Advertisement

அத்தியாயம் முப்பத்தி இரண்டு :
மதிய உணவு இருவருமே உண்ணவில்லை, மருது மட்டுமே ஸ்டோர்ஸ் செல்ல, ஜெயந்தி வீட்டிலேயே இருந்து கொண்டாள். என்ன தவறு செய்கிறோம் எங்கு தவறு செய்கிறோம் என்று அவளுக்கு புரியவேயில்லை.
அப்படி ஒரு அழுகை பொங்கியது, ஒரு பாடு அழுது முடித்தாள், பசிப்பது போல தோன்ற, நேரம் பார்த்தால் மருது சென்று இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அவனுமே உண்டிருக்க மாட்டான் என்று புரிந்து அவனை கைபேசியில் அழைத்தாள். அவளின் கைபேசியில் அவனுக்கு லேண்ட் லைனில்.   
அவன் எடுக்கவும் “நீங்க சாப்பிடவேயில்லை, சாப்பிட வாங்க” என்று வீட்டிற்கு அழைக்க,
“இல்லை, ஜெயந்தி வேண்டாம் பசியில்லை நீ சாப்பிடு” என்றான்.
“எனக்கும் பசியில்லை” என்று சொல்லி அவள் அலைபேசியை பட்டென்று அணைத்துவிட்டாள்.
“வீட்டிற்கு போ” என்று மனம் சொன்ன போதும் மருது அப்படியே தான் அமர்ந்திருந்தான். மனம் முழுவதும் யோசனை, என்ன தவறு செய்கிறோம் எங்கு தவறு செய்கிறோம் என்று அவளை போலவே.
ஒருமணி நேரம் கடந்திருக்க மீண்டும் ஜெயந்தியின் அழைப்பு. எடுத்தவனிடம் “எனக்கு ரொம்ப பசிக்குது, தனியா சாப்பிட பிடிக்கலை. அப்போவும் சாப்பிட போனேன், அந்த சாப்பாடு கெட்டு போச்சு” என்று இளக்கும் குரலில் அவள் சொல்ல,
பின்னே காலையில் செய்தது இப்போது மாலை ஆறு மணி இன்னும் நன்றாக இருக்குமா என்ன?
“சாப்பாடு வாங்கி அனுப்பறேன், என்ன வாங்கட்டும்?”  
“வேண்டாம்” என்றாள்.
“அப்புறம் வேற என்ன செய்யட்டும்? நான் வந்து சமைச்சு தரட்டுமா?” என்றான் சற்று எரிச்சல் குரலில்.
“வேண்டாம்! நீங்க வர்றீங்களா நான் சமைக்கறேன்” என்று சொல்லும் போதே அழுகை முட்டி குரல் கரகரத்து விட்டது.  
“அப்புறம் கூப்பிடறேன்” என்று கம்மிய குரலில் சொல்லி வைத்து விட்டாள்.
மருதுவிற்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை, வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
சென்று பார்த்தால் வீட்டின் முன் புறம் விளக்கு எரிந்தது. அது அட்மேடிக் லாக் என்பதால் மருது கதவை மூடியிருக்க, அது தானாக பூட்டியிருந்தது.
அவன் தன்னிடமிருந்த சாவியால் திறந்து உள்ளே போக, வீடு இருட்டாய் இருக்க, வேகமாய் விளக்கை எல்லாம் போட்டு ஜெயந்தியை பார்த்தால் அவளை காணவில்லை. “ஜெயந்தி” என்று குரல் கொடுக்க பதில் குரல் எதுவும் இல்லை. உடனே இன்டர்காமில் செக்யுரிடியை அழைத்தான் “மேடம் எங்கயும் வெளில போனாங்களா” என்று.
“எங்கேயும் போகலை சார்” என்று அவன் சொல்லவும்
வீடு முழுக்க தேடினான், மனது பதட்டத்தில் எகிறி குதிக்க ஆரம்பித்தது. வேகமாய் நான்கு நான்கு படிகளாய் ஏறி மாடி போக,
அங்கே பார்த்தது படுத்திருந்த ஜெயந்தியை. ஆம்! வெறும் தரையில் படுத்திருந்தாள், இருட்ட ஆரம்பித்து இருந்தது.
