Advertisement

அத்தியாயம் இருபத்தி ஆறு :
இதோ அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான், முதல் நாள் ஹாஸ்பிடலில் “அது கோபத்துல பண்ணினது” என்று மருது சொன்ன பிறகு “கோபம் வந்தா என்ன வேணா பண்ணலாமா?” என்று கேள்வி கேட்டவள், அவனின் அணைப்பில் இருந்து விலகி படுத்துக் கொண்டாள்.
மருதுவும் எதுவும் பின் பேசவில்லை, அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தான். தேவையான பேச்சுக்கள் மட்டும் இருவரிடமும்.
அவனின் வீட்டிற்கு தான் அழைத்து வந்தான். “நான், நான் தங்கியிருக்குற வீட்டுக்கு போறேன்” என்று ஜெயந்தி சொன்ன போதும் அவன் அதை கேட்கவில்லை.
“நீங்களா என்னை கூப்பிடலை, நான் கூப்பிட்டேன்னு அவசரத்துக்கு வந்தீங்க. இதுக்கு மேல உங்களுக்கு கஷ்டம் குடுக்க விரும்பலை, நான் போறேன்” என்று அவள் சொல்ல, என்னவோ அந்த வார்த்தைகள் ஏகத்திற்கும் கடுப்பை கிளப்பியது.
அவனே மிகுந்த குற்றவுணர்சியில் இருந்தான் தன்னால் தான் எல்லாம் என்று. ஜெயந்தி இப்படி பேசவுமே அது எதிர்மறை விளைவை கொடுத்தது.    
“என்ன பேசிப் பார்க்கறியா, அப்போ நீ என்னை கூப்பிடலைன்னா, உனக்கு ஒரு கஷ்டம்னாலும் நான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு சொல்றியா?” என்று எகிறினான்.
மருதுவின் மனநிலை சரியில்லை என்று புரிந்தவள் மேலும் எதுவும் பேசவில்லை. ஆனால் ஜெயந்தியின் முகம் சுருங்கி விட்டது.      
மருது அவளின் முகம் பார்த்தவன், அதற்கு பின் எதுவும் பேசவில்லை. கால் டேக்சி புக் செய்து அவளை அவனின் வீட்டிற்கு தான் அழைத்து சென்றான்.
“இல்லை, வேண்டாம், நான் இறங்க மாட்டேன்” 
“சரி, எங்கே போகலாம், எங்கே போனாலும் நானும் வருவேன். இனி உன்னை எங்கேயும் தனியா விடறதா இல்லை. அது நம்மல்ல ரெண்டு பேர்ல யாருக்கு பிடிச்சாலும் பிடிகலைன்னாலும் இது தான் மாறாது” என்றான் திண்ணமாக
“எப்போவுமே நான் போகலை, நீங்க தான் துரத்தி விட்டீங்க. அப்போ சேர்ந்து வாழறது உங்களுக்கு பிடிக்கலையா? பிடிக்கலைன்னா திரும்ப சேர்ந்து இருந்து ஒரு சண்டை ஒரு அடி தடி எல்லாம் என்னால தாங்க முடியாது, அதுக்கு நான் இப்போவே போயிடறேன்”
சில நொடி அவளின் முகத்தை பார்த்தவன் “சண்டை போடாம இருக்க முடியுமா தெரியாது? ஆனா அடி தடி இனி நடக்காது”
“ஏன் இவ்வளவு கஷ்டப் பட்டு நாம சேரணும், எனக்கு உங்களை பிரியணும்னு இப்போ வரை இல்லை, உங்களுக்கு அப்படி நிச்சயமா தோணுதா” என்றாள் கரகரத்த குரலில்.   
“தெரியலை எனக்கு தெரியலை எனக்கு உன் கூட இருக்கவும் முடியலை உன்னை விடவும் முடியலை” என்றான் மனதை மறையாது.
இந்த வார்த்தைகள் ஜெயந்தியை வெகுவாக காயப்படுத்தியது.
“என்ன பண்ற இங்க? போகலாமா இல்லை உன் வீட்டுக்கு போகலாமா? எங்கேன்னாலும் எனக்கு சரி. ஆனாலும் இங்கே இருக்கலாம்னு தான் நான் சொல்வேன், என்னென்னவோ நடந்து போச்சு, இன்னும் நீ என்னோட இல்லைன்னு யாரும் சொல்றதை நான் விரும்பலை, உன் பக்கத்துல வர என்ன? பார்க்கக் கூட யாருக்கும் தைரியம் வரக் கூடாது” என்று விட்டான்.
அப்படி என்ன பிடிக்காமல் இவன் என்னை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போதும் இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது ஜெர்மனி போக பின்னே பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.
அவனோடு வாழ ஒரு முயற்சி எடுத்தே ஆக வேண்டும் போல தோன்றியது. இரண்டு மாதம் அப்போதும் இவனுக்கு என்னை பிடிக்காமல் போனால் அப்படி ஒன்றும் சகித்து வாழும் வாழ்க்கை தேவையில்லை கிளம்பி விடலாம் என்ற எண்ணம் அவளினுள் அமர்ந்து கொண்டது.  
