Advertisement

சில நொடிகளிலேயே அவளின் இதழ்களை விட்டு விட்டவன் அவளை இறுக்கியபடியே தூக்கிக் கொண்டான்.
“விடுங்க” என்று அவள் இறங்க முற்பட,
“இன்னைக்கு நீ எதுவுமே பேசக் கூடாது. இவ்வளவு நாளா கொஞ்சினாலும் அதுல ஒரு தயக்கம் இருக்கும். இன்னைக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை, எப்படின்னாலும் உன்னை கொஞ்சுவேன்” என்று அவன் பேச,
“அம்மாடி, என்ன ஒரு பொய்” என்று அவன் கைகளில் இருந்து திமிறி இறங்கி சண்டைக்கு கிளம்பினாள்.
அவனின் பாஷையில் “இன்னாது நீங்க கொஞ்சினதுல தயக்கமா, தோடா!” என்று நிற்க,
அவனின் வேஷ்டியை மடித்துக் கட்டியவன், அவளுடைய இரு கைகளையும் நொடியில் அவளின் பின்னால் கொண்டு சென்று, தன் கைகளால் பிடித்துக் கொண்டவன், இன்னொரு கையால் அவளின் முக தாடையை பற்றி “ஆமாம் டி ஆமாம், என்னோட லகான் டி நீ, இன்னும் திருப்தியா கொஞ்சவேயில்லை” என்று மையலாய் பேசினான்.  
“அம்மாடி” என்பது போல ஜெயந்தி விழி விரிக்க, “லகான் கட்டின குதிரை நீ, என்னை பார்க்கணும், என்னை மட்டும் தான் பார்க்கணும்” என்று செல்லம் கொஞ்சியவன் அவளின் கன்னத்தை செல்லமாய் கடிக்க,
கைகளை வேகமாய் பின் கட்டி விட, அதன் தாக்கத்தில் அவளின் புடவை முந்தானை குத்தியிருந்த பின் நகர்ந்து விட, முந்தானை நழுவி எங்கோ பறந்தது.
வெட்ட வெளி “அச்சோ, புடவை நழுவுது” என்று ஜெயந்தி தடுமாற,
“ஷ், பேசக் கூடாது, அது எங்கேயும் போகாது” என்றவன், முறுக்கிய கையாலே அவளை அணைத்து பிடித்திருந்தான்.
“நான் கல்யாணம் பண்ணனும் முடிவெடுத்த நாளா என்னோட வாழ்க்கையில என்னோட எண்ணங்கள் எல்லாம், என்னோட மனைவியை சுற்றி தான் வரும்”
“ஒரு இருபத்தி மூணு வயசு இருக்கும் போதே முடிவெடுத்துட்டேன், அப்போ இருந்து போற வர்ற பொண்ணுங்க எல்லாம் பார்ப்பேன், நிச்சயம் தப்பா கிடையாது. இப்படி ஒரு பொண்ணு நமக்கு மனைவியா வந்தா எப்படி இருக்கும்னு. ஆனா கிட்ட தட்ட நாலு வருஷத்துக்கு பிறகு என்னோட இந்த லகானை தான் எனக்கு பிடிச்சது”
“அப்போவும் என் மனசுக்குள்ள தோணினது என்ன தெரியுமா?” என்றவன்
“என்ன?” என்று ஆவலோடு ஜெயந்தி கேட்க,
“கட்டுனா இவள கட்டணும்டா, இல்லாட்டி கட்டுனவன் காலை தொட்டு கும்பிடணும்டா” என்று மெல்லியதாய் பாட,  
“என்ன?” என்று சந்தோஷமாய் அதிர்ந்தவள் பின்பு அப்படி ஒரு பொங்கிய சிரிப்பு சிரித்துக் கொண்டே,
“அவ்வளோ பெரிய அழகியா என்ன நான்”
“உன்கிட்ட என்னை இழுத்தது உன்னோட அழகு இல்லை, உன்னோட அலைபாயாத மனசு, யாரையும் கவனிக்காத பாங்கு, உன்னோட நேர்கொண்ட பார்வை, நீ நடந்து போன நடை, அதோட வேகம், இப்படி தான், அதுவும் நீ நடக்கும் போது உன் முடி தூக்கி கட்டி இருக்குறதும், உன் நடைக்கு ஏத்த மாதிரி அசையும், அது எனக்கு ரொம்ப பிடிக்கும்,   என்னவோ இன்னும் இன்னும் சொல்லத் தெரியலை” என்று காதலாய் சொல்ல,
ஜெயந்தி அவனை அவனின் பாவனைகளை ஆச்சர்யமாய் பார்த்திருந்தாள், இத்தனை நாட்களில் அவள் அறிந்த மருதாச்சலமூர்த்தி இவன் கிடையாது.
