Advertisement

விமலன் செய்த தவறு, ஜெயந்தி யார் என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லியிருந்தால் அந்த இடம் பரபரப்பாகி இருக்கும். ஆனால் அது அவனிற்கு தோன்றவில்லை.      
மருது பெண்களுக்கான பொருட்கள் தனித்துவமாய் விளங்க வேண்டும் என்று வேறு தேர்ந்த இடத்தினில் இருந்த அந்த பெண்மணியை அதிக சம்பளத்திற்கு வைத்திருந்தான். 
அப்போது பார்த்து சில கல்லூரி மாணவிகள் கும்பலாய் வர, “வெயிட் பண்ணுங்க இவங்களை பார்த்த பிறகு எடுப்பாங்க” என்று அந்த பெண்மணி கெத்தாய் சொல்ல ,
முதலில் கஸ்டமர்ஸ் தானே முக்கியம் என்று நினைத்த விமலனும் “சரி பாருங்க” என்று நின்றான்.
அதற்குள் அவனுக்கு அலைபேசி அழைப்பு வர, “கொஞ்சம் வேலை நான் போயிட்டு வரட்டுமா?” என்றான் ஜெயந்தியிடம்.
“ம்ம்” என்று ஜெயந்தி தலையசைக்க, அவன் சென்று விட்டான்.
எல்லோரும் கல்லூரி மாணவிகளை கவனிக்க, அதில் ஒரு விற்பனை பெண் “நீங்களே உட்கார்ந்து இருந்தா வேறவங்க உட்கார்ந்து சைஸ் பார்க்கணும் தானே எந்திருங்க” என்று சொல்ல,
ஜெயந்தியின் முகம் நொடியில் கசங்கி விட்டது, நம்மை பார்த்தால் எல்லோருக்கும் எப்படி இருக்கிறது என்று.
அவள் அமர்ந்திருக்க கால்களை புடவை முற்றிலும் மறைக்க, அவள் கட்டுப் போட்டதே தெரியவில்லை.
அவள் அந்த விற்பனை பெண்ணையே பார்க்க, “என்னங்க சொல்லிட்டே இருக்கேன், கஸ்டமர்ஸ் வெயிட் பண்றாங்க” என்ற அதட்டி பேச உடனே எழுந்து விட்டாள்.
ஜெயந்திக்கு அமரும்வரை ஒன்றும் தெரியவில்லை, ஆனால் நிறைய நடையாகிப் போனது.
கால்கள் வலி எடுத்திருக்க, சற்று தூரத்தில் இருக்கும் மாடி ஏறும் படியில் அமர்ந்து விட்டாள்.
அப்போது தான் கட்டு தெரிய, அந்த விற்பனை பெண் வந்து “கட்டு போட்டு இருக்கீங்களா? சொல்றதுக்கு என்ன? வாங்க வந்து உட்காருங்க” என்று சொல்ல,
ஜெயந்தி அவளை ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் சொல்லவில்லை ஆனால் நிமிர்வான பார்வை.
அப்போது பார்த்து விஷால் ரௌண்ட்ஸ் வந்தவன் “ஏன் மேம் இங்க உட்கார்ந்து இருக்கீங்க?” என்று பதறினான்.
“ம்ம், வேண்டுதல்” என்றாள் நக்கலாக.
காலை பதினோரு மணியாகியிருக்க நல்ல கூட்டம் கடையில் நிறைய துவங்கியது.
“மேம் வாங்க” என்று விஷால் சொல்ல,
“உங்க வேலையை பாருங்க, எனக்கு போகத் தெரியும்” என்று அதட்டலாய் சொன்னாள். பின்னே அவனிடம் எனக்கு கால் வலிக்கிறது என்று சொல்ல பிடிக்கவில்லை. விஷால் பார்க்கும் போதெல்லாம் அடிபட்டு தானே நிற்கிறாள்.
