Advertisement

“நீ எனக்கு கொடுத்தா தானே தெரியும்” என்றான் இலகுவாய், குரலில் சிறு பிள்ளையாய் ஒரு துள்ளல்.
“அங்கே வீட்ல தான் எல்லாம் இருக்கு, நீங்க எனக்கு குடுத்த ரேக்ல” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பை வந்து விட, ஜெயந்திக்கு அவளின் தோழி ஒருத்தி தன் வேலை விஷயமாய் சந்தேகம் கேட்க என அழைத்து விட, பின் அந்த பேச்சு நின்று விட்டது.  
பேச்சு பேச்சாய் இருந்தாலும் பையில் எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தாள், எங்கே தப்பிப் போயிற்று என்று மருது அவளை தான் விடாது பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் பேசி முடித்த நேரம் பையும் அடுக்கி முடித்திருக்க வேகமாய் வீட்டினை ஒரு சுற்று சுற்றினாள், வேறு எதுவும் விட்டு விட்டாளா என்று?
பின்னே “போகலாமா?” என்று பையை தூக்க,
“கொடு” என்று முன்னே நடந்தவனின் முகம் வெகு மாதங்களுக்கு பிறகு இயல்பாய் இருந்தது.
ஜெயந்திக்கு அது தெரியவில்லை, எப்படி இவனின் வாழ்க்கையை கேட்டு தெரிந்து கொள்வது என்பது மட்டுமே யோசனையாய் இருந்தது.
வீட்டிற்கு நேரே சென்றவன், உள்ளே நுழைந்து ஜெயந்தி பையை வைத்ததுமே, “எங்க கொடு நான் பார்க்கறேன்” என்றான், மீண்டும் ஒரு சிறுபிள்ளைதனமான செயல்.  
முதலில் ஜெயந்தி சில நொடி புரியாமல் விழித்து பின் மொபைலை கேட்கிறான் என புரிந்து இதோ என்று உள்ளே சென்றாள்.
நல்ல வேலை என்ன கொடுக்க என்று கேட்காமல் போனால், கேட்டிருந்தால் அவ்வளவு தான் மருது மீண்டும் முருங்கை மரம் தான் ஏறியிருப்பான்.
மொத்தமாய் பத்து நடைக்கும் மேலே நடந்திருப்பாள், மொபைல் கடைசியாக தான் வந்தது. இவ்வளவும் எனக்காகவா என்று பார்த்திருந்தான்.  
ஆம்! அவனுக்கு வாங்கி வந்திருந்த பொருட்கள் மொத்தமும் கடை பரப்பினாள், கூலர்ஸ், வாட்சஸ், பெர்பியும்ஸ், ஜெர்கின், மொபைல் மற்ற சில கண்ணில் பட்ட ஆண்கள் உபயோகிக்கும் பொருட்கள், ஏராளம்.
மருது அவள் அதனை எல்லாம் கொண்டு வந்து வைக்க வைக்க ஆசையாய் பார்த்திருந்தான், பொருட்களை அல்ல, ஜெயந்தியை.
“ஆமா! இவ்வளவு வாங்கிட்டு வந்து எதுக்கு என்கிட்டே காமிக்க கூட இல்லை”
“தோடா, வந்த நாள்ல இருந்து மூஞ்சை தூக்கி வெச்சிகிட்டு, பின்ன என்னை அடிச்சு விரட்டிட்டு, எடுத்து கொடுன்னா எப்படி குடுப்பேன்”
“கொடுத்திருக்கணும், அது தான் முதல்லன்னு தெரியணும், ஏன் தெரியுமா?” என்று நிறுத்தியவன், எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா, எனக்கு யாரும் இதுவரை எதுவும் வாங்கிக் குடுத்ததில்லை, என் பாட்டி கூட எனக்கு சாப்பாடு தான் கொடுக்கும், வேற எதுவும் கொடுத்திச்சா எனக்கு ஞாபகமில்லை” என்றான் கணமான குரலில்.