மனம் சொல்லொணா ஆசுவாசத்தில் திளைக்க அப்படியே சுவரில் சாய்ந்து நின்று விட்டான். அவனின் மனம் என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ என்று அவனை ஏகத்திற்கும் சாட, சரி செய்து கொள்வேன் எல்லாம் சரி செய்து கொள்வேன் எதிர்பார்ப்புகள் இருந்தாள் தானே மனம் ஏமாற்றம் உணர்கிறது எதையும் எதிர்பார்க்க கூடாது  
உடலை குறுக்கி ஒரு நிராதரவான நிலையில் படுத்திருந்தாள். மனதை பிசைந்தது.    
அருகில் சென்றான், இவன் வந்தது தெரியவில்லை. கண் மூடி தான் இருந்தாள். உறங்கி இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவள் அழைத்த உடனே கிளம்பியிருந்தான். பத்து நிமிடம் தான் இருக்கும் அதற்குள் உறங்கி விட்டாளா என்ன?
கையினால் அவளின் தோளை தொட, அப்படியே “வீல்” என்று ஒரு சத்தம், அரண்டு விட்டான் மருது, “என்ன? என்ன?” என்று மருது பதற , அவன் சத்தம் கேட்கவும் தான் தெளிந்தவள், “சத்தம் குடுக்க மாட்டீங்களா? பயந்துட்டேன்!” என்று பதறி எழுந்தாள்.
குனிந்திருந்தவன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து, எழுந்துகொள்ள இருந்தவளை எழ விடாமல் தடுத்து பிடித்துக் கொண்டான்.
அப்போதும் அவள் பயத்தில் படபடத்து இருக்க, “ஒன்னுமில்லை, இவ்வளவு பயமா உனக்கு” என்று தோளோடு அணைத்துக் கொள்ள, அமைதியாய் அவனின் தோள் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அப்படியே அவனை கட்டி அணைத்து கதறி அழ மனம் விழைந்தது.  
“இவ்வளவு பயம் இருக்கிறவ எப்படி தனியா இருந்த?” என்றவனிடம்,   
“அப்போல்லாம் பயமா இல்லை, இப்போ தான் பயமா இருக்கு” என்று சொல்லியபடி அவனின் அணைப்பில் இருந்து விலகி எழுந்து நின்று கொண்டாள்.
கட்டி அணைத்திருந்தால் கதை வேறு, ஆனால் தோள் அணைத்து இருந்தால், அவளும் தான் என்ன செய்வாள்? எனக்கு இந்த சிறுபிள்ளை அணைப்பு வேண்டாம் போ என்று தோன்ற எழுந்து நின்று கொண்டாள்.
மருதுவிற்கு அதெல்லாம் புரியவில்லை. அவனின் கையிலிருந்து விலகியது என்னவோ செய்த போதும், அவனும் எழுந்து நின்றவன் “வெளில போகலாமா சாப்பிட” என்றான் இலகுவாக.  
“ம்ம்” என்று தலையசைத்தாள் ஆனால் சோர்வு தான் அதில்.
வீட்டில் சென்று அமைதியாய் தான் இருவரும் தயாராகினர், சுரிதாரில் அவள் கிளம்ப எத்தனிக்க, “புடவை கட்டிக்கோ” என்றான்.
மறுத்து எதுவும் பேசவில்லை உடனே கட்டி கிளம்ப, அவனுமே வேஷ்டி சட்டையில் பளிச்சென்று இருந்தான்.  
“பேன்ட் சட்டை விட வேஷ்டி சட்டை தான் உங்களுக்கு நல்லா இருக்கு” என்று என்றோ அவள் சொன்னதின் ஒரு எதிரொலிப்பு. ஆனால் அதெல்லாம் அவளின் ஞாபகத்தில் இல்லை.
ஆனாலும் கண்கள் மருதுவை அளவெடுத்தது புதிதாய். முன்பு சொன்னதே ஞாபகத்தில் இல்லாமல் “இவனுக்கு இது நல்லா இருக்கு” என்று மனதிற்குள் தோன்றிய போதும், அது எங்கும் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொண்டாள், அவனையும் அதிகம் பார்க்கவில்லை.
