Advertisement

அத்தியாயம் முப்பத்தி நான்கு :
நாட்கள் வேகமாய் செல்ல, மீண்டும் அவர்கள் வாழ ஆரம்பித்து இதோ அதோ என்பதற்குள் மூன்று மாதம் கடந்திருந்தது.
ஜெயந்தி மருதுவிற்கு வெகுவாய் பழகியிருந்தாள், அப்படியும் சொல்லலாம், பழக்கப் படுத்திக்கொண்டாள் அப்படியும் சொல்லலாம். ஆம்! மனதிற்குள் அவனை பற்றிய அத்துணை ஆராய்ச்சிகள் இருந்த போதும் வெளியில் எதையும் காண்பித்து கொள்ளவில்லை. என்ன பெரிய ஆராய்ச்சி அவனின் கடந்த காலம் தான்.
அவளாய் வாய்விட்டு மூன்று நான்கு முறை கேட்கவும் செய்து விட்டாள். “சொல்றேன், உன்னை தவிர வேற யார் கிட்ட சொல்ல போறேன்” என்று விடுவான்.
அவனின் சொத்து மதிப்புகள் “ஹம்மா” என்பதாகத் தான் இருந்தது. எப்படி வந்தது என்று இன்னும் தெரியாது. ஆனால் எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தான். படிப்பறிவு இல்லாமலேயே எப்படி இவ்வளவு ஞாபக அறிவு என்று வியந்து கொள்வாள்.
பின்னே படித்தவர்கள் கணக்குகளை அதற்குள் இதற்குள் என்று நுழைத்து ஒரு கணிப்பொறிக்குள் ஒளித்து வைக்க, மருதுவிற்கும் அதெல்லாம் மற்றவர்கள் மூலம் நடந்து இருந்தாலும், அவனிற்கு எல்லாம் அவனின் மனக்கணக்கே.  
என்ன முன்பானால் கணக்கு சரியாய் இருக்கிறதா என்று பார்க்க, ஒரு இரண்டு மூன்று ஆட்களிடம் ஒருவருக்கு தெரியாமல் மற்றவரிடம் கொடுத்து சரியாய் இருக்கிறதா என்று பார்ப்பான். யாரையும் நம்புவது கிடையாது. இப்போது அது கிடையாதே. எல்லாம் ஜெயந்தி பார்த்துக் கொள்கிறாள். இந்த மூன்று மாதத்தில் நன்கு கற்று தேர்ந்து விட்டாள்.
ஜெயந்தி பழியாய் கிடந்து ஒரு கணக்கை முடித்து, அவனிடம் சொன்னால், அவனோ மனக்கணக்கின் மூலமே அதனின் அரிதிபெரிதியை நெருங்கி விடுவான்.   
“ம்ம்ம், செம நீங்க” என்பாள் பல சமயம்.
இயல்பாய் இருவரும் பேச ஆரம்பித்த பிறகு ஜெயந்தி கவனித்தது மருது நிறைய பேசுகிறான் தான், ஆனால் தேவைக்கு. உண்மையில் அவன் அமைதியானவன் கூடவே காரியக்காரன். அதுவும் ஜெயந்தி வந்து விட்ட பிறகு அவனின் முகத்தினில் ஒரு வாடா புன்னகை.
“என்னடா?” என்று மற்றவர்களை மிரட்டும் மிரட்டல் கூட கனிவாய் தான் வந்தது.
ஜெயந்தி மாற்றிய மற்றொன்று வீட்டில் எந்த பஞ்சாயத்தும் கிடையவே கிடையாது. கடையிலும் கிடையாது. வேண்டுமென்றால் வேம்புலியம்மன் கோவில் சென்று விடுங்கள், அவ்வளவே!
இதையும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக!
மருது மறுத்து எதுவும் பேசவில்லை, சொல்வதை கேட்டுக் கொண்டான். ஆம்! தன்னுடைய மனைவி என்று தெரிந்தும் அந்த ஜெயராஜ் ஜெயந்தியை அடித்தது அவனுக்கு ஆறாத வடு!
அவனுக்கு ஏதேனும் வந்தால் ஊதி தள்ளி விடுவான், இனி குடும்பஸ்தன் கவனமாய் தானே இருக்க வேண்டும்.
முடிந்த வரை எதிலும் தலையிடக் கூடாது என்ற முடிவை ஜெயந்தி சொல்லும் முன்னமே எடுத்து விட, இப்பொழுது ஜெயந்தி ஒன்று சொல்லும் போது அதை கடை பிடிப்பதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை.