ஜெயந்திக்கு அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவனின் முகத்தினையே பார்த்திருந்தாள். அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூட அவளுக்கு தெரியவில்லை.
அவளின் விழிக்கும் முகத்தினை பார்த்தவன், “சரி விடு, நோ ஃபீலிங்க்ஸ்” என்று உடனே இலகுவாகி, “உனக்கென்ன வாங்கின?” என்றான்.
“எனக்கா? எனக்கு ஒன்னும் வாங்கலை, எல்லாம் உங்களுக்கும் அப்புறம் அங்க வீட்டுக்கும் வாங்கினேன்”
“சரி எப்போ போகலாம்?” என்றான் உடனே.
“எங்கே?” என அவள் கேட்க,
“ஜெர்மனி, உனக்கு ஷாப்பிங் பண்ண”  
“ஆங்” என்று வாய் பிளந்து நின்றாள் ஜெயந்தி.
அவளின் பாவனையில் மருது சிரித்து விட்டான், வெகு நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரிக்கும் சிரிப்பு.
“நீ எப்பவுமே என்னை குறைச்சு தான் நினைக்கிற, சொல்லு, இன்னும் ரெண்டு நாள்ல போகலாமா?” என்றான் புன்னகை முகமாய்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இன்னும் நான் மருது ஸ்டோர்ஸ்லயே ஷாப்பிங் பண்ணலை இதுல எதுக்கு ஜெர்மனி?”
“அதுவுமில்லாம இப்ப அங்க அது குளிர் பிரதேசம். நீங்க ஒரு கட்டில்ல நான் ஒரு கட்டில்ல தூங்க எதுக்கு அங்க போகணும்” என்று நக்கலாய் சொல்லிவிட்டு பார்க்க,
அவளின் பேச்சினில் “ஆங்” என்று பார்ப்பது இப்போது மருதுவின் முறையானது.
“ஊர்ல இருந்து வந்த உடனே, பல நாள் பிரிஞ்ச மனைவியை கட்டி பிடிப்பீங்க முத்தம் குடுப்பீங்கன்னு பார்த்தா, நீங்க ஒரு வருஷம் முன்ன நான் வராததுக்கு, இந்த ரெண்டு மாசமா என்னை வெச்சு செய்யறீங்க” என்று கிண்டல் போலவே அவளின் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினாள்.   
மருதுவிற்கு தன் தவறு புரிந்தது தான், ஆனால் என்ன செய்ய அவனின் கோபம் குணம் அப்படி. “அதுதான் நான் முறுக்கிட்டு நிக்கறேன்னு தெரியுதே, என்னை சமாதானம் பண்ணனும்னு உனக்கு தோணலையா?” என்றான் இயல்பு போலவே.
“எவ்வளவு முறை சாரி கேட்டேன், போ போன்னு துரத்தி விட்டுட்டு… அதுவும் ஹாஸ்பிட்டல்ல ஏதாவது தப்பிருந்தா திருத்திக்கறேன்னு கெஞ்சினேன்.. ஆனாலும் அனுப்பிட்டீங்க” என்று சொல்லும் போதே அன்றைய நினைவில் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
அப்படியே அமைதியாகி நின்று விட்டாள். “நான் சமாதானம் பண்ண மாட்டேன்” என்றவளின் குரலில் அத்தனை தீவிரம்.
மருதுவின் முகம் பாராது உள்ளே சென்றவள், நிமிடத்தில் கையில் ஒரு காகிதம் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள், அது ஆங்கிலத்தில் இருந்தது.
“என்ன இது?” என்பது போலப் பார்த்தான், ஆராயந்தவனுக்கு புரிந்தது அது எதுவும் வக்கீல்கள் அனுப்பும் காகிதமல்ல என்று. எதுவும் திருமண ரத்து பற்றி பேசுவாளோ என்று ஒரு நிமிடம் மனது அவனையும் மீறி பயந்து பின்னே ஆசுவாஸமாகியது.