அதற்குள் மருது வந்திருந்தான். விமலன் அவளை விட்டு செல்வதை பார்த்ததுமே அவனின் இடத்தில் இருந்து எழுந்து லிப்டில் அந்த தளத்தை அடைந்திருந்தான். ஜெயந்தி சேரில் அமர்ந்த போது பார்த்தது, இப்போது வந்து பார்த்தால் அந்த இடத்தில் இல்லை.
“இங்க இருந்தவங்க எங்கே?” என்று மருது வந்து கேட்க, கஸ்டமர்ஸ் இருந்த போதும் முதலாளி வந்ததால் அந்த இடம் பரபரப்பானது.
“அங்க உட்கார்ந்து இருக்காங்க” என்று ஒரு பெண் சொல்ல, படியை நோக்கி விரைந்தான்.
இவனை பார்த்ததும் அலர்டான விஷால் “நான் கூப்பிட்டேன், வரமாட்டேன், வேண்டுதல் சொல்லிட்டாங்க” என்று பதட்டத்தில் உளறினான்.
“ஏன்டா உளறுற வாயை மூடு” என்று அதட்டிக் கொண்டே ஜெயந்தியை பார்க்க, அவளின் கண்களில் ஒரு கலக்கம் தான். ஆம்! இப்போது கண்கள் கலங்காமல் இருந்தாலும் கலக்கம் நன்கு தெரிந்தது. மருதுவை பார்த்ததும் வந்து அமர்ந்து கொண்டது.
அடுத்த நொடி மருதுவின் கைகள் அவளை நோக்கி நீண்டது, அவள் எழுவதற்காக, கூடவே “விமலன் எங்கே?” என்று கேட்க,
மெதுவாய் கைப்பற்றி எழுந்தவள் “ஃபோன் வந்தது போய்ட்டான்” என்று சொல்ல,
“ரெண்டு நிமிஷத்துல அவன் இங்க இருக்கணும் வரச் சொல்லு” என்று விஷாலை பார்த்து அதிகாரமாய் சொன்னவன்,
ஜெயந்தியை பார்த்து “லிஃப்ட் உபயோகிக்கணும்னு அறிவிருக்காதா உனக்கு? சும்மா நடந்து தள்ற, நேத்து இருந்து தானே நடக்கவே ஆரம்பிச்ச” என்று அவளை அதட்டிக்கொண்டிருக்க,
ஜெயந்தி “நீ என்னவோ பேசிக் கொள்” என்ற முக பாவனையுடன் நின்ற போதும் கண்களில் இருந்த கலக்கம் ஓடியே போனது.  
“இந்த ஸ்டூல்ல தானே உட்கார்ந்து இருந்த, அதுக்குள்ள படில போய் எதுக்கு உட்கார்ந்த”  
“இந்த பொண்ணு தான், என்னை அதட்டி அங்க போய் உட்காரச் சொன்னா?” என்று சிறுபிள்ளை போல காண்பித்து கொடுக்க,
மருது திரும்பி அந்த பெண்ணை ஒரு பார்வை பார்க்க, அது நடுங்கியே போனது. “அவ சொன்னா நீ உட்காரணும்னு இருக்கா? உனக்கெங்க போச்சு அறிவு!” என்றான் காட்டமாக.
“அடகு கடையில அடகு வெச்சிருக்கேன்” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கி, “கஸ்டமர்ஸ் பார்க்கணும்னு சொன்னா அப்போ எழுந்து தானே ஆகணும்”.
“ஆனா இவங்களுக்கு முன்னயே நீ இங்கே வந்தியே. அப்போ உன்னை தானே இவங்க முதல்ல பார்க்கணும்” என்று கடையின் உரிமையாளராய் பேசினான்.
அங்கிருந்த அத்தனை பேருக்கும் நடுங்கி போனது, கஸ்டமர்ஸிற்கு குறை என்றால் விசாரணையே கிடையாது, வேலையை விட்டு கிளம்பு என்று சொல்லி விடுவர். அது மருது ஸ்டோர்ஸின் எழுதப் படாத விதி.