மனது எவ்வளவு சந்தோஷமாய் உணர்ந்தாலும் கூடவே ஒரு பயம் ஜெயந்தியிடம், அவனின் கடல் கடந்த வாணிபத்தை சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று.
ஜெயந்தி சகஜமாய் பேசினாலும் நடந்தாலும், இரவில் அவளோடான பொழுதுகளை எதிர்பார்த்து காத்திருந்து அனுபவித்தாலும், ஒரு சின்ன அபஸ்வரம் அவனுள் இருக்கத்தான் செய்தது.
எல்லாம் விட ஜெயந்தி கோபித்து சென்றுவிட்டால், அவனால் தாள இயலும் என்று தோன்றவில்லை, பலவீனமாகி விட்டேனோ என்றும் தோன்றியது. 
எதுவாகினும் முடித்து விடுவோம் இதை என்று முடிவெடுத்துக் கொண்டான்.
அன்று காலை உணவுண்ணும் போதே “நாம எங்கேயாவது போகலாமா ஜெயந்தி?” என்றான்.
“நிஜம்மாவா, எங்கே போகலாம்” என்றாள் ஆர்வமாக.
“எங்கே போகலாம் நீ சொல்லு”  
“எனக்கு தெரியலை, நீங்க சொல்லுங்க” என்றாள் திரும்ப அவனிடமே.
“பைக்ல லாங் டிரைவ்னா போகலாமா? வருவியா?”  
“ம்கூம், முடியாது! எனக்கு பீரியட்ஸ் ஆக இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு. இப்போ போய் ரிஸ்க் எடுக்க முடியாது. ஒருவேளை பேபி ஃபார்ம் ஆகற ஸ்டேஜ்ல இருந்தா?” என்றாள் சீரியசாக.
மருதுவின் முகம் வெகுவாக கனிந்து விட்டது.
“அப்போ வேற எங்கே போகலாம்?”
“இங்கே பக்கத்துல எங்கேயாவது”
“எங்கேயும் வேண்டாம், வீட்ல இருப்போம். சாயந்தரம் எங்கேயாவது வெளில மட்டும் போவோம்” என்று முடித்து விட்டான். ஆம்! குழந்தை என்ற வார்த்தை வந்த பிறகு அவளை அலைகழிப்பதில் அர்த்தம் இல்லை.    
இருவருமே குழந்தைக்கான அதீத எதிர்பார்ப்பில் இருந்தனர். ஜெயந்தி ஜெர்மனியில் இருந்து கிளம்பும்போதே எடுத்த முடிவு தானே!  
மாலை ஐந்து மணி போல வந்தவன் “பீச் போவோம்” என்று அழைத்து சென்றான்.
“பீச்” என்று சொல்லி சென்றவன், சென்றது சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள ஒரு கடற்கரை. ஆள் அரவமே இல்லை. எங்கோ ஒன்றிரண்டு பேர் இருந்தனர், மாலை மங்க ஆரம்பித்து இருந்தது. ஆங்காங்கே போட் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க, என்னவோ அந்த ஏகாந்தம் ஜெயந்திக்கு பயம் கொடுத்தது.  
இவன்  யாருக்கோ அலைபேசியில் அழைத்து “போட் வேணும், பெர்மிட் டீசல் எல்லாம் இருக்கான்னு பார்த்து சொல்லுடா” என்றான்.  
அந்த பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஜெயந்தி “நாம போட்ல போகப் போறோமா?” என்று அவனின் கையை பிடித்துக் கொண்டாள், என்னவோ அந்த தனிமை பயம் கொடுத்தது.
“ஆமாம்” என்பது போல தலையசைத்தவன் “உட்காரலாமா” என்று அமர, அவனை மிக நெருங்கி அமர்ந்தவள், அவனின் கைகளுக்குள் தன் கையை கோர்த்துக் கொண்டாள்.
“அட, என்ன பயம்?” என்றான் மருது.
“தெரியலை, ஆனா பயமா இருக்கு”  
“ஒரு பயமும் கிடையாது” என்று அவன் சொல்லும் போதே ஒரு நண்டு அவர்களை நோக்கி வேகமாய் வர, அதனை அசால்ட்டு போல தூக்கி தூரப் போட்டான்.