தன்னுடைய உடைக்கு ஏதாவது சொல்வாளா என்று பார்க்க, ம்கூம் அவளிடம் ஒரு பிரதிபலிப்பும் இல்லை.
ஜெயந்தியின் உடையை ஆராய்ந்தான், அந்த புடவை அவளுக்கு நன்றாக தான் இருந்தது, சிந்தெடிக் வகையரா அவளின் உடலை பாந்தமாய் தழுவி இருக்க, அதன் நிறம் அப்படி ஒன்றும் அவளை பளிச்சென்று காண்பிக்கவில்லை, அவளின் நிறத்தோடு ஒட்டி இருந்தது.
“இந்த புடவை நல்லா இருக்கு, ஆனா இன்னும் நல்லா கட்டலாம்” என்று அவன் சொல்ல,  
“என்கிட்டே நிறைய புடவை இல்லை எடுக்கணும்” என்று ஜெயந்தி சொல்ல,
“இப்போ போகலாமா நம்ம கடைக்கு” என்றான் உடனே ஆர்வமாய்.
“அங்கேயே சுத்தி சுத்தி வந்தேன், அப்போ சொல்லலை, இப்போ சொன்னா” என்று மனதிற்குள் தோன்றிய போதும் அதனை வெளியில் சொல்லவில்லை. இனி எதுவும் பேசுவதில்லை என்று புதிய முடிவெடுத்துக் கொண்டிருந்தாள்.   
ஆனால் மருதுவின் அழைப்பை ஒப்புக் கொள்ளவும் மனமின்றி, “இல்லை எனக்கு சாப்பிடணும்” என்று அவள் சொல்ல,   
“எங்கே போகலாம்” என்றான்.
“எங்க போகலாம்” என்று பதிலுக்கு அவள் கேட்க,
“எனக்கு தெரியாது, நீதானே கார் ஓட்டுவ, அப்போ நீதான் கூட்டிப் போகணும். நான் இன்னும் பெரிய ஸ்டார் ஹோட்டல் எதுவும் போனதில்லை, கூட்டிட்டுப் போ” என்றான்.
“ஏன் போனதில்லை” என்று அவள் கேட்க,
“ஒரே ஒரு தடவை போனேன், அவனுங்க இங்கிலீஷ்லயே பேசினானுங்க. எனக்கு இங்கிலீஷ் தெரியாதுடா, தமிழ்ல பேசுடா சொன்னா, அந்த தமிழை பண்ணுனானுங்க பாரு ஒரு கொலை, நம்ம சென்னை பாஷை தூள்மான்னு நாம சொல்லிக்கலாம்”
“ஆனா அதுக்காக எல்லாம் போகாம இருக்கலை, அந்த மெனு கார்ட் குடுப்பாணுங்க அதை எனக்கு படிக்க தெரியாது” என்று சொல்ல,
“இதுக்கா போகாம இருந்தீங்க, அதான் அங்க பஃபே இருக்குமே, அதுக்கு போக வேண்டியது தானே”  
“அதையும் எழுதி தானே வெச்சிருப்பாங்க”
“ம்ம், ஆமாமில்லை” என்று அவள் அசடு வழிய, ஒரு இலகுவான சூழலை உருவாக்கினான் மருது.
“ஆனா பார்த்தா என்ன ஐட்டம் இருக்கும்னு தெரியுமே” என்றாள் விடாது.  
“போகலை, இப்போ என்னை எங்க கூட்டிட்டு போற, அதை சொல்லு”  என்றான்.
“நீங்க சொல்லுங்க, எனக்கு மெனு கார்ட் படிக்க தெரியும், ஆனா அந்த மாதிரி ரொம்ப ரிச்சா எல்லாம் எங்கேயும் போனதில்லை”
“சரி, இங்க போகலாம்” என்று அவன் ஒரு புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் சொல்ல,
“போகலாமே” என்று காரில் அமர்ந்தவள், ரூட் மேப் செட் செய்ய, அதனை கொண்டு வழி பிடித்து கவனமாய் சென்றாள். புது கார் என்பதினால் பயம் பயம் தான், அது சாலையில் வழுக்கி கொண்டு சென்றது.
