத்துல. அதுவுமில்லாம எனக்கு பசியில்லை” என்று சொல்ல,
அதற்குள் மருது வந்துவிட கோபாலன் சென்று விட்டார்.
இன்னும் மருதுவிற்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் தான்.
“என்ன சொன்னார் உங்கப்பா?” என்று கேட்டுக் கொண்டே ஜூஸை கையில் கொடுக்க,
“ம்ம், பிரசவத்துக்கு உங்க மாமனார் என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிடறார்” என்று விளையாட்டுக்கு சொன்னது தான் போதும்,
அப்படியே மருதுவின் முகம் மாறிவிட்டது “என்ன?” என்று கோபமாய் கோபாலனை நோக்கி திரும்ப,
“அச்சோ, நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்று ஜெயந்தி பதறி விட, அதன் பிறகே கோபாலனிடம் இருந்து பார்வையை திருப்பியவன்,
“அவர் சொல்லலை, ஆனா நீ சொல்ற. அப்போ உனக்கு போகணும்னு இருக்கு அப்படி தானே” நொடியில் சூழல் மாறிவிட்டது.
“இல்லை, இல்லை” என்று ஜெயந்தி கலங்கி சொன்ன போதும் மருதுவின் கோபம் குறையவில்லை, அப்படியே அமைதியாகி விட்டான்.
ஜெயந்தி ஏதோ பேச வந்த போது “வேண்டாம், இங்கே எதுவும் பேசாதே” என்று விட, திரும்ப பந்தி முடிந்து சொல்லிக் கொள்ள ஆட்கள் வந்தனர்.
பின்பு மருது ஜெயந்திக்கு பேசுவதற்கு தனிமை கொடுக்கவேயில்லை.
பெயருக்கு அவளோடு அமர்ந்து உண்டவன் கமலனை அழைத்து “அக்காவை வீட்ல விட்டுடு” என்று சொல்லி ஸ்டோர்ஸ் கிளம்பிவிட்டான்.
பெண் வீட்டு ஆட்கள் தங்க அவர்களின் அப்பார்ட்மெண்ட்ஸ் ஒன்று தான் மருது கொடுத்திருக்க, முன்பு ஜெயந்தி தங்கியிருந்த அபார்ட்மென்ட்ஸில் தான் இப்போது ஜெயந்தியின் அம்மா வீட்டினர் இருந்தனர்.
அவர்களை அங்கே தங்க சொன்ன போது தான் அவர்களுக்கு அது மருதுவின் வீடு என்பதே தெரியும்.
வளமான வாழ்க்கை தான் மகளுக்கு என்பது கோபாலனுக்கு புரிந்தது. அது என்றுமே கோபாலனுக்கு பொருட்டல்ல. இன்னும் கூட ஜெயந்தி ஜெர்மனியில் சம்பாதித்து அனுப்பிய பணம் அவரின் அக்கௌண்டில் தூங்குகிறது. அவரினது மிகவும் எளிமையான வாழ்க்கையே. எல்லாம் விட சமீப நாட்களாய் மகளின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி பூரிப்பு அவளுக்கு பிடித்த வாழ்க்கை என்பது புரிய, மருதுவை முறைத்து பார்ப்பது இல்லை.  
ஜெயந்தியின் மனம் வெகுவாய் கலங்கி போன போதும் எதையும் காண்பித்து கொள்ளவில்லை. நேராய் அவளின் வீடு செல்லாமல் மணமக்களோடு அம்மாவின் வீடு சென்றாள்.
பின் இரவு வரை அங்கே இருந்தாள். அவள் செய்வது ஒன்றுமில்லை. ஆனால் மணமகள் வீட்டினர் பெண்ணிற்கு சீர் செய்யும் போது மகள் இருக்க வேண்டும் அல்லவா?
அவர்களுக்கு இந்த விருந்தை இந்த வீட்டை எல்லாம் பார்த்து தாங்கள் செய்வது ஒன்றுமில்லை என்ற எண்ணம்.
அவர்களின் முகத்தில் சங்கடங்களை பார்த்த ஜெயந்தி, “அண்ணி, எங்க வீட்டுக்கு வரப் போற மகாலட்சுமி. நீங்க இப்படி இருந்தா எப்படி? சந்தோஷமா செய்ங்க, எங்களுக்கு எந்த குறையும் இல்லை” என்று பெரிய மனுஷியாய் பேசினாள்.
அதன் பிறகே அவர்களின் முகம் சற்று தெளிந்தது.  
“மாமா எங்க ஜெயந்தி?” என்றான் விமலன்.
“ஸ்டோர்ஸ் போனார்ண்ணா”  
“சாப்பிட வர சொல்லு” என்றவனிடம்,
“ஏன் நீ  சொல்ல மாட்டியா?” என எரிந்து விழ,
ஏதோ சரியில்லை என்று புரிந்தவன், அவனே மருதுவிற்கு அழைத்து “சாப்பிட வாங்க மாமா” என்றவன் கூடவே ஒரு பிட்டையும் அவனாய் சேர்த்துக் கொண்டான். “ஜெயந்திக்கு பசிக்குதாம், ஆனா நீங்க வந்தா தான் சாப்பிடுவேன்னு உட்கார்ந்து இருக்கா” என்றான்.