“ஆனாலும் என்னோட கோபம், நீ போனா போகுதுன்ற மாதிரி என்னை கல்யாணம் பண்ணிக்க நினைச்ச இல்லையா அப்போ ஆரம்பிச்சது”
அவளின் கண்களில் கலக்கம் காணவும் “புரியுது, எனக்கு பிடிச்சா உனக்கும் பிடிக்கணும்னு கட்டாயம் இல்லைன்னு புரியுது, ஆனாலும் என்னவோ எனக்கு சொல்ல தெரியலை, நீ வேண்டாம்னு நினைச்சாலும் என்னால உன்னை விடவே முடியலை. எல்லாம் தப்பு தப்பா பண்ணிட்டேன். அதுவும் உன்னால ஜெர்மனில இருக்க முடியாத போதும், உன் மனசு என்னை தேடின போதும், பணத்துக்கு பார்த்து நீ வரலைன்றது என்னால இன்னுமே ஜீரணிக்க முடியலை. அவ்வளவு நம்பிக்கை தான் உனக்கு என் மேலயான்னு கோபம்”   
“அதுவும் யார் என்னை அனாதை சொன்னாலும் போடான்னு போயிடுவேன். ஆனாலும் என்னோட உறவா நினைச்சவங்க சொன்ன போது தாங்க முடியலை. உனக்கெல்லாம் யார் பொண்ணு குடுப்பா, குடுத்ததே பெருசுன்ற மாதிரி பேசினது, அவரை அடிச்சு துவைச்சிருப்பேன் என்னவோ உன்னை துரத்திட்டேன். அதுவும் நான் தான் பெரிய ஆள்ன்னு ஹோதாவோட என்னோட ஏரியாக்குள்ள சுத்த அவர் எல்லோர் முன்னமும் சொல்லவும், என்னடா பெரிய உன் பொண்ணு நீயே வெச்சிக்கோன்னு உன்னை போடின்னு சொல்லிட்டேன்” என்று பேச,
மீண்டும் நடந்தவைகளை நினைக்க விரும்பாமல் “அதை மறந்துடுவோம், ஆனாலும் அவர் எங்கப்பா, நிலைக்க போற ஒரு உறவு, இப்படி நீங்க பேச வேண்டாம்” என்றாள் தன்மையாகவே.  
“இப்படி பேசக் கூடாது நினைக்க கூடாதுன்னு நினைகிறேன் தான். ஆனா என்னோட தனிமை சில வார்த்தைகளை எனக்கு மறக்க விடறதில்லை. எனக்கு தான் உறவே கிடையாதே, உறவுகளோட மரியாதையை நீங்க தானே கத்துக் குடுக்கணும். அதுவும் உன்னை கல்யாணம் பண்ணக் கேட்ட நாள்ல இருந்து நல்லா பேசிட்டிருந்த உங்கம்மாவும் உன் அண்ணன் தம்பியும் அப்படியே ஒதுங்கிட்டாங்க. போங்கடான்னு விட்டுடேன். என்ன நான் குறைஞ்சு போயிட்டேன் உங்களுக்குன்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம் ஓடிகிட்டே இருக்கும்”
“அதுவும் எவ்வளவு பெரிய திறப்பு விழா, உன்னை அவங்களாவது கட்டாயப்படுத்தி வரவெச்சிருக்கணும். சரி செய்யலை விடு, இங்க வந்த பிறகு உங்கம்மாக்கு நீ செய்யணும்னு நினைச்சது தப்பு கிடையாது. கோபம் வந்தா நம்ம வீட்டை விட்டு .அடுத்து வீட்டுக்கு போய் தங்குவியா நீ, மாட்ட தானே! அது மாதிரி பொருள் வாங்க நம்ம இடம் விட்டு வேற இடம் போவியா, உனக்கு தெரியலைன்னா அவங்களாவது சொல்லணும்”
“ஆனா உங்கண்ணனுக்கு பொண்ணு பார்க்க அவ்வளவு பேசற நீ. அப்போ இது எப்படி உனக்கு தெரியாம இருக்கும். நான் படிக்கலைன்றதால கீழ நினைக்கிறியோன்னு எண்ணம். என்னோட தோற்றம் பிடிக்கலையோன்னு எண்ணம். இதெல்லாம் என்னால் தாங்கவே முடியலை, ரொம்ப மனஉளைச்சல் ஆகிடுச்சு” என்று அவன் உணர்ச்சிவயப்பட்டு பேசிக் கொண்டே செல்ல,
வேறு வழியில்லாமல் எம்பி அவன் எதிர்பாராமல் இதழ் மீது இதழ் மூடினாள். அதில் தான் சற்று அடங்கினான். நீண்ட நெடு நேர முத்தம், மருதுவின் ஒத்துழைபில்லாத முத்தம்.
“நீ என்னவும் என்னை செய்துகொள்” என்று மருது ஒப்புக் கொடுத்து நின்றுவிட, முற்றிலும் ஜெயந்தி தனதாக்கிய முத்தம். பிய்த்து எடுத்தாளா, கடித்து தின்றாளா, என்னவோ அவனை கொன்று தின்றாள். அதில் “சாரி” கேட்டாளா, “உனக்கு நான் இருக்கிறேன்” என்று சொல்ல முற்பட்டாளா தெரியவில்லை.