இப்படியாக மனம் முரண்ட, அவனின் வீட்டில் வசிக்க வந்து விட்டாள். ஆம்! அவள் அப்படி தான் சொல்லிக் கொண்டாள். இந்த முறை யாரும் ஆரத்தி எடுக்கவில்லை, அவர்களுக்கு அவர்களே எடுத்துக் கொள்ள மனதில்லை.
நேற்றிலிருந்து இதுவரையிலும் மருதுவை தான் பார்த்தும் பாராமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது வீட்டின் உள் வரவும், மனதின் பாரம் குறைந்த உணர்வு. அதுவும் இறுக்கமாக இருக்கும் மருதுவின் முகம் அவளை ஏதோ செய்தது.
“பெல் பாட்டம் முதலாளி ஊருக்கு வராததுக்கு இவ்வளவு அலப்பறை பண்ணுவீங்களா நீங்க? வெரி பேட், அட கொஞ்சம் சிரிங்க பாஸ்” என்று சொல்லும் எண்ணம்,    
இதை நினைக்கும் போதே அவளின் மனம் லகுவாகியது.   
இதோ படுக்கையறையை காண்பித்து “தூங்கு என்ன சாப்பிடன்னு பார்க்கிறேன்” என்று அவன் நகர,
“முதலாளி குடிக்க கொஞ்சம் டீ கிடைச்சா பரவாயில்லை, வெச்சு தருவீங்களா?” என்றாள்.
மருது திரும்பி பார்க்க படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டே “வெச்சிக் குடுக்க மாட்டீங்களா?” என்றாள். அவளின் தலையில் கட்டை எடுத்து பிளாஸ்டர் போட்டிருந்தனர். முகம் சற்று வீக்கம் காண்பித்தது.  
“பால் இருக்காது வீட்ல”
“வாங்கிட்டு வர சொல்லுங்க, எனக்கு உங்க டீ தான் வேணும்”
“வாங்கிட்டு வர சொல்றேன்” என்றவன் கூடவே “முதலாளி அது இதுன்னு என்னை கிண்டல் பண்ணக்கூடாது” என்றான் சீரியசாக.
“உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க கூப்பிட மாட்டேன். ஆனா கிண்டல் எல்லாம் சொல்லாதீங்க. நான் உங்களை அப்படி தான் சொல்லுவேன். இன்னும் சொல்லப்போனா பெல் பாட்டம் முதலாளி தான் சொல்வேன். கேட்டு பாருங்க விஷால் கிட்ட, விமலன் கமலன் எங்க அம்மா அப்பா எல்லோர்க்கிட்டயும்”
“நான் உங்களை அப்படி கூப்பிடறது உங்களைத் தவிர எல்லோருக்கும் தெரியும்” என்றாள் சின்ன சிரிப்புடன். மருது அவளையே பார்த்து நின்றான். முகம் சிறிதும் இறுக்கம் தளர்த்தவில்லை. 
“என்ன கூப்பிடட்டுமா? வேண்டாமா?” என ஜெயந்தி கேட்க,
மருது பதில் சொல்லாமல் வெளியில் நடந்து விட்டான்.
“பாருடா ரொம்ப தான் பண்றான். போடா போடா” என்று சலுகையாய் மனதினுள் சொல்லிக் கொண்டாள்.
மருது ஒரு கால் மணி நேரம் கழித்து டீயுடன் வந்த போது ஜெயந்தி உறங்கி இருந்தாள்.
அவளை ஜெயந்தி என்று எழுப்ப, எழுந்தவள் தூக்க கலக்கத்திலேயே டீ யைக் குடித்து மீண்டும் உறங்கினாள்.
மருதுவிற்கும் மனதிற்கு என்னவோ இதமாய் இருந்தது.   
அவள் உறங்கியது தெரிந்ததும் அருகில் அமர்ந்து அவளின் முகத்தை பார்த்திருந்தான்.
மருதுவே அடித்து உடைத்து இருந்தான் முகத்தை. இப்போது இந்த தள்ளி விடல், மாதம் ஒன்றாகி விட்டாலும் மருது கொடுத்த அறையின் சுவடுகள் இருந்திருக்க, இப்போது புதிதாய் ஒன்று.      
அவளையே வெகு நேரம் பார்த்திருந்தான், பின்பு ஹாலில் வந்து அமர்ந்தவன் அப்படியே கண்மூடி சோபாவில் சாய்ந்து கொண்டான்.
அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தானோ, ஜெயந்தி எழுந்து மெதுவாய் நடந்து வெளியே வந்து பார்த்தாள், இவன் அமர்ந்திருந்த தோற்றம் மனதை ஏதோ செய்தது.
தவறு யார் மீது இருந்தாலும் இழப்பு இருவருக்கும் தான் என புரிந்தது. “எனக்கு அவனிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை” மனது சொல்லிக் கொள்ள, அவன் விட்டால் நீ எப்படி தனியாளாவாய் போல, அவனும் தனியனாவான் என்று புரிய, அவன் ஒட்டாமல் நின்றாலும் அவனை பசை போட்டு தன்னுடன் ஒட்டிக் கொள்ளும் பொறுப்பு தனக்கிருப்பதாக தான் தோன்றியது.