“நான் அப்படி சொன்னேனா?” என ஜெயந்தி எகிறும் போதே,
“நீங்க வந்துடுங்க” என்று உரிமையாய் சொல்லி வைத்து விட்டான்.
“ஏண்டா அண்ணா பொய் சொன்ன?”
“சொன்னேன் இப்போ என்ன?” என்று அவளிடம் இலகுவாய் சொல்லியபடி அந்த இடத்தில நிற்காமல் சென்று விட, சில நிமிடங்களில் மருது வந்து விட்டான். மதியம் ஜெயந்தியிடம் தேவையில்லாமல் கோபித்துக் கொண்டோம் அவள் சரியாய் உண்ணவில்லை என்று மனதை உதைத்திருக்க கூப்பிட்ட குரலுக்கு வந்து விட்டான். அவனுக்கு ராஜ உபசாரம் தான்.
“வாங்க, வாங்க” என்று முதல் ஆளாய் கோபாலன் வரவேற்க, அவரை முறைத்துக் கொண்டே தான் உள்ளே நுழைந்தான் மருது.
எதற்கு முறைக்கிறான் என்று தெரியாமல் கோபாலன் தடுமாற, பிறகு எல்லோரும் வந்து விட, மருது அமைதியாய் சென்று அமர்ந்து கொண்டான்.
“வாங்க மாமா சாப்பிடலாம், ஜெயந்தி பசிக்குதுன்னு சொன்னா?” என்று அவன் சொன்னதை அப்படியே நிலைநிறுத்திக் கொண்டான்.
உடனே உணவருந்த வந்து அமர்ந்து கொள்ள, ஜெயந்தி கீழே அமர முடியாமல் யோசிக்க, “நீ மேல உட்காரு” என்று அவனே பேசிவிட, இப்படியாக ஒரு வழியாக உணவுண்டு முடித்தனர்.
பெண் வீட்டினர் நாளை காலை கிளம்புவதாக தான் ஏற்பாடு, அவர்கள் அவர்களுக்கு கொடுத்திருந்த வீட்டிற்கு சென்று விட, இன்று விமலனிற்கு முதல் இரவு, அதற்கான ஏற்பாடுங்கள் செய்திருந்தனர்.
மருது எழுந்து நிற்கவும், ஜெயந்தியும் எழுந்து கொண்டாள், “நீ இருந்துட்டு வர்றதானா வா” என்று மருது சொல்ல,
“ம்ம்” என்றவள் இருந்த கடுப்பில், “வாய் மூடி பேசவும்” என்றாள் சத்தமாகவே. அவளின் பாவனையில் மருது அமைதியாகிவிட்டான்.
அவர்கள் கிளம்புகிறார்கள் என்று தெரிந்து, “காவ்யா வா” என்று பெண்ணை அழைத்த விமலன்,
மருதுவிடம் வந்து “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா” என்று காலில் விழ நிற்க, ஜெயந்தி தள்ளி நின்று கொண்டாள்.
“வேண்டாம் வேண்டாம்” என்று மறுக்க மறுக்க, காலில் விழுந்தார்கள்.
“நல்லா இருங்க” என்றவன் கையில் வந்த பணத்தை புதுப் பெண்ணிடம் கொடுக்க, அவள் வாங்குவதா வேண்டாமா என்று தடுமாறி விமலனை பார்த்தாள்.
“வாங்கிக்கோ உனக்கு இவர் அண்ணா, ஆனா எனக்கு, இவர் மறு ஜென்மம் கொடுத்தவர். இவரில்லைன்னா நானில்லை” என்று சொல்ல,
அன்றைய நினைவுகளில் ஒரு கணமான மௌனம்.
“போடா டேய்” என்று அவனின் தோள் தட்டிய மருது, “கிளம்பலாம் ஜெயந்தி” என்று அவளை கிளப்பினான்.
அவனையே பரிதாபமாக பார்த்திருந்த கோபாலனிடம் “போயிட்டு வர்றேன்” என்று சொல்லி கிளம்ப, அதற்கே அவரின் முகம் மலர்ந்து விட்டது..
வீடு வரும் வரை பேச்சில்லை, மருது கார் ஓட்டப் பழகி இருந்தான்.
வீடு வந்ததும் ஜெயந்திக்கு ஹீட்டர் போட்டு இதமான சூட்டில் தண்ணீர் விளாவ, தனக்கு தான் போடுகிறான் என்று புரிந்து குளித்து வந்தாள். பின் அவனும் குளித்து வர, அவனும் பேசிக் கொள்ளவில்லை, இவளும் பேசிக் கொள்ளவில்லை.