மருது அவளின் கைகளை பின் சேர்த்து கட்டியிருந்ததால் எம்பி முத்தம் வைப்பது சற்று சிரமமாய் இருக்க முத்தத்தை முடித்து, “என் கையை விடுங்க” என்றாள் மூச்சு வாங்கியபடி.   
ஜெயந்தியின் முயற்சிகளில் மனம் இலகுவாக, மருது விடவும் அவனை இறுக்கி பிடித்துக் கொண்டவள், “நான் மறக்க வைக்கிறேன், உங்களுக்கு எதுவும் ஞாபகம் இருக்காது” என்று அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“கொஞ்சம் திமிர் கோபம் எல்லாம் அதிகம் தான் எனக்கு. ஆனா அதுதான் இத்தனை காலமும் என்னை தனியா நிக்க வெச்சு ஜெயிக்க வெச்சிருக்கு” என்றான் அவளை வாகாய் பிடித்தபடி.
“ஷ், பேசவேண்டாம்” என்று அவனின் கையணைப்பில் நின்று கொண்டாள்.
ஆம்! அவனுக்கு எப்படியோ அவளுக்கு அவனின் கடந்த காலம் ஞாபகத்தில் இருக்கவே கூடாது.  
“என்னடா இது ஒன்றுமே நடவாதது போல இவ்வளவு பெரிய விஷயத்தை நான் கடக்கிறேன்” என்று மனது முழுவதும் சஞ்சலங்கள் இருந்தாலும் அவனின் கடல் கடந்த வாணிபத்தை ஒதுக்கி அவனை மட்டுமே பிடித்துக் கொண்டாள்.
எப்படியிருந்தாலும் வாழ்க்கையை வாழ்ந்து தானே ஆகவேண்டும். ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும் இது சரியா தவறா காலத்தின் கையில் விட்டவள், “எதுவாகினும் எங்களுக்கும் மட்டுமே வரவேண்டும், எங்களின் பிள்ளைகளை அணுகவே கூடாது” என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.
ஆம்! சரியோ தவறோ அவளால் மருதுவிடமிருந்து அவளை பிரித்துப் பார்க்க முடியவில்லை. திருமணம் என்ற பந்தம் கொடுத்த உறவு தான் மருதாச்சலமூர்த்தி! ஆனால் அவன் என்ன செய்த போதும் அவனை வெறுக்கவும் முடியவில்லை, விடவும் முடியவில்லை.
இவ்வளவு மருது பேசிய போதும் அவன் செய்த உதவி, இன்று அவன் இல்லையென்றால் விமலன் உயிரோடு இல்லை, கமலனின் படிப்பு இல்லை, அதையும் விட அன்று போலிஸ் ஸ்டேஷனில் ஜெயந்திக்கு என்னவும் நடந்திருக்கலாம், அதெல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
நிச்சயம் இந்த விடயங்களில் மருது ஒரு பெரிய மனிதன்!
ஜெயந்திக்காக தான் எல்லாம் செய்தான். ஆனால் அதை இதுவரை எத்தனை பிரச்சனைகள் வந்த போதும் எங்கேயும் எப்போதும் சொல்லிக் காண்பிக்கவில்லை.
மருதுவின் அணைப்பில் இருந்தபடியே ஜெயந்தி ஆசையாய் அவனின் நெஞ்சினில் முத்தமிட அதை உணரும் நிலையில் இல்லை மருது.  
ஜெயந்திக்கு எப்படியோ மருது ஒரு தனி உலகத்தில் இருந்தான், ஊடல்களும் கூடல்களும் கொடுக்காத ஒன்றை அந்த ஒற்றை அணைப்பு கொடுத்துக் கொண்டிருக்க, அதனுள் சுகமாய் அமிழ்ந்திருந்தான்.
அவனின் ஜெயந்தி அவனுள் ஜதியாய் நர்த்தனமாடிக் கொண்டிருக்க அவனின் காதுகளில் அது மட்டுமே நீங்காத ரீங்காரம்!
மருதாச்சலமூர்த்தி சொல்லிவிட்டான்! எல்லாம் சொல்லிவிட்டான்! அப்படி ஒரு ஆசுவாசம்! இனி அவள் இருந்தாலும் பிரச்சனையில்லை, பிரிந்தாலும் பிரச்சனையில்லை.
ஏனென்றால் அவன் தான் பிரியமாட்டானே! பிரியவும் விடமாட்டானே! அவனுக்கு வேறு சொந்தங்கள் இல்லை என்பதை விட வேறு சொந்தங்கள் அவனுக்கு வேண்டாம் என்பது தான் நிஜம்! சொந்தங்கள் வேண்டும் என்று நினைத்தால் கிடைக்க மாட்டார்களா என்ன?
மருதாச்சலமூர்த்திக்கு வேறு யாரும் வேண்டாம் ஜெயந்தி மட்டுமே வேண்டும் சொந்தமாய்!
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு!
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு!
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே!

Advertisement