“இது நான் உங்களுக்கு புக் பண்ணின கார்” என்றாள்.
“இது எப்போ?” என்றான் ஆனந்த அதிர்ச்சியாக.
“உங்களுக்கு ஷாப்பிங் பண்ணின போது, உங்ககிட்ட என்ன இல்லைன்னு யோசிச்ச போது, காரில்லைன்னு தோணிச்சு. அதான் நான் இங்க வர்ற சமயம் சர்பரைஸ்ஸா இருக்கட்டும்னு புக் பண்ணினேன். இதுவும் நான் ஜெர்மனில இருக்கும் போதே புக் பண்ணிட்டேன். நான் சம்பாதிச்சதுல உங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு ஆசையா இருந்தது”
“BMW X5 , முன் பணம் பத்து லட்சம் மட்டும் தான் கட்டினேன், எங்க கம்பனி மூலமா. மூணு மாசம் டெலிவரி டைம். இன்னும் ஐஞ்சு நாள்ல முடியப் போகுது. நாம கார் எடுக்கலைன்னா கார் வேண்டான்னு எழுத்தில கொடுக்கணும். அப்போ பாதி பணம் பிடிச்சிட்டு தான் குடுப்பாங்க”
“நான் சம்பாதிச்சதுல உங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு ஆசையா இருந்தது” என்று ஜெயந்தி சொன்னதிலேயே அவளுள் வீழ்ந்து கொண்டிருந்தான். மருதாச்சலமூர்த்தி என்பவன் தானே சுயமாய் செதுக்கி செயலாற்றி வந்திருக்கலாம். ஆனால் அவன் தனியன், தனிமையை வெளியில் காண்பித்து கொள்ளாதவன், இந்த வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு பொக்கிஷம் தான்.  
இப்போதும் அதனை வெளியில் காண்பித்து கொள்ளாமல் “எதுக்கு வேண்டாம்னு எழுத்தில குடுக்கணும். எனக்கு நீ கார் வாங்கி தரமாட்டியா என்ன?” என்றான்.
“பணமில்லையே, இவ்வளவு பணம் எல்லாம் என்கிட்டே கிடையாது. நீங்க சொன்னீங்கன்னு எல்லாம் அப்பா அம்மா பேர்ல போட்டுடேன். இப்போ என்கிட்டே பணமே இல்லை. இந்த ஒரு மாசமே அவங்க நெட் பேங்கிங் எனக்கு தெரியும்னு அதுல இருந்து என்னோடதுக்கு மாத்தி செலவு பண்றேன். ரொம்ப எடுக்கவும் மனசு வரலை, இதுக்கு நான் அவங்களுக்கு கொடுத்ததுல இருந்து இன்னும் அவங்க எதுவுமே வாங்கினதில்லை, அதை உபயோகப்படுதுறதில்லை. அது மொத்தமும் எடுத்தா கூட இந்த காரை என்னால் வாங்க முடியாது”
“உங்களுக்கு முடியும்னு எனக்கு தெரியும், அதான் முன் பணம் மட்டும் கட்டினேன்”  
“ஏன் நான் கொடுத்த பணம் இருக்குமே?”  
“நீங்க என்னை அடிச்சு வீட்டை விட்டு துரத்தி இருக்கீங்க, அப்போ அதை நான் எப்படி உபயோகப்படுத்த முடியும், கொஞ்சம் கூட எனக்கு சூடு சொரணை இருக்கும் தானே” என்றவள்…
“ஆனா பாருங்க இல்லை, திரும்ப உங்க கிட்டயே வந்துட்டேன். என் கணவர் என்னை அடிச்சு விரட்டுவார்ன்னு எல்லாம் நான் கனவுல கூட நினைச்சது இல்லை, இன்னும் என்னால அதை ஜீரணிக்க கூட முடியலை” என்று சொல்லும் போது அவளின் கண்களில் கண்ணீர்.