“அம்மாடி” என்று அவள் பார்க்க,
“அதோ அந்த இடத்துல தான் மண்ணோட மண்ணா அப்படியே படுத்திருப்பேன், ஒரு ரெண்டு மூணு மணி நேரம். இந்த மாதிரி பலதையும் தூக்கி போடுவேன், சில சமயம் அது கடிக்க கூட செய்யும். ஒரு எண்ணெய் இருக்கு, அதை தடவிட்டம்னா அதோட வாசனைக்கு நம்மை நெருங்காது. ஆனாலும் சில சமயம் ஏதாவது நடக்கும். ஆனா பெருசா ஒன்னும் நடந்தது இல்லை” என்று கதை சொல்ல,
“என்ன சொல்கிறான் இவன்?” என்று ஆ என்று ஜெயந்தி பார்க்க, திறந்திருந்த அவளின் வாயினை அவனின் விரல் கொண்டு மூடி விட்டான்.
அவள் பார்த்திருந்த விதமே “இவன் என்ன பேசுகிறான்” என்று அதிர்ந்து பார்த்து இருந்தது.  
அவளின் அதிர்வினை பார்த்தவனுக்கு பயம் வந்தது தான், ஆனாலும் என்னவானாலும் சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
“நான் பொறந்தப்போ என் அம்மா பிரசவத்துல இறந்துட்டாங்க, அம்மாவோட கடைசி காரியத்துக்கு வந்த எங்கப்பா அப்படியே போயிட்டார், என்னை பார்க்கக் கூட இல்லையாம்”
“நானும் என் அப்பா அம்மாவை பார்க்கலை, அவங்களும் என்னை பார்க்கலை. என்னோட சின்ன வயசு எனக்கு ஞாபகமே இல்லை. ஞாபகப்படுத்தினாலும் அது வரலை”
“என் ஆயா இட்லி கடை வெச்சிருந்தது, எனக்கு சாப்பாடு குடுக்கும். அது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு. ஒரு நாள் என் ஆயா செத்துப் போச்சு. நான் அங்க தான் இருக்கேன், ஆனா என் ஆயாவோட பசங்க பொண்ணுங்க யாரும் என்கிட்டே பேசலை, எனக்கு சாப்பாடு கூட குடுக்கலை, நானும் அவங்க கிட்ட கேட்கலை. கேட்டிருந்தா குடுத்திருப்பாங்களோ என்னவோ?”   
“பாட்டியை எடுத்துட்டு போன பிறகு பசியில நான் அந்த வீட்ல படுக்க போனேன், இனி இங்கல்லாம் படுக்க கூடாதுன்னு சொன்னாங்க, அடுத்த நிமிஷம் கிளம்பிட்டேன், இல்லை இருந்துக்கறேன், சாப்பிட குடுங்கன்னு எதுவும் நான் கேட்கலை. நேரா எப்பவும் ஆயா எனக்கு காலையில டீ வாங்கி குடுக்கும், அந்த கடைக்கு போனேன், ண்ணா எனக்கு எதுனா வேலை குடுங்க பசிக்குது சாப்பிடணும் சொன்னேன்”
மருது அவனை விரட்டி விட்டவர்களை கூட குறை சொல்லவில்லை என்பது ஜெயந்தியின் மனதில் பதிந்தது. இது வெகு சிலருக்கு தானே வரும். ஆனால் ஜெயந்திக்கு தன்னை சொல்கிறான் என்றும் புரிந்தது. “அவர்களை உறவாய் அவன் நினைக்கவேயில்லை, என்னை எல்லாமுமாய் நினைக்க, அது தான் இத்தனை குற்றம் குறை” என்று புரிந்தது.  
“அந்த அண்ணன் என்ன நினைச்சாரோ, போ, போய் குளிச்சிட்டு வேற உடுப்பு போட்டுட்டு வான்னு சொன்னாரு. அதுக்கு திரும்ப அந்த வீட்டுக்கு போனேன். என்னன்னு என்னை பார்த்தவங்ககிட்ட குளிச்சிட்டு போனா வேலை தருவாங்க சொன்னேன், யாரும் எதுவும் பேசலை, நானா போனேன், குளிச்சிட்டு வேற ட்ரெஸ் மாத்திட்டு இன்னும் இருந்த ரெண்டு செட்டு டிரஸ், என் புஸ்தக பை தூக்கிட்டு வந்துட்டேன். இன்னும் கூட சாமி ரூம்ல ஒரு பொட்டில அதெல்லாம் இருக்கும். என்னோட பொக்கிஷங்க” என்று அவன் சொன்ன போது குரல் கரகரத்ததோ.
ஜெயந்திக்கு மனதை ஏதோ செய்தது. பிடித்திருந்த அவனை கையை இன்னும் இறுக்கிக் கொண்டாள். மருது அவனின் கடந்த காலத்தை எள்ளளவும் அவளிடம் காண்பித்ததில்லை. காண்பிக்கும் அளவிற்கு தான் நெருக்கமும் நம்பிக்கையும் கொடுக்கவில்லையோ என்று தான் தோன்றியது.      