அவன் குளித்து வரும் முன் இருவருக்கும் பால் எடுத்து வந்திருந்தாள். அதை பார்த்ததும் தான் கத்தினான் “பத்து தடவை நடப்பியா, ஒரு இடத்துல உட்கார மாட்டியா. ஏன் நான் விட்டு தர மாட்டேனா? நான் என்ன உன்னை வேலை வாங்கறேனா? வேலை செஞ்சு தர்றது இல்லையா? இதுக்கு தான் உங்க அம்மா வீட்டுக்கு நீ போகணுமா?”
ஜெயந்தியின் பொறுமை பறந்து விட்டது, “எப்போ எப்போ போனேன், எங்க அம்மா வீட்டுக்கு வளைக்காப்பு முடிஞ்சு மதியம் போய் நைட் வந்துட்டேன். ஒரு நாள் கூட அங்க தங்கலை, அது சும்மா ஒரு விளையாட்டு பேச்சு. அதுக்கு என்ன பேசிட்டு இருக்கீங்க, சண்டை பிடிக்கறீங்க” என்று அவளும் கத்தினாள்.
“எத்தனையோ விளையாட்டு பேச்சு இருக்கு, இது ஏன் வந்தது? உனக்கு என்னை விட்டு போகணும் அவ்வளவு தானே, போ போ” என்று கத்தினான்.
அவனின் முகத்தில் அதீத பதட்டத்தை பார்த்தவள் உடனே தணிந்தாள். “சாரி, தெரியாம சொல்லிட்டேன். இனி சொல்ல மாட்டேன். எங்கேயும் போக மாட்டேன்” என்று அவன் அருகில் வந்து அவனின் கை பிடித்து சொல்ல, பெரிய வயிறு இடித்த போதும் தளர்வாய் அணைத்துக் கொண்டான்.
“என்னாச்சு” என்று கனிவாய் ஜெயந்தி கேட்க, அந்த குரலில் அவனையும் மீறி சொல்லி விட்டான் “பயமா இருக்கு?” என்று.
“பயமா இருக்கா? ஏன்? எதுக்கு?” என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்க,
“என்னவோ பயமா இருக்கு” என்று அவன் சொல்ல,
“ஒன்னும் பயமில்லை, குழந்தை பெத்துக்கப் போறது நான். நீங்க இப்படி பேசினா நான் எப்படி தைரியமா இருப்பேன். ஏன் திடீர்ன்னு இப்படி எல்லாம் பேசறீங்க?” என்று அவள் பேச,
அவனுக்கு சொல்ல தெரியவில்லை.
மருதாச்சலமூர்த்தி முகம் பார்த்திராத அவனின் அம்மாவின் ஞாபகம் என்றா சொல்லுவான்.
அணைத்திருந்ததால் குழந்தையின் உடலின் அசைவு அவனுக்கு கடத்தப் பட, அவனின் உடல் சிலிர்த்தது.
மருது மேல் தவறில்லை, ஜெயந்தியின் தவறு தான். இந்த இரண்டு மூன்று நாட்களாய் ஒரு அம்மாவாய் அவள் வரவிருந்த குழந்தையை பற்றி பேச விடாமல் பேச,  
ஏனோ பிறந்ததில் இருந்து பெரிதாய் தோன்றியிராத, அதுவும் வளர்ந்த பிறகு சுத்தமாய் தோன்றியிராத அபஸ்வரமாய், அவனுக்கு அவனின் அம்மாவின் நினைவு. “என் அம்மாவும் என்னை இப்படி தான் கொஞ்ச வேண்டும், வளர்க்க வேண்டும்” என்று நினைத்திருப்பார்களா. எப்போதாவது சிறு வயதில் அவரை புகைப் படத்திலாவது பார்த்திருப்பேனா. அவரின் பெயர் என்ன? இப்படி யோசனைகள்.     
அதையும் விட “என் அம்மாவை போல இவளுக்கும் ஏதாவது ஆகிவிட்டால்” ஒரு சொல்லொணா பயம். அவ்வப் போது ஒரு பயப் பந்து நெஞ்சை உருட்ட, அவன் வெளியில் காண்பித்து கொள்ளவில்லை, ஆனால் காலையில் சாதாரணமாய் ஜெயந்தி பேசிய பேச்சு அவனின் கோபத்தை கிளறி விட்டிருக்க, என்ன செய்வது யாரிடம் சொல்வது என்ற இயலாமை வெடித்து விட்டான்.  
தன் பயத்தை எப்படி ஜெயந்தியிடம் சொல்லுவான் “உனக்கு பிரசவத்துல ஏதாவது ஆகிடுமா?” என்றா கேட்பான்.
ஜெயந்தி நன்றாய் பெற்று பிழைக்க வேண்டும் என்று வேம்புளியம்மனிடம் வேண்டுவதை தவிர அவனுக்கு வேறு தெரியவில்லை.  
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா

Advertisement