“நான் ஒன்னும் அடிச்சு விரட்டலை, சும்மா அதை சொல்லாதே, அடிச்சது முதல் நாள் கோபத்துல. போன்னு சொன்னது ரெண்டாவது நாள் உங்கப்பாவால” என்று அவன் சொல்ல,   
வேகமாய் அவனின் அருகில் வந்தவள், ஆத்திரமாய் அவனின் சட்டையை பிடித்து, “என்ன அப்படி நான் தப்பு பண்ணிட்டேன். ஏன் இப்படி எல்லாம் பண்ணுனீங்க. நீங்க அடிச்சது கூட எனக்கு பிரச்சனையில்லை. ஆனா என்னை போன்னு சொல்லிட்டீங்க, அது ஊர்ல எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்குறது தான் எனக்கு அசிங்கமா இருக்கு” என்று சொல்லும் போது அவன் மீதே சாய்ந்து தேம்பி தேம்பி அழ துவங்கினாள்.
அவனின் கை அவளை அணைத்து பிடிக்க “நீங்க சொல்வீங்க இல்லையா என்னால உன்னை விடவும் முடியலை, இருக்கவும் முடியலைன்னு, அப்படி தான் எனக்கும் இருக்கு”
“இப்போ புதுசா பயமா இருக்கு? என்ன பண்ணி இவ்வளவு பணம் சம்பாதிச்சீங்க எல்லோரும் உங்க கிட்ட பயப்படறாங்க, அப்போ கொலை பண்ணுணீங்களா, ஜெயில்ல போடுவாங்களா, என்கவுண்டர் பண்ணுவாங்களா, நாளைக்கு நமக்கு ஒரு குழந்தை வந்தா அதையும் ஏதாவது செஞ்சிடுவாங்களா பயமா இருக்கு?”
“மதியம் இருந்து தான் இப்படி இருக்கு. நீங்க எனக்கு உங்களை பத்தி சொல்லுங்க” என்று அவன் முகம் பார்த்து கேட்க,
அவளின் கண்களில் வழிந்த நீரை மெதுவாக அவனின் விரல் கொண்டு துடைத்து விட்டவன், “உனக்கு என்னை பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஒரு ஆசை, ஒரு ஆர்வம் இருந்தா சொல்லு, சொல்றேன். ஆனா உன்னோட பயத்துக்காக எல்லாம் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டேன்!”
“உன்னோட பயத்துக்காக சொல்லணும்னா ஒன்னு தான் சொல்லணும், நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது. அப்படி போலிஸ் லிஸ்ட்ல இருக்குற குற்றவாளியோ இல்லை போலிஸ் தேடற குற்றவாளியோ நான் கிடையாது. சொல்லப் போனா பல பஞ்சாயத்து பண்ணினாலும் பணம் வாங்கி நான் எதுவும் பண்றது கிடையாது”
“எனக்கு ரொம்ப பயம் வாழ்க்கைல, ஒரு பிரச்சனையில நான் மாட்டிக்கிட்டா என்னை காப்பாத்த என்ன, அழக் கூட ஆள் கிடையாது. ஏன்னா எனக்கு யாரும் கிடையாது. அதனால நான் பிரச்சனையில மாட்டிக்குவேன்னு தெரிஞ்சா, அந்த விஷயத்தை நான் பண்ணவே மாட்டேன். எனக்கு ஒரு விஷயம் பிரச்சனை வராதுன்னு தெரிஞ்சா மட்டும் தான் இறங்குவேன்”
“ஜெயராஜ் உன்னை தள்ளி விட்டது, தப்பி நடந்த ஒன்னு. அதையே நீ பிடிச்சிட்டு தொங்க வேண்டாம்”  
“யாரோட வயித்துலையும் நான் அடிச்சது கிடையாது, மனுஷங்க யாரையும் ஏமாத்தினது கிடையாது. என்னால இந்திய அரசாங்கத்தை தவிர வேற யாரும் நஷ்டப்பட்டது கிடையாது”  
“நம்ம குழந்தைங்க நல்லா இருப்பாங்க, உனக்கு அந்த பயம் வேண்டாம்” என்று அவளின் முகம் பார்த்து கண்களை நேருக்கு நேர் பார்த்து சொன்னான்.