“முதல்ல எனக்கு கிடைச்சது டீ க்ளாஸ் கழுவர வேலை” என்று அவன் சொல்லும் போது ஒருவன் வந்து “ண்ணா அப்பால நிக்குது வா பூலாம்” என்று சொல்லிக் கொண்டே, “ண்ணி” என்றழைத்து அவளுக்கும் ஒரு சலாம் வைத்து நடந்தான்.
ஜெயந்தி ஆச்சர்யமாய் பார்க்க “நம்ம பய தான், உன்னை நல்லா தெரியும்” என்றான் மருது.
“எல்லோருக்கும் நம்மை தெரியுது, நமக்கு தான் யாரையும் தெரியலை. என்னவோ போடி ஜெயந்தி” என்று மனதிற்குள் நொந்து கொண்டாள் ஜெயந்தி.
மருது எழ அவனோடே ஜெயந்தியும் எழுந்தாள், அவனின் கை மட்டும் விடவே இல்லை. மனதின் பயம் அப்படியே தான் இருந்தது. அதையும் விட அவனின் கதை, ஆம் கதை தான் அவளுக்கு, அது என்னவோ செய்தது.
பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவளின் வீட்டின் இளவரசி அவள், கோபாலனும் கலையரசியும் அவளை அப்படி தான் வைத்திருந்தனர். வசதி இல்லை என்பது வேறு, ஏழ்மை நிலை என்பது வேறு! ஏழ்மையை என்றுமே அவள் உணர்ந்ததில்லை. பசி என்ற ஒன்றை மருதுவை திருமணம் செய்வதற்கு முன் உணர்ந்ததேயில்லை என்பது தான் நிஜம்.  
படகு அருகே சென்றதும் அவளின் கையை விடுவித்து அந்த விசைப் படகை அவனே சரி பார்த்தான்.
மாலை மயங்கும் நேரம் அது, அனலோடு கூடிய உப்புக் காற்று, ஏகாந்தமான சூழல், ரசனையான யாரும் ரசிப்பர். அதுவும் தன் துணையோடு ஒரு தனிமையான பயணம், மனதுக்கு உகந்தது தான். மருதுவிற்கு எப்படியோ ஜெயந்திக்கு இந்த பயணம் உவப்பில்லை.
அவனின் கதை மனதை பிசைய, உடன் என்ன வருமோ என்ற பயம்? “வீட்டிற்கு போகலாமா?” என்ற வார்த்தை வாய் வரை வந்து விட்ட போதும் விழுங்கிக்கொண்டாள்.
மருதுவை அது காயப்படுத்தும் என்ற அளவிற்கு தெரிந்து வைத்திருந்தாள்.   
அவன் ஏறி இவள் ஏறுவதற்கு கை நீட்ட, ஏறி நின்றவளுக்கு புது வித அனுபவம், “சரி நான் பார்த்துக்கறேன், வந்துட்டு ஃபோன் பண்றேன்” என படகை கொடுத்தவனிடம் மருது சொல்ல,
“ண்ணா, இங்க தான் குந்திகினு இருப்பேன், லைட்ட போட்டு ஆஃப் பண்ணு போதும், பாஞ்சு வந்துடுவேன்” என்று சொல்லி அவன் சென்று விட,
வேகமாய் மருதுவின் புஜத்தை பிடித்துக் கொண்டாள் “நாம தனியாவா போறோம்” என்று.
“அட என்ன பயம், நான் இருக்கேன்ல” என்றவன், “வா” என்று அருகழைத்து, மோட்டாரின் அருகில் சென்று அந்த விசைப் படகை செலுத்த ஆரம்பித்தான்.
அவன் படகை செலுத்துவதற்கு ஏதுவாய் கையை விட்டிருந்தவள், படகு நகரவும் அதன் அசைவில் மருதுவின் சட்டையை இறுக்கமாய் பிடித்திருந்தாள்.
“பரவாயில்லை, வேட்டியை பிடிக்காம போன, நீ இறுக்கி பிடிக்கற வலுவுக்கு அது உன் கையோட வந்திருக்கும்” என்று மருது சிரிக்க
“தோடா” என்று அவனின் தோளில் செல்லமாய் ஒரு தட்டு தட்டிய போதும் அவளின் முகம் தெளியவில்லை.
காற்று விஸு விஸு வென அடிக்க, இருள் கவிய ஆரம்பிக்க, அவனை நெருங்கி நின்று கொண்டாள்.

Advertisement