பக்கம் தான், சென்று வேலட் பார்க்கிங் கொடுத்து மருது வோடு உள்ளே நுழைய, அவளுக்கு எப்படியோ மருதுவிற்கு மனதிற்கு இதமாய் இருந்தது.
உள்ளே சென்றால், மிக குறைவான வெளிச்சம், ஒரு மெல்லிய இசை என்று அங்கே இருக்க, ஆங்காங்கே ஆட்களும் இருக்க, ரிசர்வ்ட் என்று எழுதியிராத இடமாய் பார்த்து அமர்ந்தார்கள். ஆனால் எதிரெதிரே. முதலில் ஜெயந்தி தான் அமர்ந்தாள். பின்னே தான் மருது அமர்ந்தான்.
பக்கத்தில் அமருவான் என்று அவள் உள் தள்ளி அமர அவன் எதிரே அமர்ந்தான்.
அவனுக்கு ஜெயந்தியின் முகம் பார்க்க வேண்டும் அவ்வளவே. பக்கத்தில் உட்கார்ந்து யாரும் அறியாமல் உரசும் எண்ணமா என்ன, யாருமில்லாத வீட்டிலேயே அவன் உரசுவதில்லை, இன்னும் வெளியிலா உரசுவான்!
ஜெயந்தியின் முகம் சுருங்கி விட, பேசக் கூடாது என்று நினைத்தாலும் கேட்டு விட்டாள் “ஏன் என் பக்கத்துல உட்கார மாட்டீங்களா?” என்று.
“பக்கத்துல உட்கார்ந்தா கழுத்து வலிக்கும்” என்றான்.
“என்னடா இவன் உளறுகிறான்” என்று பார்க்க,
“உன் முகத்தை திரும்பி திரும்பி பார்த்தா கழுத்து வலிக்கும்” என்று அவன் விளக்கிச் சொல்ல,
“தோடா” என்ற பார்வையை கொடுத்தவள், எழுந்து அவனின் புறம் சென்று அவனின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள், “கழுத்து நல்லா வலிக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டே,
மருதுவின் முகம் முழுவதும் புன்னகை பூசியது. அவளின் செய்கை போதை வஸ்து உட்கொள்ளாமலேயே போதை ஏற்றியது.   
அவனின் புறம் பார்க்காமல் மெனு கார்ட் எடுத்து பார்க்க, அங்கே இந்தியன் சைனீஸ் இத்தாலி என்று இன்னும் பல இருக்க அவனின் முகத்தை திரும்பி பரிதாபமாய் பார்த்தாள்.
“என்ன?” என்று புரியாமல் பார்த்தவனிடம் “நாம சொன்ன பிறகு தான் இவனுங்க சமைப்பாணுங்க” என்று சொல்ல
“நீதானே சொன்ன பஃபே போகலாம்னு” என்று அவன் எடுத்துக் கொடுக்க, “ஆமாமில்லை மறந்துட்டேன்” என்றவள் எங்கே என்று பார்க்க கண்ணாடி தடுப்பின் வழியே அந்தப் பக்கம் அது தெரிய அங்கே சென்றார்கள்.
பின்பு பொறுமையாய் சூப்பில் ஆரம்பித்து ஒன்றொன்றாய் அவள் டேஸ்ட் செய்து நன்றாக இருந்தால் மட்டும் என்ன பதார்த்தம் என்று சொல்லி அவனுக்கு கொடுக்க, சிறுபிள்ளைக்கு அவளின் அம்மா கொடுப்பது போல தான் இருந்தது.
மருது எழவே இல்லை இடத்தை விட்டு, ஜெயந்தி சலிக்காமல் நடந்தாள். “இது கிராப் அதாவது நண்டு, இது ப்ரான், இறால்” என்று சில சில உணவு பதார்த்தத்தின் ஆங்கில பெயரையும் சொல்லிக் கொடுத்து, எல்லாம் முடித்து அவனுக்கு கஸ்டர்ட் எடுத்துக் கொண்டு அமர,
“உனக்கு வேண்டாமா” என்றான்.