ஏனென்றால் மற்ற கடைகள் போல இங்கே கிடையாது, வேலை செய்பவர்களுக்கு அத்தனை சலுகை, இரண்டு நேர ஷிஃப்ட், அதனால் வேலை பளு குறைவு, சம்பளமும் அதிகம்.
ஷீபாவிற்கோ, “அச்சச்சோ ஏதோ முக்கியமான ஆள் போல, இப்போது நம்முடைய டிவிஷனில் குறையா? என்ன சொல்லி சமாளிக்கலாம்? வீணாய் என் பேர் கெடுமே” என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அப்போதும் மருதுவின் மனைவி என்று நினைக்கவில்லை.       
சரியாய் அப்போது விமலன் வர, அந்த ஷீபா உடனே, “விமலன் சர் தான் கூட்டிட்டு வந்தார், சரி நம்மாள் தானே, கஸ்டமர்ஸ் முதல்ல பார்ப்போம்ன்னு சொல்லி, வி ஜஸ்ட் சேஞ்ட் அண்ட் மூவ்ட் டு நியு பீபுள்”  என்றாள்.
விஷால் மெதுவாக ஜெயந்தியின் காதை கடித்தான். “இது சாரை பார்த்தா மட்டும் இங்கிலீஷ்ல பேசி பெரிய ஆள்ன்னு பந்தா காமிக்கும்” என சொல்ல,
“இதெல்லாம் வேற நடக்குதா?” என்ற உஷ்ணப் பார்வை ஜெயந்தி பார்த்தாள்.
“ச்சே, சே, தப்பா எடுக்கக் கூடாது. சம்பளம் நிறைய வாங்க, கடையில பெரிய போஸ்ட் வாங்க, என்னை விமலனை எல்லாம் பீட் பண்ண” என பேசிக் கொண்டிருக்க,  
விமலனை பார்த்த மருது அவன் மீது பாய்ந்தான், “உன்கிட்ட என்ன சொன்னேன் நான். அதை செய்யாம வேற வேலை பார்க்க உன்னை யாரு போகச் சொன்னா? உன்னோட தங்கச்சியை நான் உன்னோட அனுப்பலை. இந்த கடையோட முதலாளியை உன்னோட அனுப்பினேன். வந்த உடனே இவங்க நம்ம பாஸ்ன்னு நீ சொல்லியிருக்க வேண்டாமா?” என்று அத்தனை பேர் முன்னும் அதிகாரமாய் பேச,  
விமலன் முகம் சிறுத்துப் போனது.
“என்னது பாஸ்ஸா?” என்று அங்கிருந்தவர்கள் வாயை பிளந்தனர்.
ஆம்! விமலன் மருதுவிற்கு என்ன உறவென்று காண்பித்து கொடுக்க, கூடவே நீ அறிமுகம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் மருது பேச விமலனிற்கு அதெல்லாம் பிடிபடவில்லை.
விமலன் “நீங்க வந்து உங்க மனைவின்னு அறிமுகம் செஞ்சு வெச்சிருக்கணும்” என்று பதில் வேறு சொல்லிவிட்டான் மருதுவை பார்த்து.
“நான் கூட வர்றேன்னு சொன்னேன். ஆனா நான் தனியா போறேன்னு இவ தான் கிளம்பினா” என்றான் மருது.  
உடனேயே ஒரு ஸ்டூல் எடுத்து போட்ட விமலன் “உட்காருங்க மேம்” என்று ஜெயந்தியை பார்த்து சொல்ல, மருதுவிற்கு மனம் சுணங்கி போனது. நான் ஒரு வார்த்தை சொன்னால் இவன் உடனே அதற்கு பிரதிபலிப்பு கொடுப்பானா என்று.   