“அப்போ உங்களை பத்தி சொல்ல மாட்டீங்களா?”
“சொல்ல மாட்டேன், உனக்கு தெரிய வேண்டாம்னு நீ நினைச்ச விஷயம் தெரியாமையே இருந்துட்டு போகட்டுமே, என்ன இப்போ?” என்று நிறுத்தி அவள் முகம் பார்க்க,
ஜெயந்தியின் முகம் முழுவதும் ஒரு நிராசை தெரிந்தது.
“உன்னோட எதிர்பார்ப்புக்கு நானும் இல்லை, என்னோட எதிர்பார்ப்புக்கு நீயும் இல்லை, இப்போதைக்கு இல்லை. ஆனா எதிர்காலம் இப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது. வர்றதை அப்போ பார்ப்போம், இப்போ  எல்லாம் தூக்கி தூர வெச்சிட்டு, பிரிச்சி போட்ட கட்டிலை சேர்த்து போடட்டுமா? உன்னை விட்டு என்னால இருக்க முடியலை” என்றான் அணைப்பை இறுக்கியவனாக.   
பின் ஜெயந்தியின் முகம் பார்த்து “உனக்கும் அப்படி தான் இருக்கா?” என்றான்.
 ஜெயந்தி இதற்கு பதில் சொல்ல விருப்பமில்லாதவளாக கண்களை மூடிக் கொண்டாள். ஜெயந்தி கண் திறவாவிட்டாலும் அணைப்பில் வைத்த படியே அவளின் முகம் பார்த்து பேசினான்.
“இத்தனை வருஷம் தனியா தான் இருந்தேன், ஆனா தனியா உணர்ந்ததில்லை, ஆனா இப்போல்லாம் ரொம்ப தனியா உணர்றேன்” என்றவனின் குரல் அவ்வளவு கனமாக இருந்தது.
“ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வருது? ஏன் நான் உன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேங்கறேன்னு எனக்கு நானே பல முறை கேட்டுட்டேன், பதில் தான் இல்லை”
“உனக்கு தெரியுமா? போற வர்ற பொண்ணுங்க எல்லாம் பார்ப்பேன், ஒரு ரெண்டு மூணு வருஷம் முன்னாடி, இவ எனக்கு பொண்டாட்டியா வருவாளா? இவளை எனக்கு பிடிக்குமா இப்படி? அதாவது எனக்கு நானே பொண்ணு பார்த்தேன்”
“ஆனா எனக்கு யாரையும் பிடிக்கவே இல்லை. எனக்கு தெரிஞ்சு இப்படி ஒரு பெண்டாட்டி வந்தா நல்லா இருப்பான்னு நினைச்சது, உன்னை மட்டும் தான். தினமும் டீ கடையில உன்னை பார்க்க உட்கார்ந்திருப்பேன். நீ என்னை ஒரு நாள் கூட பார்த்தது கிடையாது”   
“ஆனா நீ பார்த்த அப்புறம், என்னை பார்த்த நாள்ல இருந்து, என்னை நீ குறைச்சு குறைச்சு மதிப்பிடறது மனசுக்கு என்னவோ பண்ணுது. எனக்கு எவன் என்ன நினைச்சாலும் கவலை இல்லை. ஆனா நீ ஏன் ஏன் அப்படி?” என்று நிறுத்தினான்.
ஜெயந்தியிடம் எதற்கும் பதில் இல்லை, அவனின் கேள்விகளுக்கும் பதில் இல்லை, கட்டிலை சேர்த்துப் போட்டு விடலாமா என்பதற்கும் பதில் இல்லை.

Advertisement