“ம்கூம் நான் புல், இதுக்கு மேல முடியாது” என்று சொல்லி அமர, அதனை உண்டு கொண்டே, “இன்னைக்கு இப்படி பார்த்து பார்த்து கவனிக்கற, அன்னைக்கு மட்டும் ஏன் என்னை பசில மயங்க விட்ட” என்று கேட்டு விட்டான்.
“வேணும்னு எல்லாம் விடலை” என்றாள் அவசரமாய், “அன்னைக்கு எனக்கு ரொம்ப கோபம், வலி முகத்துல, அதையும் விட வயிறு வலி, அப்போ போடான்னு தோணிச்சு”
“உள்ள போய் படுத்தேன் அவ்வளவு தான் தெரியும், அப்படியே தூங்கிட்டேன், ஒரு வேலை முழிச்சிருந்தா வந்து சாப்பிட சொல்லி கூட இருப்பேன்”
“சொல்லி கூட இருப்பேன்னு தான் சொல்லமுடியும், கண்டிப்பா சொல்லியிருப்பேன்னு பொய் சொல்ல மாட்டேன்” என்று உண்மை விளம்பியாய் சொல்ல,
அவள் சொல்லிய பாவனையில் மருதுவின் முகத்தில் புன்னகை அரும்ப “போகலாமா” என்று எழுந்தான்.
“ம்ம்” என்றவர்கள் வெளியே வந்து கார் வருவதற்காய் நிற்க,
“என்ன மருது இங்கே” என்று ஆர்ப்பாட்டமாய் ஒரு குரல் கேட்க,
திரும்பி பார்த்தால் அவனிடம் தங்கம் வாங்கும் சேட் ஒருவன்,
“பல வருஷமாச்சு பார்த்து என்ன இங்கே”  
“என் மனைவியோட சாப்பிட வந்தேன்”  
“என்ன மருது இப்போல்லாம் ஆளே வர்றதில்லை”  
“அதெல்லாம் விட்டு பல வருசமாச்சு சேட்டு, நீ என்ன புதுசா கேட்கற?”
“இப்போ நிறைய டிமாண்டு” என சேட் விடாது பேச,
“செய்யறதில்லைன்னா விட்டுடணும் வேற பேசக் கூடாது” என்று சட்டென்று கடுமையான குரலுக்கு மருது தாவினான். எங்கே சண்டையாகிவிடுமோ என்று ஜெயந்தி பயந்து அவனின் கையினை பிடித்துக் கொண்டாள்.
“அரே பேட்டா எதுக்கு கோபம்? நீ நம்பல் பையன்னு சொன்னேன்”
“என்ன உன் சொத்துல எனக்கு பங்கு கொடுக்க போறியா?” என்றான் மருது.
சேட்டின் முகம் சில நிமிடம் “ங்கே” என மாறி, பின்பு “உனக்கு எப்பவும் ஜோக்கு தான் போ” என்று சொல்லி சென்று விட,
ஜெயந்திக்கு பயமெல்லாம் வடிந்து, அப்படி ஒரு சிரிப்பு பொங்கி விட,  சத்தமாய் சிரித்தாள், சிரிப்பை அடக்கவே முயலவில்லை..
அதற்குள் கார் வந்திருக்க ஜெயந்தி ஏறி டிரைவர் சீட்டில் அமர, பக்கத்தில் மருது அமர்ந்தான்.
மருது பேசிய விதத்தில் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் சேட் பேசிய விஷயம் என்னவாய் இருக்கும் என்று யோசிக்க தோன்றவில்லை.
“எதுவும் கேட்பாளா?” என்று மருதாச்சலமூர்த்தி ஜெயந்தியை பார்த்திருக்க, அவள் சிரித்துக் கொண்டே, “ப்பா நீங்க செம ஜோக் பண்றீங்க” என்று சொல்லி சாலையில் கவனமானாள்.
  
  
  
       
              

Advertisement