மதித்தாலும் மிதித்தாலும் இவன் என் கணவன் அடிக்கிற கை தான் அணைக்கும் இப்படிப் பட்ட எண்ணங்கள் ஜெயந்திக்கு எப்போதும் இல்லை
எவனாயிருந்தா என்ன? போடா தான்! புருஷன்னா அடிச்சிடுவனா என்று யோசித்த தருணங்கள் அனேகம். ஆனால் மருது அவளை அடித்த போதும் அவனை விட்டு விலக மனம் நினைக்கவில்லையே?
இதோ ஒரு கஷ்டம் என்றாள் அவனை தானே தேடினாள்.
அதுவரை அவனுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். மருது வராமல் இருந்திருந்தால் மனதளவில் மொத்தமாய் முடிந்திருப்பாள். எப்போதிருந்து இவன் என் தைரியமாய் மாறிப் போனான்.
மனதில் ஏகத்திற்கும் சுயஅலசல்!
பசிப்பது போல தோன்ற சமையலறை சென்று பார்த்தாள். இவன் டீ போட்ட அடையாளம் மட்டுமே, மற்றபடி வேறு எதுவுமில்லை. அப்போது பாலோடு டீ தூளும் சர்க்கரையும் மட்டும் வாங்கியிருப்பான் போல.
ஒரு மாதம் முன்பு தான் வாங்கி வைத்த மளிகை பொருட்கள் எதுவும் காணவில்லை.      
“இங்க இருந்த சாமான் எல்லாம் எங்க போச்சு?” என்று தோன்ற மீண்டும் வந்து அமர்ந்து கொண்டாள். அப்போது நான் வரவே மாட்டேன் என்று முடிவு செய்து எல்லாம் தூக்கி போட்டு விட்டானா? மனது வெகுவாக சுணங்கிப் போனது.   
பசிக்க வேறு செய்தது, “என்ன கொடுமையடா இது? எனது அப்பா சொற்ப சம்பளத்தில் இருந்த போது கூட எனது வயிறு பசி என்ற ஒன்றை உணர்ந்ததில்லை. இவன் கோடீஸ்வரன் ஆனால் இவனை திருமணம் செய்த நாளாக பசி என்பதை அடிக்கடி உணருகிறேன்”  
மெதுவாக வந்து அவனின் எதிர்புறம் இருந்த சோபாவில் அமர்ந்தாள். அவள் நடந்து சென்று சமையலறை பார்த்தது தெரியவில்லை, இப்போது வந்து அமர்ந்ததும் தெரியவில்லை.
அமர்ந்தவள் அவனையே பார்த்திருக்க, ஏதோ உந்துதலில் கண் திறந்தவன் பார்த்தது அவனையே பார்த்து அமர்ந்திருந்த ஜெயந்தியை தான்.
சில நொடிகள் அவளை பார்த்தவன் “என்ன ஜெயந்தி?” என்றான்.
“பசிக்குது”  
“இரு சாப்பாடு வாங்க சொல்றேன் செக்யுரிட்டி கிட்ட” என அவன் எழ
“சாப்பாடு எல்லாம் வேண்டாம், எனக்கு பிரியாணி தான் வேணும். மட்டன் பிரியாணி, சிக்கன் ஃபிரை”
“நீ இப்ப தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்க”
“அதனால் தான் கேட்கறேன் தெம்பு வேணும் தானே” “ஆ” என்று வாயை திறந்தவள், “வாய்ல எல்லாம் அடி இல்லை, தலையில மட்டும் தான்” என்று சாதாரணமாய் காண்பித்து கொடுக்க,
மருதுவால் ஜெயந்தியின் இலகுவான பாவனையில் முடியவேயில்லை, அடித்து உதைத்து துரத்தி மீண்டும் துரத்தி, இவளால் எப்படி முடிகிறது. என்னால் முடியவில்லையே இப்படி? அவளின் அருகில் செல்ல நினைத்தாலும் அவனின் குற்ற உணர்ச்சி வெகுவாக தடுத்தது.    பட்டென்று எழுந்து விட்டவன், “வாங்கிட்டு வர சொல்றேன்” என்று சென்று விட்டான்.
“நான் இப்போ எதுவும் தப்பா பேசலையே, சண்டை இழுக்கலையே” என்ற ஜெயந்திக்கு முகம் சுருங்கி போயிற்று.
உணவு வரும் வரை வெளியே அமர்ந்து கொண்டான்.
அவனை இழுத்துப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த ஜெயந்தியின் மனம் வெகுவாக கலங்கிப் போயிற்று.
“போடா” என்று தூக்கி போட நினைத்தால் தான் ஆனால் முடியவேயில்லை.  
அவளின் வெட்கம் கெட்ட மனதை அவளுக்கு பிடிக்கவேயில்லை.  
   
    
         
     
  

Advertisement