இந்த பேச்சுகள் நடந்து கொண்டிருந்த போதே விமலன் முன்பு தேடிய சைசில் காலணிகள் எல்லாம் அந்த பெண்கள் எடுத்து வர,
“அண்ணா டேய் அவர் தான் சொல்றார்ன்னா நீ ஓவரா பண்ணாதே, மேம்மாம் மேம், தொலைச்சிருவேன்” என்று செல்ல அதட்டலாய் ஜெயந்தி சொல்லிக் கொண்டே அமர,
அதற்குள் அந்த பெண்கள் விமலனிடம் “சர், நீங்க கேட்ட மாடல்” என்று அந்த பெண்கள் கொடுக்க,
ஜெயந்தி விஷாலை பார்த்து “எல்லோரையும் அவங்க அவங்க வேலையை பார்க்க சொல்லுங்க” என்று சொன்னாள்.
ஷீபாவிடம் “நீங்க கஸ்டமர்ஸ் பாருங்க, நாங்க பார்த்துக்கறோம்” என்று விஷால் சொல்லிய போதும்,
“கஸ்டமர்ஸ் பார்க்க ஆள் இருக்காங்க. நான் இங்க இருக்கறேன், மேம்க்கு நியு டிசைன்ஸ் செலக்ட் பண்ண ஹெல்ப் பண்றேன்” என்று அந்த பெண்மணி இருந்து கொள்ள,
எளியாரை ஏய்த்து, வலியாரை வருந்தி வருந்தி கவனிக்கும் உலகம் இது என்று ஜெயந்தி பார்த்திருந்தாள்.
விமலன் கைகளில் வாங்கி ஜெயந்திக்கு காலணி அணிவிக்க போக, “உன் தங்கச்சின்னா போடலாம், நீ தான் மேம் சொல்லிட்டியே, நீ ஏன் போடற?” என்று கையை நீட்டினான் மருது.
“இல்லை, அது” என்று விமலன் தடுமாற,
“கொடு” என்று பிடிவாதமாய் நீட்டிய கையினை மடக்கவில்லை.
“அண்ணா என்கிட்டே குடு” என்று ஜெயந்தி கைநீட்டினாள்.
மருதுவின் பார்வையில் விமலனின் கைகள் தானாய் அவனிடம் தான் அந்த காலணியை கொடுக்க,
கீழே மண்டியிட்டு அமர்ந்தவன், அவளுடைய கால்களை காலணி அணிவிக்க பிடிக்க,
“ப்ச், என்ன பண்றீங்க? நான் போட்டுக்கறேன்” என்று பதறி ஜெயந்தி எழப் போக,
தனியறை என்றால் அது வேறு, ஏன் மகளுக்கு என்றால் அது வேறு, இது வேறல்லவா? இங்கே இவன் முதலாளி.
“ஷ், உட்காரு” என்று அதை கூட மிரட்டலாய் அதட்டலாய் சொன்னான்.
பின் வெறும் காலில் அவள் நடந்திருந்ததால், அவளின் அடி பாதத்தை  தன்னுடைய கைகுட்டையால் துடைத்து, அணிவித்து பார்த்தான்.
அங்கிருந்த அத்தனை பேரும் பார்த்தனர்.
ஜெயந்தியின் முக்கியத்துவத்தை ஒரு நொடியில் அங்கே இருந்த அனைவருக்கும் தன்னுடைய செய்கையால் காண்பித்து கொடுத்தான்.
“பார்றா, மூஞ்சி முகரையை பேத்து எடுக்கறாரு , கால்லையும் கிடக்கறாரு” என்று விஷால் நினைக்க,
விமலன் நெகிழ்ச்சியாய் பார்த்திருக்க,
ஜெயந்தி கவலையாய் பார்த்திருந்தாள்.
மருதாச்சலமூர்த்தி என்ற மனிதனின் பரிமாண மாற்றங்கள், அவனை புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றவே இல்லை.
இதோ ஜெயந்தி அவனுக்காய் பார்த்து பார்த்து அலங்கரித்து இருக்க, அதனை கிரகித்து ஒரு சிறு பார்வை கூட இல்லை, ஆனால் சற்றும் லஜ்ஜையில்லாமல் அவளின் காலை பிடித்து காலணிகளை அணிவித்து கொண்டிருந்தான் கர்ம சிரத்தையாய்.

Advertisement